அரசாங்கத்தாலும், அவனது பெறாமகனாலும், காசு சேர்க்க அறைக்கு வந்துபோகும் இயக்கக்காரராலும் பல தருணங்களில் ‘தேசத்துரோகி’ என விளிக்கப்பட்ட ஸ்டான்லி இராஜேந்திரா, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அய்க்கிய தேசியக் கட்சி அரசுக்கும் ‘பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம்’ கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, பத்து வருடங்களுக்குப் பிறகு பிரச்சார வேலைகளுக்காகப் புலிகளின் அணியொன்று இளம்பரிதியின் தலைமையில் அவனின் கிராமத்திற்குள் உள்ளிட்டதைக் குறித்த அந்தப் பத்திரிகைச் செய்தியைத் திரும்பத் திரும்ப விசர்கொண்டு வாசித்தான்.
இவன், இவனது சீவிய காலத்திலேயே இப்போதுதான் முதன்முதலாகத் தனது அநாதைக் கிராமத்தைக் குறிப்பிடும் முக்கிய செய்தியொன்றை அச்செழுத்துகளில் படிக்கிறான். இவனது கிராமத்தில் எந்தெந்த இடங்களில் அரச படையினர் நிலை கொண்டிருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தான். இவனது கிராமத்தின் ஒவ்வொரு கோயிலிலும் தேவாலயத்திலும் பாடசாலையிலும் சங்கக் கடையிலும் மோர்க் கடையிலும் றாத்தலடியிலும் உடையார் வீட்டிலும் கடற்கரை முழுவதிலும் தெருக்களில் முழத்திற்கு முழமும் அவர்கள் இருக்கக்கூடும். புலிகள் எந்த வழியாகக் கிராமத்தினுள் நுழைந்திருப்பார்கள்? அவர்கள் எந்த இடத்தில் இராணுவத்தின் காவலரண்களைக் கடந்திருப்பார்கள்? திலீபனது உடலை மலர்ப் படுக்கையில் வளர்த்தி இவனது கிராமத்திற்கு அஞ்சலிக்காக எடுத்து வந்தபோது, கிராமத்தின் ‘மெயின் ரோட்டில்’ நின்றிருந்த இந்திய ஆர்மிக்காரர் துவக்குகளை இறக்கி ‘சல்யூட்’ செய்தது இவன் ஞாபகத்தில் வந்தது. திலீபனின் உடலின் பின்னால் வந்த ஒலிபெருக்கி வாகனத்திற்குள்ளிருந்து ‘திலீபன் அழைத்தது சாவையா? இந்தச் சின்ன வயசில் இது தேவையா…?’ என்று காசி ஆனந்தன் பேசிக்கொண்டிருந்ததும் ஞாபகத்திற்கு வந்தது.
அந்த மெயின் ரோட்டால்தான் இப்போதும் புலிகள் பிரவேசித்திருப்பார்களா? அல்லது கடல் வழியாக நுழைந்திருப்பார்களா? இல்லை, குயிலப்புலம் வழியாகப் போயிருப்பார்களா? என்று கடுமையாக யோசனை செய்தான்.
கடைசியில், புலிகள் மெயின் ரோட்டிலிருந்து இலந்தையடி ஊடாகத்தான் கிராமத்திற்குள் நுழைந்திருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்தான். இவனது கிராமத்தில் நடந்த இன்பம் – செல்வம் கொலையில் தொடங்கி, அயிட்டத்தின் சாவுவரை எத்தனையோ கோரமான, மகிழ்வான, துக்கமான, வீரமான, கோழைத்தனமான, விசுவாசமான, துரோகமான, வெற்றியான, தோல்வியான நிகழ்வுகள் அந்த இலந்தையடியில்தான் நிகழ்ந்திருக்கின்றன. எனவே, இந்தச் சமாதான முயற்சி கூட இலந்தையடியில்தான் ஆரம்பித்திருக்கும் என இவன் நம்பினான்.
ஸ்டான்லியின் கிராமத்தை அவர்கள் தமது உள்ளங்கால்களில் எற்றி விளையாடிய கரி நாளில் அவர்கள் ஸ்டான்லியை இந்த இலந்தை மரத்தோடுதான் பிணைந்திருந்தார்கள். இலந்தை மரத்தில் கட்டப்பட்டிருந்த போதுதான், ஸ்டான்லி ஆர்மிக்காரரின் ‘நடந்து போ! சிதறிப் போ!’ என்ற கட்டளைகளை நிலத்தைப் பார்த்தவாறே, சிங்களத்திலிருந்து மொழிபெயர்த்துத் தமிழில் அயிட்டத்திற்குச் சொல்லி முடித்தான்.
அயிட்டத்தின் ஞாபகம் இன்று இவனில் அங்கேயும் இங்கேயுமாக மின்னி மின்னி இப்பொழுதில் ஏனோ அயிட்டத்தின் நினைவுகளே இவனில் முழுதாகக் கவிந்திருக்கலாயிற்று.
இவனின் கிராமத்திலே அநேகமானோர் தமது பட்டப் பெயர்களால் மட்டுமே அறியப்பட்டிருந்தனர். காளைவாயர், ஆவடை, மொண்ணிக் குட்டர், பஞ்சமி, வெறிக்குட்டி, சாரைப்பாம்பு, சோட்டர், விசுக்கோத்து, சிணிப்பல்லன், கொதியர், வில்லங்கம், கே.ஆர்.விசயா, பட்டினி என்று பலமாதிரியான பட்டங்கள். ஸ்டான்லிக்கு ‘மக்கோனா’ என்று பட்டம்.
“அந்த அயிட்டத்தைக் காட்டிலும் இந்த அயிட்டம் திறமான அயிட்டம்.”
“கிளிநொச்சியிலயிருந்து ஒரு தொங்கல் அயிட்டம் கொண்டு வந்திருக்கிறன்.”
“திருநாவுக்கரசரை அயிட்டத்தோட கட்டிக் கடலில போட்டாலும் அவர் மிதந்ததுதான் அயிட்டம்.”
இப்படியாக வாயைத் திறந்தாலே வார்த்தைக்கு வார்த்தை ‘அயிட்டம்’ என்ற வார்த்தையைப் பிரயோகித்து வந்ததால் அயிட்டத்திற்கு அயிட்டம் என்று பட்டம்.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ யாழ்ப்பாணத்தில் சக்கைபோடு போட்ட காலத்தில் இவன் தவ்வல். மனோகரா தியேட்டரில் கலரி டிக்கட் வரிசையில் அடித்துப் பிடித்து நின்றுகொண்டிருந்தான். இவன் நின்ற நெரிசலான க்யூ வரிசைக்கு மேலாக முகட்டுக் கம்பியைப் பிடித்துத் தொங்கியவாறே, வரிசையில் நிற்பவர்களில் ஒரு எப்பனும் தட்டாமல் முட்டாமலும் சட்டையில்லாமலும் வெறும் சண்டிக்கட்டுடனும் கால்களை அந்தரத்தில் துழாவி அயிட்டம் ‘சர்’ எனப் போய் டிக்கெட் கவுண்டருக்கு முன்னால் ஸ்பொட்டாகக் குதித்ததை இவன் கண்டான். அங்கிருந்து தனது கட்டைத் தொண்டையால் “இந்தப் படத்தில விஞ்ஞானி வாத்தியார் பாவிக்கிற அணுகுண்டு அயிட்டம் உண்மையிலேயே அந்தாளட்ட இருக்கு, ராமாவரம் தோட்டத்துக்குள்ள அயிட்டத்த தாட்டு வைச்சிருக்குது மனுசன்” என்று அயிட்டம் யாருக்கோ சொல்லிக்கொண்டிருந்ததையும் இவன் கேட்டான்.
ராமாவரம் தோட்டம், வள்ளுவர் கோட்டம் என்றெல்லாம் அயிட்டம் கதைப்பதற்கு அவர் நகரத்தில் பெரும் சைவ உணவகத்தில் சமையல்காரராக வேலை செய்வதால் நகரத்து மனிதர்களோடு பேசிப் புழங்குவதும் கிழமைக்கு ஆறு நாட்கள் அவர் நகரத்திலே தங்கியிருப்பதும் மட்டுமே காரணங்களாக இருக்க முடியும். மற்றப்படிக்கு, பொதுவாக ஸ்டான்லியின் கிராமத்துச் சனங்களை யாழ்ப்பாண ஜூம்மா தெருவில் கொண்டுபோய் விட்டுத் தலையை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டால் திரும்ப வீட்டுக்கு வர வழி தெரியாமல் பதகளிப்பார்கள்.
ஸ்டான்லி, மக்கோனாவில் மூன்று வருடம் இருந்துவிட்டு, மீசை அரும்பிக் குரல் உடைந்த இளந்தாரிப் பருவத்திலே கிராமத்திற்குத் திரும்பி வந்தான். அந்தச் சின்னக் கிராமத்திலே சைவக்காரர் ஒரு பகுதியிலும் வேதக்காரர் இன்னொரு பகுதியிலுமாகச் சீவித்தார்கள். இரண்டு பகுதிக்கும் இடையில் அவ்வளவாகக் கொண்டாட்டமில்லை. அயிட்டத்தின் வீடு ‘இனிச்ச புளியடி முருகன்’ கோயிலுக்குப் பின்னாலிருந்தது. அயிட்டத்தின் மனைவி நெசவு டீச்சராக வேலை பார்த்தார். அவருக்கு ‘நெசவக்கா’ என்று பட்டம்.
ஒரு முன்னிலவுக் காலத்தில், இவனும் இவனொத்த பொடியளும் பீடி வலித்துக்கொண்டே ஒழுங்கைகளில் ‘சும்மா’ திரியும்போது, அயிட்டத்தின் வீடிருந்த ஒழுங்கையிலும் உள்ளிட்டார்கள். அயிட்டத்தின் கிடுகு மறைப்புக் கிணற்றடியில் தண்ணீர் அள்ளும் சத்தம். அப்படியே வேலியோடு வேலியாக நின்று நிலாவொளியில் கவனித்தார்கள்.
அயிட்டம் கிணற்றிலிருந்து உற்சாகமாகக் குதித்துக் குதித்துத் துலாக்காலால் தண்ணீர் அள்ளுகிறார். அவரின் குள்ளமான, பருமனான தேகத்துடன் அவர் குதிப்பது அச்சு அசலாய் ஒரு பெரிய பந்து குதிப்பது போலவேயுள்ளது. ஒவ்வொரு முறை தண்ணீருடன் வாளியை மேலே இழுக்கும்போதும் தன் வாயால் ‘கிறீங்… கிறீங்…’ என்ற சத்தத்தைத் துள்ளலுடன் அயிட்டம் கிளப்பினார். அவரின் மனைவி அவரைவிட உயரம். எட்டி எட்டி நெசவக்காவின் தோளில் தண்ணீர் வார்த்தார் அயிட்டம்.
“கிறீங்… கிறீங்… உரஞ்சிக் குளியம்மா, உரஞ்சிக் குளி. நாளைக்குக் கடைக்கு போகவேணும். கிறீங்… கிறீங்… அடுத்த ஞாயிறு மட்டும் அம்மாவுக்கு ஆர் தண்ணி அள்ளித் தருவினம்… உரஞ்சிக் குளியம்மா, உரஞ்சிக் குளி கிறீங்… கிறீங்…”
அயிட்டத்தின் மகள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தபோது, அரசாங்கத்திடமிருந்து அவளுக்குத் தனிச் சிங்களத்தில் ஒரு கடிதம் வந்திருந்தது. அதை எடுத்துக்கொண்டு அயிட்டம் இவனிடம் வந்தார். இவன் அதைப் படித்துச் சொன்னான். மற்றப்படிக்கு அயிட்டத்தை எப்போதாவது ஸ்டான்லி வழிதெருவில் கண்டால் ஆளை ஆள் பார்த்துத் தலையசைத்துக் கொள்வார்கள்; அவ்வளவே.
ஒரு செக்கல் பொழுதில், ஆர்மிக்காரர் இவனின் கிராமத்தைச் சூழ்ந்து நெருக்குவதாக துப்பாக்கிச் சூடுகளும் எறிகணை வீச்சுக்களும் கடலில் ஆங்காரமாக நின்று இவன் கிராமத்தையே நித்திய கண்காணிப்பில் வைத்திருக்கும் போர்க் கப்பலான ‘சங்கமித்ர’விலிருந்து கிளம்பிய பீரங்கி முழக்கங்களும் இந்தக் கிராமத்தின் வானில் மோதி ஒளியெறிந்த ‘பரா’ விளக்குகளும் சொல்லின. இப்படியான தருணங்களில், சனங்கள் சஞ்சுவானியார் தேவலாயத்திற்குள் போய்ச் சேர்ந்திருக்கப் பழகியிருந்தார்கள். இவனும் தனது அடையாள அட்டையை எடுத்துப் பத்திரப்படுத்திக்கொண்டு, தனது தாயாரைச் சைக்கிளில் வைத்து மிதித்துக்கொண்டு சஞ்சுவானியார் தேவாலயத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். வழியில் சனங்கள் அந்தரித்துக் குறுக்கு மறுக்காக ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டான்.
சஞ்சுவானியார் கோயில் வீதியில் ஸ்டான்லியின் சைக்கிள் மிதந்தபோது, தெருவில் நின்று அயிட்டமும் நெசவக்காவும் இழுபறிப்படுவதைக் கண்டான். நெசவக்காவின் கையில் ஒரு சூட்கேஸ். அவர் அயிட்டத்தையும் தேவாலயத்திற்குள் வந்திருக்குமாறு மன்றாடினார், கெஞ்சினார், திட்டியும் பார்த்தார். அயிட்டம் அசும்பவில்லை. நல்ல வெறியில் நின்று ‘லெக்சர்’ அடித்துக்கொண்டிருந்தார்.
“நீ போறதெண்டால் கோயிலுக்குள்ள போயிரு. ஆனால், நான் சிங்களவனுக்குப் பயந்தவனில்லக் கண்டியோ…”
இந்த நேரம் பார்த்து, கடலிலே பீரங்கி முழங்கிக் கேட்டது. அயிட்டம் கடலை முறைத்துக் கத்தினார். “டேய் லேடிஸ் அன் ஜென்டில்மென்ற், மெம்பர் ஒவ் பார்லிமென்ற் நான் உனக்குப் பயப்பிடவோ…” கைகள் இரண்டையும் விரித்து, விரல்களையும் அகல விரித்து ஒருமுறை ‘உர்’ என்று உறுமிவிட்டு “நான் பாயும் புலி பண்டாரவன்னியன். ஏலுமெண்டால் வந்து பாருங்கோ. என்னட்டயும் வீட்டில ஒரு அயிட்டம் இருக்கு கேம் தாறன்.” அயிட்டம் திரும்பவும் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தார். நெசவக்கா முணுமுணுத்துக்கொண்டே இவர்களோடு சேர்ந்து சஞ்சுவானியார் கோயிலுக்குள் போனார்.
இதற்கு முன்பாகவும் சில தடவை இவனின் கிராமத்தை ஆர்மிக்காரர் சூழ்ந்தபோதும், ஊர்மனைக்குள் ஆர்மிக்காரர் வந்ததில்லை. கடற்கரை ஓரமாக முன்னேறிப் போய்க்கொண்டேயிருப்பார்கள். இந்தத் தடவையும் அப்படியே நிகழும் என அயிட்டம் நம்பியிருக்கலாம். ஆனால், அது அப்படியல்ல. அடுத்தநாள் அதிகாலையில், ஆர்மிக்காரர் ஊர்மனைக்குள் புகுந்த செய்தியைச் சனங்களின் காதுகளில் தீர்ந்த வெடி சொன்னது. மேலே உறுமிப் பறந்த போர் விமானங்களுக்குக் கீழே கிராமமே ஒரு கோழிக் குஞ்சாகப் பதுங்கிக் கிடந்தது. கிராமத்திலிருந்த ஒரேயொரு மாடிக் கட்டடமான பள்ளிக்கூடத்தின் நெற்றியில் போர் விமானம் குண்டு குற்றியது. இரவு தேவாலயத்திற்கு வராமல் வீடுகளிலேயே தங்கியிருந்த ஒன்று பாதிச் சனங்களும் சஞ்சுவானியார் கோயிலுக்கு ஓடி வந்தனர். அயிட்டமும் தலையில் ஒரு பெட்டியும், கையில் ரேடியோப் பெட்டியுமாக வந்து சேர்ந்தார்.
கோயிலின் முகட்டு ஓடுகளைத் துப்பாக்கிக் குண்டுகள் ஒற்றிச் சென்றன. வெடி மணம் சாளரங்களால் கசிந்தது. சனங்கள் பயத்தால் உறைந்து போனார்கள். ஸ்டான்லி ஒரு குழந்தையைத் தூக்கிக் கையில் வைத்துக்கொண்டான். அது ஆர்மிக்காரரிடம் அனுதாபத்தைப் பெற்றுத் தரக்கூடும் என நம்பினான். ஆனால், அந்தத் தாய் இவனிடமிருந்து குழந்தையைப் பறித்து எடுத்தாள்.
ஸ்டான்லி கோயில் முன்மண்டபத்தில் நின்று பார்த்தபோது, கோயிலைச் சூழ நெருப்புகள் முளாசி எழுவதைக் கண்டான். அந்த இருள் பிரியாத வேளையில் நெருப்புகளைக் கொண்டு ஆர்மிக்காரர் ஓடி வருவதைக் கண்டான். “அய்யோ வாறாங்களே” என்று குழறிக்கொண்டே கோயிலுக்குள் ஓடினான். கோயிலினுள் பிரார்த்தனை எழுந்து விழுந்தது. எல்லா வேதக்காரச் சனங்களும் முழந்தாளிட்டுச் செபம் சொல்லிக்கொண்டிருக்க, அவர்களைப் பார்த்துச் சைவக்காரச் சனங்களும் முழந்தாளிட்டார்கள். ஆர்மிக்காரர்கள் கோயிலைச் சூழ்ந்துகொண்டார்கள். வாசல்களாலும் சாளரங்களாலும் துப்பாக்கிகள் நீண்டன.
“மே தேவாலயே கௌத லொக்கா? தமுனான்சலா ஒக்கோம இக்மனிங் எலியட்ட எவில்லா! போளிமக் ஹதண்ட! திரஸ்தவாதின் திரஸ்தவாதின்ட உதவ் கரப்பு கட்டிய எக்க பத்தட்ட என்ட! மேஹே இந்தலா கவுறு ஹரி பெனலா யண்ட பலுவுத் அபி வெடி தியனவா. அனிவாரயங் வெடி தியனவா!”
ஆர்மிப் பெரியவன் ஒரு வெறிநாய் மாதிரி தன் உருண்டையான சிவந்த கண்களைப் புரட்டிப் பேசினான். இப்போது செப ஒலிகளும் சடுதியில் நின்று சவ அமைதி. ஆர்மிப் பெரியவன் ஒற்றைக் கையால் உலுப்பித் தனது கைத்துப்பாக்கியை அடித்து ‘லோட்’ செய்ய, ஸ்டான்லி முழங்கால்களிலிருந்து எழுந்து சிங்களத்தில் ‘தறோ’வாகப் பேசினான்.
“மாத்தையா, இந்தக் கோயிலுக்கு நிரந்தரமான சுவாமியார் கிடையாது. நகரத்திலிருந்து மாதத்தின் முதல் ஞாயிறு இங்கு வந்து பூசை வைத்துவிட்டுப் போவார். நேற்றும் வந்து போனார். இங்கு இருப்பவர்களில் எவரும் பயங்கரவாதியல்ல. நாங்களெல்லாம் ஏழைச் சனங்கள். எங்கள்மீது இரக்கம் செய்யுங்கள்.”
“பன்றியே, உனக்கு எப்படிச் சிங்களம் பேசத் தெரிந்திருக்கிறது?”
“துரை, நான் மக்கோனாவில் சில வருடங்கள் இருந்திருக்கிறேன்.”
தேவாலயத்திற்குள் சனங்களைச் சிறைவைத்து ஒரு கூட்டம் ஆர்மிக்காரர்கள் நிற்க, அந்தச் சனங்களுக்குள்ளிருந்து பதினெட்டுப் பேரைத் தெரிவு செய்து, அவர்களது சாரங்களை உரிந்து அவர்களின் கைகளைப் பின்புறமாக ஆர்மிக்காரர்கள் இறுகக் கட்டினார்கள். அவ்வளவுபேரும் ஓங்குதாங்கான இளந்தாரிகள். பத்தொன்பதாவதாக ஸ்டான்லியின் சாறத்தையும் உரிந்து, அவனின் கைகளையும் முறுக்கிக் கட்டினார்கள்.
அப்போது, தேவாலயத்தின் அறைவீட்டுக்குள்ளிருந்து பாதிரியின் வெண் அங்கி அணிந்திருந்த ஒருவரைச் சில ஆர்மிக்காரர்கள் மூஞ்சியில் காறித்துப்பி பெரும் இளிப்பு இளித்து இழுத்து வந்தார்கள். அப்படி இழுத்து வரப்பட்டவர் அயிட்டம். பாதிரியின் வெண் அங்கியை எடுத்து அணிந்துகொண்டால், பாதிரியார் என்று நினைத்துத் தன்னை ஆர்மிக்காரர்கள் விட்டு விடலாம் என்று அயிட்டம் அப்பாவித்தனமாக நினைத்திருக்கலாம். அந்த நரகத்து முள் பொழுதில் கூட இவனுக்கு ‘சங்கே முழங்கு’ படத்தில் எம்.ஜி.ஆர். பாதிரி போல் வெண் அங்கியணிந்து, வேடமிட்டுத் தப்பிச் செல்வது ஒரு செக்கன் ஞாபகத்தில் மின்னிப் போனது. ஆனால், எம்.ஜி.ஆரிடமோ யாழ்ப்பாணத்துப் பாதிரிகளிடமோ உள்ள பளபளப்பான மினுக்கு மூஞ்சியும் மிதப்பான விழிகளும் இல்லாத அயிட்டத்திற்கு அந்த அங்கி பொருந்தவேயில்லை. குழறிக்கொண்டு ஓடிவந்த நெசவக்காவின் சேலையை உருவி அதன் தலைப்பால் அயிட்டத்தின் இடுப்பில் ஒரு சுற்று சுற்றிக் கட்டிய ஒரு இளைய ஆர்மிக்காரன் சேலையின் மறு தலைப்பைத் தன் கையில் பிடித்துக்கொண்டான். இந்த இருபது பேரையும் ஆர்மிக்காரர்கள் ஒழுங்கைகளிலும் வீதிகளிலும் முன்னே ஒட்டி பின்னே நடந்தார்கள். மிதிவெடி, கண்ணிவெடி போன்ற பயக்கெடுதியிலேயே தங்களை முன்னே நடக்கவிட்டு, அவர்கள் பின்னே வருவதை ஸ்டான்லி உணர்ந்துகொண்டான். இப்படியான தேவைகளுக்கென்றே இந்தியன் ஆர்மிக்காரர் இந்தியாவிலிருந்து ஆடுகளை இறக்குமதி செய்து, தங்கள் படையணிக்கு முன்னே ஓட்டிச் சென்றதும் ஞாபகத்தில் வந்தது.
போகும் வழியில் பெரியப்பா, ஜோர்ஜ், இராசு, அன்னலெட்சுமி, ஜப்பான், கொக்கன் ஆகியோரின் வெடிபட்டும் சிதறியும் பாதி எரிந்தும் கிடந்த பிரேதங்களை வீதியில் இவன் கண்டான். ஊர்மனையைத் தாண்டி மெயின் ரோட்டில் ஏறி, இலந்தையடியை நோக்கி இவர்கள் விரட்டிச் செல்லப்பட்டார்கள். ஆர்மிக்காரருக்கு அயிட்டம் ஒரு விளையாட்டுப் பொருளாகிப் போனார். அயிட்டத்திற்கு கிட்டே வருவதும், வலது கையை ஓங்குவதாகப் பாவனை செய்து இடது கையால் எதிர்பாராத இடத்தில் குத்துவதும், அயிட்டத்தின் காலைத் தட்டி கால்தடம் போடுவதும், அயிட்டத்தை உதைத்து ஓடச் சொல்லி அவர் ஓடும்போது அவரின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த சேலையை ஒற்றியிழுத்து விழப் பண்ணுவதுமாக விளையாடினார்கள்.
அப்போதெல்லாம் அயிட்டம் “அய்யோ அடிக்காதேயுங்கோ சேர், எனக்கு அம்பத்தி மூண்டு வயசு, ரெண்டு பொம்பிளப் பிள்ளையள்” என்று கதறுவார். அயிட்டத்தின் கைகள் எப்போதும் கும்பிட்டவாறேயிருந்தன.
அந்த இளைய ஆர்மிக்காரன் – அவனுக்கும் ஸ்டான்லியின் வயதுதானிருக்கும் – அவனது முதுகில் கனத்துக் கிடந்த இராணுவப் பையை அயிட்டத்தின் முதுகில் ஏற்றினான். இப்போது அவன் ஃப்ரியாக முன்னும் பின்னும் ஓடி ஓடி இவர்களை விரட்டிச் சென்றான். அவனின் கையில் சேலைத் தலைப்பு இருக்கிறது. சேலையின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த அயிட்டமும் அவனோடு சேர்ந்து ஓடினார். முதுகுப் பாரத்தால் ஆள் அரைவாசியாக வளைந்தார்.
பொழுது உச்சியில் நிற்க, இவர்கள் இலந்தையடியை நெருங்கிக்கொண்டிருந்தார்கள். வெயிலிலும் பயத்திலும் ஸ்டான்லிக்கு நா வறண்டு கிடந்தது. தண்ணீர் கேட்டதற்கு முகத்தைப் பொத்தி அடிதான் கிடைத்தது. அயிட்டம் சற்றுப் பயம் குறைந்தவராகக் காணப்பட்டார். ஆர்மிக்காரனுக்குப் பின்னால் சேலைத் தலைப்பில் ஓடும்போது, தனது வாயால் ‘ர்ர்ர்ர்…’ என வாகனம் ஓடுவது மாதிரியான சத்தத்தை எழுப்பினார். கைகளை அரை வட்டமாகச் சுழற்றி வாகனம் ஓட்டுவதாக அபிநயித்தார். இடையிடையே ஹோர்னும் அடித்தார். ஆர்மிக்காரர்களும் இதைப் பார்த்து இளித்தனர்.
இலந்தை மரத்தில் ஏற்கனவே நான்கு இளைஞர்கள் நிர்வாணமாகக் கட்டப்பட்டிருந்தார்கள். அவர்களின் தேகங்களில் இரத்தக் கோடுகள் இறங்கிய வண்ணமிருந்தன. அவர்களிடையே உணர்ச்சிகள் அற்ற இறுகிய முகத்தோடு ரேமன் கட்டப்பட்டிருப்பதை இவர்கள் கண்டார்கள். ரேமன் இயக்கத்துப் பொடியன்.
இந்த இருபது பேரையும் ஒரு நீள் கயிற்றில் இலந்தை மரத்தோடு ஆர்மிக்காரர்கள் பிணைத்தார்கள். ஏற்கனவே கட்டப்பட்டிருந்த நான்கு நிர்வாண இளைஞர்களிடையே யாராவது புலி இருந்தால் அடையாளம் காட்டித் தருமாறு இந்த இருபது பேரையும் ஆர்மிக்காரர் திரும்பவும் திரும்பவும் மிரட்டினார்கள். அயிட்டம்தான் இப்போது ஆர்மிக்காரரோடு நல்ல ‘ஹொந்தாய்’ ஆகிவிட்டாரே. அவர் தனது இரு கைகளையும் விரித்து ஆட்டி “இங்க ஒரு புலியும் இல்ல” என்று ஆர்மிக்காரர்களுக்குச் சொன்னார். அவருக்கு நிச்சயமாக ரேமனைத் தெரிந்துதானிருக்கும்.
இவர்களை நோக்கித் திடீர் திடீரென ஆர்மிக்காரர்கள் கேள்விகளை வீசினர். ஒவ்வொருவரையும் குறுக்குமறுக்காக விசாரணை செய்தனர். ஸ்டான்லிதான் மொழிபெயர்த்தான். ரேமனை அவர்கள் விசாரித்தபோது, அவன் தன்னையொரு மீனவன் என்று கூறி, தூரத்தே கடலில் தெரிந்த களங்கண்ணி வலைக் கூட்டங்களைக் காட்டி அவை தன்னுடையவை என்றும் சொன்னான். அவன் குரலின் மிகை நடிப்பை ஸ்டான்லி தானே வெட்டி, யதார்த்தமாக மொழிபெயர்த்து ஆர்மிக்காரர்களுக்குச் சொன்னான். “அது அப்படியா?” என்று ஆர்மிக்காரர் அயிட்டத்தைக் கேட்டபோது, அயிட்டம் “ஆம், அது அப்படித்தான்” எனச் சாதித்தார்.
நகரத்திலிருந்து வெடி முழங்கும் ஒலி எழுந்தது. சலிப்போடு வெடி எழுந்த திசையைப் பார்த்த ஆர்மிப் பெரியவன் திரும்பி இவர்களைப் பார்த்து “புலிகளுக்கு நான் பாடம் கற்பித்துக் காட்டுவேன்” என்று சிங்களத்தில் உறுமினான். அவன் புலிகள் என உச்சரிக்கும்போது, தனது கை விரலாலே இவர்கள் இருபத்து நான்கு பேரையும் சுட்டி ஒரு வட்டம் போட்டான்.
இப்போது ஆர்மிக்காரர் பதற்றப்பட்டார்கள். அவர்கள் வீதி நீளத்திற்கு அணிவகுத்து விறைத்து நின்றார்கள். ஆயிரம் ஆர்மிக்காரருக்குக் குறையாது என இவன் எண்ணினான். மேற்கிலிருந்து மெயின் ரோட்டால் அலறிக்கொண்டு இராணுவ வாகனங்கள் இலந்தையடியை நோக்கி வந்தன. சடார் சடார் சல்யூட்டுகள். வாகனங்களிலிருந்து சிலர் இறங்கி இவர்களை நோக்கி நடந்து வந்தனர்.
அப்படியாக வந்தவர்களில் ஒருவர் வெள்ளை ‘நஷனல்’ போட்டிருந்தார். கீழே உருமறைப்பு முரட்டுத் துணியில் நீளக்காற்சட்டையும் ஆர்மிச் சப்பாத்தும் போட்டிருந்தார். அவரின் தலை முழுவதும் சிலும்பிய வெண்முடிகள் கடற்காற்றில் நட்டுக்கொண்டு நின்றன. அவரை ஸ்டான்லி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கின்றான். அவர் ரஞ்சன் விஜேரத்ன. ஶ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர்.
ரஞ்சன் விஜேரத்ன இலந்தை மரத்தோடு பிணைக்கப்பட்டிருந்த இவர்களைப் பார்த்து “பயங்கரவாதி எல்லாத்துக்கும் நாங்க சொல்றது” என்று கொச்சைத் தமிழில் பேச ஆரம்பித்தார். ரஞ்சன் விஜேரத்னவின் உரையின் சாரம் ‘நீங்கள் கொல்லப்பட வேண்டிய கலகக்காரத் தமிழர்கள்’ என்றிருப்பதை இவன் உணர்ந்தான்.
இப்படியாக அவர் பேசும்போது, அவரருகில் நின்றிருந்த கறுப்பு முழுக்காற்சட்டையும் சிவப்புச் சட்டையும் தலையில் ஓலைத் தொப்பியும் அணிந்திருந்த ஒருவரிடம் அடிக்கடி பேசிக்கொண்டார். அந்த ஓலைத் தொப்பிக்காரரையும் எங்கேயோ பத்திரிகைப் புகைப்படமொன்றில் தான் முன்பே பார்த்திருப்பதாக ஸ்டான்லிக்குப்பட்டது. இப்போது ஆள் யாரென்று ஞாபகத்தில் வரவில்லை. ஒருவேளை அவர் அந்தத் தொப்பியைக் கழற்றினால் யாரென்று ஞாபகம் வரலாம். அந்தத் தொப்பி அவரின் முன் மூஞ்சியில் பாதியை மறைத்துக்கொண்டிருந்தது. ஆனால், அந்த மனிதர் கடைசிவரை ஓலைத் தொப்பியைக் கழற்றவில்லை.
இலந்தையடியிலிருந்து முப்பது யார் தூரத்தில் கடல். கடலுக்கு அப்பால் டச்சுக் கடற்கோட்டை நிமிர்ந்து நின்றது. அந்தக் கோட்டையும் அதனுள் இருந்த இராணுவப் படையணிகளும் புலிகளின் முற்றுகைக்குள்ளிருந்தன. கடற்கரை முழுவதும் இயக்கம் மிதிவெடிகளைப் புதைத்து வைத்திருப்பதை இவர்கள் அறிந்திருந்தார்கள். அக்கடலோரத்தில் நடமாட ஊர்ச் சனங்களுக்கு இயக்கம் தடை விதித்திருந்தது. அங்கு மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பது குறித்து ஆர்மிக்காரருக்கும் ஏதோ துப்புக் கிடைத்திருக்கிறது என்று இவன் நினைத்தான். நிகழ்வுகள் அப்படித்தான் அமையலாயின.
ஒரு ஆர்மிக்காரன் வந்து இலந்தை மரத்தோடு பிணைக்கப்பட்டிருந்தவர்களிலிருந்து அயிட்டத்தை அவிழ்த்தெடுத்தான். ஆர்மிப் பெரியவன் கடற்கரைக்கு நடந்து செல்லுமாறு அயிட்டத்திற்கு உத்தரவிட, இவன்தான் அக்கட்டளையை அயிட்டத்திற்கு மொழிபெயர்த்தான்.
இந்தக் கட்டளையைக் கேட்டவுடன், அயிட்டத்தின் தேகம் உதறிக் கால்கள் பின்னுவதை ஸ்டான்லி கண்டான். அயிட்டம் ஸ்டான்லியிடம் மெதுவாக “தம்பி கடற்கரையில பொடியள் அயிட்டம் தாட்டு வைச்சிருக்கிறாங்கள்” என்றார். திரும்பிப் பார்த்தார்; அயிட்டத்தின் பிடரிக்குப் பின்னால் துப்பாக்கிகளின் இலக்கு முட்கள். அயிட்டம் தலையில் கை வைத்தவாறே அங்குமிங்கும் பார்த்தார். வீதியோரத்தில் அறுந்த ஒற்றை ரப்பர் செருப்புக் கிடந்தது. அதை எடுத்து வலது காலில் போட்டு, விரல்களால் கௌவிப் பிடித்துக்கொண்டார். இடது கால் விரல்களால் பாதம் உயர்த்திப் பூமியைத் தொட்டார். “பிள்ளையாரே… பிள்ளையாரே…” என்று உச்சரித்துக்கொண்டே மெயின் ரோட்டிலிருந்து இறங்கிக் கடற்கரையை நோக்கி நடந்தார். ஸ்டான்லி, அயிட்டத்தின் காலடிகளை மனதிற்குள் எண்ண முயற்சித்தான். எண்பத்து நான்காவது அடியில் அயிட்டத்தின் கால்களுக்கு கீழே பூமி சீறி வெடித்தது. அயிட்டத்தின் அலறல் கேட்டுக்கொண்டேயிருந்தது.
அரசுத் தலைவர்கள் பரபரப்பும் ஆவேசமும் உற்சாகமும் கொண்டார்கள். அந்த ஓலைத் தொப்பிக்காரர் “எல்லோரையும் மிதிவெடிக்குள் விரட்டுங்கள்” என்று வீறிட்டுக் கத்தி உத்தரவிட, இருபத்து மூன்று பேரையும் பிணைத்திருந்த நீள் கயிற்றோடு அவர்கள் மிதிவெடிப் பிரதேசத்திற்குள் விரட்டி விட்டார்கள். ரஞ்சன் விஜேரத்னாவும் அந்த ஓலைத் தொப்பிக்காரரும் போய் வாகனங்களில் ஏறிக்கொண்டார்கள். ஒரே வெடிச்சத்தமும் புகையும் கந்தக மணமும் ஓலமுமாகக் கடற்கரை சிதறிக் கருகலாயிற்று.
இப்போது, பிடிபட்டவர்கள் பாதியாகக் குறைந்திருந்தார்கள். எல்லாமாகப் பதின்மூன்று மனிதர்கள் அன்று மிதிவெடிகளில் சிக்கிக் கடலோரமாய் விழுந்துகிடந்து இழுத்து இழுத்து இரத்தமோடிச் செத்துப்போனார்கள்.
இவனும் இன்னும் எஞ்சியிருந்தான். எஞ்சியிருந்தவர்களை அருகிலிருந்த சிறிய அலுமினியத் தொழிற்சாலைக்குள் பூட்டி வைத்தார்கள். அன்றிரவே இராணுவம் கிராமத்திலிருந்து தற்காலிகமாக நகர்ந்தது. போகும்போது, அலுமினியம் தொழிற்சாலை ஜன்னலுக்குள்ளால் இரண்டு கைக்குண்டுகளை எறிந்துவிட்டுப் போனார்கள்.
ஸ்டான்லி இன்னும் எஞ்சியிருந்தான். அலுமினியம் தொழிற்சாலைக்குள் அடைபட்டிருந்தவர்களில், இவர்கள் மூன்று பேர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்கள்.
மருந்துத் தடை, மின்சாரத் தடை எல்லாவற்றுக்கும் அப்பால் டாக்குத்தர்மார் அறுத்துக் கொட்டித் தைத்து ஆளைச் சரிப் பண்ணியிருந்தார்கள். ஆஸ்பத்திரிப் படுக்கையில் திகிலோடு ஸ்டான்லி படுத்துக் கிடக்கையிலே, ஸ்டான்லியை விசாரிக்க இயக்கம் வந்தது.
விசாரிக்க வந்த பொடியன் ஒருமுறையில் ஸ்டான்லிக்குப் பெறாமகன் உறவு. மிகச் சின்ன வயதிலேயே இயக்கத்திற்குப் போனவன். சில வருடங்களுக்குப் பிறகு அவனை இப்போதுதான் ஸ்டான்லி காண்கிறான். பெறாமகனுக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி வாயைத் திறந்தாலே ‘அஹ்… அஹ் ஹா ஹா… ஹா…’ சிரிப்புத்தான்.
“ஆஹா… ஹ்… ஹஹ்… குஞ்சையா ஒரு மாதிரித் தப்பிற்றியள். ஹா… ஹா…”
ஸ்டான்லி பீதியோடு புன்னகைத்தான்.
“குஞ்சையா என்ன நடந்தது? எல்லாத்தையும் விவரமாய் சொல்லுங்கோ”
“என்ன நடந்ததோ? அது சரி… ஆர்மி வர முன்னமே நீங்கள் ஓடிப் போயிட்டியள்தானே”
“ஹஹ்… ஹா… என்ன குஞ்சையா தேசத்துரோகி மாதிரிக் கதைக்கிறியள். நாங்கள் என்ன செய்தும் உங்களுக்கு நன்றியில்ல. இப்ப இஞ்ச ஆஸ்பத்திரிக்கு உங்களக் கொண்டுவந்து சேர்த்ததும் நாங்கள்தான் ஹா..ஹா”
“சரி… இப்ப நீ என்ன கேக்கிறாய்?”
“அது, நடந்தது, வந்தது, காட்டிக் குடுத்தது, ரேமனுக்கு நடந்தது, வாகனம், ஆயுதம், ஆள்க்கணக்கு எல்லாம் சொல்லுங்கோ”
“என்னைத் திரும்பவும் ஆர்மி பிடிச்சால், உங்களுக்கு ரிப்ஸ் தந்ததைக் கேள்விப்பட்டானோ என்னை உடனே கொல்லுவான்”
“ஹாஹா… பேந்தும் பார் குஞ்சையாவ, ஒரு தேசத்துரோகி போல கதைக்கிறேர்”
பெறாமகன், இந்தத் ‘தேசத்துரோகி’ என்ற வாக்கியத்தைப் பிரயோகிப்பதில் அதீத ஆர்வம் காட்டினான். பகடி, வெற்றி எல்லாவற்றுக்கும் இப்பதத்தைப் பிரயோகித்துப் பேசினான்.
ஸ்டான்லி மிகுந்த பிரயாசையுடன், நிகழ்ந்த எல்லாவற்றையும் ஞாபக அடுக்குகளிலிருந்து உருவி இயக்கத்திடம் கொடுத்தான். ஆர்மிக்காரரின் எண்ணிக்கை, அவர்களின் ஆயுதங்கள், வாகன அமைப்புகள், அணிகள், ஆர்மிக்காரர்கள் தங்களுக்குள்ளே சிங்களத்தில் நடத்திய உரையாடல்கள் போன்ற எல்லாவற்றையுமே ஒன்றுவிடாமல் சொன்னான். அவை இயக்கக்காரருக்குப் பெரிதும் பயனளிக்கும் தகவல்களாக அமையக்கூடும் என நம்பினான். ரஞ்சன் விஜேரத்ன பற்றியும் ஓலைத் தொப்பிக்காரர் பற்றியும் சொன்னான்.
ஆனால், இவனுக்கு இப்போதுகூட ஓலைத் தொப்பிக்காரரை அடையாளம் பிடிக்க முடியவில்லை. பெறாமகனும் பெறாமகனோடு வந்தவர்களும் இதை விடுவதாயுமில்லை. மிகுந்த ஆர்வத்துடனும் கவனத்துடனும் ஓலைத் தொப்பிக்காரர் குறித்துக் கிண்டிக் கிண்டிக் கேட்டனர்.
அடுத்த நாள், சில புகைப்படங்களைக் கொண்டுவந்து காட்டி விசாரித்தனர். ஒரு புகைப்படத்தைப் பார்த்த ஸ்டான்லி “இவர் டக்ளஸ் தேவானந்தா, இவரை எனக்குத் தெரியும்” என்று முணுமுணுத்தான். “ஹா… இந்தத் தேசத்துரோகியும் இல்லையா” என்று சொல்லிப் பெறாமகன் அலுத்துக்கொண்டான்.
ஸ்டான்லி ஓலைத் தொப்பிக்காரரின் அங்க அடையாளங்களை விவரித்தான். ஓலைத் தொப்பிக்காரர் மிகுந்த கோபத்துடன் அகங்காரமும் விசமமும் தோய்ந்த குரலில் இவர்களை மிதிவெடிகளுக்குள் விரட்டிய ‘ஸ்டைலை’ச் செய்தும் காட்டினான். இறுதியில் ஒரு தெந்தெட்டாக அவரின் மூஞ்சியைக் கோடுகளாலே கீறியும் காட்டினான். என்னதான் முயற்சிகள் செய்து பார்த்தபோதிலும், இவனாலோ இயக்கக்காரராலோ அந்த ஓலைத் தொப்பிக்காரரை அடையாளம் காண முடியாமலே போனது.
பின்பு, ஸ்டான்லி வெளிநாட்டுக்கு வருவதற்காகக் கொழும்புக்கு வந்தபோது ‘பஞ்சிகாவத்த’ தெருச்சுவரில் ஒட்டியிருந்த ஒரு தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டியில் ஓலைத் தொப்பிக்காரரின் புகைப்படத்தையும் பெயரையும் கண்டான். அவர் ரணில் விக்கிரமசிங்க.
அப்போதெல்லாம் ரணில் விக்கிரமசிங்க பெரிய பிரபலமில்லை. சர்வதேசப் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் அவரைக் குறித்து நம்பிக்கை தெரிவிப்பது போன்ற அயிட்டங்களும் நிகழ்ந்திருக்கவில்லை.
கறுப்பு -2002