இப்ப இல்லாட்டி எப்ப!

கட்டுரைகள்

ன்று தொடங்கியிருக்கும் யாழ் சர்வதேசத் திரைப்பட விழாவில், வரும் 5ம் தேதி மாலை 6.45 மணிக்கு திரையிடப்படுவதாக விழாக் குழுவினரால் அறிவிக்கப்பட்டு உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலிலும் சேர்க்கப்பட்டிருந்த ஜூட் ரட்ணத்தின் ஆவணப்படமான ‘Demons in Paradise’ இப்போது நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்கும் கண்டனத்திற்குமுரியது. இதையொத்த சம்பவமொன்று எங்களது ‘செங்கடல்’ திரைப்படத்திற்கும் நிகழ்ந்திருந்தது.

செங்கடல் தயாரிப்பில் இருக்கும்போதே அது புலிகளிற்கு எதிரான படம் – இலங்கை அரசிற்கு எதிரான படம் என்றெல்லாம் ஊகங்கள் ஊடகங்களில் வெளியாகின. 2010 இந்தியன் பனோராமாவிற்கு தேர்வான ஒரேயொரு தமிழ்ப்படமாகச் செங்கடல் இருந்தது. அடுத்து வந்த சென்னை திரைப்பட விழாவிற்குத் தேர்வாகி, நிகழ்ச்சி நிரலிலும் செங்கடல் இடம்பெற்றது. ஆனால் திரைப்படத் தொடக்கவிழாவிற்கு முந்தைய நாள் ‘செங்கடல்’ நிகழ்ச்சி நிரலிலிருந்து துாக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை. புற அழுத்தம் கிழுத்தம் என்று பிடிகொடுக்காமல் முனகினார்கள்.

தொடக்க விழாவிற்கு செங்கடல் கலைஞர்கள் சிலரும், நண்பர்களும் போயிருந்தோம். எங்களுடன் இயக்குனர் – எடிட்டர் பி.லெனினும் வந்திருந்தார். தொடக்க விழா ஆரம்பித்தது. மேடையில் மத்திய, மாநில அமைச்சர்களும் சேகர் கபூர் போன்ற திரை ஆளுமைகளும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் இன்னும் பலரும் வீற்றிருக்க, இந்து ராம் மேடையில் மைக் பிடித்து “திரைப்பட விழாக்களில் கருத்துச் சுதந்திரம்..” என்று பேசியத் தருணத்தில் நாங்கள் எழுந்து நின்றோம். எங்களுடன் மறைத்து எடுத்துச் சென்றிருந்த முழக்கங்கள் எழுதப்பட்டிருந்த அட்டைகளைத் துாக்கிப்பிடித்துக்கொண்டு நின்று “செங்கடலை தடை செய்யாதே, கருத்துச் சுதந்திரத்தை மறுக்காதே” என முழக்கமிட்டோம். மேடையில் ஏறித் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தோம். அங்கேயே எங்களிடம் திரைப்பட விழாக் குழுவின் சார்பில் சரத்குமாரால் வருத்தம் தெரிவிக்கப்பட்டு மறுபடியும் நிகழ்ச்சி நிரலில் செங்கடல் சேர்க்கப்பட்டு விழாவில் திரையிடப்பட்டது.

எட்டாண்டுகளிற்கு முன்பு செங்கடலிற்கு நடந்ததுதான் இப்போது ஜூட் ரட்ணத்தின் படத்திற்கும் நிகழ்ந்திருக்கிறது. அவரது படம் விழாவில் தேர்வாகி அறிவிப்பு, நிகழ்ச்சி நிரல் எல்லாம் வெளியாகிய பின்பு கடைசி நேரத்தில் விழாவிலிருந்து படம் துாக்கப்பட்டிருக்கிறது. இது குறித்துப் பகிரங்கமாக ஊடகங்களில் ஜூட் ரட்ணம் எழுப்பிய கேள்விக்கு ‘ஆமான’ பதில் இப்போதுவரை கிடைக்கவில்லை. இவ்வளவு பாரதுாரமான பிரச்சினைக்கு வெளிப்படையான பதிலை விழாக்குழு ஊடகங்களில் தெரிவிக்க வேண்டும். அனோமா ராஜகருணா முகநுாலில் தெரிவித்த கருத்துகள் தெளிவற்றவை. ‘Demons in Paradise’ தேர்வு செய்யப்பட்டு நேரம் ஒதுக்கப்பட்ட அட்டவணை கீழே உள்ளது.

கிரிஷாந்தின் பதிவிலிருந்து கிடைக்கும் செய்தியின் அடிப்படையில், இந்தப் படம் திரையிடப்பட்டால், தான் விழாக்குழுத் தலைவர் பதவியிலிருந்து வெளியேறுவதாக ரகுராம் சொல்லியிருக்கிறார். தலைவரைக் காப்பாற்றுவதற்காக ஒரு கலைஞனைப் பலிகொடுத்துள்ளது யாழ் சர்வதேசத் திரைப்பட விழாக்குழு. எதற்காகத் திரைப்பட விழா நடத்துகிறீர்கள்? தனிப்பட்ட மனிதர்களிற்கும் அச்சுறுத்தல்களிற்கும் வளைந்து போகவா, அல்லது சுயாதீன திரைப்படக் கலையையும் கருத்துரிமையையும் வளர்க்கவா?

இல்லை, படத்தை நீக்குவதற்கான காரணங்கள் வேறாக இருக்கின்றன என்றால் அவை என்ன?

படத்தில், புலிகள் மீது விமர்சனம் இருப்பதால் படத்தைத் திரையிடக்கூடாது என்றொரு முகநுால் கூச்சல். ‘படத்தைத் திரையிட்டால் யாழ்ப்பாணத்தில் இதுவே கடைசித் திரைப்பட விழா’ என்று கேசவராஜனின் லைட்டான மிரட்டல். இதற்கெல்லாமா இந்த விழாக் குழு பணியப்போகிறது!

புலிகளை விமர்சிக்கும் படங்களைத் திரையிடக் கூடாதா! புலிகளை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லையா என்ன? மகத்தான கலைஞன் பிரசன்னா விதானகேயின் ‘ஓகஸ்ட் சண்’ படத்தில் யாழ் முஸ்லீம் இனச்சுத்திகரிப்பை உண்மைபடக் காட்சிப்படுத்திப் புலிகளை விமர்சித்திருப்பாரே! அந்தப் படத்தையும் நீங்கள் திரையிட விடமாட்டீர்களா? புலிகளை விமர்சிக்கும் படங்கள், நுால்கள், கவிதைகள், நாவல்கள், பத்திரிகைகள் எதையும் நீங்கள் அனுமதிக்கமாட்டீர்களா? எல்லாவற்றையும் மீள் பரிசீலனை செய்யவேண்டும், தோல்வியை ஆய்வு செய்ய வேண்டும், சுயவிமர்சனம் வேண்டும் என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டே மறுபக்கம் ஜூட் ரட்ணத்தின் படத்தை வெளியிடக்கூடாது எனச் சொல்வதில் என்ன நியாயமிருக்கிறது. இல்லாத பொல்லாத எதையும் அவர் தனது ஆவணப் படத்தில் காட்டவில்லை. ராஜினி திரணகமவும் சி.புஸ்பராஜாவும் செழியனும் நிலாந்தனும் கருணாகரனும் சேரனும் ஜெயபாலனும் நானும் சொன்னவற்றில் ஒரு சிறு துளியை ஜூட் தனது படத்தில் காட்டியிருக்கிறார். அந்த உண்மையை முகத்துக்கு நேரே எதிர் கொள்ளுங்கள். கேள்வி கேளுங்கள். கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்!

படத்திற்கு வெளியே ஜூட் ரட்ணம் ஊடகங்களில் சொல்லிவருபவற்றில் பலருக்கு மாற்றுக்கருத்து இருப்பதாகத் தெரிகிறது. எனக்கே கூட அது இருக்கிறது. குறிப்பாக அவரது அண்மைய பிபிஸி செவ்வியில் எனக்குக் கடுமையான மாறுபாடு இருக்கிறது. அவற்றைப் பேச வேண்டுமென்பது வேறு, அவரின் படத்திற்கு தடை விதிப்பது வேறு. மாற்றுக் கருத்துள்ளவர்கள் திரைப்பட விழாவில் நேருக்கு நேரேயே அவரை விமர்சிக்கலாம். பாரிஸில் நடந்த திரையிடலில் நான் அதைத்தான் செய்தேன். சுயாதீன திரைப்பட விழாக்களின் பண்பே எதிர் விமர்சனங்களிற்கும் கேள்விகளிற்கும் அங்கேயே தளம் அமைத்துக்கொடுப்பதுதான். அதைவிடுத்து அவரின் படைப்பைத் தடை செய்வது அப்பட்டமான கருத்துரிமைக் கொலை!

இன்று ஜூட் ரட்ணத்திற்கு நடப்பது நாளை நமக்கெல்லாம் நிகழும். சனநாயகத்தை நேசிப்பவர்கள், குறிப்பாகத் திரைப்படக் கலைஞர்கள் தமது கடும் கண்டனங்களை யாழ் சர்வதேசத் திரைப்பட விழாக் குழுவினருக்குத் தெரிவிப்பதோடு ஜூட் ரட்ணத்தின் ஆவணப்படத்தை இந்த விழாவில் திரையிடப் பகிரங்கமாகப் போராட வேண்டும். நாலு பத்து வருடங்கள் நமது வாய்கள் தைக்கப்பட்டிருந்தன. அதை இப்போது திறக்காமல் எப்போதுதான் திறப்பது!

நீண்ட போரால் நாசமாக்கப்பட்ட ஒரு நகரத்தில், ஒரு சர்வதேசத் திரைப்பட விழாவைத் தொடங்கி, அதை நான்காவது வருடமாக நடத்துவது லேசுப்பட்ட காரியமல்ல. திரைப்பட விழாக் குழுவினரின் கடுமையான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன். அதேவேளையில், சுயாதீனத் திரைப்பட விழாக்களிற்கே உரிய சிறப்புப் பண்புகளை அவர்கள் கட்டிக் காக்க வேண்டும். அரசுகளால், சர்வாதிகாரிகளால், கலாசார அடிப்படைவாதிகளால், மதவாதிகளால், பாஸிஸ்டுகளால் தடைசெய்யப்படும் – புறக்கணிக்கப்படும் திரைப்படங்களை உலகிற்கு எடுத்துச் செல்பவை திரைப்பட விழாக்களே. தணிக்கை, தடையற்ற முழுமையான சுதந்திர இயக்கமே சுயாதீன திரைப்பட விழாக்களின் அடிப்படை மாண்பு. இவ்வருடமும் அம்மாண்பைக் காப்பாற்ற யாழ் சர்வதேசத் திரைப்பட விழா தவறிவிடக்கூடாது.

2

‘Demons in Paradise’ஆவணப்படம் குறித்து நான் எழுதி, விகடன் இணையத்தளத்தில் 12,பெப்ரவரி வெளியாகிய கட்டுரை கீழே:

2017 கான்ஸ் திரைப்படவிழாவில், ஜூட் ரட்ணம் இயக்கிய ‘Demons in Paradise’ ஆவணப்படம் திரையிடப்பட்டு Golden Camera, Golden Eye விருதுகளிற்குப் பரிந்துரையானது. தொடர்ந்து பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் படம் காண்பிக்கப்பட்டு வருகிறது. பிரான்ஸில் திரையரங்குகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படம் திரையிடப்பட்டது.

‘எங்களது குழந்தைகள் குண்டுவீச்சு விமானத்தின் சத்தத்தை வைத்தே அது என்ன ரகப் போர் விமானம் எனச் சொல்லிவிடுவார்கள், ஆனால் அவர்கள் இதுவரை ஒரு ரயிலைக் கூடப் பார்த்ததில்லை’ என்பது யுத்தகாலத்தில் தமிழ்க் கவிஞர் ஒருவரால் எழுதப்பட்ட வரிகள்.

இலங்கையில் 1867 ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதலாவது ரயிலை பிரித்தானிய காலனிய அரசு ஓடவிட்டது. மத்திய நாட்டின் மலைகளிலிருந்து தேயிலையும் ரப்பரையும் கரைநாட்டுத் துறைமுகங்களிற்கு கொண்டுவந்து சேர்ப்பதே இலங்கையில் பிரிட்டிஷாரின் ரயில் ஆர்வத்திற்கான காரணம்.

அடுத்த அய்ம்பது வருடங்களிலேயே நாட்டின் முக்கிய நகரங்கள் எல்லாமே ரயில் பாதைகளால் இணைக்கப்பட்டன. 1980-களின் நடுப்பகுதியில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்தபோது நாட்டின் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. ரயில் தண்டவாளங்கள் கெரில்லாப் போராளிகளால் துண்டாடப்பட்டு பதுங்கு குழிகளிற்கும் பாதுகாப்பு அரண்களிற்கும் பயன்படுத்தப்பட்டன. இந்த வரலாற்றுப் பின்னணியோடு ஜூட் ரட்ணத்தின் ஆவணப்படம் தொடங்குகிறது.

ஜூட் ரட்ணம் கொழும்பின் புறநகரில் பிறந்துவளர்ந்த தமிழர். 1983 ஜூலையில் நாடு முழுவதும் தமிழர்கள்மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு ஓர் இனப்படுகொலையே நடந்தபோது ஜூட்டுக்கு அய்ந்து வயது. இந்தப் படுகொலைகளிலிருந்து ஜூட்டின் குடும்பம் தப்பிவிட்டது. ஆனாலும் அந்த நாட்களின் கொடூர ஞாபகங்கள் அந்த அய்ந்து வயதுச் சிறுவனில் உறைந்துவிட்டன. உறைந்த நெருப்பினதும் இரத்தத்தினதும் சலனமே இந்த ஆவணப்படம்.

1983 ஜூலைப் படுகொலைகளை ஆவணப்படுத்தும் ஜூட், இலங்கை அரசினதும், சிங்களக் காடையர்களதும் கோர முகங்கங்களை ஆவணப்படுத்தும் அதே வேளையில் எளிய சிங்கள மக்கள் அந்த வன்செயல்களின் போது எப்படித் தமிழர்களைச் சிங்களக் காடையர்களிடமிருந்து காப்பாற்றினார்கள் என்பதையும் சொல்லத் தவறவில்லை. ஜூட் ரட்ணத்தின் குடும்பமும் அப்படித்தான் காப்பாற்றப்பட்டது.

இந்த ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி ஜூட்டின் மாமா யோகா (மனோரஞ்சன்). அவரது நேரடிச் சாட்சியத்தின் வழியேயே படத்தின் பெரும்பகுதி நகர்த்தப்படுகிறது. இப்போது கனடாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் யோகா யுத்தம் முடிந்ததன் பின்னாக நாடு திரும்புவதிலிருந்து அவரது சாட்சியம் ஆரம்பிக்கிறது.

1983 படுகொலைகளைத் தொடர்ந்து யோகா ஒரு தமிழ் போராளிக் குழுவில் இணைந்து சிங்கள இனவாத அரசிற்கு எதிராகப் போராட முடிவெடுக்கிறார். கொழும்புத் தமிழரான அவர் தன்னுடைய இலட்சியத்தைத் தேடி யாழ்ப்பாணம் செல்லும் ரயிலில் புறப்படுகிறார். அவரது முடிவிற்கு அவரது குடும்பத்தில் சிலர் வாழ்த்தும் தெரிவித்து வழியனுப்புகிறார்கள்.

யோகா, வெறும் ஆயுத அரசியலை நம்பியவரல்ல. இடதுசாரிக் கோட்பாடுகள் வழியே இலங்கை அரசுக்கு எதிராகப் போராடும் ஓர் ஆயுதப் போராட்ட இயக்கத்திலேயே அவர் இணைய விரும்புகிறார். மிகச் சிறியதும் இடதுசாரி அரசியலைத் தனது செல்நெறியாகப் பிரகடனப்படுத்தியதுமான என். எல். எஃப்.ரி. இயக்கத்தில் யோகா இணைந்துகொள்கிறார்.

சில வருடங்களிற்குப் பின்பு யோகாவின் இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகளால் தடை செய்யப்படுகிறது. தங்களைத் தவிர வேறு எந்த அரசியல் அமைப்புகளும் தமிழ்ப் பகுதிகளில் இயங்கக்கூடாது என்பதில் புலிகள் மூர்க்கமாயிருக்கிறார்கள். யோகாவின் தோழர்கள் புலிகளால் தேடித் தேடிக் கொல்லப்படுகிறார்கள். யோகா ஒரு விவசாயி போல வேடம் புனைந்து, புலிகளின் காவலரண்களைக் கடக்கும் போது அவரைத் தடுக்கும் புலிகள் அவருக்கு ஒரு வேலையைக் கொடுத்து அதைச் செய்துவிட்டுப் போகும்படி பணிக்கிறார்கள். அந்த வேலை, ரயில் தண்டவாளங்களை பெயர்த்தெடுத்துத் துண்டுபோடும் வேலை.

30 வருடங்களிற்குப் பிறகு, கனடாவிலிருந்து நாடு திரும்பிய யோகா, தான் சிறுவயதில் வளர்ந்த சிங்களக் கிராமத்திற்கு சென்று கிராமவாசிகளைச் சந்திப்பதோடும் கண்ணீரோடு உரையாடுவதோடும் யாழ்ப்பாணத்திற்குச் சென்று உயிரோடு எஞ்சியிருக்கும் தனது இயக்கத் தோழர்களைச் சந்தித்து நினைவுகளை மீட்டுவதுடனும் இந்த ஆவணப்படம் இப்போதைக்கு முடிகிறது.

இந்த ஆவணப்படத்தின் இன்னொரு சாட்சியம் ரயில். ரயில் பயணங்களின் போது, தமிழர்கள் ரயிலிலிருந்து இறக்கப்பட்டுக் கொல்லப்பட்டதை நீண்டகால ரயில்வே ஊழியரான சிங்கள முதியவர் சாட்சியமளிக்கிறார். நாட்டின் சிங்களப் பகுதிகளையும் தமிழ்ப் பகுதிகளையும் இணைத்த ரயில், போரின் அத்தனை வடுக்களையும் சுமந்து சவம் காவும் தொடர்வண்டியாகிப் போன கதை. இந்த ஆவணப் படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் அந்தச் சாவு ரயிலின் நிழல் கவிந்துள்ளது. இந்தப் படத்தில் தமிழும் சிங்களமும் உரையாடல் மொழியாக இருப்பினும் அந்தச் சாவு ரயிலின் அச்சமூட்டும் தடதடக்கும் ஓசையே இந்தப் படத்தின் மைய மொழி.

ஆவணப்படத்தின் எண்ணற்ற சாட்சியங்களில் இரு சாட்சியங்கள் மிகக் குறிப்பானவை. 1983 வன்செயல்களின் போது, ஒரு தமிழ் இளைஞரை முழுதாக நிர்வாணப்படுத்தி வீதியில் உட்காரவைத்துவிட்டுச் சுற்றிவர நின்று சிங்களக் காடையர்கள் எக்களிக்கும் அந்தக் கறுப்பு வெள்ளை நிழற்படத்தை எந்தத் தமிழராலும் மறந்துவிட முடியாது. நடந்த மொத்த அவலங்களின் சாட்சியம் அந்தப் படம். அந்த நிழற்படத்தை எடுத்தவர் ஒரு சிங்களவர். அந்தச் சிங்களவர் இன்றுவரை கண்களிலிருந்து அகலாத மிரட்சியோடு இந்த ஆவணப்படத்தில் அளிக்கும் சாட்சியம் வழியே தன்னுடைய கையாலாகத்தனத்தை அறிக்கையிடும் சொற்கள் சாதாரண சிங்கள மக்களின் மனச்சாட்சியம்.

அடுத்த சாட்சியம் லண்டன் தமிழ் நாடக உலகில் பிரபலமான வாசுதேவனுடையது. வாசுதேவனும் நானும் புலிகள் இயக்கத்தில் ஒரே காலப்பகுதியில் இயங்கியவர்கள். புலிகள் டெலோ இயக்கத்தைத் தாக்கி அழித்தபோது அவரும் நானும் வேறு வேறு இடங்களில் இயங்கிக்கொண்டிருந்தோம். ஆனால் இருவரும் ஒரே வேலையைத்தான் செய்தோம்.

இந்த ஆவணப்படத்தில் வாசுதேவன் தோன்றி அந்தக் கொடூரமான சகோதரப் படுகொலை நாட்கள் குறித்துச் சாட்சியம் அழிக்கிறார். ஆயுதங்களை ஏந்தியவாறு எங்கள் சக போராளிகளைத் தேடிதேடி எவ்வாறு அழித்தோம் என்பதையும் அப்போது எம் மக்கள் வாய் மூடியிருந்ததையும் குற்றவுணர்வு மேலிடச் சாட்சியம் சொல்கிறார். அது ஒருவகையில் எனது சாட்சியமும் கூட.

இலங்கை போன்ற ஊடகச் சுதந்திரம் குறைவான நாட்டில் ஒருவர் – அதுவுமொரு தமிழர் – இத்தகைய அரசியல் ஆவணப்படத்தை இயக்கி வெளியிடுவதென்பது மிகச் சவாலானதும் ஆபத்தானதும். முப்பது வருட யுத்தத்தின் ஒருபகுதியை, பாதிக்கப்பட்ட ஒரு இலங்கைத் தமிழர் முழுநீள ஆவணப்படமாக்கி சர்வதேச அரங்குகளிற்கு கொண்டு சேர்த்திருப்பது இதுவே முதற்தடவை.

படம் முழுவதும் ஜூட் ரட்ணத்தின் கடுமையான தேடலையும் உழைப்பையும் அவரது பாரபட்சமற்ற கடுமையான விமர்சனங்களையும் தாண்டி வேறொன்று நம்மை படத்தோடு பிணைத்து வைக்கிறது. படம் முடிந்து நாம் அரங்கைவிட்டு வெளியேறும் போதும் அது நம்மைப் பின்தொடர்ந்து வருகிறது. அது மாசற்ற அய்ந்து வயதுச் சிறுவனின் அழுகுரல்!

3 thoughts on “இப்ப இல்லாட்டி எப்ப!

  1. யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றபட்டபோது புகளுக்கு எதிராக அழியட்டும் எனது இனமென நான் எழுதிய ”அழுவதே விதியென்றால்” மிக கடுமையான விமர்சனம். புலிகளை விமர்சிப்பதல்ல இங்கு பிரச்சினை. போரை நிறுத்த எத்தனை பொதுமக்களையும் -தமிழர்களையும் கொல்லலாம் என உலக அரங்கில் கூறிய ஒருவரை அவரது பாசிச நிலைபாட்டை பகிஸ்கரிப்பது பற்றிய யாழ்ப்பாணத்துக் கலைஞர்களது நிலைபாடு. இரண்டாம் உலக மாயுத்ததின்போதும் பின்னும் கிட்லரின் யூத கொலைகளை ஆதரித்த பல கலைஞர்கள் பகிஸ்கரிக்கபட்டுள்ளனர். . இது தவறா? நான் தவறென்று கருதவில்லை.

  2. “புலிகளை விமர்சிப்பதால் தான் படம் தூக்கப்பட்டது” என்பதே பொதுவான கருத்தாக இருக்கின்றதே தவிர, “போரை நிறுத்த எத்தனை பொதுமக்களையும் -தமிழர்களையும் கொல்லலாம்” என்ற கருத்துக் குறித்து பேசப்பட்டதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *