வம்பும் வரலாறும்

கட்டுரைகள்

க.கைலாசபதியைக் குறித்த ஒரு சாதிய வம்புச் செய்தி ஏறக்குறைய அய்ம்பது வருடங்களுக்கு மேலாகவும் தமிழ் இலக்கிய உலகில் சோர்வில்லாமல் சுற்றிவருகிறது. என்.கே. ரகுநாதன் எழுதிய ‘நிலவிலே பேசுவோம்’ சிறுகதையை ஒட்டியே இந்த வம்பு எழுந்தது.

‘நிலவிலே பேசுவோம்’ கதையின் மைய இழை இதுதான்: சிவப்பிரகாசம் என்ற ஆதிக்க சாதியைச் சேர்ந்த பிரமுகர் தீண்டாமை ஒழிப்புக் குறித்துப் பொதுவெளியில் ஆவேசமாக உரை நிகழ்த்துகிறார். ஆனால், தனது வீட்டுக்கு வரும் தாழ்த்தப்பட்டவர்களை வீட்டுக்குள்ளே அனுமதியாமல் “நிலவிலே பேசுவோம் வாருங்கள்” என முற்றத்தில் வைத்தே உரையாடி அனுப்பிவிடுகிறார்.

இந்தக் கதையில் வரும் ‘பிரமுகர் சிவப்பிரகாசம்’ என்ற பாத்திரம் கைலாசபதியையே குறிக்கிறது என்பதுதான் அந்த இலக்கிய வம்புச் செய்தி. இந்த வம்புச் செய்தியைக் காவியும் பரப்பியும் திரிந்தவர்களைக் குறித்து சி.சிவசேகரம் தனது ‘அச்சேறாத ஒரு மடல்’ என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். லெ. முருகபூபதியும் ‘சில நினைவுகளும் சிந்தனைகளும்’ என்ற தனது கட்டுரையில் இந்த வம்பாளர்களைக் குறித்து எழுதியுள்ளார். கைலாசபதி குறித்த அந்த வம்புச் செய்தியில் ஏதாவது உண்மையுண்டா?

‘நிலவிலே பேசுவோம்’ கதை பிரசுரமான ஆண்டு 1951. அப்போது கைலாசபதிக்கு வெறும் 18 வயதுதான். அப்போது அவர் கல்லூரி மாணவராகயிருந்தார். இந்தக் கதை வெளியாகும் போது கைலாசபதி பிரமுகரும் கிடையாது, அவரை இலக்கிய உலகிலோ அரசியல் உலகிலோ எவருக்கும் தெரியாது. என்.கே.ரகுநாதன் ‘அநிச்ச’ இதழுக்கு வழங்கிய நேர்காணலில், இந்தக் கதையைத் தன்னுடைய 19-வது வயதில் எழுதியதாகச் சொல்கிறார். ரகுநாதன் 1929-ல் பிறந்தவர். அப்படியானால் இந்தக் கதையை அவர் 1948-ல் எழுதியிருக்கிறார். அப்போது கைலாசபதிக்கு 15 வயது. மலேசியாவில் பிறந்த கைலாசபதி சிறுவனாக அந்த வருடம்தான் இலங்கையில் குடியேறுகிறார்.

இந்த வம்புச் செய்தியை ரகுநாதனே மறுத்தார். சிவசேகரம், முருகபூபதி போன்றவர்களும் எழுதி எழுதி மறுத்தார்கள். ஆனாலும் அந்த வம்புச் செய்தி இன்னும் உலாவிக்கொண்டுதானிருக்கிறது. கைலாசபதியைத் தூற்றுபவர்களின் முதல் ஆயுதமாக, மொண்ணை ஆயுதமாக அதுவே இருக்கிறது. கைலாசபதிக்கு நிகழ்ந்த அநீதியே டொமினிக் ஜீவாவுக்கும் நிகழ்ந்துள்ளது.

14.03.2021-ல் ‘தமிழ் மொழிச் செயற்பாட்டகம்’ மு.தளையசிங்கம் குறித்து இணைய வழிக் கருத்தரங்கை நிகழ்த்தியது. அந்த நிகழ்வில் உரை நிகழ்த்திய அனோஜன் பாலகிருஷ்ணன் தனது உரையின் ஓரிடத்தில் “தளையசிங்கம் சாதியொழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் தாக்குதலுக்குள்ளாகிய செய்தியை, டொமினிக் ஜீவாவுக்கு கைலாசபதி மீதிருந்த அச்சம் காரணமாகவே மல்லிகை இதழில் வெளியிடவில்லை” என்றார். இதைத் தனது சொந்த ஆய்வுக் கருத்துப் போலவே அனோஜன் அங்கே தெரிவித்தார். இந்தக் கருத்தின் மூலம் எது? ஆதாரம் எது? என்றெல்லாம் அவர் அந்தக் கருத்தரங்கில் ஏதும் சொல்லவில்லை. கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த சக பங்கேற்பாளர்களும் இது குறித்து அனோஜனிடம் ஏதும் கேள்வி எழுப்பவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை.

அனோஜன் சொல்வது தவறு என்று நான் முகநூலில் எழுதினேன். அதைத் தொடர்ந்து இந்த விவாதம் இப்போதுவரை இணையத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எனக்குப் பதிலளித்த அனோஜன், ஜெயமோகனின் இணையத்தில் பதிவாகியிருக்கும் ஓர் உரையாடலை தனது கூற்றுக்கு ஆதாரம் என முன்வைத்தார். அனோஜன் ஆதாரம் என முன்வைத்த உரையாடல் ஜெயமோகனின் இணையத்தளத்தில் 24.04.2002 அன்று வெளியாகியிருக்கிறது. அந்த உரையாடலைப் பரிசீலிக்கலாம்:

ஜெயமோகன்: மல்லிகை ஆசிரியரான டொமினிக் ஜீவா பற்றி மு.தளையசிங்கம் இப்படி சொன்னதாக என் கெ மகாலிங்கம் என்னிடம் சொன்னார் . அவர் தலித்தாக இருந்தபோதிலும் தளையசிங்கம் போராடிய செய்தியையோ அடிப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த செய்தியையோ தன் இதழில் போடவில்லை.கைலாசபதி மீதான பயம்தான் காரணம். ‘ ‘ எழுத்தாளர் வீட்டு பெட்டைய வயசுக்கு வந்தா செய்தி போடுறவனுக்கு இது செய்தியெண்டு தோணவில்லை . நான் செத்தால் அவனுக்கு என் படம் கூட கொடுக்கக் கூடாது ‘ ‘ என்று தளையசிங்கம் சொன்னாராம்.

இந்த உரையாடலைக் கூர்ந்து கவனிக்கும் போது, தளையசிங்கம் சொன்னதாக வரும் சொற்கள் இரட்டை மேற்கோள் குறிக்குள் ‘ ‘ எழுத்தாளர் வீட்டு பெட்டைய வயசுக்கு வந்தா செய்தி போடுறவனுக்கு இது செய்தியெண்டு தோணவில்லை . நான் செத்தால் அவனுக்கு என் படம் கூட கொடுக்கக் கூடாது ‘ ‘ எனக் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படியானால் //தளையசிங்கம் போராடிய செய்தியையோ அடிப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த செய்தியையோ தன் இதழில் போடவில்லை.கைலாசபதி மீதான பயம்தான் காரணம்// என்ற கூற்று தளையசிங்கத்துடையது அல்ல; மாறாக என்.கே. மகாலிங்கத்துடையது என்றுதான் கருதவேண்டியிருக்கிறது. அது எந்தவிதத்திலும் ஜீவா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமாகாது. ஒருவேளை தளையசிங்கமே அப்படிக் குறிப்பிட்டிருந்தாலும் அது வெறும் வம்புப் பேச்சே. எழுத்தாளர் வீட்டுப் பெட்டைகள் வயதுக்கு வருவதையெல்லாம் இழுத்துப் பேசுவது இரட்டை வம்பு. மல்லிகை இதழ் அதையா செய்துகொண்டிருந்தது? உண்மையில் கைலாசபதிக்கு அஞ்சி ஜீவா மல்லிகையில் தளையசிங்கத்தைப் புறக்கணித்தாரா? கிடையவே கிடையாது என்பதையே கீழ்வரும் தரவுகள் நமக்கு நிரூபணம் செய்கின்றன:

தளையசிங்கம் 1971-ல் காவற்துறையால் தாக்கப்படுகிறார். அந்தக் காலப்பகுதியில் மு.தளையசிங்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அவரது எழுத்துகள் மல்லிகையில் தொடராக வெளியாகின. 1970 பெப்ரவரி தொடக்கம் யூன் வரைக்கும் அய்ந்து மல்லிகை இதழ்களில் மு.தளையசிங்கத்தின் ‘விடுதலையும் புதிய எல்லைகளும்’ என்ற தொடர் வெளியாகியது. அவரது ‘போர்ப்பறை’ நூல் குறித்து கே.எஸ். சிவகுமாரன் எழுதிய பாராட்டுடன் கூடிய மதிப்புரை 1971 பெப்ரவரி இதழில் வெளியாகியுள்ளது. அதே வருடம் மே மாதம் மல்லிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் மு.தளையசிங்கம் டொமினிக் ஜீவாவுடன் இணைந்து நடுவராக இருந்திருக்கிறார். 1973-ல் மு.தளையசிங்கம் மறைந்தபோது மு.புஷ்பராஜனும், கே.எஸ்.சிவகுமாரனும் எழுதிய அஞ்சலிக் கட்டுரைகளை மல்லிகையில் ஜீவா வெளியிட்டார். தளையசிங்கத்தின் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டு “உலக எழுத்தாளனைக் கொன்று விட்டார்கள்” என ஜீவா ஆவேசத்துடன் உரை நிகழ்த்தியுள்ளார். தவிரவும் மு. தளையசிங்கத்தின் சகோதரர் மு.பொன்னம்பலத்தின் கட்டுரைகளையும் அக்காலகட்டத்தில் மல்லிகை வெளியிட்டுக்கொண்டிருந்தது. மு.தளையசிங்கத்துக்கு ஜீவா அளித்த முக்கியத்துவமும் தோழமையும் இப்படியாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளன. இப்போது பொறுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். கைலாசபதி மீதான அச்சத்தாலேயே தளையசிங்கம் தாக்கப்பட்ட செய்தியை ஜீவா வெளியிடவில்லை எனச் சொல்வதில் ஏதாவது நியாயமுண்டா? உண்மையுண்டா? ஜீவாவுக்கு அச்சமிருந்தது என தளையசிங்கமோ, என்.கே.மகாலிங்கமோ, ஜெயமோகனோ, அனோஜனோ எவர் சொன்னாலும் அது ஆதாரமேயற்ற வம்புப் பேச்சு மட்டுமே.

தளையசிங்கத்தை மார்க்ஸிய எதிர்ப்பாளராகவே முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் கைலாசபதியும் கருதினார்கள். தளையசிங்கத்தின் மறைவையொட்டி கைலாசபதி எழுதிய கட்டுரையில் அக்கருத்து வலுவாகவே இருந்தது. மு.தளையசிங்கத்தின் கட்டுரைகளை மல்லிகையில் வெளியிடுவதால் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தன்மீது அதிருப்தி கொண்டிருந்ததை ஜீவாவே தெரிவித்திருக்கிறார். ஆனால், அதிருப்திகளுக்கும் அழுத்தங்களுக்கும் ஜீவா பணியவில்லை. “நான் பிரசுரிக்கும் கட்டுரைகளில் உடன்பாடில்லாவிட்டால் மறுப்பு எழுதித் தாருங்கள் பிரசுரிக்கிறேன்” எனப் பகிரங்கமாக ஜீவா சொன்னார். சொன்னவாறே செய்தார். ஜீவாவுக்கு எவர் மீதாவது அச்சமிருந்தால் இதெல்லாம் நிகழ்ந்திருக்குமா?

ஜீவா தனது எழுத்து வாழ்க்கையிலோ அரசியல் வாழ்க்கையிலோ யாருக்குமே பணியாதவர். யாழ் பல்கலைக்கழகம் தனக்கு வழங்க முன்வந்த கெளரவ எம்.ஏ.பட்டத்தை மரியாதைக் குறைவாகக் கருதித் தூக்கி எறிந்தவர். ஆயுதம் தரித்த தமிழ்த் தேசியவாத இயக்கங்களுக்கு எந்தவொரு தருணத்திலும் பணியாமல், தான் வரித்துக்கொண்ட பொதுவுடமைச் சித்தாந்தத்தின் வழியே இறுதிவரை மல்லிகையை நடத்தியவர். அத்தகைய வாழ்நாள் போராளியை ‘அஞ்சியிருந்தார்’ என்பது அவரது ஆளுமையைச் சிறுமைப்படுத்துவதாகும். அவரைச் சுயபுத்தியும் சுயமரியாதையும் அற்றவராக உருவகிப்பதாகும். ஜீவாவை கைலாசபதி மிரட்டி வைத்திருந்தார் என்பது காரணமேயின்றி கைலாசபதியையும் சிறுமைப்படுத்துவதாகும்.

ஜெயமோகனின் இணையத்தில் வெளிவந்த செய்தியையும், அதையொட்டி திண்ணை இணையத்தில் நிகழ்ந்த உரையாடல்களையும் டொமினிக் ஜீவா ஏன் மறுக்கவில்லை? என்று அனோஜன் கேட்கிறார். ஜீவா இணையத்துக்கு முந்திய தலைமுறைகளைச் சேர்ந்தவர். அவரது வயது மூப்பைக் கருத்திற்கொண்டு பார்த்தால், இணையத்தில் நிகழ்ந்த இந்த வம்புப் பேச்சை அவர் படித்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன். இணையத்தில் சகட்டுமேனிக்குப் புழங்கும் நான்கூட, அனோஜன் சுட்டிக்காட்டிய பின்புதான் அந்த வம்புப் பேச்சைப் படித்தேன். ஒருவேளை இந்த வம்புச் செய்தி ஜீவாவின் கவனத்துக்குப் போயிருந்தால் கூட, அவர் இத்தகைய மலிவான வம்புப் பேச்சைப் பொருட்படுத்திப் பதிலளிக்கக் கூடியவர் அல்லவே. அவர்மீது காலங்காலமாகக் கொட்டப்பட்ட எத்தனையோ அவதூறுகளையும் வம்புகளையும் அவர் புறந்தள்ளியே நடந்திருக்கிறார். ஜெயமோகன் உட்பட பல எழுத்தாளர்கள் தங்களைக் குறித்து இணையத்தில் கொட்டப்படும் எல்லா வம்புகளுக்கும் வரிந்துகட்டிக்கொண்டு நின்று பதிலளிப்பதில்லை என்பது அனோஜனுக்குத் தெரியும்.

தளையசிங்கம் தாங்கப்பட்ட செய்தியை ஏன் மல்லிகை வெளியிடவில்லை? அக்காலத்தில் வெளிவந்த மல்லிகை இதழ்களைப் பொறுமையாக ஆராய்ந்தால் இதற்கு விடைகாணலாம். சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவற்துறையால் தாக்கப்பட்ட எழுத்தாளர் தளையசிங்கம் மட்டுமல்ல. கே.டானியல் உட்பட பல முற்போக்கு முகாம் எழுத்தாளர்கள் காவற்துறையின் அடக்குமுறைக்கு உள்ளானார்கள். சிறைக்குச் சென்றார்கள். சாதியொழிப்புப் போராளிகள் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டார்கள். இந்தச் செய்திகளையும் நம்மால் மல்லிகை இதழ்களில் காண முடிவதில்லை.

எனவே மல்லிகை இதழை ஜீவா ஒரு வரையறையுடன் நடத்திவந்தார் என்றே என்னால் அனுமானிக்க முடிகிறது. கலை – இலக்கியம் குறித்த விடயங்களையே அவர் மல்லிகையில் முதன்மைப்படுத்தினார். இதற்காக காவற்துறையின் இத்தகைய அடக்குமுறைகளைப் பார்த்துக்கொண்டு ஜீவா சும்மாயிருந்தார் எனச் சொன்னால் சொல்பவரின் நாக்குப் புழுத்துப் போகும். ஜீவாவே இத்தகைய காவற்துறை அடக்குறைகளை எதிர்கொண்டு களத்தில் நின்ற சாதியொழிப்புப் போராளிதான். அன்றாடம் போராட்டக் களங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் அவர் இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராகப் பேசிக்கொண்டிருந்தவர் என்பதே வரலாறு. தளையசிங்கத்தின் அஞ்சலிக் கூட்டத்திலும் அவர் இதையே பேசினார்.

ஜீவா சாதிய விடுதலைப் போராட்டத்தின் பேரடையாளம். தன்மீது பூட்டப்பட்டிருந்த தீண்டாமை விலங்குகளை அறுத்துக்கொண்டு மேலெழுந்து வந்த ஆளுமை. தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். ஒப்புவமையே இல்லாத பத்திரிகையாளர். இந்தப் பேராளுமையை ‘கைலாசபதிக்கு அஞ்சி இருந்தார்’ என இழிவு செய்வது மோசமானது. இந்த வம்புப் பேச்சுக்கு நாம் இப்போதாவது ஒரு வலுவான முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், இந்த வம்புப் பேச்சு இன்னும் பல பத்தாண்டுகளுக்கு ‘நிலவிலே பேசுவோம்’ போலச் சுற்றிக்கொண்டேயிருக்கும்.

ஜீவாவோ கைலாசபதியோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால், அனோஜன் ‘ஜீவா அஞ்சி இருந்தார்’ என்று கூறியிருப்பது விமர்சனமே கிடையாது. அதற்கு ஆதாரமே இல்லை. அனோஜன் ஆதாரம் எனச் சுட்டிக்காட்டும் இணையத்தள உரையாடல் வெறும் வம்புப் பேச்சே. “அந்த சமயத்தின் போது ஜீவாவுக்கு கைலாசபதி மீது பயம் இருந்துள்ளது என்றே நான் நம்புகிறேன்” என்று அனோஜன் சொல்வது பொறுப்பற்ற பேச்சு. ‘நம்புகிறேன்’ என்ற அடிப்படையிலெல்லாம் ஓர் ஆளுமையின் மீது குற்றம் சுமத்திக் களங்கம் செய்யக்கூடாது. வெற்று நம்பிக்கையின் அடிப்படையில் செயற்படுவதற்கு இலக்கியம் ஒன்றும் சங்கர மடமல்ல.

3 thoughts on “வம்பும் வரலாறும்

  1. அன்புள்ள தோழர் ஷோபா சக்திக்கு வணக்கம். அனோஜன் கலந்துகொண்டு உரையாற்றிய குறிப்பிட்ட இணையவழி காணொளி அரங்கில் பங்கேற்பதற்காக அன்றைய தினம் நடு இரவு 12-00 மணியிலிருந்து முயற்சித்தும் என்னால் இணையமுடியாமல்போய்விட்டது. அதனையடுத்து, அதேநேரத்தில் சுவிஸ் மானுடம் வாசகர் வட்டம் நடத்திய மல்லிகை ஜீவா இணையவழி நினைவேந்தல் நிகழ்வில் இணைந்துகொண்டேன். நடுச்சாமம் கடந்தும் சுவிஸ் மானுடம் வாசகர் வட்டத்தின் நிகழ்வின் இறுதிவரையில் ( நிறைவுபெறும்போது எனக்கு அவுஸ்திரேலியாவில் அதிகாலையாகிவிட்டது ) இருந்தேன்.
    அனோஜன் கலந்துகொண்ட நிகழ்வில் எனக்கு இணைய சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், அவரது அந்த வம்புப்பேச்சுக்கு உடனடியாகவே எனது எதிர்ப்பினை தெரிவித்திருப்பேன். என்னிடம் முகநூல் இல்லை. இனிமேலும் இருக்காது. கனடா கிரிதரனின் பதிவுகள் இணைய இதழில் நீங்களும் கிரிதரனும் அனோஜனின் வம்புப்பேச்சை பற்றி குறிப்பிட்டிருந்ததை படித்துவிட்டுத்தான், எனது எதிர்வினையை எழுதியிருக்கின்றேன்.
    உங்களுக்கு நினைவிருக்கும், இப்படித்தான் கடந்த 2011 ஆம் ஆண்டிலும் நாம் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியபோது ( அந்த மாநாடும் மல்லிகை ஜீவாவின் நீண்டகால கனவும் திட்டமுமாகும் ) சிலர் நாம் ராஜபக்‌ஷ அரசாங்கத்திடமிருந்து கோடிகோடியாக பணம் வாங்கிக்கொண்டு நடத்துவதாக எழுதினார்கள். வம்பளந்தார்கள். அதற்கு வரவிருந்தவர்களையும் ( ஜெயமோகன் உட்பட ) தடுத்தார்கள்.
    நீங்கள்தான் உரியநேரத்தில் எனது விரிவான நேர்காணலை வெளியிட்டு, அந்த வம்பளப்புகளுக்கு முடிவுகட்டியிருந்தீர்கள். அதுபற்றி எனது உள்ளும் புறமும் நூலில் விரிவாக எழுதியிருக்கின்றேன்.
    தற்போது மீண்டும், ஜீவா மறைந்த பின்னர், வம்புத்தனம் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.
    அதற்கும் நீங்கள் முன்வந்து முற்றுப்புள்ளி இடுவதற்கு முயன்றமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன்.
    முருகபூபதி – அவுஸ்திரேலியா

  2. அற்புதமான தலையீடு.வரலாற்றில் வைத்து எழுதப்பட்ட எதிர்வினை.வாழ்க ஜீவா.வாழ்க கைலாசபதி.
    வாழ்த்துகள் ஷோபா
    -இரா.தெ.முத்து

  3. நிஜமான சாதி அரசியலை…இன்னும் சொல்லுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *