இது ஆவண தர்மமல்ல!

தோழமைப் பிரதிகள்

-மு.நித்தியானந்தன்

சோமிதரனும் சயந்தனும் இணைந்து தயாரித்து வெளியிட்ட, 3.07 நிமிட காணொளி எழுப்பும் கேள்விகள் பல.

இது எப்போது பதிவு செய்யப்பட்டது? இதில் திரு. செல்லன் கந்தையா அவர்களுடன் பேட்டி காண்பவர் யார்? இது எங்கே பதிவு செய்யப்பட்டது? ஒரு நம்பகமான ஒளிப்பட ஆவணம் தர வேண்டிய அடிப்படை விவரங்கள் இவை. சும்மா எடுத்தமேனிக்கு ஒரு காணொளியை வெளியில் உலவவிடுவீர்களா? சோமிதரனும் சயந்தனும் யாழ்ப்பாணத்தில் ஒரு ஒளிப்படக்காரரை அமர்த்தி, கேள்விகளை அவருக்கு அனுப்பி இந்தப் பேட்டியை எடுத்தார்களா?

ஆவணப்படங்களை எடுக்கும்போது, அது பொருட்செலவு மிக்கது என்பது சோமிதரனுக்கு நன்கு தெரியும். இந்த காணொளியை யாழ்ப்பாணத்தில் எடுப்பதற்கு , கேமரா வாடகைக்கு எடுக்கவேண்டிவந்திருக்கலாம், அதனை எடுத்தவருக்கு கொடுப்பனவு என்ற செலவினங்கள் உள்ளன. தர்மு பிரசாத் இந்த காணொளி குறித்து எழுப்பும் கேள்விகள் நியாயமானவை என்றே நினைக்கிறேன். சரியான பிரேமில் கேமராவுக்கு முன் செல்லன் கந்தையன் அவர்களை வைத்துவிட்டு, அசரீரி போல யாரோ எங்கிருந்தோ கேள்வி கேட்கிறார்கள். கேள்வி அலைபேசிக்கூடாக கேட்கப்பட்டதா? அல்லது கேள்வி கேட்பவர் பேட்டியாளருக்கு முன் நின்று கேட்கிறாரா? ஒரு பேட்டி காணும்போது பேட்டிகாண்பவர் யார் என்று முதலில் தெரிவிப்பது ஒரு அடிப்படையான அம்சம் என்பதை சோதரன் அறியாதவரா? நாம் நம் முன் உள்ள -காட்டப்பட்ட காணொளியைப் பற்றி மட்டுமே பேச முடியும். இவர்கள் தயாரித்த விரிவான காணொளியின் ஒரு மிகச்சிறு துகள்தான் இது எனின், இந்தத் துணுக்கினை இவ்வளவு அவசரகதியில் வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம் என்ன? நீங்கள் முழுக் காணொளியினையும் (அப்படி ஒன்றைத் தயாரித்து இருந்தால்) முழுமையாக வெளியிட்டால் இந்தப் பிரச்னைகள் எதுவும் வந்திராதே.

இக்காணொளியை பார்க்கும்போது நீங்களே கேள்வியைத் தயாரித்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. அந்தக் கேள்விகளுக்கு நீங்கள் கொண்டிருந்த பதில், அல்லது அவர் என்ன பதில் சொல்லவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்த பதில் கிடைத்தவுடன், 3.07 நிமிடத்தில் பேட்டியை முடித்துக்கொண்டு, கேமராவைத் தூக்கிக்கொண்டு உங்களுக்காக இயங்கிய ஒளிப்படக்காரர் வந்துவிட்டாரா? அல்லது கேமராவை இதற்கென்று கொண்டுபோனதற்கு இன்னும் கொஞ்சம் கேள்விகள் கேட்கச் சொல்லியிருந்தீர்களா?

மற்றது, திரு செல்லன் கந்தையன் அவர்கள் 17 ஆண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்வுகளை நினைவு மீட்கக் கஷ்டப்படுகிறார் என்று தெரிகிறது. முதலில் இளம்பரிதி தன்னை சந்திக்கவில்லை என்பவர், பின் கூட்டமைப்பாக வந்து சந்தித்தார் என்று கூறுகிறார். தன்னை அடித்தது யார் என்ற பெயரை அவர் கூறுகிறார் போலிருக்கிறது. அந்தப் பெயர் நீக்கப்பட்டதுபோல் தெரிகிறது. பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாண அரசியலின் சகல actors ஆலும் பத்திரிகைகளாலும் போட்டுச் சித்திரவதை செய்யப்பட்ட மனிதர் ‘கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்கோ, உங்களை இளம்பரிதி தனியறைக்குள் போட்டு அடித்தாரா? போன்ற கேள்விகளுக்கு எல்லாம் , நீங்கள் துல்லியமாக கேள்வி கேட்டமாதிரி , பதில் சொல்ல முடியாமால் யோசிக்கிறார் போல் தெரிகிறது. இம்மாதிரி கேள்வி கேட்ட ஒருவருக்கு, செல்லன் கந்தையா அவர்கள் இருந்த இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் பதில் வேறு மாதிரி வந்திருக்கும்.

செல்லன் கந்தையா அவர்களை என்ன சொல்லி பேட்டிக்குக்கொண்டுவந்தீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வரலாற்றின் மையமான சாட்சியத்தை பேட்டி என்ற பெயரில் bully பண்ணியிருக்கிறீர்கள். ஒரு பொய்யன் மாதிரி அவரை அவமரியாதைப்படுத்தியிருக்கிறீர்கள். சிக்கல் நிறைந்த, தாங்களே தங்கள் பதவிகளை துறக்கவேண்டிய நிலையை எல்லாம் எதிர்கொண்ட ஒரு அவலம் நிறைந்த சூழலை அவர் நினைவுபடுத்தி மீள்வதற்குக்கூட கால அவகாசம் கொடுக்காத நிலையில், உங்களுக்கு வேண்டிய பதிலை கொண்டுவந்துவிட்ட திருப்தியில், சுடச் சுட Public consumption க்கு விட்டிருக்கிறீர்கள்.

சோமிதரன் – சயந்தனுக்கு! எங்களது நம்பிக்கைகளை நிரூபிக்கிற அல்லது உறுதிப்படுத்துகிற சாட்சியங்களைத் தேடிப்போகும்போது , எமது நம்பிக்கைகளை பொய்ப்பிக்கிற அல்லது நிரூபிக்கமுடியாமல் செய்துவிடுகிற சாட்சியங்களை நாம் தேடிப்போகவேண்டும். “Why you should try to disprove your beliefs?“ என்று Karl Popper என்ற பேரறிஞர் சொல்லும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் இவை. இப்படி ஓர் அறிவுபூர்வமான தேடலை நீங்கள் மேற்கொண்டிருந்தால், அது தினமுரசில் திரு. செல்லன் கந்தையன் அவர்கள் கொடுத்த பேட்டியை உங்கள் கைகளில் வைத்திருக்கும். தினக்குரல் அவரை கேவலப்படுத்தி வெளியிட்ட கார்ட்டூனை அவருக்குக் காட்டியிருக்கும். திரு. செல்லன் கந்தையன் அவர்கள் 2003-ல் ‘தினமுரசு’ பத்திரிகைக்கு கொடுத்த பேட்டிக்கு உரிய வலிமை, நீங்கள் முற்கற்பிதத்தோடு ஊரும் இல்லாமல் பேரும் இல்லாமல் அவசரகதியில் ‘தயாரித்த’ காணொளிக்கு இல்லை.

முதலில் நாங்கள் ஊடக அறத்தைப் பேணுதல் வேண்டும். சோமிதரன், இனி இப்படி ஒரு ஒழுங்குகள் பேணாத ஆவணங்களை தயாரிக்கப் போகாதீர்கள். உண்மையாகவே, செல்லன் கந்தையா அவர்களின் தினமுரசு பேட்டியை எவ்வாறு பார்க்கிறீர்கள்? அது இயல்பானதா? நினைவு மீட்கவே கஷ்டப்படும் ஒருவரை கேமராவிற்கு முன் நிறுத்தி நீங்கள் தயாரித்த இந்த காணொளி இயல்பானதா? இந்த அசலான, நம்பகமான பத்திரிகை சாட்சியங்களுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?

ஒரு ஆவணப்படம் தயாரிப்பவர் குப்பைகளை மனதில் குவித்துக்கொண்டு புறப்படக்கூடாது. திறந்த மனதுடன், உண்மைகளைத் தேடுபவனாக இருக்கவேண்டும். தான் கொண்ட கற்பிதங்களை நிறுவும் முயற்சியாக அது அமைதல் ஆவண தர்மம் ஆகாது.

2

இப்போது ‘இது ஒரு செய்தி பைட்’ என்கிறீர்கள். இலண்டனில் பல ஆண்டுகளாக ஒரு தொலைக்காட்சியின் செய்திப்பிரிவிற்குப் பொறுப்பாக இருந்தவன் என்ற வகையில் சொல்கிறேன்: இது ஒரு Newsbite என்று யார் உங்களுக்குச் சொன்னது? யாரோ ஒருவரை நல்ல Shirt போட்டு உட்கார வைத்துவிட்டு, ‘உங்களை இளம்பரிதி தனியே அறையில் போட்டு உதைத்தாரா, தெளிவாய் சொல்லுங்கோ’ என்று, 3.07 நிமிஷம் இழுத்து வதைபண்ணி ஒரு வீடியோ துணுக்கை எடுத்து விட்டு, இது ஒரு ‘செய்தி பைட்’ என்கிறீர்கள். சும்மா இதனைப் பார்க்கும் ஒருவருக்கு, இந்த ஆள் யார், இளம்பரிதி யார்? அவர் ஏன் இவரை தனி அறைக்குள் போட்டு அடித்தார்? அல்லது அடிக்கவில்லை? ஆனந்தசங்கரி யார்? அவர் ஆணா, பெண்ணா? (ஒரு முறை ஆனந்தசங்கரியை அவருடைய ஹோட்டலில் இருந்து பேட்டிக்கு கூட்டிவருமாறு கார் சாரதியை அனுப்ப அவர் அங்கிருந்து போன் செய்தார்: “நான் ஹோட்டல் அடியில் நிற்கிறேன். அந்த அம்மாவை கீழே இறங்கி வரச் சொல்லுங்கள்”). இவர்களுக்குள் என்ன சாதிப்பிரச்னை? நூலகம் திறப்பு என்பது இங்கு ஏன் வருகிறது? அதற்கு ஏன் ஒரு ஆளைப்போட்டு தனி அறையில் அடிக்கவேண்டும்?

இப்படிப் பல கேள்விகள் வரும் இடத்தில் ‘மொட்டைப்பார்ப்பான் குட்டையில் விழுந்தான்’ என்ற கணக்கில் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் உங்கள் பாட்டில் உங்களுக்குத் தேவையான கேள்விகளைக் கேட்டு (எதையோ நினைத்து எதையோ இடித்த கதையாய் -யாருக்கோ பதில் சொல்ல / proof பண்ண, ஒரு உள்நோக்கம் வைத்து) ஒரு வீடியோத் துணுக்கை வெளியிட்டிருக்கிறீர்கள்.

இந்த காணொளி வலைத்தளத்தில் அந்த மனிதரை கேவலப்படுத்தும் விதத்தில் பரவவிடப்பட்டிருக்கிறது என்று திரு. செல்லன் கந்தையன் அவர்களுக்குத் தெரியுமா? பேட்டி முடிந்த மறுகணத்தில் இந்தக் காணொளியைப் பொதுவெளியில் விட அவருடைய அனுமதியைப் பெற்றீர்களா? செல்லன் கந்தையா அவர்கள் ஒரு வெள்ளாந்தி மனிதர் போலிருக்கிறது. தனக்கு முன்னே கேமராவோடு நிற்பவர்கள் அவருக்கு சகாயம் செய்பவர்கள் அல்ல, கேமராவோடு அவரின் முற்றத்து வாசலில் நிற்பவர்கள் கபட நோக்கம் கொண்டவர்கள் என்று அந்த மனிதருக்கு தெரிந்திருக்கவில்லை. 2003-ல் இருந்ததை விட அவர் கவனமாக இருக்கவேண்டிய நேரம் இது. அப்போது துப்பாக்கியுடன் திரிந்தார்கள். இப்போது வேறு சாதனத்துடன் திரிகிறார்கள். கர்ணனின் முன் முதிய பிராமண வேஷம் போட்டு நின்று, அவனது தர்மத்தை யாசித்து நிற்பவன் உண்மையில் முதியவன் அல்ல என்று கர்ணனுக்குத் தெரியாததுபோல.

சோமிதரன், புகலிடத்தில் இருப்பவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்ற மாதிரியெல்லாம் எழுதப் பழகாதீர்கள்.அதெல்லாம் பெரும் Data சேகரித்துச் செய்யப்படவேண்டிய பரிசோதனை முடிவுகள். முதலில் முதலைக்கண்ணீரை சேர்க்கவேண்டும். பிறகு உங்கள் கண்ணீர் வேறு மாதிரி இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். நான் விடுகிறதுதான் கண்ணீர், மற்றவன் விடுகிறது எல்லாம் கிளிசரின் என்ற மாதிரி எல்லாம் எழுதாதீர்கள். ஒரே கருத்தைத்தான் எல்லோரும் சொல்லவேண்டும் என்பவர்கள் ஊர்கோலம் போகலாம். விவாதங்களுக்குள் வரக்கூடாது.

இம்மாதிரி பொதுப் பிரச்னைகளில் ஆர்வம் – அக்கறை கொள்பவர்கள் கொஞ்சப்பேர்தான். யாரும் எதை சொன்னதும், அவனை உடனே ‘முதலைக்கண்ணீர் வடிக்கிறான்’ என்றெல்லாம் முத்திரை குத்தினால், ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி மூடப்பட்டுவிடும். கண்ணீர் வடிப்பதற்கெல்லாம் நீங்களோ நானோ Guarantee தரமுடியாது.

(முழுமையான விவாதத்தைத் தெரிந்துகொள்ள: https://www.facebook.com/nithiyanandan.muthiah )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *