சிறுகதை : ஷோபாசக்தி
*01.01.2008ல் பிராங்போர்ட் நகரில் ‘இனங்களின் அய்க்கியத்திற்கான இலங்கையர் ஒன்றியம்’ நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு ‘இலங்கையில் மனித உரிமை மீறல்களும் அதன் பரிமாணங்களும்’ என்ற தலைப்பில் இலங்கை ஊடகச் சுதந்திரப் பாதுகாப்பு அமைப்பின் செயலாளரும் பத்திரிகையாளருமான உபுல் கீர்த்தி (39) ஆற்றிய உரை:
தோழர்களே!
இன்றைக்கு ஒரு கொலையோடு புத்தாண்டு நமக்கு விடிந்திருக்கிறது. முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரும் தற்போதைய கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினருமான தியாகராசா மகேஸ்வரன் இன்று காலையில் கொல்லப்பட்டுள்ளார். அமரர் மகேஸ்வரனை ஊடகவியலாளன் என்ற முறையில் நான் இருதடவைகள் சந்தித்திருக்கிறேன். அந்தச் சந்திப்புகளின் ஞாபகங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள என்னை அனுமதியுங்கள்.
நானொரு இடதுசாரிப் பத்திரிகையாளன் என்ற முறையில் எனக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றன. அந்தத் தளத்திலிருந்தே சில விடயங்களை நான் பேச விழைகிறேன். எனினும் தமிழ்ச் சகோதரர்களே நிறைந்திருக்கும் இந்த மண்டபத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த எனது உரையை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்வீர்களோ என்ற நியாயமான அச்சமும் என்னுள் தோன்றுவதை நான் உங்களிடம் மறைக்க விரும்பவில்லை. இங்கே பேசிய தோழர் ரகுநாதன் முஸ்லீம் மக்களை ஒடுக்கிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய இனத்தில் பிறந்ததற்குத் தான் வெட்கப்படுவதாகச் சொன்னார். அவரை அடியொற்றிச் சொன்னால் பெரும்பான்மைச் சிங்கள இனத்தில் பிறந்ததற்காக நான் குற்றவுணர்வு கொள்கிறேன்.
தியாகராசா மகேஸ்வரன் இந்து கலாச்சார அமைச்சராகயிருந்தபோது ஒரு பத்திரிகை நேர்காணலுக்காக முதற் தடவையாக நான் அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். மகேஸ்வரனுடைய அரசியலில் எனக்கு எப்போதும் கடும் விமர்சனங்கள் இருந்திருக்கின்றன. குறிப்பாக அவர் சார்ந்திருந்த அய்க்கிய தேசியக் கட்சியை நான் எப்போதும் கடுமையாக விமர்சித்தே வந்திருக்கிறேன். ஆனால் அந்த இனவாதக் கட்சிக்குள் ஒரு யாழ்ப்பாணத் தமிழரான மகேஸ்வரனால் எப்படி ஒத்தோட முடிகிறது என்ற கேள்வி என்னிடமிருந்ததில்லை. ஏனெனில் இலங்கையின் முன்னணி வர்த்தகரும் சொந்தமாகக் கப்பல்களை வைத்திருந்து யாழ்ப்பாணத்து மக்களுக்கு மண்ணெண்ணை விற்றே மில்லியனரானவருமான மகேஸ்வரனின் வியாபார நலன்களிற்கும் அவரின் அரசியலுக்குமான தொடர்புகளை எல்லோரைப் போலவே நானும் அறிவேன். ஆனால் என்னிடம் வேறொரு கேள்வியிருந்தது. இந்த வியாபார நலன்களைத் தாண்டியும் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்தவர், ஒரு தமிழர் என்ற முறையில் மகேஸ்வரனின் அரசியலுக்கு ஏன் இன்னொரு பக்கம் இருக்கக் கூடாது என்று நான் யோசித்தேன். அந்த நேர்காணல் முழுவதும் அவரின் மறுபக்கத்தை –அப்படியொன்றிருந்தால் – வெளிக்கொணரவே நான் முயற்சித்தேன். ஆனால் அமைச்சர் மகேஸ்வரனிடம் மூன்றாவது பக்கமொன்றிருந்தது.
இலங்கையில் ‘முதலீட்டுத்துறை அமைச்சர்’ என்றொரு பதவியிருப்பதுபோல ‘முறையீட்டுத்துறை அமைச்சர்’ என்றொரு பதவி உருவாக்கப்பட்டால் அதற்கு மகேஸ்வரனை விடச் சிறப்பானவராக ஒருவரைத் தேடியும் கண்டுபிடிக்க முடியாது. முழு நேர்காணலிலும் அமைச்சர் என்னிடம் முறையிட்டுக் கொண்டேயிருந்தார். ஜனாதிபதி, அரசாங்கம், புலிகள், இந்தியா, ஈபிடிபி, மனோ கணேசன், யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழு எனச் சகலரைக் குறித்தும் அவர் அந்த நேர்காணலில் முறையிட்டார். எதிர்ப்புக் குரலுக்கும் முறையீட்டுக் குரலுக்குமுள்ள வித்தியாசத்தை நீங்கள் விளங்கிக்கொள்வீரகள் என்று நம்புகிறேன். அவருடைய குரல் உரிமை கோரிய குரலாயில்லாமல் கருணை கோரிய குரலாயிருந்தது.
நேர்காணலில், அவரின் வியாபாரத்தின் திடீர் வளர்ச்சி குறித்து நான் கேட்டபோது அமைச்சர் ‘ஹித்த ஹொந்த அம்மாட்ட ஹம தாம படே’ என்றார். இந்தப் பிரபலமான சிங்களப் பழமொழிக்கு ‘நல்ல மனதுள்ள அம்மாவுக்கு வயிற்றில் எப்போதும் பிள்ளையிருக்கும்’ என்று பொருள். மிகச் சிக்கலான கேள்விகளை என்னிடமிருந்து மகேஸ்வரன் எதிர்கொண்டபோது – குறிப்பாக அவரின் வியாபாரத்திற்கும் அவரின் அமைச்சர் பதவிக்குமான தொடர்புகளைக் குறித்து நான் கேட்டபோது – அவர் உரத்த குரலில் என்னைக் குறித்துக் கடவுளிடம் முறையிட்டார்.
மகேஸ்வரன் என்னோடு என்ன குரலிலும் தொனியிலும் பேசினாரோ அதைப் போலவே கடவுளிடம் முறையிடும் போதும் மேலே பார்த்துக் கைகளை விரித்துக் கடவுளிடம் விலாவாரியாகப் பேசினார். அவரின் சொந்த ஊரான காரைநகர் சைவசமய மயப்படுத்தப்பட்ட ஊர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த ஊரை ‘ஈழத்துச் சிதம்பரம்’ என்றும் சொல்வார்கள். அந்தப் பின்னணியிலிருந்து வந்த அமைச்சரின் இறை நம்பிக்கையில் எனக்குச் சந்தேகங்கள் எதுவுமில்லை. நெற்றியில் விபூதியும் காதில் பூங்கொத்துமாகத்தான் அமைச்சர் நாடாளுமன்றத்திற்குப் போவார்.
இரண்டாவது தடவையாகவும் இறுதியாகவும் கடந்த நவம்பர் மாதம் இருபத்தைந்தாம் தேதி நான் மகேஸ்வரனைச் சந்தித்தேன். அப்போது அவர் அமைச்சரல்ல. பூஸா தடுப்பு முகாமிலும் களுத்துறைச் சிறையிலும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகளைப் பார்வையிடுவதற்காக அன்று காலையில் கொழும்பிலிருந்து ஒரு குழு புறப்பட்டது. நீதியமைச்சர் அமரசிறி தொடங்கொட, பிரதி அமைச்சர்கள் பி. இராதாகிருஷ்ணன், கே.ஏ. பாயிஸ், தி. மகேஸ்வரன் எம். பி, அய்கிய நாடுகள் அவையின் சமூகப் பொருளாதாரக் கவுன்ஸில் உறுப்பினர் நிக்பீம்ஸ் , செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி சாலா வேர்னர், ஒரு மொழிபெயர்ப்பாளர் இவர்களோடு பத்திரிகையாளர்களும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தோம்.
நிக்பீம்ஸ் கனடா நாட்டவர். சாலா வேர்னர் ஒஸ்ரியா நாட்டவர். கனடாவிற்கும் ஒஸ்ரியாவிற்கும் நிச்சயமாக எதாவது வரலாற்றுப் பகையிருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் சாலா வேர்னரால் ஒரு வார்த்தையைக் கூட நிக்பீம்சுடன் அமைதியாகப் பேச முடியவில்லை. நிக்பீம்ஸ் ஒரு கதைக்குக் காலையிலேயே வெப்பம் அதிகமாயிருக்கிறது என்றால் சாலா வேர்னர் மனித உரிமைப் பணிகளில் ஈடுபடுவர்கள் வானிலை அறிவிப்பாளர்களைப் போலப் பேசுவது விரும்பத்தக்கதல்ல என்றார். நிக்பீம்ஸ் தனது கழுத்துப்பட்டியைத் தளர்த்தி இப்போது காற்று நன்றாக வீசுகிறது என்றால் உங்களது பேச்சு ஒரு உல்லாசப் பயணியின் பேச்சுப் போலவேயிருக்கிறது என்றார் சாலா.
சாலாவின் சீண்டல் பேச்சுகள் நிக்பீம்ஸை எந்த வகையிலும் சலனப்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை. நிக் பீம்ஸ் அழுகிறாரா சிரிக்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாதளவிற்கு உணர்ச்சி ரேகைகளேயற்ற ஒரு சிறப்பான முகவாகு அவருக்கு அமைந்திருந்தது. நிக்பீம்ஸ் அன்று காலை முழுவதும் தனது ஜோக்குகளால் சாலா வேர்னரைக் கவரவே முயற்சி செய்தார். அவரது ஜோக்குகளும் ஒன்றும் மோசமல்ல. ஆனாலும் சாலா வேர்னருக்கு இந்தப் பகடிப் பேச்சுகளில் சிரத்தையிருக்கவில்லை. அவர் இலங்கைப் பிரச்சினைகளைக் குறித்துப் பத்திரிகையாளர்களான எங்களின் கருத்துகளை அறிவதிலேயே படு தீவிரமாயிருந்தார். சாலா வேர்னர் யாழ்ப்பாணத்து நிலைமைகள் குறித்து என் கருத்தைக் கேட்டபோது அது குறித்து இங்கிருக்கும் எவரைவிடவும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் எம்.பிக்கு அதிகமாகத் தெரிந்திருக்கும். நீங்கள் அவரிடம் கேளுங்களேன் என்றேன். சாலா வேர்னர் தனது கண்களை விரித்து ‘மிஸ்டர் மகேஸ்வரன் ஒரு தமிழரா?’ என்று ஆச்சரியப்பட்டார். அன்றைக்கென்று பார்த்து எம்.பி. நெற்றியில் விபூதியும் காதில் பூவுமில்லாமல் வந்திருந்தார்.
பூஸா இராணுவ முகாமுக்குச் சற்றுத் தூரத்தில் தடுப்பு முகாம் அமைந்திருக்கிறது. மதியத்திற்குச் சற்று முன்பாக எங்களது குழு பூஸா தடுப்பு முகாமைச் சென்றடைந்தது. நாங்கள் சென்றிருந்தபோது அங்கே 138 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். முன்னாள் விமானப்படை அதிகாரி கஜநாயக்கவுடன் சேர்ந்து கடத்தல், கப்பம் என்று குற்றச் செயல்கள் புரிந்ததாக நான்கு சிங்களவர்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் திருகோணமலை, பொலனறுவ மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்பது முஸ்லீம்களும் மற்றும் 125 தமிழர்களும் அங்கே தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். தமிழர்களில் ஏழுபேர்கள் பெண்கள். பருத்தித்துறையைச் சேர்ந்த தமயத்தி என்ற இளம்பெண் தனது ஆறுவயதுப் பெண்குழந்தையுடன் அங்கே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
எந்தவித அடிப்படை வசதிகளுமில்லால் பூஸா முகாம் சீரழிந்து கிடக்கிறது. அங்கு கைதிகளின் எந்த உரிமைகளும் மதிக்கப்படுவதில்லை. விசாரணை என்ற பெயரில் கைதிகள் மிருகத்தனமாகச் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். பெண்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் அதிகாரிகளால் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அங்கே மாதக் கணக்காக அடைக்கப்பட்டிருப்பவர்களில் நூற்றுக்கு மேலானவர்கள் ஒருதடவை கூட நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதில்லை. நான் அடுத்தநாள் பத்திரிகையில் பூஸா முகாமைக் குறித்து எழுதிய கட்டுரைக்கு விவிலிய வார்த்தையான ‘உத்தரிப்பு ஸ்தலம்’ என்ற வார்த்தையையே தலைப்பாயிட்டேன்.
அரசாங்கத்தின் அனைத்து மனிதவுரிமை மீறல்களும் அவசரகாலச் சட்டம் என்ற நிழலிலேயே இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நியாயப்படுத்தப்படுகின்றன. நான் மகேஸ்வரன் எம்.பியிடம் பணிவாக ‘சேர் பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாகக் கையைத் தூக்கும் உறுப்பினர்கள்தான் நாட்டின் முதலாவது பயங்கரவாதிகள்’ என்றேன். மகேஸ்வரன் மெல்லிய குரலில் என்னிடம் ‘நான் இப்போது கையைத் தூக்குவதில்லை என்பது உங்களுக்கும் தெரியும் கடவுளுக்கும் தெரியும்’ என்றார்.
நீதியமைச்சர் தலைமையிலான குழு கைதிகளிடம் அவர்களது குறைகளைக் கேட்டறியத் தொடங்கியது. சாலா வேர்னர் பூஸா கிடந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போயிருந்தது அவரின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. அவர் தனது கழுத்தில் தாறுமாறாகச் சுற்றிக்கிடந்த பாசிமணிமாலைகளை கையில் எடுத்துப் பற்களிடையே நன்னியவாறே அமர்ந்திருந்தார். நிக்பீம்சிடம் பதற்றம் எதுவுமில்லை. அவர் இதைப்போல எத்தனை முகாம்களை எத்தனை நாடுகளில் கண்டிருப்பார்! மகேஸ்வரன் எம்.பி. வழமைபோலவே முகட்டைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தார். கைதிகள் ஒரே குரலில் விசாரணையென்ற பெயரில் அதிகாரிகள் தங்களை அடித்துத் துவைப்பதாக முறையிட்டார்கள். நீதியமைச்சர் அமரசிறி தொடங்கட ‘கைதிகள் சொல்வது உண்மையா?’ எனப் பூஸா தடுப்பு முகாமின் பொறுப்பதிகாரி ஜனக சந்திரஜித்திடம் கேட்டார். ‘விசாரணையின் போது முரணான பதில்களைச் சொல்லும்போது சில தருணங்களில் லேசாக அடிக்க வேண்டியிருக்கிறது’ என்றார் பொறுப்பதிகாரி.
பருத்தித்துறை விதவையான தமயந்தி ஆறு மாதங்களுக்கு முன்பு அவரின் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகவும் அவரின் வீட்டிலிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றியதாகவும் அரசாங்கம் சொல்கிறது. ஆனால் தமயந்தியோ தனக்கு வீடேயில்லை என்றும் தன்னை அகதிகள் முகாமில் வைத்தே படையினர் கைதுசெய்தார்கள் என்றும் சொல்லியழுதார். கோப்பாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புலிகளின் பிரச்சாரப் பாடல்களடங்கிய ஒலிநாடாவுடன் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்த ஒலிநாடாவைத் தனது அறையில் வைத்திருந்ததுதான் அந்த இளைஞர் செய்த குற்றம். இந்தக் குற்றத்திற்காக ஒன்றரை வருடங்களாக நீதி விசாரணைகளின்றி அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். அந்த இளைஞரைக் கேட்டால் ‘சமாதான காலத்தில் ஏ-9 பாதையால் பயணித்த எல்லோருக்குமே அந்த ஒலிநாடவைப் புலிகள் விற்றார்கள் என்கிறார். சிங்களவர்களுக்குக் கூட அந்த ஒலிநாடாவைப் புலிகள் விற்றார்களாம்.
நெடுந்தீவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரும் பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். நீரிழிவு நோயாளியான அவருக்கு சிறையில் சரியான சிகிச்சையளிக்கப்படததால் அவர் முற்றாகப் பார்வையிழந்துவிட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை அந்த முதியவர் எங்களிடம் இப்படிச் சொன்னார்: ‘என்னிடம் ஒரு ஸ்கூட்டர் இருந்தது. பொதுப் போக்குவரத்து வசதிகளில்லாத நெடுந்தீவில் நான் எனது ஸ்கூட்டரையே எனது போக்குவரத்திற்கு நம்பியிருந்தேன். ஒரு ஈபிடிபி உறுப்பினர் என்னிடம் வந்து தங்களது பொறுப்பாளர் எனது ஸ்கூட்டரை வாங்கிவரச் சொன்னதாகச் சொன்னார். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். அந்தப் பொடியனோ அது தனது பொறுப்பாளரின் உத்தரவு என்றான். நான், “தம்பி உமது பொறுப்பாளரை எனக்குத் தெரியாது. ஆனால் ஸ்கூட்டருக்கு நான்தான் பொறுப்பாளர் ஸ்கூட்டரைத் தர முடியாது என்று சொல்லிவிட்டேன். அன்றிரவே புலிகளின் உளவாளி என்று நான் படையினரால் கைதுசெய்யப்பட்டேன். படையினரோடு அந்த ஈபிடிபி பொடியனும் என்னை அடையாளம் காட்ட வந்திருந்தான்”.
குருநகரைச் சேர்ந்த டெய்ஸியம்மா என்ற பெண் கைதியின் கதை கொடுமையானது. புலிகள் இயக்கத்திலிருந்த அவரது தங்கையின் மகள் சமாதான காலத்தில் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இயக்க வேலையாக வந்திருந்தபோது வழியில் இரகசியமாக டெய்ஸியம்மா வீட்டிற்கு வந்திருக்கிறாள். தனது கையால் ஒரு பிடி சோறுகூடச் சாப்பிட நேரமில்லாமல் அந்தப் பிள்ளை உடனேயே திரும்பிவிட்டதாக டெய்ஸியம்மா சொன்னார். ஆனால் இரகசியம் எப்படியோ வெளியே கசிந்திருக்கிறது. இது நடந்து ஆறுமாதத்திற்குப் பின்பு புலிகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டில் டெய்ஸியம்மாவும் அவரது மூத்த மகளும் கைதுசெய்யப்பட்டார்கள். டெய்ஸியம்மாவோடு கைது செய்யப்பட்ட அவரது மூத்தமகள் இமெல்டா படையினரால் எங்கே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பது டெய்ஸியம்மாவிற்குத் தெரியாது. டெய்ஸியம்மா நீண்டகாலமாகப் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். எட்டு மாதங்களுக்கு முன்பு முகமாலையில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் இராணுவத்தினரால் டெய்ஸியம்மாவின் தங்கையின் மகள் கொல்லப்பட்டுவிட்டாள். இதைச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே டெய்ஸியம்மா முழந்தாளிலிருந்து அப்படியே மடிந்து சாலா வேர்னரதும் நிக்பீம்சினதும் கால்களில் விழுந்து கதறியழத் தொடங்கினார்.
தோழர்களே! அண்மையில் தினக்குரல் பத்திரிகையில் கோகர்ணன் குறிப்பிட்ட ஒரு விடயத்தை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 1980களில் காணாமற்போன தங்களது பிள்ளைகளைத் தேடித் தமிழ்த் தாய்மார்கள் போராட்ட முன்னணி அமைத்து வீதியில் இறங்கிப் போராடி அரசாங்கத்திடம் நீதி கேட்டார்கள். அதே தாய்மார்கள் இப்போது கண்ணில் படும் வெள்ளையர்களின் காலிலெல்லாம் விழுந்து தங்கள் குழந்தைகளுக்காக இறஞ்சுகிறார்கள்.
பூஸாவில் தடுத்த வைக்கப்பட்டிருக்கும் விவேகானந்தனின் வலது கை முழங்கைக்குக் கீழே முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது. 1989ல் இந்திய அமைதிப் படையினரின் ஷெல் விழுந்தே தனது கை துண்டிக்கப்பட்டதாக விவேகானந்தன் சொல்கிறார். அவரின் உடலின் வேறுபாகங்களிலும் இருக்கும் தழும்புகளையும் வைத்துப் பார்க்கும்போது அவர் சொல்வது உண்மையென்றே எனக்குப்படுகிறது. ஆனால் அரசாங்கமோ விவேகானந்தன் புலிகள் இயக்கத்திலிருந்து போரிட்டபோதே அவரின் கை துண்டிக்கப்பட்டிருக்கிறது என அழி வழக்காடுகின்றது. விவேகானந்தன் சரளமாகச் சிங்களம் பேசக் கூடியவர். அன்று அவர் நீதியமைச்சரிடம் மிகவும் துணிச்சலாகப் பேசினார்: ‘அய்யா இங்கே மாட்டை அடிப்பதுபோல எங்களைப் போட்டு உரிக்கிறார்கள். எந்த இரவு இவர்கள் எங்களைச் சாறு பிழிய அடித்து நொருக்குகிறார்களோ அன்று பகலில் புலிகள் ஏதாவது ஒரு தாக்குதலை எங்கோ வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்வோம்; உண்மையில் இங்கேயிருக்கும் கைதிகளது இப்போதைய முழுநேரப் பிரார்த்தனை கடவுளே! புலிகள் தோற்கவேண்டும்! என்பதாகவேயிருக்கிறது’ சற்று நிறுத்திய விவேகானந்தன் தனது வலது முழங்கையில் இடதுகையைச் சேர்த்து கும்பிடுவதுபோல பாவனை செய்து ‘புலிகள் தோற்கட்டும்’ என்றார்.
பூஸா முகாமில் இருவர் இருவராக நாற்பது கைதிகள் இருபது அறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். எஞ்சியவர்கள் குறுகிய மண்டபமொன்றில் மிருகங்களைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆறுவயதில் சிறையிருக்கும் பருத்தித்துறை தமயந்தியின் மகளை ஏழு வயதில் வெளியே விட்டால் அவள் எட்டுவயதில் புலிப்படையில் சேருவாளா இல்லையா என்பதை நீங்கள் உங்கள் நெஞ்சுகளில் கையை வைத்துச் சொல்ல வேண்டும். அப்போது நாங்கள் ‘குழந்தைப் போரளிகள்’ என்று இன்னொரு கருத்தரங்கை பெர்லினிலோ லண்டனிலோ நடத்தி அந்தக் குழந்தையைப் புலிகளிடமிருந்து மீட்பது குறித்துக் கலந்துரையாட வேண்டியிருக்கும். இதற்கு யார் பொறுப்பு? ஆறு வயதுக் குழந்தையை வேலைக்கே வைத்திருக்கக் கூடாது என்று சட்டமுள்ள நாட்டில் எந்தச் சட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சிறையில் வைத்திருக்கிறார்கள்? The law maker should not be a law breaker
கிரிதரன் – சசிதரன் என்ற இரு சகோதரர்கள் தடுப்பு முகாமின் ஓர் அறையில் கடந்த ஏழு மாதங்களாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இருவருக்குமே இருபது வயதிற்குள் தானிருக்கும். அவர்களைச் சிறுவர்கள் என்று கூடச் சொல்லலாம். சகோதரர்கள் மட்டக்களப்புக் கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர்கள். அந்தக் கிராமம் படுவான்கரையைச் சேர்ந்தது. அந்தப் பகுதி முழுவதும் புலிகளும் கருணா குழுவினரும் மாறிமாறிப் படுகொலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். விரும்பினால் கருணா குழுவென்ற சொல்லுக்குப் பதிலாக இப்போது பிள்ளையான் குழுவென்று சொல்லிக்கொள்ளுங்கள். இளைஞர்களை வலுகட்டாயமாத் தங்கள் அமைப்புகளிலும் சேர்த்துக்கொள்கிறார்கள். இந்தச் கொலைச் சூழலிலிருந்து தப்பிச் சிங்களப் பிரதேசமான மொனராகலக்கு இரு சகோதரர்களும் வந்து அங்கே தங்கியிருந்து தச்சுத் தொழில் செய்தார்கள். இவர்களிடம் முறையான ஆவணங்களும் மொனராகல பொலிஸ் நிலையப் பதிவும் இருந்தும் ஒருநாள் இவர்கள் காரணமேயில்லாமல் கைதுசெய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள். அரசாங்கம் இவர்கள் சந்தேகத்துக்குரிய நபர்கள் என்கிறது. இலங்கையில் யார் மீதுதான் யாருக்குச் சந்தேகமில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கோடிகோடியாகப் புலிகளுக்கு பணம் கொடுத்தார் என்று மஹிந்த ராஜபக்ஷ மீது சந்தேகமிருக்கிறது. அந்தப் பணத்தை வாங்கினார் என்று பிரபாகரன் மீதும் சந்தேகமிருக்கிறது. இதற்குத் தரகுவேலை பார்த்தார் என்று மகேஸ்வரன் எம்.பி.மேல் கூடச் சிலர் சந்தேகப்படுகிறார்கள்.
அந்த இரு சகோதரர்களும் சிறையில் எவருடனும் பேசுவதில்லையாம். இருவரும் நாள் முழுவதும் ஒன்றாக அறைக்குள் முடங்கிக் கிடப்பார்களாம். அவர்களுக்கு அங்கு நடக்கும் எதைப்பற்றியும் அக்கறை கிடையாதாம். அவர்கள் விசாரணையின் போது வாயைத் திறப்பதில்லை என்றும் அவர்கள் சரியாக ஒத்துழைக்காததால்தான் அவர்கள் மீது எந்த முடிவும் எடுக்க முடியாதிருக்கிறது என்றும் முகாம் பொறுப்பதிகாரி ஜனக சந்திரஜித் சொன்னார். அந்த இரு சகோதரர்களது தேகங்களைப் பார்த்தால் அவர்கள் ஆறுமாதங்களாகச் சிறையிலிருப்பவர்கள் போலத் தெரியவில்லை. இருவரும் மல்யுத்த வீரர்களைப்போல ஓங்குதாங்காகன கட்டுடல்கள் வாய்க்கப் பெற்றிருந்தார்கள். அன்று அவர்கள் எங்களிடமும் பேச மறுத்தார்கள். அவர்களின் கண்களில் துக்கத்தையோ பரிதாபத்தையோ என்னால் பார்க்க முடியவில்லை. அவர்களின் கண்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. சகோதரர்கள் இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் விடாது பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார்கள். அந்த இளைஞர்கள் மனநிலை சரிந்திருக்கிறார்களோ என்று நான் சந்தேகப்பட்டேன். அப்போது நீதியமைச்சர் அந்தச் சகோதரர்களைப் பார்த்து ‘நீங்கள் உண்மையைச் சொன்னால் மட்டுமே இங்கிருந்து விடுதலையாக முடியும். பைத்தியங்களாக நடிப்பதால் உங்களுக்கு எந்த நன்மையும் கிட்டப்போவதில்லை’ என்றார். சகோதரர்கள் அவர்களது அறைக்குத் திருப்பியனுப்பப்பட்டனர்.
சற்று நேரத்தில் சாலா வேர்னர் அந்தச் சகோதரர்களின் அறையைப் பார்வையிடப் போனார். முகாம் பொறுப்பதிகாரியும் மொழிபெயர்ப்பாளரும் பத்திரிகையாளர்கள் இருவரும் அவருக்குப் பின்னால் போனோம். அந்தச் சகோதரர்களிடம் சாலா வேர்னர் ‘உங்களை இங்கே யாராவது அடிக்கிறார்களா’? என்று கேட்டார். சகோதரர்கள் அப்போது தங்கள் கண்களைப் பூமிக்குத் தாழ்த்தினார்கள். ‘நீங்கள் இங்கே எவருக்கும் பயப்பட வேண்டாம். நான் செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து வந்திருக்கிறேன். நீங்கள் என்னுடன் ஒத்துழைத்தால் என்னால் உங்களுக்கு உதவ முடியும்.’ என்று சாலா வேர்னர் சொன்னபோது கூட அந்தச் சகோதரர்கள் மவுனமாகவே நின்றிருந்தார்கள். சாலா வேர்னர் முகாம் பொறுப்பதிகாரியைத் திரும்பிப் பார்த்தபோது அவர் வேறு ஏதோ வேலையிருப்பது போல பாவனை செய்தவாறே அங்கிருந்து மெல்ல நழுவினார். சாலா வேர்னர் அந்த இளைஞர்களைச் சட்டையைக் கழற்றிக் காட்டுமாறு கேட்டார். சகோதரர்களின் முகத்தில் சட்டென ஒரு மகிழ்வு தொற்றி ஓடியதை நான் கவனித்தேன். அவர்கள் சட்டையைக் கழற்றியபோது சகோதரர்களின் சிவந்த உடல்களில் வரிவரியாக அடிவாங்கிய கோடுகளும் சிராய்ப்புகளும் இருப்பதை நாங்கள் கண்டோம். அந்தச் சகோதரர்களை அன்று காலையிற் கூட யாரோ அடித்திருக்க வேண்டும். அப்போது சாலா வேர்னரின் கண்கள் ஆத்திரத்தில் துடித்தன. ‘யார் உங்களை அடித்தார்கள்’? என்று சாலா வேர்னர் கேட்டபோது அவர்கள் சட்டைகளை மறுபடியும் அணிந்துகொண்டு ஒரு அறையின் மூலையில் உட்கார்ந்துகொண்டார்கள். சாலா வேர்னர் மறுபடியும் அந்தக் கேள்வியைக் கேட்டபோது சகோதரர்களில் ஒருவன் படரரென மற்றவனின் கன்னத்தில் அறைந்தான். சாலா வேர்னர் ‘ஓ கடவுளே’ என முணுமுணுத்துவிட்டு வேகமாக அங்கிருந்து நடக்கத் தொடங்கினார்.
சாலா வேர்னரின் பின்னாலேயே வந்த மொழிபெயர்ப்பாளர் ‘மேடம் அவர்கள் இருவருமே முறைவைத்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள் எனப் பக்கத்து அறைகளில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்’ என்றார். அப்போது எதிரே வந்த நிக்பீம்சிடம் சாலா வேர்னர் ‘இது காட்டுமிராண்டி அராங்கம் இந்த நாட்டில் எந்த நெறிகளும் கிடையாது இந்த நாட்டின் அதிபரை யுத்தக் குற்றவாளி என்று சொல்லக்கூட நான் தயங்கப்போவதில்லை. இங்கேயிருக்கும் கைதிகளை இந்த அரசாங்கம் கொன்றுகொண்டிருக்கிறது’ என்று வெடித்தார். நிக்பீம்ஸ் அமைதியாக ‘ஆனால் கைதிகளது பிரார்த்தனை புலிகள் தோற்க வேண்டும் என்பதாகத்தானேயிருக்கிறது’ என்றார்
நான் மெதுவாக நடந்து மகேஸ்வரன் எம்.பிக்கு அருகே சென்றேன். ‘என்ன உபுல் கீர்த்தி, வெள்ளைக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?’ என்று மகேஸ்வரன் எம்.பி. கேட்டார். சாலா வேர்னரும் நிக்பீம்சும் பேசியதைச் நான் அவருக்குச் சொன்னேன். மகேஸ்வரன் நீதியமைச்சரிடம் சென்று ‘நாங்கள் இப்போது புறப்பட்டால்தான் களுத்துறைச் சிறையைப் பார்வையிட நேரம் சரியாயிருக்கும்’ என்றார்.
நான் நேற்றிரவு நண்பர் சிவபாலன் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தேன். இரவு நீண்டநேரம் விழித்திருந்து இன்று இந்தக் கருத்தரங்கில் உரையாற்றுவதற்காகக் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். விடியற் காலையில் கொழும்பிலுள்ள எனது பத்திரிகை அலுவலகத்திலிருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்து மகேஸ்வரன் எம்.பி. கொல்லப்பட்ட செய்தியைச் சொன்னார்கள். நான் நண்பர் சிவபாலனிடம் மகேஸ்வரன் கொல்லப்பட்ட செய்தியைச் சொன்னேன். அப்போது சிவபாலன் ‘மகேஸ்வரன் எங்கே வைத்துக் கொல்லப்பட்டார்?’ எனக் கேட்டார். கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு வழிபாட்டிற்காகச் சென்றிருந்தபோது எம். பி. சுடப்பட்டார் என்றேன்.
உடனே சிவபாலன் ‘அது மகேஸ்வரனுக்கு வைக்கப்பட்ட இலக்குத்தானா அல்லது வேறு யாருக்காவது வைக்கப்பட்ட இலக்கில் மகேஸ்வரன் தவறுதலாகச் சிக்கினரா?’ எனக் கேட்டார். என்னிடம் இந்தக் கேள்விக்கு என்ன பதிலிருக்க முடியும்? நான் பத்திரிகையாளன் என்பதால் எனக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்று சிவபாலன் நம்பியிருக்க வேண்டும். அவர் மீண்டும் என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். நானே சற்றும் எதிர்பாராத வகையில் அந்தக் கேள்விக்கான பதில் என் உள்ளத்தில் அப்போது தோன்றியது. நான் சிவபாலனிடம் ‘அது கடவுளுக்கு வைக்கப்பட்ட இலக்கு கும்பிடப்போன மகேஸ்வரன் குறுக்கே மாட்டிக்கொண்டார்’ என்றேன். சிவபாலன் புன்னகைத்தார். உபுல் கீர்த்தி பைத்தியத்துக்கு நடிக்கிறானென்று அவர் நினைத்திருக்கக்கூடும்.
இப்போது பூஸா முகாமில் எண்ணூறு பேர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
(* ‘காலம்’ மே 2008 இதழில் வெளியாகிய ஷோபாசக்தியின் சிறுகதை)
சில மிகைப்படுத்தல்கள் இருப்பினும் அரசின் அத்துமீறல்களை புரிய வைக்கிறது. பாவம் மகேஸ்வரன்: கடவுளுக்கே பொறுக்கவில்லை போலும்> போராட்டத்தின் புறநிலைகள் உருவாக்கிய அரசியல்வாதிகளை.