‘கருப்புப் பிரதிகள்’ வெளியிட்டிருக்கும் ‘டானியல் அன்ரனி கதைகள் – அதிர்வுகள் – கவிதைகள்’ தொகுப்பு நூலுக்கு எழுதிய முன்னுரை:
நமது கையிலிருக்கும் இந்தச் சிறிய பிரதி டானியல் அன்ரனி அவர்களுடைய மொத்த எழுத்துகளின் ஒரு பகுதியே. கண்டடைய முடியாதவாறு தொலைந்துபோயிருக்கும் கணிசமானளவு சிறுகதைகளையும், எழுதி முடித்தும் அச்சேறாத ‘இரட்டைப்பனை’, ‘செவ்வானம்’ நாவல்களையும் கொண்டது அவரது படைப்புத் தடம். அவர் ‘அமிர்த கங்கை’ இதழில் எழுதத் தொடங்கியிருந்த குறுநாவல் தொடருக்கு ‘தடம்’ எனப் பெயரிட்டிருந்தார். அது முழுமையடையாமல் ஓர் அத்தியாயத்தோடு நின்றது போலவே, டானியல் அன்ரனியின் வாழ்க்கைத் தடமும் முழுமை பெறாமல், நாற்பத்தேழு வயதிலேயே அவரின் மறைவு நிகழ்ந்துவிட்டது.
‘சமர்’ என்ற இலக்கியச் சிறுபத்திரிகையின் ஆசிரியர், சிறுகதையாளர், இலக்கிய விமர்சகர், கவிஞர் எனப் பலதளங்களில் பயணித்த டானியல் அன்ரனியின் ஆயுட்காலம் நீடித்திருப்பின், தமிழ் இலக்கியத்திற்கு அவரிடமிருந்து இன்னும் அதிகமாகவும், செறிவாகவும், புதிது காண்பதாகவும் எழுத்துகள் கிடைத்திருக்கும் என்பதற்கு நம் கையிலிருக்கும் நூலிலேயே சான்றுகளுண்டு.
டானியல் அன்ரனியின் கதையுலகம் விளிம்புநிலை மக்களின் உலகமே. நெய்தல் நிலத்தின் மகனான அவரின் கதைகளில் கடலும், நெய்தல் மக்களின் பண்பாடும், நெய்தல் வட்டார மொழியும் இயல்பாகவே அமைந்துவிடுகின்றன. கடுமையான உழைப்பாளர்களான கடல் தொழிலாளர்களின் வறுமையையும், முதலாளிகளான சம்மாட்டிகளால் அவர்கள் ஒட்ட வறுகப்படுவதையும், கொத்தடிமைகளாக மாற்றப்படுவதையும் மட்டுமல்லாமல்; இந்தத் தொழிலாளர்களைக் கடவுளின் பெயரால் கத்தோலிக்கத் திருச்சபையும், இல்லாத கடவுளுக்குத் தசமபாக காணிக்கை கேட்டுக் கள்ளப் பாதிரிகளும் சுரண்டுவதையும் நேரடிச் சாட்சியமாக நின்று டானியல் அன்ரனி எழுதிக் காட்டியிருக்கிறார்.
எனவே, இந்தத் தொகுப்பைப் படிக்கும் இரசனை விமர்சனக் கனவான்கள் டானியல் அன்ரனியை ‘செங்கொடி’ பிடிக்கும் எழுத்தாளர் எனச் சொல்லி நம்மைச் சீண்டக்கூடும். சாதிக்கொடுமை, சீதனம், சுரண்டப்படும் மலையகச் சிறார்கள், இலங்கை அரசபடைகளின் அராஜகம் என்றெல்லாம் எழுதிச் சென்றிருக்கும் டானியல் அன்ரனியின் பங்களிப்பை ‘கட்சி எழுத்தாளர்’ என இலக்கிய இந்துத்துவாக்கள் கடந்து செல்லவும் கூடும். ஆனால், நாம் அப்படி டானியல் அன்ரனியை மதிப்பிட்டுவிட முடியாது.
பேராசிரியர்கள் கைலாசபதியும், சிவத்தம்பியும் தமிழ் இலக்கிய விமர்சனத்தில் பெரும் ஆளுமைகளாகச் செயலாற்றிய காலத்திலும், கே.டானியல், டொமினிக் ஜீவா போன்ற இடது எழுத்தாளுமைகள் அதிதீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த காலத்திலும், சீனச் சார்பு இடதுசாரி இயக்கம் சாதியத்திற்கு எதிராகத் தீவிரமான போராட்டக் களங்களை வடபகுதியில் உருவாக்கிக்கொண்டிருந்த காலத்திலும் எழுத்தாளராக உருவாகி வந்தவர் டானியல் அன்ரனி. முற்சொன்ன ஆளுமைகளுடனும், இயக்கத்துடனும் நேரடித் தொடர்பையும், தொடர்ச்சியான உரையாடல்களையும், கூட்டுச் செயற்பாடுகளையும் கொண்டிருந்தவர் அவர். எனவே இவற்றின் பெருந்தாக்கம் அவரது வாழ்விலும், இலக்கியச் செல்நெறியிலும், எழுத்திலும் இருந்தேயாகும். அதற்கு இத்தொகுப்பும் சாட்சியமாகிறது.
டானியல் அன்ரனி சர்வதேச இலக்கிய விமர்சகர்களின் எழுத்துகளால் உத்வேகம் பெற்றவராவும் இருக்கிறார். அவர்களது வழியே, புதிய சிந்தனைகளைக் குறித்தும், புதிய எழுத்து வடிவங்கள் குறித்தும் அவர் தன்னுடைய கட்டுரைகளில் விவாதிக்கிறார். ஆனால், காலதேவதை அனுமதிக்காததால், அந்த வழியில் அவரால் மேலும் முன் செல்ல முடியாமல் போனது ஈழத்து இலக்கியச் செல்நெறிக்கு இழப்பே.
புதிய இலக்கிய செல்நெறிகளைத் தேடிச் சென்றுகொண்டிருந்த டானியல் அன்ரனி, தன்னுடைய கதைகளிலும், கவிதைகளிலும் அவற்றைக் கையாண்டார் என்பதற்கான தடயங்கள் மிகக் குறைவாகவேயுள்ளன. டானியல் அன்ரனியின் கதைகளின் வடிவமைதியிலும், மொழியாளுகையிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்க வகைமாதிரிக் கதைச் சட்டகங்களை மீறி அவரது கதைமொழி விரியவில்லை.
ஆனால், வடிவம், மொழி என்ற அழகியல் சங்கதிகளுக்கு அப்பாலும் டானியல் அன்ரனியின் கதைகளுக்கு ஒரு பெறுமானமுண்டு. தனது காலத்தின், தனது நிலத்தின் விளிம்புநிலை மக்களது துயரையும், வறுமையையும், அடிமைத்தளையையும் மட்டுமல்லாமல், அந்த மக்களது பண்பாட்டையும், காதலையும், கொண்டாட்டத்தையும், போர்க்குணத்தையும் தன்னுடைய கதைகளால் மானுடத்தின் காலப் பேரேட்டில் ஒரு புள்ளியாக அவர் பதிவு செய்திருக்கிறார்.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் டானியல் அன்ரனியின் முதன்மைப் பாத்திரம் ‘சமர்’ சிறுபத்திரிகையின் ஆசிரியர் என்பதுதான் என்றே நான் மதிப்பிடுவேன். கலை கலைக்காவே வகை ‘சுத்த’ இலக்கியத்தையோ அல்லது கட்சி சார்ந்த இறுக்கமான கடப்பாடு இலக்கியத்தையோ பின்தொடர்ந்தவரல்ல அவர். இலக்கியம் சமூக மாற்றத்திற்காக அழகியல் கலைவடிவம் என்பது அவரது நோக்கு என்பதை அவரது ‘அதிர்வுகள்’ கட்டுரைகள் வழியே நாம் அறியக்கூடியதாகயிருக்கிறது. அமைப்பு அல்லது கருத்து எல்லைகளுக்குள் தன்னைக் குறுக்கிக்கொள்ளாமல், பல்வேறு தரப்புகளது எழுத்துகளையும் சமரில் வெளியிட்டார். ஆக்க இலக்கியம் – இலக்கிய விமர்சனம் – சமூக விடுதலை என்ற முத்தளத்திலும் செயற்பட்ட சமர் பத்திரிகை தமிழ் சிறுபத்திரிகை வரலாற்றின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று.
டானியல் அன்ரனியின் எழுத்துகளைத் தொகுப்பாகப் படிக்கும் போது, நாம் ஒரு காலத்தைப் படிக்கிறோம், பண்பாட்டைப் படிக்கிறோம், போராட்டத்தைப் படிக்கிறோம், விடுதலையைப் படிக்கிறோம்!
-ஷோபாசக்தி