ராணி மஹால்

கதைகள்

ப்போது நேரம் அதிகாலை அய்ந்து மணியாகிவிட்டது. வசந்தகாலம் பிறந்திருந்தது என்றாலும், ‘செய்ன்’ நதியிலிருந்து எழுந்துவந்த ஈரலிப்பான காற்றில் குளிரிருந்தது. நதிக்கரையோரமிருந்த ஒற்றையடிப் பாதையில் அன்னராணி நடந்துவந்தார். கடந்த முப்பத்தெட்டு வருடங்களாக ஒருநாள் தவறாமல், அவர் இந்தப் பாதையில் நடக்கிறார். அன்னராணி ஒற்றையடிப் பாதையின் முடிவிலிருந்த சிறிய தார் வீதியில் ஏறி, உயரமான முன் ‘கேட்’டைத் திறந்துகொண்டு சிறிய புல்வெளியைத் தாண்டி நடந்தார். புல்வெளியில் அலங்கார மின் விளக்குகள் பிரகாசித்துக்கொண்டிருந்தன. அவரின் எதிரே கம்பீரமாக ராணி மஹால் நின்றிருந்தது.

‘மந்த் லா ஜொலி’ என்ற இந்தச் சிற்றூர் புகழான வரலாற்றுப் பின்னணிகொண்டது. பிரஞ்சு அரசன் இரண்டாம் பிலிப், இந்த ஊரில் தான் போரில் மடிந்தான். இரண்டு தளங்களும் ஆறு அறைகளும் கொண்ட இந்த வீட்டை, அன்னராணியின் கணவர் மரியநாயகம் நீண்டகாலத்துக்கு முன்பு வாங்கினார். வீட்டின் முகப்பில் பதித்திருந்த ‘பெல்லா வில்லா’ என்ற கற்பலகையை நீக்கிவிட்டு, தனது மனைவியின் பெயரால் ‘ராணி மஹால்’ என்ற பெயர்ப் பலகையை இங்கே பதித்தார். அப்போது அன்னராணிக்கு வயது முப்பத்துமூன்று. இப்போது வயது எழுபத்தொன்று. மரியநாயகத்துக்கு அன்னராணியை விட நான்கு வயது அதிகம்.

ராணி மஹாலுக்குச் செல்வதற்கு உயரமான நான்கு அலங்காரப் படிகளுண்டு. அந்தப் படிகளில் ஏறி, வாசற்கதவுக்கு அருகே வந்தபோதுதான், தன்னிடம் வீட்டுச் சாவி இல்லை என்பது அன்னராணிக்கு ஞாபகம் வந்தது. அவரிடம் எப்போதுமே அந்தச் சாவி இருந்ததில்லை. அன்னராணியின் கணவர் மரியநாயகமே சாவியை வைத்திருப்பார். அந்தச் சாவி, இப்போது மரியநாயகத்தின் குளிர் மேலங்கியின் பைக்குள் இருக்கும். அன்னராணி ஆயாசமாக வாசற்படியில் குந்திக்கொண்டார். ஒரு நிமிடம் ஆறிவிட்டு, எழுந்து சாவியைத் தேடிப் புறப்பட்டார்.

இப்போது அன்னராணி சற்று வேகமாகவே நதிக்கரையோர ஒற்றையடிப் பாதையால் நடந்தார். நதிக்கரையிலிருந்த தோரண மின் விளக்குகளின் வெளிச்சமும் புலரியும் கலந்து ‘செய்ன்’ நதி நீரில் வனப்புக் காட்டின. ஒற்றையடிப் பாதை முடியும் இடத்தில், காட்டுப் பகுதி ஆரம்பமாகியது. இந்தப் பாதுகாக்கப்படும் காட்டுப் பகுதிக்குள் நடைப் பயிற்சி செய்வதற்கு வளைவுப் பாதைகளிருந்தன. காலை ஆறுமணிக்குப் பின்புதான், மக்கள் இங்கே நடைப் பயிற்சிக்காக வருவார்கள். ஆனால், மரியநாயகம் நாள் தவறாமல் காலை நான்கரை மணிக்கு இங்கே நடைப் பயிற்சி செய்ய வந்துவிடுவார்.

காட்டுப் பகுதிக்குள் நுழைந்து வளைவுப் பாதையால் அன்னராணி முன்னோக்கி நடந்தார். அடர்ந்த மரங்களுக்கு நடுவாக முதலாவது சூரியக் கதிர் நுழைந்துகொண்டிருந்தது. நடைப் பயிற்சிக்கு நடுவே, மரியநாயகம் எப்போதும் உட்காரும் மர இருக்கையை நோக்கி அன்னராணி நடந்தார். மர இருக்கையின் முன்னே, பாதையில் மரியநாயகத்தின் சடலம் கிடந்தது.

மரியநாயகத்தின் முகத்தில், தலையில், கைகளில் இரத்தம் உறைந்துகிடந்தது. மூக்குக் கண்ணாடி சரிபாதியாக உடைந்து தெறித்துத் தரையில் கிடந்தது. மரியநாயகத்தின் நெற்றி நடுவாகப் பிளந்து, அங்கே முட்டையின் மஞ்சள் கருபோல எதுவோ அசிங்கமாக வடிந்திருந்தது. அதைப் பார்த்ததும் அன்னராணி கண்களை மூடிக்கொண்டார். பின்பு அன்னராணி, தனது முகத்தைச் சூரியக் கதிரை நோக்கித் திருப்பி மேலே பார்த்தவாறே, தனது கணவனின் சடலத்துக்கு அருகே மண்டியிட்டு உட்கார்ந்து, கணவன் அணிந்திருந்த செந்நிற மேலங்கியைத் தனது கையால் மெதுவாகத் தடவினார். அன்னராணியின் விரல்கள் மேலங்கியின் பைக்குள் திணிக்கப்பட்டிருந்த, சாவிக்கொத்தை உணர்ந்ததும், சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டு திரும்பி ராணி மஹாலை நோக்கி நடந்தார்.

இப்போது அவருக்கு நான்கு படிகளையும் ஏறுவது சிரமமாகயிருந்தது. ஒவ்வொரு படியிலும் மெதுவாகக் கால்களை வைத்து ஏறினார். கையிலிருந்த சாவிக்கொத்தில் பத்துப் பதினைந்து சாவிகளிருந்தன. அதில் எந்தச் சாவி, வாசற்கதவுக்கான சாவி என்று அவருக்குக் குழப்பமாகயிருந்தது. ஒவ்வொரு சாவியாக மெதுமெதுவாகப் போட்டுக் கதவைத் திறக்க முயற்சித்தார். ஆறாவதோ ஏழாவதோ சாவி கதவைத் திறந்தது.

வீட்டுக்குள் நுழைந்ததும், விளக்குகளைப் போட்டுவிட்டுக் குளியலறைக்குள் நுழைந்தார். உடைகளைக் களைந்து, கைகளையும் கால்களையும் முகத்தையும் கழுவிக்கொண்டார். படுக்கையறைக்குள் நுழைந்து, அலமாரியைத் திறந்து நீல நிறத்திலான சேலையை எடுத்து உடுத்திக்கொண்டார். மரியநாயகத்திற்கு இவர் சேலையணிவது பிடிக்காது. அய்ரோப்பிய பாணியிலேயே உடை அணியுமாறு வற்புறுத்துவார். தலையில் கொண்டை போட்டுவிட்டு, முகத்திற்கும் கைகளுக்கும் கிரீம் தடவிக்கொண்டார். கறுப்பு நிறக் குளிர் மேலங்கியை எடுத்துச் சேலைக்கு மேலாக அணிந்துகொண்டார். வீட்டு வாசற்கதவைப் பூட்டிவிட்டு, சாவிக்கொத்தை மேலங்கிப் பைக்குள் பத்திரமாக வைத்துக்கொண்டு, அன்னராணி தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினார்.

இந்தத் தெருவில் பஸ் போக்குவரத்து ஏழு மணிக்கு மேல்தான் ஆரம்பிக்கும். தெருவே ஆளரவமற்று அமைதியாகக் கிடந்தது. தெரு முடக்கிலிருந்த ‘பேக்கரி’ மட்டுமே திறந்திருந்தது. பேக்கரியைத் தாண்டியதும், இடது பக்கமா வலது பக்கமா திரும்ப வேண்டும் என அன்னராணி சற்றுக் குழம்பினார். நின்று நிதானமாக யோசித்துவிட்டு, மகனின் வீடு வலது புறத்திலேயே இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தவராக, அந்தப் பக்கமாகத் திரும்பி நடந்தார்.

அன்னராணியின் மகன் பிலிப்பின் வீடு அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், ஊரின் மையத்திலிருந்தது. அன்னராணி நடக்க நடக்கப் பாதை நீண்டுகொண்டேயிருந்தது. தன்னால் மகனின் வீட்டுக்குப் போய்ச் சேர முடியுமா என்ற சந்தேகமே அவருக்கு வந்துவிட்டது. மகனின் வீடு தீயணைப்புப் படைக் கட்டடத்துக்கும், மக்டொனால்ட் கடைக்கும் நடுவேயிருக்கும் உயரமான பச்சை நிறக் கட்டடத்திலிருந்தது மட்டுமே அவருக்குத் தெளிவாக ஞாபகமிருக்கிறது.

தெருவோரத்தில் அவ்வப்போது நின்று, மதிற்சுவர்களில் சிறிது சாய்ந்துகொண்டார். கால்களுக்குள்ளால் குளிர் ஏறிக்கொண்டேயிருந்தது. காலுறை அணியாமல், வெறும் காலில் செருப்பு அணிந்துகொண்ட முட்டாள்தனத்தையிட்டு அவரது வாய் உச்சுக்கொட்டியது. அன்னராணி மெல்ல மெல்ல நடந்து போய், மகனின் வீட்டை அடையாளம் கண்டு, அழைப்பு மணியை அழுத்தும்போது ஏழு மணியாகியிருந்தது.

தூக்கக் கலக்கத்தில் கதவைத் திறந்த பிலிப் வாயைப் பிளந்தான். “மம்மி என்ன இந்த நேரத்தில…எனக்கு போன் அடிச்சிருக்கலாமே…”

அன்னராணி, மகனை அணைத்து, அவனது இரு கன்னங்களிலும் முத்தமிட்டுவிட்டு, வரவேற்பறையிலிருந்த விசாலமான நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டார்.

“மம்மி…பப்பாவும் வாறேரே? உங்களத் தனிய ஒருக்காலும் விடமாட்டாரே…”

அன்னராணி தலையை மேலும் கீழுமாக அசைத்துக்கொண்டே “ரோஸா எங்க தம்பி?” என்று மருமகளைத் தேடினார்.

பிலிப், கண்களை விரல்களால் தேய்த்துக்கொண்டே கொட்டாவி விட்டான். “அவவுக்கு நைட் டியூட்டி” என்று சொல்லிக்கொண்டே சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். “அரை மணித்தியாலத்தில வந்திருவா.”

“சரி..நீ போய்ப் படு! நான் இதில இருக்கிறன்”

பிலிப் தலையைச் சொறிந்துகொண்டே படுக்கையறைக்குள் நுழைந்தான். பிலிப்பின் நடவடிக்கைகள்தான் சோம்பேறித்தனமாக இருக்குமே தவிர, அவன் மிகுந்த மதி நுட்பமுள்ளவன். சிறந்த மாணவன் எனப் பள்ளியிலும் பல்கலைக்கழகத்திலும் பெயர் வாங்கியவன். ஆனால், அன்னராணியின் மூத்த மகன் கென்னடி, இவனுக்கு எதிர்மாறாவன். ஒரு நிமிடம் ஓரிடத்தில் இருக்கமாட்டான். படிப்பிலும் அவன் சிறந்தவனாக இருக்கவில்லை. இரண்டாவது மகன் பிலிப் போல, கென்னடி பிரான்ஸிலேயே பிறந்தவனல்ல. அவன் இலங்கையில் பிறந்து ஆறு வயதில், அன்னராணியுடன் பிரான்ஸுக்கு வந்தவன்.

அன்னராணி, நாற்காலியில் இன்னும் சற்றுச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டார். கண்களில் தூக்கம் அழுத்துவதை உணர்ந்தார். ஆனால், தூங்கக் கூடாது என்பதில் அவர் தெளிவாகயிருந்தார். பிலிப்பின் வீட்டுத் தொலைபேசியோ, அவனின் கைபேசியோ ஒலிக்கும் சத்தம் கேட்கிறதா என ஒரு காதைத் திறந்து வைத்திருந்தார். அடுத்த காதை வாசற்கதவில் வைத்திருந்தார். கண்களை லேசாக மூடிக்கொண்டார். கென்னடி ‘அம்மா’ என்று அவரைக் கூப்பிட்டான். ‘பப்பா’ என அரற்றினான். அன்னராணி சருகுபோல அந்தச் சொகுசு நாற்காலியில் ஒட்டிக்கொண்டார்.

2

அன்னராணிக்கு சற்றுத் தாமதமாக, இருபத்தாறு வயதில்தான் திருமணம் நடந்தது. 1975 -ல் இருபத்தாறு வயதுவரை ஒரு பெண் கல்யாணம் செய்யாமலிருப்பது கிராமத்தில் அசாதாரண விசயம்தான். முழுக் கிராமமுமே அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியில் இறங்கிவிடுவார்கள்.

அந்தோனியார் கோயில் மூப்பர் இன்னாசிமுத்துவுக்கும், அருளம்மாவுக்கும் இரண்டு குழந்தைகள். மூத்தவனான தியோகு, தன்னுடைய இருபதாவது வயதிலே, பாலைதீவுத் திருவிழாவுக்குப் படகில் போகும்போது, கடலில் மூழ்கி இறந்துவிட்டான். அவனுக்கு மூன்று வயது இளையவள் அன்னராணி.

அன்னராணி தென்னை மரம்போல நெடுநெடுவென்ற உயரம். உயரத்திற்கு ஏற்ற பூரிப்பான உடம்பு. ஒருவித எலுமிச்சைப்பழ நிறம் அன்னராணிக்குக் கிடைத்திருக்கிறது. அடர்ந்த சுருட்டையான கூந்தலை வாரி முடிய ஒருநாள் வேண்டும். அந்தக் கிராமம் இப்படியொரு அழகியையும் அடக்கமான குமர்ப்பெண்ணையும் அதுவரை பார்த்ததில்லை எனக் கிராமத்திலே பேசிக்கொள்வார்கள். எல்லா வீடுகளிலும் அன்னராணியை உதாரணம் காட்டியே பெண் பிள்ளைகள் வளர்க்கப்படுவார்கள்.

