யாப்பாணச் சாமி

கதைகள்

‘குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பாணத்தான், பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி’ என்றெல்லாம் சுப்ரமணிய பாரதியார் போற்றிப் பாடிய, அருளம்பலம் சுவாமியைப் பற்றியதல்ல இந்தக் கதை. வேறொரு யாப்பாணச் சாமியைப் பற்றியே உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். பாரதியார் புதுச்சேரியில் சந்தித்த அருளம்பலம் சுவாமி வாயைத் திறந்து பேசாத மௌனகுரு. இந்த யாப்பாணச் சாமி முற்றிலும் வேறு.

என்னுடைய அம்மாவுக்கு, நான் இன்னும் கல்யாணம் செய்யாமலிருப்பது தீராக் கவலை. பெற்ற மனம் பதைக்காமலிருக்காது. அம்மா, யாப்பாணச் சாமியைத் தரிசித்து என்னுடைய எதிர்காலம் குறித்துக் கேட்டிருக்கிறார். இன்றைய தேதிக்கு யாழ்ப்பாண மக்கள் அதிகமாகக் கூடும் இடமென்றால், அது இந்தச் சாமியாரின் மடம்தானாம். அரையில் ஒரு சாண் கச்சை மட்டுமே தரித்திருக்கும் யாப்பாணச் சாமியார் சமைத்த உணவையும், தோல் உரிக்கப்பட்ட பழங்களையும் தவிர வேறெதையும் காணிக்கையாகப் பெற்றுக்கொள்வதில்லை.

யாப்பாணச் சாமியிடம் எனது அம்மா “இன்ன இன்ன மாதிரி, என்னுடைய மகன் பிரான்ஸில இருக்கிறான், வயது வட்டுக்குள்ள போயும் இன்னும் கலியாணம் கட்டாமலிருக்கிறான்” என்று சொல்லிப் பரிகாரம் கேட்டபோது, யாப்பாணச் சாமி “உன்ர மகன் என்ன வேலை பார்க்கிறான்?” என்று கேட்டிருக்கிறார். அம்மா கொஞ்சம் பெருமையுடனேயே “அவன் பெரிய எழுத்தாளன் சாமி, இங்கிலிசில எல்லாம் புத்தகம் வந்திருக்கு” என்றிருக்கிறார். அவ்வளவுதான், சாமி பதறிப் போய்க் கூச்சலிட்டிருக்கிறார்.

“அடியே வேசை கெடுத்தாயடி குடிய…என்ர எளிய தோற, தூமச்சீல, உனக்கு புள்ள வளர்க்கத் தெரியாதோடி, அந்தச் சுண்ணிய எழுதுறது, இலக்கியம் ஊம்புறது எல்லாத்தையும் விட்டுப் போட்டு ஒழுங்கா வேலை வெட்டிக்குப் போகச் சொல்லு! அப்பதான் அவனுக்கு ஒரு பண்பான வேசையோ அன்பான தாசியோ கிடைப்பாள்.”

இந்த யாப்பாணச் சாமியாரால், ஒரு வருடத்துக்கு முன்பு இலண்டன் நகரமே பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், தமிழின உணர்வாளர்கள், ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸார், இலங்கைத் தூதரகம் எல்லோருடைய கவனத்திலும் யாப்பாணச் சாமியாரே இருந்தார்.

பிரச்சினைக்கான மூல காரணம் எனப் பார்த்தால், அது பார்பரா பிரிக்மென் என்ற ஐரிஸ் பெண்மணி எழுதிய ‘Bad Word God’ என்ற புத்தகமாகவேயிருக்கும். அந்தப் புத்தகம், யாப்பாணச் சுவாமியின் வரலாற்றைச் சொல்லும் சிறிய புத்தகம். அய்ம்பது வயதான பார்பரா, யுத்த காலத்தில் மனித நேயப் பணியாளராக இலங்கையில் சில வருடங்கள் பணியாற்றிய போது, யாப்பாணச் சாமியால் கவரப்பட்டுள்ளார். யாப்பாணச் சாமியின் ‘அருட்காதலி’ என்றே இவர் தன்னை அழைத்துக்கொள்கிறார்.

இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இன்னொருவரான ஆசிரியர் சதாசிவம், இலண்டனில் ‘யாழ்ப்பாணச் சுவாமி சத் சங்கம்’ என்றொரு சிறிய அமைப்பை உருவாக்கி நடத்திவருபவர். ஆசிரியர் சதாசிவம் மூலம், யாப்பாணச் சாமி குறித்து நான் தெரிந்துகொண்ட தகவல்களை ஒழிவுமறைவில்லாமல், பச்சையாகவே உங்கள் முன் வைத்துவிடுகிறேன்.

2

யாப்பாணச் சாமியாரின் இயற்பெயர் நாகேஸ்வரன். ஈழத்துச் சிதம்பரம் என்றழைக்கப்படும் காரைதீவில் 1960-ம் வருடம் பிறந்தவர். இளமையில் கடுமையான துடியாட்டக்காரனாகவே அவர் இருந்தார். அவருடைய வீடிருந்த நிலம் இலங்கைக் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்பாக, அவரது குடும்பம் யாழ்ப்பாண நகரத்துக்குக் குடி பெயர்ந்தது. அங்கேதான் நாகேஸ்வரனுக்கு போராட்ட இயக்கமொன்றுடன் தொடர்பு ஏற்பட்டு, 1983 தீபாவளியன்று, ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக நாகேஸ்வரன் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார்.

ஆனால், நாகேஸ்வரன் எதிர்பார்த்திருந்தது போல ஆயுதப் பயிற்சி முகாமும் இயக்க வாழ்வும் இருக்கவில்லை. இயக்கத் தலைமைகள் கடுமையான சர்வாதிகாரிகளாக இருந்தார்கள். பயிற்சி முகாமில் எந்தவித ஜனநாயக நடைமுறைகளும் இருக்கவில்லை. நாகேஸ்வரனால் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. “முகாம் நடவடிக்கைகள் சரியாக இல்லை, மாறுதல்கள் வேண்டும்” என்று இரண்டு வார்த்தைகள்தான் பேசினார். இதற்காகவே அவரைக் கைது செய்து, இயக்கத்தின் இரகசியச் சித்திரவதை முகாமுக்கு அனுப்பிவிட்டார்கள். மாற்று இயக்கத்தின் உளவாளியென்றும், தலைமையை மாற்ற வேண்டுமென்று கிளர்ச்சி செய்கிறாரென்றும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அந்தக் கொடிய சித்திரவதை முகாம் ‘நாமக்கல்’ பகுதியில் இருந்தது என்கிறார் யாப்பாணச் சாமி. அந்த முகாமுக்குக் கொண்டுவரப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து விசாரித்துவிட்டு, கொலை செய்து தோப்பில் புதைத்துவிடுவார்களாம். நாகேஸ்வரனும் தான் கொலை செய்யப்படும் நாளுக்காகக் காத்திருந்தார்.

அந்த இயக்கத்தின் தலைவர், அப்போது தூய தமிழில் பேசுவதில் பற்றுக்கொண்டிருந்ததால், அந்த இயக்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களும் தூய தமிழையே பயின்றுகொண்டிருந்தார்கள். அந்தச் சித்திரவதை முகாமில் பலரும் தூய தமிழையே பேசினார்கள். சித்திரவதைக் கருவிகளுக்கும் தூய தமிழ்ப் பெயர்களையே வைத்திருந்தார்கள். அலவாங்கு என்பதற்கு ‘நெட்டிரும்பு’ என்றும் வெல்டிங்குக்கு ‘ஒட்டிரும்பு’ என்றும் சொல்வார்கள்.

நாகேஸ்வரனையும் தூய தமிழிலேயே விசாரித்தார்கள். பல கேள்விகளுக்கு நாகேஸ்வரன் பதிலளிக்க முடியாமல் தவித்ததற்குத் தூய தமிழே காரணமாகயிருந்தது. கேட்கப்படும் கேள்வியில் பாதி வார்த்தைகள் அவருக்குப் புரியவேயில்லை. “குமுகாயம், உழன்றி, அட்டில், துமுக்கி என்றெல்லாம் பேசி அவர்கள் நாகேஸ்வரனைச் சித்திரவதை செய்தார்கள்.

ஒரு குடிசையில் நாகேஸ்வரனை தனிமையில் அடைத்து வைத்திருந்தார்கள். நாகேஸ்வரனுக்கு இரவுக் காவலாக நியமிக்கப்பட்டிருந்தவனுக்கு பதினாறு வயதுதான் இருக்கும். அந்த முகாமிலேயே அவன் மட்டும்தான் தூய தமிழ் பேச மாட்டான். அவனுக்கு ஏனோ நாகேஸ்வரன் மீது இரக்கம் வந்திருக்கிறது. ஒரு நடுச்சாமத்தில், கையில் ஒரு மண்வெட்டிப் பிடியை எடுத்துக்கொண்டு போய், அந்தச் சிறுவன் அதனால் அடித்தே நாகேஸ்வரனை விசாரித்தான். இந்தச் சிறுவனின் கேள்விகள் தெள்ளத் தெளிவாகப் புரிந்ததால், நாகேஸ்வரன் சரியாகப் பதிலளித்து விசாரணைக்கு ஒத்துழைக்கலானார். நாகேஸ்வரன் குற்றமற்றவர் என்பது அந்தச் சிறுவனுக்குப் புரிந்திருக்க வேண்டும். நாகேஸ்வரனின் கை, கால் கட்டுகளை அவிழ்த்துவிட்டு “டேய் புண்டையாண்டி, இயக்கத்துக்கு ஓக்கலாமெண்டு நினைக்காத. எங்கேயாவது ஓடிப்போ’ என்று அந்தச் சிறுவன் சொல்லிவிட்டான். அப்போது நாகேஸ்வரனின் இடுப்பில் கிழிந்துபோன சாரம் மட்டும்தான் இருந்தது. எப்படியோ அங்கிருந்து கால்போன போக்கில் ஓடி, நெடுஞ்சாலைக்குப் போய், ஒரு லொறியில் நாகேஸ்வரன் இரந்து பரந்து ஏறிக்கொண்டுவிட்டார். அந்த லொறி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குப் பொருட்களைக் கொண்டுசென்ற லொறி.

திருவண்ணாமலை பரதேசிகளின் ஊராகயிருந்தது. பரதேசிகளோடு பரதேசியாய் நாகேஸ்வரனும் கலந்துவிட்டார். அவரை விடுவித்த சிறுவன் பேசிய தூசண வார்த்தைகளே அவரது உயிரைக் காப்பாற்றிய அருட் சொற்கள் என்று அவருக்குத் திடீரெனத் தோன்றியபோது, அவர் கிரிவலப் பாதையில் நிருதி லிங்கத்திலிருந்து இந்திர லிங்கத்துக்குப் பின்னோக்கி நடந்துகொண்டிருந்தார். அந்தச் சிறுவன் இறைச் சொரூபம் என்றே அவர் நம்பினார். எல்லாக் கெட்ட வார்த்தைகளும் பிறப்புக்கும் அன்புக்கும் இன்பத்துக்கும் இரக்கத்துக்குமான மனத் திறப்பு வார்த்தைகளென அவர் உணர்ந்தார். தூசணச் சொற்களைப் போல இயல்பாகவும் உண்மையாகவும் உள்ளத்திலிருந்து பிறக்கும் ஒலிகள் வேறில்லை. மற்றைய சொற்கள் எல்லாமே பாசாங்கானவை, நிலையற்று மாறக்கூடியவை. இதை உணர்ந்ததும் அவர் தூசண வார்த்தைகளாலேயே உரையாடத் தொடங்கினார்.

பிச்சை வாங்கி உண்டும், கண்ட இடத்தில் உறங்கியும், விழித்திருந்த நேரமெல்லாம் தன்னையொத்த பரதேசிகளிடம் வாதம் செய்துகொண்டுமிருந்தார் நாகேஸ்வரன். என்னதான் மற்றப் பரதேசிகள் உலக அனுபவம் பெற்றிருந்தாலும், நாகேஸ்வரன் போல அவர்கள் மரணத்தின் வாசலுக்குச் சென்று மீண்டவர்கள் அல்லவே. அங்கிருந்த சாமியார்களில் துப்பாக்கியால் சுடத் தெரிந்தவரும் இவர்தான். கண்முன்னே பல கொலைகளைக் கண்டவரும் இவர்தான். எனவே நாகேஸ்வரனின் வாதிலும் பேச்சிலும் அனுபவப் பொருள் மிகுந்திருந்தது. தூசண வார்த்தைகளால் அவர் தர்க்கிப்பதில் ஓர் உண்மைத்தன்மையிருந்தது.

இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட விசிறிச் சாமியார், இவரை அழைத்து வருமாறு ஒரு சீடரை அனுப்பியிருக்கிறார். அதைக் கேட்டுப் புன்னகைத்த நாகேஸ்வரன், நாலைந்து கெட்ட வார்த்தைகளைச் சொல்லிவிட்டு “சாக்கிரத்தில் சாக்கிரம் எச்சில் பூ காணிக்கை” என்று சொல்லிச் சீடரை அனுப்பிவிவிட்டார். கடைசியில் விசிறிச் சாமியாரே வந்து நாகேஸ்வரனைப் பார்த்தார். விசிறிச் சாமியாரே ‘யாப்பாணச் சாமி’ என முதலில் அழைத்தவர்.

இந்திய அமைதிப் படை இலங்கைக்கு வந்த காலத்தில், திடீரென யாப்பாணச் சாமியாரும் இலங்கையில் தோன்றினார். அவர் கடலால் வந்தாரா, ஆகாசத்தால் வந்தாரா என எவருமறியார். யாப்பாணச் சாமியாரின் இடையில் ஓர் அழுக்குக் கச்சை மட்டுமேயிருந்தது. உடலில் எந்த மதச் சின்னங்களும் கிடையாது. வற்றிப் போன கறுத்த மேனியில் சடை முடியும், ஒட்டிய மார்போடு தாடியும் காடு பற்றிக் கிடந்தது. அவரது கண்கள் எப்போதுமே கிறங்கியிருந்தன. இலங்கை முழுவதும் அவர் நடந்தே திரிந்தார். கடைசியாக யாழ்ப்பாணம் முற்றவெளியில், முனியப்பர் கோயில் மண்டபத்தில் தங்கிக்கொண்டார். பகல் முழுவதும் யாழ்ப்பாணக் கடைத் தெருவில் விறு விறுவென நடந்துகொண்டிருப்பார். அவர் யார், எங்கிருந்து வந்திருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை.

ஆனால், பெற்ற தாய்க்கு மகனைத் தெரியாமல் போய்விடுமா என்ன! சாமியைத் தரிசிக்க வந்த தாயார், அது தனது மகன் நாகேஸ்வரனே என்று கண்டுகொண்டார். சாமியாரும் தாயாரின் தலையில் கை வைத்து “உமக்கு குறையொன்றுமில்லை வேசையாரே! ஒழிந்த காரியம்!” என்று ஆசிர்வதித்து அனுப்பிவிட்டார்.

யாழ்ப்பாணத்துச் சனங்களுக்கு அக்காலத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள். இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், தமிழ் இயக்கங்கள், போர் விமானங்கள், எறிகணைகள் என்றெல்லாம் அவர்கள் துக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களின் சார்பாகப் பேச யாருமேயில்லை. அவர்களுக்குக்குப் பற்றிக்கொள்ளவும் ஏதுமில்லை. வராமல் வந்த யாப்பாணச் சாமியைச் சனங்கள் பேசும் தெய்வமாகவே பார்த்தார்கள். தெய்வத்தின் குரலில் அவர்கள் குற்றமோ குறையோ கண்டுபிடிக்கத் தயாராகயில்லை.

யாப்பாணச் சாமி மட்டுமே, அந்தக் காலத்தில் எவரிடமும் துணிந்து பேசும் வல்லமையைக் கொண்டிருந்தார். ஆர்மி, இயக்கம் என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் எல்லோரையுமே கெட்ட வார்த்தைகளில் ஆசிர்வதித்துப் புத்தி சொன்னார். ‘யுத்தம் வேண்டாமடா புண்டை மக்களே” என அவர் சொல்லாத நாளில்லை.

ஆனால், பகுத்தறிவுவாதிகள் எல்லா இடங்களிலும் இருப்பது போலவே இயக்கத்திலுமிருந்தார்கள், இராணுவத்திலுமிருந்தார்கள். அவர்களால் எத்தனையோ தடவைகள் யாப்பாணச் சாமிக்கு துன்பம் உண்டாகியிருக்கிறது. அவரை யாராவது பிடித்துச் சென்றால், அடுத்தநாளே வேறொரு இடத்தில் சாமி தோன்றினார். சாமியார் எத்தகைய சிறையையும் உடைத்துக்கொண்டு வெளியே வரக் கூடியவர் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். முனியப்பர் கோயிலில் எறிகணை விழுந்தபோது, சாமி படுத்திருந்த பகுதியே முற்றாக இடிந்து விழுந்துவிட்டது. ஆனால், சாமியார் அடுத்தநாளே முல்லைத்தீவுக் கடற்கரையில் காட்சியளித்தார். ஒரே நேரத்தில் பல இடங்களில் சாமி காட்சியளித்ததற்கு, உறுதியான சாட்சியங்கள் உண்டென்று எழுதியிருக்கிறார் பார்பரா பிரிக்மென்.

பார்பரா, சாமியாரை முதன் முதலில் சந்தித்தது ஆனையிறவில். அப்போது பார்பரா ஓரளவு தமிழ் பேசக் கற்றிருந்தார். நீண்ட காலமாக கீழைத்தேய சித்தர் மரபில் அக்கறை கொண்டிருந்த பார்பரா, முதற் சந்திப்பிலேயே யாப்பாணச் சாமியின் வசமாகிவிட்டார். ஆனையிறவு உப்பள வெளியில் யாப்பாணச் சாமியார் தன்னுடன் ஒரேயொரு தடவை உடலுறவு கொண்டதாகவும், அப்போது பார்பரா மேலே பார்த்தபோது போர் விமானங்கள் சுற்றிக்கொண்டிருந்ததாகவும், கீழே பார்த்தபோது உப்பு, கரியாக மாறியிருந்தது என்றும் எழுதியிருக்கிறார் பார்பரா பிரிக்மென்.

யாப்பாண சாமி, துறவிக்கு முன்னே வேந்தனும் துரும்பு என்பதை நிரூபணம் செய்தவர். மதங்களை கள்ள ஓழில் பிறந்த வம்புத் தத்துவங்கள் என்றவர். பரமகுருவை சடங்குகள் மூலம் அல்லாமல் சத்திய வார்த்தைகள் மூலமே நெருங்க முடியுமென்றவர். ‘கு’ என்றால் ஆன்மா, ‘ரு’ என்றால் சிதைவு. ‘குரு’ என்பவன் ஆன்மாவைச் சிதைப்பவன் என்றவர். பெண்களுடைய கையிலேயே நாட்டின் நிர்வாகமும் ஆட்சியும் இருக்க வேண்டுமென்றவர். ஒருநாள், சாமி யாழ்ப்பாணத்திலிருந்து காணாமற்போனார். அவர் திரும்பி வருவார், எப்போதும் போலவே திடீரெனக் காட்சியளிப்பார் என யாழ்ப்பாண மக்கள் காத்திருக்கிறார்கள்.

3

பார்பரா பிரிக்மென், யாப்பாணச் சாமியைக் குறித்து எழுதிய ‘Bad Word God’ புத்தகத்தை, இலண்டனிலுள்ள சுமாரான ஒரு பதிப்பகம்தான் வெளியிட்டது. ஆனாலும் எப்படியோ அந்தப் புத்தகம், திரைப்பட இயக்குனர் பென்னி ஸெனாபுடைய பார்வைக்கு வந்துவிட்டது. யாப்பாணச் சாமியாரின் புகைப்படங்களுடன் அச்சிடப்பட்டிருந்த அந்தச் சிறிய புத்தகத்தைப் படித்தபோது, பென்னி ஸெனாபு பரவசத்தின் உச்சத்துக்கே போய் “இதோ இன்னொரு ஜரதுஷ்ட்ரா” என்று கூச்சலிட்டார்.

பென்னி ஸெனாபுக்கு நாற்பது வயதாகிறது. சோமாலியா நாட்டைச் சேர்ந்தவர். உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பித்து, சரக்குக் கப்பலில் திருட்டுத்தனமாகப் பசியும் பட்டினியுமாகப் பயணித்து, அவர் இங்கிலாந்தின் ‘போர்ட்லான்ட்’ துறைமுகத்துக்கு வந்து சேரும்போது, அவருக்குப் பத்தொன்பது வயதுதான். இரவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வேலை பார்த்துக்கொண்டே, பகலில் அவர் கல்வியைத் தொடர்ந்தார். இங்கிலாந்து தேசியத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து, திரைப்பட இயக்குனராகப் பயின்று, பென்னி ஸெனாபு பட்டம் பெறும்போது, அவருக்கு வயது முப்பத்தொன்று.

நான்கு வருடங்கள் உதவி இயக்குனராகவும், இணை இயக்குனராகவும் பல்வேறு மூத்த திரைப்பட இயக்குனர்களிடம் வேலை செய்த பென்னி, தன்னுடைய முப்பத்தாறாவது வயதில் முதல் படத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்தார். படத்திற்குப் பெயர் ‘Sweet Pirates’. சோமாலியக் கடற்கொள்ளையர்களைப் பற்றிய கதையது.

அந்தக் கதையை எடுத்துக்கொண்டு, பென்னி ஏறி இறங்காத திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் அய்ரோப்பாவிலேயே இல்லை. அமெரிக்காவில் கூட முயற்சி செய்து பார்த்தார். திரைக்கதை ஒழுங்கற்று இருப்பதாகப் பாதி நிறுவனங்களும், திரைக்கதை புரியவில்லை எனப் பாதி நிறுவனங்களும் முகத்திலடித்தது போல சொல்லிவிட்டார்கள்.

பென்னி ஸெனாபுவின் கதை சொல்லும் பாணி ‘Postdadaism’ வகையைச் சேர்ந்தது. துண்டு துண்டாகக் கோர்வையில்லாமல் கதை போகும். ஆனால் கதையின் சரடில் ஒரு தீர்க்கமான அரசியல் நிலைப்பாடிருக்கும். கடைசியாக, பெர்லினில் செயற்படும் ஒரு சுயாதீன திரைப்படக் கழகத்தின் ஆதரவு பென்னிக்குக் கிடைத்தது. மிகச் சிறிய பட்ஜெட்டில்தான் ‘Sweet Pirates’ திரைப்படத்தை பென்னி உருவாக்கினார்.

சிறிய படப்பிடிப்புக் குழுவினருடனும், ஆறு ஆங்கில நடிகர்களுடனும் சோமாலியாவுக்குச் சென்ற பென்னி, அங்கே மற்றைய நடிகர்களைத் தேர்வு செய்துகொண்டார். இருபத்தெட்டு நாட்களில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இலண்டன் திரும்பிவிட்டார்.

சோமாலியாவில் நிலவும் வறுமையால், எப்படிச் சிறுவர்கள் கடற்கொள்ளையர்களால் கவரப்பட்டு அவர்களுடன் இணைந்துகொள்கிறார்கள் என்பதுதான் திரைப்படத்தின் அடிப்படைக் கதை. ஆனால், பென்னி அத்தோடு நிறுத்திக்கொள்வாரா என்ன! அய்ரோப்பியர்களே வரலாற்றின் முதன்மையான கடற்கொள்ளையர்கள் என்பதையும் படத்தில் துண்டு துண்டாகப் புகுத்திவிட்டார். ‘Sweet Pirates’ திரைப்படத்தை அய்ரோப்பியப் பத்திரிகைகள் முற்றிலும் நிராகரித்துவிட்டன. ‘இயக்குனர் பென்னி வரலாற்றைத் துண்டு துண்டாகப் புரிந்து வைத்திருக்கிறார்’ என்று அவர்கள் எழுதினார்கள். காலனியம் என்பது வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் தவிர்த்திருக்க முடியாதது என்றார்கள். தங்களது கருத்துக்கு ஆதரவாக, கார்ல் மார்க்ஸை சில இடதுசாரிப் பத்திரிகைகள் அழைத்திருந்தன.

மறுபுறத்தில், சோமாலியாக் கடற்கொள்ளைச் சமூகத்திடமிருந்து பென்னிக்குக் கொலை மிரட்டலே வந்தது. தங்களது தொழில் இரகசியங்களை வெள்ளையர்களுக்குக் காட்டிக்கொடுத்த ‘கறுப்புத் துரோகி’ என அவர்கள் பென்னி ஸெனாபுவைச் சொன்னார்கள். அந்த பெர்லின் திரைப்படக் கழகத்தின் முயற்சியால், சில திரைப்பட விழாக்களில் படம் திரையிடப்பட்டது. நுட்பமான இரசிகர்களால் படம் ஓரளவு பாராட்டப்பட்டாலும், போட்ட பணம் திரும்பக் கிடைக்கவில்லை.

பென்னி, தன்னுடைய முப்பத்தெட்டாவது வயதில், இரண்டாவது திரைப்படமான Zarathustra-வை எடுத்தார். இந்தப் படத்தை ஓர் இங்கிலாந்து நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்தது. பண்டைய பாரசீகத்தில் தோன்றிய ‘சரத்துஸ்தர்’ எனும் ஞானியின் வரலாறே கதை. வரலாற்றில் முன்னும் பின்னுமாகச் செல்லும் கதையில் இயேசுக் கிறிஸ்து, புத்தர், முகமது நபிகள் எல்லோரும் சாதாரண மனிதர்களாகவே வந்து போகிறார்கள்.

அந்த வருடம் எந்த ஈரானியப் படமும் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு வந்து சேரவில்லை எனத் திரைப்பட விழா இயக்குனர்கள் கவலைப்பட்டதைத் காட்டிலும், ஈரான் அரசே அதிகமும் கவலையடைந்திருந்தது. ஈரான் வரலாற்றுடன் தொடர்புடைய பென்னியின் திரைப்படம் வெளியாகியதும், அந்த கவலையிலிருந்து மீண்டு உற்சாகமடைந்த ஈரான் அரசு, உடனடியாகவே தன்னுடைய நாட்டில் அந்தப் படத்திற்குத் தடை விதித்தது. எக்காலத்திலும் ஈரானுக்குள் பென்னி ஸெனாபு நுழையக் கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டது.

அந்தத் திரைப்படம் உண்மையிலேயே மிகச் சிறந்த படம்தான். பென்னியின் முழுக் கலை மேதைமையும் திரைப்படத்தில் வெளிப்பட்டிருந்தது. வணிக ரீதியில் படம் பெரிய வெற்றியடையவில்லை என்றாலும், மிகச் சிறந்த இயக்குனர் என்ற பெயரை அந்தப் படம் பென்னிக்குப் பெற்றுக் கொடுத்தது. ஓர் ஆங்கிலப் பத்திரிகை பென்னியை ‘கறுப்பு ஸ்டான்லி குப்ரிக்’ என்றெழுதியது. பதிலுக்கு பென்னி ‘Fuck off’ என்று சொல்லிவிட்டார்.

பார்பரா ப்ரீக்மென் எழுதிய யாப்பாணச் சாமியின் வரலாற்றைப் படித்தவுடன், தன்னுடைய அடுத்த படம் ‘Bad Word God’ என்று பென்னி முடிவு செய்துவிட்டார். உடனேயே அவர் பார்பராவைச் சந்தித்துப் பேசினார். பார்பரா மூலமாக ‘இலண்டன் யாழ்ப்பாண சுவாமிகள் சத் சங்கம்’ என்ற அமைப்பின் நிறுவனரான சதாசிவம் ஆசிரியரைச் சந்தித்தார். சதாசிவத்துடன் பேசப் பேச பென்னி ஸெனாபுவின் மனதில் திரைப்படம் விரிந்துகொண்டேயிருந்தது.

பென்னி இப்படித்தான் வரைவு எழுதினார்: இலங்கையில் நடைபெற்ற யுத்தம், அதற்கும் ஏகாதிபத்திய அரசுகளுக்குமுள்ள கள்ள உறவு, வன்முறையில் நாட்டம் கொண்ட இலங்கை அரசு, எதிர்விளைவாகத் தோன்றிய ஆயுத இயக்கங்கள், யாப்பாணச் சாமி எனும் சித்தர், யுத்தத்துக்கு எதிரான அவரது குரல், அதிகாரங்ளை எள்ளிநகையாடிய அவரது உரையாடல்கள், சமூகத்தால் அசுத்தமானவை எனச் சொல்லப்படும் வார்த்தைகளைப் புனிதமாக்கிக் கவிழ்த்துப் போட்டது, மறைந்து திரியும் சித்தனின் படிமம்.

இவற்றை நினைக்க நினைக்க, கலையின் உன்மத்த நிலைக்கே பென்னி போய்விட்டார். பார்பராவின் புத்தகத்தில் இல்லாத ஒரேயொரு விடயத்தை மட்டுமே பென்னி திரைக்கதையில் சேர்த்துக்கொண்டார். படத்தின் இறுதிக்காட்சியில் குண்டுகளால் துளைக்கப்பட்ட யாப்பாணச் சாமியின் உடல் கடலில் மிதந்து செல்கிறது.

Zarathustra படத்திற்குப் பின்பு, பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாமே பென்னியின் அடுத்த படத்தைத் தயாரிக்க ஆர்வமாகயிருந்தன. ஆனால் அந்த நிறுவனங்களின் வணிக நிர்ப்பந்தங்களுக்கு உட்படாமல், சுதந்திரமாகவே இந்தப் படத்தை இயக்க பென்னி விரும்பினார். இந்தப் படத்திற்கு ஒருபகுதி நிதியளிக்க ‘பிரித்தானிய தேசியத் தொலைக்காட்சி நிறுவனம்’ முன்வந்தது. ஆனால் அந்தத் தொகை படத்தின் பட்ஜெட்டில் பத்து விழுக்காடு கூட வராது. மிகுதிப் பணத்தைத் தன்னுடைய நண்பர்களிடமிருந்து கடனாக பென்னி திரட்டிக்கொண்டார். ‘இலண்டன் யாழ்ப்பாண சுவாமி சத் சங்கம்’ தன்னுடைய சிறிய பங்களிப்பாக 5001 பவுண்டுகளை இயக்குனர் பென்னிக்கு வழங்கியது.

இந்தத் திரைப்படத்தால், யாப்பாணச் சாமியின் மகிமை உலகமெங்கும் பரவிவிடும் என்று சதாசிவம் நினைத்ததால், தன்னுடைய முழுமையான பங்களிப்பை இயக்குனர் பென்னிக்கு வழங்கினார். பென்னி எழுதிய திரைப்படப் பிரதியில் அறுபது வீதத்திற்கு மேற்பட்டவை தமிழில் பேசப்பட வேண்டிய வார்த்தைகள். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த வார்த்தைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பை ஆசிரியர் சதாசிவமே ஏற்றுக்கொண்டார். இதை யாப்பாணச் சாமிக்குச் செய்யும் பெரும் தொண்டாகவே அவர் கருதினார். வேலைக்கு மூன்று மாதங்கள் லீவு போட்டுவிட்டு, வசனங்களை மொழிபெயர்ப்புச் செய்து முடித்தார்.

அடுத்த கட்டமாக நடிகர்கள் தேடும் படலம் தொடங்கியது. இந்தத் திரைப்படத்தில் முற்றிலும் புதிய முகங்களையே நடிக்க வைக்க வேண்டுமென்பதில் பென்னி உறுதியாகயிருந்தார். யாப்பாணச் சாமியார் மட்டுமே படத்தில் முதன்மைப் பாத்திரம். மற்றைய தமிழ் – சிங்களப் பாத்திரங்கள் எல்லாமே உதிரிகள். அந்த உதிரிப் பாத்திரங்களை இலங்கைக்குப் போய்க் கண்டுபிடித்துவிடலாம் என பென்னி முடிவு செய்தார். பார்பராவாக நடிப்பதற்கு உதவி இயக்குனர் எலிசா தயாராகயிருந்தாள். ஆனால் சாமியார் பாத்திரத்திற்கு ஒரு தேர்ந்த நடிகர் தேவை. இருபது வயதிலிருந்து நாற்பது வயதுவரையான பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும். அதிகம் பேசாத பாத்திரம். எனவே உடல்மொழிக்குப் பெரும் பங்கிருந்தது.

யாப்பாணச் சாமியாரின் தோற்றத்திற்குப் பொருந்தக்கூடிய ஓர் இலங்கைத் தமிழ் நடிகரை, அய்ரோப்பா முழுவதும் பென்னி சல்லடை போட்டுத் தேடினார். நடிப்புக் கல்லூரிகளில் ஒரு தமிழ் மாணவன் கூடக் கிடையாது. பென்னியுடனேயே அலைந்துகொண்டிருந்த சதாசிவம் “எங்களுடைய மக்கள் நடிப்புக் கல்லூரிக்குப் பிள்ளைகளை அனுப்புவதில்லை, எல்லாமே டொக்டர், இஞ்சினியர் படிப்புத்தான்” என்று நிலைமை புரியாமல் கொஞ்சம் பெருமையாகவே சொன்னார். பாரிஸில் ஒரு நடிப்புப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஒரேயொரு தமிழ் மாணவனுக்குத் தமிழும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது. தவிரவும் அந்தப் பையன் நூறு கிலோ எடையிலிருந்தான். எலும்பும் தோலுமான யாப்பாணச் சாமிக்கு அவன் பொருந்தான்.

அய்ரோப்பாவில் 20 -30 வயதுக்குட்பட்ட இளைஞர்களால் நடத்தப்படும் தமிழ் மேடை நாடகக் குழுக்களிலிருந்து ஒரு நடிகரைக் கண்டுபிடித்துவிடலாம் என பென்னி நம்பினார். ஆனால் அப்படியொரு தமிழ் இளைஞர் நாடகக் குழுவே முழு அய்ரோப்பாவிலும் கிடையாது என பென்னி அறிந்தபோது, அவருக்கு இது புரியவேயில்லை. சதாசிவமோ “கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதுவும் ஆத்தாதவன் செயல் என்றொரு பழமொழி தமிழில் இருக்கிறது” என்று சொல்லி, பென்னியை மேலும் குழப்பத்துக்குள் தள்ளினார்.

வேறு வழியில்லாமல் அடுத்த கட்ட சமரசத்துக்கு இறங்கிய பென்னி, ஒரு காஸ்டிங் ஏஜென்ஸி மூலம் ‘தமிழ் பேசத் தெரிந்த நடிகர் தேவை” என்று விளம்பரம் கொடுத்தார். அய்ந்தாறு பேர்தான் விண்ணப்பித்திருந்தார்கள். “இந்த விளம்பரங்களை எங்களுடைய சனங்கள் கவனிக்கமாட்டார்கள்” எனச் சொல்லி, கூடவேயிருந்து சதாசிவம் இயக்குனரை எரிச்சலூட்டிக்கொண்டிருந்தார். விண்ணப்பித்திருந்தவர்களில் நேசன் என்ற முப்பது வயது இளைஞனை பென்னிக்குப் பிடித்திருந்தது. அய்ந்து வருடங்களுக்கு முன்புதான், இலங்கையிலிருந்து அவன் லண்டனுக்கு வந்திருந்ததால், யாழ்ப்பாணத் தமிழை நேசன் அச்சு அசலாகப் பேசினான். நேர்முகத் தேர்வு செய்தபோது, நேசனின் நடிப்பும் பென்னிக்கு ஓரளவு திருப்தியாகவேயிருந்தது. சில நடிப்புப் பயிற்சிகளின் மூலம் அவனைத் தயார் செய்துவிடலாம் என நம்பிக்கைகொண்டார்.

படப்பிடிப்புக்காக இலங்கைக்குச் செல்வதற்கான நாளும் குறிக்கப்பட்டது. நாற்பத்தைந்து நாட்கள் படப்பிடிப்புக்கு மட்டுமே இலங்கை அரசால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதைப் பெறுவதற்கே பல இடங்களில் இலஞ்சம் தள்ள வேண்டியிருந்தது. தயாரிப்பு நிர்வாகிகள் முன்தயாரிப்புகளுக்காக இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள்.

பென்னி, ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் என்ற அளவில் நேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்புக் குழு இலங்கைக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, நேசன் காணாமற் போய்விட்டான். பென்னியும் சதாசிவமும் மாறிமாறி நேசனுக்குத் தொலைபேசி செய்தும் பதிலில்லை. என்ன செய்வதென்று இவர்கள் திகைத்து நின்றிருந்தபோது, நேசனிடமிருந்து சதாசிவத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. சதாசிவம் கிட்டத்தட்ட அழுதேவிட்டார்.

“தம்பி நேசன்…நாளண்டைக்கு நாங்கள் சிலோனுக்குப் போகோணும், நீர் திடீரெண்டு மிஸ்ஸிங்”

“ஓம் ஐயா…ஒரு சின்னப் பிரச்சினை”

“என்ன பிரச்சினை, உமக்கு இலங்கைப் பாஸ்போர்ட்தானே..விசாப் பிரச்சினை இல்லையே”

“இது வேற பிரச்சினை ஐயா…படத்தில செக்ஸ் சீன் ஒண்டு இருக்கெல்லே. சாமியாரும் அந்த வெள்ளைக்கார மனிசியும் ஆனையிறவில உடுப்பில்லாமல் செய்யிற மாதிரி…அந்தக் கட்டத்தை நான் நடிக்கக் கூடாது எண்டு நான் விரும்பியிருக்கிற பிள்ளை சொல்லுது…இன்னும் மூண்டு மாதத்தில எங்களுக்குக் கலியாணம்”

“தம்பி…பின்ன நீ நடிக்கத்தானே போறாய்..உண்மையாவே செய்யப் போறாய்…படம்தானே”

“ஐயா உங்களுக்குப் படம், எனக்கு இது வாழ்க்கை. மன்னிச்சுக்கொள்ளுங்கோ. வணக்கம்.”

சதாசிவம் அடித்துப் பிடித்துக்கொண்டு பென்னியிடம் ஓடிப் போய் விஷயத்தைச் சொன்னபோது, பென்னி இடிந்து போய்விட்டார். இலங்கைக்குக் கிளம்ப இன்னும் முப்பது மணிநேரம் தானுள்ளது. இந்த இடைவெளியில் இன்னொரு நடிகனைக் கண்டு பிடிப்பது நடக்கக்கூடிய காரியமா என்ன!

பென்னி கண்களை இறுக மூடியவாறு யோசித்துக்கொண்டேயிருந்தார். அவரது மூளைக்குள் யாப்பாணச் சாமியாரின் வாடிய முகமும் கிறங்கிய கண்களும் வந்து போய்க்கொண்டேயிருந்தன. அந்த முகத்தைத் தான் நேரில் பார்த்திருப்பது போல அவருக்குத் திடீரெனத் தோன்றலாயிற்று. தனது பருத்த உள்ளங்கையால் படபடவெனத் தனது நெற்றியில் அடித்துக்கொண்டார். தான் காணும் முகம் ஓம்கார் பூஷன் என்பவனின் முகமே என்பது திடீரென அவருக்கு உறைத்தது.

ஓம்கார் பூஷன் ஒரு மராட்டியன். இலண்டனில் ஒரு சிறிய நாடகக் குழுவில் நடிப்பவன். இரண்டு மூன்று தடவைகள் பென்னியைச் சந்தித்து நடிக்க வாய்ப்புக் கேட்டிருக்கிறான். அவனின் முகமும் உருவமும் யாழ்பாணச் சாமியைப் போலவேயிருக்கும். நிறமும் அட்டைக் கறுப்புத்தான்.

பென்னி தொலைபேசியில் ஓம்காரை அழைத்த எட்டாவது நிமிடத்தில், அவன் பென்னியின் அலுவலகத்திலிருந்தான். ஓம்காரிடம் அந்த ஆனையிறவுக் காட்சியைக் கொடுத்து, நடித்துக் காட்டுமாறு கேட்டார் பென்னி. அந்தக் காட்சி எழுதப்பட்டிருந்த தாளை வாங்கிப் படித்தபோது; அதில் சாமி, பார்பரா என இரண்டு பாத்திரங்களிருந்தன. இதில் எந்தப் பாத்திரத்தை பென்னி நடித்துக்காட்டச் சொல்கிறார் என்றெல்லாம் ஓம்கார் யோசிக்கவேயில்லை. சடசடவென மாறி மாறிச் சாமியாரின் பாத்திரத்தையும், பார்பராவின் பாத்திரத்தையும் ஒருசேர ஓம்கார் நடித்துக்காட்டினான். ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த சதாசிவம் உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் உகுத்தார். அர்த்தநாரீஸ்வரரின் ஆனந்தத் தாண்டவத்தைப் பார்ப்பது போலிருந்தது அவருக்கு. இவன்தான் தான் தேடிக்கொண்டிருந்த நடிகன் என்பது பென்னிக்குப் புரிந்துவிட்டது.

இலங்கைக்கு விமானத்தில் பறந்துகொண்டிருக்கும் போது, பென்னிக்கு அருகில்தான் சதாசிவம் உட்கார்ந்திருந்தார். ஏதோ யோசித்துக்கொண்டிருந்த பென்னி, திடீரென சதாசிவத்தின் தோளைத் தட்டி “இந்த ஓம்காரைவிட, அந்தத் தமிழ்ப் பையன் நேசன் சிறப்பான தேர்வு என நீங்கள் நினைக்கவில்லையா?” என்று கேட்டார். பதிலாக சதாசிவம் இவ்வாறு சொன்னார்:

“ஸீ மிஸ்டர் பென்னி, பாரதியார் என்றொரு மகாகவி எங்களிடமிருந்தார். தான் அறிந்த மொழிகளில் தமிழைப் போல சிறந்த மொழி இல்லையென்றார். ஆனால் அவரது வாழ்க்கையைப் படமாக எடுத்தபோது, பாரதியாரின் பாத்திரத்தில் ஒரு மராட்டிக்காரன்தான் நடித்தான். தமிழ்க் கவிஞனின் வேடத்திலேயே மராத்திக்காரன் நடிக்கும்போது, தமிழ் சித்தனின் வேடத்தில் நடிக்கமாட்டானா!”

புன்னகையுடன் பென்னி, சதாசிவத்தின் தோளைத் தட்டினார். அந்த உற்சாகத்திலேயே கடகடவென நாற்பது நாட்களுக்குள் யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, குழுவினருடன் இலண்டன் திரும்பினார். எடிட்டிங், மிக்ஸிங் வேலையெல்லாவற்றையும் இரவு பகலாக உட்கார்ந்து மேற்பார்வை பார்த்து, இரண்டு மாதங்களுக்குள் முடித்துவிட்டார். படத்தை எந்த உலகத் திரைப்பட விழாவில் ‘பிரீமியர்’ செய்யலாம் என பென்னி யோசித்துக்கொண்டிருந்த போதுதான், சதாசிவம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.

“ஸீ மிஸ்டர் பென்னி! வருகிற வெள்ளிக்கிழமை, எங்களது சத் சங்கத்தில் இந்தப் படத்தைத் திரையிட வேண்டுமென்று உங்களைத் தயவாகக் கேட்கிறேன். யாப்பாணச் சாமியின் அடியார்களும், சில தமிழ்ப் பத்திரிகையாளர்களும், தமிழ் புத்திஜீவிகளும் இந்தப் படத்தைக் காண்பதற்கு ஆவலாகயிருக்கிறார்கள்.”

சதாசிவத்தைப் பார்த்துப் புன்னகைத்த பென்னி “இது உங்களின் படம், உங்களின் வாழ்வு. நான் வெறும் கருவிதான். நிச்சயமாகத் திரையிடுவோம்!” என்றார். வெள்ளிக்கிழமை மாலை, இலண்டன் யாழ்ப்பாண சுவாமிகள் சத் சங்க மண்டபத்தில், புரஜெக்டர் வைத்து, சிறப்பு அழைப்பாளர்களுக்குப் படம் திரையிடப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளேயே, இயக்குனர் பென்னி ஸெனாபு குறித்த குற்றச்சாட்டுகள் இணையத்தில் வரிசைகட்டித் தோன்ற ஆரம்பித்தன.

படத்தில் தமிழ்மொழி கொச்சையாக உச்சரிக்கப்படுகிறது, முதன்மைப் பாத்திரத்தில் ஈழத் தமிழ் நடிகர் அல்லாமல் யாரோ மராத்திக்காரர் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார், படப்பிடிப்புக்குப் போயிருந்தபோது, இனப்படுகொலை இலங்கை அரசின் அமைச்சரை இயக்குனர் பென்னி ஸெனாபு சந்தித்திருக்கிறார் என்றெல்லாம் கண்டனங்கள் எழுதப்பட்டன. சதாசிவம்தான் இந்தக் குற்றச்சாட்டுகளை பென்னியின் காதுக்குக் கொண்டுவந்தார்.

இயக்குனர் பென்னி இத்தகைய கண்டனங்களுக்கு அஞ்சக் கூடியவரல்ல. அவர் கடற்கொள்ளையர்களின் மிரட்டலிலிருந்து, ஈரான் அரசின் தடையிலிருந்து, வெள்ளைப் பத்திரிகையாளர்களின் நிறவெறி வரை சந்தித்த பழுத்த பழம். அஞ்சவில்லையே தவிர, அவர் மனமார வருத்தப்படத்தான் செய்தார். தனக்கு அந்நியமான ஒரு நிலத்தை, மொழியை, கலாசாரத்தை, அங்கே நடந்த போரை அவர் தன்னால் முடிந்தளவு உண்மைத்தன்மையோடு படமாக்கியிருக்கிறார். ஆனால் சம்பந்தப்பட்ட சமூகமே படத்தை எதிர்த்தால், அவர் எங்கேயோ தவறிழைத்திருக்கிறார் என்றே பொருள் என்பதாகத்தான் பென்னி நினைத்தார். படத்தின் மீது அதிருப்திகொண்டவர்களைச் சந்தித்து உரையாடி, ஒரு நல்ல தீர்வுகாண விரும்புவதாக அவர் சதாசிவத்திடம் சொன்னார். சத் சங்கத்திலேயே அந்தக் கலந்துரையாடலுக்கு நாள் குறிக்கப்பட்டது.

கலந்துரையாடலைத் தொடக்கி வைத்துப் பேசிய பென்னி, தனக்குத் தமிழ் மொழி தெரியாததற்கு வருந்துவதாகக் குறிப்பிட்டார். படத்தில் பேசப்படும் தமிழ் உரையாடல்களில் தவறிருந்தால், அவற்றைச் சரி செய்துகொள்வதாகவும் உறுதியளித்தார். “அதில் பல இடங்களில் பேசப்படுவது தமிழே கிடையாதே” என்று ஒருவர் குரலெழுப்பினார்.

பென்னி சங்கடத்துடன் சதாசிவத்தைப் பார்த்துக்கொண்டே “மதிப்புக்குரிய ஆசிரியர் சதாசிவம் தான் தமிழ் உரையாடல்களை எழுதியவர்” என்றார். சதாசிவத்துக்கு தெருவில் சீலை உரிந்து விழுந்தது போலிருந்தது. அந்தக் காலத்திலேயே தமிழ் பண்டிதர் சோதனை பாஸ் பண்ணியவர் அவர். தமிழ் உரையாடல்களை இலக்கண சுத்தமாக எழுதியிருந்தார். படப்பிடிப்பில் ஓம்கார் அவற்றைப் பேசியபோது, சரி போலத்தான் சதாசிவத்துக்கும் பட்டது. ஆனால் திரையில் பெரிய சத்தமாகக் கேட்டால் அங்கங்கே குழம்பிக் கேட்கிறது. சதாசிவம் கையைப் பிசைந்துகொண்டே அமைதியாக உட்கார்ந்திருந்தார். “பொதுமக்களுக்குத் திரையிடுவதற்கு முன்பாக நாங்கள் வசனங்களைச் சரி செய்து விடுகிறோம்” என்று பென்னி மறுபடியும் வாக்குறுதி கொடுத்துவிட்டு, “உங்களுக்குள் டப்பிங் பேசி அனுபவப்பட்ட யாராவது இருந்தால் கூட எங்களுக்கு உதவலாம்” எனச் சொல்லிப் புன்னகைத்து ஒரு சுமூகநிலையை ஏற்படுத்த முயற்சித்தார்.

“தமிழைப் பிழையாகப் பேசினாலும் பரவாயில்லை, தமிழ் என்று சிங்களத்தைப் பேசுகிறார்கள்…” என்று ஒருவர் குற்றம்சாட்டினார். இதைக் கேட்டு மிரண்டு போன பென்னி, பரிதாபமாக சதாசிவத்தைப் பார்த்தார். சதாசிவம் ஈனமான குரலில் “அப்படி இருக்க வாய்ப்பில்லையே…என்ன வசனம்?” எனக் கேட்டார்.

“முயங்க… முயங்க என்று பல இடங்களில் வருகிறது…” என்றார் குற்றம் சாட்டியவர்.

சதாசிவத்துக்குப் பிரச்சினை புரிந்துவிட்டது. ஆங்கில வசனத்தில் Fuck Fuck Fuck என்று பக்கத்துக்குப் பக்கம் எழுதி வைத்திருந்தார் பென்னி. அதைத் தூய தமிழில் ‘முயங்க… முயங்க…முயங்க’ என்று சதாசிவம் எழுதியிருந்தார். சதாசிவம் குற்றம் சாட்டியவரைப் பார்த்து “அது தமிழ் தானுங்கோ” என்றார். அதற்குக் குற்றம்சாட்டியவர் ” எனக்கு யாழ்ப்பாண, மட்டக்கிளப்பு, கொழும்பு எல்லாத் தமிழும் தெரியும். இப்பிடியொரு புதினமான தமிழ நான் கேள்விப்பட்டதில்ல” என்று அதிருப்தியுடன் சொன்னார்.

“சாமியார் பாத்திரத்தில் ஏன் ஈழத் தமிழரை நடிக்க வைக்கவில்லை?” என்று அடுத்த கேள்வி கோபத்துடன் முன்வைக்கப்பட்டது. பென்னிக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிடும் போலிருந்தது. தனது பருத்த கைகளை மார்போடு கட்டியவாறு “முயற்சித்தேன்..என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார்.

“ஹோ” என்ற அதிருப்திச் சத்தம் மண்டபத்தில் எழுந்தது. அதைத் தொடர்ந்து “நீங்கள் இன்னும் தீவிரமாகத் தேடியிருக்க வேண்டும்” என்றொரு குரல் கேட்டது.

“மிஸ்டர் பென்னி ஸெனாபு! நீங்கள் கொழும்பில் இலங்கை அமைச்சரைச் சந்தித்தது ஏன்?” ஒரு இளைஞன் கேள்வி எழுப்பினான்.

“படப்பிடிப்புக்கு அனுமதி வாங்க அவர்களைத் தான் சந்திக்க வேண்டும். வேறு வழியில்லை. இந்தக் கதையை நான் இங்கிலாந்தில் எடுக்க முடியாதல்லவா என் நண்பரே. நான் மட்டுமல்ல, நிறைய வெளிநாட்டுக்காரர்கள் இலங்கையில் படப்பிடிப்பில் ஈடுபடுகிறார்கள். தவிர இலங்கையர்களும் படம் தயாரிக்கிறார்கள். எல்லோருமே அரசாங்கத்திடம் அனுமதி வாங்கத்தான் வேண்டியிருக்கிறது.”

“படத்தில் சாமியாரை அடிக்கும் காட்சியை அனுமதிக்க முடியாது. அது எங்களது உணர்வுகளைப் புண்படுத்தும்”என்றார் ஒருவர். “சித்திரவதை முகாமில் சாமி அடிக்கப்படுவதுதானே சாமியின் வாழ்வில் திருப்புமுனையாகிறது…அந்தக் காட்சி இல்லாமல் எப்படி?” என்று கேட்டார் பென்னி.

“அது எங்களுக்கும் தெரியும். நான் சொல்வது பாலசாமியை அடிப்பது பற்றி…”

படத்தின் முற்பகுதியில், பத்து வயதுச் சிறுவனான நாகேஸ்வரன் கிரிக்கெட் விளையாடுவான். ‘போய்ப் பாடத்தைப் படி’ எனத் தாயார் சிறுவனின் முதுகில் ஒரு அடி போடுவார். “கிரிக்கெட் அடிக்கிறவனப் பற்றிப் படமெடுத்தாலும் இவையிட மனம் புண்படுது, கிரிக்கட் அடிக்கிறவனை அடிச்சாலும் இவையிட மனம் புண்படுது” என்று சதாசிவம் மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

ஒரு பெண்மணி எழுந்து சுற்றுமுற்றும் ஒரு தடவை பார்த்துவிட்டு, ஒரு நீண்ட உரையைத் தொடக்கினார்: “இந்தப் படத்தில் தமிழ் கொச்சையாகப் பேசப்படுவது சாதாரண பிரச்சினையல்ல. இது மொழி அரசியல். காலங்காலமாக ஒடுக்கப்படும் ஓர் இனத்தை நீங்கள் மேலும் ஒடுக்குகிறீர்கள். யாப்பாணச் சாமி எங்களது கலாசாரத்தில் மிக முக்கியமானவர். உங்களுக்குப் பக்தி இயக்கம் பற்றித் தெரிந்திருக்காது. வடமொழி ஆதிக்கத்துக்கு எதிராக எழுந்த இயக்கமது. முப்பத்தைந்து நாயன்மார் எங்களது மொழியில் உள்ளார்கள். யாப்பாணச் சாமி முப்பத்தாறாவது நாயன்மாராகக் கொள்ளக் கூடியவர்…”

இப்படியாக அந்தப் பெண்மணி பேசிக்கொண்டே போனார். சதாசிவம் எதுவும் பேசக் கூடாது என்றுதான் அமைதியாக உட்கார்ந்திருந்தார். ஆனால் தரித்திரம் பிடித்த அவரது நாக்குச் சும்மாயிருக்கவில்லை. அந்தப் பெண்மணியை இடைமறித்து “முப்பத்தைந்து அல்ல…அறுபத்துமூன்று நாயன்மார்” என்றார். அதற்கு அந்தப் பெண்மணி “நாயன்மார் நம்பர்ஸ ஆளுக்காள் கூட்டிக் குறைச்சுச் சொல்லுகினம். கொன்சர்வேட்டிவ் எஸ்டிமேட் முப்பத்தைஞ்சுதான்” எனச் சொல்லிவிட்டுப் பேசிக்கொண்டே போனார். சதாசிவம் துக்கத்தோடு “பிறந்தநாள் தொட்டு எழுபது வருசமா அறுபத்துமூண்டு நாயன்மாரைத்தான் நான் கும்புடுறன்” என முணுமுணுத்துக்கொண்டார். என்னவென்பது போல பென்னி, சதாசிவத்தைப் பார்த்த போது “லுக் ஹியர் மிஸ்டர் பென்னி” என அடுத்த குரல் கம்பீரமாக ஒலித்தது.

“படத்தின் இறுதியில் யாப்பாணச் சாமியின் உடல் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காட்டப்படுகிறது. சாமியைச் சுட்டது யார்?”

சற்று நேரம் யோசித்த பென்னி “எனக்குத் தெரியாது” என்றார்.

“ஹோ…” என்ற அதிருப்திச் சத்தம் மண்டபத்தில் முன்னிலும் சத்தமாக எழுந்தது.

“கேளுங்கள் பென்னி ஸெனாபு! படைப்புச் சுதந்திரம் என்ற பேரில் நீங்கள் உங்கள் இஷ்டப்படி படம் எடுக்க முடியாது! தட்டிக் கேட்க ஆளில்லையென்று நினைத்துவிட்டீர்களா என்ன? யாப்பாணச் சாமி திரும்பவும் வருவார் என்பது எங்களின் நம்பிக்கை. நாங்கள் உங்களது படத்தைப் பகிஷ்கரிக்கிறோம்!” என்ற அந்தக் குரல் உணர்ச்சியில் நடுங்கிக்கொண்டிருந்தது. அத்தோடு அந்தக் கலந்துரையாடல் முடிந்தது.

புத்திஜீவிகள் குழு, திரைப்பட விழாக்களுக்கு மெயில் அனுப்பித் தங்களது அதிருப்தியை வெளியிட்டது. பிரித்தானியாவில் வாழும் மூன்று இலட்சம் ஈழத் தமிழ் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு விட்டதாகக் கண்டனங்கள் எழுந்தன. அந்தப் படத்திற்கு ‘பிரித்தானிய தேசியத் தொலைக்காட்சி நிறுவனம்’ வழங்கிய உதவிப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பிரபல ஆங்கில நாளிதழ்களில் புத்திஜீவிகள் குழுவால் வெளியிடப்பட்டது. எல்லாவற்றிலும் உச்சக்கட்டமாக ‘இந்தப் படத்தை எடுத்ததற்காக இயக்குனர் பென்னி ஸெனாபு பொது மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது, பென்னி முற்றிலும் பொறுமையிழந்து போய்விட்டார். தன்னைத் தனது அறைக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டார்.

சோமாலியப் பழங்குடியான ‘இயிபிர்’ வீரத்திற்கும் சண்டைக்கும் பேர் போனது. போரில் சரணடைவது என்ற பேச்சே அவர்களிடம் கிடையாது. அந்த மரபில் வந்தவரான பென்னி ஸெனாபு தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வழி தெரியாமல் துடித்துக்கொண்டிருந்தார். கோபத்தின் உச்சத்தில் தன்னுடைய ஆடைகளைக் கிழித்துத் தன்னை நிர்வாணமாக்கிக்கொண்டார். ஆறரையடி உயரமான பென்னி, தன்னுடைய பருத்த உடலை இந்த நிலத்தில் பொருத்தி வைக்க முடியாமல் அறைக்குள் தாவித் தாவிக் குதித்துக்கொண்டிருந்தார். பின்பு, தன்னுடைய நீண்ட கைகளை அகல விரித்துக்கொண்டு, முதுகை வளைத்து, ஒரு மூர்க்கமான விலங்கு போல பதுங்கிப் பதுங்கி அறைக்குள் சுற்றிச் சுற்றி நடந்தார். அவரது மூச்சுக் காற்று அனலாகத் தகித்துக்கொண்டிருந்தது. கண்கள் கிறங்கிப்போயின. அப்போது யாப்பாணச் சாமியின் “சாக்கிரத்தில் சாக்கிரம் எச்சில் பூ காணிக்கை” என்ற வாக்கியம் அவருக்கு ஞாபகம் வந்தது. அந்த வார்த்தைகளையே மறுபடி மறுபடி அவர் முணுமுணுக்கலானார்.

இயக்குனர் பென்னி ஸெனாபு திடீரென இங்கிலாந்திலிருந்து மறைந்துபோனது, கொஞ்ச நாட்களுக்குச் செய்தியாக இருந்தது. சும்மா பேருக்குத் தேடிவிட்டு ‘ஒழிந்தது தொல்லை” எனக் காவற்துறையும் கோப்பை மூடிவிட்டது. எல்லாவற்றையும் அறிந்து வைத்திருந்த ஒரேயொரு நபர் சதாசிவம் மட்டுமே.

இங்கிலாந்தில் மறைந்துபோன பென்னி ஸெனாபு, எப்படி ஒருநாள் திடீரென யாழ்ப்பாணத்தில் தோன்றினார், எப்படி அரையில் கச்சை தரித்துச் சாமியாரானார், தாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த யாப்பாணச் சாமி வேறொரு ரூபத்தில் திரும்பி வந்திருக்கிறார் என மக்கள் பரவசத்துடன் அவரை ஏற்றுக்கொண்டு வணங்குவதின் உளவியல் என்ன? என்ற கேள்விகளை விட, எனக்கு வேறொரு முக்கியமான கேள்வி இருந்தது.

நான் அம்மாவிடம் தொலைபேசியில் கேட்டேன்:

“அம்மா..அந்தச் சாமியார் தமிழ் எப்பிடிக் கதைக்கிறார்…அவர் கதைக்கிறது உங்களுக்கு விளங்குதே?”

“ஏன்? அவற்றை தமிழுக்கு என்ன குறை? சாமி அப்பிடியே ஆற்றொழுக்காத் தூசணம் கொட்டுறார். உன்ர அப்பாவால கூடி அப்பிடித் தூசணம் சொல்ல ஏலாது. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கமல்லோ தம்பி” என்றார் அம்மா.

5 thoughts on “யாப்பாணச் சாமி

  1. யாப்பண்ண சாமியை விமர்சிக்கும் தகுதி எமக்கில்லை ……..

  2. உண்மையிலேயே தமிழர்களின் புரியமுடியாத மனவோட்டங்களை புரியவைத்துள்ளீர்கள். தகவல்களை கதைகளாக்கும் ஜெயமோகனின் உத்தி இந்த கதையில் வெளிப்படுவதை அவதானித்தேன். ஆனாலும் இறுதியில் அவர் வருவார் என தூசணமாக்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள் தோழர்.

  3. நீண்ட நாட்களுக்குப் பிறகு அங்கதச் சுவையுடன் கூடிய சுவையான கதை. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *