கூடி அழுத குரல்!

கட்டுரைகள்

மூத்த ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹாரிசன் எழுதிய மதிப்புமிகு நூலான Still Counting the Dead (தமிழில் – ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் – காலச்சுவடு வெளியீடு) இப்போது மலையாளத்தில் சுனில் குமார், ஷஹர்பானு.சி.பி, அப்துல் கபீர் மூவராலும் மொழிபெயர்க்கப்பட்டு ஸம்கியயில் தீராத்த மரணங்கள் என்ற தலைப்போடு OTHER BOOKS வெளியீடாக வந்திருக்கிறது. மலையாள மொழிபெயர்ப்புக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரையின் தமிழ் வடிவம் இங்கே. முன்னுரை மொழிபெயர்ப்பு: ஏ.கெ. ரியாஸ் முகமது.

லங்கையில் நடைபெற்ற கொடிய யுத்தத்தால் அகதியாகி நாட்டை விட்டு வெளியேறிய நான் நெடிய முப்பத்து மூன்று வருடங்களுக்குப் பின்பாக, இந்த வருடத்தின் சனவரி மாதத்தில் இலங்கைக்குத் திரும்பியிருந்தேன்.

நாற்பது வருடங்களுக்குப் பின்பாகச் சீராக இயங்கத் தொடங்கியிருக்கும் யாழ்ப்பாணம் ‘பலாலி’ சர்வதேச விமான நிலையத்தில், என்னைச் சென்னையிலிருந்து சுமந்து சென்ற சிறிய விமானம் இறங்கிக்கொண்டிருக்கும் போதே, விமானத்தின் சிறிய சன்னல் வழியாகக் கண்ணுக்கெட்டிய தூரத்திலெல்லாம் பரந்து விரிந்த கிடந்த இராணுவ முகாம்களைக் கண்டதும் என்னுடைய இருதயம் இறுகிக்கொண்டிருந்தது. விமான நிலையத்திலிருந்து வெளியேறிய நான், என்னுடைய எண்பத்தியிரண்டு வயதுத் தாயார் தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ‘அச்சுவேலி’ என்ற கிராமத்தை நோக்கிச் சென்ற வழியெங்கும் இராணுவம் வலுக்கட்டாயமாக மக்களை வெளியேற்றிய கிராமங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. முன்னொரு காலத்தில் மக்கள் செறிவாக குடியிருந்த அந்த வளமான செம்மண் விவசாயக் கிராமங்களில் இப்போது இராணுவத்தினர் யுத்த டாங்கிகளோடு நிலைகொண்டிருக்கிறார்கள். பாரம்பரிய யாழ்ப்பாணப் பாணியில் கட்டப்பட்டிருந்த மாளிகை போன்ற பெரிய வீடுகள் இப்போது இராணுவக் குடியிருப்புகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. எல்லா இடங்களிலும் இராணுவத்தினர் சர்வ சாதாரணமாக ஆயுதங்களுடன் உலாவிக்கொண்டிருக்கிறார்கள். போரின் இராட்சதச் சுவடுகள் என் நிலமெங்கும் இன்னும் ஆழப் பதிந்தேயுள்ளன.

மறுநாள் காலையில், நான் பிறந்து வளர்ந்த ஊரான ‘அல்லைப்பிட்டி’க்குத் தனியாகச் சென்றேன். ஊருக்குள் நுழையும் வாயிலில், கிறிஸ்தவரான என்னுடைய அப்பா உருவாக்கிய சிறிய சைவக் கோயிலில் காவல் தெய்வமான வைரவர் இன்னும் இருக்கிறார். அதன் அருகே இராணுவ முகாம் உருவாகியிருக்கிறது. நான் கால்நடையாகவே ஊருக்குள் நுழைந்தேன். மூன்று தசாப்தங்களுக்குப் பிறகாக என்னுடைய சொந்த ஊருக்குள் நுழைந்த என்னை வரவேற்கப் பட்டினியால் வற்றிய தெருநாய்களைத் தவிர வேறு யாருமே இருக்கவில்லை. நாய்களின் கூட்டான ஊளைகளிடையே நான் முன்னோக்கி நடந்தேன்.

ஊரை முழுவதுமாகவே கால் நடையாகச் சுற்றிவந்து, என்னுடைய பழைய நண்பர்களில் ஒரிருவரை மட்டுமே கண்டு பிடித்தேன். மற்றைய நண்பர்களில் ஒரு பகுதியினர் ஊரிலிருந்து நிரந்தரமாகவே வெளியேறிவிட்டார்கள். மறு பகுதியினர் யுத்தத்திற்குள் சிக்கிக் கொல்லப்பட்டுவிட்டார்கள். இலங்கைப் படையினரால் மூன்று தடவைகள் கூட்டுப் படுகொலைக்கு உள்ளாகிய என்னுடைய ஊர் அமைதியாகச் சுடுகாடு போலக் கிடக்கிறது. கிராமத்தைச் சூழவர படையினர் நிலைகொண்டுள்ளார்கள்.

மறுநாள் காலையில், மாபெரும் தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்த வன்னி நிலத்தைக் காண்பதற்காகப் புறப்பட்டுச் சென்றேன். வழியெங்கும் கைவிடப்பட்ட ஊர்களுக்கு நடுவே பெரும் இராணுவ முகாம்களே இருக்கின்றன. அவற்றின் உச்சியில் வெற்றிக்கொடிகள் பறந்துகொண்டிருக்கின்றன. வழியில் எதிர்ப்பட்ட தமிழ் விவசாயிகள் வற்றிய தேகங்களும் இருண்ட கண்களுமாக என்னைக் கடந்தார்கள். யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக இருந்த கிளிநொச்சி நகரத்தில், கவிஞர் கருணாகரனின் வீட்டில் நான் இருந்தபோதுதான், இந்த மலையாள மொழிபெயர்ப்பு நூலுக்கு முன்னுரை கேட்டு, என்னைத் தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டார்கள். போரினால் சிதைக்கப்பட்ட அந்த நிலத்தில் இருந்து பிரான்ஸிஸ் ஹாரிசனின் இந்த நூலை நான் நினைவு மீட்டினேன்.

இந்நூல் பத்தாண்டுகளுக்கு முன்பாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட போதே, நான் நூலைப் படித்திருந்தேன். நான் இலங்கையிலிருந்து சென்னை திரும்பியதும், சென்ற ஆண்டு வெளியாகிய இந்நூலின் இரண்டாம் பதிப்பைப் படிக்கத் தொடங்கினேன். இரண்டாம் பதிப்பில் புதிதாக இரண்டு அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த பதிப்பு வரும்போது, இன்னும் சில அத்தியாயங்கள் புதிதாகச் சேர்க்கப்படவும் கூடும். ஏனெனில், பிரான்ஸிஸ் ஹாரிசன் மேலும் புதிய சாட்சியங்களைக் கண்டுபிடிக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது. வெளியுலகத்திற்குத் தெரியாத பல்லாயிரக்கணக்கான இரக்கத்திற்குரிய சாட்சிகள் இன்னும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்தே சிங்களப் பேரினவாத அரசாங்கங்கள் தீவின் சிறுபான்மை இனமான தமிழ் மக்கள் மீது இனவெறிப் படுகொலைகளை நடத்தத் தொடங்கி, 2009 மே மாதத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை இரத்தக் கடலில் மூழ்கடித்தார்கள். கடைசிப் போரின் போது, எத்தனை பேர்கள் கொல்லப்பட்டார்கள், காணாமலாக்கப்பட்டார்கள் என்பதற்கு இப்போதுவரை எவரிடமும் துல்லியமான கணக்குகள் இல்லை. பிரான்ஸிஸ் ஹாரிசன் குறிப்பிடுவது போன்று ‘அந்தக் கடைசி மாதப் போரில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றி அனைவரும் ஒருமித்து ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பதிவு எந்தக் காலத்திலுமே சாத்தியமில்லை’ என்பதுவே துயரமான உண்மையாகும்.

ஏனெனில், இனப்படுகொலையை முழு வீச்சில் நடத்துவதற்கு முன்பாகவே இலங்கை அரசானது அய். நா. பணியாளர்களையும், செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அனைத்துத் தொண்டு நிறுவனங்களையும், வெளிநாட்டுச் செய்தியாளர்களையும் போர் நிலத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டது. போரின் நேரடிச் சாட்சியங்களில் பலர் மண்ணுக்குள் புதையுண்டு போய்விட்டார்கள். உண்மைகளைத் தோண்டியெடுத்து வெளிக்கொணர முயன்ற ஊடகவியலாளர்கள் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். இப்போது உயிருடன் இருக்கும் சாட்சியங்கள் போரின் ஒரு துண்டு உண்மையை மட்டுமே அறிவார்கள். முழுமையான உண்மை எக்காலத்திலும் வெளியே வராதவாறு மண்ணுக்குள் புதைக்கப்பட்டுவிட்டது என்றே கருத வேண்டியுள்ளது. உண்மையின் ஒரு துண்டு வெளிச்சத்தை பிரான்ஸிஸ் ஹாரிசன் இந்நூல் வழியாக வெளியுலகத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

இந்த உண்மையின் வெளிச்சத்தை தன்னுடைய இரத்தம் படிந்த வலிய கரங்களால் பொத்தி மறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்தது. இனப்படுகொலையையும் இராணுவத்தின் போர்க் குற்றங்களையும் மறைத்துவிடுவதற்கு அது உலகளாவிய பெரும் பரப்புரையை நடத்தியது. தன்னுடைய அதிகாரிகளை உலகம் முழுவதும் அனுப்பித் தன்னை நியாயப்படுத்த முயன்றது. தன்னை நியாயப்படுத்துவதற்காகத் தொழில்முறை சார்ந்த, நிபுணத்துவம் வாய்ந்த வெளிநாட்டுப் பிரச்சார நிறுவனங்களை மில்லியன் கணக்கான டொலர்கள் செலவில் வாடகைக்கு அமர்த்தியது. அரசாங்கத்தின் இந்தக் கேடு கெட்ட முயற்சிகளை அய்.நா உண்மையிலேயே வாய் பொத்தி மவுனமாக அங்கீகரித்தே நிற்கிறது. உலகின் பல நாடுகள் இந்த உண்மையை மறைப்பதற்கும் போர்க் குற்றங்களிலிருந்து படையினரைப் பாதுகாக்கவும் இலங்கை அரசுக்குத் துணை நின்றன. இப்போது தன்னுடைய முயற்சியில் இலங்கை அரசு முழுமையான வெற்றியைச் சாதித்துவிட்டது. தமிழ் மக்கள் இன்னொரு முறை அமைதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் சர்வதேசச் சமூகத்திடமிருந்து நீதி கிடைக்கும் என வீணாகக் காத்திருந்தார்கள்.

நடந்து முடிந்த போரை ‘பயங்கரவாத ஒழிப்புக்கான வெற்றிகரமான போர்’ என இலங்கை அரசு சொல்கிறது. தமிழ்த் தேசியவாதிகளோ ‘ஒரு வீரம் செறிந்த விடுதலைப் போராட்டம் அந்நிய நாடுகளின் துணையுடன் இலங்கை அரசால் கொடூரமான வழியில் தோற்கடிக்கப்பட்டுள்ளது’ என அறிக்கையிடுகிறார்கள். ஆனால், இந்த இரு பெரும் அழிவுச் சக்திகளிடையே சிக்கியிருந்த அப்பாவிச் சனங்களின் கதைகளையே நமக்கு முன் இரத்தமும் நாற்றமுமாக பிரான்ஸிஸ் ஹாரிசன் முன்வைத்துள்ளார். போர் புரிந்த எவரின் பக்கமும் நின்று அவர் பேசவில்லை. மேற்கு நாடுகளின் போலி மனிதாபிமானம் சொட்டும் கடிவாளப் பார்வையும் அவரிடமில்லை. இலங்கைப் போரைக் குறித்து ஒரு நூலை எழுதி வெளியிட வேண்டுமென்ற ஆர்வக்கோளாறுத்தனமும் அவசரமும் அவரிடமில்லை. நூலை எழுதிவிட்டு விருதுகளுக்காகவும் பாராட்டுக்களுக்காவும் அவர் காத்திருக்கவுமில்லை. அவர் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கோரி இப்போதுவரை சர்வதேச அரங்குகளில் உரக்கப் பேசிக்கொண்டிருக்கிறார். போரால் வஞ்சிக்கப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட, எல்லோராலும் கைவிடப்பட்ட மக்களோடு பிரான்ஸிஸ் ஹாரிசன் கூடி அழுது கண்ணீரைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அந்த ஈரம் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் கசிகிறது.

இலங்கை அரசு கடைசிப் போரின் போது நடத்தியது திட்டமிட்ட இன அழிப்பு மனிதப் படுகொலையே என்பதை மதிப்புறு ஆவணங்கள், ஆதாரங்கள் வழியாக பிரான்ஸிஸ் ஹாரிசன் தெளிவாக இந்நூலில் விளக்கியுள்ளார். இந்தப் படுகொலைகளை இலங்கை அரசு நிகழ்த்திய போது, எவ்வாறு உலக நாடுகள் பலவும் இலங்கை அரசுக்கு உறுதுணையாக நின்றன என்பதையும் அவர் நிரூபிக்கிறார். கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களின் அழுகுரலுக்கு இந்த உலகமே செவிகளைப் பொத்திக்கொண்டிருந்தது. ருவண்டாவிலும் யூகோஸ்லாவியா உள்நாட்டுப் போரிலும் விழித்தெழுந்த உலகத்தின் மனச்சாட்சி இலங்கையில் மவுனமாக நின்றதை விசனத்தோடு பிரான்ஸிஸ் ஹாரிசன் விசாரணை செய்துள்ளார்.

இந்தப் பேரழிவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் இன்னொரு காரணம் என்பதையும் பிரான்ஸிஸ் ஹாரிசன் ஆதாரங்களோடு நிரூபித்திருக்கிறார். இறுதி யுத்தத்தின் போது, புலிகள் இலட்சக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகவும் மனிதக் கேடயங்களாகவும் வலுக்கட்டாயமாக வைத்திருந்தார்கள் என்பதை இந்நூல் போதியளவு சாட்சியங்களோடு விளக்குகிறது. புலிகள் இயக்கத்தின் ஈவு இரக்கமற்ற தன்மையையும் அவர்கள் எவ்வாறு குழந்தைகளைக் கட்டாயப்படுத்தியும் கடத்திச் சென்றும் தங்களது படையில் சேர்த்துச் சாவுக்குள் தள்ளிவிட்டார்கள் என்பதையும் நமது மனம் பரிதவிக்க பிரான்ஸிஸ் ஹாரிசன் சொல்லிச் செல்கிறார். உண்மையில், தமிழ் மக்கள் கொத்தக் கொத்தாகாக அரச படையினரால் கொல்லப்படுவதைப் புலிகள் விரும்பினார்கள்; அவ்வாறு ஒரு பேரழிவு நடந்தால் சர்வதேசச் சமூகம் தலையிட்டுப் போரை நிறுத்தும் என்று அவர்கள் வஞ்சகமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள் என்பதை இந்நூலில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் தலைவர் புலித்தேவனின் பேச்சை ஆதாரமாகக் காட்டி பிரான்ஸிஸ் ஹாரிசன் சொல்வதைப் படிக்கும்போது மனச்சாட்சி உள்ள எவராலும் பதைபதைக்காமல் இருக்கவே முடியாது.

புலம் பெயர்ந்து வாழும் புலிகளின் ஆதரவாளர்களது ஆழ் மனதிற்கு உண்மைகள் தெரிந்தாலும், அவர்கள் வீம்பாகவும் அநீதியாகவும் புலிகளை ஆதரித்து நின்றார்கள் என பிரான்ஸிஸ் ஹாரிசன் சொல்லிப் புலம் பெயர்ந்த தமிழர்களைச் சாடியுமிருக்கிறார். புலிகள் குறித்து இத்தகைய விமர்சனங்களைத் தமிழர்களும் வைத்திருக்கிறார்கள். அந்த விமர்சகர்களைத் துரோகிகள் என முத்திரை குத்திக் கொந்தளிக்கும் புலி ஆதரவாளர்கள் பிரான்ஸிஸ் ஹாரிசனின் நூலை மவுனமாகக் கடக்கிறார்கள். ஏனெனில் பிரான்ஸிஸ் ஹாரிசனிடம் இவர்களது துரோகிப் பட்டம் செல்லுபடியாகாது.

இலங்கையில் நடந்த மனிதவுரிமை மீறல்களைக் குறித்து மிக அரிதாகவே வெளிநாட்டினர் நேர்மையான பதிவுகளைச் செய்துள்ளனர். நேர்மையான பதிவு எனில் நிச்சயமாகவே இலங்கை அரசின் போர்க் குற்றங்களையும் புலிகளின் போர்க் குற்றங்களையும் சேர்த்தே அந்தப் பதிவுகள் அமையும். இந்த நேர்மையான பதிவுகளை எதிர்கொள்ள இலங்கை அரசு மட்டுமல்லாமல் புலிகளின் ஆதரவாளர்களும் தமிழ்த் தேசிய வெறியர்களும் கூட ஒரு மொண்ணை ஆயுதத்தைக் கைகளில் எடுப்பார்கள். ‘இது மேற்கத்தையப் பார்வை’ அல்லது ‘அந்நிய சக்திகளது சதி’ என்பதே அந்த மொண்ணை ஆயுதம். அவர்களது இத்தகைய சத்தற்ற குற்றச்சாட்டை விளக்குவதற்கோ நிறுவிக்காட்டுவதற்கோ அவர்கள் முயலமாட்டார்கள். அது முடியவும் முடியாது. ஏனெனில், உண்மை எல்லாவற்றிலும் சக்தி வாய்ந்தது.

இந்த உண்மையை மிகுந்த சிரத்தையுடன் இந்நூலில் பிரான்ஸிஸ் ஹாரிசன் கையாண்டுள்ளார். போரின் வலி மிகுந்த சாட்சியங்களைச் சந்தித்து உரையாடியும், அசலான ஆவணங்களைத் திரட்டியும் அவர் இந்நூலைப் படைத்துள்ளார். உண்மையான சனநாயகச் சக்திகளும், இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத் தமிழர்களும், போரினால் வஞ்சிக்கப்பட்ட அனைத்து இலங்கை மக்களும் இந்தக் கைமாறு இல்லாப் பணிக்காக பிரான்ஸிஸ் ஹாரிசன் அம்மையாருக்கு நன்றியைக் கண்ணீருடன் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

-ஷோபாசக்தி
10.02.2023 – சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *