கருங்குயில்

கதைகள்

ன்னுடைய வீட்டின் மதிற்சுவரில், ஏன் சுற்றுலாப் பயணிகளான வெள்ளைக்காரிகள் விழுந்து புரண்டு முத்தமிடுகிறார்கள் என்பது ரவிசங்கருக்குப் புரியவேயில்லை. மூன்று மாதங்களுக்கு முன்புதான் புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்த அந்த மதிற்சுவரில், இப்போது எண்ணிப் பார்த்தால் குறைந்தது நூறு லிப்ஸ்டிக் அடையாளங்களாவது இருக்கும். ஒரே நிறத்தில் அந்த அடையாளங்கள் பதிந்திருந்தால் கூட ஒருவேளை அதுவொரு அழகாக இருந்திருக்கக் கூடும். ஆனால், சிவப்பு, ஊதா, பச்சை, கருப்பு என எல்லா வண்ணங்களிலும் அந்தச் சுவரில் உதட்டு அடையாளங்கள் பதிந்து, குரங்கு அம்மைநோய் வந்தவனின் முகம் போல அந்தச் சுவர் அசிங்கமாகயிருந்தது. போதாததற்கு சிலர் சிறிய அட்டைகளிலோ, தாள்களிலோ துண்டுச் சீட்டுகளை எழுதி மதிற்சுவரின் மீது வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இதுபற்றி ரவிசங்கர் தனது எண்பது வயதான தந்தையாரிடம் கேட்டபோது “நான் என்ன செய்வது மகன்? நானும் வரும் வெள்ளைக்காரர்களை முடிந்தவரை துரத்தத்தான் பார்க்கிறேன்… ஆனால், நான் சற்றே கண்ணயரும் நேரத்தில் வந்து அசிங்கப்படுத்திவிட்டுப் போய்விடுகிறார்கள். சிலர் வீட்டுக்குள் உள்ளிடவே முயற்சித்தார்கள். நானும் உன்னுடைய அம்மாவும் கதவை மூடிவிட்டு உள்ளே இருந்துகொள்வோம். எதற்கும் நீ வரட்டும் என்றுதான் காத்திருந்தோம்… கண்டறியாத கொழும்பு” என்று கொஞ்சம் அலட்சியமாகத்தான் கிழவர் பதில் சொன்னார். மகன் இந்த வீட்டுக்குச் சம்பளம் இல்லாத காவல்காரர்களாகத் தன்னையும் கிழவியையும் வைத்திருக்கிறான் என்ற கடுப்பும் அவரது குரலிலிருந்தது.

இலண்டனில் ஏழெட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வைத்திருக்கும் முதலாளியான ரவிசங்கர் இணையத்தளமொன்றில், கொழும்பு நகரத்தின் வெள்ளவத்தைப் பகுதியில் 42-வது ஒழுங்கையில், 56-வது இலக்க வீடு விற்பனைக்குண்டு என்ற விளம்பரத்தைப் பார்த்துவிட்டுத்தான், இந்த வீட்டை ஆறு மாதங்களுக்கு முன்பு சகாய விலையில் வாங்கினான். அப்போது இந்த வீடு சிதைந்து பாழடைந்துதான் கிடந்தது. இலண்டன் பவுண்ட்ஸுகளாகக் கொட்டியிழைத்து, ரவிசங்கர் இந்த வீட்டைத் திருத்திப் பளிங்கு மாளிகையாக்கிவிட்டான். முன்பக்கத்து மதிற்சுவரையும் செப்பனிட்டு, வெள்ளையடித்து அதில் ஒரு துண்டு சலவைக் கல்லைப் பதித்து ‘ரவிவில்லா’ என்று பொன்னெழுத்துகளில் பொறித்தான். புளியங்கூடல் கிராமத்தில் கோயில் குளமென நிம்மதியாகயிருந்த பெற்றோரை வற்புறுத்தி அழைத்துவந்து, கொழும்பு வீட்டில் குடிவைத்துவிட்டு இலண்டன் சென்றவன், மூன்று மாதங்கள் கழித்து வீட்டைப் பார்க்கத் திரும்பிவந்தால், அது இந்த நிலையிலிருக்கிறது.

இப்போது ‘ரவிவில்லா’ என்ற பெயர் பதிக்கப்பட்டிருக்கும் மதிற்சுவரில் தொண்ணூற்றுச் சொச்ச ஆண்டுகளுக்கு முன்பாக, பறக்கும் கருங்குயில் வடிவத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிறிய பலகைத் துண்டில் மஞ்சள் வர்ணத்தால் பொறிக்கப்பட்டிருந்த பெயருக்கே இத்தனை முத்தங்களும் துண்டுச் சீட்டுகளும் வந்துகொண்டிருக்கின்றன என்பது ரவிசங்கருக்குத் தெரிய வந்தால், அவனுடைய அற்புதமான வியாபார மூளை வேகமாக இயங்கி, வாங்கிய விலையிலும் பத்து மடங்கு விலைக்கு இந்த வீட்டை விற்றுவிடும். இது மகாகவி ஒருவன் 1929-ல் வாடகைக்குக் குடியேறி, இரண்டு வருடங்கள் தங்கியிருந்த வீடு. தன்னுடைய இருபதாவது வயதிலேயே ‘இருபது காதல் கவிதைகளும் ஒரு கையறு பாடலும்’ என்ற நூலை வெளியிட்டு உலகத்தை மயக்கிய அந்த இளங்கவிஞன் இந்த வீட்டுக்குக் குடி வரும்போது, அவனுக்கு இருபத்தைந்து வயது. கொழும்பிலிருந்த கொன்ஸலேட் அலுவலகத்தில் பிரதிநிதியாக அவனுக்குப் பணி கிடைத்திருந்தது. அவனுடைய மிகப் புகழ்பெற்ற ‘Residencia en la tierra’ கவிதை நூலின் பெரும்பாலான பகுதிகளை, இந்த வீட்டின் மேற்கு அறையில் இலட்சத்தீவுக் கடலை நோக்கியிருக்கும் சாளரங்களுக்கு முன்னே அமர்ந்திருந்துதான் எழுதினான்.

தொங்கும் கருங்குயில் பலகையை அடையாளம் வைத்துத்தான் சம்பங்கி அந்த வீட்டை முதலில் அடையாளம் கண்டுபிடித்தாள். தந்தையார் முத்தான் அவளுக்கு வீட்டு அடையாளத்தை மட்டுமல்லாமல், எல்லாவற்றையுமே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுத்தார். காலையில் முதல் சூரிய வெளிச்சம் வரும்போதே அவள் அங்கே போய்விட வேண்டும். எப்படி அந்த வளவுக்குள் நுழைய வேண்டும்? பறக்கும் கருங்குயிலுக்கு அருகிலிருக்கும் ஒற்றை இரும்புக் கிறாதிப் படலையை ஓசைப்படாமல் திறந்து வளவுக்குள் நுழைந்தால், குரோட்டன் செடிகளுக்கு நடுவாக, வீட்டுக்கு இடதுபுறத்தில் ஓர் ஒற்றையடிப் பாதையிருக்கும். அந்தப் பாதையில் நடந்தால் வீட்டுக்குப் பின்புறத்தில், வீட்டிலிருந்து கொஞ்சத் தூரத்தில் மரப்பலகைகளால் கட்டப்பட்ட கழிவறை தனியாக இருக்கும். அங்கு மலம் கழிக்கும் வட்டத் துளையின் கீழே பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு வாளியை எடுத்துச் சென்று, நாலெட்டுத் தூரத்திலுள்ள கடலில் மலத்தைக் கொட்ட வேண்டும். கடலிலேயே வாளியைச் சுத்தமாக அலம்பிவிட்டு, மறுபடியும் அந்த வளவுக்குச் சென்று, கழிவறைத் துளையின் கீழே இரும்பு வாளியைச் சரியாகப் பொருத்தி வைத்துவிட வேண்டும். இதையெல்லாம் வேகமாகச் செய்ய வேண்டும். கழிவறைக் கதவருவே ஒரு சிறிய வெற்றுப் பால் டப்பா வைக்கப்பட்டிருக்கும். அதற்குள் எப்போதாவது சில சில்லறைக் காசுகள் கூலியாகப் போடப்பட்டிருக்கும். அந்த நாணயங்களைச் சம்பங்கி தொலைத்துவிடாமல், கவனமாகச் சேலைத் தலைப்பில் முடிந்து எடுத்துவர வேண்டும்.

இவ்வளவுக்கும், சம்பங்கி சிறுமியாக இருந்தபோது, தாயார் கந்தம்மாவோடு உதவிக்காக வேலைக்குச் சென்று வந்தவள்தான். ஆனாலும், முத்தான் திரும்பத் திரும்ப அவளுக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தார்:

“இவற்றில் எதையொன்றையும் நீ மறக்கக் கூடாது! முக்கியமாக அந்த வீட்டிலுள்ள வெள்ளைக்காரத் துரையைக் காண நேர்ந்தால் ‘குட் மார்னிங்’ என்று சொல்ல வேண்டும். சம்பங்கி எங்கே சொல்லு பார்ப்போம்! குட்….மார்னிங்…” என்று முத்தான் கேட்டபோது ‘எனக்குத் தெரியும்’ என்பது போல சம்பங்கி தலையை மெதுவாக ஆட்டினாளே தவிர வாயைத் திறந்து பேசினாளில்லை. அவள் வாயை அரிதிலும் அரிதாகத்தான் திறந்து பேசுவாள்.

சம்பங்கி பிறக்கும் போதே, மந்த புத்திக் குறைபாடோடு பிறந்தவள் என்பதைப் பெற்றோர் காலப்போக்கில் தெரிந்துகொண்டாலும், அது ஏதோ தெய்வ சாபமென்று அவர்கள் நினைத்திருந்தார்கள். அவளது புத்தியை ஒருநாள் தெய்வம் திருத்திவிடும் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். கந்தம்மா தெய்வங்களை நோக்கி அரற்றிக்கொண்டேயிருந்தார். சம்பங்கிக்குப் பின்பாகப் பிறந்த மூன்று குழந்தைகளையும் பால் குடி மறக்க முன்பே வாந்திபேதி கொண்டுபோய்விட்டது. தங்கியிருக்கும் தன்னுடைய ஒரே குழந்தைக்குப் புத்தி நேரானால் பொன்னியம்மன் கோயிலில் உப்பு, மிளகு எறிவதாகக் கந்தம்மா நேர்த்தி வைத்தார். கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலுக்குச் சென்று, குட்டி வெள்ளி நாக்கு வாங்கி வாசற்படியில் காணிக்கை வைத்தார். டச்சுக் கால்வாயில் இறங்கி அவரே கொய்த வெண்தாமரை மலர்களை மஹாபோதி விகாரையின் முன்னே வைத்தார்.

இந்தப் பதினேழு வயதுவரை சம்பங்கியின் குறைபாடு நீங்கவில்லை. போதாததற்கு அவள் வளர வளர அவளோடு சேர்ந்து மறதியும் வளர்ந்துகொண்டிருந்தது. முக்கியமான விஷயங்களைக் கூடச் சடுதியில் மறந்துவிடுகிறாள். அக்கம்பக்கத்தில் அவளை ‘அரணை’ என்று கேலி செய்வார்கள். இந்த குறைபாடுகளாலேயே அவளுக்கு மாப்பிள்ளை அமைவதும் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. முத்தானின் கூட்டாளியான கேசவய்யா, தான் சம்பங்கியை மணம் செய்ய விரும்புவதாகச் சாடைமாடையாக முத்தானிடம் பேச்சுக் கொடுக்காமலில்லை. மனைவியை இழந்தவரும் முடாக் குடிகாரருமான அந்தக் கிழவருக்குச் சம்பங்கியைக் கட்டிக்கொடுக்க முத்தான் விரும்பவில்லை. ஆரம்பத்தில், மகளைக் குணமாக்குமாறு தெய்வங்களிடம் கெஞ்சியும் அரற்றியும் பேசிக்கொண்டிருந்த தாயார் இப்போது தெய்வங்களைக் கேளாக் கேள்வி கேட்டுத் திட்டத் தொடங்கிவிட்டாரர். அந்தக் குடிசைக்குள் ஏதாவது பேச்சுச் சத்தம் கேட்டால், அது கந்தம்மா தெய்வத்திடம் ஏசிப் பேசுவதாக மட்டுமேயிருக்கும்.

சம்பங்கிக்கு யாரோடும் பேசப் பிடிக்காது. அவள் எப்போதும் தனிமையில் இருக்கவே விரும்பினாள். அவளுக்கு மாப்பிள்ளை அமையாததைப் பற்றி அவளுக்குத் துளியும் கவலையில்லை. அவளுக்கு இந்த உலகத்திலேயே கடலைத் தான் மிகவும் பிடித்திருந்தது. அவளது அம்மாயி “சிலோனுக்குக் கப்பல் ஏறும் போதுதான் நான் முதன் முதலில் கடலைக் கண்டேன்” எனச் சொல்வதை, சம்பங்கி சிறுவயதில் கேட்டபோது, கடலில்லாமல் எப்படியொரு ஊர் இருக்கக் கூடும் என்றெல்லாம் கவலையோடு யோசித்திருக்கிறாள். அவளுடைய பெரும்பாலான பொழுதுகள் கடற்கரையிலேயே ஒற்றையில் கழியும். கடலில் ஒரு மிகப் பெரிய கப்பல் தரைதட்டி ஒதுங்கிக் கிடக்கிறது. அதை நூறாண்டுகளுக்கு முந்தைய டச்சுக்காரர்களின் போர்க் கப்பல் எனச் சொல்கிறார்கள். அந்தக் கப்பலின் மீது சுருள்வளையமாகவும், கோபுர அமைப்பிலும், சிலவேளைகளில் விரிந்த மலர் இதழ்களின் வடிவிலும் பறவைக் கூட்டம் இறங்கும். அக்கூட்டம் மறுபடியும் மேலேறிப் பறக்கும் போது, இன்னொரு சித்திர வடிவமாகிப் பறக்கும். கரிய பறவைக் கூட்டமொன்று யானை வடிவில் எழுந்து பறந்ததைக் கூட சம்பங்கி பார்த்திருக்கிறாள். இந்தப் பறவை மாயத்தை அவள் கண்கள் விரியச் சலிப்பில்லாமல் பார்த்துக்கொண்டேயிருப்பாள்.

சம்பங்கி மெல்லத்தான் நடப்பாள். சாப்பிட உட்கார்ந்தால் ஒரு சிரட்டைக் கஞ்சியை ஒரு மணிநேரமாக ஊதி ஊதிக் குடித்துக்கொண்டிருப்பாள். எந்த வேலையையும் மெதுவான அசைவுகளுடன் தான் செய்வாள். அவளிடம் கட்டுவதற்கு ஒரேயொரு சேலைதான் இருந்தது. பொன்னிறக் கரையுடன் கூடிய அந்த நைந்துபோன சிவப்புச் சேலையைக் கந்தம்மாவுக்கு யாரோ கூலியாகக் கொடுத்திருந்தார்கள். அந்தச் சேலையைச் சம்பங்கி வேப்பங்கொட்டைத் தூளிட்டு ஒவ்வொரு நாளும் ஒருமணிநேரம் துவைப்பாள். சேலையை விரித்து மணலில் காய வைத்துவிட்டு, அதைச் சுற்றி சுற்றி வந்து சரியாகத் துவைத்திருக்கிறாளா எனப் பார்த்துக்கொண்டிருப்பாள். பாத்திரம் கழுவுவதானாலும் சாம்பலைப் போட்டுப் பொன் போலத் துலக்குவாள். அதைக் கையிலெடுத்துக் கண்களுக்கு நேராக வைத்துப் பார்த்து இரசிப்பாள். மெதுவாகச் செய்தாலும் அவளது வேலை சுத்தமாகவும் திருத்தமாகவுமிருக்கும்.

அவர்களது கடற்கரையோரக் குடியிருப்பு அமைந்திருந்த பம்பலவத்தயில் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் மட்டுமே அரசாங்கத்தால் குடியேற்றப்பட்டிருந்தார்கள். கடலிலே கலக்கும் பழைய டச்சுக் கால்வாய்க் கரையில் இருபது குடிசைகள் வரை அமைக்கப்பட்டிருந்தன. தகரக் கூரையால் குடிசையின் மேற்பகுதி அனலாகத் தகித்தால், கீழே தரை சேறும் சகதியுமாக இருக்கும். மழைக்காலமானால் டச்சுக் கால்வாய் நிறைந்து, குடிசைகளுக்குள் வெள்ளம் ஏறிவிடும். இந்தக் குடியிருப்பில் இருந்தவர்கள்தான் அய்ந்து மைல்கள் சுற்றளவு தூரத்திலிருந்த வீடுகளில் மலம் அள்ளினார்கள். தெருக்களைப் பெருக்கினார்கள். வீட்டில் வளர்ப்புப் பிராணிகள் இறந்தால் அவற்றை அகற்றுவதும் இவர்களது வேலையே. ஆண்களும் திருமணமான பெண்களும்தான் இந்த வேலைகளுக்குப் போவார்கள். பருவமடைந்த பெண்களை அனுப்புவதில்லை. ஆனாலும், சம்பங்கி கருங்குயில் வீட்டுக்கு வரவேண்டியிருந்தது.

கொம்பனித் தெருவில், கேசவய்யாவின் வற்புறுத்தலால் அதிகமாகக் குடித்த மதியமன்றே முத்தான் நோயில் விழுந்துவிட்டார். கேசவய்யாவும் நோயில் விழுந்தார். ‘கட்டுக்கம்பி’ என்று சொல்லப்படும் அந்த வடிசாராயம் வெறுமனே மதுசாரம்தான். அதற்குள் எலுமிச்சம் பழச் சாறைப் பிழிந்து குடிக்கும் வழக்கம் கேசவய்யாவுக்கு உண்டு. குடித்த வடிசாராயத்தில் ஏதோ கோளாறு இருந்திருக்க வேண்டும். முத்தான் மணலில் சாய்ந்துபோனார். அவரது இரத்தம் எல்லாம் சோற்றுக் கஞ்சிபோல வாயாலும் வயிற்றாலும் வெளியேறிக்கொண்டிருந்தது. அவரால் எழுந்து நிற்கவே முடியவில்லை. காலையில், அவர் ஆறு வீடுகளில் மல வாளிகளைச் சுத்தம் செய்து, தலையில் காவிச் செல்லும் தகரவாளியில் மலத்தைச் சேகரித்துக் கடலில் கொட்ட வேண்டும். ஒருநாள் வேலைக்குப் போகாவிட்டாலும் வீட்டுக்காரர்கள் சகிக்கமாட்டார்கள். புதிய ஆளை வேலைக்கு அமர்த்திவிடுவார்கள். இந்த நிலையில் தான், கொள்ளுப்பிட்டியில் முத்தான் வேலை செய்த அய்ந்து வீடுகளிலும் கந்தம்மா வேலைக்குப் போவதாக ஏற்பாடானது. கந்தம்மா அந்த வேலைகளை முடித்துக்கொண்டு, அவர் வேலை செய்யும் கறுவாத் தோட்ட வீடுகளுக்கு ஓட வேண்டும். எதிர்த் திசையில் வெள்ளவத்தையில் எஞ்சியிருக்கும் ஒரே வீட்டுக்குச் சம்பங்கி போக வேண்டும். கூலியாகக் கிடைக்கும் சல்லிக் காசுகளில் அரைக் காசு குறைந்தால் கூட அந்தக் குடும்பத்தால் சமாளிக்க முடியாது என்பதுதான் உண்மை.

சம்பங்கி வேலைக்குப் போவதைக் குடியிருப்பில் முடிந்தவரை ஒளிவுமறைவாக வைத்திருக்க வேண்டும் என்று அந்தக் குடும்பம் முடிவெடுத்தது. கன்னியை வேலைக்கு அனுப்புவதை அறிந்தால் அக்கம்பக்கத்திலிருந்து நொட்டைச் சொற்கள் விழும். அவளுக்கு மாப்பிள்ளை அமைவது இன்னும் சிரமமாகிவிடும். தந்தையார் சொல்லிக்கொடுத்த எந்த அடையாளத்தையும் மறந்துவிடக் கூடாதே என்ற பதைபதைப்பில், அன்றிரவு சம்பங்கிக்குத் தூக்கமே வரவில்லை.

அதிகாலையில், வெளிச்சம் வரமுன்பே குடியிருப்பிலிருந்து மெல்ல நழுவிய சம்பங்கி அடையாளங்களை நோக்கிக் கடற்கரையோரமாக மெதுவாக நடந்து சென்றாள். நடக்கும் போது, ஈர மணலில் முடிந்தவரை பாதங்களை ஆழப் பதித்து, மணலை அளைந்து செல்லும் பழக்கம் அவளிடமுண்டு. சம்பங்கி நல்ல உயரமும் மெலிந்த தோற்றமுமுள்ளவள். தேவைக்கு அதிகமாக ஓர் அவுன்ஸ் சதைகூட அவளுடலில் கிடையாது. அவள் தன்னுடைய நீளமான தலைமுடியை உச்சியில் பெரிய கொண்டையாகப் போட்டிருந்ததால், இன்னும் உயரமாகத் தெரிந்தாள். இரண்டு கைகளிலும் செப்பு வளையங்களைப் போட்டிருந்தாள். வாயின் இருபுறங்களிலுமிருந்த அழகிய தெற்றுப் பற்களை மூடியிருந்த தடித்த உதடுகளுக்கு மேலே, மூக்கின் இருபுறங்களிலும் அணிந்திருந்த கண்ணாடிக் கற்களாலான சிவப்பு மூக்குத்திகள் அவளின் முகத்தில் சிறு சுடர்களைப் போல ஒளிர்ந்துகொண்டிருக்கும். அந்தக் குடியிருப்பிலேயே சம்பங்கிதான் சிவந்த சருமமும் அழகும் கொண்டவள் என்று கந்தம்மா சொல்லாத நாளில்லை. “அவள் நாவற்பழத்தைத் தின்னும் போது, தொண்டையில் கருஞ்சாறு இறங்குவது உங்களது கண்களுக்குத் தெரியும்” என்பார்.

சம்பங்கியின் குடியிருப்பிலிருந்து கருங்குயில் வீடு அதிக தூரத்திலில்லை. பம்பலவத்தயிலிருந்து கடற்கரையோரமாகவே தெற்காக நடந்து வந்தால், பதினைந்து நிமிடங்களுக்குள் வந்துவிடலாம். ஆனால், சம்பங்கியின் மெதுவான நடைக்கு அரை மணிநேரம் தேவைப்படும். அவள் தயங்கித்தான் நடந்து வந்துகொண்டிருந்தாள். “அந்த வீட்டில் ஒரு சோம்பேறி நாய் இருக்கிறது சம்பங்கி. ஆனால், நீ பூனையைப் பார்த்தே பயப்படுவாய். அந்த நாய் உன்னை முகர்ந்துகூடப் பார்க்காது. அதுபாட்டுக்கு வீட்டு முகப்பில் படுத்துக் கிடக்கும்” என்றுதான் முத்தான் சொல்லியிருந்தார். ஆனாலும், சம்பங்கியின் மனதில் அச்சம் ஓரமாக ஒட்டித்தான் கிடக்கிறது.

முத்தான் சொன்ன அடையாளக் குறிப்புகளை வாயில் திரும்பத் திரும்ப முணுமுணுத்தவாறே சம்பங்கி மெதுவாக நடந்து சென்றாள். தர்மசாந்தி விகாரையைக் கடந்ததும் கடல் தேங்காய் மரமிருந்தது. அந்த மரத்திற்கு எதிராகக் கிழக்கே செல்லும் மண்பாதையில் சம்பங்கி திரும்பி நடக்கும்போது முற்றாக விடிந்திருந்தது. காடு போல செடிகொடிகளும், புதர்களும் மண்டிக்கிடத்த நிலத்தின் நடுவே புதிதாகக் கட்டப்பட்டிருந்த, உயரமான வெண்ணிற வீடு நின்றிருந்தது. மதிற்சுவரில் இரும்புக் கிறாதிப் படலைக்கு வலதுபுறத்தில் கருங்குயில் தொங்கிக்கொண்டிருந்தது. சம்பங்கி அந்தக் கருங்குயிலையே பார்த்தவாறு சில நிமிடங்கள் தயங்கி நின்றுகொண்டிருந்தாள். அந்த வீடு எந்தச் சலனமுமின்றி அமைதியாகக் கிடந்தது. இரும்புக் கிறாதிப் படலைக்குள்ளால் உள்ளே பார்த்தாள். முத்தான் சொன்னது போலவே சோம்பேறி நாய் வீட்டு முகப்பில் சுருண்டு கிடந்தது.

சம்பங்கி மெதுவாக இரும்புக் கிறாதிப் படலையைத் தள்ள அது ஓசையில்லாமல் திறந்துகொண்டது. முத்தான் சொன்ன குறிப்பு இடது பக்கமா வலது பக்கமா என அவளுக்கு இப்போது மறந்துவிட்டது. படலையைத் தாண்டி வளவுக்குள் அவள் மெதுவாகக் காலடி வைத்தபோது, சுருண்டு கிடந்த நாய் தலையைத் தூக்கிப் பார்க்கவும் இவள் தனது தலையைத் திருப்பிக்கொண்டாள். இடது புறத்தில் புதிதாக நாட்டப்பட்டு வளர்ந்துகொண்டிருந்த குரோட்டன் செடிகளிடையே பாதை தெரிந்தது. இவள் அந்தப் பாதையால் நடந்து சென்றாள். வீட்டைச் சுற்றிக்கொண்டு, கழிவறையை நோக்கி ஓசையில்லாமல் சென்றாள். கழிவறையின் கதவு திறந்து கிடந்தது. யௌவன வெள்ளைப் பெண் ஒருத்தி முழு நிர்வாணமாக மலக் குழியின் மீது குந்தியிருந்தாள்.

அதைப் பார்த்ததும் சம்பங்கி உறைந்து அங்கேயே நின்றுகொண்டாள். இப்போது என்ன செய்ய வேண்டும் என்று அவளுக்குத் தெரியவில்லை. தனது கண்களைத் தாழ்த்திக்கொள்வதைத் தவிர அவளால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அவளது கால்கள் கட்டைக் கால்கள் போலாகி அசைய மறுத்தன. அந்த வெள்ளைக்காரி நீலக் கண்களால் சம்பங்கியைப் பார்த்தவாறே குந்தியிருந்தாள். அவளது ஒரு கை பின்னால் அசைந்துகொண்டிருந்தது. அவள் திடீரெனத் துள்ளிப் பாய்ந்து ஓவெனக் கூச்சலிட்டபடியே நிர்வாணமாகவே வீட்டை நோக்கி ஓடினாள்.

சம்பங்கிக்கு உண்மையிலேயே மயக்கம் வரும் போலிருந்தது. அந்த வெள்ளைக்காரியின் சிறுநீர் மலக்குழியைச் சுற்றி நுரைத்துக் கிடந்தது. மல வாளியோ மலத்தாலும் சலத்தாலும் கந்தைத் துணித்துண்டுகளாலும் நிறைந்திருந்தது. முத்தான் சொன்ன இடமான கழிவறைப் புறச்சுவரில் மல வாளியின் மூடி தொங்கிக்கொண்டிருந்தது. சம்பங்கி மல வாளியை இறுக மூடிவிட்டு, அதைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு, அங்கிருந்து வெளியேறிக் கடற்கரையை நோக்கி நடந்தாள். வழியில் கிடந்த குரும்பட்டியொன்றைக் கால் விரல்களால் பற்றியெடுத்து, காலை இடது கை வரைக்கும் உயர்த்திக் கையில் குரும்பட்டியை எடுத்துக்கொண்டாள். கரையில் இருந்தவாறே, மலத்தோடு சேர்த்து வாளியைக் கடலில் கவிழ்த்தாள். அங்கிருந்து சற்று விலகி முழங்காலளவு தண்ணீர்வரை நடந்துசென்று, வாளியைக் குரும்பட்டியால் தேய்த்துத் தேய்த்து, நீரால் அலசிச் சுத்தம் செய்தாள். மறுபடியும் அந்த வீட்டுக்குப் போகவே அவளுக்கு அச்சமாகயிருந்தது. அந்த நிர்வாண வெள்ளைக்காரியை ஒரு மோகினிப் பேய் போலத்தான் அவள் கற்பனை செய்தாள். கண்களைத் தாழ்த்திக்கொண்டு மறுபடியும் கருங்குயில் வீட்டை நோக்கிச் சென்று, வாளியை மலக்குழியின் கீழே பொருத்தினாள். அப்போது கழிவறையின் கதவருகேயிருந்த சிறிய டப்பாவைக் கவனித்தாள். இதுவரை அவளுக்கு இது மறந்தே போயிருந்தது. அந்த டப்பாவைத் தூக்கி பார்த்தாள். அது வெறுமையாகவேயிருந்தது.

சம்பங்கி பம்பலவத்தவுக்குத் திரும்பி, ஆறச்சோரக் கடலில் குளித்துவிட்டு, ஈரச் சேலையுடன் குடிசைக்குத் திரும்பும்போது, எதிரே வேலை முடிந்து கையில் ஒரு மரவள்ளிக்கிழங்குடன் கந்தம்மாவும் திரும்பி வந்துகொண்டிருந்தார். அவர்களது குடிசையில் காலையுணவு சமைக்கும் வழக்கமில்லை. மதியம் தாய்க்கும் மகளுக்கும் அந்த மரவள்ளிதான் உணவு. நோயாளியான முத்தானுக்கு மட்டும் கொஞ்சம் உப்பிட்ட அரிசிக் கஞ்சி. “அந்த டப்பாவுக்குள் சில்லறை இருந்ததா?” என்று கந்தம்மா கேட்ட போது ‘இல்லை’ என்பது போல சம்பங்கி மெல்லத் தலையை அசைத்தாள். “நன்றாக ஞாபகப்படுத்திச் சொல்! காசு இருந்ததா?” என்று மறுபடியும் கந்தம்மா கேட்டபோது, மறுபடியும் சம்பங்கி தலையசைத்தாள்.

சம்பங்கி மூன்றாவது நாள் கருங்குயில் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டுப் படிக்கட்டில் சீன முகமுடைய ஓர் இளம்பெண் சுருட்டுப் பிடித்தபடியே அமைதியாக உட்கார்ந்திருந்து சம்பங்கியையே உற்றுக் கவனிப்பதைப் பார்த்தாள். அந்தப் பெண் வெண்ணிற முழுக்கைச் சட்டைபோட்டு, இடுப்பில் வானவில் போன்றதொரு லுங்கியைக் கட்டியிருந்தாள். சம்பங்கி கண்களைத் தாழ்த்தியவாறே வீட்டுக்குப் பின்புறம் சென்றபோது, சருகுகளை மிதித்துக்கொண்டு அந்தப் பெண்ணும் பின்னாலேயே வருவது தெரிந்தது. சம்பங்கி திரும்பிப் பார்க்காமலேயே கழிவறையை நோக்கிச் சென்றபோது, சருகுகள் மிதிபடும் சத்தம் நின்றுவிட்டது. சம்பங்கி மல வாளியை மூடும்போது, அந்தப் பெண் ஒரு செப்பு நாணயத்தை எடுத்துச் சம்பங்கியின் முன்னால் தரையில் சுண்டிவிட்டாள். சம்பங்கி அதை எடுத்துச் சேலைத் தலைப்பில் முடிந்துவிட்டு, மல வாளியைத் தலையில் வைத்துக்கொண்டு நடந்தாள். அடுத்த நாள் சம்பங்கி கருங்குயில் வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் பெண்ணைக் காணவில்லை.

ஆனால், அடுத்ததடுத்த நாட்களில் விதவிதமான பெண்களை சம்பங்கி கருங்குயில் வீட்டில் கண்டாள். ஒருநாள் சம்பங்கி உள்ளே நுழையும் போது, வெள்ளைக்காரியும் மலாய்காரியும் சிலோன்காரியுமாக மூவர் சிரித்துப் பேசியபடியே, மதுவால் கிறங்கிய கண்களோடு வெளியேறிக் கடற்கரையை நோக்கி நடந்து சென்றார்கள். சம்பங்கி மல வாளியோடு கடற்கரைக்குச் சென்ற போது, அவர்கள் கொக்குகளைப் போல ஒற்றைக்கால்களில் நின்று கிழக்கு முகம் பார்த்துக் கைகளை உயர்த்திக் கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஒன்பதாவது நாள், கருங்குயில் வீட்டுக்குச் சம்பங்கி சென்றபோது, வீட்டின் முகப்புச் சாளரம் திறந்திருந்தது. உள்ளேயிருந்து வெள்ளைக்கார இளைஞனொருவன் விரிந்த கண்களால் இவளையே பார்த்துக்கொண்டிருந்தான். சம்பங்கி கண்களைத் தாழ்த்தியவாறே கழிப்பறையை நோக்கிச் சென்றாள். அவள் தலையில் மல வாளியுடன் திரும்பிவரும் போது, அவன் வீட்டு வாசற்படியில் கையிலொரு புத்தகத்துடன் உட்கார்ந்திருந்தான். கட்டுடலுடன் வாட்டசாட்டமாகயிருந்தவனின் உடம்பில் ஓர் அரைக் காற்சட்டை மட்டுமேயிருந்தது. சம்பங்கி வெற்று வாளியுடன் திரும்பி வரும்போது, அவன் இரும்புக் கிறாதிப் படலையைப் பிடித்துக்கொண்டு வெளியே நின்றவாறே, சம்பங்கியையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். சம்பங்கி அருகில் வந்தும், தனது வலது கைச் சுட்டுவிரலால் கருங்குயில் பலகையைத் தொட்டுத் தொட்டுக் காட்டி ஏதோ சொன்னான். சம்பங்கியோ செய்வதறியாமல் திகைப்பேறி அசையாமல் நின்றுவிட்டாள். “அந்த வீட்டுத் துரையைப் பார்த்தால் குட் மார்னிங் சொல்ல வேண்டும்” என முத்தான் திரும்பச் திரும்பச் சொல்லிக் கொடுத்திருந்ததை சம்பங்கி முற்றாக மறந்துவிட்டாள். வெள்ளைக்காரன் அங்கிருந்து புன்னகையுடன் நகர்ந்து, உரக்கப் பாடியவாறே கடலை நோக்கி நடந்துபோனான்.

அடுத்தநாள், சம்பங்கி கருங்குயில் வீட்டுக்குச் சென்றபோது, அந்த வெள்ளைக்காரன் வீட்டின் பின்புற வாசலில் அரையிருளில் நின்றுகொண்டிருந்தான். அவனது உடலில் முழங்கால் வரைக்கும் தொங்கும் மெல்லிய அங்கியும், முகத்தில் குறும்புப் புன்னகையுமிருந்தன. அந்த அங்கிக்குள்ளிருந்து ஏதோவொரு விநோதமான சத்தம் எழுந்துகொண்டிருந்தது. இதுவரை அப்படியொரு சத்தத்தைச் சம்பங்கி கேட்டதேயில்லை. சம்பங்கி கழிவறையை நெருங்கியபோது, கதவுக்கு அருகிலிருந்த டப்பா சில்லறை நாணயங்களால் நிரம்பியிருந்ததைப் பார்த்தாள். தன்னுடைய சிவப்புச் சேலைத் தலைப்பில் அந்த நாணயங்களைக் கொட்டி முடிந்துகொண்டாள். அவள் மல வாளியோடு வெளியேறும் வரை, அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். சம்பங்கி அந்த நாணயங்களை முத்தானின் முன்னே பாயில் வைத்தபோது “வெள்ளைக்கார்கள் இப்படித்தான்… அவர்களுக்கு நமது வேலை பிடித்துப் போனால் அள்ளித் தருவார்கள்” என்றார் முத்தான்.

அடுத்தநாள், சம்பங்கி கருங்குயில் வீட்டுக்குச் சென்ற போதும் அவன் அந்த இடத்திலேயே நின்றிருந்தான். சம்பங்கி கழிவறைக் கதவருகே சென்றபோது, டப்பாவுக்குள் சில கண்ணாடி வளையல்கள் போடப்பட்டிருப்பதைக் கண்டாள். உடனேயே முழந்தாள்களில் கழிப்பறைக்கு முன்னால் உட்கார்ந்திருந்து, தன்னுடைய இரண்டு கைகளிலும் அந்த வளையல்களை அணிந்துகொண்டாள். பின்பு மல வாளியைத் தூக்கிக்கொண்டு, கண்களைத் தாழ்த்தியவாறே வெளியேறினாள்.

மறுநாளும் அவன் வீட்டின் பின்புறக் கதவு அருகேயே நின்றிருந்தான். அவள் கழிவறையை நோக்கிச் சென்றபோது “ஹே..ஹே” என்று மெதுவாகச் சத்தமெழுப்பினான். சம்பங்கி கண்களை நிமிர்த்தி அவனைப் பார்த்த போது, அவன் தன்னுடைய வலது கையை முன்னால் நீட்டினான். அந்தக் கையில் பச்சை நிறத்தில் புதிய சேலையொன்று இருந்தது. அவன் புன்னகைத்தவாறே சேலையை ஆட்டிக்காட்டி, அருகில் வருமாறு சம்பங்கிக்குச் சைகை செய்தான். சம்பங்கியின் கால்கள் அசைய மறுத்தன. அவன் வாசற்படியில் சேலையை வைத்துவிட்டு, திறந்திருந்த கதவு வழியாக வீட்டுக்குள்ளே போய்விட்டான். சம்பங்கி கண்களைத் தாழ்த்தியவாறே மெதுவாக நடந்துசென்று அந்தச் சேலையை எடுத்துக்கொண்டாள். அவள் சேலையைத் தாயாரிடம் காட்டியபோது “பத்திரமாக வைத்துக்கொள், உன்னுடைய கல்யாணத்திற்குக் கட்டிக்கொள்ளலாம்” என்றார் கந்தம்மா.

அடுத்தநாள், கருங்குயில் வீட்டுக்குச் சென்றபோது, சம்பங்கியின் மனம் நன்றியுணர்வால் ததும்பிக்கொண்டிருந்தது. இவள் கழிவறையை நோக்கிச் சென்ற போது, பின்னால் சருகுகள் மிதிபடும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். இவளுக்கு நெருக்கமாக அந்த வெள்ளைக்கார இளைஞன் நின்றுகொண்டிருந்தான். சம்பங்கியின் கண்களைப் பார்த்தவாறே, அவளது வலதுகை மணிக்கட்டை மெல்லப் பற்றினான். சம்பங்கிக்கு உடலில் இரத்தம் வற்றித் தண்ணீராகிவிட்டது. அவள் தனது கையை அவனிடமிருந்து விடுவிக்க முயன்றாள். இப்போது அவனின் பிடி முரட்டுத்தனமாக அழுத்த, சம்பங்கியின் கண்களில் பொட்டென நீர் துளிர்த்து அவளது கன்னங்களில் விழுந்தன. அவன் திறந்திருந்த பின் வாசல் வழியாக அவளை வீட்டுக்குள் இழுத்துப் போனான். சம்பங்கியின் கால்கள் மரக் கட்டைகளாகிவிட்டன. ஒரு பொம்மையை நகர்த்திச் செல்வதுபோல அவன் சம்பங்கியைக் கொண்டு சென்றான். சம்பங்கி வாயைக் கோணிக்கொண்டு விசும்பினாள். இப்போது அவன் தன்னுடைய வலிமையான கைகளால் சம்பங்கியைத் தூக்கி வீட்டின் நடுவாகயிருந்த அகலமான கயிற்றுக் கட்டிலில் கிடத்தினான். அவன் தன்னைக் கொல்லப் போகிறான் என்றுதான் சம்பங்கி நினைத்தாள். சாவைப் பார்க்கப் பயந்து அவள் தனது கண்களை இறுக மூடிக்கொண்டாள். அப்போது அவளது பொன்னிறக் கரையிடப்பட்ட சிவப்பு நிறச் சேலை அவளிடமிருந்து உருவப்படுவதை அவள் உணர்ந்தாள். அவளது இரண்டு கைகளும் கீழேயிறங்கி அவளது நிர்வாணத்தைப் பொத்திக்கொண்டன.

அவன், தன்னுடைய கைளால் முரட்டுத்தனமாகச் சம்பங்கியின் கைகளை விலக்கிப் போட்டான். சம்பங்கியின் மீது அவன் கவிழ்ந்த போது, சாவுதான் தன்மீது இறங்குகிறது என்றே சம்பங்கி நம்பினாள். இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்த முதல் நாளன்று கண்ட மோகினிப் பேய் அவளது ஞாபகத்திற்கு வந்தது. அந்தப் பேய்தான் இப்போது ஆணுருவில் இருக்கிறதோ என்ற கொடுமையான அச்சம் அவளுக்குள் பரவியது. அவளால் மூச்சுவிட முடியாதவாறு அவனுடைய கனத்த உடலின் பாரம் அழுத்தியது. அவனிலிருந்து சீறிக்கொண்டு வெளியேறிய மூச்சுக்காற்று அவளது மார்பில் சுட்டது. பேய் கொள்ளிக் கண்களைத் திறந்துள்ளது என அவள் நடுங்கினாள்.

அவனுடைய ஒரு கை அவளது உச்சிக் கொண்டையைப் பற்றியிழுக்க, அடுத்த கை அவளது மூடியிருந்த கண் இமைகளை வலுகட்டாயமாகத் திறக்க முயன்றது. அவளோ எக்காரணத்தாலும் மரணத்தை பார்ப்பதில்லை என்ற முடிவோடு மறுபடியும் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டாள். அவன் அவளிலிருந்து எழுந்து மெதுவாக மிக மெதுவாகச் சீட்டியொலி எழுப்பினான். பதிலுக்கு இன்னொரு சத்தம் எழுந்தது. அவளது வயிற்றிலிருந்து ஏதோவொன்று சத்தமெழுப்பியவாறே நகர்ந்து கண்களை நோக்கி வந்தது. தன்னுடைய உயிர் கண்களின் வழியாக வெளியேறிக்கொண்டிருப்பதாக சம்பங்கி நினைக்கும் போதே, அவளது கண்கள் தாமாகத் திறந்துகொண்டன. அவளது முகத்தை ஒரு பிராணி முகர்ந்துகொண்டிருந்தது. அவன் “கிரியா…கிரியா ” என்றழைத்து உத்தரவிட, அந்தக் கீரிப்பிள்ளை அவன் காட்டிய பக்கமெல்லாம் சம்பங்கியின் உடலில் தாவிப் போயிற்று. சம்பங்கி அச்சத்தால் செத்து, பிணம் போல அசையாமல் கிடந்தாள். அதன் பின்பு அவளது கண்கள் மூடவேயில்லை.

கந்தம்மா வேலை முடிந்து வரும்போது, குடிசைக்கு வெளியே முத்தான் உட்கார்ந்திருந்தார். அவர் கந்தம்மாவைப் பார்த்ததும், தனது முகத்தை உள்ளே அடுப்படியை நோக்கித் திருப்பினார். அங்கே சாம்பலுக்குள் தலைவைத்துச் சம்பங்கி சுருண்டு கிடந்தாள். திகைத்துப் போன கந்தம்மா ஓடிப்போய் மண்டியிட்டு உட்கார்ந்து சம்பங்கியின் முகத்தைக் கையால் திருப்பிப் பார்த்த போது, சம்பங்கியின் கண்கள் அகலத் திறந்தே கிடந்தன. தாயாரைப் பார்த்ததும் சம்பங்கி வாயைத் திறந்து “வலிக்கிறது ஆயி” என்று முனகினாள். “எங்கே வலிக்கிறது?” என்று கந்தம்மா கேட்டபோது, சம்பங்கி அடிவயிற்றைத் தொட்டுக் காட்டினாள். கந்தம்மா நடுங்கும் கைகளால் சம்பங்கியின் சேலையை விலக்கிப் பார்த்த போது, சம்பங்கியின் பெண்ணுறுப்பிலிருந்து இரத்தம் கசிவதைக் கண்டார்.

மறுநாள் மதியப் பொழுதில் “முத்தான்…முத்தான்” என்று அழைக்கும் சத்தம் கேட்டு, முத்தான் குடிசையிலிருந்து மெதுவாக வெளியே வந்தார். நீண்ட கைகளும், கால்களும், கரிய தோற்றமும் உள்ளதால் ‘களு மஹாத்தயா’ எனச் சொல்லப்படும் புராம்பி வெளியே நின்றிருந்தான். அவன் கருங்குயில் வீட்டுக்கு மதிய வேளையில் வந்து, சமையலும் வீட்டு வேலைகளும் செய்துவிட்டு மாலையில் திரும்பிச் செல்பவன். அவன் தான் பம்பலவத்தவுக்கு வந்து முத்தானிடம் பேசி, அவரைக் கருங்குயில் வீட்டில் வேலைக்கு அமர்த்தியவன்.

“முத்தான் காலையில் ஏன் கக்கூஸ் வாளி எடுக்க வரவில்லை? நானா அதை எடுக்க முடியும்?”

“எனக்கு உடம்பு சுகமில்லை களு மஹாத்தயா… நேற்றுத்தான் பாயிலிருந்து எழுந்து கொஞ்சம் நடக்கிறேன்…”

“கொஞ்ச நாளாக வேலைக்கு ஒரு குட்டி வருவதாகத் தானே துரை சொன்னார்…”

“அவளுக்கு நாளை கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறது களு மஹாத்தயா. புத்தி குறைவான அந்தப் பிள்ளையை நம்முடைய கேசவய்யா தான் மனமிரங்கிக் கல்யாணம் செய்யப் போகிறார்.”

புராம்பி திரும்பிச் சென்ற பின்பாக, குடிசைக்கு வெளியே வந்த கந்தம்மா மணலில் உட்கார்ந்துகொள்ள, எதிரே முத்தானும் உட்கார்ந்தார். அவரருகே முகத்தை நெருக்கமாகக் கொண்டுவந்து, மெல்லிய குரலில் கந்தம்மா பேசினார்:

“கல்யாணத்திற்கு கேசவய்யா கோடித் துணி வாங்கிக் கொடுப்பாரல்லவா? இல்லாவிட்டாலும் பரவாயில்லை… சம்பங்கியிடம் புதிய சேலையிருக்கிறது.”

“அந்தப் பறங்கி கொடுத்ததா? அதைக் கொளுத்திப் போடு. அந்தச் சேலையைப் பார்க்கும் போதெல்லாம் அவளது மனம் என்ன பாடுபடும்!”

கந்தம்மா கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்பு தலையை இடதுபுறம் திருப்பிக் குடிசையை ஒருகணம் பார்த்தார். பின்னர் தலையை வலது பக்கம் திருப்பிக் கடலைப் பார்த்தவாறே சொன்னார்:

“கருணையுள்ள கடவுள் என் பெண்ணுக்கு மறதியைக் கொடுத்திருக்கிறான். அவள் சீக்கிரமே எல்லாவற்றையும் மறந்துவிடுவாள். காலப்போக்கில் எல்லோருமே எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்.”

ஆனால், கருங்குயில் வீட்டிலிருந்த வெள்ளைக் கவிஞன் அதை மறக்கவில்லை. அவன் இலங்கையை விட்டு, தன்னுடைய செல்லப் பிராணியான கிரியாவுடனும் வெளியேறியதிலிருந்து, சரியாக நாற்பத்து மூன்று வருடங்களுக்குப் பின்னால் வெளியிடப்பட்ட ‘பப்லோ நெரூடா: நினைவுக் குறிப்புகள்’ என்ற நானூறு பக்கங்களைக் கொண்ட சுயசரிதை நூலில் ஒரு பக்கத்தைச் சம்பங்கிக்காக ஒதுக்கியிருக்கிறான்.

(சனவரி 2023- காலம் இதழ்)

2 thoughts on “கருங்குயில்

  1. வணக்கம் வாத்தியாரே , மலேசிய சிறுகதை தொகுப்பில் இருக்கும் ” சஞ்சிகை கூலி ” “முத்துசாமி கிழவன்” ஆகிய சிறுகதைகளுக்கு பிறகு , தங்களின் “அம்மண பூங்கா” இந்த “கருங்குயில் ” ……. ரத்தமும் சதையுமாக இருக்கிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *