இழிசெயல்!

கட்டுரைகள்

ஓர் இலக்கியப் படைப்பை எழுதி வெளியிட்டுவிட்டால், அது குறித்து வரும் எல்லாவித விமர்சனங்களையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். நமது மனதுக்குப் பிடிக்காத விமர்சனங்கள் என்றாலும் கூட அங்கீகரித்தே ஆகவேண்டும். அது இலக்கிய அறம்.

படைப்புக்கு வெளியே சென்று எழுதியவனின் மீது அவதூறுகளை அள்ளிக்கொட்டும் சல்லிப் பயல்கள் நிரம்பிய உலகமிது என்பதால் கவலை ஏதுமில்லை. அவற்றை மயிரெனவும் பொருட்படுத்த வேண்டியதுமில்லை. ஆனால், அந்த அவதூறுகளை ‘விமர்சனம்’ என்ற பெயரில் ஓர் இலக்கிய இதழ் வெளியிடுவது இலக்கியத்திற்குப் பிடித்த கேடும் துன்பமும்.

இன்று ‘அகழ்’ இதழில் வெளியாகியிருக்கும் ‘இச்சா’ குறித்த ‘விமர்சனம்’ இத்தகையதே. நாவலை குப்பையென்றோ கூழமெனவோ சொல்வது பிரச்சினையே இல்லை. ஆனால், அதற்குப் புறத்தே; போதைவஸ்துக்களின் தாக்கத்திலிருந்தா இவற்றை ஷோபா எழுதுகிறார், இலக்கியத் திருட்டு, ஒர் ஐரோப்பிய இலக்கிய மன்றம் ஷோபாசக்திக்கு நிசத்தில் வழங்கிய ஒருமாதகால எழுத்து வசிப்பிட சன்மானத்துக்காகச் சமரசம் செய்யப்பட்ட எழுத்து, Public Relations நடவடிக்கைகளால் நாவலைத் தூக்கி நிறுத்தும் முயற்சி என்றெல்லாம் ஒருவர் அவதூறை விசிறியடித்தால், அதை வாரி ‘விமர்சனம்’ என்ற பெயரில் இலக்கிய இதழ் பிரசுரிப்பது கேவலமானது.

இந்த இழிசெயல் செய்த இதழின் ஆசிரியர்கள் சுரேஷ் பிரதீப்புக்கும் அனோஜன் பாலகிருஷ்ணனுக்கும் ஒன்றைச் சொல்வேன். இது இலக்கிய அறமல்ல. நாளை நானே ஜெயமோகனைப் பற்றியோ நவீனைப் பற்றியோ இப்படி இல்லாதது பொல்லாதது ஒன்றை எழுதிக் கொடுத்தால் நீங்கள் பிரசுரிப்பீர்களா என்ன? அப்போது மட்டும் அறம் மயிர் என்றெல்லாம் பேசுவீர்களா இல்லையா!

ஆசிரியர்களே ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்! எத்தனையோ அடக்குமுறைகளையும் எழுத்துச் சுதந்திர மறுப்புகளையும் மிரட்டல்களையும் நிராகரிப்புகளையும் நேரடி உடல்ரீதியான தாக்குதல்களையும் எதிர்கொண்டும் பணியாமல் எழுதிக்கொண்டிருப்பவன் நான். இந்தத் தொடர்ச்சியான எழுத்துப் போரை உங்களது இலக்கிய அரிப்புகளால் சுரண்டிக் கூடப் பார்க்க முடியாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *