கற்பனையே செய்யமுடியாத விஷயங்கள்தான் இலங்கையின் வரலாறாக இருக்கிறது

நேர்காணல்கள்

18.12.2024 – ஆனந்த விகடன் இதழில் வெளியாகிய எனது நேர்காணல்.
நேர்கண்டவர்: நா.கதிர்வேலன்

இன்றைக்கும் ஷோபாசக்தி, ஈழ இலக்கியத்தின் முக்கியமான முகம். அவரைத் தவிர்த்துவிட்டு நாம் இலக்கிய வகைமைகளை யோசிக்க முடியாது. புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகள், இன ஒடுக்குமுறைகள் என இதயத்தைப் பிசையும் மொழி இவருடையது. நவீனத் தமிழுக்கும் ஒளிரும் கலை நம்பிக்கை ஷோபா. இப்போது நடிகராக தமிழ் மட்டுமல்லாது, ஹாலிவுட்டிலும் களைகட்டுகிறார். எந்த அணியிலும் சேராத, கூச்சலிடாத அவரது போக்கு அரிதினும் அரிது. சிறந்த கலைஞனுக்கான புதுப்பித்துக்கொள்ளும் மொழியும் லாகவமும் மெல்லிய குரலில் வெளிப்பட… அவரிடம் நடந்தது இந்த உரையாடல்.

வெகு நாளுக்குப் பிறகு தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள்!

தமிழ்நாட்டுக்கு வருகை தருவது எப்போதும் மகிழ்ச்சி தான். தமிழில் நான் நடித்த ‘சொர்க்கவாசல்’ திரைப்படமும் வெளியாகியிருக்கிறது. அதுவும் போக 27 வருஷங்கள் நான் எழுதிய சிறுகதைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பும் இப்போது வெளியாகிறது. அம்மாவை வெகு நாளுக்குப் பிறகு சந்திக்கப் போகும் சந்தோஷமும் கூடி வருகிறது. வேறென்ன? கொஞ்சம் நிறைவான பயணம்தான் இது.

சர்வதேச அளவில் முகம் தெரிந்த நடிகராகிவிட்டீர்கள். சிவப்புக் கம்பள வரவேற்பை ஹாலிவுட்டில் பெற்றுவிட்டீர்கள். இதெல்லாம் எதிர்பார்த்ததுதானா?

சினிமா பிடிக்குமென்பதால் சின்ன வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. `சுவரில்லாத சித்திரங்கள்’ வந்த போது எனக்கு 12 வயதிருக்கும். இந்தியாவுக்கு வந்து பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணமிருந்தது. நான் எம்.ஜி.ஆர் ரசிகன் என்பது யாவரும் அறிந்ததுதான். கலைஞர் திரை எழுத்தின் மீது பற்றுக் கொண்டிருந்தேன். கல்யாண வீடுகளிலும் கோயில் திருவிழாவிலும் ஒலிபெருக்கிகளில் ஒலித்துக்கொண்டே இருந்த ‘மனோகரா’, ‘பராசக்தி’ வசனங்களை மறப்பதற்கில்லை. பத்து வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி விட்டேன். நாட்டில் ஏற்பட்ட சூழலில் புலம் பெயர்ந்துவிட்டேன். அப்புறம் எல்லாவற்றுக்கும் பெரிய இடைவெளி. புதிய நாடு, புதிய கலாசாரம்.

திடீரென 47-வது வயதில் ‘தீபன்’ படத்தில் ஒரு முதன்மைப் பாத்திரம் கிடைத்தது. அதிலிருந்து தொடர்ந்து அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் போய் திரைப்படங்களில், நாடகங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சினிமாவைவிட நாடகத்தின் டிக்கெட் விலை அதிகம். நாங்கள் 30 நாள்கள் தொடர்ந்து நாடகம் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறோம். பாண்டிச்சேரியின் குமரன் வளவன் அங்கே வந்து நல்ல நாடகங்களைப் போடுகிறார். புரிசை சம்பந்தன்கூட இங்கே வந்து கூத்து கட்டுகிறார். அதை பிரான்ஸ் மக்கள் ரசித்துப் பார்க்கிறார்கள்.

எப்படிப் புலம்பெயர் வாழ்வை ஏற்றுக் கொண்டீர்கள்?

31 வருஷங்களாக பிரான்ஸில் இருக்கிறேன். பிரான்ஸுக்குப் போக வேண்டும் என்பது இலக்கு அல்ல. ஏதாவது வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதொன்றே என் முன் இருந்த ஒரே தீர்வு. இலங்கையில் கடுமையான யுத்தம் நடந்த காலம், அங்கேயிருந்து வெளியாக வேண்டும். இப்போது பிரான்ஸிலும் இனவாதம் கூடிவிட்டது. இவ்வளவு படித்தவர்கள் இருந்தும் அமெரிக்காவில் ட்ரம்ப்தான் மீண்டும் வந்திருக்கிறார். ஐரோப்பா முழுக்க வலதுசாரிகள் வலுக்கொண்டு இருக்கிறார்கள். பிரான்ஸிலும் அதிதீவிர வலதுசாரிகள்தான் இப்போது பெரும் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். இடதுசாரிகள் அதைத் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பிரான்ஸின் பெரும்பான்மையான மக்கள் வலதுசாரிகளைத் தான் ஆதரிக்கிறார்கள்.

`வெளிநாட்டவர்களை விரட்டுவோம்’ என்றுதான் தேர்தலில் நிற்கிறார்கள். ட்ரம்பும் அமெரிக்காவில் வெளிநாட்டவரை விரட்டுவோம், மதில் கட்டு, சுவர் எழுப்பு என ஆரம்பித்து விட்டார். இந்தச் சூழலில்தான் நாங்கள் வாழ்கிறோம். நாங்கள் படித்துவிட்டு தொழிலுக்குப் போனவர்கள் கிடையாது. இந்த நாடுகள் விரும்பிக் கூப்பிட்டுப் போனவர்களும் கிடையாது. நாங்களாக போய் மூடிய கதவுகளை முட்டித் திறந்து அகதிகளாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். வேறு வழியில்லை… அடுத்த தலைமுறையும் அவர்களின் இனவாதத்தைச் சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் எங்கள் அளவுக்கு அவர்கள் கஷ்டப்பட வாய்ப்பில்லை. அடுத்த தலைமுறை பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு அவர்களே தங்களை பிரஞ்சுக்காரர்கள் மாதிரியே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அப்படி பிரெஞ்சுக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டுமே! அவர்களுக்கு எல்லோரும் கறுப்பர்கள்தானே! இடதுசாரிகளும் சோஷலிஸ்ட்களும் செல்வாக்காக இருந்த காலம் ஒன்றிருந்தது. சோவியத்தின் உடைவுக்குப் பிறகு இந்தக் கட்சிகள் செல்வாக்கு இழந்துவிட்டன. இங்கே தொடர்ந்து பிரச்னை இல்லாமல் நாள்களைக் கடத்துவது அவ்வளவு சுலபம் கிடையாது.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஊருக்குப் போனதை எப்படி உணர்ந்தீர்கள்?

யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகள் மக்களால் கைவிடப்பட்டு இருக்கின்றன. நான் பிறந்த அல்லைப்பிட்டியில் 10 சதவிகித மக்களே இருக்கிறார்கள். நாய்கள்தான் அதிகம் திரிகின்றன. ஊரைப் பார்த்ததும் பெரிய வெறுமை வந்து தாக்கியது. அந்த ஊரில் யுத்தத்திற்கு முன்னால் இன்பமான நாள்களைப் பார்த்த கடைசித் தலைமுறை நான்தான். இரவுக் காட்சியை அடுத்த ஊரில் பார்த்துவிட்டு நடந்து வந்த பின்னிரவு நேரங்கள் அதிகம். விடிய விடிய நடந்த திருவிழாவோடு பார்த்த யாழ்ப்பாணம்தான் மனதில் நிறைந்திருக்கிறது. யுத்தத்தின் வெறுமை மக்கள் முகத்திலும் ஆன்மாவிலும் உறைந்திருக்கிறது. எல்லா நம்பிக்கைகளும் விழுமியங்களும் உடைந்து சிதறிய மக்களைப் பார்த்தேன். சர்வ நிச்சயமாக இது 32 வருஷத்திற்கு முன்னால் நான் பார்த்த ஊரில்லை.”

புது அதிபர் அநுர குமார திசாநாயக்கவின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர்கள் பற்றிய உங்கள் நம்பிக்கை என்ன?

இலங்கை சுதந்திரமடைந்த பிறகு ஆட்சி செய்தவர்கள் பிரபுத்துவப் பின்புலத்தில் வந்தவர்கள். அவர்களது உறவினர்களாலும் குடும்பத்தாலும் மட்டுமே இலங்கை ஆளப்பட்டு வந்தது. முற்றுமுழுதான ஊழல் ஆட்சி, முழுவதுமாக பௌத்த பிக்குகளின் கட்டளைக்கு அடிபணிந்த ஆட்சி என்றுதான் இரண்டு கட்சிகளும் இருந்தன. இரண்டு கட்சிகளுமே மாறி மாறி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தார்கள். அவர்கள் ஜே.வி.பி எழுச்சியின் போது சிங்கள மக்களையும் கொன்றார்கள். இதுதான் இதுவரையிலான இலங்கை வரலாறு. அநுர அவ்வாறான பின்புலத்தைக் கொண்டவர் அல்ல. எளிய விவசாயிகளும் தொழிலாளர்களும் மீனவத் தோழர்களும் சேர்ந்து எழுப்பிய கட்சி அவருடையது. 50 வருஷத்திற்கு மேலாக இருக்கிற கட்சி. இப்போது ஆட்சிக்கு வந்திருப்பது நல்லது என்றே கருதுகிறேன்.

இலங்கையில் சிங்களர்கள் தவிர்த்து இலங்கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், முஸ்லிம்கள் என சிறுபான்மையினரும் வாழ்கிறார்கள். இந்த இன அடையாளங்களை அழித்து ஒழித்து எல்லா இனங்களையும் ஒரே தேசிய இனத்திற்குள் கரைக்க ஒரு முயற்சி நடக்குமோ என்ற சந்தேகமும் இந்த அரசின் மீது இருக்கிறது. எத்தனையோ பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டு சிறுபான்மையினர் நசுக்கப்பட்டதுதான் வரலாறு. இனி சிறுபான்மையினரின் பிரச்னைகள், அரசியல் உரிமைகள், சமத்துவம், வேலைவாய்ப்பு, கல்வி இவற்றுக்கான நல்ல அணுகுமுறையைச் செயல்படுத்த வேண்டியது இவர்களின் கடமையாக இருக்கிறது. இவர்களை நம்பித்தான் தமிழ் மக்களும் எப்போதும் நடக்காத அளவுக்கு யாழ்ப்பாணத்திலேயே ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். இத்தனை வருடங்களாக மற்றவர்களை நம்பி ஒன்றும் நடக்கவில்லை. பொருளாதாரச் சரிவு தாண்டி ஒரு நல்ல ஆட்சி தர மாட்டார்களா என எல்லோருமே ஏங்குகிறார்கள். இதுவரை இவர்கள் இனவாதம் பேசவில்லை. எதையும் செய்யும் கட்டுக்கடங்காத அதிகாரம் இருக்கிறது. செய்வார்களா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம். எல்லாமே நம்பிக்கைதான்!

புலிகள் இல்லாமல்போவார்கள் என்பதைக் கற்பனை செய்தாவது பார்த்தீர்களா?

கற்பனை செய்து பார்க்க முடியாத பல விஷயங்கள்தான் இலங்கையின் வரலாறாகவே இருக்கிறது. இந்திரா காந்தி இலங்கைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள் எனவும், இளைஞர்களை ஆயிரக்கணக்கில் கூப்பிட்டு ஆயுதப் பயிற்சியும் பணமும் கொடுப்பார்கள் எனவும் எதிர்பார்க்கவில்லை. இந்திய ராணுவம் இலங்கை வருமென்றும், அதே மாதிரி இந்திய ராணுவம் திரும்பப் போய்விடும் என்றும் நம்பவே இல்லை. பிரேமதாசாவிற்கும் புலிகளுக்கும் ஒப்பந்தம் வரும் என்று நம்பவே இல்லை. விடுதலைப்புலிகள் முற்றும் முழுதாக அழிந்து போவார்கள் என யாரும், யாரும் நம்பவே இல்லை. ராஜபக்‌ஷேக்கள் நாட்டை விட்டு ஓடுவார்கள் என நம்பவே இல்லை. கோத்தபய இருந்த வீட்டைச் சூறையாடுவார்கள் என நம்பவே இல்லை. அநுர இப்படி பெரும்பான்மையில் வருவார் என நம்பவே இல்லை. நம்ப முடியாத பல விஷயங்கள் 40 வருடத்தில் நடந்திருக்கின்றன. விடுதலைப்புலிகள் எனும் அமைப்பு இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அரசியல் முகத்தை மாற்றியிருக்க வேண்டும். அடுத்த தலைமுறையாவது நம்பிக்கை தருவதாக அமைய வேண்டும். நான் ஈழத்திலிருந்து வெளிவந்து 32 வருஷங்களாகிவிட்டன. எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டியது இன்றைய தலைமுறை இளைஞர்கள்தான். இத்தனை வருட யுத்தத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம், இழப்பு, வன்மம், பிரச்னைகள் இருக்கின்றன. இதிலிருந்து மீள வேண்டும்.

சினிமா, நாடகம், பயணங்கள் என உருமாறி இருக்கிறீர்கள். எழுத்து குறைந்துவிட்டதா?

நான் மேற்கொள்ளும் எல்லாக் கலைகளுக்கும் நடுவில் ஒரு தொடர்பு இருக்கிறது. எனக்குக் கலையே அடிப்படை. சினிமாவில் ஒரு பாத்திரத்தின் அமைப்பைத் தரும்போது ஓர் எழுத்தாளராக என்னால் அதை மெருகேற்ற முடியும். நாடகங்களிலும் அதற்கான நியாயத்தைச் செய்கிறேன். பெரிய வேறுபாடு இல்லை. அடிப்படையில் எழுத்தாளனாக இருப்பதுதான் எனக்கு முக்கியம்.

இத்தனை வருட வாழ்வில் பெற்ற சாரம்தான் என்ன?

யுத்தத்திலும் நேரடியாகப் பங்கேற்றிருக்கிறேன். யுத்தம் எதற்கும் தீர்வல்ல. குரேஷிய பிரதமர், ‘பத்து நாள் யுத்தம் புரிவதைவிட பத்து வருஷம் பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தது’ என்றார். அதுதான் சத்தியமான உண்மை. இன்றைக்கு உலகம் முழுக்க யுத்தங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவை ஒருபோதும் மக்களுக்கு நியாயத்தைத் தேடித் தராது என நிச்சயமாக நம்புகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து தொடங்கப்பட்ட ஆயுதப்போராக இருந்தாலும் ஆயுதம் என்பது அழிவைத் தரக்கூடியதே. இதுவே கற்ற பாடம். காந்தியார் சொன்னது போல ‘கொள்கையில் எதிர்த்து நிற்போம்; ஆனால் யாரையும் வெறுக்க வேண்டாம்’ என்பதுதான் இறுதியில் எனக்கும் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *