இலங்கையில் வன்முறைக்குள் வாழ்தல்

கட்டுரைகள்

அனைவருக்கும் வணக்கம்,

நாங்கள் இன்னும் சற்று நேரத்திலே பார்க்கயிருக்கும் Demoin in paradise என்ற ஆவணப்படம் 1980-களிலே ஸ்ரீலங்காவில் நிகழ்ந்த வன்முறைகள் பற்றிப் பேச இருக்கிறது. ஆனால் இந்த வன்முறை ஒன்றும் கடந்த கால கசப்பான ஞாபகங்கள் மட்டுமல்ல, இன்றுவரை இந்த வன்முறையும் வன்முறைக்குள் வாழ்வும் இலங்கையில் தொடர்ந்தவண்ணமே உள்ளன. இந்த வன்முறைத் தொடர்போக்கு இனியும் இலங்கையில் நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமான சூழலும் கிடையாது என்பதே வருந்தத்தக்க உண்மை.

இந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனமான முஸ்லீம்கள் மீது பவுத்த சிங்கள இனவெறியர்களால் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. முஸ்லீம்கள் அடித்து விரட்டப்பட்டு அவர்களது வீடுகளும் கடைகளும் எரிக்கப்பட்டன. ஒரு வாரமளவில் தொடர்ந்த இந்தத் தாக்குதலை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்த வல்லமையற்றிருந்தது என்பது பொய்யானதாகும். மிக நவீனமான பாதுகாப்புப் படையைக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா அரசு இந்த வன்முறையைக் கையாள்வதில் பாராமுகமாயிருந்தது. பவுத்த -சிங்கள இனவாதிகள் பகிரங்கமாக முகப்புத்தகங்களில் ஸ்டேட்டஸூம் லைஃவ்வும் போட்டவாறே இந்த வன்முறைகளை நிதானமாக நடத்தி முடித்தார்கள்.

இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னாக இத்தகைய தொடர் வன்முறைகளை சிறுபான்மை தேசிய இனங்கள் சந்திப்பதற்கான முக்கிய காரணம் இலங்கையை எப்போதுமே சிங்கள இனவாத நோக்கும் பெரும்பான்மை சிங்கள இனமக்களிற்கு முன்னுரிமை வழங்கும் நோக்கமும் கொண்ட அரசுகளே ஆள்வதாகும். இந்த வன்முறைகளிற்கு இலங்கை அரசினதும் அதிகாரவர்க்கத்தினதும் ஆயுதப்படையினதும் மறைமுக ஆதரவும் – சில சமயங்களில் வெளிப்படையான ஆதரவும் கிடைத்தே வந்துள்ளன.

இப்போது இந்த ஆவணப்படத்தை ஒட்டிச் சிலவற்றைப் பேசுகிறேன். இலங்கை சுதந்திரமடைந்ததற்குப்  பின்னான பத்தாண்டுகளிற்குள்ளேயே சிங்கள இனவாதிகளால் சிறுபான்மை இனங்கள்மீது கும்பலான ஆனால் ஒழுங்கமைத்த வன்முறைகள் நிகழத் தொடங்கிவிட்டன. 1956, 1958, 1977,1981, 1983 என இவ்வன்முறைகள் நிகழ்ந்தன. 1983வது வருட வன்முறையைத் தொடர்ந்து மிகப் பெரிய உள்நாட்டு யுத்தம் நடந்தது. இந்தப் போரின் போது இலங்கை அரசு மிகத் தெளிவாக, சிறுபான்மை தேசிய இனமான தமிழர்கள் செறிந்து வாழும் நாட்டின் வடக்கு- கிழக்குப் பகுதிகளில் சிறுகச் சிறுக இனப்படுகொலையை நிகழ்த்தத் தொடங்கி 2009-ல் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை அரசின் ஆயுதப்படைகள் கொன்றொழித்தன.

சர்வதேச நிறுவனங்கள் 2009-ல் கொல்லப்பட்ட தமிழ் சிவிலியன்களின் எண்ணிக்கை 40 000 அளவிலிருக்கலாம் எனக் குறிப்பிட்டாலும் உண்மையில் இழப்பு இதைக்காட்டிலும் அதிகமாகவே இருக்கலாம் என்றே இந்தப் படுகொலை வளையத்திற்குள் சிக்கியிருந்த மக்களின் சுய சாட்சியங்களின்படி தெரியவருகின்றது. இந்த இழப்புகளிற்குச் சரியான கணக்கு எவரிடமுமில்லை. இது குறித்து பிரிட்டிஷ் பத்திரிகைளார் ஃபிரான்ஸிஸ் ஹாரிஸன் 2012 -ல் எழுதிய நுாலுக்கு Still Counting the Dead என்று பெயர். ஆனால் இப்போது யாரும் Counting பண்ணும் முயற்சியில் இல்லையென்பதே உண்மை. கொல்லப்பட்டவர்கள் இன்னும் உயிரோடு இருப்பார்கள் என்ற தாய்மையின் மிகை நம்பிக்கையில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளைத் தேடியும் மனைவிகள் தங்களது கணவர்களைத் தேடியும் குழந்தைகள் தமது பெற்றோர்களைத் தேடியும் இலங்கை அரசினதும் சர்வதேச நீதித்துறையினதும் கதவுகளைத் தட்டியபடியே இருக்கின்றனர். அனைத்துக் கதவுகளும் இறுக அடைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்காவில் அரசிற்கு எதிராக முதலில் ஆயுதம் ஏந்தியவர்கள் பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஜே.வி.பி. அமைப்பினர். அவர்கள் தமது கிளர்ச்சியின் நோக்கம் முதலாளிய அரசு முறையைத் துாக்கி எறிந்துவிட்டு தொழிலாள வர்க்க ஆட்சியமைப்பதே என்றார்கள். இந்த அமைப்பினரின் வன்முறைப் போராட்டத்தை அரசு வன்முறையாலேயே எதிர்கொண்டது. இந்த அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் 1971லும் 1989லும் பல்லாயிரக்கணக்கில் அரசால் கொன்றுதள்ளப்பட்டனர்.

எண்பதுகளில், தமிழ் இளைஞர்கள் தமிழர்களிற்கு எனத் தனிநாடு அமைக்கும் நோக்கத்துடன் ஆயுதப் போராட்டத்தைத் தொடக்கினார்கள். இந்தப் போராட்டம் 2009-ல் பல்லாயிரக்கணக்கான போராளிகளையும் தமிழ் பொதுமக்களையும் இலங்கை அரசு பல்வேறு உலக நாட்டு அரசுகளின் உதவியுடன் கொன்றொழித்து முடித்து வைக்கப்பட்டது.

அரசுகளுடைய, அதன் படைகளுடைய வன்முறை குறித்து உங்களிற்கு நான் அதிகம் விளக்க வேண்டியதில்லை. எந்த அரசுமே இந்த வன்முறைக்கு விலக்கில்லை. வளைகுடாநாடுகளில், சிரியாவில், தென் அமெரிக்காவில், ஆபிரிக்காவில் நடக்கும் யுத்தங்களில் அமெரிக்க – அய்ரோப்பிய யூனியனின் பங்கும் ஆயுத வழங்கலும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அமைதிப்படையாக, அய்.நா சமாதானப் படையாகச் சென்றவர்கள் கூட இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் மக்கள் மீது வன்முறைகளை நிகழ்த்தியுள்ளார்கள்.

இந்த அரசுகளை எதிர்த்துப் போராடும் அமைப்புகளும் வன்முறைப் போராட்டத்தைக் கையிலெடுக்கும்போது அது பெரும்பாலும் அரசிற்குச் சேதத்தைக் கொடுக்காமல் பாதிக்கப்பட்ட மக்களிற்கே அதிக இழப்பைக் கொண்டுவருகிறது. மாறாக அரச தரப்பும் அதிகாரவர்க்கமும் ஆயுதப்படையினரும் யுத்தங்களைக் கொண்டாடுகிறார்கள். யுத்தங்களின் மூலம் அவர்கள் எல்லையற்ற அதிகாரத்தையும் செல்வத்தையும் குவித்துவிடுகிறார்கள். அவர்களது அத்தனை முறைகேடுகளிற்கும் யுத்தம் ஒரு சாக்காகவும் திரை மறைப்பாகவுமுள்ளது.

இலங்கையில் தமிழ் இளைஞர்கள் அல்லது சிங்கள இளைஞர்கள் அரசிற்கு எதிராக ஏந்திய ஆயுதம் அப்பாவி மக்களை நோக்கியும் திரும்பியது. சனநாயகச் சக்திகளையும் பத்திரிகையாளர்களையும் எழுத்தாளர்களையும்  இந்த இளைஞர்களின் ஆயுதங்கள் வகைதொகையின்றி கொன்றுதள்ளின. வன்முறை அரசியலின் பண்பு இத்தகையதுதான். உரையாடலில் நம்பிக்கையற்று ஆயுதங்களை நம்புவது.

தமிழ் ஆயுத இயக்கங்கள் தமிழ் மக்களை நம்பியதைக் காட்டிலும் ஆயுதங்களை நம்பியதே அதிகம். மக்களை அரசியல் வழிப்படுத்தாமல் சனநாயக மக்கள் இயக்கங்களைக் கட்டாமல் மக்களை போருக்கு வளங்களையும் ஆட்களையும் குழந்தைகளையும் வழங்கும் சக்திகளாகவே கருதினார்கள். தமக்கு மற்றான அரசியல் நிலைப்பாடுகள் கொண்ட அமைப்புகளை வன்முறையால் துடைத்தெறிந்தார்கள். இதுதான் நாம் பார்க்கப் போகும் ஆவணப்படத்தின் பிற்பகுதிக் காட்சிகள்.

வன்முறை ஏதோ ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும்தான் விரிந்து கிடக்கிறது என நீங்கள் நம்பக்கூடாது. வன்முறை ஏற்றுமதியாளர்கள், வளர்ந்த நாடுகளிலேயே மையம் கொண்டுள்ளார்கள். சில மாதங்களிற்கு முன்பு பிரித்தானியாவிலிருந்து ஒரு ஆங்கிலப் பத்திரிகையாளர் என்னைப் பேட்டி கண்டார். அவர் என்னிடம் தன்னை ”நான் போரில்லா சூழலில் வளர்ந்தவன்” என்று அறிமுகப்படுத்தி நேர்காணலைத் தொடங்கினார். ”இல்லை உங்களின் சூழலில் போர் இருக்கிறது, நீங்கள் அதைக் கண்டுகொள்ள மறுக்கிறீர்கள்” என்றேன். போரிடும் ஓர் அரசாங்கத்தின் குடிமகனல்லவா அவர். அவரது அரசு நடத்தும் போரில் அவரிற்கு தார்மீகமாக எந்தப் பங்கும் இல்லையா என்ன!  சென்றவாரம் ஒரு ஃபிரஞ்சுப் பத்திரிகையாளரிடம் இலங்கை யுத்தத்தில் பாவிக்கப்பட்ட அதி நவீன ஆயுதங்களைப் பட்டியலிட்டுக்காட்டிவிட்டு “ஆனால் இலங்கையில் ஆயுதத் தொழிற்சாலையே கிடையாது” என்றும் சொன்னேன்.

இலங்கையில் கடந்த முப்பது வருடங்களில் மிக உக்கிரமான வன்முறைப் போராட்டம்  இனவாத அரசிற்கு  எதிராக நிகழ்த்தப்பட்டது. மூன்று தலைமுறைகளின் வாழ்வு சிதைக்கப்பட்டது. ஆனால் அந்தப் போரின் மூலம் அரசு மேலும் பலமடைந்ததும் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் வீழ்ந்ததும் அடிப்படை மனிதவுரிமைகள் அதல பாதாளத்திற்கு சரிந்ததுமே நடந்தேறின.

எந்தவொரு ஒடுக்குமுறைக்கும் எதிராக மக்களை அரசியல்ரீதியாக அணிதிரட்டிப் போராடுவதும் மக்களை அரசியல் உணர்மை மயப்படுத்துவதுமே முன்னோக்கிய வரலாற்று நகர்வாக இருக்குமேயொழிய வன்முறைப் போராட்டம் மக்களை மேலும் அழிவிற்குத் தள்ளும் என்பதே இலங்கை நமக்குத் தரும் பாடம். வன்முறை இன்றைய மனித நாகரிகத்திற்கு ஒவ்வாதது. இதை நான் போராட்டக் குழுக்களிற்கு மட்டும் சொல்லவில்லை! அரசு, காவற்துறை, நீதித்துறை எல்லாவற்றிற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

வன்முறைக்கு எதிராக வாழ்நாளெல்லாம் உறுதியாகப் போராடி வன்முறையாலேயே வீழ்த்தப்பட்ட காந்தியாரின் சொல் ஒன்றுடன் இவ்வுரையை முடிக்கிறேன்:

இலட்சியம் மட்டும் உன்னதமாக இருந்தால் போதாது, அதை அடையும் வழிமுறையும் உன்னதமாக இருக்க வேண்டும்.

1 thought on “இலங்கையில் வன்முறைக்குள் வாழ்தல்

  1. Good finishing //இலட்சியம் மட்டும் உன்னதமாக இருந்தால் போதாது, அதை அடையும் வழிமுறையும் உன்னதமாக இருக்க வேண்டும்.//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *