கலா கலகக்காரர்

கட்டுரைகள்

ன்னுடைய பதினான்காவது வயதில், நான் முதன்முறையாக மு.நித்தியானந்தன் என்ற பெயரைக் கேள்விப்பட்டேன். இலக்கியவாதியாக அல்லாமல், ஒரு விடுதலைச் செயற்பாட்டாளராகவே அவர் எனக்குப் பத்திரிகைகள் வாயிலாக அறிமுகமானார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான அவரது உறவாலும், புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலங்களிலே அவர்களுக்கு உற்ற துணையாகவிருந்ததாலும் நித்தியானந்தன் இலங்கை அரச படையினரால் கைது செய்யப்பட்டு, கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர் என்பதை வாரத்திற்கு ஒருதடவையாவது பத்திரிகைகள் எழுதிக்கொண்டேயிருந்தன. வெலிகடைச் சிறையில் நடந்த படுகொலைகளின் போது, ஆயுதமேந்திய கொலையாளிகளை வெற்றுக் கரங்களால் எதிர்த்துத் தீரத்துடன் போராடி உயிர் தப்பியவர்களில் நித்தியானந்தனும் ஒருவர். பின்பு, மட்டக்களப்புச் சிறையுடைப்பின் மூலமாக அவர் தப்பிச் சென்றார். இந்தச் செய்திகளையெல்லாம் நான் விடாமல் பின்தொடர்ந்தவாறே இருந்தேன். இந்த ஞாபகங்களே என்னுடைய ‘ம்’ நாவல் உருவாக அடிப்படைக் காரணியாக இருந்தது.

நித்தியானந்தன் புலிகள் இயக்கத்தில் செயற்பட்டதற்காக, பலராலும் விமர்சிக்கப்படுபவர். “அந்தக் காலகட்டத்தில் சமூக உணர்வுடைய எவரும் ஒரு விடுதலை இயக்கத்தில் இணையாமல் இருந்திருக்க முடியாது” என்று ஒருமுறை நேர்ப் பேச்சில் என்னிடம் நித்தியானந்தன் சொல்லியிருப்பதை, நானும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அதேவேளையில், அவரே அந்த இயக்கத்தின் கடுமையான விமர்சகராகயிருந்தார் என்பதை இவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். அதனாலேயே அவர் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது என்பதை என் போன்ற உள்வீட்டுப் பிள்ளைகள் நன்றாகவே அறிவார்கள். பிற்காலத்தில் வெளிப்படையாகவே எத்தனையெத்தனையோ கட்டுரைகளிலும், கூட்டங்களிலும் நித்தியானந்தன் புலிகளுக்கு எதிரான தன்னுடைய உறுதியான விமர்சனத்தை வைத்திருக்கிறார்.

மு. நித்தியானந்தன் இலங்கையிலேயே தன்னுடைய இலக்கிய விமர்சன எழுத்துகளைத் தொடக்கிவிட்டார் எனினும், அவர் புலம் பெயர்ந்த பின்பாக அவருடைய வீச்சு மேலும் விரிவடைந்தது என்றே கருதுகிறேன். புகலிடம் கொடுத்த அளப்பெரிய எழுத்துச் சுதந்திரம் இதற்கு ஒரு காரணமாகயிருக்கலாம்.
பாரிஸ் புலம் பெயர் இலக்கியத்திற்கு மு. நித்தியானந்தன் மிகப் பெரும் உந்து சக்தியாக இருந்தார் என்பதை, பாரிஸின் முக்கிய இலக்கியச் செயற்பாட்டாளர்களான கலைச்செல்வன், கலாமோகன், சுகன் போன்ற தோழர்கள் அடிக்கடி என்னிடம் சொல்லியதுண்டு. இந்தத் தோழர்களிடம் மு. நித்தியானந்தனின் ஆழமான பாதிப்பு உண்டென்பதைப் பலவேறு உரையாடல்களில் நான் கவனித்திருக்கிறேன்.

ஓர் இலக்கியப் பிரதியைத் தனக்குப் பிடித்துவிட்டால், எழுதியவரைத் தேடிச் சென்று எழுத்தாளரே கூச்சமடையுமளவுக்குப் பாராட்டித் தள்ளிவிடுபவர் நித்தியானந்தன். அதே போன்று ஒரு பிரதியைப் பிடிக்காவிட்டால் நாயே, பேயே என்று வெளிப்படையாகத் திட்டியும் தீர்த்துவிடுபவர் நித்தியானந்தன். இந்த இரண்டுவகையான விமர்சனங்களையும் அவர் என்மீதும் வைத்துள்ளார். அவரளவிற்கு இலக்கிய அறிவுள்ள, கூர்மையான, வெளிப்படையான இன்னொரு இலக்கிய விமர்சகர் தற்காலத்தில் புலம் பெயர் இலக்கியத்தில் இல்லை என்பதை நான் உறுதியாகச் சொல்லத் தயங்கப் போவதில்லை.

தயவு செய்து இதைத்தான் புலம் பெயர் இலக்கிய விமர்சகர்கள் கவனிக்க வேண்டியிருக்கிறது. வெறுமனே நித்தியானந்தனின் இலக்கிய விமர்சன எள்ளல்களையும் நக்கல்களையும் பின்பற்றி அப்படியே நகலெடுப்பது ஆரோக்கியமானதல்ல. நித்தியானந்தனின் ஆழமான மொழி அறிவாலும், தொடர்ச்சியான இலக்கிய வாசிப்பாலும், சங்க இலக்கியம் தொட்டு இன்றைய நவீன இலக்கியம் வரையிலான செறிவான பரிச்சயத்தாலும், கூர்மையான அரசியல் அவதானங்களாலும் அவரது விமர்சன மொழி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே வெளிப்படும் எள்ளலும் கேலியும் வெறும் நக்கலல்ல. அது அசலான கலா கலகக் குரல்!

ஈழத்து அரசியலிலும், இலக்கியத்திலும் மலையகம் விளிம்பின் விளிம்பாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து முகிழ்த்த நித்தியானந்தனின் கலகக் குரல், இன்று ஒட்டுமொத்தத் தமிழ்ப் புலத்திலும் நிராகரிக்க முடியாத சக்தியாக வியாபித்துள்ளது. மலையகத் தமிழராக, சிறுபான்மை இனத்தவராக, அகதியாக அவர் எழுப்பும் கூர்மையான விமர்சனங்கள் நமக்குப் புதிய வெளிச்சத்தைக் காண்பிப்பவை. மலையக இலக்கியத்தைக் குறித்து எண்ணுக்கணக்கற்ற கட்டுரைகளை எழுதி, ஆதிக்கவாதிகளின் இலக்கிய மேட்டிமைத்தனத்திற்கு ஓயாமல் குடைச்சலைக் கொடுப்பவர் நித்தியானந்தன். மலையக இலக்கிய வரலாற்றை ஆய்வு செய்து அவர் எழுதிய ‘கூலித்தமிழ்’ நூல் மலையக இலக்கியத்தின் தோற்றுவாயையும் போக்கையும் சாதனைகளையும் தெளிந்து அறிக்கையிடும் மதிப்புறு ஆவணம்.

நம்மைப் பிடித்த பெருஞ் சாபமான தமிழ்க் குறுந் தேசியவாதத்தை மிகத் துணிச்சலாக எதிர்த்து நிற்பவர் நித்தியானந்தன். சாதியவாதிகளின் தந்திரமான சதிச் செயல்களைத் தன்னுடைய தர்க்கத்தால் உடைத்துக் காட்டுபவர் நித்தியானந்தன். யாழ் நூலகத் திறப்புவிழாப் பிரச்சினையை வெள்ளையடிக்க முனைந்த சாதிப் பற்றாளர்களைச் சாடி அவர் எழுதிய அண்மைக்காலப் பதிவுகள் அவரது ஓயாத போர்க்குணத்திற்குச் சான்றாகும்.

இலங்கையில் நிகழ்ந்த கொடிய யுத்தத்தாலும், இன அழிப்பாலும் நம்முடைய கல்விச் சமூகமே சீரழிந்து போயுள்ளது. எஞ்சியிருக்கும் அரிதான புலமையாளர்களில் நித்தியானந்தன் தலையானவர். இந்த எழுபத்தைந்து அகவையைக் கடந்தும், இதே துடிப்போடும் கலகக் குணத்தோடும் அவர் இயங்குவார் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. ஏனெனில் அவர் ‘சீஸன்’ இலக்கியவாதியோ போராளியோ அல்ல! இயல்பிலேயே கலக்கக்காரர். அதற்காக அவரது வாழ்வு முழுவதும் அவர் இழப்புகளைச் சந்தித்திருக்கிறார். இழப்பதற்குத் தயங்காதவனே போராளி! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஆசிரியர் சிறையில் கிடந்ததும், கொலையிலிருந்து தப்பித்ததும், தலைமறைவாகத் திரிந்ததும், ஏதிலியாக நாடோடியாக மாறியதும் ஒரு காவிய நாவலுக்கான வாழ்க்கைக் குறிப்புகள்.

கல்வியாளர்கள் வேறு, சிந்தனையாளர்கள் வேறு என்பார் அண்ணல் அம்பேத்கர். மு. நித்தியானந்தன் அவர்களுடைய சிந்தனைப் பள்ளியின் மாணவர்களில் ஒருவனாக அவரை வாழ்த்தி நிற்கின்றேன்.

(மு. நித்தியானந்தனின் 75-வது அகவையையொட்டி, ஏப்ரல் 2023-ல் வெளியிடப்பட்ட ‘நித்தியம்’ பவளவிழா மலரில் வெளியாகியது)

1 thought on “கலா கலகக்காரர்

  1. கலகக்கார சகோதரர் நித்யானந்தன் பற்றிய சிறப்பான வரைவு…ம். படித்து பிரமித்திருக்கிறேன்…வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *