இப்போதெல்லாம் திரையரங்குகளிற்குச் சென்று தமிழ்ப் படம் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. வயதாக வயதாகச் சகிப்புத்தன்மை குறைந்துவருவது வழமைதானே. ஆனால் இன்று திரையரங்கம் சென்று காலா பார்த்தேன்.
பாரிஸில் கடந்த மூன்று மாதங்களாகவே தொடருந்து வேலைநிறுத்தம். ‘சனாதிபதி மக்ரோன் அவர்களே பிரான்ஸ் விற்பனைக்கல்ல’ என்பது போராடும் தொழிலாளர்களின் முழக்கமாயிருக்கிறது. இந்த தொடருந்துப் பிரச்சினையாலும் திரையரங்கில் முதற் சில காட்சிகளில் ரஜினி ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரக் கூச்சல்களுக்கு அஞ்சியும் சில நாட்கள் கழித்து படத்தைப் பொறுமையாகப் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் இன்று காலைவரை இருந்தேன். ஆனால் தினமலர், ‘ரஞ்சித் சூழ்ச்சி வலையில் ரஜினி’ எனச் செய்தி வெளியிட்டிருப்பதைப் பார்த்ததும் ஒத்திப்போட்டிருந்த ஆர்வம் பிடரியில் உந்தித்தள்ள தியேட்டருக்குப் போய்விட்டேன்.
அண்மையில் ஒரு நேர்காணலில் இயக்குனர் பா. ரஞ்சித், பராசக்தி திரைப்படத்தைத் தான் திரும்பத் திரும்பப் பார்ப்பதாகக் குறிப்பிட்டிருப்பார். திரையில் நிகழ்ந்திருப்பதும் அதுதான். பராசக்தி வெளியாகி எழுபது வருடங்கள் கழித்து இன்னொரு பராசக்தி. ஆனால் கருத்துவீச்சில் முன்னதிலும் சிறப்பாக, மேலும் தெளிவாக!
காலாவின் திரைப்பட வடிவம் பராசக்தியின் வடிவம்தான். மிக வெளிப்படையான இந்துத்துவ எதிர்ப்பு. கடவுள் மறுப்பு. சாதி மறுப்பு. பராசக்தி போலவே பிரச்சாரத்திற்காகவே எழுதப்பட்ட வசனங்கள். பராசக்தியையும் மீறி வெளிப்படையாக அடித்தள மக்களின் உரிமைகளைப் பேசும் படம். பராசக்தி வரும்போது சோசலிஸ்ட் நேரு ஆட்சியிலிருந்தார். காலா வரும்போது பாஸிஸ்ட் மோடி ஆட்சியிலிருக்கிறார். பராசக்தி காலத்தை விட இன்றைய காலம் அபாயமானது.
பராசக்தியில் கூட குறிப்பான குறைபாடுகளிருக்கும். ஓ ரசிக்கும் சீமானே என ஒரு ‘அய்ட்டம்’ டான்ஸிருக்கும், இதோ இந்த ஜாலக்காரி ஜாலி என்று வசனமிருக்கும். நாயகன் வாழ்ந்து கெட்ட பெரிய குடும்பத்து பிள்ளையாக இருப்பான். ஆனால் காலாவில் பெண்களை இழிவுபடுத்தியோ சீண்டியோ ஒரு வசனம் கூடக் கிடையாது. காட்சிகளில் ஆபாசம் துளியும் இல்லை. தமிழ்ச் சினிமாவில் பக்திப் படங்களில் கூட ஆபாசமிருக்கும். காலாவில் பெண்கள் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள். பராசக்தியில் கல்யாணி வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள். காலாவிலோ அவள் போலிஸைப் போட்டு வெளுக்கிறாள். காலாவின் முதன்மைக் கதாமாந்தர்கள் அனைவரும் தலித்துகள் அல்லது இஸ்லாமியர்கள். ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தையும் இப்படிச் சொல்வார்கள். ஆனால் அங்கே அது கதையோடு ஒட்டிவரும். காலாவிலோ கதையும் கத்தரிக்காயும் என்று சொல்லிவிட்டு பார்த்துப் பார்த்துப் பாத்திரங்களைக் கொண்டுவந்து தங்களது நோக்கத்திற்காகப் பொருத்தியிருக்கிறார்கள். பராசக்தியின் அதே வார்ப்பு.
இந்திய தேசமே இந்துத்துவத்திற்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், ராமர் கோயிலைக் கட்டுவதே ஆதார அரசியலாகியிருக்கும் நிலையில் ராமனை தீமையின் உருவகமாக்கி அதைத் திரும்பத் திரும்பத் திரையில் காட்டியிருப்பதெல்லாம் நாம் கொண்டாடித்தீர்க்க வேண்டிய விஷயம்.
கபாலி படத்தில் நாயகனை டான் ஆகச் சித்திரித்ததில் எனக்கு முறைப்பாடு இருந்தது. அதை ‘விகடன் தடம்’ நேர்காணலில் குறிப்பிட்டிருந்தேன். காலாவில் அந்தக் குறையும் இல்லாமற் போயிற்று. காலாவுக்கு கை எழ மாட்டேன் என்கிறது. அடிவேறு வாங்கிவிட்டு ஜாலியாகச் சமாளிக்க வேறு செய்கிறார். ஏதோ முற்காலத்தில் அடிதடிக்காரனாக இருந்தார் என்பதோடு அடிதடி அத்தியாயம் முடிந்து போகிறது. ஒரு சூப்பர் ஹீரோவாக இல்லாமல் சாதாரண மனிதனாக முடிந்துபோகிறார் காலா.
இது ரஜினி படமா அல்லது ரஞ்சித் படமா? முழுக்க முழுக்க ரஞ்சித் படம். ரஜினியின் படங்களுக்குரிய எந்த அம்சமும் துளிகூட இந்தப் படத்தில் கிடையாது. முக்கியமாகப் பெண்களுக்கு கலாசாரம் குறித்து பாடம் நடத்தும் ரஜினி கிடையாது. ‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்’ போன்ற அரை மெண்டல் வசனங்கள் கிடையாது. ரஜினியின் தன்னிலையை முன்னிலைப்படுத்தி “வர வேண்டிய நேரத்தில் வருவேன்” போன்ற பஞ்ச் வசனங்கள் கிடையாது. முக்கியமாகப் பாம்பு கிடையாது. வழமையாகத் தனது வேகமான ஜிமிக்ஸ்களால் ரஜினி திரையில் கவர்வார். ஆனால் காலாவில் நானா படேகரின் தங்கமான நடிப்புக்கு முன்னால் வேங்கையன் மகன் சத்தமில்லால் நிற்கிறார்.
சரி..பிரச்சாரம் பண்ணினால் ஆயிற்றா..இந்துத்துவ எதிர்ப்பு சொன்னால் ஆயிற்றா? அரசியல் சரிகளோடு படம் எடுத்தால் போதுமா? ஒரு சினிமாவுக்கு ஆதாரமான அழகியலும் கலையமைதியும் தர்க்கமும் என்னவாயிற்று என்ற கேள்விகள் யாருக்காவது எழலாம். ஆனால் இந்தக் கேள்விகளில் ரஞ்சித்துக்கு கிஞ்சித்தும் அக்கறையிருக்காது என்றே நினைக்கிறேன்.
ஏனெனில் பா.ரஞ்சித் தான் செல்லவேண்டிய பாதையில் தன்னுடைய சினிமா மொழியில் தன்னுடைய இலக்கில் மிகுந்த நம்பிக்கையாகவும் தெளிவாகவும் உள்ளார் என்பதைக் காலா தெரிவிக்கிறது. வெறும் வணிக வெற்றி அல்லது வெறும் கலாபூர்வமான வெற்றியல்ல அவரது இலக்கு. சாதியொழிப்பு – இந்துத்துவ எதிர்ப்பு அரசியலுக்கான கருவிதான் அவருக்குச் சினிமா.
அதுக்காக அவர் திரையில் என்ன வேண்டுமானாலும் செய்வார், எப்படி வேண்டுமானாலும் படம் எடுப்பார் என்றுதான் தோன்றுகிறது. காலாவின் இறுதிக்காட்சியும் மாறிவரும் வண்ணங்களும் அதற்குச் சாட்சி!
ரஞ்சித்துக்கும், காலா உருவாக்கத்தில் பணியாற்றிய மற்றைய தோழர்களிற்கும் வாழ்த்துகள்!
ஆறுதலாக தங்கள் ஒவ்வொரு வரியையும் படித்து முடித்தேன். அருமை. நன்றி அண்ணா..
மிக அருமையான எழுத்து!! நன்றி ஷோபா!!
அழகான பதிவு! அடிப்படை பிரச்சனைகளை தெரிந்து கொள்ள வேண்டும், 2 புத்தகங்களை படித்துவிட்டு பிதற்றக்கூடாது, பிள்ளைகளை படிக்க வைங்க, பெண்ணை திருப்பி அடிக்கச்சொல்வது என்ற வசனங்கள்.. பலே!!
உங்கள் விமர்சனம் கொஞ்சம் அதிகப்படியானதாகத் தோன்றினாலும், நீங்கள் அதுபோன்ற ஆளில்லை என்பதால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. படம் பார்த்தபின் எழும் எண்ணங்களை உங்களோடு பகிர்வேன். நன்றி தோழர்
பராசக்தி வெளியாகி எழுபது வருடங்கள் காலா இன்னொரு பராசக்தி… அதனினும் மேலானது.இரஞ்சித் படம் இரஜினிஇரசிகர்களின் புனிதம் கேள்விக்குள்ளாகட்டும்
சரியான பார்வை; ரசனை.
சத்மியமாக கொண்டாடப்படவேண்டிய பதிவு மட்டுமல்ல பாதுகாக்க வேண்டியதும் கூட…பலமுறை வாசிக்கின்றேன்
அழுத்தமான ஒரு திரைக்கண்ணோட்டம்.
ரஜினி மீதான காழ்ப்புணர்ச்சி விமர்சனங்களை படித்து சலித்து எரிச்சலில் இருந்த எனக்கு இது பெரிய ஆறுதல்.இயக்குனர் றஞ்சித்தின் உழைப்புக்குஉங்கள் விருது இது.
article super