முள்ளிவாய்க்காலில் புலிகள் இயக்கம் அழிக்கப்படுவதற்குப் பதினைந்து வருடங்கள் முன்னதாகவே புலம் பெயர் நாடுகளில் வலுவாக இருந்த புலிகளின் கிளைகளைச் சிறுகச் சிறுக அழிக்க, மேற்குநாடுகள் நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியிருந்தன. புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாகக் மதிப்பிடப்பட்டு தடைவிதிக்கப்பட்டது. புலிகளின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு அய்ரோப்பிய – அமெரிக்கச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு குறைந்தபட்சத் தீர்வுக்குப் புலிகள் சம்மதிக்க வேண்டும், புலிகளிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பதே மேற்கு நாடுகளின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது. இந்த அரசியல் கிடுக்கிப்பிடியைப் புலிகளின் தலைமை சரிவர உணரவில்லையா அல்லது உணர்ந்தும் பிடிவாதத்துடன் போரில் ஈடுபட்டார்களா என்பதற்கான பதிலைச் சொல்வதற்கு இப்போது யாரும் உயிருடனில்லை. முள்ளிவாய்காலில் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டபோது அதற்கு இணையாக வெளிநாடுகளிலும் புலிகளின் அமைப்புகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. இப்போது புலிகள் அமைப்பு வீரமும் தியாகமும் பயங்கரமும் அழிவும் நிறைந்த அழியாத கடந்தகால வரலாறு மட்டுமே.
புலிகள் விட்டுச் சென்ற அரசியல் வெற்றிடத்தை ஈழத்தில் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ நிரப்பிக்கொண்டார்கள். நடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பெருமளவு வாக்குகளைப் பெற்று அதிகாரங்களிற்கு வந்தார்கள். அவர்களிற்குப் போட்டியாக வேறு சிறு தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் இருந்தாலும் கூட அவர்களால் கூட்டமைப்பு அளவிற்கு அமைப்புப் பலமோ வாக்குகளோ பெற முடியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதும் கூட்டமைப்பின் பல ஆளுமைகள் தமிழ்த் தேசிய அரசியலில் நெடிய வரலாறுகளைக் கொண்டவர்கள், அறிமுகமான முகங்கள் என்பதுவும் அவர்களது மக்கள் செல்வாக்குக்கான காரணங்கள். அதேவேளையில் கூட்டமைப்பு புலிகளின் வெற்றிடத்தை நிரப்பினார்களே அல்லாமல் அவர்கள் புலிகளின் அரசியல் தொடர்ச்சியில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களிற்கு அரசியல் தீர்வு என்பது அவர்களது நிலைப்பாடு.
புலிகள் விட்டுச் சென்ற அரசியல் வெற்றிடத்தை நிரப்ப அல்லது புலிகளின் தொடர்ச்சியாகக் காட்டிக்கொள்ள புகலிட நாடுகளில் பல முயற்சிகள் நடந்தன. நாடு கடந்த அரசு, பிளவுண்ட புலிகளின் சிறு சிறு குழுக்கள் என்பன ஒரு பக்கமும், அதுவரை இறுக்கமான இடதுசாரித் தத்துவங்களை உதிர்த்துக்கொண்டிருந்த குழுக்கள் ‘சமவுரிமை இயக்கம்’, ‘மே 18 இயக்கம்’, ‘தமிழ் சொலிடாரிட்டி’ என்ற பெயரிலெல்லாம் மறுபக்கத்திலும் குத்துக்கரணங்கள் போட்டுப் பார்த்தன. புலிகள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவது என்ற நப்பாசையைத் தவிர இக் குழுக்களிற்கு வேறு தனித்துவமான அரசியல் நிலைப்பாடுகள் இல்லாததால் இவை செயலற்ற சவலை அமைப்புகளாகிப் போயின. புலிகளின் தொடர்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் புலிகளாக இருக்க வேண்டும்!
இன்னும் சில அமைப்புகள் சர்வதேசத் தலையீட்டை இலங்கையில் கோருவதன் மூலமாக தமிழீழத்திற்கான ஒரு பொதுவாக்கெடுப்பை நிகழச்செய்யலாம், இலங்கை அரசின் மீது சர்வதேச நீதிமன்றில் போர்க்குற்ற விசாரணையை ஏற்படுத்தலாம் என முயற்சிகள் செய்கின்றன. இந்த அமைப்புகளின் நோக்கத்தில் குற்றங்காண இடமில்லாத போதிலும் இந்த நோக்கங்கள் ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை என்பதைத்தான் சர்வதேச நாடுகளினதும் அய். நாவினதும் தொடர்ச்சியான செயற்பாடுகள் நமக்கு உணர்த்துகின்றன. தவிரவும் சர்வதேசத் தலையீட்டைக் கோரும் இந்த அமைப்புகளும் தன்னார்வக் குழுக்களும் அரசியலறிவோ சர்வதே அரசியல் நிலவரங்களோ புரியாத திறனற்ற தரப்பாகவுள்ளனர். வெற்று உணர்ச்சி அரசியலே இவர்களை இயக்குகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நிகழ்ந்த அய். நா. மனிதவுரிமைகள் ஆணையத்தின் 40-வது கூட்டத் தொடரில் இவர்கள் இன்னும் ஒருபடி கீழிறங்கினார்கள். சர்வதேசத் தலையீட்டைக் கோரும் அமைப்புகளின் பிரதிநிதியாக தமிழகத்திலிருந்து அழைக்கப்பட்டு மனிதவுரிமைகள் அவையில் உரை நிகழ்த்தியவர்களிலொருவர் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ். இந்தச் சாதிக்கட்சித் தலைவருக்கும் மனிதவுரிமைகளிற்கும் என்ன தொடர்பிருக்க முடியும்!
அய்.நா. மனிதவுரிமைகள் ஆணையம் 2015-ல் நிறைவேற்றிய தீர்மானித்தின்படி இலங்கையில் நிகழ்ந்த மனிதவுரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மீது உண்மை அறிதல், பொறுப்புக் கூறல் போன்ற கடப்பாடுகளை இலங்கை அரசுமீது விதித்தது. இந்த வருடம் நடந்த கூட்டத் தொடரில் மனிதவுரிமைகள் ஆணையர் மிஷல் பச்லே இலங்கை அரசின் மீது ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் வெளியிட்டார். தன்னுடைய கடப்பாட்டை இலங்கை அரசு முன்னேற்றகரமான முறையில் நிறைவேற்றவில்லை என்றும் இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலிலிருப்பதையும் மரண தண்டனையை மறுபடியும் சட்டமாகச் செய்ய முயல்வதையும் ஆணையர் கண்டித்தார். எனினும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு கூடுதலாக இரண்டு வருடகால அவகாசத்தை இலங்கைக்குக் கொடுப்பதென மனிதவுரிமைகள் பேரவையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை தமிழ்த் தரப்பில் மட்டுமல்ல சிங்களத் தரப்பிலும் பலர் அதிருப்தியோடு எதிர்கொண்டனர். தமிழ்த் தரப்பு அய்.நா கூடுதல் அவகாசம் வழங்கி அநீதி இழைத்துவிட்டதாகச் சொல்ல சிங்களத் தரப்பு அமைச்சரோ இலங்கை மீது அய்.நாவின் தலையீடு ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என நாடாளுமன்ற உரையிலேயே சத்தமிட்டார்.
அய்.நாவின் இந்தத் தீர்மானத்தின் மூலம் இலங்கை அரசுக்குப் பொறுப்பும் சொல்லும் கடப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசின் மீது அய்.நாவின் கண்காணிப்பு இருந்துகொண்டேயிருக்க ஏற்பாடாகியிருக்கிறது. இதைவிடுத்து சர்வதேச நீதிமன்றம், போர்க்குற்ற விசாரணை என்ற திசையில் அய்.நா ஒருபோதும் நகராது என்பதையே பத்து வருடங்களாகச் சர்வதேசச் சமூகத்தினதும் அய்.நாவினதும் நகர்வுகள் தெளிவுபட உணர்த்துகின்றன.
இலங்கையில் தமிழர்கள் மீது அரசால் நிகழ்த்ப்பட்ட போர்க்குற்றங்களையும் மனிதவுரிமை மீறல்களையும் சாட்சியங்களையும் தொகுத்துப் பட்டியலிடக் கடந்த பத்தாண்டுகளாகவே தமிழ்த் தரப்புகள் ஒவ்வொரு அய்.நா மனிதவுரிமைக் கூட்டத்தொடரிலும் முயற்சிக்கின்றன. அரசுத் தரப்பும் ஒரு பட்டியலை வருடம் தவறாமல் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கிறது. புலிகளால் சிங்களத் தரப்பின் மீது நிகழ்த்தப்பட்ட மனதவுரிமை மீறல்களினதும் போர்க் குற்றங்களினும் சாட்சியங்களினதும் தொகுப்பாக அது இருக்கிறது. அரசின் இந்த முயற்சிக்கு புலம் பெயர் சிங்களத் தேசியவாதச் சக்திகள் உறுதுணையாக நிற்கின்றன. ஆனால் இந்த இருதரப்புகளும் வழங்கக் கூடிய போர்க் குற்ற ஆதாரங்களிலும் பன்மடங்கு ஆதாரங்களும் இன்னும் வெளிவராத இரகசிய ஆதாரங்களும் அய்.நாவிடமுள்ளது என்பதே உண்மை.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகச் சிறையிலிருக்கும் ஒரு தமிழரோடு சில நாட்களிற்கு முன்பு தொலைபேசி வழியாக உரையாட எனக்கொரு வாய்ப்புக் கிடைத்தது. இலங்கை இராணுவத்தின் மீதான போர்க் குற்ற விசாரணைகள் வேண்டும் என்ற அழுத்தம் தன்னைப் போன்ற நீண்டகால அரசியல் கைதிகளின் விடுதலையைப் பாதிக்கிறது என்றார். இதை நான் இங்கு குறித்துக் காட்டுவது இலங்கை இராணுவத்தின் மீது போர்க் குற்ற விசாரணை வேண்டாம் என்பதற்காகவல்ல, இந்தப் போரக் குற்ற விசாரணை அழுத்தத்தை இலங்கை அரசு எவ்வாறெல்லாம் கையாள்கிறது என்பதைக் குறித்துக்காட்டவே. சில காலங்களிற்கு முன்பு சிங்கள தீவிர இனவாத அமைப்பொன்று விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் அனைவர்மீதும் போர்க்குற்ற விசாரணைகளை ஏற்படுத்த வேண்டுமென்றது. இன்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கும் பல ஆயிரக்கணக்கான போராளிகளை மீண்டும் சிறையிலடைக்க வேண்டும் அல்லது தூக்கு மேடைக்கு அனுப்பவேண்டும் என்பதுதான் அக்கோரிக்கையின் பொருள். இது எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை.
அய்.நா அல்லது இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டிருக்கும் மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை தற்போது இலங்கையில் இருக்கும் மைத்ரிபால சிறிசேனா – ரணில் விக்கிரமசிங்க அரசின் மீது அதிருப்திகள் இருந்தாலும் அவை மென்மையாகவும் நட்பாகவுமே இந்த அரசை அணுகுகின்றன. தேர்தலில் தமிழ் மக்களின் பெருமளவு ஆதரவைப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அரசோடு மோதல் போக்கைப் பெருமளவு கடைப்பிடிப்பதில்லை. இந்த அரசின் ஆட்சிக் காலத்தை கடந்த நாற்பது வருட அரசுகளின் ஆட்சிக்காலத்தோடு ஒப்பிட்டால் முன்னேற்றகரமான ஆட்சி என்றே சொல்லலாம். சிறுபான்மை இனங்களுக்கான அரசியல் பிரச்சினைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அதேயளவு இந்த ஆட்சியில் மனிதவுரிமை மீறல்கள், கைதுகள், கொலைகள், வெள்ளைவேன் கடத்தல்கள் எல்லாம் வெகுவாகக் குறைந்துவிட்டன என்பதுவும் உண்மை.
இந்த முன்னேற்றம் மைத்ரிபால சிறிசேனாவின் உள்ளத்தில் புத்தர் ஏற்றிவைத்த ஞானம் அல்ல. தமிழர்கள் மீது இன அழிப்பு நடந்தபோது ராஜபக்சவிற்கு உறுதுணையாக இருந்தவர்தான் மைத்ரி. 2008 அக்டோபரில் இவர் மீது புலிகளின் தற்கொலைத் தாக்குதல் முயற்சியும் நிகழ்ந்தது. கட்சிக்குள் நடந்த அதிகார மோதல்களைத் தொடர்ந்து இந்தியானதும் மேற்கு நாடுகளினதும் ஊக்குவிப்போடு முக்கிய சக்தியாக உருவெடுத்த மைத்ரி தமிழ் மக்களின் திரண்ட வாக்குப் பலத்தோடு ராஜபக்சவை வீழ்த்தி “நான் தமிழர்களால் தோற்கடிக்கப்பட்டேன்” என ராஜபக்சவைப் புலம்ப வைத்தார்.
புலிகளுக்குப் பின்னான இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்ற மேற்கு நாடுகளினது அவா ஒன்றும் அவ்வளவு உளச்சுத்தியானது இல்லையெனினும் சுதந்திர வணிகம், இந்து சமுத்திரப் பிராந்திய அமைதி, அகதிகள் வருகை, சர்வதேசத் மனிதவுரிமைகள் அமைப்புகளின் அழுத்தங்கள் என்ற பல்வேறு காரணிகளால் இலங்கை அரசு இயந்திரத்தின் மீது அவர்கள் மனிதவுரிமைகள் என்ற அழுத்தக் கயிறுகளைப் பிடித்திருக்கிறார்கள். இந்தக் கயிறு நெகிழ்ச்சியான கயிறேயொழிய தூக்குக் கயிறல்ல.
அண்மையில் ஒரு நண்பர் “அடுத்த வருடம் உமாமகேசுவரனின் 75வது பிறந்த தினம் வரயிருக்கிறது” என்று சொன்னபோது என் மனம் ஒருகணம் திக்கென்றது. தமிழீழ ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த தலைமுறை முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்த நெடிய காலப்பகுதியில் பல்வேறு அரசியல் மாற்றங்கள், அனுபவங்கள், பாடங்கள் ஊடாக ஈழத்தின் இன்றைய இளைய தலைமுறை ஆயுதப் போராட்ட அரசியலிலிருந்து விலகி நிற்கிறது. சர்வதேச அரசியல் சூழலும் ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கு முற்றாக எதிராக மாறியிருக்கிறது. கியூபாவும் வங்கமும் வியட்நாமும் வீரயுகக் கதைகளாகிவிட்டன. இன்னொரு அழிவுகர யுத்தத்திற்கு நம் இளைஞர்கள் தயாராயில்லை. இன்று ஈழத்திலிருக்கும் எந்தத் தமிழ் அரசியலாளரே அறிவுத்துறை சார்ந்தவர்களோ தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைப்பதில்லை.
எதிர்காலத்தை மதிப்பிடுவதற்கும் திட்டமிடுவதற்கும் நிகழ்காலத்தை நாம் சரிவரப் புரிந்தவர்களாக இருக்கவேண்டும். இன்று ஈழத் தமிழர் அரசியலின் திரட்சி கட்சிகளாகவும் அமைப்புகளாகவும் சாதியாகவும் பிரதேசமாகவும் சிதறடிக்கப்பட்டிருக்கும் அதேவேளையில் சிங்கள இனவாதம் திரட்சியடைந்துகொண்டே வருகிறது. இனவாத பவுத்த பீடங்களை எதிர்த்து அங்கே எந்த அரசியல் கட்சியும் செயற்பட முடியாத நிலை. பவுத்த துறவியை வைத்துச் சிறுகதை எழுதியவருக்கே சிறை என்ற நிலையாகியிருக்கிறது. புத்தர் உருவம் பொறித்த ஆடை அணிந்தாலும் சிறைதான். இலங்கை பவுத்தர்களின் நாடு மட்டுமே என்ற கூப்பாடு தீவு முழுவதும் தகிக்கும் தீயாகப் பரவியுள்ளது. சிங்கள – பவுத்த இனவாதச் சக்திகள் சிங்கள மக்களிடையே பெருமளவு செல்லாக்குப் பெற்றிருப்பதும் இனவாதத்திற்கு எதிரான சிங்கள முற்போக்காளர்கள் அருகிவரும் உயிரிகளாக இருப்பதுவும் நிதர்சனம்.
அரசியல் அதிகாரத்தைச் சக இனங்களோடு பகிர்ந்து கொள்ள மறுக்கும் இந்த ஒற்றை ஆட்சி முறை ஒற்றைத் தேசியம், ஒற்றை மதம், ஒற்றை மொழி என்ற நீண்ட கால இலக்கில் பயணிக்கிறது. இதன் இலக்கு தமிழர்கள் மட்டுமல்ல. முஸ்லீம்களும் இவர்களது இலக்குத்தான். சிறுபான்மை இனங்களின் அரசியல் பலவீனப்பட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் இந்தக் காலத்தில் பல்வேறு அரசியல், பண்பாட்டு நடவடிக்கைகள் மூலம் பவுத்த பேரினவாதம் ஆக்கிரமிப்பை நடைமுறைப்படுத்துகிறது. திட்டமிட்ட குடியேற்றங்கள், தமிழ்ப் பகுதிகளிற்கான நாடாளுமன்ற இருக்கைகளைக் குறைத்தல், இரவோடு இரவாகத் திடீரென முளைக்கும் புத்தர் சிலைகள், தமிழ் மொழியை இருட்டடடித்தல் என்று பல்வேறு வழிகளில் இந்த ஆக்கிரமிப்பு நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.
சர்வதேசத்திற்கும் அய்.நாவிற்கும் இவை உள்நாட்டுச் சிக்கல்கள். சிறுபான்மை இனங்களிற்கோ தன்னுரிமைக்கான அடிப்படைப் பிரச்சினை இது. சர்வதேச நீதிமன்றில் தீர்கப்படக் கூடிய பிரச்சினையல்ல இது. சிலர் ஆசைப்படுவதைப் போல ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றின் தூக்குமேடையில் ஏற்றினாலும் இந்த ஒற்றைத் தேசிய முன்னெடுப்பும் ஆக்கிரமிப்பும் நின்று போய்விடப் போவதில்லை.
சிறுபான்மை இனங்கள் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஓரணியில் அரசியல் திரட்சிகொள்வதே இப்போதைய அவசியத் தேவை. இலங்கையில் இன்னும் அரசியல் சாசனம் வழியேதான் ஆட்சி நடக்கிறது. நாடாளுமன்ற அரசியல்முறைதான் உள்ளது. சிறுபான்மை இனங்களிடம் இலங்கையின் ஆட்சிமாற்றத்தைத் தீர்மானிக்கும் அளவிற்கு இன்னமும் வாக்குப் பலமுள்ளது. கடந்த அதிபர் தேர்தலிலும் அது துல்லியமாகத் தெரிந்தது.
இலங்கையில் இன சமத்துவம் ஏற்படவேண்டும் எனில் அது அரசியல் சாசனம் திருத்தப்படுவதன் மூலமும் திருத்தப்பட்டவை நடைமுறைக்கு வருவதன் மூலமுமே நிகழ முடியும். நாடாளுமன்றத்தில் சிறுபான்மை இனங்கள் பேரம் பேசும் சக்திகளாக வலுவடைய வேண்டும்.
குறிப்பாகத் தமிழர்களிடையே வெவ்வேறு விதமான இறந்தகாலக் கசப்புகளும் துரோகங்களும் பகைமைகளும் அரசியல் கருத்து வேற்றுமைகளும் இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்தும் மறந்தும் எதிர்காலத்திற்காக புரிந்துணர்வுடன் ஓரணியில் செயற்பட வேண்டும். அடுத்த பொதுத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே இப்படியொரு குறைந்தபட்ச உடன்பாடு எட்டப்பட வேண்டும். இது மட்டுமே தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெறவும் இருப்பதைக் காப்பாற்றுவதற்குமான ஒரே வழி. இது நடக்காவிட்டால் காலப்போக்கில் இலங்கையில் சிறுபான்மை இனங்களின் இருப்பு மறுக்கப்பட்டு அவர்கள் ஒற்றைத் தேசியத்தில் கரைக்கப்படுவார்கள். தமிழர்களிடையேயான பகை மறப்பு மட்டுமே இந்த வரலாற்று அழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்றக் கூடிய ஒரே சக்தி.
கொன்றவனும் கொல்லப்பட்டவனும் ‘தியாகி’யும் ‘துரோகி’யும் ஓரணியில் திரள்வது என்பது வரலாற்றில் முன்னெப்போதும் நடக்காத ஒன்றல்ல.
(தடம், மே 2019)