Nothing has really happened until it has been recorded
– Virginia Woolf
ஸர்மிளா ஸெய்யித்தின் ‘பெண் கத்னா’ குறித்த உரை, மலையக இலக்கியச் சந்திப்பில் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து பெண் கத்னா குறித்த விவாதம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. கூடவே இலக்கியச் சந்திப்புத் தொடரின் சனநாயகத்தன்மையும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
இன்று உலகம் முழுவதும் கத்னாவால் இருபது கோடிப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்குறியில் அமைந்திருக்கும் பாலியல் இன்ப நுண்ணுணர்வுக் குவியமான கிளிட்டோரிஸை (Clitoris) முழுமையாகவோ அல்லது பகுதியளவோ சிதைத்துவிடும் இந்தக் கொடுமையான சடங்கு பெண்களது பாலியல் வாழ்வையும் தனிநபர் ஆளுமையையும் சிதைத்துப்போடுவதுடன், அவர்களது வாழ்வு முழுவதும் உளவியல்ரீதியாக அவர்களை அலைக்கழிக்கிறது. வாரிஸ் டைரியின் தன்வரலாற்று நூலான பாலைவனப் பூ இக்கொடுமை குறித்த விரிவான ஆவணம்.
இலங்கையில் இந்தக் கத்னா கொடுமை முஸ்லீம் சமூகத்தில் மிக இரகசியமான முறையில் நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தமிழ் எழுத்துப் பரப்பில் முகமட் ஃபர்ஹான், ஸர்மிளா ஸெய்யித் போன்றவர்கள் தங்களது உரையாடல்களிலும் எழுத்துகளிலும் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமான இந்தக் கத்னா எதிர்ப்புக் குரல்களிற்கு மாறாக, பெண் கத்னா இஸ்லாம் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட கடமை என இஸ்லாமிய மத நிறுவனங்களின் குரல்கள் இலங்கையில் வலிமையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
இலங்கை முஸ்லீம்களில் பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், இஸ்லாமிய மத விவகாரங்களில் இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட, தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரசபையாகவும் இருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா “விருத்தசேதம் செய்வது எமது (ஷாபிஈ) மஃத்ஹபில் ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் வாஜிபாகும்” எனத் தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் பத்வா அறிவித்திருக்கிறது. வாஜிப் என்றால் வலியுறுத்தப்பட்ட கடமை எனப் பொருளாகிறது.
மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் “பெண்களுக்கு கத்னா செய்வது என்பது இஸ்லாமிய ஷரீஅத்தில் உறுதியாக கூறப்பட்ட விசயமாகும். இதில் சந்தேகப்பட வேண்டியத் தேவையில்லை. முஸ்லிம்கள் கத்னா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறும் பல ஹதீதுகள் வந்துள்ளன.” என ‘பெண்களுக்கு கத்னா செய்ய வேண்டுமா?’ என்ற கட்டுரையில் (mailofislam.com) இரக்கமற்றுக் குறிப்பிட்டுகிறார்.
மௌலவி அர்ஹாம் இஷானி பெண்களிற்கு கத்னா செய்தே ஆகவேண்டும் என இக்காணொளியில் உரையாற்றுவதை நாங்கள் காணலாம்.
மத நிறுவனங்கள் மட்டும்தான் கத்னாவை வலியுறுத்துகிறார்கள் என்றில்லை. சமூக அக்கறையாளர்களான எழுத்தாளர்கள் – இலக்கியவாதிகள் கூடக் கத்னாவை ஆதரிப்பதை நடந்துகொண்டிருக்கும் விவாதங்களில் நாங்கள் கண்ணுற்றோம். தமிழின் மிக முக்கியமான மூத்த எழுத்தாளரான ஆர்.எம் நௌஷாத் வெளிப்படையாகவே “கத்னா செய்யாதவர்களை மணம் செய்யோம்” என அறிவிக்கிறார் எனில், வேறுசிலர் “இது அருகிவரும் சடங்கு – இது குறித்தெல்லாம் விரிவான ஆய்வுகளில்லை” என்றெல்லாம் சொல்லி, கத்னாவை எதிர்த்து உரக்க ஒலிக்கும் குரல்கள்மீது தங்களது அதிருப்தியை வெளியிடுகிறார்கள்.
2
கத்னா எதிர்ப்புப் பேசுபவர்கள், உண்மையிலேயே அருகிப் போய் அங்கொன்றும் இங்கொன்றுமாயிருக்கும் வழக்கத்தை வேண்டுமென்றே பூதாகரப்படுத்திப் பேசுகிறார்களா? முதலில் இந்தக் கேள்வியைப் பரிசீலித்துவிடுவோம்.
பெண் மழலைகளின் குறியைச் சிதைத்துவிடும் கத்னா சடங்கு இலங்கை முஸ்லீம்களிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக அல்லாமல் கணிசமான அளவு தற்போதும் நடக்கிறது என முதலில் சொன்னவர்கள் ஸர்மிளாவும், முகமட் ஃபர்ஹானும், ‘ஆக்காட்டி’ இதழும் அல்ல. பொதுவெளியில் இது குறித்த உரையாடல் முதன்முதலாக மலையக இலக்கியச் சந்திப்பிற்குத்தான் பரிந்துரை செய்யப்பட்டதுமல்ல. கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இலங்கை ஊடகங்களாலும் சர்வதேச மனிதவுரிமைகள் அமைப்புகளாலும் இந்தப் பிரச்சினை பேசப்பட்டே வருகிறது. இலங்கையில் பெண் கத்னா வழக்கத்திலிருப்பதை அவை ஆய்வுக் கட்டுரைகள் வழியாகவும் செவ்விகள் வழியாகவும் ஆய்வறிக்கைகள் வழியாகவும் வெளியிட்டே வருகின்றன.
அவற்றில் சிலவற்றைத் தொகுத்துக்கொள்வோம். இதுவரை ஆய்வுகளில்லை, தரவுகள் இல்லை, எந்த ஆதாரத்தில் இவற்றைப் பேசுகிறார்கள் என்பவர்கள் இந்த அறிக்கைகளையும் கட்டுரைகளையும் கருத்தூன்றிப் படிக்க வேண்டுகிறேன். ( இந்த ஆய்வு முடிகள் ஒரேமாதிரியானவை அல்ல என்பதையும் முன்கூட்டியே குறித்துக்காட்டிவிடுகிறேன்.)
1. இலங்கையில் ‘கிளிட்டோரிஸ்’ சிதைப்புக் குறித்த ஆய்வும் தரவுகளும், அய்.நா. ஆணையம் (Economic and Social Commission for Asia and the Pacific) நவம்பர் 2012-ல் வெளியிட்ட அறிக்கையின் 47- 48- 49-வது பக்கங்களில் காணக்கிடைக்கின்றன.
2. Inter-Parliamentary Union வெளியிட்ட அறிக்கை இலங்கையில் கிளிட்டோரிஸ் சிதைப்பு நிகழ்வதைக் குறிப்பிடுகிறது.
3. United Nations Population Fund அறிக்கை.
4. HIDDEN VIOLENCE IN THE COMMONWEALTH – The Royal Commonwealth Society
5. இஸ்லாமிய சமூகவியல் அறிஞரும், Centre for Islamic Studies (CIS) -ஸின் தலைவருமான ஆசிப் உசைன் எழுதிய Sarandib: an ethnological study of the Muslims of Sri Lanka என்ற நுால் இலங்கையில் பெண் கத்னா வழக்கத்திலிருப்பதை சான்றுகளுடன் பேசுகிறது.
6. Bintari Hamza Zafar : Girls must be circumcised or they will grow up loose: Three Sri Lankan women talk about Female Genital Cutting
7. Nabila Shabbir : The Hidden Horrors of Female Genital Mutilation: A Comparative Exploration into the Prevalence of this Criminal Practice in SL and the UK
8. The Future of Asian Feminisms: Confronting Fundamentalisms :Curtailing women’s sexual power
9. Sunday times: She is much more than just a mother and wife
10. Renuka Senanayake: SRI LANKA-CULTURE: Mothers Watch as Daughters are Circumcised
மேலே, அறிக்கைகளும் ஆய்வுக் கட்டுரைகளுமாகப் பத்துப் பிரதிகளைத் தொகுத்துத் தந்துள்ளேன். ஆனால் நீங்கள் ஒரு விரல் சொடுக்கில் இணையத்தில் இதுபோன்ற பல பத்து அறிக்கைகளையும் கட்டுரைகளையும் கண்டடைய முடியும். குறிப்பாக, க்ளிட்டோரிஸ் சிதைப்புக்கு எதிராக அனைத்துலக அளவில் இயங்கிவரும் மனிதவுரிமை அமைப்புகள் – தொண்டு நிறுவனங்கள் அனைத்துமே இலங்கையில் அந்தக் கொடுமை வழக்கத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. நான் மேலே கொடுத்துள்ள எழுத்துப்பிரதிகளில் மூன்றை எழுதியிருப்பவர்கள் இலங்கை முஸ்லீம்களே. இவற்றோடு, பெண் கத்னாவுக்கு எதிராகத் தமிழில் பேசிவரும் அனார், உஸ்தாத் மன்சூர், லபீஸ் ஸாகீட், நஸீலா மொகைதீன், ஸர்மிளா ஸெய்யித், முகமட் ஃபர்ஹான், பாத்திமா மாஜிதா ஆகியோரின் குரல்களையும் இணைத்துப் பார்க்கலாம்.
மேற்கண்ட ஆய்வறிக்கைகள், கட்டுரைகள், தரவுகள், சுய வாக்குமூலங்கள் இலங்கையில் பெண் கத்னா இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக நிறுவிவிடுகின்றன. அதே வேளையில் இலங்கையில் இந்த வழக்கம் இல்லை என வாதிடுபவர்கள் அதற்கான எந்த ஆய்வையும் சான்றுகளையும் நம்முன் வைக்கவில்லை.
இதில் மிகவும் சிக்கலானது ‘இருக்கு ஆனால் இல்லை’ என்ற தொனியில் முன்வைக்கப்படும் வாதங்களே. இந்த விவாதத்தில் இந்தத் தரப்பின் முக்கிய குரலாக ஒலிக்கும் ரியாஸ் குரானாவை முன்வைத்து இந்தத் தரப்பை நாம் அணுகிப் பார்க்கலாம்.
ஆக்காட்டி இதழில் முகமட் ஃபர்ஹானோடு கிளிட்டோரிஸ் சிதைப்புக் குறித்து உரையாட முடிவெடுத்த வேளை, ஆக்காட்டி ஆசிரியர் தர்மு பிரசாத் இது குறித்து அறிய இன்னுஞ் சில முஸ்லீம் தோழமைகளை அணுகியிருந்தார். அவர்களில் ஒருவராக ரியாஸ் குரானா இருந்தார்.
ரியாஸ் குரானாவோடு நடந்த Messenger உரையாடலை பின்பொரு பொழுது விவாதமொன்றில் தர்மு பிரசாத் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த உரையாடலுக்கான சான்றுகள் இன்னுமுள்ளன.
ரியாஸ் குரானாவிடம் “கிளிட்டோரிஸ் துண்டிக்கும் வழக்கம் இன்னும் இலங்கையிலுள்ளதா?” எனத் தர்மு பிரசாத் கேட்டபோது ரியாஸ் குரானாவின் பதில் இவ்வாறு இருந்தது:
“ஆம் இலங்கை முஸ்லீம்கள் கிளிட்டோரிஸ் துண்டிக்கும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். இது அதிகாரத்தோடு தொடர்புடைய ஒரு விசயமல்ல, பண்பாட்டு ரீதியிலான ஒரு தொன்மையான நிகழ்வு. ஈழத்தைப் பொறுத்தமட்டில் ஒருவகையில் இது அவசியமானதும் கூட”.
ரியாஸ் குரானாவின் இந்த விளக்கம், கத்னா குறித்த உரையாடலை முகமட் ஃபர்ஹானுடன் செய்வதற்கான முக்கியத்துவத்தை எனக்கு வலியுறுத்திய காரணிகளிலொன்று. அடுத்தநாளே நேர்காணலைப் பதிவு செய்தேன்.
ஆனால் Messenger-ல் “ஈழத்தைப் பொறுத்தமட்டில் ஒருவகையில் இது (கிளிட்டோரிஸ் துண்டிப்பு) அவசியமானதும் கூட” என்ற ரியாஸ் குரானா அதற்குப் பின்பு பொதுவெளியில் வெளியிட்ட கருத்துகள் வேறுமாதிரியாக அமைந்தன. “நான் இதுபற்றி அறிந்திருக்கவில்லை, சிறுதுளி இரத்தம் எடுப்பதுபோல ஒரு சடங்கு நிலவுவதாக அறிகிறேன்..” என்றெல்லாம் சொன்னார். தனிப்பட்ட உரையாடலில் கத்னா ஆதரவும் பொதுவெளியில் கத்னா அருகிவிட்டது என்பதுமாக அவரது குரல் இருந்தது.
கத்னா அருகிவிட்டது எனச் சொல்லும் தரப்பு அதை நிறுவ முன்வைக்கும் சான்றுகள்தான் என்ன? ஸர்மிளாவையும் ஃபர்ஹானையும் நிராகரிக்கும் அதே சீற்றத்துடன் நான் மேலே தொகுத்துத் தந்த ஆய்வறிக்கைகளையும் வாதிட்டு நிராகரிக்க இவர்களால் முடியுமா? கத்னா வேண்டாம் எனச் சொல்லும் ஸர்மிளா ஸெய்யித்தையும் முகமட் ஃபர்ஹானையும் கேலி கிண்டலோடு எதிர்க்கும் இவர்கள் இந்த இருவரின் குரல் ஒலிக்கும்வரை கத்னா குறித்து ஏதாவது எழுதினார்களா? ‘அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா’வின் பத்வாவை எதிர்த்துப் பேசினார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. பெண் கத்னா கடமையென பத்வா விதித்திருக்கும் அதிகாரம் பொருந்திய மத நிறுவனமான ‘அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா’விற்கு எதிராகச் சிறுசொல்லும் பேசாதவர்கள், எளியவர்களான ஃபர்ஹானையும் ஸர்மிளாவையும் எதிர்த்துக் கலாட்டா செய்வதற்கான காரணம் என்ன? அதனை கத்னாவை ஆதரிக்கும் அல்லது மூடிமறைக்கும் தந்திரம் என நாம் புரிந்துகொள்ளலாகாதா?
சரி..இந்தக் கொடுமை இப்போது எத்தனை விழுக்காடு முஸ்லீம்களிடையே நிகழ்கிறது? இதற்கான பதில் சந்தேகமின்றி முன்பை விடக் குறைந்து வருகிறது என்பதுதான். இந்தக் குறைப்புக்கு மனிதவுரிமைகள் மீதான விழிப்புணர்வும், சிறிதளவிற்கு வஹாபிகளின் கத்னாவுக்கு எதிரான பரப்புரையும் காரணமாயிருக்கின்றன.
வஹாபிகளின் இந்த எதிர்ப்புக் குறித்து ‘ஆக்காட்டி’ இதழில் முகமட் ஃபர்ஹான் இவ்வாறுரைத்தார்:
“வஹாபிகள் மட்டுமே இந்தச் சடங்கை இலங்கையில் சமகாலத்தில் எதிர்த்துக்கொண்டிருக்கும் ஒரே தரப்பாகும். மற்றைய வலுவான முஸ்லீம் தரப்புகள் -குறிப்பாகத் தம்மை முற்போக்கெனப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் – ஜமாத் ஏ இஸ்லாமி, முஸ்லீம் பிரதர் கூட் (MFCD)போன்ற அமைப்புகள் இந்தக் காட்டுமிராண்டித்தனமான சடங்கு குறித்துப் பேசாமலேயே இருக்கிறார்கள். முஸ்லீம் சமூகத்திலுள்ள அறிவுஜீவுகள் மத்தியிலும் கல்விச் சமூகத்தின் மத்தியிலும் எழுத்தாளர்கள் மத்தியிலும் இச்சடங்கு குறித்து நீண்ட கள்ள மௌனமே இதுவரை சாதிக்கப்படுகிறது. வஹாபிகள் சிறுமிகள், பெண்கள் மீதுள்ள அக்கறையால் இச் சடங்கை எதிர்க்கவில்லை. ‘பித்ஹத்’ என்பதாலேயே எதிர்க்கிறார்கள். அதாவது இறைத்தூதர் செய்யாத, மொழியாத விடயமாக இந்தச் சடங்கை அவர்கள் பார்க்கிறார்கள். அதேவேளையில் இஸ்லாமியப் பெண்கள்மீது மட்டுல்லாமல் ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்தின் மீதும் வஹாபிகள் ஏராளமான அடக்குமுறைகளைத் திணித்துவருகிறார்கள் என்பதை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். ஆக கிளிட்டோரிஸ் துண்டிப்புக்கு எதிரான வஹாபிகளின் எதிர்ப்பு அவர்களிற்கும் சூஃபி மரபுக்கும் இடையேயான போரின் ஓர் அம்சமே தவிர பெண்களின் நலனுடன் தொடர்புடையதல்ல”.
கத்னா சடங்கு மிக இரகசியமான முறையில் பேணப்பட்டுவருவதால் இது குறித்த ஆய்வுத் தரவுகளால் ஒருமித்த துல்லியமான சதவீத முடிவுகளை எட்ட முடியவில்லை. ரேணுகா சேனநாயக்க தன்னுடைய ஆய்வில் (1996) தான் கருத்துக் கேட்டவர்களில் 90 விழுக்காடானவர்கள் கத்னாவிற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்கிறார். சில அறிக்கைகள் இலங்கை முஸ்லீம்களிடையே ஒரு பகுதியினரிடையே மட்டும் இது நிகழ்கிறது என்கின்றன.
இவற்றையெல்லாம் தொகுத்தாய்ந்து பார்க்கையில் இலங்கையில் கத்னா சடங்கு குறைந்துவருகிறது என்பது எவ்வளவு உண்மையோ, அதேயளவிற்கான உண்மைதான் கணிசமான அளவு அது தற்போது நடைமுறையிலிருக்கிறது என்பதும்.
ஒருவகையில் இதைப் பொருத்தம் கருதிக் குடும்ப வன்முறை சதவீதத்துடன் ஒப்பிடலாம். குடும்பத்தில் பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் நிகழ்த்தப்படும் வன்முறைகள் நம் சமூகத்தில் முன்பை விடக் குறைந்திருப்பது உண்மையே. அதேபோல அது தற்போதும் கணிசமாக நிலவி வருவதும் உண்மையே.
இதுபோன்ற நாடுதழுவிய சிக்கலான விவகாரங்களில் பரந்துபட்ட கள ஆய்வுகளையும், சான்றுகளோடு கூடிய எழுத்துகளையும், பொறுப்புக் கூறக்கூடிய அனைத்துலக நிறுவனங்களின் அறிக்கைகளையும் உள்வாங்கி அறிந்து நாம் ஒரு முடிவை எட்டாலாமேயொழிய, ஒரு தனிநபர் தன் அனுமானப்படியோ அல்லது அவர் தனது கிராமத்திற்குள் நான்கு பேரைச் சந்தித்து உரையாடிச் சொல்லும் கருத்தையோ நாம் வலுவான ஆதாரமாகக் கொள்ள முடியாது.
எடுத்துக்காட்டாக, இலங்கையில் இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களை அறிந்துகொள்ள முயலும் ஒரு தனிநபர், எனது சொந்தக் கிராமமான அல்லைப்பிட்டிக்குச் சென்று ஓர் ஆய்வைச் செய்தால், அங்கே இந்தியப் படைகளால் ஒரு கொலையோ வல்லாங்கோ செய்யப்படவில்லை என்ற செய்தியைப் பெறுவார். ஏனெனில் அங்கே அப்படி எதுவும் உண்மையிலேயே நடக்கவில்லை. அந்தச் செய்தியின்படி இலங்கையில் இந்தியப்படை வல்லாங்கிலோ கொலையிலோ ஈடுபடவில்லை என்ற முடிவுக்கு நாம் வந்தால் அது தவறு. இலங்கையின் மற்றைய பகுதிகளின் வாக்குமூலங்கள், முறிந்தபனை போன்ற ஆய்வு நுால்கள், அனைத்துலக மனிதவுரிமை நிறுவனங்களின் அறிக்கைகள் ஆகியவற்றை நாம் உள்வாங்கி அறியும்போதுதான் இலங்கையில் ஆயிரக்கணக்கில் இந்தியப் படை கொலைகளையும் வல்லாங்குகளையும் நிகழ்த்தியிருப்பதை நாம் கண்டடைய முடியும்.
இதற்கெல்லாம் அப்பால், ஒரேயொரு குழந்தையின் பெண்குறி சிதைக்கப்பட்டாலும் அதற்கெதிரான எதிர்ப்பும் உரையாடலும் நிகழ்த்தப்பட்டேயாக வேண்டும். பெண் கத்னா முற்றாக ஒழியும்வரை நாம் நமது தீவிரமான எதிர்ப்பையும் பரப்புரையையும் நிகழ்த்த வேண்டும். இந்த எதிர்ப்புக்கும் பரப்புரைக்கும் எதிராக இனவாதம், மதவாதம், தேசியவாதம், கலாசாரம் என எது நின்றாலும் நாம் பணிந்துவிடலாகாது. நான்கு வருடங்களிற்கு முன்பாக மூதூர் இளம்பெண் ரிஸானா நஃபீக்கின் தலை சவூதி அரேபிய அரசால் துண்டிக்கப்பட்டபோது நாமெல்லாம் ஒன்றுசேர்ந்து கிளர்ந்தெழுந்தோமே…அதுபோல!
3
மேற்குறித்த பின்னணியில், மலையக இலக்கியச் சந்திப்பில் கத்னா குறித்த ஸர்மிளா ஸெய்யித்தின் உரை தவிர்க்கப்பட்டதன் மீதான எனது கருத்தை இலக்கியச் சந்திப்புத் தொடரில் நீண்டகாலமாகப் பங்கெடுப்பவன் என்ற முறையில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள என்னை அனுமதியுங்கள்.
இந்த உரை தவிர்க்கப்பட்டதன் காரணத்தை நேர்மையுடன் அறிவித்திருக்க வேண்டிய மலையக இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக் குழு இன்றுவரை அதைச் செய்யவில்லை. இப்போது அந்தக் குழு கலைக்கப்பட்டுவிட்டதால் இனி எப்போதுமே நமக்கு அந்தக் காரணம் கிடைக்கப்போவதில்லை. தன்னுடைய பொறுப்பிலிருந்து நழுவியிருக்கும் ஏற்பாட்டுக் குழுவின் செய்கை கண்டனத்திற்குரியது.
இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவினரிடையே இது குறித்து நிகழ்ந்த மின்மடல் உரையாடல்களை ரியாஸ் குரானா இப்போது வெளியிட்டுள்ளார். அந்த மின்மடல் உரையாடல்களைச் சான்றுகளாகக் கொண்டே எனது பார்வையை இங்கே பதிவு செய்கின்றேன்.
மலையக இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவில் முஸ்லீம்கள் அய்வராகவும் மிகுதிப்பேர் தமிழர்களாகவும் இருந்து செயற்பாடுகளையும் உரையாடல்களையும் முன்னெடுத்திருக்கிறார்கள். வெளியிடப்பட்ட மின்மடல் உரையாடல்களின்படி, செயற்பாட்டாளர்களில் ஒருவரான லறீனா அப்துல் ஹக் தயாரித்து, மற்றச் செயற்பாட்டாளர்களிற்கு யூலை – 7ம் தேதி அனுப்பிய மாதிரி நிகழ்ச்சி நிரலில் பெண்ணிய அரங்கில் ‘கத்னா உரையாடல்’ நிகழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்த மடலில் செயற்பாட்டாளர்களில் ஒருவரான லுணுகலை ஸ்ரீ “விஜியின் கோரிக்கையின்படி கத்னா குறித்துப் பேச ஸர்மிளா ஸெய்யிதைக் கேட்டோம் , ஸர்மிளா சம்மதம் தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிடுகிறார்.
இதிலிருந்துதான் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. ‘கத்னா பிரச்சினையில் ஒருவரின் குரலை மட்டும் ஒலிக்கச் செய்வது சரியற்றது, இந்தப் பிரச்சினையைப் பன்மைத்துவக் குரல்களோடு தனியரங்கில் ஒலிக்கச் செய்யவேண்டும்’ என்கிறார்கள் ஏற்பாட்டுக் குழுவிலிருந்த முஸ்லீம்கள்.
இந்தக் கருத்தைப் பரிசீலித்த இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக்குழுவின் மற்றையவர்கள் ஏ.பி.எம். இத்ரீஸோடு உரையாடியதன்படி, பெண்ணிய அரங்கில் “மரபு கருத்துரிமை பெண்ணியம்” என்ற தலைப்பில் ஏ.பி.எம். இத்ரீசும் ஸர்மிளாவோடு பேசுவதாக ‘மாதிரி நிகழ்வு நிரல்’ திலகரால் தயாரிக்கப்பட்டு, யூலை – 9ம் தேதி மற்றவர்களிற்கு அனுப்பிவைக்கப்படுகிறது. அதாவது பெண்ணிய அரங்கில் ஓர் ஆண். அதுவும் கிளிட்டோரிஸ் துண்டிப்புக்கு எதிரான ஸர்மிளாவின் உரைக்கு மாற்றுத்தரப்பு.
ஆனால் இங்கும் சிக்கலே. பெண்ணிய அரங்கில் உரையாற்றும் இன்னொரு ஆளுமையான ஷாமிலா முஸ்டீனுடன் அரங்கைப் பகிர்வதில் தனக்கு அசெளகரியம் இருப்பதாக இத்ரீஸ் தெரிவித்து விலகிக்கொள்கிறார். நியாயப்படி, ஓர் ஆணுடன் பெண்ணிய அரங்கைப் பகிர்ந்துகொள்வதில் அசெளகரியம் உள்ளதெனச் சொல்லிப் பெண்ணிய அரங்கிலிருந்த அய்ந்து பெண்களும்தான் எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும்.
இப்போது ஏற்பாட்டுக் குழு இன்னும் விட்டுக்கொடுக்கிறது. நீண்ட மின்மடல் உரையாடல் பரிமாற்றங்களிற்குப் பிறகு ஏற்பாட்டுக்குழுவின் மலையகப் பிரதிநிதியான திலகர் ஒரு பரிந்துரையை முன்மொழிகிறார்.
கத்னா குறித்த உரையாடலை இரண்டு மணிநேரங்களாக நீடிப்பதாகவும், ஸர்மிளாவோடு இன்னும் அய்வர் உரையாற்றலாமெனவும், உரையாடும் மற்ற அய்வரையும் ஏற்பாட்டுக் குழுவிலிருக்கும் முஸ்லீம் தோழர்களே தீர்மானிக்கலாம் எனவும் திலகர் குறிப்பிடுகிறார்.
இங்கே தவிர்க்க முடியாத பிரச்சினையாக நேரப் பிரச்சினை எழுகிறது. ஏற்கனவே யூலை 7-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட முன்வரைவு நிகழ்ச்சி நிரலில் கத்னா உரையாடலுக்கு ஒதுக்கப்பட்ட 15 நிமிடங்கள் இப்போது 120 நிமிடங்களாகின்றன. இந்த நேரப் பற்றாக்குறையை சரி செய்ய திலகர் ஒரு தீர்வை முன்வைக்கிறார். முன்வரைவு நிகழ்ச்சி நிரலில் தனக்கும் கருணாகரனுக்கும் தேவதாசனுக்கும் ஒதுக்கப்பட்ட நேரங்களைத் தாங்கள் கத்னா உரையாடலுக்காக விட்டுத்தருவதாகவும் அதேபோல ரியாஸ் குரானாவும் லறினாவும் இத்ரீசும் வேறு நிகழ்ச்சிகளிற்காக ஒதுக்கப்பட்ட தங்களது நேரங்களைவிட்டுத் தந்து கத்னா உரையாடலில் பங்கெடுக்குமாறு திலகர் கேட்கிறார்.
திலகரின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஏற்பாட்டுக் குழுவிலிருந்த அய்ந்து முஸ்லீம் தோழர்களும் நிகழ்வு நிரலை மாற்றுவதற்கு உடன்பட முடியாதெனவும் கத்னா உரையாடலை இடம்பெறச் செய்யுமாறு நாங்கள் வலியுறுத்தவில்லை, ஆகவே எங்கள் நேரங்களை விட்டுத்தர முடியாது எனவும் கூறி அய்வரும் ஒருமித்து ஏற்பாட்டுக் குழுவிலிருந்து வெளியேறித் தங்கள் வெளியேற்றத்தைப் பொதுவெளியில் அறிவிக்கிறார்கள். சமரசம் எட்டப்பட முடியாமலேயே போயிற்று.
4
இதுவரையான இலக்கியச் சந்திப்புகளில் கருத்தாளர் ஒருவருக்கு 15 -20 நிமிடங்கள் வழங்குவதே பொதுவான நடைமுறை. பெண்ணிய அரங்கிலும் அவ்வாறு ஸர்மிளாவிற்கு நேரம் வழங்கப்பட பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் ஸர்மிளாவின் ஒற்றை உரையை மட்டும் அனுமதிக்க முடியாது என்ற வாதத்தில் எதுவும் நியாயங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இலக்கியச் சந்திப்பில் யாரும் எந்தத் தலைப்பிலும் பேசக் கேட்கலாம். யாரும் யாரையும் பரிந்துரைக்கலாம். பேசுபொருள் தீவிரமானதா, அதைப் பேசுபவர் அதற்குப் பொருத்தமானவரா என ஆலோசித்து இறுதி முடிவுகளை எடுப்பது அந்தந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டுக் குழு. இதுவே நடைமுறை.
கத்னா தீவிரமான பிரச்சினை. பெண் மழலைகளின் குறிகள் சிதைக்கப்படுவது குறித்த உரையாடலை இலக்கியச் சந்திப்பின் பெண்ணிய அரங்கில் பேசாமல் வேறெங்கு போய்ப் பேசுவது? தொடர்ந்து அதைப் பற்றிப் பேசி வருபவரும், கத்னாவால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண்கள் சமூகத்தினுள்ளிருந்து வருபவருமான ஸர்மிளாவிற்கு இலக்கியச் சந்திப்பில் அது குறித்து உரை நிகழ்த்த முழு உரிமையுமிருக்கிறது. வேறெந்தக் காரணங்களின் பொருட்டும் இந்த உரிமையை இலக்கியச் சந்திப்பு நிராகரிக்கலாகாது.
ஆனால் இங்கே நடந்தது வேறு. ஸர்மிளா பேசுவதானால் மற்றைய தரப்புகளும் பேச வேண்டும் என நிபந்தனை வைக்கப்படுகிறது. அது நடக்காவிட்டால் நாங்கள் ஏற்பாட்டுக் குழுவிலிருந்து வெளியேறிவிடுவோம் என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்த அழுத்தத்திற்கு பணிந்து ஒரு தீர்வு முன்வைக்கப்படும்போது அதை ஏற்றுக்கொள்ளாமல் ”நாங்களா கத்னா குறித்துப் பேசக் கேட்டோம்?” என்ற கேள்வியோடு ஏற்பாட்டுக் குழுவிலிருந்து வெளியேற்றமே நடந்துவிடுகிறது.
இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கையில் ஏற்பாட்டுக் குழுவிலிருந்து வெளியேறிய தோழமைகளிற்கு கத்னா குறித்த உரையாடலை இலக்கியச் சந்திப்பில் முன்னெடுப்பதில் பெரிதாக ஆர்வமில்லாமல் இருந்தது என்பதும், அதேவேளை ஸர்மிளா செய்யித் கத்னா குறித்து உரையாற்றக் கூடாது என்பதில் அவர்களிற்கு உறுதியான கருத்திருந்தது என்பதும் தெளிவு.
தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் “இலக்கியச் சந்திப்பு தமிழ் – முஸ்லீம் முரண்பாடுகளை வளர்க்கிறது, பொதுபலசேனாவின் ஆதரவாளர்கள் இலக்கியச் சந்திப்பிற்குள் புகுந்திருக்கிறார்கள், வெளிநாட்டுச் சக்திகள் இலக்கியச் சந்திப்பைக் கட்டுப்படுத்துகின்றன” என்ற அவதுாறுகள் அறம்புறமாக கிளப்பிவிடப்பட்டன. வெளியேறியவர்கள் போக எஞ்சியிருந்த ஏற்பாட்டுக் குழு இந்த அவதுாறுப் பிரச்சாரங்களிற்குப் பயந்து கத்னா குறித்த உரையாடலே இல்லாமல் இலக்கியச் சந்திப்பை நடத்தி முடிந்தது. இது இலக்கியச் சந்திப்பு வரலாற்றில் நடந்த மோசமான தவறுகளில் ஒன்றாகக் குறித்துக்கொள்ளப்படும். இலக்கியச் சந்திப்பு அரங்கிலேயே ஏற்பாட்டுக் குழுவில் ஒருவரான கருணாகரன் “இது தோல்வியடைந்த இலக்கியச் சந்திப்பு” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
5
பெண் மழலைகளின் குறிகளைச் சிதைக்கும் வழக்கத்திற்கு எதிராக, பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து ஸர்மிளா ஸெய்யித் 15 நிமிடங்கள் உரையாற்றியால் அப்படியென்ன தமிழ் – முஸ்லீம் இன முண்பாடு நிகழ்ந்துவிடப் போகிறது? இலக்கியச் சந்திப்பிலும் இதைப் பேசாவிட்டால் எங்கு சென்றுதான் இதைப் பேசுவது? 15 நிமிட ஸர்மிளாவின் உரை, கத்னாப் பிரச்சினையை இலக்கியச் சந்திப்பில் முன்வைப்பதற்கான ஒரு தொடக்க உரையாக அமைவதால் யாருக்கு என்ன கேடு? கிளிட்டோரிஸ் சிதைப்பை ஆதரிப்பவர்களையும் மூடி மறைக்க விரும்புவர்களையும் தவிர மற்றவர்கள் ஸர்மிளாவின் உரையை எதிர்க்க ஏதாவது காரணமுள்ளதா?
இதில் கவனம் கொள்ள வேண்டிய முக்கிய புள்ளியாக நான் கருதுவது, கிளிட்டோரிஸ் சிதைப்புக்கு எதிரான குரல்களிற்கு களம் அமைத்துக்கொடுப்பதே இலக்கியச் சந்திப்பின் கடமையே அல்லாமல் எதிரான குரலை எதிர்ப்பவர்களிற்குப் பன்மைத்துவம் என்ற பெயரில் மேடையமைத்துக் கொடுப்பதல்ல. அத்தகைய குரல்களிற்கு களம் அமைத்துக்கொடுக்க ‘அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா’வும் இன்னும் பல பிற்போக்கு மத நிறுவனங்களுமுள்ளன. இப்படியெல்லாம் சுரணைகெட்ட பச்சைத்தண்ணிப் பன்மைத்துவத்தை இலக்கியச் சந்திப்புக் கட்டிக் காக்க நினைத்தால் சாதியை எதிர்க்கும் குரல்களிற்கு மாற்றுக்குரல்கள், இனவாதத்தை எதிர்க்கும் குரல்களிற்கு மாற்றுக்குரல்கள், பெண்விடுதலைக் குரல்களிற்கு எதிரான மாற்றுக் குரல்கள் என்றெல்லாம் நாம் மேடை அமைத்துக்கொடுக்க நேரிடும்.
இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவிலிருந்து வெளியேறிய தோழர்கள் தாங்கள் வெளியேறியதற்கான காரணத்தைத் தெரிவித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை குறித்தும் சில சொற்கள்:
விஜியையும் தேவதாசனையும் அசுராவையும் ஏதோ இவர்களிற்கு முன்னே பின்னே தெரியாதது போலவும், அவர்களது அரசியலைத் தெரியாதது போலவும், ‘பொதுபலசேனா – இனவாதிகள் – தமிழ் X முஸ்லீம் முரண்பாடு’ எனக் கரித்துக்கொட்டுவதெல்லாம் உண்மையிலேயே நியாயமானவைதானா? இலங்கைக்கு இலக்கியச் சந்திப்புத் தொடர் வருவதற்கும், ஏற்கனவே இரண்டு சந்திப்புகளை யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நிகழ்த்துவதற்கும் இந்த மூவரும் முன்னின்று உழைத்தார்கள் என்பதும் இவர்களிற்கு தெரியாதா? அப்போதில்லாத தமிழ் இனவாதமும் வெளிநாட்டுச் சதியும் பொதுபலசேனாத்தனமும் இப்போது கத்னா உரையாடலை விஜி முன்மொழிந்ததாலும் தேவதாசன் அந்த உரையாடலுக்கு நேரத்தை விட்டுத்தர முன்வந்ததாலும் இப்போது அவர்களிடம் வந்துவிட்டதா?
ஸர்மிளாவின் பெயரை விஜி எப்படி முன்மொழியலாம்? என்பது இன்னொரு பயங்கரக் கேள்வி. அதற்கு விஜி பெண்ணாயிருக்கும் ஒரு காரணம் போதாதா! தன் சக மனுஷிகள் மீது நடத்தப்படும் வன்முறை குறி்த்து விஜி அக்கறைகொண்டால் அது புலம்பெயர் சதியா?
விஜி கடந்த 25 வருட காலமாக இலக்கியச் சந்திப்புச் செயற்பாட்டாளர். பெண்ணியவாதி, எழுத்தாளர், இதழாளர், பெண்கள் சந்திப்புத் தொடரின் முதன்மைச் செயற்பாட்டாளர். இவருக்கு இலக்கியச் சந்திப்புத் தொடரின் பெண்ணிய அரங்கில் ஒரு நிகழ்வை முன்மொழியவோ, ஆளுமையை முன்மொழியவோ என்ன தடை? இவரது முன்மொழிவை வெறுமனே தமிழ் X முஸ்லீம் முரண்பாடு எனச் சொல்லியா எதிர்கொள்வீர்கள்?
அடுத்ததாக, ‘கத்னா உரையாடல்’ புலம் பெயர்ந்தவர்களின் அழுத்தமே எனவும் ஒரு குற்றச்சாட்டு. எங்களால் உண்மையிலேயே அழுத்தம் கொடுக்க முடிந்திருந்தால், அய்வர் அணி ஏற்பாட்டுக் குழுவை விட்டு விலகிய பின்னாக கத்னா உரையாடலை சந்திப்பில் இடம்பெறச் செய்திருப்போமே. அது நடக்கவில்லையே. எங்களால் முடிந்ததெல்லாம் வழமைபோலவே ஒரு வேண்டுகோள் கூட்டறிக்கையைத் தயார் செய்ததுதான். அதுதான் எங்களிற்கு கைவந்த கலை. எங்களது ஃபவரும் அவ்வளவுதான்.
முஸ்லீம் சமூகத்தின் உள்ளடுக்கில் இருக்கும் கத்னா பிரச்சனையை இப்போது பொது வெளியில் பேசுவது பொதுபலசேனா போன்ற அமைப்புகளிற்கு வாய்ப்பாகப் போய்விடும் என்றொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. கொஞ்சம் சரியான வாதம் போல இது தோற்றமளிக்கிறது. ஆனால் இந்த வாதத்திற்கு இன்னொரு பக்கமுமுண்டு.
இந்த வாதத்தைச் சொல்பவர்களிற்கு, கத்னாவால் பாதிக்கப்பட்டு நாளை நடைப்பிணமாகத் திரியப்போகும் ஆயிரக்கணக்கான சிறுமிகளின் எதிர்காலத்தைவிட, இதை வைத்துப் பொதுபலசேனா அடையப்போகும் அரசியல் இலாபம்தான் பெரிதாகப்படுகிறதா? இந்த கத்னா வழக்கத்தை ஒழித்துக்கட்டி பொதுபலசேனாவை எதிர்கொள்ளப் போகிறோமா? அல்லது இந்தக் கொடிய சடங்கை மூடிவைத்துப் பாதுகாத்து பொதுபலசேனாவை எதிர்கொள்ளப் போகிறோமா?
எல்லோருக்கும் தெரிந்த ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லலாம். தலிபான்களை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது. அதேவேளை அனைத்துலக இடதுசாரி சனநாயகச் சக்திகளும் தலிபான்களைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந்த எதிர்ப்பு அமெரிக்காவிற்குச் சாதகமாகப் போய்விடும் என்பதற்காக இடதுசாரிகள் தங்களது தலிபான் எதிர்ப்பைக் கைவிட வேண்டும், அவர்கள் தலிபான் எதிர்ப்புப் பேசக் கூடாது என்பது என்ன நியாயம்?
சில ஆண்டுகளிற்கு முன்பு, தென்னாபிரிக்காவின் டார்பன் நகரில் சர்வதேச இனவெறி எதிர்ப்பு மாநாடு நடந்தபோது, இந்தியாவிலிருக்கும் சாதி ஒடுக்குமுறை குறித்து அந்த மாநாட்டில் கவனம் குவிக்க இந்தியாவிலிருந்து தலித் அமைப்புகளும் தன்னார்வ அமைப்புகளும் முயற்சி செய்தன. ஆனால் இந்திய சாதியவாதச் சக்திகளும் அரசும் அதை எதிர்த்தன. உள்வீட்டுப் பிரச்சினையை வெளியே பேசக்கூடாது என்றனர். இப்போது சாதிப் பாகுபாட்டைக் குற்றமாக வரையறுத்துச் சட்ட அமலாக்கம் செய்யப் பிரித்தானிய அரசு முயன்றுவருகின்றது. ஆனால் குடியேறிச் சமூகத்தின் ஆதிக்க சாதித் தரப்புகள் இந்தச் சட்ட மூலத்தைக் கடுமையாக எதிர்த்து நிற்கின்றன. அப்படியெல்லாம் சாதிப்பாகுபாடு தம்மிடையே கிடையாதென அவர்கள் அழிவழக்காடுகின்றனர். 2016- ல் ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சாதியப் பாகுபாடுகள் பற்றிய விமர்சனம் இருந்தது. அதற்கு இந்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது. இவையெல்லாம் சரியென்றால் மட்டுமே கத்னா குறித்து நாமும் அய். நா. போன்ற அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பேசாமல் வாயை மூடிக்கொண்டிருக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எழுந்த இன்னொரு குற்றச்சாட்டு கத்னா பிரச்சினையை ‘முஸ்லீம் அல்லாதவர்கள்’ எப்படிப் பேச முடியும் என்பதாகும். முதலில் முஸ்லீம்கள் அதைப் பேசுவதற்கே இங்கே பல்வேறு மறைமுகத் தடைகளுள்ளன என்பதை நடந்து முடிந்த சம்பவங்கள் நிரூபித்துள்ளன என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தென் தமிழகத்திலும் குறிப்பாக காயல்பட்டினம், அதிராம்பட்டினம், கீழக்கரை போன்ற பகுதிகளில் பெண் கத்னா சடங்கு இப்போதும் தொடர்வதாக பி.ஜெய்னுல் ஆபிதீன் பேசும் காணொளியொன்றை முன்னர் பதிவிட்டிருந்தேன். ஹெச்.ஜி. ரசூல், தென் தமிழகத்தின் சில பகுதிகளில் இந்தக் கொடிய சடங்கு இப்போதும் நடக்கிறதெனச் சில நாட்களிற்கு முன்பு பதிவிட்டிருந்தார். இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் இதைப் பேசுவதற்குப் பெருத்த தடைகளுள்ளன. அந்தத் தடையை உடைத்துப் பேசுபவர்களோடு நானிருக்கிறேன். இதைச் செய்வதற்கு அடிப்படை மனிதாபிமானமே போதுமானது. வேறொன்றும் விசேட இன – மத – பால் தகுதிகள் இதற்குத் தேவையில்லை.
ஈழ யுத்த காலத்தில் குழந்தைகள் போர்முனைக்குப் புலிகளால் கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்டபோது, புலிகள் அப்படியெல்லாம் எதுவும் இல்லவே இல்லை என்றார்கள். புலி விசுவாசிகளும் அதற்கு ஒத்து ஊதினார்கள். பிடித்துச் செல்லப்படும் குழந்தைகள் குறித்த சரியான தரவுகளோ சதவீதங்களோ அப்போது நம்மிடம் இல்லாமற்தானிருந்தன. (புலிகளிடம் அவை இருந்தன என்பது வேறு). தமிழ்ச் சமூகம் அப்போது இது கொடுத்துக் குரல்கொடுக்கவோ ஆய்வு செய்யவோ திராணியற்றுத்தான் கிடந்தது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) 2004 -ல் வெளியிட்ட அறிக்கையான Living in Fear : Child Soldiers and the Tamil Tigers in Sri Lanka மூலமே இந்த வஞ்சிக்கப்பட்ட குழந்தைகளின் பிரச்சினை சர்வதேச அளவில் கவனத்திற்கு வந்தது. ஒரு சமூகத்திற்குள் உள்ளிருக்கும் பிரச்சினையில் வெளித் தலையீடுகள் நிகழ்வது எல்லாத் தருணங்களிலுமே தவறாக இருந்துவிட முடியாது என்பதைக் குறித்துக்காட்டத்தான் இவ்வறிக்கையை நான் சுட்டினேனே தவிர கட்டாயப் பிள்ளைபிடிப்பையும் கத்னாவையும் நான் நேர்கோட்டில் வைத்து அணுகுகிறேன் என இதைப் பொருள் கொள்ள வேண்டியதில்லை. அதேவேளையில் பாரிய மனிதவுரிமைப் பிரச்சினை என்ற வரையறைக்குள் இந்த இரு பிரச்சினைகளும் உலகளவில் கையாளப்படுகின்றன. கத்னாவால் பாதிக்கப்படுபவர்கள் வேறு நாடுகளில் புகலிடம் கோரும் உரிமையை UNHCR உறுதி செய்கின்றது.
29.11.1947 – ‘விடுதலை ‘ இதழில் தந்தை பெரியார், கோஷா (பர்தா) முறை ஒழிய வேண்டும் என எழுதிய தலையங்கத்தை இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமே. பர்தா முறை குறித்து அவர் சொன்னது கத்னாவிற்கும் பொருந்தித்தான் போகிறது. பெரியார் எழுதினார்:
பழைமை விரும்பிகளின் திருப்திக்காக மனித சமுதாயத்தைப் பலியிடுவது என்பது மதியீனம்…
அறிவீனமான செயல்களை முஸ்லிம் அறிஞர்கள் தாம் நிறுத்த வேண்டும். முஸ்லிம் பத்திரிக்கை உலகம் இவைகளைத் தான் தன் முதற்கடமையாகக் கருத வேண்டும்..
கோஷா முறையை ஆதரிக்கும் கற்றறிந்த முஸ்லிம் ஆண்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி எவரேனும் இரண்டொருவர் இருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் கூற வேண்டியது இதுதான். “தயவு செய்து நீங்கள் ஓராண்டுக்காவது முகமூடி போட்டு வீட்டிற்குள் இருந்து பாருங்கள்” என்பதே.
ஈழத்தில் போரால் அங்கவீனமடைந்தவர்கள் குறித்த பிரச்சனை, கைவிடப்பட்ட முன்னாள் போராளிகள் பிரச்சினை குறித்தெல்லாம் பேசாமல் ஏன் கத்னாவைப் பிடித்துத் தொங்குகிறீர்கள்? எனவும் கேட்கிறார்கள். இலக்கியச் சந்திப்பும் சரி, என்னைப் போன்றவர்களும் சரி, கத்னா பிரச்சினையில் மட்டுமே கரிசனம் காட்டவில்லை. போர் எதிர்ப்பு – இனவாத எதிர்ப்பு – சாதியொழிப்பு – தமிழ்த் தேசிய எதிர்ப்பு – கடவுள் மறுப்பு போன்ற எங்களது பலவருட கால முன்னெடுப்புகளின் தொடர்ச்சிதான் கத்னா எதிர்ப்பும். அப்போதெல்லாம் எங்கள் மீது சுமத்தப்படாத ‘இனவாத – தமிழ் மனக் கட்டமைப்பு’ குற்றச்சாட்டு, கத்னாவைப் பற்றிப் பேசும்போது திடீரெனச் சுமத்தப்படுவது உள்நோக்கமுடையது. தமிழ் – முஸ்லீம் நல்லுறவை வளர்ப்பதற்குப் பகரமாக இவர்கள் பெண் மழலைகளின் கிளிட்டோரிஸ் துண்டங்களையா பலியாகக் கேட்கிறார்கள்?
இந்தப் புவிப்பரப்பில் எதைப் பற்றியும் பேசவும் எழுதவும் எல்லோருக்கும் உரிமையுண்டு. ‘துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் விம்மி விம்மியழுங் குரல் கேட்டிருப்பாய் காற்றே’ எனப் பாரதி பதறிப் பாடியது தன் வீட்டுப் பெண்களையோ தன் இனத்துப் பெண்களையோ நினைத்தல்ல. எதையும் பேசுவதற்கும் எழுதுவதற்கும் உரிமையுள்ளது போலவே எதை நோக்கிக் கேள்வி கேட்கவும் எல்லோருக்கும் உரிமையுண்டு.
கேட்கப்படாத கேள்விகள் மட்டுமே முட்டாள்தனமானவை என்றார் மல்கம் X.
முஸ்லீம் பெண் மழலைகளின் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவது குறித்து “ஈழத்தைப் பொறுத்தமட்டில் ஒருவகையில் இது அவசியமானதும் கூட” என ரியாஸ் குரானா சொன்னதைக் கட்டுரையில் குறிப்பிட்டேன். அவ்வாறு தான் சொல்லியதற்கான விளக்கத்தை இன்று ரியாஸ் குரானா தனது Facebookல் இவ்வாறு அளித்திருக்கிறார்:
“தமிழ்த் தேசியவாதிகள் முஸ்லிம்களை தனியானதொரு சமூகமாகக் கருத மறுத்து, தமிழர் என்ற அடையாளத்திற்குள் உட்பட்டு நசிபடுகின்ற ஒரு பிரிவினர் என்றே வரையறுத்து வந்தனர். இன்றும் அது தொடருகிறது. இந்த ‘பெண் கத்னா’ என்ற விவகாரம் முஸ்லிம்களைத் தனியானவர்களாகக் காட்டும் ஒரு அடையாள சமிக்ஞையாக இருப்பதைச் சுட்டிக் காட்டியிருப்பேன். நாங்கள் தமிழர்கள் அல்ல. தமிழ் மொழியைப் பேசுகின்ற பிறிதொரு சமூகம் என்பதைத் தமிழ்த் தேசியவாதிகள் ஏற்றுக்கொள்ள இதைவிடக் கொடுமையான, தமிழர்களிலிருந்து வேறுபட்ட எதுவாக இருந்தாலும் அதை முன்னிறுத்த வேண்டிய தேவை இந்த இடத்தில் அரசியல் அர்த்தத்தில் உண்டு. அது அவசியமும் கூட.”
என்ன கொடுமையான விளக்கம் இது!
முஸ்லிம் ஆண் சிறுவர்களுக்கு செய்யப்படும் “கத்னா” (உங்கள் மொழி வழக்காற்றில் “ஆண்குறி சிதைப்பு”) பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன? அது சரியா? அது முஸ்லிம் ஆண் சிறார்கள் மீதான வன்முறை இல்லையா? சமுகத்திலிருந்து அது கழையப்பட வேண்டியது இல்லையா?