Conservative Estimate

கட்டுரைகள்

“நீங்கள் ஏன் புலிகள் அமைப்பில் சேர்ந்தீர்கள்” என ஊடக நேர்காணல்களில் கேள்விகள் கேட்கப்படும் போதெல்லாம், நான் சொல்லும் காரணங்களில் முதன்மையானது ‘வெலிகடைச் சிறைப் படுகொலைகள்’. 1983 ஜுலை 25-ம் தேதி குட்டிமணி, தங்கத்துரை உட்பட 35 தமிழ் அரசியல் கைதிகளும், 27-ம் தேதி டொக்டர் இராஜசுந்தரம் உட்பட 18 தமிழ் அரசியல் கைதிகளும் வெலிகடைச் சிறையில் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த 53 படுகொலைகளும் அழியாத நினைவுகளாக என் போன்றவர்களின் மனதில் இன்னுமிருக்கிறது. எப்போதுமிருக்கும்.

ஆனால் படுகொலை செய்யப்பட்ட 53 பேர்களின் எண்ணிக்கை, ஏன் ஆய்வாளர்களாலும் கல்வியாளர்களாலும் அடிக்கடி குறைத்துச் சொல்லப்படுகிறது என்பது எனக்குப் புரியவேயில்லை. ‘மரணத்துள் வாழ்வோம்’ கவிதைத் தொகுப்பில் வெளியாகிய, பேராசிரியர் சி.சிவசேகரத்தின் கவிதையில், இந்த எண்ணிக்கை 52 எனக் குறிப்பிடப்படுகிறது. வெலிகடைப் படுகொலைகளிலிருந்து தப்பி, இப்போது அய்ரோப்பாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் தோழர் அழகிரியிடம் நான் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ‘London Tamil Times’-ல் ஒருமுறை இப்படியாக எண்ணிக்கையைக் குறைத்து எழுதியபோது தான் மறுப்பு எழுதி அனுப்பியதாக வருத்தத்துடன் சொன்னார்.

படுகொலை செய்யப்பட்ட அய்ம்பத்து மூவரின் பெயர்களும் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தும், உயிர் தப்பியவர்களின் நேரடிச் சாட்சியங்கள் பல்வேறு இடங்களில் பதிவாகியிருந்தும், அரசு அமைத்த விசாரணை ஆணையத்தின் முடிவுகள் நம் கையிலிருந்தும் கூட, இந்தத் தவறு மறுபடி மறுபடி நிகழ்கிறது. அய்ம்பத்து மூவரின் பெயர் பட்டியல் தோழர் சி. புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ புத்தகத்திலுள்ளது. பக்கங்கள் (355-356). ‘முறிந்த பனை’ நூலிலும் வெலிகடை படுகொலைகள் குறித்துத் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. (பக்கங்கள் 71-72).

நேற்று Nedra Rodrigo எனும் கல்வியாளர் எழுதி theglobeandmail.com- எனும் இணையத்தில் வெளியிட்டிருக்கும் நீண்ட கட்டுரையில், வெலிகடைச் சிறையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 என ஒரேயடியாகக் குறைத்துவிட்டார்.

நான் அவரது முகநூல் பக்கம் சென்று, தவறைச் சுட்டிக்காட்டினேன். அதற்குக் கட்டுரையாளர் “the number goes back and forth in different sources, so I stayed with the conservative estimate.” எனப் பதிலளித்துள்ளார்.

53 என்ற எண்ணிக்கை எப்படி நிலையில்லாமல் இருக்கிறது என்பது எனக்கு விளங்கவேயில்லை. கல்வியாளரும் ஆய்வாளருமான Nedra Rodrigo அந்தக் கட்டுரையில் ‘பாட்டுப் பாடவா’ பாடலைப் பற்றியும் எழுதியுள்ளார். அந்தப் பாடல் எழுதிய கண்ணதாசன், பாடல் இடம்பெற்ற தேனிலவு படம், வெளியாகிய 1961ம் ஆண்டு, Shooting location எல்லாவற்றையும் மிகத் துல்லியமாக ஆய்வு செய்து எழுதியிருக்கும் கட்டுரையாளருக்கு வெலிகடைச் சிறைப் படுகொலைகள் குறித்த தகவல்கள் மட்டும் எப்படி முரணாகவே கிடைக்கின்றன என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

கட்டுரையாளர் குறிப்பிடும் ‘conservative estimate’ என்பது என்ன? அது எங்கேயிருக்கிறது? இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் ஈழத் தமிழர்களை வரலாறு வன்புணர்வு செய்யப் போகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *