எழுதும் கதை

கட்டுரைகள்

[‘காலம்’ 61|62- பேராசிரியர் நுஃமான் சிறப்பிதழில் வெளியாகிய எனது கட்டுரை]

1997- 2024 காலப்பகுதியில் நான் எழுதிய மொத்தச் சிறுகதைகளும் தொகுப்பாக்கப்பட்டு ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது. அதற்கான இறுதிக்கட்டத் தொகுப்புப் பணிகளை இன்று இரவு சென்னையில் முடித்தேன். காலையில் இலங்கை செல்லவிருக்கிறேன். இந்த உற்சாகமான தருணத்தில், நான் எழுத வந்த கதையை வாசகத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்வது பொருத்தமாகயிருக்கும் என நம்புகிறேன்.

இலக்கியத்தின் மீதான ஈர்ப்பும் மதிப்பும் எனக்கு எந்த வயதில் ஏற்பட்டன என நிதானித்துச் சொல்ல முடியவில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்தே கையில் கிடைப்பதை எல்லாம் படித்தவாறே இருக்கிறேன். ஜெயகாந்தனின் கதைகள் மற்றும் வீரகேசரிப் பிரசுர நாவல்கள் எனக்கு இலக்கிய வாசிப்பின் எண்ணற்ற வாசல்களைத் திறந்துவிட்டன எனச் சொல்லலாம்.

அன்றிலிருந்து இன்றுவரை இலக்கியத்தின் மீதான என்னுடைய வெறிகொண்ட நேசமும் இலக்கிய ஆசிரியர்கள் மீதான அளப்பெரிய மதிப்பும் சற்றேனும் குறைந்ததில்லை. மாறாக, அவை மென்மேலும் வளர்ந்துகொண்டே வருகின்றன. என்னுடைய வாழ்க்கையை வடிவமைத்ததில் இலக்கியத்திற்கே முதன்மைப் பங்குண்டு. எனக்கான வாழ்க்கை அறங்களை முதன்மையாக இலக்கியங்களே எனக்கு வகுத்தளித்தன. இவ்வகையில், லியோ டால்ஸ்டாயும் மக்ஸிம் கோர்க்கியும் ஜோன் ஜெனேயும் கே.டானியலும்தான் என்னுடைய முதன்மையான ஆசிரியர்கள்.

இன்னொருபுறத்தில் எஸ்.பொன்னுத்துரை, கு.அழகிரிசாமி, பிரேம்- ரமேஷ், சாருநிவேதிதா ஆகியோர், எழுதும் கலையில் எனக்கு வழிகாட்டிகள். அவர்களது எழுத்துகளால் ஈர்க்கப்பட்டே நான் என் எழுதும் கலையைச் செப்பனிட்டேன்.

இலக்கியப் பிரதிகள் குறித்த மதிப்பீடுகள், இலக்கியப் பிரதிகள் மீதான பின்நவீனத்துவ வாசிப்புப் போன்றவற்றை எனக்குக் கற்பித்தவர்களில் பேராசிரியர் அ.மார்க்ஸ் முதன்மையானவர். மேலே குறிப்பிட்டவர்கள் இல்லாமல் இலக்கியத்தில் இந்தத் தொலைவுவரை நான் வந்திருக்க முடியாது.

என்னுடைய பதினைந்து வயதுவரை என்னுடைய உலகம் ‘அல்லைப்பிட்டி’ என்ற சிறு தீவகக் கிராமத்திற்குள் மட்டுமேயிருந்தது. அங்கிருந்துகொண்டுதான் இலக்கியம், திரைப்படம், நாடகம் என ஏகப்பட்ட மாபெரும் கனவுகளுடன் நான் வளர்ந்தேன். இந்தத் தளங்களெல்லாம் எனக்குச் சிறிதேனும் வசப்படும் என நான் ஒருபோதுமே நினைத்திருந்ததில்லை. என்னுடைய குடும்ப – வாழ்க்கைப் பின்னணி அத்தகைய அதலபாதாளத்திலிருந்தது. படிப்பும் பத்தாவது வரைதான். ஆனாலும், நான் விடாமல் என்னுள் கனவுகளை உருவாக்கிக்கொண்டேயிருந்தேன். அவை நனவாவதற்கான சாத்தியத்தின் நுனிகூட எனக்குத்
தென்படவில்லை. படிக்கும் கதைகளை, கவிதைகளைக் குறித்து உரையாடுவதற்குக் கூட எனக்கு ஒரேயொரு ஆள் இல்லாமலிருந்தது. இலக்கியம் குறித்த உரையாடல்கள் ஒருவருடைய இலக்கிய அறிதலுக்கு மிகவும் முக்கியமானவை என்பது உங்களுக்குத் தெரியும். என்னுடைய பதினாறாவது வயதில் முதன்முதலாக உரையாடலுக்குச் சிறுவாசல் திறந்தது. அந்தக் கதவைத் திறந்தவர் கவிஞரும் ஓவியரும் எழுத்தாளருமான நிலாந்தன்.

நிலாந்தனும் நானும் மட்டுமே ஒரு முகாமில் தங்கியிருந்த நாட்கள் அமைந்தன. அங்கே வைத்துத்தான் அவரின் புகழ்பெற்ற கவிதையான ‘கடலம்மா’வை நிலாந்தன் எழுதினார். அந்தக் கவிதையின் முதல் வாசகன் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன். அப்போது நிலாந்தனுக்கு இருபது வயதுதான். ஆனாலும், அவருக்கு யாழ்ப்பாணத்திலிருந்த இலக்கியர்களுடன் நல்ல அறிமுகமிருந்தது. கவிஞர்கள் சு.வில்வரத்தினம், அ.யேசுராசா, ஓவியர் மாற்கு போன்றவர்களை நிலாந்தன் சந்திக்கச் சென்ற சில தருணங்களில் நானும் கூடவே சென்று, ஓர் ஓரமாக நின்று அவர்களது உரையாடல்களைக் ‘கெலி’யோடு பருகிய நாட்களவை. நிலாந்தன் என்னுடைய இயக்க வாழ்க்கையைத் தொடக்கி வைத்தவர் மட்டுமல்லாமல், இலக்கியம் குறித்த எனது அடிப்படைப் புரிதலுக்கு முதல் காரணியாகவுமிருந்தார்.

என்னுடைய பதினேழாவது வயதில், எனது முதல் கவிதை ‘ஈழமுரசு’ பத்திரிகையில் வெளியானது. தொடர்ந்து ‘செய்திக்கதிர்’ என்ற சஞ்சிகையில் கவிதைகள் வெளியாகின. இதே காலப்பகுதியில் சிறுகதைகளை எழுதப் படாத பாடுபட்டேன். ஆனால், நம்பிக்கையின்மையுடன் போராடிப் போராடி எழுதியவற்றைக் குப்பையில் போட்டேன். ‘அரும்பு’ என்றொரு கையெழுத்து – போட்டோகொப்பி பத்திரிகையில் என்னுடைய முதலாவது சிறுகதை வெளியானதற்கு, அப்பத்திரிகையின் ஆசிரியர் நானே என்பது மட்டுமே காரணமாகயிருந்தது.
இந்திய அமைதிப்படையின் காலத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து என்னுடைய இருபதாவது வயதில் வெளியேறிக் கொழும்புக்குச் சென்றேன். அப்போதும் கனவுகளுடனேயே சென்றேன். கொழும்பில் அரச படையினரால் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டபோதும் கனவுகளுடனேயே சென்றேன். சிறைக் கொடுமையிலிருந்தும் என் கனவுகளே என்னை ஆற்றுப்படுத்தின. இக்காலப் பகுதியில் படிப்பதற்கு பைபிளைத் தவிர வேறு நூல் எனக்குக் கிடைக்கவில்லை.

சிறையிலிருந்து வெளியே வந்ததும், பைபிளோடு சேர்த்துப் பாரதியார் கவிதைத் தொகுப்பையும் எடுத்துக்கொண்டு 1990-இல் அகதியாகத் தாய்லாந்துக்குச் சென்றேன். தமிழ் மொழியோடோ எழுத்தோடோ எந்தத் தொடர்புமில்லாத தேசம். அங்கே ‘நெற்றிக்கண்’ என்றொரு கையெழுத்து – போட்டோகொப்பி பத்திரிகையை என்போன்ற அகதிகளிடையே வெளியிட்டேன். என்னுடைய இரண்டாவது சிறுகதை அந்தப் பத்திரிகையில் வெளியானது.

என்னுடைய இருபத்தைந்தாவது வயதில் பிரான்ஸுக்கு அகதியாகச் சென்றேன். எத்தனையோ நீண்ட வருடங்களுக்குப் பிறகு பாதுகாப்பும் நிம்மதியும் மூன்று வேளை உணவும் தூங்குவதற்கு ஓர் இடமும் மட்டுமல்லாமல், என்னுடைய வாழ்க்கையிலேயே முதன்முறையாக எனக்கொரு எழுதும் மேசையும் கிடைத்தது.

இலக்கியம் சார்ந்த என்னுடைய கனவுகள் என்னைத் துரத்திக்கொண்டிருந்தன. பாரிஸ் தமிழ்க் கடைகளில் கிடைக்கும் எல்லாப் பத்திரிகைகளையும் வார இதழ்களையும் வாங்கி வெறிகொண்டு வாசித்தேன். 1986-இல் விட்டுப்போன புலிகள் இயக்கத் தொடர்பு, வெளிநாட்டுப் புலிகள் அமைப்பின் மூலம் சாதுவாகப் புதுப்பிக்கப்பட்டது.

நான் 1986-ல் புலிகள் இயக்கத்திலிருந்து விலகிய பின்பு என்னால் எந்தவித அரசியல் செயற்பாட்டையும் தொடர முடியவில்லை. எனது உயிரைப் பாதுகாப்பதற்கான ஓட்டமும், என்னுடைய கனவுகளுமே என்னை இயக்கிக்கொண்டிருந்தன. எனினும், தமிழ்ப் பகுதிகளில் இலங்கை இராணுவம் ஏதாவது கூட்டுப் படுகொலைகளையும் அழிவுகளையும் செய்வதை அறியும் போதெல்லாம், என் மனம் கொந்தளித்து ஊசலாடிக்கொண்டேயிருந்தது. மீண்டும் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்படலாமா என்ற குழப்பம் என்னுடன் இருந்துகொண்டேயிருந்தது. இயக்கத்தின் தலைமைகள் மீது எனக்கு அதிருப்தி இருந்ததே தவிர, தமிழீழ இலட்சியத்திற்கு நான் எனக்குள் விசுவாசமாகவே இருந்தேன். புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஒரேயொரு சொல்லைக் கூட நான் சொன்னதில்லை என்பதற்கு அப்பால், யாராவது புலிகள் இயக்கத்தை அல்லது தமிழீழப் போராட்டத்தை விமர்சித்தால் அவர்களுடன் வம்புச் சண்டைக்கும் போய்விடுவேன். பாரிஸின் புறநகரிலிருந்த ஒரு தொழிலாளர் விடுதியில் கவிஞர். க.வாசுதேவனுடன் நான் இழுத்த வம்புச் சண்டை நண்பர்கள் வட்டாரத்தில் அப்போது பிரபலம்.

பாரிஸில் இருந்த எனது நண்பர்கள் எல்லோருமே விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாகவே இருந்தார்கள். பிரான்ஸ் புலிகள் அமைப்பிலிருந்த எனது முன்னாள் சகாக்கள் சிலர் என்னுடன் தொடர்பை ஏற்படுத்தி, தங்களுடன் இணைந்து வேலை செய்யுமாறு கேட்டார்கள். 1993-இல் பாரிஸில் புலிகள் நடத்திய மாபெரும் மேதின ஊர்வலத்தில் கலந்துகொண்டேன். நாங்கள் ஊர்வலத்தில் இருந்தபோதுதான், கொழும்பில் ஜனாதிபதி பிரேமதாஸ புலிகளின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி கிடைத்து. ஊர்வலத்தில் உற்சாகம் கரைபுரண்டோட முழக்கங்களை எழுப்பிச் சென்றோம். இவை எல்லாமே நான் பிரான்ஸ் வந்த ஒன்றரை மாதங்களுக்குள் நடந்து முடிந்த சம்பவங்கள்.

இந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள், பிரான்ஸில் நடந்த தமிழ் இலக்கியப் போட்டிகள் இரண்டில் ‘அல்லையூர் அன்ரனி’ என்ற பெயரில் கலந்துகொண்டேன். போட்டிக்கு எழுதிய கவிதை- கதை எல்லாமே தமிழீழ விடுதலைப் போரட்டத்திற்கான – குறிப்பாகப் புலிகளுக்கான- பரப்புரை எழுத்துகளே. இவற்றில் ‘நெஞ்சில் உரமுமின்றி’ என்ற கதை மறுபிரசுரமாக ஈ.பி.டி.பி-யின் ‘தினமுரசு’ இதழிலும் வெளியானது அரசியல் ஆச்சரியமே. இரண்டு போட்டிகளிலுமே கவிதைகளுக்குத் தங்கப்பதக்கங்களும் சிறுகதைகளுக்கு வெள்ளிப்பதக்கங்களும் எனக்கு அறிவிக்கப்பட்டன. அந்தப் பதக்கங்களைப் பெறுவதற்கு முன்பே, தெருவில் ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகையை விற்றுக்கொண்டிருந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத் தோழர்களை நான் சந்தித்தேன்.

அவர்களுடனான முதல் உரையாடலில் இருந்தே என்னுடைய அரசியல் பார்வை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. தங்கப்பதக்கங்களையும் வெள்ளிப்பதக்கங்களையும் நான் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன்.
அந்தச் சந்திப்புக்குப் பின்பாக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துடன் நான் நான்கு வருடங்கள் பயணித்தேன். அந்த அமைப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவாக இருந்தது. ட்ராட்ஸ்கியவாதிகளான அவர்கள் சர்வதேசவாதிகள். தேசியவாதத்தைக் கடுமையாக எதிர்ப்பவர்கள். அவர்கள் மூலமாகத்தான் நான் தேசியவாதத்திலிருந்து என்னை முற்றாகத் துண்டித்துக்கொண்டேன். இது ஒரு நாளில் நடந்த மாற்றமல்ல. மார்க்ஸிய -லெனினிய – ட்ராட்ஸ்கிய மூல நூல்களையும் ரோஸா லக்ஸம்பேர்க்கையும் லீப்னெக்டையும் டேவிட் நோர்த்தையும் பீற்றர் ஸ்வாட்டையும் நிக் பீம்ஸையும் கீர்த்தி பாலசூரியாவையும் தீவிரமாகப் படித்து எண்ணற்ற கலந்துரையாடல்கள் – வகுப்புகள் – விவாதங்கள் ஊடகத்தான் நான் மாறினேன்.

இந்தக் காலகட்டத்தில்தான் நான் தேசியவாதத்திற்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபடத் தொடங்கினேன். தமிழ்த் தேசியவாதத்திற்குப் பதிலாக இலங்கைத் தொழிலாளர்களின் வர்க்க அணிதிரட்டலை முன்வைத்தேன். தமிழ்த் தேசியவாதத்தையும் விடுதலைப் புலிகளையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினேன். பாரிஸ் வீதிகளில் நின்று தோழர்களுடன் சேர்ந்து ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகையையும் ‘மார்க்ஸிய முன்னோக்கு’ இதழையும் விற்பனை செய்தவாறே மக்களிடம் பேசத் தொடங்கினேன். பாரிஸின் புறநகர்களுக்கு வீடு வீடாகச் சென்று ட்ராட்ஸ்கியத்தையும் சர்வதேசியவாதத்தையும் பரப்புரை செய்தோம். சிறியளவில் பொதுக்கூட்டங்களை நடத்தினோம். அப்போது இலங்கையைப் பொறுத்தவரை எங்களது கட்சியின் நிலைப்பாடு ‘ஸ்ரீலங்கா -தமிழீழம் சோசலிஸக் குடியரசு’ என்பதாக இருந்தது. இலங்கையில் இனபேதங்களைக் கடந்து பாட்டாளி வர்க்கம் ஒன்றுபட்டு புரட்சி செய்யுமென்றும் நிரந்தரப் புரட்சியெனும் உலகப் புரட்சி நெருங்கிக்கொண்டிருக்கிறது எனவும் நாங்கள் மனதார நம்பினோம். நூற்றாண்டுக்கு முந்தைய கம்யூனிஸ நூல்கள் அந்தளவுக்கு எங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை வெட்டியதோடு மட்டுமல்லாமல், அதற்குள் வேகவேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறது எனவும் நம்பினோம்.

ஒரே வருடத்தில் காட்சிகள் மாறின. 1993 மேதினத்தில் புலிகளின் ஊர்வலத்தில் கலந்துகொண்டு தமிழ்த் தேசிய முழக்கங்களை எழுப்பிய நான் 1994 மேதினத்தில் அதே புலிகளது ஊர்வலத்தின் மத்தியில் நின்று ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகையை விநியோகித்துக்கொண்டு, புலிகளின் தேசியவாதத்திற்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டிருந்தேன். அந்த ஊர்வலத்தில் அய்யாயிரத்திற்கும் குறையாத புலி ஆதரவாளர்கள். இவர்களிடயே புகுந்து நாங்கள் ஆறு தோழர்கள் எதிர்ப் பரப்புரை செய்துகொண்டிருக்கிறோம். கண்ணன் என்ற எங்களது தோழர் ஒருவர் புலிகளால் தாக்கப்பட்டார். ஒருகட்டத்தில் நாங்கள் அங்கிருந்து புலிகளால் விரட்டப்பட்டோம். நாங்கள் அந்த ஊர்வலத்திலிருந்து கிளம்பும்போதுதான், சில மணி நேரங்களுக்கு முன்பாகத் தோழர். சபாலிங்கம் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி எங்களுக்குக் கிடைத்தது. தொடர்ந்து வந்த காலம் மிகக் கொடுமையானது. புலிகள் எங்கள் மீது பரவலாகத் தாக்குதலை நடத்தினார்கள். ‘லா சப்பல்’ பகுதியில் ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகை விற்றுக்கொண்டிருந்தபோது, தோழர்கள் ஞானாவும் செழியனும் இரத்தம் வரும்வரை புலிகளால் தாக்கப்பட்டார்கள். சந்திரிகா பண்டாரநாயக்காவின் அரசியல் வருகையை வரவேற்றுப் புலிகள் நடத்திய ‘போரும் சமாதானமும்’ என்ற கூட்டத்திலும் நாங்கள் புலிகளின் உடல்ரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டோம். இன்னொருபுறத்தில் ஜே.வி.பி-யினரும் எங்கள்மீது தாக்குதல்களை நடத்தினார்கள். இலங்கையில் எங்களது தோழர்கள் ஏற்கனவே ஜே.வி.பி-யால் கொல்லப்பட்டிருந்தார்கள்.

இந்தக் காலப்பகுதியில் பாரிஸில் ‘சுபமங்களா’, ‘புதிய பார்வை’, ‘கணையாழி’ ஆகிய இதழ்கள் ஒரு கடையில் கிடைக்கும். அந்த இதழ்களைப் படித்துவிட்டுக் கட்சித் தோழர்களிடம் விவாதிப்பேன். அந்த இதழ்கள் மட்டுமல்லாமல், இதழ்களில் எழுதுபவர்களும் குட்டி பூர்சுவாக்கள் என்பதே கட்சியின் நிலைப்பாடு. உங்களுக்கு இதையெல்லாம் நம்ப முடிகிறதா என்று தெரியவில்லை… இந்த இதழ்கள் நடத்தப்படுவதே உலக முதலாளித்துவத்தைக் காப்பாற்றும் ஒரே நோக்கில்தான் என்றளவுக்குத் தோழர்கள் அதிதீவிரமாகப் பேசுவார்கள். அதேபோன்று டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி போன்றவர்களையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இறையியல்வாதிகள் என்பார்கள். மக்ஸிம் கோர்க்கியை ‘ஸ்டாலினிஸ்ட்’ என்பார்கள். எனக்கு தெரிந்து இந்த உலகத்தில் எங்களது கட்சியினர் எவரொருவரையும் இலக்கியவாதியாக ஏற்றுக்கொண்டதில்லை. சிறுவன் என்னையா ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள்!

அப்போதெல்லாம் நான் கதைகளையும் கவிதைகளையும் எழுதிக் கட்சித் தோழர்களிடம் காட்டுவதுண்டு. நான் எழுதிய பிரதிகளில் தேசியவாதம், கலைப்புவாதம், காட்சிவாதம், அனுபவவாதம், தேசியப்புறநீங்கல்வாதம் எல்லாமே இருக்கின்றன எனச் சொல்லி என்னை இலக்கியரீதியாக நோகடிப்பதைக் கட்சி ஒரு கொள்கையாகவே வைத்திருந்தது. எவ்வாறு இலக்கியம் எழுத வேண்டும் என எனக்கு அறிவுரை சொல்வார்கள். என்னையொரு ட்ராட்ஸ்கிய செ. கணேசலிங்கனாக உருவாக்குவதே அவர்களது வேலைத்திட்டம் என நினைக்கிறேன். இந்த உரையாடல்கள் வழியாக நான் அறிந்துகொண்டதும் கற்றுக்கொண்டதும் ஏராளம் என்பதும் உண்மை. அவர்களோடு இருந்த நான்கு வருடங்களிலும் என்னுடைய ஒரேயொரு கதையோ கவிதையோ எங்கும் வெளிவந்ததில்லை. நான் எழுதியதையெல்லாம் அவர்கள் சிவப்பு மை பேனாவால் கிறுக்கித் தருவார்கள். நானும் அதிதீவிரக் கட்சி விசுவாசி என்பதால் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்துவந்தேன்.

ஆனாலும், ஒரு மீறல் நடந்து போனது. 1996-இல் யமுனா ராஜேந்திரன் புலிகளின் பத்திரிகையான ‘ஈழமுரசு’வில் சினிமாக் கட்டுரைகளைச் சரமாரியாக எழுதிவந்தார். ஒரு பக்கக் கட்டுரையில் நூறு படங்களின் பெயர்களையும் அய்ம்பது இயங்குனர்களின் பெயர்களையும் நாற்பது தத்துவவாதிகளின் பெயர்களையும் முப்பது தவறான தகவல்களையும் உதிர்ப்பார். அடிப்படையிலேயே ஒரு சினிமா ரசிகனான எனக்கு இது எரிச்சலை ஊட்டியது. யமுனா ராஜேந்திரன் எழுதும் வழாவழா எழுத்துகளுக்கு எவரும் எதிர்வினையும் எழுதுவதில்லை. அவரை உண்மையிலேயே ஓர் அறிவாளியாகத்தான் தமிழ் உலகம் கருதுகிறதோ என்று எனக்கு அய்யமே ஏற்பட்டுவிட்டது. பாரிஸில் அப்போது கலைச்செல்வன், சுகன் போன்ற இலக்கியவாதிகள் இருப்பது எனக்குத் தெரியும். அவர்களிடம் இதுபற்றிக் கேட்கலாம் என்றால், இலக்கியவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதை எனது கட்சி விரும்பாது. மணிரத்னத்தை ஆகச் சிறந்த இயக்குநர் எனவும் ‘பம்பாய்’ திரைப்படத்தைப் புரட்சிக் காவியம் எனவும் யமுனா ராஜேந்திரன் எழுதியதையெல்லாம் என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. எனவே, நான் யமுனா ராஜேந்திரனைக் கிண்டலடித்து ‘சோவியத் யூனியனின் சினிமாவும் சில்க் ஸ்மிதாவின் முகங்களும்’ என்றொரு கட்டுரையை அவரைப் போலவே பம்மாத்துப் பண்ணி எழுதி ‘சிவசக்தி’ என்ற பெயரில் ‘ஈழமுரசு’வுக்கு அனுப்பிவைத்தேன். அடுத்த வாரமே அந்தக் கட்டுரை வெளியாகியது. அதற்கு அடுத்த வாரம் இன்னொரு கூத்தும் நடந்தது. ‘அன்புள்ள சகோதரி சிவசக்திக்கு, உங்களது கோபத்தை நான் புரிந்துகொள்கிறேன்…’ என ஆரம்பித்து யமுனா ராஜேந்திரன் ஒரு பதிலை ‘ஈழமுரசு’வில் எழுதியிருந்தார்.

எனது கட்டுரை அச்சேறிய குறுகுறுப்பை என்னால் தாங்கவே முடியவில்லை. எனவே கட்சியிடம் விஷயத்தைப் போட்டுடைத்துவிட்டேன். என் நல்லகாலத்திற்கோ அல்லது கெட்டகாலத்திற்கோ எங்களது கட்சியின் தலைவர் விஜே டயஸ் அப்போது இலங்கையிலிருந்து பாரிஸ் வந்திருந்தார். ஓர் இரவு நடந்த சந்திப்பில் அவர் என்னைக் கடுமையாக விமர்சித்தார். புலிகளின் பத்திரிகையான ‘ஈழமுரசு’வில் நான் எழுதியதைக் கட்சி கடுமையாகக் கண்டித்தது. அந்த இரவிலேயே கட்சியிடம் உடனடியாக மன்னிப்புக் கேட்டுவிட்டு, ‘சிவசக்தி செத்துவிட்டான்’ என அறிவித்தேன். பின்பு கொஞ்ச நாட்கள் நல்லபிள்ளையாக எழுதாமல் இருந்தேன். அதைக் கெடுப்பதுபோல ஒரு நாடகப் போட்டிக்கான அறிவிப்பு வந்தது.

பாரிஸில் நம்மவர்கள் நடத்திய பல நாடகங்களைக் கண்டு நொந்திருந்த என்னை அந்த அறிவிப்பு உசுப்பிவிட்டது. ‘அட்டென்ஷன் ப்ளீஸ்’ என்றொரு நாடகத்தை எழுதிப் போட்டிக்கு அனுப்பிவிட்டேன். அப்போதுதான் ‘ஷோபாசக்தி’ என்ற பெயரை எனக்குச் சூடிக்கொண்டேன். அந்த நாடகப் போட்டியில் எனக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. நாடகமும் ‘கலைமுகம்’ இதழில் வெளியானது. ஆனால், அந்த நாடகத்தை எழுதியது நான்தான் என்பது யாருக்கும் தெரியாது. பாரிஸ் இலக்கிய உலகில் அப்போது ஷோபாசக்தி மர்ம நபர். இதைப் போல வேறு சில மர்ம இலக்கிய நபர்களும் அப்போது இருந்தார்கள். இந்த மர்ம நபர்களைக் கண்டுபிடிப்பதை ஒரு வேலையாகவே வைத்துக்கொண்டு சில இலக்கியவாதிகள் திரிந்துகொண்டிருந்தார்கள். இவர்களில் ஓசை மனோ முக்கியமானவர் என்றே சொல்லலாம்.

அப்போது, கணேசலிங்கம் என்றொரு நண்பர் என்னோடு ‘ஈரோ டிஸ்னி’யில் வேலை பார்த்துவந்தார். அவர் நடித்த நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். அவரிடம் கதையோடு கதையாக என்னுடைய நாடகப் பிரதியின் மீதான அவரது அபிப்பிராயத்தைக் கேட்டுப் பார்த்தேன். அருமையான நாடகம் என்றார். இதற்குப் பிறகு என்னால் என்னையே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், நான்தான் அந்த ஷோபாசக்தி என்று அவரிடம் சொல்லிவிட்டேன். கணேசலிங்கம் அதை ‘ஓசை’ சஞ்சிகையை நடத்திய மனோவிடம் சொல்லியதோடு மட்டுமல்லாமல், ஒரு நாடக விழாலில் என்னை மனோவிடம் காட்டியும் கொடுத்துவிட்டார். நான் மனோவிடம் பேசிய முதல்வார்த்தை எனக்கு இப்போதும் நன்றாக ஞாபகமிருக்கிறது. “நீங்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?” எனக் கறாராகக் கேட்டேன். அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு “ஆம்” என்றார். அதற்குப் பின்புதான் நான் அவரிடம் பேசவே தொடங்கினேன். காலம் செல்வம் போன்றவர்தான் ஓசை மனோவும். இவர்கள் இருவருமே தங்களது இதழுக்காகக் கதை, கட்டுரையை ஒருவரிடம் பெற்றுக்கொள்வதற்காகப் பலதரப்பட்ட தந்திர உத்திகளைக் கையாள்வார்கள். அப்போது மனோ ‘அம்மா’ இதழைத் தொடங்குவதற்கான யோசனையுடன் இருந்தார்.

நானும் தோழர் அசோக்கும் சில மாதங்கள் ஒரே தங்குவிடுதியில் அருகருகாக வசித்தோம். அசோக் தீவிரமான இலக்கிய வாசகராகயிருந்தார். அவரிடமும் நான்தான் ஷோபாசக்தி என்பதை அவிழ்த்துவிட்டிருந்தேன். அவர் மூலமாகத் தோழர் எம். ஆர். ஸ்டாலின் எனக்குப் பழக்கமானார். ஒருநாள் ஸ்டாலினிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. நான் எழுதிய நாடகம் தொடர்பாக என்னைத் தோழியர் லஷ்மி சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். அப்போது நான் அடைந்த பரவசம் கொஞ்சநஞ்சமல்ல.

பாரிஸில் நடந்த சில நாடக விழாக்களுக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கும் சென்று அவதானித்து வந்து நான் கட்சிக்கு ‘ரிப்போர்ட்’ வழங்குவதுண்டு. இந்த இடங்களில் லஷ்மி, கலைச்செல்வன், சுகன் போற்றோரைத் தூர நின்று கண்டிருக்கிறேன். குறிப்பாக, லஷ்மி கூட்டங்களில் உரக்க விவாதிக்கும் முறையும் அவரது நடவடிக்கைகளும் அவர்மீது எனக்கு மிகுந்த பிரமிப்பை உண்டாக்கியிருந்தன. நான் என் வாழ்க்கையில் முதன்முதலாக நேரில்கண்ட பெண்நிலைவாதச் செயற்பாட்டாளர் அவர்தான். அவரது செயற்பாடுகளால் கவரப்பட்டே பெண் விடுதலையைப் பேசும் அந்த நாடகத்தை நான் எழுதியிருந்தேன். அவரே என்னோடு பேச விரும்புகிறார் என்றபோது, எனது இலக்கியத் தன்நம்பிக்கை தன்பாட்டுக்கு எகிறத் தொடங்கியது.

ஓர் உணவுவிடுதியில் நடந்த அந்தச் சந்திப்புக்கு லஷ்மியோடு விஜியும் ஸ்டாலினும் இன்னொருவரும் வந்திருந்தனர். அந்த இன்னொருவர் மு. நித்தியானந்தன் என்பதை அறிந்தபோது, நான் மயங்கிவிழாத குறைதான். வெலிகடைப் படுகொலையிலிருந்து தப்பித்தவர், மட்டக்களப்புச் சிறையுடைப்பின் நாயகர்களில் ஒருவர், விடுதலைப் புலிகள் பத்திரிகையின் ஆசிரியர், ஆழமான அறிவுஜீவி என எத்தனையெத்தனை விஷயங்கள் அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்!

என்னுடைய நாடகப் பிரதியை மு. நித்தியானந்தன் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். ஒரு பிரதியை அல்லது ஒருவரை அவருக்குப் பிடித்துவிட்டால் வானளாவப் பாராட்டுவதிலும் பிடிக்காவிட்டதால் அதலபாதாளத்தில் குப்புறத் தள்ளிவிடுவதிலும் மு. நித்தியானந்தன் அவர்கள் சாரு நிவேதிதாவுக்கே சவால் விடக்கூடியவர். அவரிடம் பாராட்டுப் பெறுவதென்றால் சும்மாவா! நான் எழுதிய நாடகத்தை மேடையேற்றுவதற்கான ஒப்புதலைப் பெறுவதற்காகவே அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். இதுதானே நான் சிறுவயது முதலே கண்ட கனவு! மகிழ்ச்சியில் நான் தத்தளித்தாலும் கட்சிக் கட்டுப்பாடு என் கழுத்தில் கத்தியாக இருந்ததால், அடுத்தநாள் பதில் சொல்வதாகச் சொன்னேன்.

அடுத்த நாளே கட்சித் தோழர்களைச் சந்தித்து இந்தச் சந்திப்புக் குறித்துச் சொன்னேன். ‘குட்டிப் பூர்சுவாக்களுடன் எந்தத் தொடர்பும் கூடாது’ எனத் தோழர்கள் மறுபடியும் கண்டிப்பாகச் சொன்னார்கள். எனவே நான் லஷ்மியைத் தொலைபேசியில் அழைத்து ‘நீங்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையும் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தையும் ஏற்றுக்கொள்ளும்வரை உங்களுடன் இணைந்து என்னால் செயற்பட முடியாது’ எனச் சொல்லிவிட்டேன். ‘பரவாயில்லை’ என லஷ்மியும் சொல்லிவிட்டார்.

இந்தக் காலகட்டத்தில்தான் எனக்குத் தலித் அரசியல் குறித்த அறிமுகம் ‘நிறப்பிரிகை’ இதழ்கள் மூலமாக ஏற்படத் தொடங்கியது. அ.மார்க்ஸ், ரவிக்குமார், ராஜ் கவுதமன், பாமா எனத் தேடித் தேடிப் படிக்கத் தொடங்கினேன். வறட்டுவாத மார்க்ஸியத்தையும் அதிகாரம் மையப்படுத்தப்பட்ட கட்சி வடிவத்தையும் கண்டித்து அ.மார்க்ஸ் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்தார். பின்நவீனத்துவ அலை தமிழக அறிவுலகை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பாதித்துக்கொண்டிருந்தது. நான் இது குறித்தெல்லாம் கட்சிக்குள் உரையாடத் தொடங்கினேன். மார்க்ஸிய மூல நூல்களைக் கரைத்துக் குடித்துச் செரித்த தோழர்களால் இந்தப் புதிய போக்கைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. “இதெல்லாம் முதலாளித்துவம், என்.ஜி.ஓ” என்பதைத் தவிர அவர்களிடமிருந்து எனக்கு மேலதிக பதில்கள் கிடைப்பதாக இல்லை. இலங்கை – இந்தியச் சமூகங்களை வர்க்கச் சமூகங்கள் என வரையறுப்பதைக் காட்டிலும் சாதியச் சமூகங்கள் என வரையறுப்பதே சரியானது என எனக்கும் தோன்றியது. மேலிருந்து அதிகாரம் செலுத்தப்படும் கட்சி வடிவத்திற்கு எங்களது கட்சியே சாலப் பொருத்தமான உதாரணமாக இருந்தது. கட்சி அதிகாரம் மையத்திடம் குவிக்கப்பட்டு விளிம்புகள் வெறும் போராட்டப் பண்டங்களாகப் பார்க்கப்படுவதாக எனக்குத் தோன்றியது. இப்படிப் பல பல தோன்றிக்கொண்டேயிருந்தன. நான் கட்சியிலிருந்து மெல்ல மெல்ல விலகிச் செல்லத் தொடங்கினேன். அதுகுறித்துக் கட்சித் தோழர்களுக்கும் எந்தக் கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் தினந்தோறும் உச்சாடனம் செய்யும் திரிபுவாதம், கலைப்புவாதம் போன்ற சொற்களுக்குத் தக்க உதாரணத்தைக் காட்ட ரஷ்யாவிலோ, சீனாவிலோ அல்லாமல் கண்முன்னேயே ஒருவன் கிடைத்துவிட்டான் என்பதால் அவர்களும் உற்சாகமடைந்திருப்பார்கள் என்பதே உண்மை. இன்றுவரை அவர்கள் என்னை எங்கேயாவது சந்திக்கும்போது, அவர்களது கண்களில் தெரிவது ஏளனமா அல்லது என்மீதான பரிதாபமா எனக் கண்டுபிடிக்கத் தெரியாமல் நான் திணறிக்கொண்டிருக்கிறேன்.

கட்சியுடனான என்னுடைய இந்த ஊசலாட்ட நிலை நீடிக்கும்போது, மனோ என்னைத் தொடர்புகொண்டு புதிதாகத் தொடங்கப்படவிருக்கும் ‘அம்மா’ இதழுக்குச் சிறுகதையொன்று தருமாறு கேட்டார். தோழர். சபாலிங்கம் கொல்லப்பட்டதற்குப் பின்பாக பிரான்ஸிலிருந்து வெளியான முதல் இலக்கிய இதழ் அம்மாவே. 1997-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதலாவது ‘அம்மா’ இதழில் முதலாவது கதையாக என்னுடைய ‘எலிவேட்டை’ கதை வெளியாகியது. அந்தக் கதையைத்தான் என்னுடைய முதலாவது கதையாக நான் கருதுகிறேன். வெளிவரயிருக்கும் தொகுப்பிலும் அதுவே முதற்கதை.

அந்த வருடம் நான்கு கதைகள் எழுதினேன். மூன்று கதைகள் ‘அம்மா’வில் வெளியாகின. மூன்றாவது கதையான ‘மைசூர் ராசா’வில் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாகக் கட்சியின் மீதே கைவைத்துவிட்டேன். அத்தோடு கட்சியுடனான எனது கடைசி இழையும் அறுந்துபோயிற்று.

நான்காவது கதையான ‘தேவதை சொன்ன கதை’ 1997 செப்டெம்பரில் இலக்கியச் சந்திப்பு மலரான ‘இனியும் சூல் கொள்’ளில் வெளியானது. இந்தக் கதையைக் கேட்டு வந்தபோதுதான் சுகன் எனக்கு நண்பரானார். நவீன இலக்கியப் பரப்பில் எழுதுவதற்கு என்னைக் கூட்டி வந்தவர் மனோ என்றால், என்னுடன் கூடவே வந்தவர் சுகன். எங்களது நட்பு அடுத்த இருபது வருடங்களுக்கு நீடித்தது. இருவரும் இணைந்து ஏகப்பட்ட வேலைகளைச் செய்திருக்கிறோம். ‘சனதருமபோதினி’, ‘கறுப்பு’ ஆகிய இரு தொகுப்புகளும் நற்சாட்சி.

‘தேவதை சொன்ன கதை’யை எழுதி நான் இலக்கியச் சந்திப்புக் குழுவினரிடம் கையளித்தேன். ஒருநாள், இலக்கியச் சந்திப்புக் குழுவை வந்து சந்திக்குமாறு எனக்கு அழைப்பு வந்தது. அந்தக் கதை குறித்து என்னிடம் இலக்கியச் சந்திப்புக் குழுவிலிருந்த சிலர் அரசியல் கேள்விகள் கேட்டார்கள். அந்தக் கதையில் என்னுடைய மையப்புள்ளி பெண் போராளிகளைப் பற்றியதாக இருந்தது. வியட்நாம் விடுதலைப் போரில் பங்கெடுத்த தீரமான பெண் போராளிகள் பிற்பாலத்தில் பெண் அடிமைத்தனத்தில் சிக்குண்டு உழன்றதைச் சித்திரித்திருந்தேன். ஈழப் போராட்டத்தில் அரசியல்ரீதியான புரிதலின்றி வெறுமனே ஆயுதப் போராளிகளாகப் பெண்கள் இயங்கினால், போரின் முடிவில் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்படும்போது, பெண்ணடிமைச் சமூகத்திற்குள் அவர்களும் சிக்கிக்கொள்வார்கள் என இலக்கியச் சந்திப்புக் குழுவுக்கு விளக்கமளித்தேன். ஒரு கதையை எழுதினால் அதற்கு இவ்வாறான அழைப்புகளும் விசாரணைகளும் விளக்கங்களும் இருந்த காலமொன்று இருந்தது. புலம்பெயர் இலக்கியச் சூழலில் குட்டி இலக்கிய பீடங்களும் அரைகுறை அரசியல் ஞானிகளும் கோலோச்சிய காலங்களவை. அதை உடைக்க வேண்டும் என்பதும் ஓர் எழுத்துக் கலைஞனாக எனது கனவுகளில் ஒன்றாகயிருந்தது. பின்வந்த காலங்களில், இலக்கியச் சந்திப்பு மலர்களுக்கு நான் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட தருணங்களில் இவ்வாறான ‘விசர்’ வேலைகளைச் செய்ய நான் யாரையும் அனுமதிப்பதில்லை.

கலைஞர்களுக்கு அரசியல்வாதிகள் தீர்ப்பிடக்கூடாது. நீண்டகாலமாக இந்தப் பரிதாபச் சூழலுக்குள் ஈழ- புலம்பெயர் இலக்கியம் சிக்கிக்கிடந்தது. 2009-க்குப் பின்பு இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டாலும், பல எழுத்தாளர்களுக்கு இன்னும் விடியவேயில்லை. ‘எதிர்ப்படும் ஒவ்வொருபவரின் கையையும் நக்குபவன்’ என்ற பாலஸ்தீனக் கவிதை வரிகள் இவர்களுக்கும் பொருந்தும்.

1998-இல் தமிழகம் சென்றேன். அப்போது தமிழகத்திலிருந்த எந்த எழுத்தாளரும் எனக்கு அறிமுகமில்லை. என்னையும் யாருக்குமே தெரியாது. கையில் அ.மார்க்ஸின் முகவரியிருந்தது. நேராகத் தஞ்சாவூருக்குச் சென்று அதிகாலையில் அவரது வீட்டுக் கதவைத் தட்டினேன். யாரென்றே தெரியாத ஓர் ஈழத்து இளைஞனை முகமலர்ச்சியோடு வரவேற்று அன்று முழுவதும் உரையாடினார்.

அதுவரையான எனது தடுமாற்றங்களுக்கும் அரசியல் ஊசலாட்டங்களுக்கும் அ.மார்க்ஸ் நல்லதொரு வழிகாட்டினார். அதாவது தடுமாற்றங்களோடும் ஊசலாட்டத்தோடும் இருப்பதே நல்லதென்றார். உறுதியான கோட்பாடுகள், கெட்டியான கட்சி வடிவங்கள், தத்துவங்கள் எல்லாமே பெருங்கதையாடல்கள் என்றார்.
இப்போது நிதானித்துப் பார்க்கையில் ஒன்று தெரிகிறது. அதாவது, அ.மார்க்ஸ் எனக்குப் புதிய திசை எதையும் காட்டவில்லை. மாறாக, சிறுவயதிலிருந்தே என்னிலிருந்த மீறல்தன்மை, குழப்படித்தனம், கோணங்கித்தனம், பகடிப் பேச்சு எல்லாவற்றையும் நல்லது என எனக்கு அவர் அறியத் தந்தார். அதிகாரத்தைக் கேள்வி கேட்கப் பகடி ஒரு கூரிய ஆயுதமென்றார்.

அ.மார்ஸின் வழியாகத்தான் நான் தந்தை பெரியாரை சரியான முறையில் அறிந்துகொண்டேன். நாம் அறமென நம்பியிருந்ததைப் பெரியார் அறமில்லை என்றார். கற்றுக்கொள்ளல் என்பது வெளியிலிருப்பதை நம்முள்ளே திணிப்பதில்லை. மாறாக நம்முள்ளே இருப்பதை வெளியேற்றுவதே கற்றல் என்றார். நிறுவப்பட்ட இலக்கியத்தை, பண்பாட்டை, கலாசாரத்தை, அறத்தைக் கவிழ்த்துப்போடு என்றார்.

இன்றைய உலகச் சூழலில், ஒவ்வொரு தனிமனிதரின் மீதான அரசு இயந்திரத்தின் நெருக்கமான கண்காணிப்புக்குள், பெரு நிறுவனங்களின் அதிகார வலைக்குள் என்னைப் போன்ற தனிமனிதனால் இவ்வாறு கண்டபடியெல்லாம் கவிழ்த்துப்போட முடியாது. நானும் எண்ணற்ற சமரசங்களுடன்தான் வாழ்க்கையை ஓட்டியபடியிருக்கிறேன். ஆனால், நிஜ வாழ்க்கையில் என்னால் கவிழ்த்துப் போட முடியாதவற்றை எனது கற்பனைகளில் உருவாகும் சிறுகதைகள், நாவல்களின் மூலமாக என்னால் கவிழ்த்துப்போட முடியும். மனித உயிரிக்கு வாய்த்த ஆற்றல்களிலெல்லாம் ஆகச் சிறந்த ஆற்றல் கற்பனையே என்றுதான் நான் கருதுகிறேன்.

நிஜ வாழ்வில் சாதிக்க முடியாத சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் இலக்கியக் கதைகளின் வழியே என்னால் மனித மனங்களில் தொற்ற வைக்க முடியும். எனவேதான், வெளிவரயிருக்கும் என்னுடைய ஒட்டுமொத்தச் சிறுகதைத் தொகுப்பின் முதற்பக்கத்தில் நயோமி கிலெய்னின் இந்தச் சொற்களை நான் குறித்துக் காட்டியிருக்கிறேன்.

“இந்த உலகை மாற்றுவதற்கு நீங்கள் கதைகளை மாற்றியாக வேண்டும்.”

[6 டிசம்பர் 2024 – சென்னை]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *