மறுபடியும் மறுபடியும் பெரியாரிடம் – தொ. பரமசிவன்

நேர்காணல்கள்

தமிழறிஞரும், சமூகவியல் ஆய்வாளருமான பேராசிரியர் தொ.பரமசிவன், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார். ‘அறியப்படாத தமிழகம்’, ‘இதுதான் பார்ப்பனியம்’, ‘பண்பாட்டு அசைவுகள்’, ‘டங்கல் எனும் நயவஞ்சகம்’ போன்ற நூல்களையும் ஏராளமான சமூகவியல் – இலக்கியக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழல், சாதியம், முதலாளியம், பெரியாரியம் போன்றவை குறித்த கேள்விகளோடு, 15 சனவரி 2003 அன்று பேராசிரியர் தொ.பரமசிவனை, நண்பர் லெனா குமாரின் துணையோடு நான் பாளையங்கோட்டையில் சந்தித்து உரையாடினேன்.
-ஷோபாசக்தி

தமிழ்நாட்டின் மைய அரசியல், பாசிஸத்தை நோக்கி அசைந்துகொண்டிருக்கிறது. பொடா, மதமாற்றத் தடைச்சட்டம் போன்ற கொடிய சட்டங்களை எதிர்த்து வெகுசனங்களிடையே இயக்கங்களோ கலகங்களோ பெரிய அளவில் தோன்றவில்லை. திராவிட இயக்கத்தின் வீறுமிகு சாதனைகள், வெற்றிகள் எல்லாமே துடைத்தெறியப்பட்டுவிட்டன. மறுபடியும் பெரியாரைப் பார்ப்பனியம் வெற்றிகொண்டதா? இது எப்படிச் சாத்தியமாயிற்று?

பெரியாரைப் பார்ப்பனியம் வென்றுவிட்டதோ என்றதொரு அய்யப்பாடு உங்களுக்கு ஏற்பட்டிருப்பது நியாயம் தான். புறநிலையில் நிகழும் மாற்றங்களைக் கவனிக்கும், சிந்திக்கும் யாருக்கும் இவ்வாறான அய்யம் தோன்றும்தான். ஆனால், பெரியார் பார்ப்பனியத்தை வெல்லப் புறப்பட்ட காலமும் இப்போதிருக்கும் காலமும் ஒன்றல்ல. இது குறித்துக் கவலையோடு சிந்திக்க நம்மைப்போல சிலரும் இருக்கிறோம் என்பதுதான் முக்கியமானது. இந்த வீழ்ச்சி வந்திருக்கக்கூடாது. இவ் வீழ்ச்சி நிகழ்ந்தற்கான காரணங்கள் பல. பெரியார் இறந்து முப்பது வருடங்களாகின்றன. பெரியாரிடத்திலே நம்மைப்போல கலை இலக்கியவாதிகள் நூற்றுக்கு நூறு உடன்பட முடியாது. பெரியாருக்கு கலை இலக்கியம் பற்றி எந்தவித உயர்ந்த அபிப்பிராயமும் கிடையாது.

ஒரு தவறை -அந்தத் தவறை வரலாற்றில் கௌதம புத்தரும் செய்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்- பெரியார் செய்தார். பெரியார் தன்னுடைய இயக்கத்துக்குப் பின்புலமாகச் சொத்துகள் இருந்தால் பலமாக இருக்கும் என்று கருதினார். அவருடைய மூதாதையரின் சொத்துகளையும், அவரின் சொத்துகளையும் சேர்த்து இயக்கம் பெரியதொரு சொத்துடமை நிறுவனமாகிவிட்டது. பெரியார் இருக்கும் வரை எல்லோரும் சரியாக இருந்தார்கள். பெரியார் மறைந்த பின்பு, ஒரு சொத்துடமை நிறுவனத்துக்கு இருக்கக் கூடிய எல்லாப் பலவீனங்களும் பெரியாரின் இயக்கத்துக்கும் வந்து சேர்ந்தன. பெரியார் கொள்கைகளை மாத்திரம் வைத்துவிட்டுப் போயிருப்பார் என்றால் இந்த வீழ்ச்சி நிகழ்ந்திருக்காது. பார்ப்பனியம் மறுபடியும் மேலெழுந்திருக்க முடியாது. பெரியார் தன்னுடைய இயக்கத்தைச் சொத்துடமை நிறுவனமாக்கியது பெரும் தவறு என்றுதான் நான் இப்போது அபிப்பிராயப்படுகிறேன்.

இதற்கு அப்புறமாக இந்த நாடாளுமன்ற சனநாயகத்தின் பண்புகள், நேரு போன்ற ‘சோசலிஸ’வாதிகளுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாறுதல்கள், குறிப்பாக ராஜீவ் காலத்திலிருந்து மீண்டும் நேர் எதிர்த்திசையிலே பயணம் சென்ற கதை. இதையெல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை பெரியாரைப் பின்பற்றியவர்கள், பெரியாரைப் பேசியவர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, அதிகாரம் அவர்களைக் கொள்கைகளிலிருந்து அந்நியப்படுத்திக்கொண்டே போனது. 1967-ல் இருந்து 2003-வரை கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாக, அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்து நேர் எதிர்த்திசையிலேயே பயணப்படுகிறார்கள்.

இது தவிர, மின்னியல் ஊடகத்தின் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கு எழுபது பேருக்கு மட்டுமே கையெழுத்துப் போடத் தெரிகிற நாட்டிலே, மின்னியல் ஊடகங்கள் காட்சிரீதியாக ஒரு மனிதனிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் செய்திகளை, எழுத்து ஊடகத்தால் செய்ய முடியவில்லை. நீங்கள் நான்கு நாவல்கள், நானுாறு சிறுகதைகள், இருநூறு திறனாய்வு நூல்கள் எழுதி எவ்வளவுபேரைச் சென்றடைய முடியுமோ, அவ்வளவு பேரிடமும் ஒரு பத்து நிமிடச் செய்தியாலோ, இருபது நிமிட நாடகத்தாலோ உங்கள் கருத்துக்கு நேரெதிரான கருத்துகளை மின்னியல் ஊடகங்கள் பரப்பிவிடுகின்றன.

ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பெரியார் தனது போராட்டத்தைத் தொடங்கும்போது, அவரைப் பின்பற்றிச் சிந்திக்கக்கூடிய, சிந்தனையை வளர்க்கக் கூடிய எளிய மனிதர்கள் இருக்கவில்லை. இன்றைக்கு மிகக் கூர்மையான சிந்தனையுடன் எளிய மக்களிடமிருந்து தோன்றிய பெரியாரியல்வாதிகள் இருக்கிறார்கள். இன்னும் சில இழப்புகளிற்குப் பிறகு, உலகமயமாக்கல் பொருளாதார கலாசார இழப்புகளை நாம் உணர்ந்த பிறகு, பெரியாருக்குத் திரும்புவதைத் தவிரத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை என்றே நான் நினைக்கிறேன்.

எளிய மனிதர்களிடமிருந்து தோன்றிய சிந்தனையாளர்கள் பெரியாரியத்தை நோக்கித் திரும்புவார்கள் என்கிறீர்கள். ஆனால், இவ்வாறான பல சிந்தனையாளர்கள் மூர்க்கமாகத் தற்போது பெரியாரை எதிர்க்கிறார்களே. சிவகாமி, ரவிக்குமார் போன்ற தோழர்கள் பெரியாரை “சாதி இந்து மனநிலை உடையவர்” என்றெல்லாம் கூடப் பழிக்கிறார்கள். பேராசிரியர் வீ.அரசு ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற ஜீவாவின் நூலைப் பதிப்பித்துள்ளார். இவற்றுக்கு என்ன சொல்கிறீர்கள்?

ஜீவானந்தத்துடைய ‘ஈரோட்டுப் பாதை சரியா?’என்ற நூலை, வீ.அரசு அவர்கள் விருப்பத்துடன் பதிப்பித்துள்ளார் என்று சொல்ல முடியாது. வேண்டுமென்றே பதிப்பித்துள்ளார் என்றே நான் கருதுகிறேன். அந்நூலைப் படித்த பின்பு நமக்கு என்ன தோன்றுகிறது? மார்க்ஸியவாதிகள் பெரியாரிடம் எப்படித் தோற்றுப்போனார்கள் என்பதை ஏற்கனவே எஸ்.வி.ராஜதுரை “பெரியார்: சுயமரியாதை சமதர்மம்” எனும் நூலிலே நிறுவியுள்ளார். ஜீவா தமிழ்நாட்டிலே மார்க்ஸியம் பேசியவர்களிடையே மிக நேர்மையான மனிதர். வார்த்தையும் வாழ்க்கையும் ஒன்றுபோல் வைத்திருந்தவர். இலக்கியத்துக்கும் கட்சிக்கும் முடிச்சுப்போட்ட முதல் ஆள் அவர். அவர் அக்கட்டுரைகளை எழுதியதற்குப் பின்பாக நடந்த மாற்றங்கள், இடதுசாரி இயக்கங்களிடையே ஏற்பட்ட பிளவுகள், திரிபுவாதங்கள், மொழி, சாதி இவை இரண்டுதளங்களின் மேலும் அவர்கள் சிந்திக்க மறுத்தது, அதை உணர்ந்து இப்போது இறங்கி வருவது போன்ற நிகழ்வுகளுடன் பொருத்தி இந்த நூலைப் படித்த பிறகு ஈரோட்டுப் பாதைதான் சரியானது என்ற இடத்துக்கு நான் வந்திருக்கிறேன்.

‘வல்லினம்’ பத்திரிகையிலே “பெரியார் சிந்தனையாளர் அல்ல” என்று ரவிக்குமாரின் நேர்காணல் வெளியான போது ‘வல்லினம்’ ஆசிரியர்கள் என்னை அந்த நேர்காணலுக்கு எதிர்வினையாற்றுமாறு கேட்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு ஒரு சிறிய கடிதம் எழுதினேன். அது மறு இதழிலே வெளிவந்திருக்கிறது. என்னுடைய எதிர்வினை என்னவெனில், இந்த நேர்காணலில் ரவிக்குமாரின் முகத்தை விட அ.மார்க்ஸின் முகமே தூக்கலாகத் தெரிகிறது. ரவிக்குமார் போன்றவர்கள் செய்கிற வேலை வைக்கோல் போரில் கூளம் பிடுங்கினாற் போல பெரியாரை வெட்டியும் சிதைத்தும் குறுக்கியும் மேற்கோள் காட்டும் சோ.ராமசாமி செய்யும் வேலை. நண்பர் ரவிக்குமார் நெஞ்சாரப் பொய் சொல்கிறார்.

தவிரவும் பெரியார் தனது காலத்திலே ‘சூத்திரன்’ என்ற வார்த்தையை நம் எதிரியிடமிருந்து பெற்றே பிரயோகித்தார். ‘பிராமணன்’ – ‘சூத்திரன்’ என்பது பார்ப்பான் கற்றுத் தந்த வார்த்தை. அந்த வார்த்தையை வைத்துக்கொண்டுதான் அன்றைய காலகட்டத்தில் பெரியாரால் பேச முடிந்தது. சூத்திரன் என்றொரு சாதியே கிடையாது. திராவிட இயக்கத்தின் தோற்றுவாயாக ‘பார்ப்பனார் இல்லாதோர் அறிக்கை’ வெளியிட்டார்கள். அப்போது அன்னி பெசன்ட் ஒரு வாதத்தை வைக்கிறார். அப்போது காலமெல்லாம் அன்னி பெசண்டை எதிர்த்து வந்த சுப்பிரமணிய பாரதி, அன்னி பெசன்டோடு இந்த விசயத்தில் உடன்பட்டு “பிராமணர் அல்லாதோர் என்றொரு ஜாதியே கிடையாது, திராவிட இயக்கத்தின் ஆரம்பமே பொய்” என்று எழுதுகிறான்.

சூத்திரன் என்ற சொல் மீது பெரியாருக்கு நம்பிக்கையே கிடையாது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் நம் எதிரியின் சொல்லாடலான அந்தச் சொல்லைத் தான் பெரியாரும் உபயோகிக்க வேண்டி வந்தது. காலம் என்றவொரு பிரணமாத்தைக் கருத்திலேயே எடுக்காமல் பெரியாரின் ஒரு சில வார்த்தைகளில் தொங்கிக் கொண்டு சிவகாமி, ரவிக்குமார் போன்றவர்கள் பெரியார் மீது வைக்கும் விமர்சனம் தங்களை அடையாளம் காட்டும் முயற்சியே அன்றி பெரியாரை அடையாளம் காட்டும் முயற்சி அல்ல. அன்று இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்ஸ் எழுதியவற்றின் மேல் நமக்கு இன்று விமர்சனம் உண்டல்லவா? அவர் இந்தியாவைப் பற்றி எழுதும் போது பல அறிவுத்துறைகள் பிறக்கவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்தியன் என்று ஒருவனே அப்போதும் கிடையாது. இப்போதும் கிடையாது. காலங்களுக்கு உரிய நியாயங்களுடன் பெரியாரைப் பொருத்திப் பார்க்க வேண்டும். அப்படியல்லாத விவாதங்கள் பெரியாருக்கு நியாயம் இழைக்காதவை

இன்று சாதிய விடுதலைக்கான பாதை குறித்துப் பல்வேறு தரப்பினரால் பல்வேறு சாத்தியங்கள் முன்வைக்கப்படுகின்றன. தோழர் சந்திரபோஸ் போன்றவர்கள் தமிழ்த் தேசிய விடுதலை சாத்தியமின்றி சாதிய விடுதலை சாத்தியமில்லை என்கிறார்கள்.தமிழ்த் தேசியம் குறித்து உங்களது கருத்து என்ன?

தமிழ்த் தேசியத்தைப் பெரியார் தனது பணியைத் தொடங்கிய காலத்திலிருந்து கொஞ்சம் தள்ளித்தான் வைக்கிறார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் முப்பதுகளின் கடைசியில்தான் வருகிறது. திருச்சியிலே மாநாடு நடத்துகிறபோது அதிலே கரு.முத்து தியாகராசா செட்டியார் போன்ற ஆலையதிபர்கள் உட்படப் பலர் கலந்துகொள்கிறார்கள். ஆனால், தமிழ்த் தேசியம் குறித்துப் பெரியார் பேசும்போது தேசியம் வேறு, சாதிய விடுதலை வேறு என்று பேசவில்லை. இவையிரண்டையும் அவர் அருகருகாக வைத்தே பேசினார். அதைத் தெளிவாக உள்வாங்கிக்கொண்டுதான் ‘சாதி களைந்திடல் ஒன்று, நல்ல தண்டமிழ் வளர்த்தல் மற்றொன்று’ என்று இரு கடமைகளை முன்னிறுத்தி பாரதிதாசன் பாடுகிறார். சாதிய விடுதலையைத் தள்ளி வைத்துவிட்டுத் தமிழ்த் தேசிய விடுதலையோ, தேசிய விடுதலையைத் தள்ளி வைத்துவிட்டுச் சாதிய விடுதலையோ சாத்தியமற்றது என்பது தான் பெரியாரின் கருத்து. எனவே இவை இரண்டையும் தனித்தனியாகப் பார்க்கக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.

பெரியார் பல சந்தர்ப்பங்களில் தேசாபிமானத்தைக் கண்டிக்கிறார். தன்னையொரு தேசத்துரோகி என்றும் அழைக்கிறார். நமது மொழி சாதி காப்பாற்றுவது என்கிறார். இவையெல்லாம் தமிழ்த் தேசியம் உட்பட எல்லாத் தேசியங்களையும் அவர் எதிர்த்ததன் வெளிப்பாடல்லவா?

ஆம். பெரியார் தன் இலட்சியங்களில் தெளிவாய் இருந்தார். அதற்காக எதுவேண்டுமானாலும் செய்யத் தயாராகயிருந்தார். தேசாபிமானத்தைக் கண்டிக்க வேண்டிய வேளையில் அவர் தான் கண்டித்தார். தமிழ்நாடு தமிழருக்கே என்றும் அவர்தான் சொன்னார். தமிழ் மொழி மேல் பெரியாருக்கு உயரிய பற்றெல்லாம் கிடையாது. பெரியார் தெளிவாகத் தன் பொது வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார். “இந்த நேரத்தில் இந்தப்பணி அவசியமாய் இருப்பதாலும், இதைச் செய்ய வேறு யாரும் முன் வராததாலும், எனக்கு இதைத் தவிர வேறு பற்றுக்கள் இல்லாத காரணத்தாலும் நான் பொது வாழ்க்கையில் ஈடுபடுகிறேன்” என்கிறார். அவர் பற்றற்றவர். அவர் புத்தகங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டவரல்ல. அவர் தனது கடைசிக் காலம் வரை தீராத வாசிப்புப் பழக்கம் உடையவராய் இருந்த போதிலும் அவர் நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டவர். மக்களிடமிருந்து கற்றுக்
கொணடவர். அவரே தேர்தலில் பார்ப்பனர்களை ஆதரிக்கிறார். அவர் அனுபவங்களின் மாணவர். தனது விடுதலை இலட்சியங்களை அடைவதற்காக எது வேண்டுமாலும் செய்யக்கூடியவர் பெரியார்.

நமது பண்பாடு, மரபு, இலக்கியம் எல்லாவற்றையுமே ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிறாரே பெரியார். தமிழ்ப் பணிபாட்டுப் புலங்களை ஆழமாக ஆராய்ச்சி செய்தவர் என்ற முறையில் உங்களின் கருத்து என்ன?

பெரியார் காலத்திலே சமூகம் – பண்பாடு பற்றிய புரிதல்கள் நம்மைப் போன்ற ஆய்வாளர்களுக்கோ, மாணவர்களுக்கோ மிகவும் குறைவு. பெரியாருக்குப் பின்பு முப்பது வருடங்கள் போய்விட்டன என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

நம்முடைய மரபுக்குள்ளேயே ஒரு கலக மரபு இருக்கிறது. இந்தக் கலக மரபுகள் நமது இன்றைய கருத்தியல் போராட்டங்களுக்கு ஆதாரமாக நிற்கின்றன. பெரியாருடைய இலக்கியக் கோட்பாடுகளை நாம் இன்று ஏற்றுக் கொள்ள முடியாது என்பது போல, மரபு – பண்பாடு குறித்த பெரியாரின் பார்வைகளையும் அன்றைய காலகட்டத்தின் பார்வைகளாகவே நாம் கருத வேண்டும். பெரியாரோடு சிந்தனை நின்றுவிடவில்லையே. பெரியாரைத் தொடர்ந்தும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நம்மைப் பெரியார் சிந்திக்க வைக்கிறார். மேலே போகப் போக வேறுபல வெளிச்சங்கள் தென்படுகின்றன.

நமது பண்பாடுகளுக்குள்ளேயே பல புரட்சிகரமான அம்சங்கள் உண்டு. அதாவது கார்ல் மார்க்ஸ் சொன்னது போல, காலம் தோறும் ஒடுக்குமுறை இருந்திருக்கிறது என்றால் அதற்கு எதிரான கலகக் குரலும் காலம் தோறும் இருந்துகொண்டேயிருக்கிறது. இது நம் வாழ்வியலில் தொடர்ச்சியாகப் பதிவாகியிருக்கிறது. பார்ப்பானை ‘சாமி’ என்றுதான் சொன்னார்கள். ஆனால், நாட்டுப்புறங்களில் எளிய சனங்களிடையே பார்ப்பானைப் பற்றிப் புழங்கும் வசைமொழிகளை நினைத்துப் பாருங்கள். அதுவும் நமது பண்பாடுதானே. நமது பண்பாட்டுக்குள்ளும் பலமான வேர்களுள்ளன. அவற்றைப் பிடித்துக்கொண்டு மேலே மேலே போகலாம் என்பது எனது கருத்து.

நம்முடைய பண்பாடு என்கிறீர்கள். தமிழ்ப் பண்பாடு என்பது ஆதிக்க சாதிகளால் கட்டப்பட்ட பண்பாடு தானே. இந்த ஆதிக்க சாதிப் பண்பாட்டை நமது பண்பாடாக நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இந்தக் கேள்வி நிரம்ப நாட்களாகவே கேட்கப்பட்டுவரும் கேள்வி. என்னைப் போன்ற ஆய்வாளர்கள் புத்தகங்களை மட்டும் நம்புபவர்கள் அல்ல. பேருந்து வசதிகள் கூட இல்லாத கிராமகளுக்கும் சென்று, அம்மக்களின் வாழ்வியலைக் கண்டு வருபவர்கள். பண்பாடு என்று பேசினால், தமிழ்ப் பண்பாடு என்பதைவிட நான்கு தென்மாநிலங்களையும் துளுவையும் உள்ளடக்கிய திராவிட மொழி பேசுபவர்களின் பண்பாடு என்றுதான் வகைப்படுத்த வேண்டும். திராவிடப் பண்பாடு என்று எதைச் சொல்வது? அடையாளம் காட்ட முடியுமா? என்று ஒருமுறை என்னைக் கேட்டார்கள். திராவிடப் பண்பாட்டில் தான் பார்ப்பனர்கள் தனியாகலும், பார்ப்பனர்கள் அல்லாத எல்லாச் சாதிகளுக்கும் பொதுவான அம்சங்கள் நிறையவும், ஒவ்வொரு சாதிக்குமான சின்னச் சின்னத் தனியான பண்பாட்டு அசைவுகள் இருப்பதையும் நான் பார்க்கிறேன. எடுத்துக்காட்டாக நான் மூன்று செய்திகளை முன்வைக்க விரும்புகிறேன்.

ஒன்று: தாய்மாமனுக்கான மரியாதை. ஒரு தாய் வழிச் சமூகத்தின் எச்சப்பாடாக, திராவிட மொழி
பேசுகிற எல்லா மக்களிடத்திலும் தாய்மாமனுக்கான மரியாதை என்பது ஓர் ஒற்றுமைக்கோடு. இது பார்ப்பனர்களிடம் கிடையாது. பிற்காலத்தில் தான் அவர்கள் இதை நம்மைப் பார்த்துக் கடைப்பிடித்து, தாய்மாமன்களைத் திருமணம் செய்துகொண்டார்கள்.

இரண்டு: இறந்த உடலுக்கான மரியாதை. இந்த மரியாதையைப் பொறுத்தளவில் நம்மிடமிருந்து துல்லியமாக, வெளிப்படையாகப் பார்ப்பனர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள்.

மூன்று: வீட்டுக்கு வெளியே பெண்ணின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. வீட்டுக்குள்ளே மனைவியை அடிப்பவர்கள் இருக்கிறார்கள். அது தமிழ்நாட்டிலே, இந்தியாவிலே அன்றாட நிகழ்வுதான். வீட்டுக்கு வெளியே பெண்மீது நிகழ்த்தப்படும் உடல் வன்முறையைத் திராவிடப் பண்பாடு கண்டிக்கிறது. வீதியிலே வைத்து மனைவியை அடித்தால் அடுத்த வீட்டுக்காரன் குறுக்கே வருவான். ‘உன் வீட்டுக்குள் வைத்து அடி, தெருவிலே அடிக்காதே’ என்று தடுப்பான். அதேபோல் பேருந்துக்குள் ஒரு நிறை சூலி ஏறினால் எழுந்து இடம் கொடுப்பார்கள். பேருந்துக்குள் சாதி இல்லை. கர்ப்பிணிப் பெண் சலுகையளிக்கப்பட்ட பெண்ணாகவே நமது பண்பாட்டில் பார்க்கப்படுகிறாள். இந்த மாதிரியான நிறையக் கூறுகள் திராவிடப் பண்பாட்டிலே உள்ளன. அது தவிர சாதி சார்ந்து, வட்டாரம் சார்ந்து ஒவ்வொரு சாதிக்கும் வட்டாரத்துக்குமான சில பண்பாட்டு அசைவுகள் உள்ளன. இந்த அசைவு கூட ஒரு சாதிக்கு எல்லா இடத்திலும் பொதுவாக இராது. அவை வட்டாரம் சார்ந்து வேறுபடும். எனவே தலித் பண்பாடு, தமிழ்ப் பண்பாடு என இரண்டாக வேறு வேறாக என்னால் பார்க்க இயலவில்லை. இது கள ஆய்வு எனக்குக் கற்றுத் தந்த பாடம். எல்லாச் சாதிகளுக்கும் தனித் தனியான பண்பாட்டு அசைவுகள் இருப்பது போன்று தலித்துக்களுக்கும் சாதி சார்ந்து, உட்பிரிவு சார்ந்து, வட்டாரம் சார்ந்து சில அசைவுகள் இருக்கின்றன. இந்த அசைவுகள் காரணமாகத் தான் உட்பிரிவுகளே பிறந்திருக்கின்றன. எனவே தலித் பண்பாடு, தமிழ்ப் பண்பாடு எனப் பிரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

நீங்கள் சொன்ன உதாரணத்திலிருந்தே ஒரு கேள்வி. பேருந்துக்குள் சாதி இல்லை என்கிறீர்கள். தலித் மக்களை இந்தத் திராவிடப் பண்பாடு தானே பேருந்திலேயே ஏறக்கூடாது என்றும், அப்படியே ஏற அனுமதித்தாலும் இருக்கையில் உட்காரக் கூடாது என்றும் ஒடுக்கியது. எனவே திராவிடப் பண்பாட்டிலேயே ஒடுக்கும் சாதியின் பண்பாடு, ஒடுக்கப்பட்ட சாதியின் பண்பாடு என இரண்டு இருக்கிறது அல்லவா? அதாவது தமிழ்ப் பண்பாடு என்கிற ஆதிக்க சாதிப் பணிபாடு, தலித் பண்பாடு எனப் பண்பாடு இரண்டாகத் தானே கிடக்கிறது?

ஒடுக்குமுறைக்குக் காரணம் சாஸ்திரம் சார்ந்தது கிடையாது. அது சொத்துடமை சார்ந்த விடயம். தன்னுடைய உலக வாழ்வின் இன்பங்களை யாரும் பறித்துவிடக் கூடாது என்றும், அவ்வின்பங்களைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமென்றும் நிகழ்த்தப்படுவதே ஒடுக்குமுறை. ஒடுக்கும் மக்களும் ஒடுக்கப்படும் மக்களும் எழுத்தறிவற்றவராய், சாஸ்திரம் அறியாதவராகக் கூட இருப்பர். ஆனால் பார்ப்பனியப் பண்பாடு இந்த சொத்துடமை சார்ந்த, ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்காக அதைப் பண்பாட்டு ஒடுக்குமுறையாகக் கற்பித்து, அதை நியாயப்படுத்தவும் செய்தது. சாதியை நியாயப்படுத்தும் எந்த நூலும் பண்டைய தமிழில் கிடையாது.

தமிழிலே சாதி ஒடுக்குமுறைக்கான எல்லாச் சிந்தனைகளும், பார்ப்பனிய மேலாண்மையையும் அதை நியாயப்படுத்தும் வடமொழிப் பனுவல்களையும் ஏற்றுக்கொண்ட பின்புதான் தொடங்குகின்றன.

தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் நான் அவதானித்த ஒரு விடயம்; கடந்த பதினைந்து வருடங்களாக, அதாவது பிரம்மராஜன், சாரு நிவேதிதா, கோணங்கி தலைமுறைக்குப் பின்னான தலைமுறையில் பெயர் சொல்லுமளவுக்கு ஒரு ‘ஒத்தப் பார்ப்பான்’ இலக்கிய, தத்துவார்த்தப் புலங்களில் இல்லை. எப்படியிருக்கிறது தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழல்? உங்களுக்கு இச்சூழல் நிறைவளிக்கிறதா?

இந்த இலக்கியப் போக்குகள் நிறைவளிக்கிறதா என்று கேட்டால் அது வேறு. ஆனால் ஒன்று, இவர்கள் உறங்கிக் கொண்டிருக்கவில்லை. இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஐம்பதுகளிலே ஏ.சி. செட்டியார் மைய அரசினுடைய சாகித்திய அகடாமிக்காகத் தொகுத்த ‘சிறுகதைக் களஞ்சியம்’ என்றொரு நூல் வெளிவந்தது. நான் மாணவனாக இருந்தபோது, எங்களுக்கெல்லாம் அது பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அகிலன், புதுமைப்பித்தன், அழகிரிசாமி – வெங்கட்ராம் இருந்தார் என்று நினைக்கிறேன்- இவர்கள் தவிர, பதினெட்டுச் சிறுகதைகள் அடங்கிய அத்தொகுப்பிலே மிகுதி எழுத்தாளர்கள் எல்லோருமே பார்ப்பனர்கள்.

அறுபதுகளின் கடைசிப் பகுதியிலிருந்து சிறுகதை – நாவல் இரண்டு துறைகளும் பார்ப்பனர்களிடமிருந்து தமிழர்களால் பறிக்கப்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து எழுபதுகளின் கடைசிப் பகுதியில் நாடகத்துறையும் பார்ப்பனர்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. இன்று மறுபடியும் பார்ப்பனர்கள் மெல்ல இந்த இரும்புக் கோட்டைக்குள் நுழைய முயல்கிறார்கள். ஆனால், பாலகுமாரன் ஒரு கதை எழுதினால் உடனே எதிர்வினை வருகிறது. ‘இந்தியா டுடே’ இலக்கிய மலர் வெளியிட்டால் உடனே கடுமையான விமர்சனம் வருகிறது. எனவே பார்ப்பனர் அல்லாதோர் எழுச்சியின் சில நியாயங்களையாவது ஒத்துக்கொண்ட மாதிரி பார்ப்பனர்கள் எழுதவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் சுஜாதா திருக்குறளுக்கு உரை எழுத வருவாரா?

நீண்ட காலமாகவே ஈழத்துக்கும் தமிழகத்துக்குமான இலக்கிய உறவுகள் உள்ளன. இந்தப் பின்னணியில் நீங்கள் ஈழத்து இலக்கியப் போக்குகளை அவதானித்துள்ளீர்களா? இன்றைய ஈழத்து எழுத்துகள் குறித்த உங்களது மதிப்பீடுகள் என்ன?

ஆறுமுக நாவலர் காலத்திலே, அவர்கள் ஈழம் வேறு தமிழகம் வேறு என்று பிரித்துப் பார்த்தது கிடையாது. அதற்குப் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே பாண்டித்துரைத் தேவர் தமிழாராய்ச்சி உலகுக்குத் தனது பங்களிப்பாக ‘செந்தமிழ்’ என்ற இதழைத் தொடங்குகிறார். ஆசிரியராக முதலிலே ரா.ராகவ அய்யங்காரும், பிறகு மு.ராகவ அய்யங்காரும் இருக்கிறார்கள். இந்தப் பத்திரிகையிலே 1925 வரை – பெரியார் தேசிய இயக்கத்திலிருந்து வெளியேறும் வரை – யாழ்ப்பாணத்து அறிஞர்கள் நிறையப் பேர்கள் எழுதியிருக்கிறார்கள். யாழ்ப்பாணம் கணேசய்யர், வல்லைக் குமாரசாமிப் புலவர், வீ.கனகசபை, காசிவாசி செந்திநாதய்யர், சுன்னாகம் அ.குமாரசாமிப்பிள்ளை, நா.கதிரவேற்பிள்ளை, சூ.முத்துத்தம்பிப்பிள்ளை, கல்குளம் குப்புசாமி அய்யர், தி.சதாசிவம்பிள்ளை, மு.சாம்பசிவனார் என நிறையப் பேர்கள் எழுதியுள்ளார்கள். பின்பு 1930களிலே, ஈழத்தையும் தமிழகத்தையும் இணைப்பவராக விபுலானந்த அடிகள் இருந்தார். அதன் பின் அறுபதுகளிலே கைலாசபதி, சிவத்தம்பி போன்ற அறிஞர்கள் அந்த உறவைப் புதுப்பிக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் ஈழத்து எழுத்தாளர்களின் செயற்பாடுகள் குறித்து நாம் ஆய்வுகள் நடத்தித் தொகுத்தல் அவசியம். இதுபற்றி நான் கா.சிவத்தம்பியிடம் பேசியுள்ளேன்.

இப்போது உள்ள ஈழத்து இலக்கியம் பற்றி என்ன கருதுகிறேன் என்றால் ஈழத்து இலக்கியம் சிறுகதை, கவிதை போன்றவற்றில் மிகவும் நிறைவளிக்கக்கூடியதாக இருக்கிறது என்றே கருதுகிறேன். எதிர்காலத்தில் தமிழ்நாட்டு இலக்கியத்துக்கு வழி காட்டக்கூடியனவாய் ஈழத்து இலக்கியம் அமையும். தவிரவும் ஈழத்தில் நடைபெறும் கருத்துப் போர்களில் தமிழ்நாடு போல ‘நான்’ என்ற தன்முனைப்பு முன்னிறுத்தப்பட்டு விவாதப் பொருள் பின்தள்ளப்படுவதில்லை. இது மிக ஆரோக்கியமான போக்கு.

இன்று நமது இந்து சமூகங்களில் ஈழத்திலோ, இந்தியாவிலோ இருக்கக் கூடிய முதன்மையான ஒடுக்குமுறையும் கொடுமையும் சாதியமே ஆகும். சாதிய விடுதலையைச் சாதிக்க வித்தியாசம் வித்தியாசமான அமைப்புகளும் இயக்கங்களும் ஒன்றுக்கொன்று முரணான வேலைத்திட்டங்களை முன்வைக்கின்றன. ஆயுதப் பாதை, தேர்தல் பாதை, சீர்திருத்தம் என்றெல்லாம் பல போக்குகள் வரையப்படுகின்றன. இது குறித்து நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள்? எமது சமூகத்தின் சாதிய விடுதலை எவ்வழியில் சாத்தியப்படும்?

இதுவோர் ஆழமான சிந்தனையைக் கோரும் கேள்வி. இதற்கு ஒரு தனிமனிதரால் பதில் சொல்ல முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. சாதி பற்றிய முறையான புரிதல்களே நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. தொடக்கத்தில் சாதி பற்றி எழுதப்பட்ட ஆய்வுகள் எல்லாம் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களாலேயே எழுதப்பட்டன. அது தவிர ஒரு சாதியின் அசைவைப் பற்றிய, அதனுடைய போர்க்குரல் பற்றிய பதிவுகளெல்லாம் நம்மிடத்தில் இல்லை. இங்கே சாதிப் பிரச்சினையின் ஆழமும் அகலமும் விரிவும் நாம் நம்பிக்கொண்டிருப்பவையை விட மிக மிகப் பெரியன. குறிப்பாக, காலமும் வெளியும் பங்கிடப்பட்ட முறைமையை நாம் உடைத்தெறிய வேண்டும். காலப் பங்கீடும் வெளிப் பங்கீடும் 1800 வருடங்களுக்கு முன்பே இங்கே ஒழுங்கமைக்கப்பட்டுவிட்டன. அதை நுணுக்கிச் செதுக்கிச் செதுக்கி தமிழ் சாதி முறையை உண்டாக்கிவிட்டார்கள். இது எப்போது ஆழமானதென்றால், தமிழ் வரலாற்றிலே ஆறு நூற்றாண்டுகள் காலம் அரசியல் அதிகாரம் தமிழர்களிடமில்லை. அப்போதுதான் இது மிகக் கொடுமையானதாக ஆக்கப்பட்டது. பின்பு, காலனி ஆட்சியாளர்கள் பங்கிடப்பட்ட வெளிகளிலே கை வைக்கவில்லை. அவற்றைத் தேச வழமைச் சட்டங்களாக்கி விட்டார்கள். மன்னர் காலங்களிலே மன்னர்களை அண்டிப்பிழைத்த ‘உயர் சாதியினர்’ எனப்பட்டவர்கள் காலனி ஆட்சிக்காலத்தில்தான் நேரடியாகப் பெருமளவு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள். அது காலங்காலமாக இன்றுவரை தொடர்கின்றது. இந்திய அரசியல் சட்டம் வரை தொடர்ந்தது. எனவே காலப்பங்கீடு, வெளிப்பங்கீடு ஆகிய முறைமைகளை உடைப்பதற்கான திட்டம் என்ன? ஒரு கூட்டுச் சிந்தனையூடாகத்தான் அதை உடைக்கலாம் என நான் கருதுகிறேன்.

உலகமயமாக்குதல் என்பது தவிர்க்க முடியாததே என சில மேலைத்தேய அறிஞர்கள் கருதுகிறார்கள். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி எப்படிக் கைவினைச் சங்கங்களிடமிருந்து உற்பத்தியை விடுவித்து தேசமயமாக்கியதோ, அதே போன்று இன்றைய காலத்தில் உற்பத்திச் சக்திகளின் அபரித வளர்ச்சி என்பது தேச எல்லைகளை உடைத்து உலகமயமாவதை நாம் எதிர்கொண்டு, உற்பத்தியையும் விநியோகத்தையும் நியாயமாகப் பங்கீடு செய்ய வேண்டும் என்பது அவர்களது கருத்து. மூன்றாமுலக இடதுசாரிகள் உலகமயமாக்கலைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். இதிலே உலகமயமாக்கல் மூலம் தலித்துகள் பொருளுற்பத்தியில் நேரடியாகப் பங்குகொண்டு ஓரளவு பொருளியல் முன்னேற்றத்தைச் சாத்தியப்படுத்தலாம் என்றும் சில தலித் அறிஞர்கள் கூறுகிறார்கள். இது குறித்து உங்களது கருத்து என்ன?

நான் ‘டங்கல் என்னும் நயவஞ்சகம்’ என்றொரு சிறு நூல் வெளியிட்டுள்ளேன். இனி ஓர் உலகப் போர் வராது. ஏனெனில் உலகப் போரைத் தவணைமுறையில் நடத்திக்கொள்ள ஏகாதிபத்தியம் கற்றுக்கொண்டுவிட்டது. எனவே உலகமயமாக்கல் என்பது ஒரு கொடுமையான பொருளாதாரச் சுரண்டல் மட்டுமல்ல, அதைவிடப் பன்மடங்கு மோசமான கலாசாரச் சுரண்டல் என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் சுயமான பொருளுற்பத்தி, சுயமான அறிவுற்பத்தி இவை இரண்டும் தங்களைத் தவிர வேறு எவரிடமும் இருக்கக் கூடாது எனக் கருதித் திட்டமிட்டு அழிக்கிறார்கள். ஆனால் உலகமயமாக்கலிலே வேறு சில விளைவுகளும் உண்டு. குறிப்பாக இந்தியாவினுள்ளே கணிப்பொறியியல் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏனெனில் அதுவொரு பயனுறு அறிவியல். வெள்ளைக்காரன் கொண்டு வந்த சூத்திரங்களை மனனம் செய்யும் பார்ப்பனர்களுக்குச் சாதகமான கல்விமுறையை கணிப்பொறி உடைத்துள்ளது. உனக்கு என்ன மனப்பாடம் செய்யத் தெரியும்? என்ற கேள்வியைத் தவிர்த்து, உனக்கு என்ன செய்யத் தெரியும்? என்ற கேள்வி கல்வித்துறையிலே கேட்கப்படும் நிலை தோன்றியுள்ளது. இது நமக்குச் சாதகமான சில பின்விளைவுகளை உண்டாக்கும்.

ஒரு காலத்திலே கிராமத்திலிருந்து பார்ப்பனர்கள் நகரங்களுக்குச் சென்று குடியேறினார்கள். மற்றச் சாதியினர் நகரமயமானதுக்கும் பார்ப்பனர்கள் நகரமயமானதுக்கும் இடையே பெரும் வித்தியாசம் உண்டு. பார்ப்பனர்கள் அதிகாரங்களைத் தேடி, இழந்து போன அதிகாரங்களை மீட்டெடுக்கும் முயற்சியிலே நகரங்களுக்குக் குடிபோனார்கள். நகரங்களின் பெரும் பதவிகளைக் கைப்பற்றினார்கள். முதலில் மாவட்டத் தலைநகரங்களுக்குப் போனார்கள். அங்கும் நம்மவர்கள் சென்றபோது, சென்னைக்குப் போய் ‘மாம்பலம்’ போன்ற புதிய குடியிருப்புக்களை உருவாக்கினார்கள். அங்கும் நம்மாட்கள் போனபோது, அவர்கள் வட இந்தியாவை நோக்கி நகர்ந்தார்கள். மாதுங்கா, சௌத் பிளாக் போன்ற இடங்களைக் கையகப்படுத்தினார்கள். பின்பு, தம் பூர்வதேசம் என்ற பெருமையோடு இங்கிலாந்துக்குப் போனார்கள். இங்கிலாந்தின் கை தளர்ந்தபோது, அமெரிக்காவுக்குப் போனார்கள். ஆனால் இன்றைக்கு அமெரிக்காவிலே இருக்கக்கூடிய இந்தியர்களிலே கணிசமானோர் பார்ப்பனர் அல்லாதவர்கள். அங்கும் போய் அவர்கள் சாதிச் சங்கங்களை உருவாக்குவது கவலைக்குரியது. உலகம் முழுவதும் பரவுதல் தனக்கு மட்டுமே சாத்தியம் என்ற பார்ப்பனியக் கருத்தியலை நொருக்கி, கணிப்பொறி மூலம் அந்த வெளிக்குள் பார்ப்பனர் அல்லாதவர்கள் பிரவேசித்துள்ளார்கள்.

பெரியாரை முன்வைத்து மீண்டும் ஒரு கேள்வி. தமிழ்நாட்டில் சில பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களைத் தவிர்த்துப் பார்த்தால், பெரியாரை ஏற்றுக்கொண்டு பேசுபவர்களும் சரி, பெரியாரை மறுத்துப் பேசுபவர்களானாலும் சரி, பெரியாரை பகுத்தறிவு – கடவுள் மறுப்பு – சாதிப்பிரச்சினை- பெண் விடுதலை போன்ற எல்லைகளுக்குள் மட்டுமே நிறுத்திப் பேசி வருகிறார்கள். பெரியாரிடம் காணக் கிடைக்கும் பல ஒழுங்கவிழ்ப்புவாதக் கூறுகளை இவர்கள் பேசுவதில்லை. குடும்பம், குழந்தை பெற்றுக் கொள்வது, நீதிமன்றம், நீதி, காதல் போன்ற அறங்களையெல்லாம் உடைத்தெறிந்து இயங்கியவர் பெரியார். இன்று வெகுசனங்களின் தலைவர்களுக்கெனக் கட்டப்படும் புனிதங்களையெல்லாம் கலைத்துப் போட்டவர். நிர்வாணச் சினிமா தொடக்கம் நீதிமன்றம் வரை அவரது கலகக் குரல் விரிந்தது. பெரியாரின் இந்தக் கலகப் பண்புகள் குறித்து ஒடுக்கப்பட்டோரின் இன்றைய தலைவர்கள், சிந்தனையாளர்கள் மெளனம் சாதிப்பது ஏன்? இவர்களின் அதிகார வேட்கைக்குப் பெரியாரின் கலகப் பண்புகள் ஒரு தடையெனக் கருதுகிறார்களா?

ஆம். பெரியார் ஒரு கலக மரபுச் சிந்தனையாளர்! அவர் நீதிமன்றங்களில் பேசியதைக் கவனித்தாலே அவற்றைப் புரிந்து கொள்ளலாம். குறிப்பாக நாடு விடுதலை பெற்ற பிறகு, அவர் தமிழ் மக்களின் பெரும் தலைவர் ஆகிய பிறகு, கிட்டத்தட்ட அவருடைய எழுபத்து நான்காவது வயதிலே “நான் அப்படித்தான் அய்யா சொன்னேன். அது தான் நியாயமென்று இப்போதும் கருதுகிறேன். என்ன தண்டனை கொடுக்கிறீர்களோ கொடுங்கள்” என்று திருச்சி நீதிமன்றத்திலே மாவட்ட ஆட்சித் தலைவர் மலையப்பன் வழக்கிலே பெரியார் சொன்னார். பெரியாரின் கலக மரபுகளைப் பின்பற்றியவர்கள் 1967-க்கு முன்னே தி.மு.க.வில் சிலர் இருந்தார்கள். ஆனால் அரசியல் அதிகாரம் என்ற தேனைத் தொட்டு நாக்கிலே தடவிய போது இவர்கள் பெரியாரை என்ன, எதை வேண்டுமானாலும் விற்கத் தயாராகயிருந்தார்கள். இப்போதும் தயாராக இருக்கிறார்கள்!

(‘காலம்’ -18வது இதழ்)

2 thoughts on “மறுபடியும் மறுபடியும் பெரியாரிடம் – தொ. பரமசிவன்

  1. திரு தொ.ப அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *