சிறுமி நேயா

தோழமைப் பிரதிகள்

vasumitra

vasumitra

 சிறுமி நேயா

அப்பா
நான் உங்களைக் கொலை செய்யப் போகிறேன்
சரி மகளே
முத்தம் தா

இல்லையப்பா….. குருதி கசிய
சரி மகளே
முத்தம் தா

அப்பா…..
உங்கள் உடலைச் சிதைத்து
சரி மகளே
முத்தம் தா

அப்பா……
அப்பா…..
நிஜமாகவே
சரி மகளே
முத்தம் தா

அப்பா
இந்த விளையாட்டு பிடிக்கவில்லை
வேறு விளையாட்டு சொல்லித்தாருங்கள்

சரி மகளே
முத்தம்
தா………

vasumitra

சபிப்பது பற்றிய
ஞானத்தைக் கற்றுக்கொள்கிறேனே அப்பா
அடம் பிடிக்கிறாள் நேயா

விழிகள் குமைய
அனுப்பிவைத்தேன் அவளை

என் முகத்தில் அறையுங்கள்
அவளை
அவளை
சாத்தானுக்கு அறிமுகஞ்செய்தேன்

நகங்களை நீட்டாதே
விழிகளின் நிறம் மாற்று
அவள் சிறுமி

அறிவுரைகளை சாத்தானின் பாதங்களில்
வேண்டுகோளாய் கொட்டி
வீடு திரும்பினேன் கண்ணீர் துணையுடன்

விரல்கள் உலரும் முன்
வீட்டுக்கு வந்தாள் சிறுமி நேயா குதித்தபடி
சாத்தான் நிழல் போல் பின்னால் நின்றான்
வழியனுப்ப வந்ததாகவும்
அவள் சிறுமியென்றும் சொல்லி அகன்றான்

பிறிதொரு நாள்
அலுவல வேலையாய் நகரத்தைக் குறுக்காகக் கடக்கையில்

நடைவீதியில் நின்று
சாத்தான் அனைவருக்காகவும்
ஆசிர்வதித்துக் கொண்டிருந்தான்

துரோகம் மயக்கும் விழிகளுடன் வருகை புரிகிறது
தனிமையில் பற்றியெரியும் என் அறையை நோட்டமிடுகிறது

நளினமான உடலசைய கதவைத் தட்டுகிறது
திறந்த கதவின் வழியே வசந்தம் பீறிட்டு வீச
மயங்கிச் சரியும் துரோகத்தை அணைத்துக்கொள்கிறாள்
சிறுமி………

அறைக்குள் நுழையும்
நான்
விசித்திர சப்தம் கேட்கிறேன்

ஒரு
குடம்
தண்ணீர் ஊற்றி
ஒரு
வனம் பூத்ததே

என் விரல்கள் உதற
செவிக்குள் தாவரம் பூக்க

துரோகத்தை
புல்லாங்குழலாக்கி
என்
உதட்டில் பொருத்துகிறாள்
நேயா………

vasumitra

மீன்களை மயக்கி நித்திரை கொள்ளச் செய்யும்
குளமொன்றிற்கு
முத்தம் தருகிறாள்
மகள்
நேயா……

குளம்
கடலாக
திமிங்கலங்கள்
விழித்தெழுகின்றன…..

vasumitra

அறை அதிர
சுண்டு விரலால் கதவு தட்டும் சப்தம்
முழு மௌனம் கொண்டு
தாழ் நீக்குகிறேன்

சூரியனின் ஒரு துண்டை வாயில் கடித்தபடி
ஒளித்திவலை வழிய அவன்
நண்பன்.. மற்றும் வீரியமிக்க எதிரி

வழியும் நீரை புறங்கையால் துடைத்தபடி
கால்களை நிதானித்து மாற்றி
எங்கே உன் சிறுமி
பார்க்க வேண்டும் அவளை

கனவுகள் குழம்ப
மரையில் அமர்கிறேன்

என்விழிகள் பார்த்தவனின் கைத்தொலைபேசி ஒலிக்க
சாவகாசமாய் கையில் எடுத்து
பதில் வாங்க காதில் பொருத்துகிறான்

எங்கே போனாய்
நான் உன் அறையில்….
சிறுமியின் குரல்
அறையை நிறைக்க
மயங்கிச் சாய்கிறான்

அவனுக்கு
சிறுமியென்றே அவளை விவரித்திருந்தேன்

சொல்லியிருக்க வேண்டும்
அவளுக்கு விலாப்புறம் இரண்டு சிறகுகள்
மற்றும்……….

உனது
பிரியத்தை சுவைத்துப் பார்க்கிறேன்
மகளே
அது கரிய நதிபோல என் உடலை நனைக்கிறது

தலைக்கு மேல் பறக்கும் பறவையொன்றிற்கு
பெயரில்லை

என் கனவில் அதற்கு உன் பெயரைச் சூட்டுகையில்
அது
தவிர்க்கவியலா துக்கத்தில் ஒரு பிடி எழுத்தாய்
என் பெயரை அடிநாவில் உச்சரிக்கிறது

கனத்த மௌனத்தோடு அறைக்குத் திரும்புகையில்
மகளே
உன் கொலுசுகள் தூக்குக் கயிறாய் விதரனத்;தில் தொங்குகின்றன

vasumitra

ஏமாற்ற முடியாத தூரத்தில் விழிகளை பூக்க வைக்கிறாய்
விரல்கள் காற்றில் உலர மெய் மறக்கிறேன்

என் மனைவியின் பற்கள் கண்ணளைக் கூச வைக்கின்றன
அவள் இனிமையானவள்

மகள்
நீ பருவமடைந்தபின் அவள் தனிமையில் புணர்கிறாள்
வெளிச்சம் பாய்ச்சும் உன் கேள்விகளுக்கு முன்
தன்னுடலைத் திறக்கத் தயங்கும் அவளைக் காண்கிறேன்

அறியமாட்டாய்
நடுப்பகலொன்றில் பதில் தர முனைந்த
என் நாவை
ருசி மிக்க மிட்டாயென அவள் ருசிக்கத் தொடங்கிவிட்டாள்

அடிநாக்கில்
எழுதிய உன் பெயர் குறுவாளாய் சிவக்க
உறிஞ்சப்படும் உமிழ்நீரில் உருகி வழிவது
யார்
உடல் …..

பருகக் கொடுத்திருந்தேன்
ஒரு
குவளை வானத்தை

தவழும் மதிய வெயிலொன்றில்
பிரியமாய் வலம் வரும் பூனையொன்றையும்
அனுப்பியிருந்தேன்

விடுமுறை நாளொன்றில் வந்து சேர்என்றவளின்வீட்டுக்கதவைத் தட்ட

உடலெங்கும் ரோமத்தோடும்
மதுவருந்தித் துள்ளும்
கண்களோடும்
திறக்கிறான்
கதவை
புத்தன்.

இந்தக் காலத்தில்
பெண்களின் கல்வி மிக அவசியம்
மேலும்…..

தலைமை ஆசிரியர் வெகு கவனமாகப் பேசுகிறார்

மகள் நேயா
இறகுகளை என் மடியிலிட்டு அமர்ந்திருக்கிறாள்

நல்லது… சிறுமி இன்றிலிருந்து எங்கள் வசம்
உள்ளங்கையை தன் மார்பில் வைத்து புன்னகைக்கிறாள்

கண்ணீரை அடக்கிக்கொண்டு முனங்குகிறேன்
இல்லை ….. சொற்ப நேரம்
நீங்கள் முனங்கினீர்களா என்ன
ஆதுரமாகக் கேட்கிறார்

இல்லை …..
சிறுமியறிவாள் என் புலன்களை

மெதுவாக தனது மேஜை இழுப்பறையைத் திறக்கிறார்
கனங்கூடிய கத்திரிக்கோலொன்றை மேஜையில் விரித்து வைக்கிறார்
காதுகள் பஞ்சடைகின்றன

நல்லது .. ஓர் இனிய வேண்டுகோள்
சிறுமியைப் பறவை இனமென்றே பதிவு செய்திருக்கிறேன்
இருப்பினும் ….

இருப்பினும்
சிறகுகள் சுதந்திரம் பேசும் வாய்கள் கொண்டவை
கத்தரித்து விடலாமா …..

வேண்டுகோள் அறைச்சுவர்களை விரிசலடையச் செய்கிறது

சிறுமி
எனது இடுப்பில் சுற்றி இடித்து
கண்களால் தலைமை ஆசிரியரின் விலாவைக் காண்பிக்கிறாள்.

4 thoughts on “சிறுமி நேயா

  1. என்ன சத்தியக்கடதாசி,
    பிரான்ஸ் எலெக்சன் பற்றி விவாதிக்க வேண்டிய நேரத்தில கவிதை வாசிக்கிறியள்? ஏன் பிரான்ஸ் இடது சாரிகள் ஜனநாயக முடிவுகளை வன்முறை கொண்டு எதிர்க்கிறார்கள் என்பதற்கு விடை தேட முயலவில்லையா?

  2. ரங்கா,
    தேனியுடன் ஊடறு,தமிழ்சேர்க்கிள் இவற்றையும் இணைக்கலாம்,
    ஜனநாயக சக்திகள் இன்னும் பலம் பெறுவார்கள்.

  3. தியட்டரிலை சனத்தையும் காணேலை படத்தை மாத்துங்கோ. பாசை விழங்காத கொசிப்பில்லாத படத்தை போட்டா சனம் சனலை மாத்திப்போடும். நீங்கள் கறுப்பு சேட்டோடை திரியிறனியள் ஞானசேகரன்ழை பொpயாரைப்பற்றி உங்கடை வித்தியாசத்தை ஓடவிட்டால் கவுஸ் புல் அடிக்கும் இதை உழஎநச பண்ணலாம்.
    மோசஸ்

  4. ஆகச்சிறந்த புணர்ச்சியை
    நிறைவேற்ற வேண்டுமாயின்
    காளியைத்தான் புணரவேண்டும்
    அவளுக்குத்தான்
    ஆயிரம் கைகள்…
    வசுமித்ரனின் …ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன என்ற கவிதைத் தொகுதியை நெருங்கவே பயங்கரமாய் இருக்கிறது. அத்தனை உக்கிரம்.

Comments are closed.