அ.சி. விஜிதரன் தொகுத்து, இம்மாதம் ‘சிந்தன் புக்ஸ்’ வெளியிட்டிருக்கும் ‘நான் ஏன் சட்டவிரோதக் குடியேறி ஆனேன்?’ நூலுக்கு நான் எழுதியிருக்கும் முகவுரை:
“நீங்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நிலத்தைக் காட்டிலும் சமுத்திரம் பாதுகாப்பானதாக இல்லாவிட்டால், யாரும் தன்னுடைய குழந்தையைப் படகில் வைக்கப்போவதில்லை.”
-வார்ஸன் ஸியர்
தமிழகம் முழுவதுமிருக்கும் ஈழ அகதிகள் மறுவாழ்வு முகாம்களிலிருந்து கவிதைகளையும், கதைகளையும், கட்டுரைகளையும், ஓவியங்களையும் சேகரித்துத் தொகுக்கப்பட்டிருக்கும் இந்நூலில் பெருமளவு பங்களிப்புச் செய்திருப்பவர்கள் குழந்தைகளும் இளையவர்களுமே. அவர்களில் ஒருவரான ரா. விஷ்ணு பிரியா சொல்கிறார்:
“அகதிகள் இரு தேசத்திற்கும் இடையில் கண்ணீர்த் துளிகள்”
இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனவாத அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட கூட்டுப் படுகொலைகளுக்கும் இன அழிப்புக்கும் அஞ்சி, ஈழத் தமிழ் மக்கள் ஆபத்தான பாக்கு நீரிணையைக் கடந்து, தமிழகக் கரைகளுக்குப் படகுகளில் வரத்தொடங்கி நாற்பது வருடங்களுக்கும் மேலாகிறது. மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் புகுந்தார்கள். அவர்களில் ஓர் இலட்சம் வரையிலான மக்கள் தமிழகத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள். இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த சில அகதித் தலைமுறைகள் உருவாகிவிட்டன.
இலங்கையில் உருவாகிய கொடிய போரின் கைவிடப்பட்ட மிச்சங்களாக இந்த அகதிகள் இருக்கிறார்கள். ‘சிலோன் அகதிகள்’ என்ற அடையாளத்தோடு, தமிழகப் பொதுச் சமூகத்திலிருந்து இவர்கள் பிரித்தே வைக்கப்பட்டுள்ளார்கள். காரையூர் முகாமிலிருக்கும் அருள்மேரி சொல்கிறார்:
“ஊருக்கு வெளியே குடிசை/ பள்ளிக்கூடம் சென்றாலும் அகதி/ ஊர் விட்டு ஊர் சென்றாலும் அகதி.”
இந்த வார்த்தைகளுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு இந்தப் போரை உருவாக்கிய வலிமையான சக்திகளிற்கு உள்ளன. இந்தப் போரை உருவாக்கி, வளர்த்தெடுத்த மூன்றாவது சக்தியான இந்தியாவுக்கு இந்த அகதிகளைப் பொறுபேற்று, மறுவாழ்வு அமைத்துக்கொடுக்கும் தார்மீகக் கடப்பாடு நிச்சயமாக உண்டு.
இலங்கைப் போரின் உருவாக்கத்தில் இந்திய அரசின் புவியியல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களும் நிச்சயமான காரணிகளாக இருந்தன. ஆதியில், ஈழ விடுதலை ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்குப் பயிற்சியும், ஆயுதமும், பணமும், பாதுகாப்பும் வழங்கி இந்திய அரசு போரை ஊக்குவித்தது. அந்த நேரத்திலேயே இந்தியாவை நோக்கிய அகதிகளின் வருகையும் தொடங்கிற்று. இதன் பின்னாக, இந்திய இராணுவம் நேரடியாகவே இலங்கையில் இறங்கி, தன் பங்கிற்கு ஈழத் தமிழ் மக்களை அழித்தொழித்தது. அப்போதும் அகதிகள் இந்தியாவை நோக்கி வந்தார்கள். அந்தத்தில், தமிழ் இனப்படுகொலை செய்த இலங்கை அரசோடு இந்திய அரசு கைகோர்த்தது. யுத்த ஆலோசனைகளையும், ஆயுதத் தளவாடங்களையும், நிதியையும் இலங்கைப் படைகளிற்கு அள்ளி வழங்கியது. சர்வதேச அரங்குகளில் மனிதவுரிமை அமைப்புகளின் கண்டனங்களிலும் தடைகளிலிருந்தும் இலங்கையை இந்திய அரசுப் பிரதிநிதிகள் காப்பாற்றினார்கள்.
இவ்வாறாக ஈழப் போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கெடுத்த இந்தியா, போரின் இரங்கத்தக்க விளைவுகளான அகதிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதும், அவர்களைப் பயங்கரவாதிகளைப் போலக் கருதி இறுக்கமான கண்காணிப்பில் வைத்திருப்பதும், அடிப்படை குடியியல் உரிமைகளை மறுத்திருப்பதும் பெரும் அநீதி.
தமிழகத்திலிருக்கும் இந்த அகதிகளுடைய சுதந்திர நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பயணங்கள் செய்ய இவர்களிடம் கடவுச்சீட்டுக் கிடையாது. உயர் கல்வியிலும், தேசிய விளையாட்டுத்துறையிலும் இவர்களுக்கு வாய்ப்புகள் கிடையாது. தடைகளைத் தாண்டிப் படித்தாலும் இவர்களால் அரசு வேலைகளில் சேர முடியாது. இத்தனை இன்னல்களுக்கும் காரணம் இவர்கள் நாடற்றவர்கள், குடியுரிமையற்றவர்கள் என்பதே.
“இந்த அகதிகள் ஏன் இலங்கைக்குத் திரும்ப முடியாது?” என்ற கேள்வி நீதியற்றது. தமிழகத்திலேயே பிறந்து, பள்ளிக்கல்வி கற்று, இங்கேயே கலந்து மணமுடித்து வாழும் இவர்கள் தமிழகத்தையே தங்களது தாயகமாக ஏற்றிருப்பவர்கள். இந்நிலத்தின் மொழியோடும் பண்பாட்டோடும் ஒன்றாகக் கலந்துவிட்டவர்கள்.
ஒரு நாட்டில், அகதியாக அய்ந்து வருடங்கள் வாழ்ந்தாலே குடியுரிமை பெறுவதற்கான உரிமை உண்டு என்பதுவே அகதிகளுக்கான ‘ஜெனிவா 1951 அனைத்துலக உடன்படிக்கை’யை ஏற்றுக்கொண்ட நாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் இலட்சக்கணக்கான ஈழ அகதிகள் மேற்கு நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள். இவ்வாறு குடியுரிமை பெற்றவர்கள் அந்தந்த நாடுகளின் பொருளாதர வளர்ச்சியில் மட்டுமல்லாது அரசியல், கலை, கல்விப் புலமைத்துவம், விளையாட்டுத்துறை போன்றவற்றிலும் தங்களது ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செலுத்துகிறார்கள். அகதியாக வந்த நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், மேயர்களாகவும் செயற்படுகிறார்கள்.
ஆனால், இந்தியாவிலிருக்கும் இலங்கை அகதிகளது நிலை என்ன? முகாம்களுக்கு ‘மறுவாழ்வு முகாம்’ எனப் பெயரிடப்பட்டதே தவிர அவர்களுக்கு மறுவாழ்வுக்குச் செல்லவோ, தங்களது வாழ்க்கையைச் சுதந்திரமாகக் கட்டி எழுப்பவோ எந்த வழிகளும் இல்லை. அவ்வழிகளெல்லாம் குடியுரிமை என்ற பெயரால் அடைக்கப்பட்டுள்ளன.
எனவேதான், நாட்பட்ட அகதிகளது அடிப்படை வேட்கை இந்தியக் குடியுரிமை என்பதாகவேயுள்ளது. இந்த நூலில் பதிவாகியுள்ள எண்ணங்கள் அதைப் பல்வேறு பரிமாணங்களில் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. எழுத்துகளாகவும், பிரதிமைகளாகவும் ஒலிக்கும் குழந்தைகளது குரல்கள் கேட்போரது மனச்சாட்சியை உலுக்காமலிருக்க முடியாது. இந்தக் குழந்தைகள் எளிமையான மொழியில் தங்களது கண்ணீரையும் ஏக்கத்தையும் நம்முன்னே வைத்திருக்கிறார்கள். நம் பிள்ளைகளது குழந்தைமையானது புறக்கணிப்பிலும் அடக்குமுறையில் கழிவதைக் காட்டிலும் வேறென்ன வேதனை இருக்கப் போகிறது. இந்தக் குழந்தைகளது எதிர்காலம் இருண்டுவிடக் கூடாது. சட்டவிரோதக் குடியேறிகள் என்ற முத்திரை இவர்களையும் சந்ததியையும் தொடர வேண்டாம்.
“அகதிகள் பயங்கரவாதிகளல்ல, மாறாக அவர்களே முதன்மையாகப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்” என்பார் அன்ரனியோ குயுற்றோஸ். தமிழகத்தில் நிலையாக வாழும் ஈழ அகதிகளின் விஷயத்தில் அன்ரனியோவின் மொழியை நாம் தமிழக அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் திரும்பத் திரும்ப நினைவூட்ட வேண்டியுள்ளது. இந்தத் தொகுப்பில், நிரந்தர அகதிகள் அதைத் தங்களது காயமுற்ற மனங்களால் நினைவூட்டுகிறார்கள். கடுமையான குடியுரிமைச் சட்டம், கபடமான வெளியுறவுக்கொள்கை போன்ற கொடிய இரும்புச் சுவர்களை ஊடுருவிச் சென்று இக்குரல்களை ஆட்சியாளர்களின் செவிகளில் உறைக்கச் செய்வதற்கு, இந்தியாவின் முற்போக்குச் சக்திகளும், எழுத்தாளர்களும், ஊடகங்களும் மக்கள் பிரதிநிதிகளும் நிச்சயமாக முன்வர வேண்டும். தமிழகத்தின் அகதி முகாம்களில் நிரந்தரமாக அடைபட்டுக் கிடக்கும் ஈழத்து அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை கேட்டு இந்திய மக்களின் கூட்டு மனச்சாட்சி எழ வேண்டும்.
இதைத்தான் இந்நூலும் உள்ளே பதிவாகியுள்ள இருதயங்களும் வேண்டி நிற்கின்றன!
-ஷோபாசக்தி
29.11.2022 – Paris.