கிராமத்திலிருந்த பள்ளிக்கூடத்தில் எட்டாவது வரை அன்னராணி படித்தாள். அதற்கு மேல் படிப்பதென்றால் வெளியூருக்குப் போகவேண்டும். அப்படிப் பெண்களைத் தனியாக வெளியூருக்கு அனுப்பும் வழக்கம் அப்போது கிராமத்திலில்லை. அன்னராணியும் மேலே படிக்க வேண்டுமென்று கேட்கவில்லை. படிப்பில் அவளுக்குப் பெரிய ஆர்வமுமில்லை. ஏதாவது புத்தகம் வாசிப்பதென்றாலே அவளுக்குத் தலையிடிக்கும். சமையல் செய்வதிலும், விதவிதமாகச் சாப்பிடுவதிலும் அவளுக்குப் பெருத்த ஆர்வம். வீட்டு வளவுக்குள் இருந்த நெல்லி, கொய்யா, ஜம்பு, மாமரங்கள் என ஒவ்வொரு மரமாகத் தேடிச் சென்று எப்போதும் வாயைச் சப்பியபடியே இருப்பாள். பனங்கிழங்கு சாப்பிட உட்கார்ந்தால், இருபது கிழங்குகள் சாப்பிட்டுவிட்டுத்தான் எழுந்திருப்பாள். சட்டிப் பனை காய்க்கும் பருவம் தொடங்கிவிட்டால், ஒவ்வொரு நாளும் ஒரு பனம் பழம் சுட்டுத் தின்னாமல் இருக்கமாட்டாள்.

செவ்வாய்க்கிழமை அந்தோனியார் கோயிலுக்கும், ஞாயிற்றுக்கிழமை சஞ்சுவானியார் கோயிலில் நிகழும் பூசைக்கும் செல்வதற்குத்தான், அன்னராணி வீட்டை விட்டு வெளியே வருவாள். அன்னராணி எப்போதும் கணுக்கால்வரை பாவாடை அணிந்துகொள்வாள். முழுக்கைச் சட்டைதான் அணிவாள். கரையில் கறுப்பு நிற லேஸ் வைத்துத் தைத்த வெள்ளை நிறத் துப்பட்டியைத்தான் தலையில் போட்டுக்கொள்வாள். தாய்க்கும் தகப்பனுக்கும் வால் பிடித்துக்கொண்டே, குனிந்த தலை நிமிராமல் கோயிலுக்குப் போவாள்.

அவள் வயதொத்த பக்கத்து வீட்டுப் பெண்களுடன் வேலியில் நின்று மணிக்கணக்காகக் கதைப்பதும் முடிந்துவிட்டது. அயல் பெண்களெல்லாம் கல்யாணம் முடித்துவிட்டார்கள். அவர்களுக்குப் பேசுவதற்கு நேரமில்லை. எப்போதாவது பேசிக்கொண்டிருக்கும் போது, அயல் பெண்ணின் கணவன் அந்தப் பக்கமாக வந்தால், அன்னராணி விறுவிறுவென்று வேலியிலிருந்து திரும்பி வீட்டுக்குள் புகுந்துகொள்வாள்.

இன்னாசிமுத்து குடும்பத்துக்கு தோட்டம், துரவு, வயல் என்றிருந்ததால் காசு பணத்துக்குப் பஞ்சமில்லை. இருந்தாலும் இருபத்தாறு வயதுவரை அன்னராணிக்கு மாப்பிள்ளை அமையாமலேயே இருந்தது. கிராமத்திலே பெண்களைக் கலைத்துக்கொண்டு திரியும் காவாலிப் பொடியன்கள் அன்னராணி வீட்டுப் பக்கமே வருவதில்லை. அன்னராணி நெருங்க முடியாதவள் என்பதுபோல பொடியன்களிடையே பேச்சிருந்தது. அன்னராணியின் நெடுநெடுவென்ற உயரத்தால் தான் அவளுக்கு மாப்பிள்ளை அமையவில்லை எனத் தாயார் அருளம்மா கவலைப்பட்டுவார். “எங்கிட வம்சத்திலேயே இல்லாத மாதிரி அன்னம் ஒரு உலாந்தாச் சாங்கத்தில பிறந்திருக்கிறாள்” என்பார்.

அன்னராணிக்கு கயிறடிக்கப் பிடிக்கும். ‘ஸ்கிப்பிங்’ கயிறு எதுவும் கடைகளுக்கு வராத காலமது. வேலி வரியும் கயிற்றை அளவாக வெட்டி, இரட்டைப் பட்டாக முறுக்கி வைத்துக்கொண்டுதான், கிராமத்துப் பெண்கள் ஸ்கிப்பிங் செய்வார்கள். அது அப்போது பெண்களின் விளையாட்டாக மட்டுமேயிருந்தது. ஒருநாள் முற்றத்தில் நின்று ஸ்கிப்பிங் செய்து, அன்னராணி மணல் புழுதியைக் கிளப்பிக்கொண்டிருந்த போதுதான்; இளவாலை மாமி, படலையைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார்.

இளவாலை மாமி, இன்னாசிமுத்துவுக்கு சகோதரி முறை. அவர் எப்போதாவது இன்னாசிமுத்துவின் வீட்டுக்கு வந்தாரென்றால் நகை அடகு, கைமாற்று, கோயில் காரியம் என்று ஏதாவது விசயமிருக்கும். இம்முறை அவர் அன்னராணிக்கு ஒரு சம்மந்தம் கொண்டு வந்தார்.

“கோதாரி துரையப்பாவின்ர மூத்தவன், உங்களுக்கு அவையள் சுவக்கீன் பெரியப்புவின்ர வழியில சொந்தம்தானே. பேராதனைப் பட்டதாரி. கொழும்பில வெளிநாட்டுக் கொம்பனியில உத்தியோகம். தேப்பனை மாதிரியில்ல. குடிவெறி வெத்தில சிகரெட் ஒண்டுமில்ல. உங்களட்ட உள்ளதெல்லாம் பொடிச்சிக்குத்தானே…இப்ப இந்த வீட்டையும் வளவையும் எழுதிவிடுங்கோவன். பொடியனுக்கு தங்கச்சிமார் ரெண்டு இருக்கு..அவையளுக்கு டொனேசனா ஆளுக்குப் பத்தாயிரம். கோதாரியற்ற கையில ரொக்கமா இருபத்தையாயிரம். நீங்கள் பொடிச்சிக்கு முப்பது பவுனுக்கு குறைய நகை போடமாட்டியள்.”

மரியநாயகமும் சொந்தக்காரர்களும் இளவாலையிலிருந்து, கார் பிடித்துப் பெண் பார்க்க வந்தார்கள். வீட்டின் கூடத்தில் நாற்காலி போட்டு அன்னராணியை உட்கார வைத்திருந்தார்கள். அன்னராணி ஓர் அரசி போல கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்திருந்தாள். மரியநாயகம், அன்னராணியை விட ஒரு ‘இஞ்சி’ உயரம் குறைவு என்பதுபோல, அன்னராணியின் தாயாருக்குத் தோன்றியது. குசினிக்குள் வந்த இன்னாசிமுத்தரிடம் “கட்டையோ நெட்டையோ பறையாமல் கட்டிக் குடுத்திருவம்..இனியும் வைச்சிருக்க ஏலாது” என்று மெல்லிய குரலில் சொன்னார்.

அப்படியொரு கலாதியான கல்யாணத்தை அந்தக் கிராமம் அதுவரை கண்டதில்லை. மூன்று நாட்கள் கொண்டாட்டம். முதல்நாள் காலை ஆறுமணிக்கு முற்றத்துப் பனைமரத்தில் இரண்டு லவுட் ஸ்பீக்கர்களை கிழக்காகவும் மேற்காகவும் கட்டிவிட்டு, முதற் பாடலாக “கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார்” ஒலித்தபோது, முழுக் கிராமமுமே கல்யாணத்துக்குத் தயாராகிவிட்டது. மரியநாயகத்துக்கு பிஷப் சொந்தக்காரர். எனவே பிஷப்பே நேரடியாகத் தேவாலயத்துக்கு வந்து, மரியநாயகத்துக்கும் அன்னராணிக்கும் கைப்பிடித்து வைத்தார்.

கல்யாணத்திற்குப் பின்பு, மரியநாயகம் அன்னராணியின் வீட்டிலேயே குடியேறிக்கொண்டான். இப்போது அந்த வீடு அவனது பெயரில் இருந்தது. அன்னராணியின் தாயும் தகப்பனும் மருமகனை மரியாதையால் குளிப்பாட்டினார்கள். மரியநாயகம், பிஷப்பின் சொந்தக்காரன் என்பதால் அந்த மரியாதை நாளுக்குநாள் பெருகிக்கொண்டேயிருந்தது.

கொழும்பில், வெள்ளிக்கிழமை மாலை அலுவலக வேலை முடிய இரயில் பிடித்து, சனிக்கிழமை அதிகாலையில் மரியநாயகம், அன்னராணி வீட்டுக்கு வந்துவிடுவான். ஞாயிறு இரவு மறுபடியும் கொழும்புக்கு இரயில் பிடிப்பான்.

கொழும்புப் பழக்கவழக்கமுள்ளவன் என்பதால், அந்தக் கிராமத்திலேயே மரியநாயகம் வித்தியாசமாகத் தோன்றினான். அன்னராணி வீட்டுக்கு பற்பசை, பிரஷ் கூட அவனால்தான் அறிமுகமாயின. மருமகன் காலையில் வாய் நுரைக்கப் பல் துலக்குவதை ஓரக்கண்ணால் பார்ப்பதில் இன்னாசிமுத்தருக்கு ஒரு பெருமை என்றே சொல்லலாம். இன்னொரு பக்கம் அருளம்மா, மருமகனுக்கு முட்டைக் கோப்பி தயாரிப்பதில் கண்ணும் கருத்துமாயிருப்பார்.

மரியநாயகம் காலையிலும் மாலையிலும் கிராமத்துக் கடற்கரைக்கு உலாவப் போவான். அந்தக் கிராமத்தில், மலம் கழிப்பதற்கு மட்டும்தான் மக்கள் கடற்கரைக்குப் போவதுண்டு. எனவே கடற்கரையின் தாழம்புதர்கள் மறைவில் மரியநாயகம் ஒவ்வொருநாளும் நடந்து திரிவதை மக்கள் சந்தேகத்தோடு பார்த்ததில் தவறொன்றுமில்லை. “மூப்பற்ற மருமோன் ஒரு போக்கு” என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள். அன்னராணி குடும்பத்துக்கே மரியநாயகத்தின் போக்குப் பிடிபடவில்லை. காலையும் மாலையும் கடற்கரையில் சும்மா நடந்து திரிந்தால் என்னதான் அர்த்தம்?

இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், மரியநாயகம் கடற்கரைக்கு உலாவப் போகும்போது, அன்னராணியையும் தன்னுடன் கூடவே வருமாறு வற்புறுத்தினான். அன்னராணிக்கு இது பிடிக்கவேயில்லை. அவளுக்கு வீட்டைவிட்டு வெளியே போவதென்றாலே பெரிய அரியண்டமாக இருக்கும். தலையைக் குனிந்துகொண்டே தெருவிலும் வெளியிலும் நடப்பதைக் காட்டிலும், வீட்டுக்குள்ளேயே சுதந்திரமாக இருந்துவிடலாம் என்றுதான் அவள் எண்ணுவதுண்டு. மரியநாயகத்தோடு அவள் கடற்கரையில் நடக்கும்போது, ஒருதடவை தாழம்புதர்களிடையே இருந்து யாரோ கேலியாகக் கூச்சலிடுவது போலிருந்தது. மரியநாயகம் தன்பாட்டுக்கு வேகமாக நடந்துகொண்டிருந்தான். அன்னராணி தான் ஆயிரம் தடவைகள் பின்னால் திரும்பிப் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தாள்.

யாழ்ப்பாண நகரத்துக்கு சினிமா பார்க்கவும் மரியநாயகம் போவதுண்டு. ஆங்கிலப் படங்கள் மட்டுமே பார்ப்பான். அன்னராணியையும் கட்டாயப்படுத்தித் தன்னோடு அழைத்துச் செல்வான். ஆங்கிலப் படங்கள் காண்பிக்கப்படும் தியேட்டர்களில் பெண்களே இருக்கமாட்டார்கள். மொத்த அரங்கிலும் அன்னராணி மட்டுமே பெண்ணாக இருப்பாள். திரையில் வரும் உருவங்கள் அரைகுறை ஆடையிலோ, எப்போதாவது நிர்வாணமாகவோ தோன்றும்போது, அன்னராணிக்கு உடல் முழுவதும் நடுங்கத் தொடங்கிவிடும். திரையரங்கில் பல தலைகள் தன்னையே பார்ப்பதாக அவள் உணர்வாள். மரியநாயகமோ திரைப்படத்தில் ஆழ்ந்துவிடுவான். திரும்பி வரும்போது, படத்தைப் பற்றி அன்னராணியுடன் பேசுவான். அப்போது அன்னராணிக்குக் கூட ‘இவரொரு போக்கு’ என்று தோன்றத்தான் செய்யும்.

கல்யாணம் நடந்த மூன்றாவது மாதத்திலேயே கென்னடி, அன்னராணியின் வயிற்றில் கருவாகிவிட்டான். ஆறாவது மாதத்தில், தான் வெளிநாடு போகப் போவதாக மரியநாயகம் சொன்னான். அவன் வேலை செய்த நிறுவனமே அவனைப் பின்லாந்து நாட்டுக்கு மேற்படிப்புக்கு அனுப்புகிறதாம். இரண்டு வருடப் படிப்பு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறையில் வருவேன் எனச் சொல்லிவிட்டு மரியநாயகம் பின்லாந்துக்குப் போய்விட்டான். ஆனால், அவன் ஒருபோதும் திரும்பி வரவேயில்லை.

முதல் ஆறுமாதங்களுக்கு அவனிடமிருந்து, அன்னராணிக்குக் கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. பின்பு அதுவும் நின்றுபோயிற்று. கைக்குழந்தையையும் வைத்துக்கொண்டு, அன்னராணி பரிதவித்துக்கொண்டிருந்தாள். மரியநாயகத்தின் பெற்றோருக்கும் கடிதங்கள் வருவதில்லை. ஒரு வருடத்திற்குப் பிறகு மரியநாயகத்தின் கடிதம் பிரான்ஸிலிருந்து வந்தது.

பின்லாந்து நாடு மரியநாயகத்துக்கு ஒத்துவரவில்லையாம். கடும் குளிரான துருவப் பகுதியில் தனிமையில் இருக்க முடியாமல் பிரான்ஸுக்குப் போய்விட்டானாம். அங்கே அவனுக்கு நண்பர்கள் இருக்கிறார்களாம். அவர்களோடு சேர்ந்து தொழில் தொடங்கப்போகிறானாம். விரைவிலேயே அன்னராணியையும் பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்வதாக எழுதியிருந்தான். குழந்தை கென்னடியின் நலத்தை விசாரித்தும் ஒரு வார்த்தை எழுதியிருந்தான்.

காணாமற்போன கணவனிடமிருந்து, கடிதம் வந்திருக்கிறது என அன்னராணி சந்தோஷப்பட்டதை விட, தன்னையும் அவன் வெளிநாட்டுக்கு அழைக்கிறான் என்ற பதற்றமே அவளிடம் அதிகமாகயிருந்தது. இன்னாசிமுத்து இந்தச் செய்தியை இரகசியமாகவே வைத்திருக்குமாறு அன்னராணியிடம் சொன்னார். மகளும் பேரப்பிள்ளையும் வெளிநாடு போகப் போகிறார்கள் என ஊரார்கள் அறிந்தால், கண்ணூறு பட்டுப் பயணம் தடங்கலாகிவிடும் என அவர் சொன்னார்.

ஆனால், மரியநாயகம் உடனடியாக அன்னராணியை அழைத்துக்கொண்டு விடவில்லை. கடிதமும் பணமும் ஒழுங்காக அனுப்பினானே தவிர, அன்னராணியை அழைத்துக்கொள்ள முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை. அன்னராணியும் தன்னை அழைத்துக்கொள்ளுமாறு கேட்கவுமில்லை. அவள் இப்போது குழந்தை கென்னடியோடு சேர்ந்து ஸ்கிப்பிங் விளையாடத் தொடங்கிவிட்டாள். கென்னடிக்கு ஆறு வயதான போதுதான், அவர்கள் பிரான்ஸ் வந்து சேர்ந்தார்கள்.

3

அப்போது, பாரிஸ் நகரத்தில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் அவர்கள் இருந்தார்கள். மரியநாயகம் ஒரு சுத்திகரிப்பு நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்தார். இருபத்தைந்து தமிழர்கள் அவரிடம் வேலை செய்தார்கள். பொருட்காட்சி மண்டபங்களிலும், சந்தைகளிலும் சுத்திகரிப்பு ஒப்பந்தங்களைப் பெற்று மரியநாயகம் பரபரப்பாகத் தொழில் செய்துகொண்டிருந்தார். ஓய்வு நேரங்களில் அன்னராணியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு நண்பர்களது வீடுகளுக்குப் போனார். அல்லது நண்பர்கள் இவரது வீட்டுக்கு வந்தார்கள்.

இப்போது மரியநாயகம் நிறைவாக மது அருந்துகிறார். அவர் குடிக்காத நாளில்லை. அதுபற்றி அன்னராணிக்கு ஒரு பிரச்சினையுமில்லை. சொல்லப்போனால், படுக்கையில் மரியநாயகத்தின் மீது வீசும் மதுவின் நெடி அன்னராணிக்குப் பிடித்துத்தானிருந்தது. இன்னாசிமுத்துவும் காலையும் மாலையும் கள் குடிப்பவர்தான். அன்னராணி சிறியவளாக இருந்தபோது, அவளுக்கும் ஒரு சிரட்டையில் சிறிது கள் வார்த்துக் கொடுப்பார். “ஒரு பனைக் கள்ளு உடம்புக்கு நல்லது பிள்ள” என்பார். பனங்கள்ளின் புளிப்பான தித்திப்பு அன்னராணிக்குப் பிடித்திருந்தது. அன்னராணி பெரியபிள்ளையாகும் வரை, அவ்வப்போது ஒரு சிரட்டைக் கள் குடித்துக்கொண்டுதானிருந்தார்.

ஆனால், மரியநாயகம் எப்போதும் தன்னையும் குழந்தையையும் வெளியே அழைத்துப்போவது, அல்லது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருவதாக இருந்ததை அன்னராணியால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. எப்போதும் சீவிச் சிங்காரித்துக்கொண்டு இருப்பதையும், வீட்டுக்கு வருபவர்களுக்குப் பல்லைக் காட்டிக்கொண்டு வரவேற்பதையும் அன்னராணி வெறுத்தார். அதேபோல, மரியநாயகத்தின் நண்பர்களின் வீடுகளுக்குப் போகவும் அவர் விரும்பவில்லை. அந்த நண்பர்கள் கூட்டத்தில், அப்போது மரியநாயகம் மட்டுமே திருமணமானவராக இருந்தார். அந்தக் கூட்டத்துக்கு நடுவே ஒரேயொரு பெண்ணாக, ஆறு வயதுக் குழந்தையையும் வைத்துக்கொண்டு அன்னராணி அல்லாடிக்கொண்டிருந்தார்.

எப்போதும் கழுவித் துடைத்த முகமாகவும், ஒப்பனை செய்துகொண்டும், நல்ல ஆடைகளை அணிந்துகொண்டும் இருக்க வேண்டுமென்று, அன்னராணிக்கு இடைவிடாமல் மரியநாயகம் அறிவுறுத்தியபடியே இருந்தார். அதைச் செய்ய அன்னராணி சுணங்கினால் ‘தீவாள்’ என்று கண்டிக்கவும் செய்தார். ஆனால், அன்னராணியில் காட்டிய அக்கறையில் சிறு துளியைக் கூட மரியநாயகம் குழந்தை கென்னடி மேல் காட்டினாரில்லை. அந்தக் குழந்தையும் தகப்பனோடு சேர்வதுமில்லை. அன்னராணியிடம் எரிந்து விழுவதிலும் அதிகமாகக் குழந்தை மீது மரியநாயகம் எரிந்து விழுந்தார். குழந்தையும் துடியாட்டமான குழந்தைதான். அடிக்கடி தந்தையிடம் ஏச்சும் பேச்சும் வாங்கினான். இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்குக் கூட மரியநாயகம் மறுத்துவிட்டார். அன்னராணியின் முலைகளைப் பிசைந்துகொண்டே “இன்னொரு பிள்ளப் பெத்தால் உன்ர உடம்பு நொந்துபோகும் அன்னம்” என்றார்.

மரியநாயகத்துக்குத் தன்னுடைய வெற்றிகரமான சுத்திகரிப்பு நிறுவனம், வைத்திருந்த ஆடம்பரக் கார் போன்றவற்றில் தாளாத பெருமையிருந்தது. அதுபோலவே பெண்சாதியையும் வைத்துக்கொண்டு ஊராருக்குப் பெருமை காட்டுவதிலேயே கணவர் ஆர்வமாகயிருக்கிறார் என்பது போலத்தான் அன்னராணிக்குத் தோன்றியது. அன்னராணி பிரான்ஸு க்கு வந்த இரண்டு வருடங்களின் பின்பு, இந்த ராணி மஹாலை மரியநாயகம் வாங்கினார்.

பாரிஸ் நகரத்திலிருந்து சற்றுத் தொலைவாக வந்துவிட்டதால், இனியாவது சற்று அமைதியும் தனிமையும் கிட்டும் என்றுதான் அன்னராணி நினைத்தார். ஆனால், திடீர் திடீரென்று அன்னராணியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு மரியநாயகம் காரில் நண்பர்களின் வீடுகளுக்குப் புறப்பட்டுவிடுவார். அல்லது நண்பர்கள் ராணி மஹாலுக்கு வருவார்கள். குடியும் பாட்டும் கூத்துமாக வீடு அலறும். இந்த ஆர்ப்பாட்டங்களையெல்லாம் அன்னராணியால் சகித்துக்கொள்ள முடியாமலிருந்தது. அன்னராணியின் தாயும் தந்தையும் ஒருவர் பின் ஒருவராக இறந்தபோது கூட, அன்னராணியை ஊருக்கு அனுப்பிவைக்க மரியநாயகம் சம்மதிக்கவில்லை. ‘இப்போது இலங்கையில் கடுமையாகச் சண்டை நடக்கிறது’ என்று சொல்லிவிட்டார்.

மரியநாயகத்துக்கு மனைவியை அடிக்கும் பழக்கம் அறவே கிடையாது. ஆனால், அன்னராணியை அவமதிக்காமல் அவருக்குப் பேசவே தெரியாது. அன்னராணியின் இளமையும் பொலிவும் குறையக் குறைய, இந்தச் சீண்டல் பேச்சுகளும் அவமதிப்பும் அதிகரித்துக்கொண்டே வந்தன. மரியநாயகம் குழந்தை கென்னடியைக் கூட எப்போதும் நொட்டை சொல்லி ஏசிக்கொண்டேயிருப்பார். ஆனாலும் அவர் குடிவிருந்துக்குப் போனாலோ, ஏதாவது நிகழ்ச்சிகளுக்குப் போனாலோ அன்னராணியை அழைத்துக்கொண்டே போவார். கடை கண்ணிகளுக்குக் கூட அன்னராணியைத் தனியே அனுப்பமாட்டார். குழந்தையைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லவும், அழைத்து வரவும், சம்பளத்துக்கு ஓர் ஆபிரிக்க ஆயாவைப் பிடித்தார். தேவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமைப் பூசைக்கோ நத்தார், ஈஸ்டருக்கோ மரியநாயகம் கூட வராமல் அன்னராணியால் தனியே செல்லவே முடியாது. மரியநாயகம் ஏதாவது தொழிற் பிரச்சினையில் சிக்கிக்கொண்டால், அந்த ஞாயிறு அன்னராணிக்குப் பலிப்பூசை கிடையாது.

ராணி மஹால் வரவர முழுநேர விசாரணைக் கூடமாக மாறிக்கொண்டிருந்தது. ஓயாமல் ஏசிக்கொண்டிருக்கும் மரியநாயகத்தின் வார்த்தைகளின் வெம்மையில் அன்னராணியின் காதுகள் தீய்ந்துபோயின. இரவு முழுப் போதையேறியவுடன்; அன்னராணியின் பழக்கவழக்கம் சரியில்லை, தன்னை மதித்து நடக்கவில்லை, குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்று ஏதாவதொரு காரணத்தைக் கண்டுபிடித்து மரியநாயகம் மனைவியையும் குழந்தையையும் நிறுத்தாமல் திட்டிக்கொண்டேயிருப்பார். ராணி மஹாலின் விசாலமான கூடத்தின் நட்ட நடுவாக நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு “பொறுத்தல் கேளு அன்னம்” என்பார்.

தன்னுடைய தந்தை இன்னாசிமுத்துவிடம், தாயார் அருளம்மா ஓரிருமுறை பொறுத்தல் கேட்டதைச் சிறுமியாக இருந்தபோது அன்னராணி கண்டிருக்கிறார். ஆனால், மரியநாயகமோ ஒவ்வொரு நாளும் பொறுத்தல் கேட்கச் சொன்னார்.

நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் மரியநாயகத்தின் பக்கவாட்டில் நின்றவாறே, அன்னராணி தான் செய்த பாவங்களைச் சொல்லி மரியநாயகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்போதெல்லாம் அன்னராணி தான் செய்த பாவங்களையும் குற்றங்களையும் கண்டுபிடிக்க மிகச் சிரமப்படுவார். ஒவ்வொரு நாளும் ஏதாவது புதுப் பாவங்களைச் சொல்லி, அன்னராணி தன்னிடம் மன்னிப்புக் கேட்ட வேண்டுமென்று மரியநாயகம் எதிர்பார்த்தார். அப்படிப் பாவங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் அன்னராணி திணறியபோது, தாயையும் குழந்தையையும் ராணி மஹாலுக்கு வெளியே தள்ளி, மரியநாயகம் எல்லா வாசற்கதவுகளையும் மூடிவிடுவார்.

எத்தனையோ இரவுகள், தாயும் பிள்ளையுமாகக் குளிரில் நடுங்கிக்கொண்டு, அலங்கார வாசற்படிகளில் உட்கார்ந்திருப்பார்கள். காலை நான்கரை மணிக்கு, நடைப் பயிற்சிக்குப் போகும்போதுதான் மரியநாயகம் மறுபடியும் வாசற்கதவைத் திறப்பார். குழந்தையைத் தூக்கிச் சென்று, படுக்கையில் கிடத்திவிட்டு, அன்னராணி கணவருடன் நடைப் பயிற்சிக்குப் போக வேண்டும். அன்னராணி இல்லாமல் மரியநாயகம் நடைப் பயிற்சிக்குப் போகமாட்டார்.

மாலையானதுமே, அன்னராணி இரண்டு கம்பளிப் போர்வைகளையும் தண்ணீர்ப் போத்தல்களையும் அலங்கார வாசற்படிகளுக்கு அடியில் மறைத்து வைத்துவிடுவார். இரவில் வெளியே துரத்தப்பட்டதும் அந்தப் போர்வைகளால் தன்னையும் குழந்தையையும் மூடிக்கொண்டு, குழந்தையை மடியில் தூங்க வைப்பார்.

தந்தை வீட்டில் இல்லாத நேரங்களில், குழந்தை கென்னடி கூடத்தின் நடுவேயிருந்த உயரமான நாற்காலியின் பக்கவாட்டில் நின்றுகொண்டிருப்பான். பின்பு வெளியே போய் வாசற்படியில் குந்திக்கொள்வான். திடீரெனக் காணாமற்போவான். அன்னராணி வீட்டின் ஒவ்வொரு அறையாகத் தேடித்தேடி அவனைக் கண்டுபிடிப்பார்.

கென்னடிக்குப் பதினான்கு வயதாக மூன்று நாட்கள் இருந்தபோதுதான், அவன் இறந்துபோனான். அன்று இரவு, மரியநாயகம் மெல்லிய குரலில் அன்னராணியைத் திட்டியவாறே, பொறுத்தல் கேட்க அழைத்தபோது கென்னடி ஓடிப்போய் எங்கேயோ ஒளிந்துகொண்டான். மரியநாயகம் வீடு முழுவதும் தேடியும் கென்னடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆத்திரத்தோடு அன்னராணியை ராணி மஹாலுக்கு வெளியே தள்ளிக் கதவுகளை மூடிக்கொண்டார். அன்னராணி வாசற்படியில் உட்கார்ந்தவாறே, தனது காதுகளை வாசற்கதவில் வைத்திருந்தார். அதிகாலை மூன்று மணிக்கு அந்த வாசற்கதவை மரியநாயகம் திறந்தார். அன்னராணி உள்ளே போய்ப் பார்த்தபோது, சமையலறை உத்திரத்தில் கட்டப்பட்டிருந்த ஸ்கிப்பிங் கயிற்றில் கென்னடி சடலமாகத் தொங்கிக்கொண்டிருந்தான்.

“என்ன பாவம் செய்துபோட்டு இவன் தூக்கில தொங்கியிருக்கிறான்” என்று கேட்டுத் தனது நெற்றியில் உள்ளங்கையால் ஓங்கி அறைந்துகொண்டார் மரியநாயகம்.

கென்னடியின் மரணத்துக்குப் பின்பு, மரியநாயகம் கொஞ்சம் அடங்கித்தான் போனார். காவல்துறை மரியநாயகத்தையும் அன்னராணியையும் துருவித் துருவி விசாரித்தது. தற்கொலைதான் என்பதற்கான உறுதியான அடையாளங்களைச் சமையலறையில் கென்னடி விட்டுவிட்டுத்தான் போயிருந்தான்.

அடுத்த வருடமே அன்னராணியை மரியநாயகம் மறுபடியும் கர்ப்பவதியாக்கினார். பொறுத்தல் கேட்க அழைப்பதும், வீட்டுக்கு வெளியே தள்ளிக் கதவை மூடுவதும் முற்றாக நின்று போயிற்று. இரண்டாவது குழந்தை பிலிப்போடு மரியநாயகம் பாசமாகத்தான் நடந்துகொண்டார். தன்னுடைய இருபதாவது வயதில் பிரஞ்சுப் பெண்ணான ரோஸாவை, ராணி மஹாலுக்கு அழைத்துவந்து, காதலி என பிலிப் அறிமுகப்படுத்தி வைத்தபோது, மரியநாயகம் வாயெல்லாம் பல்லாக ரோஸாவை வரவேற்று, அவளது கன்னங்களில் முத்தமிட்டார். அன்னராணியையும் அழைத்துக்கொண்டு ரோஸாவின் வீட்டுக்குப் போய், ரோஸாவின் பெற்றோரோடு விருந்து கொண்டாடினார்.

ரோஸா அவ்வப்போது ராணி மஹாலுக்கு வந்து கொஞ்ச நேரம் காத்திருந்து, பிலிப்பை அழைத்துக்கொண்டு போவாள். அப்போதெல்லாம் மரியநாயகம் முகமெல்லாம் பூரித்துப்போய், ரோஸாவிடம் தொணதொணவென்று பிரஞ்சு மொழியில் பேசியவாறேயிருப்பார். அன்னராணி ரோஸாவுக்குக் குடிக்கவோ சாப்பிடவோ ஏதாவது கொடுப்பதோடு அங்கிருந்து விலகிப் போய்விடுவார். ரோஸாவிடம் பேசுவதற்கு அன்னராணிக்கு பிரஞ்சு மொழியும் தெரியாது. ரோஸாவும் அப்படியொன்றும் கலகலப்பாகப் பழகும் பெண்ணில்லை. எப்போது பார்த்தாலும் மெலிதாகப் புன்னகைத்தபடி பதுமை போலிருப்பாள். அதிகமாகப் பேச மாட்டாள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ரோஸாவின் அப்பார்ட்மென்டுக்கே பிலிப் குடி போய்விட்டான். அதற்குப் பின்பு இரண்டோ மூன்று தடவைகள்தான் ரோஸா, ராணி மஹாலுக்கு வந்திருக்கிறாள். பிலிப், ராணி மஹாலிலிருந்து போன பின்பாக, அந்தப் பென்னம் பெரிய வீடு அமைதியில் மூழ்கிக் கிடந்தது. மரியநாயகம் தொழிலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எப்போதாவது ஒருமுறைதான் நண்பர்களைப் பார்க்க வெளியே போவார். அப்போதும் அன்னராணி திருத்தமாகச் சீவிச் சிங்காரித்துக்கொண்டு, கூடவே போக வேண்டும்.

இப்போது தனித் தனி அறைகளில் தூங்கிக்கொள்ளலாமா என ஒருமுறை அன்னராணி மரியநாயகத்திடம் மெதுவாகக் கேட்டார். அன்னராணி விரும்பும், ஏங்கும் அந்தத் தனிமை எழுபது வயதுக்குப் பிறகாவது தனக்குக் கிடைத்துவிடும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால், மரியநாயகம் அதற்குச் சம்மதிக்கவில்லை. தன்னுடைய எழுபத்தைந்து வயதிலும் அன்னராணி இல்லாமல் அவர் ஒருநாளும் படுக்கையில் இருந்ததில்லை. அன்னராணி இல்லாமல் வெளியே செல்வதுமில்லை. அன்னராணி தயங்கினால் எப்போதும் போலவே எரிச்சலான வார்த்தைகளைக் கொட்டி, மரியநாயகம் அவமதித்தார். மரியநாயகம் இறக்கும்போது, தன்னையும் கூடவே அழைத்துச் சென்று விடுவார் என்று அன்னராணி உறுதியாக நம்பியிருந்தார்.

4

பிலிப் தனது அறைக்குள் தூங்கச் சென்ற சில நிமிடங்களிலேயே, அவனுடைய குரல் கலவரமாகக் குழம்பி ஒலிப்பது, நாற்காலியில் சாய்ந்திருந்த அன்னராணியின் காதில் விழுந்தது. பிலிப் இடது கையில் அலைபேசியை வைத்துக்கொண்டு, முகத்தில் பதற்றத்துடன் மெதுவாக நடந்துவந்து, நாற்காலியில் சாய்ந்திருந்த அன்னராணியின் தோள்களை வலது கையால் அணைத்துக்கொண்டு, வார்த்தைகளைத் தடுமாற்றமாக உச்சரித்தான்:

“மம்மி…நீங்க பதட்டப்படக் கூடாது. ஒரு மெசேஜ் வந்திருக்கு…உண்மையோ தெரியாது. பொலிஸ் இப்ப எனக்கு போன் பண்ணினது…பப்பா செத்துக் கிடக்கிறாராம்…” அதற்கு மேல் பேச முடியாமல், பிலிப் வாயை மூடிக்கோண்டு விம்மி அழத் தொடங்கிவிட்டான். அவனது கண்ணீர் அன்னராணியின் முகத்தில் விழுந்தது. அன்னராணி, பிலிப்பின் கையை வருடியபடியே சொன்னார்.

“பிலிப்..நீ கொஞ்சம் அமைதியா இரு..ரோஸா வரட்டும்”

“இல்ல மம்மி. பொலிஸ் என்ன உடன வரச் சொல்லியிருக்கு.. நான் உங்களையும் கூட்டிக்கொண்டு வாறன் எண்டு சொன்னனான்..மெல்லமா எழும்பி வாங்கோ போவம்..”

“போகலாம் பிலிப்… நீ கொஞ்ச நேரம் உந்தக் கதிரையில இரு. ரோஸா வரட்டும்” என்று சொல்லிவிட்டு, அன்னராணி நாற்காலியில் இன்னும் நன்றாகச் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார்.

இன்று காலை நான்கரை மணிக்கு, மரியநாயகம் நடைப் பயிற்சிக்குக் கிளம்பும்போது, எப்போதும் போலவே அன்னராணியையும் கூடவே அழைத்துச் சென்றார். இப்போதெல்லாம் அவர்கள் பேசிக்கொள்வது மிக அரிது. அப்படியே பேசினாலும் மரியநாயகமே பேசுவார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் அன்னராணி மீது அவமானத்தை மட்டுமே பூசும்.

காட்டுக்குள் ஒரு சுற்று நடந்துவிட்டு, எப்போதுமே உட்காரும் மர இருக்கையில் இருவரும் அமர்ந்துகொண்டார்கள். மரியநாயகம் தனது கைத்தடியை நிலத்தில் ஊன்றி, அதில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு, முதுகை வளைத்துத் தனது அரைவாசி உடற்பாரத்தைக் கைத்தடியில் நிறுத்தியிருந்தார். அந்தக் கைத்தடியை பழமைவாய்ந்த அரிய பொருட்களை விற்கும் சந்தையில் சென்ற வாரம்தான் வாங்கியிருந்தார். உறுதியான மரத்தில் செதுக்கப்பட்டிருந்த அந்தக் கைத்தடியின் பிடியிலும் அடியிலும் பித்தளையாலும் வெள்ளியாலும் பூண்கள் போடப்பட்டிருந்தன. மரியநாயகம் அன்னராணிக்குக் கேட்பதுபோல மெதுவாக முணுமுணுத்தார்:

“பின்னேரம் நாங்கள் இராசேந்திரத்தின்ர வீட்டுக்குப் போகவேணும்…அவன்ர எழுவதாவது பிறந்தநாள். போகாட்டிக் குறையாப் போயிடும்”

அன்னராணியும் பதிலுக்கு மெதுவாக முணுமுணுத்தார்:

“எனக்கு உடம்பு ஏலாமக் கிடக்கு…நான் வரயில்ல”

“ஏன் உமக்கு உடம்புக்கு என்ன? சாமானில அரிப்பா?”

அன்னராணி எதுவும் பேசாமல் தூரத்தே பார்த்தவாறு கைகளைக் கட்டிக்கொண்டிருந்தார். இப்படியான ஏச்சுப் பேச்சுகள் அவரைக் கோபப்படுத்துவதில்லை. ஆனால், அவமானம் பல வருடங்களாக அவரைத் தின்று தேய்த்துக்கொண்டிருக்கிறது. தென்னை போல வளர்ந்திருந்த அந்தத் ‘தீவாள்’ இப்போது முதுகு கூனியும் தசை வற்றியும் தோல்கள் சுருங்கியும், பாவைக் கூத்தில் காட்டப்படும் ஆட்டுத்தோல் சித்திரம் போலக் கிழிந்திருக்கிறார்.

மரியநாயகம் சற்றுநேரம் அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். பின்பு பிரஞ்சு மொழியில் என்னவோ உரக்கச் சொன்னவாறே, கைத்தடியைத் தூக்கிச் சற்றுத் தூரத்தே விட்டெறிந்தார். அவரது வாயில் எச்சில் தெறித்தது. அன்னராணி அமைதியாக உட்கார்ந்திருந்தார். மெதுவாக எழுந்த மரியநாயகம், தனது வலது சுட்டுவிரலால், தரையில் கிடந்த கைத்தடியைக் காட்டினார். மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் தனது மார்பில் தேய்த்துவிட்டு, மறுபடியும் அணிந்துகொண்டு, அன்னராணியைப் பார்த்தார். அன்னராணி மெதுவாக எழுந்து நடந்துபோய், மெல்லக் குனிந்து கைத்தடியை எடுத்துக்கொண்டு, கணவனிடம் கொடுக்க வந்தார். அப்போது மரியநாயகத்தின் வாய் முணுமுணுத்தது:

“நீயும் உன்ர மூத்த மகனைப் போல தொங்க வேண்டியதுதானே…”

கைத்தடியைக் கொடுக்க வந்த அன்னராணி அப்படியே நின்றார். வெறுமனே நாற்பத்தைந்து கிலோ எடை மட்டுமேயுள்ள அவரது வற்றிய உடம்புக்குள் இரத்தம் ஓடாமலேயே நின்றுபோவதை உணர்ந்தார். அவரது கைகள் விறைத்துக்கொண்டு வந்தன. கால்கள் முன்னே போயின. கண்களை விரித்து மரியநாயகத்தின் முகத்தைப் பார்த்தவாறே, கைத்தடியை விசிறி மரியநாயகத்தின் முகத்தில் அடித்தார். சப்பென மூக்குக் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. “நான் என்ன பாவம் செய்தனான்? என்னை ஏன் அடிக்கிறாய்?” என்று நிதானமாகக் கேட்டார் மரியநாயகம்.

நெற்றியை இடது கையால் பொத்திப் பிடித்தபடி, வலது கையை நீட்டிக் கைத்தடியை அன்னராணியிடமிருந்து பிடுங்கிக்கொள்ள மரியநாயகம் முயன்றபோது, அன்னராணி மறுபடியும் கைத்தடியை விசிறி மரியநாயகத்தின் கையில் அடித்தார். மரியநாயகம் ஏதோ பேச முயன்றபோது, அன்னராணி கைத்தடியால் மரியநாயகத்தின் உச்சந்தலையில் அடித்தார்.

பிலிப், அன்னராணியின் தோளை வருடிக் கொடுத்தவாறு “மம்மி… நான் போய் என்னெண்டு பார்க்கிறன்…பப்பாவின்ர உடம்பு காட்டுக்க கிடக்குதாம்” என்றான்.

“பிலிப்! நீ இப்ப போக ஏலாது…ரோஸா வந்ததும் நான் சொல்றத நீ தான் அவவுக்குப் பிரஞ்சில சொல்ல வேணும்!”

“என்ன சொல்ல வேணும் மம்மி…என்னட்டச் சொல்லுங்கவன்..”

தனது தோளிலிருந்த பிலிப்பின் கையை வருடிவிட்டு, அன்னராணி நாற்காலியில் இன்னும் நன்றாகச் சாய்ந்துகொண்டே சொன்னார்:

“இல்ல மகன்…உனக்கு விளங்காது!”

வாசற்கதவுக்கு வெளியே காலடிச் சத்தம் கேட்டது. அப்போது தாயும் மகனும் சுவரிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தார்கள்.

(மணல்வீடு – மார்ச் 2021)

6 thoughts on “ராணி மஹால்

  1. ராணி மஹால் – நுட்பமான கதை. நேர்க்கோட்டில் கதை பயணிக்காமல் non-linear வடிவில் சொல்லி இருப்பது இன்னும் அடர்த்தியைக் கூட்டுகிறது.அன்னராணி கதாபாத்திரம் இறுதியில் ஒரு புள்ளியில் குவிவது பெரிய விரிவை உருவாக்கிவிடுகிறது.

    சின்ன சின்ன காட்சிகள் கதையின் அடுக்குகளாக அமைகின்றன.உதாரணத்திற்க்கு , ‘தெரு முடக்கிலிருந்த ‘பேக்கரி’ மட்டுமே திறந்திருந்தது.’

    கென்னடி கதாபாத்திரம் மனதை தைக்கும் நெகிழ்வு. கதையில் இருக்கும் நிதானமும் பொறுமையும் மேலும் வனப்பைக் கூட்டுகின்றன. மரியநாயகம் கதாபாத்திரம் நல்ல செறிவு.

    இன்னும் ஒருமுறை, பலமுறை படிக்கலாம்.அப்போது விரலிடுக்கில் நழுவிப்போகும் நீராக இல்லாமல் மேலும் நாம் உணரலாம்.

    கதை மனதில் அசரீரி போல் கேட்டுகொண்டிருக்கிறது.
    ஷோபாவிடம் உள்ளது எழுத்தின் துல்லியம்

  2. எப்போதும் போலவே ஷோபா ஷோபா தான். யாரும் அவரின் படைப்பின் போக்கை ஊகிக்க முடியாது.

  3. அருமை. சிறிது சிறிதாக அடக்கி வைக்க பட்டு இருந்த ஆற்றாமை இறுதியில் பொங்கி வெடித்தது.

  4. அன்னராணியின் கதாபாத்திரம் அற்புதமாகக் கட்டமைக்கப் பட்டுள்ளது. அவர் மரியநாயகத்தைக் கொல்லாமல் விட்டிருந்தால், கதையில் ஒரு தொய்வு ஏற்பட்டிருக்கும். வட இலங்கையிலும், பாரிஸ் புறநகர்ப் பகுதிகளிலும் விரிவாகப் பயணம் செய்தது போன்ற ஒரு நிறைவு. சில நாட்களாவது, இந்தக் கதாபாத்திரங்கள் எம்மோடு தொந்திரவு செய்த படியே பயணம் செய்ய்யும். ஒவ்வொருமுறையும், ஆழ்ந்த அனுபவத்தைத் தொடர்ந்து வழங்கும் ஷோபாவிற்கு ஆயிரம் நன்றி.

  5. இது வரை ஒரு முறை கூட ஏமாற்றாத சோபா இம்முறையும், அழகிய வளமான தமிழால், நுண்ணறிவுடன், சிறிதும் தொய்வில்லாமல், கிட்டதட்ட எல்லாவிதமான உணர்வுகளையும், எனக்குள் ஏற்படுத்திவிட்டார் ராணி மகாலிலும்.. ஆரத்தழுவி வாழ்த்துகிறேன் சோபா..🫂😘🫂

  6. அடங்கிக்கிடந்த எரிமலை பொங்கி வெடித்ததுபோல அன்னராணி – வக்கிரத்தின் வடிவமாய் மரியநாயகத்தார்- இரண்டுபேரையும் வைத்து இளவாலையிலிருந்து பாரிஸ் வரைக்கும் ஒரு நெடிய வாழ்க்கைப் பயணத்தை அற்புதமாய் சொல்லி விட்டீர்கள்,ஷோபா. உங்களுக்கே உரிய தனித்துவமான கதை வடிவம்! ஆழ் மனதை ஊடுருவும் எழுத்து நடை!! அருமை !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *