வசுமித்ர எப்போதும் போலவே, இப்போதும் அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி எழுதிய முகநூல் வசைகள், எனக்கும் அவருக்குமிடையே நடந்த விவாதத்தின் போதே எழுதப்பட்டன என்பதுபோல ஒரு பேச்சிருப்பதால், அதை விளக்கிடவே இக்குறிப்பை எழுதுகிறேன்.
ரங்கநாயகம்மாவின் அந்த ‘அம்பேத்கர் தூஷண’ நூல் வெளிவந்து முழுதாக 4 வருடங்களாகின்றன. சில நண்பர்கள் சொல்வதுபோல, ஏதோ கவனம்பெறாமல் மூலையில் கிடந்த வசைக் குப்பையல்ல அது. அந்தக் குப்பை பரவலாகவே இறைக்கப்பட்டது. 4 மாதங்களில் அந்நூலுக்கு 3 பதிப்புகள் வந்தன. அந்நூலை வரவேற்றுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நூலை விதந்து முகநூல் குறிப்புகள் எழுதப்பட்டன.
ஆனால், நான் இந்த நூல் குறித்து எந்த விவாதத்தையும் வசுமித்ரவோடு செய்ததில்லை. இந்த நூலுக்கு மிகச் சிறந்த எதிர்வினை நூலை எழுதி, ரங்கநாயகம்மாவையும் மொழிபெயர்ப்பாளர் கொற்றவையின் குழறுபடிகளையும் ஆதிக்க சாதிப் பார்வையையும் அம்பலப்படுத்திய நண்பன் ம. மதிவண்ணனும் வசுமித்ரவோடு விவாதமே செய்ததில்லை. எங்களது கவனம் ரங்கநாயகம்மாவின் நூலை அம்பலப்படுத்துவதில் மட்டுமே இருந்தது. அதை மட்டுமே செய்தோம்.
அப்படியானால் இரண்டு நாட்களுக்கு முன்னால் என்னதான் நடந்து ‘புத்தரது ஆண்குறி’ விவாதமானது?
நான் ‘யாவரும்.காம்’ இணையத்தளத்துக்கு அளித்த ஒரு நேர்காணலில், அந்நூலைக் குறிப்பிட்டு, ரங்கநாயகம்மாவை ‘மொண்ணை மார்க்ஸியர்’ என ஒரு வரியில் சொல்லியிருந்தேன். அந்த வரி போகிற போக்கில் பொறுப்பில்லாமல் சொல்லப்பட்டதல்ல. ரங்கநாயகம்மா ஏன் மொண்ணை மார்க்ஸியர் என விளக்கிக் கட்டுரையொன்றை இரண்டு வருடங்களிற்கு முன்பே எழுதியிருந்தேன். நம்முடைய ஆட்களுக்குத்தான் எல்லாவற்றையும் அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறதே!
எனது இந்த வரியைப் போட்டுத்தான், வசுமித்ரா என்னை முகநூலில் வம்பிழுத்தார். அந்த வம்பினூடாகத்தான் அண்ணல் அம்பேத்கர் இன்னொருமுறை இழிவு செய்யப்பட்டார். நான் வசுமித்ரவோடு விவாதம் செய்யத் தயாராகயில்லை. எனவே ‘மதிவண்ணனின் நூலை மறுத்து எழுதுங்கள்’ எனச் சொல்லிவிட்டு விலகிவிட்டேன். ஆனால் அம்பேத்கரை இழிவு செய்வதில் மட்டுமல்லாமல், முகநூல் விவாதங்களிலும் தீவிரமாக இயங்கக்கூடிய வசுமித்ர, ஒன்றின் மேல் ஒன்றாகப் பல கொமென்டுகளைப் போட்டு என்னை வம்பிழுத்தார். “என்னை விட்டுவிடுங்கள் மார்க்ஸியத்தையும் அம்பேத்கரையும் கற்றுக்கொண்டு அய்ந்து வருடங்களில் திரும்ப வருகிறேன்” என எள்ளலாகச் சொல்லிவிட்டு நான் நகர்ந்துவிட்டேன். அதற்குப் பின்பாகவும் வசுமித்ர தொடர் கொமென்டுகளைப் போட்டார். நடந்தது அவ்வளவும்தான். நானோ மதிவண்ணனோ, வசுமித்ரவோடு எந்த விவாதத்தையும் செய்தது கிடையாது என்பது இப்போது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும்.
என்னைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு; கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாகவே நான் அரசியல் விவாதங்களிலேயே மூழ்கியிருப்பவன், விவாதங்களைக் கட்டுரைகளாக – நூல்களாக வெளியிடுபவன், நேர்காணல்களிலும் அரங்கக் கூட்டங்களிலும் இணையத்திலும் விவாதங்களை எதிர்கொள்ளத் தயங்காதவன் என்பது நன்கு தெரிந்ததுதான். அப்படியானால் நான் ஏன் வசுமித்ர, சேனன் (இந்த அம்பேத்கர் வசையில் வசுமித்ரவின் ஆதரவாளர்) போன்றவர்களுடனும் இன்னபிற முகநூல் வம்பர்களோடும் விவாதத்தைத் தவிர்க்கிறேன்?
முன்னோர் வாக்குத்தான்.”நூறு அறிவாளிகளோடு விவாதம் செய்வதைவிட ஒரு முட்டாளோடு விவாதம் செய்வது கடினமானது” என்பார்கள். ஒன்றுக்கு இரண்டு முட்டாள்கள் என்றால் நான்தான் என்ன செய்வேன்! இந்த அறிவிலிகளுடன் முகநூலில் விவாதித்து யாருக்குப் பயன்? எனக்குமில்லை! அவர்களுக்குமில்லை! வாசிப்பவர்களுக்குமில்லை!!
வசுமித்ரவை ‘அறிவிலி’ எனக் குறிப்பிடும்போது, இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். ஒரு கவிஞராக அவரை எனக்குப் பிடித்தேயிருந்தது. மொத்தமாக அவரது எழுத்துகளை நான் நிராகரிக்கக் கூடியவனுமல்ல. ஆனால் சாதியம், அம்பேத்கர், மார்க்ஸியம் போன்ற விஷயங்களில் அவர் முழு அறிவிலி. ரங்கநாயகம்மா நூல் வெளிவந்த பின்பாக, அந்த அறிவிலித்தனம் ஆணவமாகத் தலைவிரித்தாடுகிறது. சும்மாவே ஆடுகிற பிசாசுக்கு சாம்பிராணி காட்டவும் சில ஆட்களிருப்பதால் ஆட்டம் உச்சமாகயிருக்கிறது.
‘எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ், ரவிக்குமார், அருணன், பிரேம், வ.கீதா, முத்துமோகன் என யாருமே மார்க்சியத்தின் அடிப்படையில் அம்பேத்கரது பார்வையை முன்வைத்து ஒரு கட்டுரை கூட எழுதியதில்லை’ என தனது ‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற நூலில் எழுதுமளவிற்கு வசுமித்ரவுக்கு மூளை வீங்கியிருக்கிறது. தற்காலத்தில் இயங்குபவர்களில், தன்னையும் ரங்கநாயகம்மாவையும் தவிர வேறு எவரையும் மார்க்சிய /அம்பேத்கரிய படிப்பாளியாகவும் சிந்தனையாளராகவும் ஏற்றுக்கொள்ள அவர் தயாராகயில்லை. அந்த வெற்று ஆணவம் ஒரு நோயாகவே பரிமணித்துவிட்டது. ரங்கநாயகம்மாவின் நூலைப் பற்றி, அல்லது அதன் மொழிபெயர்ப்பாளரைப் பற்றி, யாராவது ஏதாவது ஒரு வரி மறுப்பாகச் சொல்லிவிட்டால் எந்த எல்லைக்குச் சென்றும் அவரைக் கடித்து வைக்க வசுமித்ர தயாராகிவிடுகிறார்.
“மதிவண்ணன் போன்றவர்கள் தங்களது குறுகலான சாதிப்புத்தியைத்தான் அம்பேத்கரியமாக முன்நின்று நடத்திக்கொண்டிருக்கிறார்கள்…” என வசுமித்ர, இந்த விவாதத் தொடரில் எழுதியிருப்பதை உங்களில் எத்தனை பேர்கள் கவனித்தீர்கள் எனத் தெரியவில்லை. ‘சாதிப்புத்தி’ என எழுதிவிட்டு அதற்கொரு விளக்கத்தையும் அவர் கொடுக்கிறார். “சாதி புத்தி என்று இங்கு குறிப்பிட்டது தங்களது சாதிக்கு ஒரு மேன்மையான அடையாளத்தை இவர்கள் பெறத் துடிப்பது குறித்துத்தான்” என்கிறார். அருந்ததியினர் மேன்மையான அடையாளத்தைப் பெறத் துடிக்கிறார்கள் என்றால் அதிலென்ன பதைபதைப்பு இவருக்கு வேண்டிக்கிடக்கிறது! அப்படிப் பதைபதைப்பவர்கள் யார்?
சாதியொழிப்புக்காகவும் சமூகநீதிக்காகவும் தங்களது வாழ்நாள் முழுவதும் தலைமையேற்றுப் போராடிய தலைவர்களை விமர்சிப்பதற்கான உரிமை என்பதற்கான அர்த்தம், அவர்களை அவமதிக்கும் உரிமை எனக் கிடையவே கிடையாது!
சிறப்பு தோழர்
//சாதியொழிப்புக்காகவும் சமூகநீதிக்காகவும் தங்களது வாழ்நாள் முழுவதும் தலைமையேற்றுப் போராடிய தலைவர்களை விமர்சிப்பதற்கான உரிமை என்பதற்கான அர்த்தம், அவர்களை அவமதிக்கும் உரிமை எனக் கிடையவே கிடையாது!//
அருமை தோழர்.
மார்க்சியமும் அதிகார மேன்மையடைதலை நோக்கியே பயணிக்கிறது என்பதை வசுமித்ரவின் அறிவுக்குடுமை உணரவில்லையோ
#அருந்ததியினர் மேன்மையான அடையாளத்தைப் பெறத் துடிக்கிறார்கள் என்றால் அதிலென்ன பதைபதைப்பு இவருக்கு வேண்டிக்கிடக்கிறது! அப்படிப் பதைபதைப்பவர்கள் யார்?
சாதியொழிப்புக்காகவும் சமூகநீதிக்காகவும் தங்களது வாழ்நாள் முழுவதும் தலைமையேற்றுப் போராடிய தலைவர்களை விமர்சிப்பதற்கான உரிமை என்பதற்கான அர்த்தம், அவர்களை அவமதிக்கும் உரிமை எனக் கிடையவே கிடையாது!#
புறந்தள்ளிவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் மண்டை வீங்கிகளுக்காக மட்டுமின்றி அவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் நபர்களுக்கும் சேர்த்தே இந்தப் பதிவு அவசியமாகிறது. அருமை.
– அன்புச்செல்வன்