-ந. முருகேசபாண்டியன்
‘இலங்கைத் தீவே செத்துக் கடலில் வெள்ளைப் பிரேதமாக மிதந்து வருவதான ஒரு படிமம் இப்போது என் மனதில் தோன்றி என் இருதயத்தை முறித்துப் போட்டது.’- ‘இச்சா’ நாவலின் கதைசொல்லி.
கொலைகளும், தற்கொலைகளும் நிரம்பிய சிறிய தீவான இலங்கையைச் சாபமும், இருளும் காலந்தோறும் துரத்துகின்றன. பௌத்தம் X சிறுபான்மையினரின் மதங்கள், தமிழ் X சிங்களம் என இரு அடிப்படை வேறுபாடுகளின் பின்புலத்தில் வன்மும், குரோதமும், வெறுப்பும் நாடெங்கும் பரவலானதற்குக் காரணம், வெறுமனே மதவெறி மட்டும்தானா? புத்தர் என்ற கருணையான ஆளுமையும், அவருடைய போதனைகளும் பெரும்பான்மையான சிங்களப் பிக்குகள் மனதில் சின்ன சலனத்தைக்கூட ஏற்படுத்தவில்லையா? மனதில் துளியளவுகூட ஈரம் இல்லாதவர்களாகத் தீவின் சராசரி மனிதர்கள் மாறியுள்ளதில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது. தெருச்சந்தி முக்கு விளக்குத்தூண், கார் டயரினால் மனித உடல்களை உயிருடனோ அல்லது உயிரற்றோ எரிக்கப்படும் இடமாக மாறியதை வேடிக்கை பார்க்கிற சூழல், வன்முறையின் உச்சம்.
இன ஆதிக்க அரசியல் காரணமாகச் சிந்திய மனிதக் குருதியும், கொல்லப்பட்ட உடல்களும் குட்டித் தீவெங்கும் சிதறிக் கிடக்கின்றன. ஈழத் தமிழரின் போராட்டமும், அதற்கெதிரான சிங்களப் பேரினவாத ராணுவத்தின் ஒடுக்குமுறையும் 1981 இல் தொடங்கி, 2009 முள்ளிவாய்க்கால் அழித்தொழிப்பு வரை நீண்ட வரலாற்றுப் பின்புலமுடையன. எவ்விதமான அறமும் இல்லாமல் மனித உடல்களைத் துச்சமாகக் கருதிச் சிதலமாக்கிய கொடூரம், இலங்கையில் இயல்பாக நடந்தேறியுள்ளது. தமிழின விடுதலைக்கான இயக்கங்களின் போராட்டங்கள், குறிப்பாக விடுதலைப் புலிகளின் அரசுக்கெதிரான கடுமையான போர், சிங்களப் பேரினவாத அரசின் கொடூரமான ராணுவத் தாக்குதல்கள், இந்தியா, சீனா உள்ளிட்ட மேலைநாடுகளின் ஆதரவுடன் அழித்தொழிக்கப்பட்ட புலிகளின் ஆயுதப் போராட்டம்… வரலாற்றின் பக்கங்களில் ரத்தக் கவிச்சியடிக்கிறது. இரண்டாயிரமாண்டுத் தமிழர் வரலாற்றில் பிரபாகரனின் தலைமையில் நடைபெற்ற ஆயுதயமேந்திய ஈழப் போர், ஒப்பீடு அற்றது; காத்திரமானது. புலிகளின் வீரமான போர்களும், புலிகள் அழித்தொழிக்கப்பட்ட பேரழிவும் அழியாத நினைவுகளாக காற்றில் மிதக்கின்றன.
ஈழத்தமிழரின் முப்பது ஆண்டு கால ஆயுதமேந்திய போராட்டம், எதிர்காலத் தலைமுறையினருக்குக் கதைகளாக இன்று மிஞ்சியுள்ளது. போரின் மறுபக்கத்தையும், விளைவுகளையும் அண்மையில் வெளியான நாவல்கள் பதிவாக்கிட முயன்றுள்ளன. அவை, எதிர்காலத் தலைமுறையினரின் நினைவுகளில் என்றும் அதிர்வை ஏற்படுத்தும் வல்லமையுடையன. விடுதலைப் புலிகளின் வெற்றிகரமான தாக்குதல்கள், பிரபாகரனின் போர்த் தந்திரங்கள் எனச் சிலாகித்து எழுதப்பட்ட பெரும்பாலான நாவல்களில் தமிழ்ப் பெருமிதமும், தமிழர் அடையாள அரசியலும் பொதிந்துள்ளன. வெறுமனே உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தமிழகத்தின் தமிழ்த் தேசியவாதிகளும், கணிசமான ஈழத் தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டு விடுதலைப்புலிகளைக் கொண்டாடுகிற பொதுப்புத்தி, இன்றும் நிலவுகிறது. படைப்பு என்பது அரசியல் செயல்பாடு என்ற புரிதலுடன் ஷோபாசக்தி போன்ற படைப்பாளர்கள் நடந்து முடிந்த ஈழப் போரை முன்வைத்து எழுதியுள்ள நாவல்கள், சமூக விமர்சனமாக வெளிப்பட்டுள்ளன. எண்பதுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சில ஆண்டுகள் செயல்பட்டுப் பின்னர் ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த ஷோபாசக்தியின் முந்தைய நாவல்களின் தளத்தில் இருந்து அண்மையில் வெளியாகியுள்ள இச்சா நாவல் முழுக்க வேறுபட்டுள்ளது. மனித மாண்புகளையும், விழுமியங்களையும் நாசமாக்குவதில் பின்னர் பொதிந்திருக்கிற அதிகார அரசியலைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பது, இச்சா நாவலின் தனித்துவம். ஷோபாசக்தி, சித்திரித்துள்ள கதையாடல், அதிகாரத்தின் பெயரில் ஏன் இப்படியெல்லாம் மனிதர்கள், சக மனித உடல்களைச் சித்ரவதைக்குள்ளாக்கின்றனர் என்ற கேள்வியை எழுப்புகிறது.
வன்முறை என்ற கொடிய ஆயுதம், வரலாறு முழுக்க ஆதிக்கவாதிகளால் விளிம்புநிலையினர் மீது தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. தனிமனிதக் கொலையைத் தண்டனைக்குரிய குற்றம் எனக் கருதுகிற அரசு, போரை முன்வைத்து நடைபெறுகிற கூட்டக்கொலைகளையும், அரச பயங்கரவாதச் செயல்களையும் நியாயப்படுத்துகிறது. கொடூரமாக நடந்து முடிந்த போரும், அதன் விளைவுகளும் படைப்பாக விவரிக்கப்படும்போது, கொலைகள், ராணுவத்தினரின் சித்ரவதைகள், குடும்பச் சிதைவு, பெண்ணுடல் மீதான வன்புணர்வு, சதிகள், தற்கொலைப் படையினரான மனித வெடிகுண்டுகள், காணாமல் போகும் மனிதர்கள், ஊரின் அழிவு… என எங்கும் ரத்தக்களறிதான். அதிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழின அழித்தொழிப்பு, இச்சா நாவலில் வலியின் உச்சத்தில் சொல்லப்பட்டுள்ளது. வெறுமனே கதை என்று நாவலை வாசித்துவிட்டுப் போவதற்கான சாத்தியம், இச்சா பிரதியில் பதிவாகியுள்ள வரிகளில் இல்லை. இச்சா நாவலின் முதன்மைப் பாத்திரமான கப்டன் ஆலா என்ற வெள்ளிப்பாவையின் வாழ்க்கைச் சம்பவங்களை வாசிக்கிற வாசகன், பிரதியின் மையத்தில் இருந்து விலகி, அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்புடன், தனக்கான கதையை உருவாக்கிட வாய்ப்புண்டு. துப்பறியும் நாவலின் விவரிப்பு போன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், வாசிப்பில் தொந்தரவு செய்கின்றன; மனதில் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. யதார்த்த வாழ்க்கையில் துப்பாக்கிகளும், மனித வெடிகுண்டுகளும், சித்திரவதைகளும் நிரம்பிய கதையாடல், அதிகாரத்தின் மொழியில் பதிவாகியுள்ளது. ஷோபாசக்தியின் காத்திரமான மொழி ஆளுகையும், கதையாடல் விவரிப்பும் நாவலைக் காப்பியத்தன்மையுடையதாக ஆக்கியுள்ளன.
நாவலின் பின்னட்டையின் வெளிப்புறம் இடம் பெற்றுள்ள பன்னிரு வயதான ஈழத்துச் சிறுமியின் படம், பிரதிக்கு வெளியே விவரிக்கிற கதை, உக்கிரமானது. நாவலின் கதைக்கும், சிறுமியின் படத்துக்கும் நேரடியான தொடர்பு இல்லாவிடிலும், நாவலை வாசிக்கும்போது, போரில் மாண்ட பெண் புலிகளைப் படம் நினைவூட்டுகிறது. யாரோ ஒரு சிறுமி பூப்படைந்தபோது பட்டுச் சேலை உடுத்தி, தங்க நகைகள் அணிந்து, தலையில் பூச்சூடி, சடையில் பூத்தைத்துக் கொண்டாட்டத்துடன் புல்தரையில் ஒயிலாக அமர்ந்திருக்கிறாள். அவளுடைய மிழ்ச்சியான முகபாவமும், சிநேகமான கண்களும் ஆயிரமாயிரம் நம்பிக்கை மலர்களைத் தூவுகின்றன. ஒரு கணம் அந்தச் சிறுமிதான் கப்டன் ஆலா என்று வாசிப்பில் தோன்றினால், நாவலின் கதையாடலுக்குள் மூழ்கி, திணறிட நேரிடும். ஷோபாசக்தி சித்திரித்துள்ள கப்டன் ஆலா என்ற பெண் பாத்திரம், ஈழத் தமிழரின் நெடிய போராட்டத்தில் தொன்மமாக வெளிப்பட்டுள்ளது. பெண் புலிகளின் சாகசங்கள், வீரதீரச் செயல்கள், சமரசமற்ற தாக்குதல்கள், தியாகங்கள் என்று முப்பதாண்டுகளாகப் பல்வேறு பிரதிகளின் ஊடாக அவர்கள் அசலான மனுஷிகளாக வாசகர்களுடைய கூட்டுக் கற்பனையில் பதிவாகியுள்ளனர். வாய்மொழியாகவும், பிரதிகள் மூலமாகவும் காலந்தோறும் உருவாக்கப்பட்டுள்ள கதைமாந்தர்கள் மீது, உணர்ச்சிகளை முதலீடு செய்வது புனைவில் தொடர்கிறது. வீரத்தின் அடிப்படையில் தமிழச்சியான ஆலா குறித்த புனைவுகளில் வாசகர்கள் அளவற்ற உணர்ச்சியில் திளைத்தல், வாசிப்பில் நிகழ்கிறது. ஒருவகையில், யதார்த்த எழுத்தின் புனைவை உண்மை என நம்பி, ஆலா பாத்திரத்துடன் வாழ்தல் நாவல் கதையாடலின் தனித்துவம். இது, இச்சா நாவலின் பலம்.
ஷோபாசக்தி கதைசொல்லியாகவும், ஆலாவின் சிறைக் குறிப்புகளில் ஆலா கதைசொல்லியாகவும் இரு வேறுபட்ட விவரிப்புகளாக நாவலின் கதையாடல் விரிந்துள்ளது. இரண்டாயிரத்திற்குப் பின்னர் தொடங்கிடும் கதை, 2004இல் போர் நிறுத்தக் காலகட்டத்தில் மையம்கொண்டு, இறுதிப் போரை நோக்கி நகர்கிறது. புனித வியாழன் அன்று யேசுவின் புனித இராப்போசன விருந்துடன் தொடங்குகிற நாவல், பிரான்ஸ் நகரத் தெருக்களில் குளிரிலும் பசியிலும் வாடி வதங்குகிற ஏதிலிகளை இயேசுக் கிறிஸ்துக்களாக அடையாளப்படுத்துகிறது. உலகமெங்கும் அரசியல், பொருளாதர நெருக்கடிகளினால் புலம்பெயர்ந்த அகதிகளின் வலிகள், யேசுவின் துயரங்களாக மாறுகின்ற காட்சிகளைச் ஷோபாசக்தி சித்திரித்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் வெடித்த குண்டுவெடிப்புச் சம்பவத்தினால் தனது தாய்க்கும், உறவினர்களுக்கும் என்ன ஆனது என்று அறிந்திடாமல் தவிக்கிற கதைசொல்லி, கொல்லப்பட்டவர்களின் படங்களில் மர்லின் டேமி என்ற பறங்கிப் பெண்ணின் படத்தைப் பார்க்கிறார். அவள்தான் சிறையிலிருந்தபோது ஆலா, உரோவன் மொழியில் எழுதிய குறிப்புகளைக் கதைசொல்லிக்குக் கொடுத்தவள். சிறையில் அடைக்கப்பட்ட ஆலா, கற்பனையான உரோவன் மொழியில் எழுதிய குறிப்புகள் அடங்கிய காகிதக் கத்தை, மர்லின் டேலியால் தற்செயலாக ஷோபாசக்திக்குக் கிடைக்கிறது. அந்தக் குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நாவலில் ஈழப் போராட்டத்தின் பின்புலம் சங்கேதமாகவும், நுட்பமாகவும் விளக்கப்பட்டுள்ளது. ஆலா உருவாக்கிய லண்டோ ப்ளான்சோ என்ற கற்பனையான பனிநிலத்தில், அவர் உருவாக்கிய உரோவன் மொழியும் புனைவானது. இச்சா என்ற சொல்லுக்குப் பொருளாகக் குறளி, முளரி, லிபி, நெடும்மின்னி, மந்திரிகுமாரி ஆகிய ஐந்து சொற்கள் தரப்பட்டுள்ளன.
1989இல் அடைமழைக் காலத்தில் இலுப்பக்கேணி என்ற கிராமத்தில் பிறந்தாள் வெள்ளிப்பாவை. இலுப்பங்கேணியில் எண்பது வீடுகளில் எளிமையாக வாழ்ந்த தமிழர்களின் கிராமிய வாழ்க்கை, மடுப்பமகச் சிங்களக் குடியேற்றத்தினால், மெல்லச் சிதலமடையத் தொடங்குகிறது. கிராமத்தின் பெயர்கூட ’மடுப்பமக’ எனச் சிங்களப் பெயராகவும், களியோடை என்ற ஆற்றின் பெயர் கல்லோயா என்ற சிங்களப் பெயராகவும் மாற்றப்பட்டன. தமிழரின் அடையாளம் அழிக்கப்படுகிற அரசியல், தீவு முழுக்கப் பரவத் தொடங்கியதன் எடுத்துக்காட்டுதான் இலுப்பங்கேணியின் அழிவு. வெள்ளிப்பாவையின் தன்வரலாறு போலச் சொல்லப்பட்டுள்ள எந்தவொரு சம்பவமும் ஏதோவொரு அரசியல் நிகழ்வுடன் தொடர்புடையதாகக் கதைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிப்பாவை பிறந்தநாளுக்கு முந்திய நாளில் இந்தியப் படை, ஆசாரிக்குடியில் நடந்த சனிக்கிழமைச் சந்தைக்குள் புகுந்து சுட்டதில் பதினேழு பேர் மரணம்; தேன் விற்ற பெரியாத்தை தெய்வகலை கொல்லப்பட்டார். வெள்ளிப்பாவைக்கு ஒன்றரை வயதாகும்போது நானூறு தமிழர்கள் அருகிலுள்ள வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் கோயிலில் ஊர்க்காவற்படையினரால் வெட்டிக் கொல்லப்பட்டனர். காட்டுக்குள் போன சிவஞானம் அம்மாச்சி சொல்லப்பட்டு, சடலம் கிடைக்கவில்லை. இலுப்பங்கேணிக்குள் புத்தர் சிலையுடன் வந்த சிங்களவர்களின் கையில் துப்பாக்கி, கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள். உறாப்பிட்டியச் சிங்களவர்கள், தமிழ்ப் புத்தாண்டு நாளில் இலுப்பங்கேணிக்குள் நுழைந்து தமிழர் வீடுகளுக்குத் தீ வைத்ததுடன், நான்கு பெண்கள், ஐந்து குழந்தைகள் உள்பட பதினேழு தமிழர்களை வெட்டிக் கொன்றனர். கல்யாண விருந்துக்கு இலுப்பங்கேணிக்கு வந்துவிட்டு, மாலையில் உள்ளான்வெளிக்கு ட்ராக்டரில் திரும்பிப்போன அப்பாவின் அப்பா, அம்மா, ஐயா, சகோதரர்கள் காட்டுப்பாதையில் வழிமறித்துக் கொல்லப்பட்டனர், தம்பி விபுல் கொலை… இப்படி நாவல் முழுக்கப் பல்வேறு கொலை நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக வெள்ளிப்பாவையின் இளம்பிராயத்து வாழ்க்கை இருக்கிறது. எந்தவொரு கொலையும் காவல்துறையினரால் புலன் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. “எல்லோரும் எல்லாரையும் கொலை செய்யும் காலமாக அது இருந்தது” என்கிறார் கதைசொல்லியான வெள்ளிப்பாவை. ’மரம் ஓய்வை நாடினாலும் காற்று தணியாது’ என்ற சீனப் பழமொழிக்கேற்பச் சராசரியான கிராமத்துச் சிறுமியான வெள்ளிப்பாவை, ஒரு நாளில் ஆலாவாக மாறினார். பின்னர் கப்டன் ஆலா. சிங்கள அரசுக்கும், புலிகள் இயக்கத்தினருக்குமான போர் ஒருபுறம் என்றால், கிராமத்துத் தமிழர்களின் வாழ்க்கையில் பலரும் கொல்லப்படுவதை இயல்பாகக் கருதுமாறு சூழல் மாறியதுதான் கொடூரமானது. சக மனிதர்களைக் கொன்றொழிக்கிற வாழ்க்கை சகஜமாகிப் போனதுதான், சூழலில் ஏற்பட்ட பெரும் அவலம்; அறத்தின் வீழ்ச்சி.
நாட்டார் கூத்துப் பாடல்கள், நாட்டார் பாடல்கள், பழமொழிகள், மரபுத் தொடர்கள் என நாவல் முழுக்கப் பதிவாகியுள்ள விவரணைகள், ஈழத்தமிழர் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்த மரபின் வெளிப்பாடுகள். நாட்டுப்புற நம்பிக்கை சார்ந்த விஷயங்கள், வெள்ளிப்பாவையின் கோணத்தில் நாவலில் பதிவாகியுள்ளன. அம்பாலை மரக்காலைக்காரர் செய்த ஊழைச் சூனியம், அப்பாவை முடக்கி, விசர்க்கோலமாக்கி விட்டது. பெத்தப்பா மீது யாரோ மூதேவி அழைப்பை ஏவிவிட்டிருந்தனர். பெத்தாவுடன் வீட்டுக்கு வந்த புலுடு என்ற பேய், பெத்தாச்சியின் தூஷணத்துக்கு நாணி அகன்றது. அம்பாறையில் வைகாசிப் பூரணையன்று குளத்துக் கண்ணகி அம்மன் கோயில் திருக்குளிர்த்தி, போர்த்தேங்காய் அடித்தல் அல்லது கொம்புமுறி விளையாட்டு. காசிப முனிபத்தினியான கந்துருவுக்கு நூற்றைம்பது நாகங்கள் குழந்தைகளாகப் பிறந்த புராணிகக் கதையாடல். ஞானசௌந்தரி கூத்தில், கைகள் வெட்டப்பட்ட சௌந்தரி, நினைவில் பிலேந்திரனைத் தன்னிடம் அழைத்து வருதல். இவைதவிர கதையாடல் முழுக்க இடம் பெற்றுள்ள தமிழ், சிங்களத் தொன்மங்கள், சொலவடைகள் போன்றன நீட்சியாகி, நாவலின் கதைமாந்தர்களின் உருவாக்கத்தில் தடத்தைப் பதித்துள்ளன.
சிங்கள அரச வம்சம், கொடூரமான முறையில் உடல்களைச் சித்ரவதை செய்த கதை, கண்டி அரசன் ஸ்ரீவிக்கிரம் இராஜசிங்கன் கூத்தை முன்வைத்துக் காலங்காலமாக நிகழ்த்துக் கலையாக இலங்கையில் நிகழ்த்தப்படுகிறது. பாரம்பரியமாக நடத்தப்படுகிற கண்டி அரசன் கூத்து, சிங்களவர்களிடமும், தமிழர்களிடமும் பிரபலமானது. துரோகி எனக் கருதப்படுகிற மந்திரியின் குழந்தைகள் கழுத்தை வெட்டிக் கொல்லப்படுகின்றன. மந்திரியின் மனைவி குமாரிரஹாமி, பிறந்து பத்து நாட்களான தன்னுடைய கைக்குழந்தையான டிங்கிரி மெனிகேயை உரலில் போட்டு, உலக்கையால் குற்றி இடிக்க வேண்டுமென்ற கட்டளை அரசனால் பிறப்பிக்கப்படுகிறது. அப்போது அவள் குழந்தையை உரலில் போட்டுக் குத்தியவாறு பாடும் பாடல், இன்றளவும் நாட்டார் கூத்தில் பாடப்படுகிறது:
அமிர்த சுகிர்த அழகொளிர் விளக்கே
அகக்கடலில் சுமந்த அருமைப் பாலகியே
பொன்னின் மேனிதன்னை உரலில்
பூணின் உலக்கை கொண்டு
ஊணும் பாதி தந்த பாலும் வாயிலோட
அம்மா குத்தி இடித்தாளோ உரல்!
தாய் ”அழுது புலம்பிப் பாடும்போது, பரவசம் அடையாமலா அதை மறுபடியும் மறுபடியும் காலங்காலமாகத் திருவிழாக்களில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கதைசொல்லி சொல்கிறார். கூத்து நிகழ்த்தப்படும்போது, பார்வையாளர் வரிசையில், சிறிய நாற்காலியைப் போட்டு, அந்த இருக்கையில் இருந்து, கொடூரமாகக் கொல்லப்பட்ட பச்சிளம் சிசுவும் கூத்தைப் பார்க்கிறது என்ற நம்பிக்கை, நிஜத்துக்கும் புனைவுக்கும் இடையில் ஊசலாடுகிறது. இலங்கையர்களின் மனதில் வன்முறையும், கொடூரமும் ரசனைக்குரியதாக உறைந்திருப்பதைக் கூத்தின் வழியாகக் கண்டறிந்திட முயன்றுள்ளார், ஷோபாசக்தி. அந்தக் கொடூரமான ரசனை, உளவியல்ரீதியில் ஏற்படுத்தும் சேதங்கள்தான் இலங்கையில் வெளிப்படுகிற வன்முறையின் வெளிப்பாடா? யோசிக்க வேண்டியுள்ளது.
பதின்மூன்று வயதான வெள்ளிப்பாவை தனது தம்பி விபுலுடன் ஊருக்கு வரும்போது, காட்டுக்குள் பதுங்கியிருக்கிற விடுதலைப் புலிகளைத் தற்செயலாகச் சந்திக்க நேரிடுகிறது. சக மனிதர்கள் என்ற நிலையில் செய்த சிறிய உதவிக்காக ஊர்க் காவல்படையைச் சார்ந்த காக்கிலால், தம்பியின் தலையைத் துண்டித்துத் தெருவில் போடுகிறான். கொல்லப்பட்ட விபுல் ஏற்கனவே புலிகளுக்கு எதிராக அரசின் காவல்படையில் சேர்ந்து, செயல்பட்டவன். கஞ்சா போதையில் விபுல் உளறியதற்காக அவனைக் கொடூரமாகக் கொல்லப்படுவதில் தொடங்குகிறது, ஆலாவின் அரசியல் நுழைவு. கொல்லப்பட்ட தம்பிக்காக நியாயம் கேட்ட வெள்ளிப்பாவையின் மீதான தாக்குதல் வலுவடைந்தபோது, அதிலிருந்து தப்பித்தவளின் அடுத்த முயற்சி, புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததுதான். வேறு வழி? பொதுமக்கள் சராசரியான வாழ்க்கை வாழ்ந்திட உத்திரவாதம் இல்லாத சூழலில் அன்பும் நேசமும் மிக்க வெள்ளிப்பாவை, கரும்புலியாகப் பயிற்சிபெற்று, வெடிகுண்டை உடலில் கட்டிக்கொண்டு, வெடித்துச் சிதறிடத் தயாராகிறாள். குழந்தையைப் பெற்று வளர்க்கிற இயல்புடைய பெண், தன்னையே அழித்துக்கொள்ள முடிவெடுப்பதன் பின்புலத்தில் பொதிந்திருக்கிற அரசியலும், உளவியலும் முக்கியமானவை. குடும்ப நிறுவனத்தில் இயல்பாக வாழ்ந்த பெண்தான், எங்கும் மனித ரத்தம் சிந்துகிற சூழலில் தற்கொலைப் படையினராக மாறுகிறாள். போராளிகளை வெடிகுண்டாக மாற்றுகிற புலிகளின் அரசியலில் கருத்து வேறுபாடு இருந்தாலும், போர்க் காலச் சூழலை ஆராய்ந்திடும்போது, இயக்கம் மூளைச்சலவை செய்து கரும்புலிகளை உருவாக்கவில்லை என்பது புலப்படும். எதிரியான சிங்கள ராணுவத்துடன் தாக்குதலில் ஆயுதத்துடன் போரிடும்போது, முகாமுக்குத் திரும்பி வருவதற்கான சாத்தியம் குறைவு என்பது தமிழ்ப் போராளிகளுக்குத் தெரியும். போர் முனையில் நிகழவிருக்கிற சாவு, உடலில் கட்டியிருக்கிற வெடிகுண்டால் ஏற்பட்டால் என்னவென்ற துணிச்சலான முடிவுதான் கப்டன் ஆலா போன்ற போராளிகளை இயக்குகிறது. இருப்பதா? இறப்பதா? என்ற ஷேக்ஸ்பியரின் வரி, போராளிகளுக்கு முழுக்கப் பொருந்துகிறது. ஆலாவுக்கும்தான்.
போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் என்ற புரிதல் இல்லாத ஆலா, மனித வெடிகுண்டாக மாறி, பலரின் மரணத்திற்குக் காரணமாவது அறிந்தும் தன்னுடலைப் பொருட்படுத்தாத மனநிலை, அவளுக்குள் ஏதோ ஒரு புள்ளியில் உறைந்திருந்தது. ஆலா தன்னுடைய உடலுடன் வெடித்துச் சிதறும்போது, எதிரிகளும் கொல்லப்படுவார்கள் என நம்பியிருக்கையில், பாலம் திறப்புவிழாவில் அயல்நாட்டுத் தூதரும் கலந்துகொள்கிறார் என்பதனால், கடைசி நிமிடத்தில், நடவடிக்கை மாற்றப்படுகிறது. யாருக்கும் சேதம் விளைவிக்காமல், பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி வெடித்துச் சிதற வேண்டுமெனக் கட்டளை கிடைக்கிறது. ”இதுதானா என் மகிமை பொருந்திய சாவு! சுவரில் மோதிக் குருட்டு வௌவால் போலவா சாகப் போகிறேன்” என்ற ஆலாவின் மனவோட்டம் முக்கியமானது. இராணுவத்திடம் சிக்கினால் என்னவகையான சித்திரவதைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அறிந்தும் ஆலா திகைத்து நிற்கிறாள். மனுஷி என்ற நிலையில் ஆலாவின் லட்சியம் நிறைவேறவில்லை. இலங்கை மற்றும் இந்திய ராணுவத்தினரின் சித்ரவதைக்குள்ளாகி, இறுதியில் 300 ஆண்டுகள் தண்டனையடைந்து சிறையில் வாடுகிறாள். பதின்பருவப் பெண்ணான ஆலா சிறையில் இறந்துவிட்டாள் என்று பிரதி தரும் தகவலினால் துயரத்தில் வாசகர் தவிக்க நேரிடுகிறது. நடந்து முடிந்த ஈழப் போர்களில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பெண் புலிகளைப் பெருமையுடன் நோக்குகிற தமிழ்ச் சமூகத்தில், இத்தகைய மாந்தர்கள் படைப்பின் சொற்களுக்கு இடையில் துயரத்துடன் எங்கோ வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
அன்றாட வாழ்க்கையில் குறிப்பிட்டமுறையில் சம்பவங்கள் இடைவிடாமல் தொடர்ந்து நடைபெறுகின்றன. அவை, படைப்புகளில் பதிவாகிடும்போது, வாசகர்களின் விருப்பத்திற்கு மாறானவையாக இருந்திட வாய்ப்புண்டு. இச்சா நாவலின் கதையாடலில் ஆலாவை முன்வைத்து ஷோபாசக்தி விவரித்துள்ள சம்பவங்கள், வலிகளும் வதைகளும் நிரம்பியவை. ஆலா, தான் தேர்ந்தெடுத்துள்ள கரும்புலி பயிற்சி பற்றியும் அதனுடைய முடிவு பற்றியும் துல்லியமாக அறிந்தநிலையில் துணிச்சலுடன் செயல்படுவது, துன்பியல் நாடகத்தின் உச்சம்; காப்பிய சோகம். இதனால் வாசகன் துக்கத்தில் ஆழ்கிறான். மாற்றமுடியாத விதியா? அல்லது கடவுளின் விருப்பமா? என்ற கேள்விகள், வாசகர்களை முடிவற்ற துயரத்திற்கு இட்டுச் செல்கின்றன. மாபெரும் இதிகாசங்கள், காப்பியங்கள் இரக்கமற்ற மனித வாழ்க்கையின் சட்டகங்களை மீண்டும்மீண்டும் சொல்வதன்மூலம் ஒருவகையில் மனிதர்களின் சொந்தக் கதைகளைத்தான் சொல்கின்றன. அவை, நமது விருப்பங்களுக்கு எதிரானவை என்றாலும், அவற்றை விருப்பத்துடன் வாசிக்கிறோம். எனவேதான் ஆலாவின் அவலமான கதை, பரந்துபட்ட வாசகர்களால் ஆர்வத்துடன் வாசிக்கப்படுகிறது. விதி அல்லது மரணம் பற்றிய கருத்துருக்களின் மீதுதான் இலக்கியப் பிரதியின் அடிப்படைச் செயல்பாடு இயங்குகிறது என்ற நிலையில்தான் ஈழத்தில் லட்சிய நோக்குடன் போரில் உற்சாகத்துடன் போராடி இறந்த போராளிகளின் மனநிலையைப் புரிந்திட முடியும்.
யதார்த்தத்தில் ராணுவத்தினர் முன்னர் செய்த சித்ரவதையினால் உடல் நலிவுற்றுச் சிறையில் ஆலா மரணமடைகிறாள். அது, ஷோபாசக்திக்கு உடன்பாடாக இல்லை. சிறையில் இருந்து ஒருக்கால் ஆலா வெளியேறும் சூழல் ஏற்பட்டால் என்ன ஆகும் என்று புனைவின் வழியாகச் சித்திரித்துள்ள காட்சிகள், கவனத்திற்குரியன. கண்டி ராஜாவின் மந்திரிகுமாரி சாமலிதேவி போலத் தன்னை அறிந்திடும் ஆலாவின் துயரம் ஏன் தொடர்ந்தது என்பது பிரதி முன்வைக்கிற கேள்வி. ஆலாவின் சுயேச்சையான வாழ்க்கை குறித்த ஆவேசமான தேடலின் தோல்வி ஒருபுறம் என்றால், இறந்த காலத்தில் சபிக்கப்பட்ட வாழ்விலிருந்து விடுதலை இன்னொருபுறம் எனப் புனைவின் சிறகுகள் விரிகின்றன. ஆலா என்ற மனுஷி, கற்பனையான வாழ்க்கையிலும் ஏன் துயரம் தோய்ந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாள் என்ற கேள்வி தோன்றுகிறது. எல்லாம் கதைகள்தான் என்றாலும், நாவலின் இறுதி வாசகமாகக் கதைசொல்லி, “உயிருள்ள ஆலாப் பறவையொன்றை நீங்கள் பர்த்திருக்கிறீர்களா? என்று கேட்பது, இதுவரை வாசித்த வாசிப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
கடூழியச் சிறையில் இருந்து வாமனினன் முயற்சியால் விடுவிக்கப்பட்ட ஆலா, ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்து, வாமனனைத் திருமணம் செய்து, பதுமன் என்ற ஆண் குழந்தைக்குத் தாயாகிறாள். இருவருக்குமிடையில் வழமையான குடும்ப உறவுகூட இல்லை. அவள், மனப்பிறழ்விற்குள்ளானவள் எனப் புறக்கணிப்பிற்குள்ளான நிலையில், பனி பொழிந்திடும் சதுக்கத்தில் துப்பாக்கியால் சுட்டு, குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்கிறாள். ஆலாவின் வாழ்க்கை, கற்பனைப் பின்புலத்தில்கூட ஏன் சீராகவில்லை என்ற கேள்வி முக்கியமானது. இந்நிலைமை ஆலாவுக்கு மட்டுமல்ல இன்று ஈழத்தில் சிரமத்துடன் வாழ்கிற மேனாள் பெண் புலிகளுக்கும், போராளிகளுக்கும் பொருந்தும். பிரதியானது இலக்கிய உலகில் நிலவுகிற கேள்விகளுக்கு உட்படுத்த முடியாத யூகங்கள், பாவனைகள் மூலம்,புனைவாக இருந்தாலும்கூட, அது உண்மை எனக் கருதுகிறவகையில் சில மாதிரிகளை விட்டுச் செல்கிறது. இத்தகைய இலக்கிய உண்மைதான் ஷோபாசக்தி சித்திரித்துள்ள ஆலாவின் ஐரோப்பியப் பயணம். அது, காரண காரிய அறிவுக்கு அப்பாற்பட்டது. ஆலா,இலக்கியப் பிரதியிலிருந்து வெளியேறி, தொன்மமாகிவிட்டார்.
“நானும் உங்களைப் போலவே அன்பும், காதலும், இச்சையும், இரக்கமும், விளையாட்டுத்தனமும் கொண்டவள்தான்” என்று தன்னைப் பற்றி ஆலா குறிப்பிட்டுள்ள வாசகங்கள், அழுத்தமானவை. விசாரணையின்போது கொடிய சித்ரவதைகளைத் தாங்கிக்கொண்டு, தற்சமயம் சிறையில் அடையாளமற்று வெறுமையில் தவிக்கிற ஆலாவின் மனம், பெண்ணுடல் என்ற நிலையில் தன்னைக் கண்டறிந்திட முயலுகிறது. பெண்ணாகிய தான் புழுவாக மாறிவிடாமல், எத்தனிக்கையில் அவளுக்குள் காமம் ஒளிர்கிறது. மரணமும், காமமும் தனிமனுஷியான ஆலாவின் உடலிலும், மனதிலும் நுண்ணிய பாதிப்புகளை உருவாக்குகின்றன. எவ்விதமான மகிழ்ச்சியுமற்று தக்கையாகிப்போன உடலை மீண்டும் இயங்கிடுவதற்குக் காமம் தூண்டுகோலாக இருக்கிறது. பாலுறவு நிலைகள் தரும் கற்பனைச் சித்திரத்தில் மனவெளியில் ஆலா சிறகடிக்கிறாள். சிறையின் வெறுமையில் மெல்ல அழிந்துகொண்டிருக்கிற உடலுடன் போராடுகிற ஆலாவுக்குக் காமம், ஒருவகையில் தன்னிருப்பை உணர்த்துகிறது; உடல் மரத்துப் போய்விடாமல், மனம் கொந்தளிப்புடன் இருக்கச் செய்கிறது. பதின் பருவத்தில் புலன்களின் கொண்டாட்டங்கள் நிரம்பிய உடலை ஏதொவொரு லட்சியத்திற்காக ஒடுக்கினாலும், உடல் தன்னைக் காமத்தின் வழியாக மீட்டுக்கொள்கிறது.
ஷோபாசக்தி, ஈழ வரலாற்றுக்குள் புனைவையும், புனைவுக்குள் வரலாற்றையும் கண்டறிந்திட முயன்றுள்ளார். இதனால் கடந்தகால வாழ்க்கை, பிரதிக்குள் பிரதியாகப் பின்னிக் கிடப்பது வெளிப்பட்டுள்ளது; மொழி என்னும் பிரபஞ்சத்திற்குள் அலைபாய்ந்திடும் மனித விதிகளின் விளையாட்டு, விளையாட்டுத்தனமாகப் பிரதியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அன்பு, தாய்மை, காதல், ப்ரியம் என்று எப்பொழுதும் கசிந்திடும் ஈரமான இயல்புடைய வாழ்க்கையில், ஆலாப் பறவை என்ற குறியீடு மூலம் எல்லாம் விண்வெளியில் சிறகடிகின்றன. மொழி, இனம், மதம், சாதி என்று ஏதோவொன்றின் பின்புலத்தில் அதிகாரத்தின் வெளிப்பாடாகத் தீமையின் பின்னர் பயணிக்கிற வாழ்க்கை பலருக்கும் லபித்திருப்பதை நாவல் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இச்சா நாவலை வெறுமனே கதை என்று வாசித்து வெளியேறிவிடாமல், ஏன் எங்கும் இருள் பரவியிருக்கிறது என்று தோன்றுகிற நொம்பலமான மனநிலை, ஒருநிலையில் வாசகரை உறைந்திருக்கச் செய்கிறது. தான் பெற்ற பச்சிளங் குழந்தையை உரலில் போட்டு இடித்தவாறு சோகமாகப் பாடுகிற மந்திரியின் மனைவி குமாரிஹாமியின் அவலமான குரல் கூத்தில் மட்டுமல்ல, இலங்கையரின் இன்றைய வாழ்க்கையிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதுதான் இச்சா.
(2020 டிசம்பர், காக்கைச் சிறகினிலே இதழில் வெளியானது.)