என்மீதான ஒரு கண்டன அறிக்கை நேற்று இணையத்தில் ‘அதற்கமை பெண்ணியக் குழு’ என்றொரு அமைப்பால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் கண்டன அறிக்கை குறித்து எனது தரப்பைத் தெளிவுபடுத்தும் நோக்கமொன்றுக்காகவே இந்தப் பதிவை எழுதுகிறேன். எவரையும் அவதூறு செய்வதோ, குணச்சித்திரப் படுகொலை செய்வதோ, கடந்தகால உறவுகளின்போது நிகழ்ந்த தனிமனித அந்தரங்கங்களையோ, உணர்வுச் சிக்கல்களையோ, முரண்களையோ பொதுவெளியில் அறிக்கையிட்டு, கீழ்மையான கிசுகிசுப் பசி பிடித்து அலையும் சமூக வலைத்தளவாசிகளுக்கு மலிவுத் தீனி போடுவதோ எனது பதிவில் நிகழவே கூடாது என்ற கவனத்துடனும் பொறுப்புடனுமே இதை எழுதுகிறேன்.
கண்டன அறிக்கையில் 116 கையெழுத்துகள் என்பது பெருந்தொகைதான். ஆனால், இந்த அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் முக்கால்வாசிப் பேர்களை நான் முன்பின் அறிந்ததில்லை. அவர்களுக்கும் என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களில் பெரும்பாலானோர் கேரளா – டில்லி – வங்காளம் போன்ற இடங்ளைச் சேர்ந்தவர்களாகத் தெரிகிறார்கள். அறிக்கையில் கையொப்பமிட்டிருக்கும் மிகுதிக் கால்வாசிப் பேர்களில் பெரும்பாலானோரை எப்போதாவது இலக்கியக் கூட்டங்களில் அல்லது புத்தகச் சந்தையில் பார்த்திருப்பேன். அவ்வளவே அறிமுகம்.
அதேவேளையில், கண்டன அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் ஒருசிலர் என்னோடு இணைந்து பல வருடங்களாகக் கலை – அரசியல் செயற்பாட்டிலும், நெருங்கிய நட்பிலும் உறவிலும் தோழமையிலும் இருந்தவர்கள். இவர்களிடம் என்னுடைய அலைபேசி எண்ணும் மின்னஞ்சல் முகவரியும் இருக்கின்றன. இவர்களில் பலர் இந்த விநாடிவரை எனது முகநூல் நட்புப் பட்டியலிலும் இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் ஒரே ஒருவருக்குக்கூட கண்டன அறிக்கையில் கையெழுத்திட முன்பாக என்னிடம் எனது தரப்பு விளக்கத்தைக் கேட்டு அறிய வேண்டும் என்று தோன்றவில்லை. முதலாளித்துவ நீதிமன்றங்களில் கூட குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்கு விளக்கமளிக்கப் பல வாய்ப்புகளைக் கொடுத்த பின்பே தீர்ப்பிடுகிறார்கள். ‘அதற்கமை பெண்ணியக் குழு’வின் விசாரணை மன்றத்திலோ அவ்வாறான வாய்ப்புகள் ஏதும் கொடுக்கப்படாமல், நேரடியாகவே ‘குற்றவாளி’ எனத் தீர்ப்பிடும் நடைமுறை அமலில் இருக்கலாம். ஆனாலும், நான் எனது தரப்பைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
எனது தரப்பை அறிந்துகொள்ளாது முன்னரும் ஒருமுறை ‘பாலியல் குற்றவாளி’ எனச் சமூக வலைத்தளங்களில் நான் அநீதியாகத் தீர்ப்பிடப்பட்டிருக்கிறேன். அந்த நிகழ்வை முதலில் இங்கே சுருக்கமாகக் குறித்துக் காட்டிவிடுகிறேன். ஏனெனில், அந்த நிகழ்வுக்கும் தற்போதைய கண்டன அறிக்கைக்கும் நெருங்கிய ஒற்றுமையிருக்கிறது.
அந்தப் பாலியல் குற்றச்சாட்டு இன்றைக்குப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்மீது சுமத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த பதினைந்து வருடங்களாக என்மீது தொடர்ந்து அந்தக் குற்றத்தைச் சுமத்தினார்கள். தனிநபர்களோடு அரசியல் இயக்கங்களும் என்மீது அந்தக் குற்றத்தைச் சுமத்தின. ம.க.இ.க. மற்றும் சார்லஸ் ஆன்டனி போன்ற மே 17 இயக்கத்தின் அன்றைய முக்கிய செயற்பாட்டாளர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கி என்மீது குற்றம்சாட்டினார்கள்.
குற்றச்சாட்டும் மிகக் கடுமையானதுதான். பிரான்ஸ் தமிழச்சியிடம் நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் என்பது குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை நான் மறுத்தேன் (Link). அந்தக் குற்றச்சாட்டு திட்டமிடப்பட்ட கூட்டு அவதூறுக் குரல் என்றேன். ஆனாலும், அந்தப் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்து இன்றுவரை என்மீது பழி சுமத்தப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு அவ்வப்போது சற்றே தூசி தட்டப்பட்டுச் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. பிரான்ஸ் தமிழச்சி மறுபடியும் யூ – டியூப் நேர்காணல்களில் தோன்றுகிறார். என்னோடு சேர்த்து என்னுடைய தோழர்களில் பலர் அவதூறுகளால் தாக்கப்படுகிறார்கள். அதைத் தாண்டியும் சகட்டுமேனிக்குப் பலரின்மீது தமிழச்சியால் பாலியல் குற்றம் சுமத்தப்படுகிறது. இவை எல்லாற்றுக்கும் ஆரம்பம் என்மீதான தமிழச்சியின் அவதூறுகளுக்கு 2010-இல் நூற்றுக்கணக்கான நபர்களும் சில அரசியல் இயக்கங்களும் கூட்டாகக் களம் அமைத்துக் கொடுத்ததே. அதுதான் இப்போது மறுபடியும் இந்தக் கண்டன அறிக்கை மூலம் நிகழ்த்தப்படுகிறது.
கடந்த வருடம் பாரிஸில் நடந்த 51-வது இலக்கியச் சந்திப்பில் ‘பாலியல் சுரண்டல்: எதிர்கொள்ளலும் பொறுப்புக்கூறலும்’ என்றொரு அமர்வு நிகழ்ந்தது. அந்த அமர்விலும் தமிழச்சி என்மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுக் குறித்த கேள்வி மறுபடியும் ஒருமுறை எழுப்பப்பட்டது. அமர்வை ஒருங்கிணைத்த விஜி அந்தக் கேள்விக்கு “தமிழச்சியின் குற்றச்சாட்டு ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்பது எங்களுக்குத் தெரியும்” எனப் பதிலளித்தார். அதாவது, நீண்ட பதினைந்து வருடங்கள் நான் பொய்ப் பழியைச் சுமந்து அலைந்ததன் பின்னாக, முதற்தடவையாக ஒரு பொது அரங்கில் என்மீதான குற்றச்சாட்டுப் பொய்யானது எனச் சொல்லப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதுவரை காலமும் தமிழச்சியின் இந்தப் பொய்க் குற்றச்சாட்டைத் தோன்றியபோதெல்லாம் தங்களது கையிலெடுத்து என்மீது அவதூறை வீசியெறிந்தவர்களும் தற்போதைய இந்தக் கண்டன அறிக்கையில் கையழுத்திட்டிருப்பவர்களுமான மோகனதர்ஷினி, பாரதி சிவராஜா, அஞ்சனா போன்றோர் தங்களது அந்த அவதூறுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்களா என்ன! இல்லை. இப்போதும் அந்த அவதூறுகள் முகநூலில் கிடக்கின்றன. இந்தப் பொறுப்பின்மையின் இன்னொரு வடிவம்தான் இப்போதைய கண்டன அறிக்கை.
இந்தக் கண்டன அறிக்கையைத் தயாரித்தவர்கள் யார் என அறிக்கையில் விபரமில்லை. இதில் கையொப்பமிட்டிருக்கும் அனைவருமே இணைந்து இந்த அறிக்கையைத் தயாரிக்கவில்லை. ஏனெனில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கண்டன அறிக்கையே மின்னஞ்சலில் பலருக்கும் அனுப்பப்பட்டுக் கையெழுத்துகள் கோரப்பட்டன. லீனா மணிமேகலையின் மின்னஞ்சல் மூலமாக எனது தோழமைகள் சிலருக்கும் இந்தக் கண்டன அறிக்கை அனுப்பப்பட்டுக் கையெழுத்துக் கோரப்பட்டிருந்தது. எனவே, கையெழுத்திட்டவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து இந்த அறிக்கையைத் தயாரிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அறிக்கையின் உண்மைத்தன்மையைத் தீர விசாரித்துத் தெரிந்துகொள்ளாமல் Solidarity என்ற அடிப்படையில் பெரும்பாலான கையெழுத்துகள் பதிவாகியிருக்கின்றன. பகிரங்கமான ஓர் அரசியல் நிகழ்வுக்கு எதிராக, அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக இந்தமுறையில் ஒரு கூட்டுக் கண்டன அறிக்கை வெளியாவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதுதான் நடைமுறை. ஆனால், உறவிலிருந்த இரு நபர்களுக்கு இடையேயான அந்தரங்கப் பிரச்சினைகளையும் உணர்வுச் சிக்கல்களையும் ஒருதரப்பின் மீதான Solidarity என்ற அடிப்படையில் மட்டுமே அணுகிக் கையெழுத்திடுவது ஒருபோதும் சரியாக இருக்காது.
‘ஷோபாசக்தியால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை ஆழமாகவும் விரிவாகவும் பரிசீலித்தோம்’ எனக் கண்டன அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பரிசீலனையாளர்கள் யார்? அவ்வாறு பரிசீலித்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் யார்? இந்த விபரங்களை மறைத்து வைப்பதன் மூலம் கண்டன அறிக்கையைத் தயாரித்த பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். Solidarity கையொப்பங்களின் பின்னே அவர்கள் மறைந்து நிற்கிறார்கள்.
ஆனாலும், இந்த அறிக்கையை முன்னின்று உருவாக்கியவர்கள் எவர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களின் சாரம் ஏற்கனவே சிவா மாலதியால் முகநூலில் (13 டிசம்பர் 2024) வைக்கப்பட்டது. அதைப் போன்றே கடந்த இரண்டு வருடங்களாகவே இந்தக் குற்றச்சாட்டுகள் அரசல்புரசலாகவும் கவிதையாகவும் லீனா மணிமேகலையால் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகளை இணைத்து உருப்பெருக்கி எழுதப்பட்டிருப்பதே இந்தக் கண்டன அறிக்கை.
சிவா மாலதி கடந்த டிசம்பர் மாதத்தில் எந்தச் சூழ்நிலையில், என்னமாதிரியான குற்றச்சாட்டை என்மீது வைத்தார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. 51-வது இலக்கியச் சந்திப்பில் ‘இமிழ்’ தொகுப்பு வெளியீடு, யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ‘இமிழ்’ வெளியீட்டு நிகழ்வுக்கு எழுத்தாளர் கிரிசாந் பேசுவதற்கு அழைக்கப்பட்டது தொடர்பான விவாதங்களில் ‘இமிழ்’ தொகுப்பின் பதிப்பாசிரியர்களில் ஒருவன் என்ற முறையில் எனது நிலைப்பாட்டை ‘இமிழ் – வால்டேயரை நினைவுபடுத்தல்’ என்ற தலைப்பில் கட்டுரையாக (Link) எழுதியிருந்தேன். கிரிசாந் எழுதிய கட்டுரைகள் மீது எதிர்க் கருத்து இருப்பதற்காக அவரைச் சமூகப் புறக்கணிப்புச் செய்யுமாறு (சிவா மாலதி போன்றோர்) கோருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருந்தேன்.
கடந்த டிசம்பர் மாதத்தில் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, கிரிசாந்தின் கவிதை நூல் வெளியீடு யாழ் நூலக மண்டபத்தில் நிகழ்ந்தது. ஒரு பார்வையாளனாக நானும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டேன். இதை விமர்சித்து சிவா மாலதி ‘பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டலும் சோபாசக்தியும்’ என்றொரு முகநூல் பதிவை எழுதியிருந்தார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது மூலமாகப் பாலியல் குற்றவாளிகளை நான் காப்பாற்ற முயற்சிக்கிறேன் என்று சொன்னார். அவரது அர்த்தமற்ற வாதத்திற்குப் பலம் சேர்ப்பதற்காக என்மீதான பொய்களையும் தனது பதிவில் இணைத்திருந்தார்.
அந்தப் பதிவில், என்னால் பல பெண்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் என்னால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள் என்றும் சிவா மாலதி குறிப்பிட்டார். தற்கொலைக்கு முயன்றதாக ஒரு பெண்ணின் அடையாளத்தைக் குறிப்பிட்டே எழுதியிருந்தார். சிவா மாலதி குறிப்பிடும் அந்தப் பெண் யார் என்பதை என்னைப் போலவே பலராலும் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், எனக்கும் இங்கே குறிப்பிடப்படும் அந்தத் தோழிக்கும் இருந்தது இரகசிய உறவல்ல. அது பகிரங்கமாகவே இருந்தது.
சிவா மாலதி இந்தக் குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்பும் பின்பும் கூட அந்தத் தோழி என்னுடன் நல்ல நட்பிலேயே இருந்தார். சிவா மாலதியின் இந்தக் குற்றச்சாட்டு வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பின்பு, என்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்தத் தோழி என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைப் புத்தக சந்தைக்கு வந்திருந்தார். இருவரும் நீண்ட நேரமாகப் பல விஷயங்களைப் பேசிக்கொண்டாலும், சிவா மாலதியின் பதிவு குறித்து நான் எதுவும் அவரிடம் சொல்லவில்லை. ஏனெனில், அந்தப் பொய்ச் செய்தியைச் சொல்லி அந்தத் தோழியைப் பதற்றப்படுத்த நான் விரும்பவில்லை. அன்று தில்லையின் ‘தாயைத்தின்னி’ நாவலை நான் புத்தக சந்தையில் வெளியிடுவதாக இருந்தது. நீங்களும் வாருங்கள் என அந்தத் தோழியையும் என்னுடன் அழைத்துச் சென்றேன். நானும் அவரும் சேர்ந்திருந்தே ‘தாயைத்தின்னி’ நாவலை மிகுந்த மகிழ்ச்சியோடு வெளியிட்டோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (29 டிசம்பர் 2024) இப்போதும் தில்லையின் முகநூலில் இருக்கின்றன. என்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வது சாத்தியமா? இந்தத் தற்கொலைப் பொய் தற்போது வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலும் வெளியாகியுள்ளது.
சிவா மாலதியின் இந்தப் பதிவைத் தனது முகநூலில் பகிர்ந்துகொண்ட (14 டிசம்பர் 2024) லீனா மணிமேகலை ‘இத்தனை வருடங்களாக நான் எனது கண்களைக் கட்டிக்கொண்டு இருந்துவிட்டேன். கனடா வந்ததும்தான் என் கண்கள் திறக்கப்பட்டு ஷோபாசக்தி பெண்களை வேட்டையாடுபவர் எனத் தெரிந்துகொண்டேன்’ என எழுதினார். லீனா மணிமேகலை போன்ற கூரிய புத்திசாலித்தனமும் மிகுந்த தைரியமும் கொண்ட ஒருவரின் கண்கள் பதின்மூன்று வருடங்களாகக் கட்டப்பட்டிருந்தன என்றால் அது வருந்தத்தக்கதுதான். ஆனால், அவரது கண்கள் கட்டப்பட்டிருக்கவில்லை.
2009 முதல் லீனா மணிமேகலைக்கும் எனக்கும் இருந்த உறவு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நாங்கள் பிரிந்து இருவருமே வெவ்வேறு உறவுகளுக்குப் போய்விட்ட பின்பும்கூட இருவரும் நட்பாகவே இருந்தோம். சேர்ந்து வேலைகள் செய்திருக்கிறோம். 2021-இல் அவரது ‘Black July’ குறும்படத்திற்கு நான்தான் பிரதியெழுதிக் குரல் நடிப்பும் செய்திருந்தேன். 18 மே 2021-இல் அவர் படித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக வகுப்பில் நடந்த Zoom meeting-லும் கலந்துகொண்டு நான் உரையாற்றினேன். ‘கோவிட்’ கெடுபிடிக் காலத்திற்குப் பின்பாக 2022 -இல் நான் இந்தியாவுக்குச் சென்றபோது, புதியதொரு உறவில் நுழைந்தேன். அப்போதிலிருந்துதான் லீனா மணிமேகலை என்மீது ‘பெண்களை வேட்டையாடுபவன்’ என்ற குற்றத்தைச் சுமத்த ஆரம்பித்தார். இதை அவர் இந்தக் கண்டன அறிக்கை சொல்வதுபோன்று பரிசீலனை – ஆய்வு செய்தெல்லாம் அறிக்கையிடவில்லை.
முதலில், என்னுடன் உறவிலிருக்கும் தோழியின் முகநூலின் ‘கொமென்ட்’ பகுதியில் நுழைந்து என்னைக் குறித்த பொய்களை எழுதினார். அதை எனது தோழி அழித்தவுடன் ‘இதை உன்னால் அழித்துவிட முடியும். ஆனால், ஷோபாவைப் பொதுவெளியில் அம்பலப்படுத்த எனக்கு ஒரு நிமிடம் ஆகாது’ என்று மெசேஜ் அனுப்பினார். பின்பு எனது நெருங்கிய நண்பர்கள் வட்டத்திற்கு இதேபோன்று ‘பெண்களை வேட்டையாடுபவன்’ மின்னஞ்சல்களை அனுப்பினார். பின்பு ‘அந்தோணிதாசன்’ என என்னை விளித்துச் சாபமிடும் கவிதையும் எழுதினார். ஏற்கனவே என்னில் கோபமுற்றிருந்த சிவா மாலதி போன்றவர்களும் இவரோடு சேர்ந்துகொள்ள, இப்போது அவை எல்லாமே புனைவுகளாகவும் பொய்களுமாகச் சேர்ந்து மூன்றரைப் பக்கங்களில் கண்டன அறிக்கையாகப் பரிணமித்திருக்கிறது.
நான் பல பெண்களோடு உறவில் இருந்தேன் என்பது உண்மை. என்னுடைய 23 வயதிலிருந்தே எனக்குத் தொடராகக் காதல்கள் இருந்தன. திருமணம், குழந்தைகள், ஒழுக்கவாதம், கலாசாரம் போன்ற எல்லைகளுக்குள் வாழ விரும்புவர்களுக்கு என்னுடைய வாழ்க்கைமுறையும் தேர்வுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால், நான் மிக இளம் வயதிலேயே திருமணம் – குழந்தைகள் என்ற நிறுவன முறைக்கு வெளியே வாழும் ‘சுதந்திரக் காதல்’ வாழ்க்கைமுறையை வரித்துக்கொண்டவன். என்னுடைய அரசியல் கல்வியாலும் இளமையிலேயே அனார்க்கிஸத்தின் மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பாலும் நான் இந்த வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவன். இதைப் பகிரங்கமாகவே பொதுவில் பலமுறை அறிவித்திருப்பவன். ‘எதுவரை’ இதழில் 2010 -இல் வெளியாகிய என்னுடைய நேர்காணலில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருந்தேன்.
”காதல், பாலுறவு போன்றவை உட்பட எனக்கு எவ்விதமான ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளும் கலாசாரத் தளைகளும் கிடையாது. இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு அவர்களது தனிப்பட்ட தேர்வு. இதில் மதம், சட்டம், கலாசாரம் போன்றவற்றிற்கு எந்த வேலையும் கிடையாது.”
எனது வாழ்க்கைமுறை பகிரங்கமானது. எனக்கு இருந்த காதல் உறவுகளும் பகிரங்கமானவை. இந்தக் கண்டன அறிக்கையில் ‘திருமணம், குடும்பமாக சேர்ந்து வாழ்தல் போன்ற பொய்யான வாக்குறுதிகள் என்னால் கொடுக்கப்பட்டது’ எனச் சொல்லப்பட்டிருப்பதை நான் முற்றிலும் மறுக்கிறேன். நான் எவருக்கும் அவ்வாறு வாக்குறுதி கொடுத்ததில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதேபோன்று என்னுடன் உறவிலிருந்த யாருமே அவ்வாறு என்னிடம் வாக்குறுதி கேட்டதில்லை என்பதும் உண்மையே.
பாலியல் வன்முறை, பொருளாதாரரீதியாகச் சுரண்டியது, அதிகாரத்தை உபயோகித்துப் பாலியல் துர்ப்பிரயோகம் செய்தது போன்ற எந்தக் குற்றச்சாட்டுகளும் கண்டன அறிக்கையில் கிடையாது. பின்பு என்னதான் குற்றச்சாட்டு? காதல் உறவில் இருந்தவர்களை மேலாதிக்கம் செய்தேன், நம்பிக்கைத் துரோகம் செய்தேன், அவர்களுடன் திடீரெனத் தொடர்புகளைத் துண்டித்தேன் என்பவையே சாரமான குற்றச்சாட்டுகள்.
இந்தக் குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். எவரொருவர் மீதும் நான் மேலாதிக்கமோ பாலியல் சுரண்டலோ செய்ததில்லை. நம்பிக்கைத் துரோகம் சுட்டுப் போட்டாலும் – உண்மையாகவே துப்பாக்கியால் சுட்டாலும் – செய்வது என் இயல்பில்லை. உறவிலிருந்து பிரிந்த பின்பும் பலருடனும் நட்புரீதியான தொடர்புகளையும் சந்திப்புகளையும் இப்போதுவரை நான் வைத்திருக்கிறேன்.
பொத்தாம் பொதுவாக அவருக்கு அப்படி நடந்தது, இவருக்கு இப்படி நடந்தது எனக் கண்டன அறிக்கை சொல்கிறது. இப்படி யாரும் எவர்மீது வேண்டுமானாலும் எளிதாகக் குற்றம் சொல்லலாம். தனியொரு முகநூல் வம்பரும் இப்படிச் சொல்லலாம், 116 கையெழுத்துகள் சேர்ந்தும் சொல்லலாம். எண்ணிக்கை அல்ல உண்மையைத் தீர்மானிப்பது.
இவ்வாறான ஒரு பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டை முன்வைக்கும்போது, சில குறிப்பான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரைச் சொல்லாமல் இருப்பதில் நியாயம் இருக்கலாம். எனினும், எனது வாழ்க்கை எப்படிப் பகிரங்கமானதோ அவ்வாறே எனது காதல் உறவுகளும் பகிரங்கமானவையே, எல்லோருக்கும் தெரிந்தவையே என்றிருக்கும்போது இங்கே அந்தப் பெயர்களைக் குறிப்பிட்டிருக்க முடியும். அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் என்னால் ஆதாரபூர்வமாகக் காலவரிசைப்படி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து எது உண்மையென நிரூபணம் செய்திருக்க முடியும். அந்த வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இதை ஓர் எடுத்துக்காட்டோடு விளக்குகிறேன். 2010-இல், பிரான்ஸ் தமிழச்சியின் பெயரைக் குறிப்பிடாமல் ‘ஒரு பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்’ எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லியிருந்தால் அந்தக் குற்றச்சாட்டின் தன்மையை நான் எவ்வாறு புரிந்துகொண்டிருக்க முடியும்? அந்தக் குற்றச்சாட்டை எப்படி ஆதாரத்தோடு என்னால் மறுத்திருக்க முடியும்? இந்தக் கண்டன அறிக்கையும் இவ்விதமே கற்பனைக் குற்றச்சாட்டுகளோடு வெளியாகிப் பொறுப்புக்கூறுமாறு என்னிடம் கேட்கிறது. பெயரற்ற பெண்கள் – கற்பனைக் குற்றச்சாட்டுகள் என்றிருந்தால் என்னால் எவ்வாறு எனது தரப்பைச் சொல்ல முடியும். பொத்தாம் பொதுவாக ‘மறுக்கிறேன்’ என்றுதான் சுருக்கமாகச் சொல்ல முடியும். எனினும், கண்டன அறிக்கையை மிகக் கவனமாகப் படித்து, முடிந்தவரை நான் பொறுப்புடன் என்னுடைய மறுப்பை இங்கே விளக்கமாக எழுதியிருக்கிறேன்.
கண்டன அறிக்கையின் பொய்களின் அணிவகுப்பில் அடுத்த குற்றச்சாட்டு ‘திருநங்கை செயற்பாட்டாளரை பாலியல் ரீதியாக சுரண்டியதோடு மட்டுமல்லாமல், தான் திரைக்கதை எழுதி நடித்த ரூபாவிலும்(Roobha) அந்த உறவில் நடந்தவற்றையெல்லாம் பயன்படுத்தி காட்சிகளாக்கியுள்ளார்’ என்பது. இந்தப் பாரதூரமான குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன்.
‘ரூபா’ திரைப்படம் 2016-இல் கனடாவில் தயாரிக்கப்பட்டது. ஆனால், அந்தத் திரைப்படத்தின் கதை ‘செங்கடல்’ திரைப்படம் முடிந்த கையோடு லீனா மணிமேகலைக்காக என்னால் 2011- இல் ‘சிட்டு’ என்ற தலைப்பில் திரைக்கதையாக எழுதிக் கொடுக்கப்பட்டது. எனினும், முயற்சி மேற்கொண்டு நகரவில்லை. இதே கதை கனடாச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு, ‘ரூபா ‘என்கிற கதையாக என்னால் எழுதப்பட்டு, ‘ரூபா’ திரைப்பட இயக்குனரிடம் என்னால் கொடுக்கப்பட்டது. ‘ரூபா’ திரைக்கதை என்னுடைய உறவில் நடந்த உண்மைக்கதை என்பதில் சற்றும் உண்மையில்லை.
குயர் சமூகத்தோடு எனக்கு நீண்டகாலமாகத் தொடர்பும் தோழமையும் இருக்கின்றன. நான் அவர்களோடு நிறைய உரையாடி அவர்களது வாழ்பனுபவம் குறித்து அறிந்திருக்கிறேன். கூவாகத்திற்குச் சென்று கள ஆய்வு செய்து லீனா மணிமேகலைக்காக ‘ரதிலீலா’ என்று இன்னொரு திரைக்கதையையும் எழுதிக் கொடுத்திருக்கிறேன். குயர் சமூகத்தவர்களுக்கு இலங்கை – இந்தியாவில் உரிமைகள் மறுக்கப்படும்போது, அவர்கள் அய்ரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோர என்னவகையான சட்ட வழிகள் இருக்கின்றன எனச் சொல்லியிருக்கிறேன். பிரான்ஸில் தஞ்சம் கோரிய சிலருக்கு ‘கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமி’யின் உறுப்பினர் என்ற முறையில் சாட்சியச் சான்றிதழ் கொடுத்திருக்கிறேன். ஆனால், இதையெல்லாம் நான் பாலியல் சுரண்டலுக்காகச் செய்தேன் என்று கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது எனக்கு இழைக்கப்படும் அநீதி அல்லாமல் வேறில்லை.
பத்து வருடங்கள் காதலித்துத் திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்டு, உறவில் ஏற்படும் சிக்கல்களாலும் முரண்பாடுகளால் விவாகரத்து வாங்கிப் பிரிந்துவிடுபவர்கள் உண்டு. அதற்கான உரிமை தார்மீகரீதியாக மட்டுமல்லாமல் சட்டப்படியும் அவர்களுக்குண்டு. அதுபோலவே காதலர்களுக்கும் பிரிந்து செல்வதற்கான உரிமை உண்டு. சிலவேளைகளில் இந்தப் பிரிவு நட்புணர்வுடன் சுமூகமாக நடக்கும். சிலவேளைகளில் முரண்பாடுகளால் எழுந்த கசப்புகளோடும் பழிவாங்கும் வன்மத்தோடும் இந்தப் பிரிவுகள் நிகழும். அங்கே நிச்சயமாக உணர்வுரீதியான பாதிப்புகளும் உளக்கொந்தளிப்புகளும் இருக்கும். ஆனால், இருவருக்கு இடையேயான இந்த உறவுச் சிக்கலை ‘பாலியல் சுரண்டல்’ எனச் சொல்லிப் பழிதீர்க்க நினைப்பது அருவருப்பானது. அதைப் பெண்ணியச் சாயம் பூசிய கண்டன அறிக்கையாக வெளியிடுவது தவறான முன்னுதாரணம். கண்டனத்திற்கு உரிய செயல். இத்தகைய பொய் அறிக்கைகளை உலாவவிடுவது என்பது எதிர்காலத்தில் உண்மைகளின், ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் அறிக்கைகளையும் சமூகம் சந்தேகத்தோடு அணுகத் தூண்டும் பொறுப்பற்ற செயல்.
கண்டன அறிக்கையில் குறிப்பிடப்படும் இன்னொரு விஷயம் “மிரட்டுதலும் மெளனிக்கச்செய்வதும் – ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம், நீங்கள் என்ன கலாசார காவலர்களா (cultural Policing) என்று கேட்கிறார்” என்பது.
இந்தக் கண்டன அறிக்கையைத் தயாரித்தவர்கள், கையொப்பமிட்டவர்கள் இதை நிரூபிக்கத் தயாரா? ஏன் இந்தப் பொய்கள்! இது உண்மை என்றால் யாரை மிரட்டினேன் என இங்கு பகிரங்கமாகச் சொல்வதில் என்ன சிக்கல் உங்களுக்கு? கலாசாரக் காவலரா எனக் கேட்டு எங்கு எழுதினேன்? யாரை மிரட்டினேன்? ஆளும் சொல்லாமல் பேரும் சொல்லாமல் ‘ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம் கலாசாரக் காவலரா எனக் கேட்கிறார்’ எனக் கண்டன அறிக்கையில் புகார் சொல்லப்படுகிறது. என்னுடைய புகார் என்னவென்றால், அப்படி என்னால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்களின் சார்பில் இந்த நிமிடம்வரை எவரொருவரும் என்னிடம் பேசவில்லை என்பதுதானே.
அடுத்த குற்றச்சாட்டு ‘அவருடைய சக அறிவுஜீவி கூட்டாளிகளை விட்டு அதையொட்டி கட்டுரை எழுத வைப்பது, அறிக்கை விடச் செய்வது என்று தனது செல்வாக்கை ஊடகமாக்கி, பாதிப்புக்குட்பபடுத்தப்பட்ட பெண்களையும் அவர்களுக்காக பேச வந்தவர்களையும் பிற்போக்காளர்களாக அடையாளப்படுத்தி குணக்கொலை (character assassination) செய்திருக்கிறார்’ என்பது.
எனது அறிவுஜீவி கூட்டாளிகளை எப்போது எவர்மீது நான் ஏவிவிட்டேன்? இதற்காவது உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? சேறடிக்க வேண்டுமென்று இறங்கிவிட்டால் எந்த எல்லைக்கும் இறங்கிச் சேறு வீசிவிடுவீர்களா? எனது ‘அடியாள் எழுத்தாளர்கள்’ என ஒரு பட்டியல் அவ்வப்போது முகநூல் வம்பர்களால் வெளியிடப்படுவதுண்டு. இந்தப் பட்டியலில் உள்ள எழுத்தாளர்கள் ஒவ்வொரும் தங்களது எழுத்துத் திறனால் தங்களை இலக்கிய உலகில் நிறுவிக்கொண்டவர்கள். தங்களுக்கு எனத் தனித்துவமான பார்வைகளைக் கொண்டவர்கள். இலக்கியத்திற்கு எந்த மதிப்புமளிக்காத சமூகச் சூழலிலிருந்து தங்களது உழைப்பாலும் திறனாலும் எழுந்துவரும் இளம் எழுத்தாளர்களை இவ்வாறு கொச்சைப்படுத்துவது நாணயமற்றது.
கண்டன அறிக்கையில் நகைச்சுவை அம்சங்களுக்கும் இடம் இருக்கக்கூடாது என்றில்லை. ஆனால், அது அசட்டு நகைச்சுவையாக இருப்பது இரசிக்கத்தக்கதல்ல. ‘தனது வயதையும், உடல் நலம் சார்ந்த பராமரிப்புக்கான தேவையையும் கூறி பெண்களிடம் கழிவிரக்கம் தேடுகின்றமை’ என்பதும் என்மீதான ஒரு குற்றச்சாட்டாம். இதை மறுப்பதென்றால் நான் மிகுந்த உடல் நலத்தோடு இருக்கிறேன் என்று மருத்துவச் சான்றிதழ் பெற்று இங்கே சமர்ப்பித்தால்தான் முடியும். வேண்டுமென்றால் அதையும் பொறுப்பாகச் செய்துவிடுகிறேன்.
‘பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்ணொருவர் கூறுகையில் ஷோபாசக்தி குடிக்கு அடிமையாக இருப்பதுடன் தன்னையும் அப்பழக்கத்திற்கு ஆளாக்கிவிட முனைந்தார் என்பதாலேயே அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதைக் குறிப்பிட்டார்’ என்றொரு கண்டனக் குற்றச்சாட்டு. இதெல்லாம் ‘குமுதம்’ கிசுகிசுவுக்கு நிகரான கண்டனம். இந்தக் கண்டனத்திற்கு என்ன பொறுப்புக் கூறுவது என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. ஒரு குடி அடிமையால் முப்பது வருடங்களாக இலக்கியத்திலும் சினிமாவிலும் இடையறாது இயங்க முடியுமா? ஒரேயொரு கிட்னியோடு முப்பது வருடங்களுக்கும் மேலாக முழுமையான தேக ஆரோக்கியத்தோடு இருக்க முடியுமா? என்றெல்லாம் நீங்களாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியதுதான்.
கற்பனைக் குற்றச்சாட்டுகளுடன் கண்டன அறிக்கை வெளிவந்துவிட்டது. இனி என்ன நடக்கும்?
என்மீது அரசியல்ரீதியாக நெடுங்காலமாகவே பகைமை பாராட்டிவரும் பெருமக்கள் இந்தப் பொய் அறிக்கையைப் பரப்பிச் செல்வார்கள். பாலியல் கிசுகிசுகளுக்காகவே காத்துக்கிடக்கும் முகநூல் வம்பர்கள் இதைக் காவிச் செல்வார்கள். கண்டன அறிக்கையை ஆதரிக்கிறேன் எனப் பொய் ஆதாரங்களும் பொய்ச் சாட்சியங்களும் இனி அணிவகுக்கும். அதேவேளையில் தீர ஆராய்ந்து தெளிந்து நடப்பவர்கள் இந்த அறிக்கையிலுள்ள பொய்களையும் அறிக்கையின் உண்மையான நோக்கத்தையும் தெரிந்துகொள்வார்கள்.
இந்த மறுப்புப் பதிவை எழுதி முடிக்கும் இந்தத் தருணத்தில் எனக்குத் தயக்கமோ வருத்தமோ ஏதுமில்லை. மாறாக, கடந்த இரண்டு வருடங்களாகவே என்மீது அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரப்பப்பட்டுக்கொண்டிருந்த அவதூறுகளுக்கு ஒட்டுமொத்தமாகப் பதில் சொல்லி முடித்திருக்கும் மனநிறைவே என்னிடம் இருக்கிறது.
கடைசியாக ஒன்று… இந்த அறிக்கையின் நோக்கம் என்னைப் பொறுப்புக்கூற வைப்பதுதான் என்றால், நான் பொறுப்பாக மறுப்புக்கூறி அந்த நோக்கத்தை இங்கே நிறைவேற்றி வைத்துவிட்டேன். ஆனால், அறிக்கையின் மைய நோக்கம் அதுவல்லவே. அது என்னவென்று அறிக்கை அறிவிக்கிறது:
“ஷோபாசக்திக்குத் தளங்களை ஏற்படுத்திக் கொடுத்து, விருதுகளையும் அங்கீகாரத்தினையும் வழங்கிய ‘முற்போக்கு’ இயக்கங்கள், காந்தியவாதிகள், பதிப்பாளர்கள், அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்கிறது கண்டன அறிக்கை.
என்னைத் தனிமைப்படுத்திச் சமூகப் புறக்கணிப்புச் செய்வது, என்னோடு தோழமை பாராட்டும் இயக்கங்களிலிருந்து என்னைப் பிரித்துவைப்பது, என்னைக் குறித்து எழுதும் ஊடகவியலாளர்களைத் தடுப்பது, எனது பதிப்பக வாய்ப்புகளைக் கெடுப்பது, என்னைத் தேடி வந்துகொண்டேயிருக்கும் சர்வதேச அளவிலான சினிமா வாய்ப்புகளுக்கு வேட்டு வைப்பது என்பவைதான் கண்டன அறிக்கையின் மைய நோக்கம். இதையெல்லாம் செய்யுமளவுக்குக் கற்பனைகளுக்கும் பொய்களுக்கும் சக்தி இருக்குமானால், முப்பது வருடங்களாக எந்த அதிகார சக்திகளுக்கும் ஆயுதங்களுக்கும் அஞ்சாமலும் பணியாமலும் எழுதிவரும் எனது எழுத்திலுள்ள நேர்மைக்கும் உண்மைக்கும் அதைவிட அதிக சக்தியுண்டு என்பதே எனது நன்நம்பிக்கை.
-ஷோபாசக்தி
15.04.2025