அஞ்சலி: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

கட்டுரைகள்

னக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை என் காதில் அம்மாவின் குரலோ, வேறு யாருடைய குரலோ தினந்தோறும் ஒலிக்க வாய்ப்பிருந்ததில்லை. ஆனால் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குரல் ஒருநாள் தவறாமல் எனக்குக் கேட்டுக்கொண்டிருந்தது. சிறையிலிருந்த போது கூட யாராவது ஒரு சிறைத் தோழன் அவரைப் பாடிக்கொண்டிருப்பான்.

எம்.ஜி.ஆர். இரசிகர்களான எங்களுக்கு எஸ்.பி.பி. எங்களுடைய ஆள் என்ற ஒரு பிணைப்பிருந்தது. ‘ஆயிரம் நிலவே வா’ எனத் தொடக்கிவைத்த வாத்தியார் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’, ‘அவளொரு நவரச நாடகம்’, ‘பாடும் போது நான் தென்றல் காற்று’ என ஒவ்வொரு படத்திலும் எஸ்.பி.பியை தன்னுடனேயே அழைத்து வந்தார். நடிகர் திலகத்துக்கு எஸ்.பி.பி. பாடியது மட்டும் குறைச்சலா என்ன! ‘பொட்டு வைத்த முகமோ’ பாடி அய்ம்பது வருடமிருக்குமா? இன்றுவரை பாரிஸில் நடக்கும் எந்த இலக்கியக் கூட்டத்தின் பின்னிரவும் இந்தப் பாடலைப் பாடாமல் முடிவதில்லையே.

‘மணியோசை கேட்டு எழுந்து’ என்றொரு பாடல். இருமிக்கொண்டே பாடுவார். என் பள்ளிக் காலத்தில் அந்தப் பாடல் மிகப் பிரபலம். கேட்டுப் பித்துப் பிடித்திருந்தோம். பொடியன்கள் லவ் லெட்டரில் கூட இந்தப் பாடலை எழுதுவார்கள். இசைஞானியோடு அவர் சேர்ந்த பாடல்களைப் பற்றி நான் என்ன சொல்வது! எதைச் சொல்வது! ‘அந்தி மழை பொழிகிறது’ கேட்ட போதுதானே காதலிக்கவே ஆசை வந்தது.

டி. ராஜேந்தர் இசையில் அவர் பாடிய பாடல்கள் அப்போது எங்கள் சுவாசமல்லவா. ‘வசந்தம் பாடி வர’ என மயங்கியும் “நானும் உந்தன் உறவை“ எனக் கலங்கியும் திரிந்தோமே. ‘வாசமில்லா மலரிது’வை தொடங்கும் போது எஸ்.பி.பி. சிரிக்கும் கசப்பான சிரிப்பே ‘ஒருதலைராகம்’ படத்தின் மொத்தக் கதையையும் சொல்லிவிடுமே!

ஏ.ஆர். ரகுமானின் இசையில் அவர் பாடிய ‘தங்கத் தாமரை மகளே’ பாடலுக்கு தேசிய விருது என்ற செய்தி வெளியாகியபோது அவர் பாரிஸில் பாடிக்கொண்டிருந்தார். K.J. ஜேசுதாஸும் அவரும் இணைந்து செய்த முதலாவது மேடைக் கச்சேரி அதுதான். கூட்டம் நிரம்பி டிக்கெட் இல்லையென்று கதவை மூடிவிட்டார்கள். மண்டபக் கதவுகளை உடைத்துத் திறந்துகொண்டு இரசிகர்கள் உள்ளே நுழைந்தோம். ஒரு சிறிய பதற்றத்திற்குப் பிறகு எல்லாக் கதவுகளும் திறக்கப்பட்டுக் கச்சேரி நடந்தது. “அதாண்டா இதாண்டா“ பாடலை அவர் முழங்கிய போது பார்வையாளர் வரிசையிலிருந்த சிலர் மீது அருள் வந்து ரஜினிபோல கைளை விசுக்கிக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடக்கத் தொடங்கிவிட்டார்கள். அப்போது பாட்டின் நடையை எஸ்.பி.பி மாற்றிவிட்டார். பாரிஸ் ரஜினிகளின் ஆட்டத்திற்கு ஏற்ப அவர் பாடினார். அன்று என்னவொரு கொண்டாட்டம்!

நான்கு வருடங்களுக்கு முன்பு கோவா விமான நிலையத்தில் காத்திருந்தேன். எதிர்வரிசையில் பாடும்நிலா நின்றிருந்தது. அவரிடம் போய் பேசவெல்லாம் விரும்பவில்லை. அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதுமானது என்பதால் பார்த்துக்கொண்டேயிருந்தேன். ஒரு சிறுமி அவரை நெருங்கி அவரது காலைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்றாள். நான் தூர நின்றே மனதால் வணங்கினேன். அது என் பண்பாட்டை வணங்குதல் போன்றது.

இன்று லக்ஸம்பேர்க்கிலிருந்து ரயிலில் பாரிஸுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது மறைவுச் செய்தி கிட்டியது. ஒரு சிறிய குறிப்பை இணையத்தில் எழுதுவதால் என்னவாகி விடப்போகிறது என வெறுமையாகக் கிடந்தேன். கிட்டத்தட்ட 12 மணிநேரங்கள் கடந்திருக்கும் இவ்வேளையில் என்னால் எழுதாமல் இதைக் கடக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஏனெனில் நான் இழந்திருப்பது ஒரு வாழ்க்கை முறையை. ஒரு பண்பாட்டை.

அஞ்சலி! அஞ்சலி! அஞ்சலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *