அண்ணாமலை என்ன, அமித்ஷா இலங்கைக்கு வந்தாலும் பலிக்காது!

நேர்காணல்கள்

12.05.2022 அன்று ஆனந்த விகடனில் வெளியான நேர்காணல்.
நேர்கண்டவர்: சுகுணா திவாகர்

1997-ல் தன் முதல் சிறுகதையை எழுதிய ஷோபாசக்தி, எழுத்துலகில் கால்நூற்றாண்டுப் பயணத்தைக் கடந்திருக்கிறார். தன் புதிய நாவல் பணிக்காகத் தமிழகம் வந்தவரைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலை, இலக்கியம், சினிமா என்று பல தளங்களில் கேள்விகளை முன்வைத்தேன்.

“இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

“இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.இலங்கையின் இடதுசாரி அறிஞர்கள் இதுகுறித்துத் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தார்கள். 1977-ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனே இலங்கை அதிபரானபிறகு திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டுவந்தார். அதற்கு முன்பான காலத்தில் இலங்கை உள்நாட்டு உற்பத்தி, பொதுத்துறை நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. அணிசேரா நாடுகளில் முக்கியப்பங்கு வகித்தது. ஆனால் ஜெயவர்த்தனே காலத்துக்குப் பிறகு இலங்கை முற்றிலும் அமெரிக்கச் சார்பு எடுத்தது. முதன்முதலாக அமெரிக்காவின் அஞ்சல் நிலையம் இலங்கையில் தொடங்கப்பட்டது. பிறகு படிப்படியாகப் பல்தேசிய நிறுவனங்களும் அந்நிய முதலீடுகளும் அதிகரித்ததுதான் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு முதன்மைக் காரணம். யுத்தம், கோவிட், ஊழல் போன்றவையெல்லாம் துணைக்காரணங்கள்தான். இப்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதன் பெயரால் சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகள் இலங்கையில் தனியார்மயத்தை அதிகப்படுத்துவது, மானியங்களை நிறுத்துவது போன்றவற்றுக்கு நிர்பந்திக்கின்றன.

இலங்கையின் பொருளாதார அடிப்படை விவசாய வளமும் மீன்பிடியும் பாரம்பரிய உற்பத்தியும்தான். என்னுடைய சிறுவயதில் மண்ணெண்ணெயும் சீனியும் வாங்க மட்டும்தான் கடைக்குப் போவோம். ஆனால் அந்த நிலை எல்லாமும் திறந்த பொருளாதாரக்கொள்கையால் மாறிவிட்டன. கோத்தபய அரசு போனாலும் இந்த நெருக்கடியைச் சரிசெய்ய முடியாது. பொருளாதார அடிப்படைக் கொள்கையை மாற்ற வேண்டும். ஆனால் அமெரிக்க, சீன, இந்தியப் பெருநிறுவனங்களும் சர்வதேசச் சூழலும் அதை அனுமதிக்காது.

ஒருகாலத்தில் காந்தி, நேரு, பிடல் காஸ்ட்ரோ, மாவோ, மண்டேலா என்று தேசியத் தலைவர்கள் இருந்தார்கள். இன்று அப்படி ஒருவரைச் சொல்ல முடியுமா? இன்று அரசுகளை நடத்துவது பெருநிறுவனங்கள்தான். அவர்கள் மூலதன நலனுக்காகக் கூட்டு சேர்கிறார்கள். அரசின் கொள்கைகளை வகுப்பவையாகவும், யார் அரசுக்கு வரவேண்டும் என்று தீர்மானிப்பவையாகவும் பெருநிறுவனங்கள்தான் இருக்கின்றன. இதற்கு எதிராக உலகம் முழுக்க மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடந்தாலும் அமைப்பாக்கப்படாத போராட்டங்கள் மாற்றத்தை ஏற்படுத்தாது. இப்போது இலங்கையில் நடைபெறும் மக்கள் போராட்டமும் தலைமையில்லாத போராட்டமாகவே இருக்கிறது.’’

“1977-லேயே ஆரம்பித்துவிட்டது என்றால் இந்தப் பொருளாதாரக் கொள்கை பற்றிய தன்னுணர்வு ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இருந்ததா?’’

“நிச்சயமாக. ஆரம்பத்தில் புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களும் சோஷலிசப் பொருளாதாரக் கொள்கையை முன்வைத்தன. திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு எதிர்ப்பு, சுயச்சார்புப் பொருளாதாரக் கொள்கை என்பதில் எல்லா இயக்கங்களும் உறுதியாக இருந்தன. விடுதலைப்புலிகள் ‘சோசலிசத் தமிழீழத்தை நோக்கி’ என்ற பிரசுரத்தையே வெளியிட்டார்கள். அதேபோல் புலிகள் உள்ளூர் உற்பத்தியையும் ஊக்குவித்தார்கள். பின்னாளில் 2002-ல் வன்னியில் நடைபெற்ற சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபாகரன் ‘அமையப்போகும் தமிழீழத்தின் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கையே’ என்று அறிவித்தது வீழ்ச்சி.”

“2009-ல் சிங்களர்களால் வெற்றி நாயகனாகக் கொண்டாடப்பட்ட ராஜபக்‌ஷேவுக்கு எதிராக சிங்கள மக்களே வீதியில் இறங்கிப் போராடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“இரண்டு மகா யுத்தங்களின் வெற்றி நாயகன் வின்ஸ்டன் சர்ச்சிலை 1945 தேர்தலில் பிரிட்டன் மக்கள் நிராகரித்தனர். வெற்றிப்பெருமிதத்தைவிட வயிற்றுக்குச் சோறு முக்கியமில்லையா?”

“நீண்டகாலமாக ஈழ இயக்கங்கள் திராவிட இயக்கத்துடன் நட்புடன் இருந்தார்கள். ஆனால் இப்போது பல ஈழத் தமிழர்கள் திராவிட எதிர்ப்பு பேசுகிறர்களே?’’

“ஈழ இயக்கங்களுக்கு முன்பிருந்தே பெரியார், திராவிட இயக்கத்தின் தாக்கம் ஈழத்தில் இருக்கிறது. 1927-ல் யாழ்ப்பாணத்திலிருந்து ‘திராவிடன்’ என்ற இதழ் வெளியாகியிருக்கிறது. ஊருக்கு ஊர் அண்ணா மன்றங்களை வைத்திருந்தவர்கள் நாங்கள். இலங்கையில் தி.மு.க-வுக்குக் கிளை இருந்தது. அது பின்பு அரசால் தடைசெய்யப்பட்டது. ஈழப் போராளிகளைத் தமிழகத்தில் அரவணைத்துப் பாதுகாத்தவர்கள் திராவிட இயக்கத்தவர்கள். அவர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்களாக மட்டுமே இருக்கவில்லை. அவர்கள் வீசிய கை வெறும் கையாக ஈழத்துக்கு வந்து ஆமைக்கறி சாப்பிட்டு ஏப்பம் விட்டு எழுந்து வந்தவர்களல்ல. ஈழப் போராட்டத்துக்காக அவர்கள் வெளிப்படையாகவும் ரகசியமாகவும் பெரும் பணிகளைச் செய்தார்கள். அதற்காகப் பல்லாண்டுகளாகச் சிறையில் வாடினார்கள்.

ஈழத் தமிழர்களில் திராவிட இயக்க எதிர்ப்போ பெரியார் எதிர்ப்போ பேசும் ஒரேயொரு சிந்தனையாளரையோ, எழுத்தாளரையோ, அரசியல் தலைவரையோ, போராளி இயக்கத் தலைவரையோ காட்டுங்கள் பார்க்கலாம். அறிவுலகைச் சேர்ந்தவர்களோ களத்தில் நின்றவர்களோ யாருமே திராவிட இயக்கத்துக்கும் பெரியாருக்கும் எதிராகப் பேசியதும் இல்லை, செயற்பட்டதும் இல்லை. சமூக வலைதளங்களில் திராவிட எதிர்ப்பைக் கக்கும் ஒரு சிலரை வைத்து ஒட்டுமொத்த ஈழத் தமிழ்ச் சமூகத்தையும் மதிப்பிடக் கூடாது.”

“தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இலங்கைக்குச் செல்கிறார். இலங்கையில் ‘சிவசேனை’ உருவாகியிருக்கிறது. இந்தப் போக்குகள் ஈழத்தமிழர்கள் மத்தியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?’’

“ஈழத்தமிழர்களை மத அடையாளத்தின் அடிப்படையில் பிரிக்கவே முடியாது. ஈழத் தமிழர்களிடையே எப்போதும் போலவே இப்போதும் மத நல்லிணக்கம் மிக உறுதியாகவே இருக்கிறது. இந்தியாவில் இந்துத்துவ அரசு இருப்பதால் இந்து அடையாளத்தைத் தூக்கிப்பிடித்தால் இந்திய ஒன்றிய அரசு நமக்கு உதவலாம் என்று காசி ஆனந்தனோ ‘சிவசேனை’ சச்சிதானாந்தனோ முட்டாள்தனமாக நினைக்கலாம். ஆனால் அவர்களுக்கு வெறும் ஐந்து பேர் கூட ஆதரவாக இல்லை என்பதுதான் உண்மை. பா.ஜ.க அரசு இந்தியாவிலேயே தங்களை இந்துக்களாக நம்பும் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத்தானே இருக்கிறது. அண்ணாமலை என்ன, அமித் ஷா வந்தால்கூட ஈழத்தில் இந்துத்துவ அரசியல் செல்லுபடியாகாது.”

“தற்போது என்ன படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?’’

“Notre – Dame on fire என்ற படம் இப்போது வெளியாகியிருக்கிறது. Woman at Sea, Tehu, Men in Blue போன்ற படங்கள் வெளியாகவிருக்கின்றன.”

“தமிழ்ப்படங்களில் நடிக்கும் எண்ணமிருக்கிறதா?’’

“இல்லாமல்? பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் பேசி நடிப்பதைவிட என்னுடைய தாய் மொழியைப் பேசி நடிக்கும்போதே என்னுடைய முழுத்திறனும் வெளிப்படும் என்றே நம்புகிறேன். தமிழகத்திலிருந்து சில அழைப்புகள் வந்தாலும் தேதிச் சிக்கல்கள், கதையின் மீது ஈர்ப்பின்மை போன்ற வெவ்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கிறது.”

“உங்கள் புதிய நாவல் பற்றி…’’

“ `ஸலாம் அலைக்’ என்பது நாவலின் பெயர். ‘ஜெனிவா 1951’ உடன்படிக்கைதான் அகதி என்றால் யார், அவர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற பல சர்வதேச வரையறைகளை உருவாக்குகிறது. இந்தியா, தாய்லாந்து போன்ற பல நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் அகதிகளைக் கையாளும் முறையை இந்த நாவல் விசாரணை செய்கிறது. அகதிகள் ஐரோப்பாவில் எதிர்கொள்ளும் நிறவாதத்தையும் இனவாதத்தையும் என் அனுபவ வலியால் சித்திரித்துள்ளேன். ஐரோப்பாவின் இரட்டை முகத்தைப் போலவே இந்த நாவலும் இரண்டு முகமுடையது. நாவலை எந்த முனையிலிருந்தும் தொடங்கிப் படிக்கலாம்.

*

2 thoughts on “அண்ணாமலை என்ன, அமித்ஷா இலங்கைக்கு வந்தாலும் பலிக்காது!

  1. பன்முக பார்வையோடு பதில்கள்.
    சமூக நீதி அங்கும் பரவ வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *