கிளிட்டோரிஸ் : ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா வரை

கட்டுரைகள்

– ஸர்மிளா ஸெய்யித்

பிறப்புறுப்புச் சிதைக்கப்பட்டு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் 200 மில்லியன் சிறுமிகள் மற்றும் பெண்களில் ஒருத்தி, பண்பாட்டுப் பழக்கம்  இன்னும் புழக்கத்தில் இருக்கின்ற சமூகமொன்றினது உறுப்பினள் போன்ற இன்னும் என்னவாறான தகைமைகள் இதைப்பற்றிப் பேசுவதற்குத்தேவைப்படலாம்!

பெண் பிறப்பு உறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation – FGM), பெண் விருத்தசேதனம் (Female Circumcision) ஆகிய சொல்லாடல்கள் சில ஆண்கள்,மதவாதிகள், சமூக கலாசாரக் காவலர்களுக்கு அலர்ஜியாக இருக்கலாம். இனஒடுக்குதல்களாலும், வறுமையினாலும் உழன்று கொண்டிருக்கும் ஆப்பிரிக்கமக்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட சாபம் என்பதாக இந்தக் கொடுமை பற்றி மனச்சாட்சியே இல்லாத அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆப்பிரிக்காவிலும் முஸ்லிம்கள் அல்லாத பழங்குடியினர்கள் மத்தியில் மட்டும்தான் இந்தப் பண்பாடு இருக்கின்றதென்பதாக மானிடத்திற்கு எதிரான அவர்களது மனங்கள் அமைதி கொள்ளலாம். இவர்கள் தங்களது சொந்தவீட்டுக்குள்ளும் அயலிலும் நடக்கின்ற மாபெரும் அநீதியைப் பற்றியஅக்கறையற்றவர்களாக இருந்துகொண்டு மதத்திலிருந்து ‘ஆகுமாக்கப்பட்ட’ ஆதாரங்களையும் ‘தடுக்கப்பட்ட’ ஆதாரங்களையும் காண்பித்துத் தங்களுக்குள்ளே முரண்பட்டுக் கொண்டிருப்பவர்கள். மனச்சாட்சியை உலுக்குகின்ற ஒரு செயற்பாட்டைத் தடுப்பதற்குக் கூட மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான கோப்புகளுக்குள்தான் ஆதாரம் தேடியாக வேண்டிய கண்மூடித்தனமான பாதையில்தான் நவீன நூற்றாண்டு பயணித்துக் கொண்டிருக்கின்றது. தங்கள் கால்களில் முள் குத்தினால்கூட எடுத்துவிடுவதா வேண்டாமா என்று மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மேற்கோள்களிலிருந்தே தீர்மானம் எடுப்போம் என்பதாகப் பிடிவாதமாக இருக்கும் பழைமைவாதிகளிடம் வேறென்ன மாதிரியான எதிர்வினையைநாம் எதிர்பார்க்க முடியும்? மனசாட்சியின் நரம்புகள் அறுந்து ‘மதம்’ முற்றிய பித்தர்களைச் சகித்துக் கொண்டுதான் பல காரியங்களைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகள்,லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா,அவுஸ்திரேலியா, நியுஸிலாந்து நாடுகளில் குடியேறிய மக்களிடத்திலும் கிளிட்டோரிஸ் நீக்கம் செய்யும் வன் கொடுமை இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.

பெண்ணுறுப்பின் உள் உதடுகளில் சிதைப்பை ஏற்படுத்துவதனால் மருத்துவரீதியான நன்மைகள் ஏதும் உண்டா? இதனால் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கோ உடல் நலனுக்கோ நன்மைகள் விளையுமா? இதைக் குறித்த எந்தவொரு தெளிவும் விளக்கமும் ஒய்த்தா மாமிகளுக்குத்தெரியாது. கூர் மினுங்கும் புதிய பிளேட்டும், வெண்ணிற துணித்துண்டும் கையுமாக வந்து இந்தக் கடமையைச் செய்கிறவர்களை இலங்கை, கிழக்குமுஸ்லிம்கள் இப்படித்தான் அழைக்கிறார்கள். சில பிரதேசங்களில் ‘ஒஸ்தாமாமி’ என்றும் சில பிரதேசங்களில் ‘ஒய்த்தா மாமி’ என்றும்அழைக்கப்படுகின்ற இவர்கள் சந்ததி வழியாக இதே தொழிலைச் செய்கிறவர்கள். பெண் குழந்தை பிறந்த நாற்பதாவது நாளில் பெரும்பாலும் முடிநீக்கம் செய்து, குளிப்பாட்டிப் புத்தாடை அணிவித்து இந்தச் சடங்குக்குக் குழந்தையைத் தயார்ப்படுத்துகிறார்கள். இந்தச் சடங்கு பெரும்பாலும் பெண்களை உள்வாங்கிய செயற்பாடாக இருப்பதனாலேயே இது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றும் சொல்லலாம். தாயோ, தாயின் தாயோ வெள்ளைத் துணி விரித்த பித்தளை வட்டாவின் மீது குழந்தையின் பிஞ்சுத் தொடைகளை அகல ஊன்றிப் பிடிக்க ‘ஒய்த்தா மாமி’ குழந்தையின் பிறப்புறுப்பில் பிளேட்டினால் இரத்தம் கசியக் கீறிச் சுத்தமான வெண்ணிறச்சாம்பலைக் கிள்ளிக் காயத்தில் போட்டு விடுவாள். குழந்தை வீறிட்டு அழும். இந்தப் பெண்களோ அழுகின்ற குழந்தையை அரவணைத்துக் கொண்டே சிரித்து மகிழ்வார்கள். இவர்களைப் பொறுத்தமட்டில் மிகமுக்கியமான மத – பண்பாட்டுக் கடமைகளிலொன்றை நிறைவேற்றி விட்டார்கள். ‘பாலியல் ஒழுக்கம்’ மிக்க பெண்ணாக குழந்தை வளர்ந்துவாழ்வதற்கு அடித்தளமிட்டுள்ளார்கள். ‘கிளிட்டோரிஸ் துண்டிப்புச்’சடங்கினால் இப்படியான ‘நன்மைகளை’ நிலைநாட்டிவிட முடியும் என்பதே இவர்களது நம்பிக்கை. இவர்களுக்கு இது இனத்தின் கௌரவத்தைக் காப்பாற்றும் பெருந்தியாகம்.

இப்படிக் கிளிட்டோரிஸ் நீக்கம் செய்வதால் எப்படிப் பெண்ணின் ‘பாலியல் ஒழுக்கத்தை’(?) இவர்கள் காப்பாற்றுகிறார்கள்? கிளிட்டோரிஸ் என்பது பெண்ணுறுப்பில் காணப்படும் உணர் குவியம் அல்லது மையம். பெண்ணுறுப்பின் இப்பகுதியே ஒரு பெண்ணினது பாலியல் உணர்வுகளைத் தீர்மானிப்பதாக காலங்காலமாக நம்புகிற மக்கள் இதனை நீக்கிவிடுவதன் அரசியல் என்ன?பால் உறவின் போதாமையை உணர்கின்ற ஒரு பெண்ணுக்கு ஓர் ஆணைநிராகரிக்க வேறு காரணங்கள் தேவையில்லை என்கின்ற அச்ச உணர்வே,கிளிட்டோரிஸை நீக்குவதற்கு அல்லது சிதைப்பதற்குப் பின்னாலுள்ள ஆண்களின் அரசியல். பெண்ணை எப்போதும் ‘ஒருவனுக்கு ஒருத்தியாக’ சவக்கிடங்காகக் கிடக்கச் செய்வதற்காகவே இந்தச் சடங்குகொண்டுவரப்பட்டது. எளிதாகச் சொல்வதென்றால் பந்தயத்தில் தான் மட்டுமே சாம்பியனாக இருக்கவேண்டுமென்று சக போட்டியாளரின்கால்களை ஒடித்துவிடுவதுதான் இது.

இந்த நம்பிக்கை மத ரீதியானது என்றாலும், மத ரீதியானது இல்லை என்றாலும் இது பெண் குழந்தைகள் மீதான அப்பட்டமான மனித உரிமை மீறும் வன்முறைச் செயல். இந்த இடத்தில் இன்னுமொன்றையும் கவனிக்கவேண்டும். அதாவது ஆண் உறுப்பில் முன் தோல் அகற்றுதல். ‘கத்னா’ என்று அழைக்கப்படுகின்ற இந்த வழக்கம் இஸ்லாமியர்கள் மத்தியில் ‘சுன்னத்’ ஆன கடமை. உங்களில் யாராவது கேட்கலாம், ஆண் பிறப்புறுப்பில் முன்தோலை நீக்குவது வன்கொடுமை இல்லையா, மனித உரிமை மீறல் கிடையாதா? அது என்ன பெண்ணுறுப்புச் சிதைப்பை மட்டும் வன்கொடுமை என்றும் உரிமை மீறல் என்றும் சொல்கிறீர்கள் என்று. ஆண் பிறப்பு உறுப்பில் முன் தோல் நீக்கம் செய்வது மருத்துவ ரீதியாகச் சரி காணப்பட்ட ஒரு செயற்பாடு. இது இஸ்லாமியர்களின் பண்பாடுஎன்ற போதிலும், சுகாதார நோக்கத்துடனும், குறி விறைப்பின்போது பின்னுக்குத் தள்ளப்படாத நிலையிலும் எந்தவொரு ஆணும் அதாவது எந்த இனத்தை மதத்தைச் சேர்ந்தவராயினும் முன்தோலை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றிக் கொள்ளமுடியும். கிராமப் புறங்களில் ‘ஒய்த்தா மாமா’ என்று அழைக்கப்படும் சந்ததி வழியாக இதனைச் செய்வதில் புலமைத்துவம்பெற்றவர்களால் இந்தச் சடங்கு செய்யப்பட்டு வருகின்றது. நகர்ப் புறங்களில் வைத்தியசாலைகளில் வலி தெரியாதவண்ணம் மருத்துவக் கண்காணிப்பில் மிக நூதனமாகவே ஆண் உறுப்பு முன் தோல் நீக்கம் நடைமுறையில் உள்ளது.

ஆண் பிள்ளைகளுக்கு ‘கத்னா’ செய்யும் நிகழ்வு இலங்கை கிழக்கு மாகாண மக்களின் பண்பாட்டில் ஒரு கொண்டாட்டமாக இருந்த காலமொன்று இருந்தது. அயலார், உறவினர் மற்றும் ஊர்க்காரர்களை அழைத்து , மாடு வெட்டி விருந்தளித்துக் கோலாகலமாக இச்சடங்கு நடக்கும். கத்னா செய்யப்பட்ட ஆணுறுப்பு பூரண சுகம் பெறும் வரையிலும் நாலைந்துபேர் அந்தச் சிறுவனைச் சுற்றிக் காவல் இருப்பார்கள். உறக்கத்தில் கால்களைப் பிணைத்துக் கொண்டாலோ குப்புறப் புரண்டாலோ மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாக்கிவிடும். உறக்கம் விழித்துக் கண்ணும் கருத்துமாக நாலைந்து பேர் சீட்டாடிக் கொண்டும் கேரம் போர்ட் விளையாடிக் கொண்டுமிருப்பார்கள். ஈக்கள், கொசுக்கள் அண்டாதிருக்கக் கூரையின் மேல் விட்டத்தில் கயிறு இழுத்து ஒரு வெள்ளைத் துணியைத் தொங்கவிட்டுக் கால்கள் விரித்துக் கிடக்கும் சிறுவனது உடலின் கீழ்ப்பாகத்தை மூடச் செய்திருப்பார்கள். கிட்டத்தட்ட கொசு வலையை ஒத்த இந்த வெண்ணிறத் துணி வலை புண் முழுவதும் ஆறுகிற வரையும் தொங்கிக் கொண்டிருக்கும். கடந்த பத்தாண்டு காலத்திற்குள்தான் இந்தக் கொண்டாட்டம் நிறுத்தப்பட்டிருக்கவேண்டும். இப்போதெல்லாம் ஆண் குழந்தை பிறந்த ஏழாவதோ பதினைந்தாவதோ நாளில் டாக்டர்களிடம் தூக்கிச் சென்று காதும் காதும் வைத்தாற்போல ‘நாகரீகமாகக்’ காரியத்தை முடித்துவிடுகிறார்கள்.

‘கிளிட்டோரிஸ்’ எனப்படும் பெண்ணுறுப்புத் துண்டிப்புச் சடங்கு பெரும்பாலும் குழந்தை பிறந்து நாற்பதாவது நாள் செய்யப்படுகின்றது. குழந்தைகள் வளர்வதற்கு முன்பே உடலில் செய்யப்படுகின்ற மாறுதல் ‘இதுவே தனது உடல்’ என்பதாக நம்பும்படியும், பருவ உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாதபடியும் செய்துவிடுகின்றது. கிளிட்டோரிஸ் சிதைக்கப்பட்ட பெண்களின் பாலியல் இன்பம் மட்டுப்படுத்தப்பட்டதா என்பதை ஆராயும் பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வுகள், தன் வரலாற்று நூல்கள், ஆவணப்படங்கள்  வெளிவந்துள்ளன.

கிளிட்டோரிஸ் நீக்கும் சடங்கு குழந்தைகளை மரணிக்கச் செய்யவும் கூடியது. சில குழந்தைகள் திகைப்பு (Hemorrhaging) என்கிற உள அதிர்விலிருந்து மீள்வதற்கு நாளெடுக்கும். இந்தக் குழந்தைகள் உளப்பிறழ்வு, மூளைப் பாதிப்புக்கு ஆளாகவும் இடமுண்டு. தொடர் இரத்த ஒழுக்கு (Vaginal Bleeding), சிறுநீர் எரிச்சல், பிறப்புறுப்பில் நீர்கட்டிகள் உருவாக்கம், தொற்றுகள், தோல் அரிப்பு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற நோய்கள் உருவாகுவதற்கும் இது காரணமாகக் கூடியது என்று சில மருத்துவ ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன.

கொடுமையான இந்தப் பண்பாட்டுப் பழக்கம் 200 வருடங்களாக இலங்கையில் இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் புழக்கத்தில் இருக்கலாம் என்பதாக கிளிட்டோரிஸ் நீக்கம் குறித்து 1996 இல் SRI LANKA CULTURE: Mothers Watch as Daughters are Circumcised என்ற கட்டுரையில் ரேணுகா சேனநாயக்க பதிவு செய்துள்ளார். அரேபிய வர்த்தகர்கள், மனைவியர்களாக அழைத்துக் கொண்டுவந்த மலேசியப் பெண்களால் கிளிட்டோரிஸ் நீக்கம் இலங்கை இஸ்லாமியர்களின் பண்பாட்டில் இடம்பிடித்திருக்கலாம் என்றும் ரேணுகாசேனநாயக்க தனது கட்டுரையில் பதிவு செய்கின்றார்.

‘பெண்கள் முஸ்லிம் ஆராய்ச்சி முன்னணியின்’ தலைவி ஜெஸீமா இஸ்மாயில், சமூகச் செயற்பாட்டாளர் டாக்டர் மரீனா றிபாய் போன்றோரினது கருத்துகளும் ரேணுகா சேனநாயக்கவின் கட்டுரையில் பதிவாகியுள்ளன. ஜெஸீமா இஸ்மாயில் இந்நடைமுறையினை “Brutal Practice” கொடூரமான நடைமுறை என்பதாகப் பதிவு செய்துள்ளார். இஸ்லாமிய மக்களின் பண்பாட்டோடு வேரூன்றிப் போயிருக்கும் இந்த அநீதிக்கு எதிராக, கிழக்குமாகாணத்தைச் சேர்ந்தவரும், தவிர்க்க முடியாத பெண் ஆளுமையுமான சமூகச் செயற்பாட்டாளர் ஜெஸீமா இஸ்மாயில் உயர் இடங்களில் பதிவு செய்ததோடு நின்றுவிட்டார். இந்த அநீதி நிறுத்துவதற்காக அவர் செயற்படவில்லை என்பதும் கவனிக்க வேண்டியிருக்கின்றது.

1997 இல் என்பதாக ஞாபகம், பிறப்புறுப்புச் சிதைப்பு விவகாரத்தை உலகத்தின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த முதல் பெண் வாரிஸ் டைரி. இவர் ஆப்பிரிக்கத் தேசத்தின் சோமாலியா நாட்டிலிருந்து பால்ய வயதுத் திருமணத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சொந்த நாட்டை விட்டுத் தப்பித்து வெளியேறியவர். மேற்குலகின் முன்னணி மாடல் அழகியாகத் தன்னைத் தடம்பதித்துக் கொண்டிருக்கும் வாரிஸ், உலகின் பிரபல ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ க்கு அளித்த நேர் காணலே பல்லாயிரம் வருடங்கள் பழமையான பிறப்புறுப்புச் சிதைப்பு விவகாரத்தை பொது அரங்கில் விவாதப் பொருளாக மாற்றியது. இவரது தன் வரலாற்று நூல் Dessert Flower உலகின் கவனிப்பைப் பெற்றுக் காட்சித் திரைக்கும் கொண்டு வரப்பட்டது. வாரிஸ், தன் வரலாற்று நூலில், தனது பிறப்பு உறுப்பு சிதைக்கப்பட்டதை விபரித்திருக்கிறார். பெண் உறுப்பின் உதடுகளில் அகேஷியா மரத்தின் முட்களை ஒவ்வொன்றாகச் செருகி துளையிடுகின்றாள் மருத்துவச்சி. பிறகு வெள்ளை நூல் கொண்டு உறுப்பைத் தைத்துவிடுகின்றாள். சிறுநீர் கழிக்கப் போதுமான துவாரத்தை வைத்துவிட்டு மீதிப் பிறப்புறுப்பு மூடப்படுகின்றது.

ஆப்பிரிக்க நாடுகளில் 93 விழுக்காடு பெண்களுக்கு இவ்வாறு பிறப்புறுப்புச் சிதைக்கப்படுகின்றது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் பெருந் துயரைச் சுமக்கவேண்டும். மாதவிடாய் காலங்களில் இவர்களது வலி பன்மடங்கு பெருகுகின்றது. கட்டுப்படுத்த முடியாத வலியில் அவர்கள் துடித்துஅழும்போது, மாதவிடாயை நிறுத்த மருத்துவர்கள் கருத்தடை மாத்திரைகளைத் தருகின்றனர்.

மருத்துவிச்சியால் தையலிட்டு மூடப்பட்ட பிறப்பு உறுப்பு, திருமணத்தின் பின்பு, சரியாகச் சொல்வதென்றால் முதலிரவின் போது திறந்து விடப்படுகின்ற வழக்கம் ஆப்பிரிக்கா தேசத்தின் சில நாடுகளில் வழக்கத்திலிருந்து வருகின்றது. தையலிடப்பட்ட பெண்ணுறுப்பை மீண்டும் திறப்பது, தையலிடுவதைவிடவும் கொடிய அனுபவம். வாரிஸ் டைரி மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்தே தனது பெண்ணுறுப்பைத் திறந்து கொண்டதாக Dessert Flower என்ற தன் வரலாற்று நூலில் குறிப்பிடுகின்றார்.லண்டன் போன்ற மேலைத்தேய நாடொன்றுக்கு வாழவந்த அவருக்கு இதுசாத்தியமாகின்றது. ஆப்பிரிக்க நாட்டிலேயே வாழ்கின்ற பெண்களுக்கு பாதுகாப்பான மருத்துவ முறையில் தைக்கப்பட்ட பெண்ணுறுப்பைத் திறப்பது சாத்தியப்படக்கூடியதில்லை. ஏனில், தைக்கப்படும்போது அனுபவித்த அதே கொடிய அனுபவத்தையே திறக்கும்போதும் அவர்கள் திரும்பப் பெறுவார்கள். பெண்ணுறுப்பின் இறுக்கமான துளையை ஆண்கள் விரும்பும் சந்தர்ப்பங்களில், தையலிட்டு மூடப்பட்ட பகுதியைத் திறக்காமலே வாழ்நாள் நெடுகிலும் வாழும் பெருங் கொடுமையைப் பெண்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இந்தப் பெண்கள் பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாது, சிறு துளையில் ஆண் உறுப்பைச் செலுத்துகின்றபோது உண்டாகின்ற வலியில் கதறுவதும், பற்களைக் கடித்துச் சகித்துக்கொள்வதுமே இவர்கள் அறிந்த பாலுணர்வு இன்பம். இப்படியானவர்கள் பிள்ளைப் பேற்றின்போது வலி தாங்கமுடியாமல் தாயும், சிறு துவாரம் வழியாக உலகத்தைப் பார்க்கமுடியாது மூச்சுத் திணறி சிசுவும் இறந்துபோகும் கொடுமைகள் ஆப்பிரிக்க நாடுகளில் தினமும் நடைபெறுகின்ற அன்றாட நிகழ்ச்சிகள்.

பெண்ணுறுப்புச் சிதைப்பு, முழுமையாகவும் பகுதியாகவும் நடைமுறையிலிருந்து வருகின்றது. இதில் மூன்று வகையான முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

1. பெண் உறுப்பின் உள் முனையை (கந்து) செதுக்குதல் / நீக்குதல்

2. முனை மற்றும் புழையின் இரு பக்கத்திலும் உள்ள பெண் உறுப்பின்

உதடுகளை வெட்டி நீக்குதல்

3. பெண் உறுப்பின் உள் முனையை நீக்கிவிட்டு, இதழை அறுத்து

புழையின் மேற்பகுதியை நூலால் தைத்துவிடுதல்.

இம்மூன்று முறைகளில் மூன்றாவதே வாரிஸூக்கு நிகழ்த்தப்பட்டிருந்ததை அவரது தன் வரலாற்று நூலிலிருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆசிய நாடுகளில் இருப்பதானது, மேற்சொல்லப்பட்டிருக்கும் மூன்று முறைகளில் முதலாவதாக இருக்கலாம். குறிப்பாக இலங்கையிலும் இந்தியாவிலும் முதலாவதே நடைமுறையில் இருக்கின்றது எனலாம்.

இந்தியாவில் மும்பை நகரத்தை மையமாகக் கொண்டு 2016 இல் எடுக்கப்பட்ட India’s Dark Secret : Female Genital Mutilation என்ற ஆவணப்படம் இந்தியாவில் ‘போரா’ முஸ்லிம்களிடையே பிறப்புறுப்புச் சிதைப்பு புழக்கத்தில் இருந்து வருவதைப் பற்றிப் பேசுகின்றது. பிறப்புறுப்புச் சிதைப்புக்கு உள்ளான பெண்கள் குரல்களில் வந்திருக்கும் இந்தியாஸ் டார்க் ஸீக்ரெட் ஆவணப்படம் மிக முக்கியமான தொகுப்பு. இலங்கையைப் போன்று குழந்தை பிறந்த நாற்பதாவது நாளில் இல்லை, வளர்ந்து சிறுமியான பிறகே இச்சடங்கைச் செய்கிறார்கள். இந்த ஆவணப்படத்தில் தம் அனுபவத்தைப் பகிர்கின்ற பெண்கள் 8 – 14 வயதுச் சிறுமிகளாக இருந்தபோதே கத்னா செய்யப்பட்டுள்ளார்கள்.

ஐக்கிய நாடுகள் சபை பெண் உறுப்பு சிதைப்பை 2012, நவம்பர் 27இல் தடை செய்தது. இதனையடுத்து ஆப்பிரிக்க தேசத்தில் உள்ள நைஜீரியா நாட்டு அதிபர் எடுத்த வரலாற்று முக்கியத்துமிக்க தீர்மானம் அந்நாட்டுப் பெண்கள் சிறுமிகளுக்கு விடுதலையுணர்வைப் பெற்றுத் தந்துள்ளது. பெண்ணுறுப்புச் சிதைப்பு மிக மோசமான முறைகளில் நடைமுறையில் உள்ளவொரு தேசத்தில் இருந்து வரும் இந்த சுதந்திரக் காற்று பெரும் நிம்மதியைத் தருகின்றது.
ஆம்! நைஜீரியா நாட்டில் பெண் உறுப்பு சிதைப்புச் சடங்கிற்குத் தடை  2015 மே 5 முதல் சட்ட ரீதியாக நடைமுறைக்கு வந்தது. நைஜீரியாவின் அதிபர் குட்லக்ஜோனாத்தன், கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் முஹம்மது புஹாரியினால் தோற்கடிப்புச் செய்யப்பட்டார். இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் நடப்பதுபோன்று முன்னாள் அதிபர் கொண்டு வந்திருந்த அமலுக்கு வராத சட்ட மசோதாவை புதிய அதிபர் வெட்டுக் குத்து விளையாட்டுகளால் தூக்கிப்போடவில்லை. இது பெண்களின் விவகாரம்தானே என்று புறக்கணிக்கவில்லை. புதிய அதிபர் முஹம்மது புஹாரி பெண் உறுப்புச் சிதைப்பைத் தடை செய்யும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துச் செயற்படுத்தியுமுள்ளார்.

சட்டங்களை இயற்றுவதும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றுவதும் சிரமமான காரியங்கள் இல்லை. சிரமம், இந்தச் சட்டத்தை மதக் களைவு செய்து மக்கள் மயப்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவருவதே. நைஜீரியா அரசாங்கமும் அங்கு செயற்படும் மகளிர் செயற்பாட்டாளர்களும், நாட்டின் முற்போக்கு அமைப்புகள், நிறுவனங்களும் பெண்ணுறுப்புச் சிதைப்பை முற்றிலும் இல்லாது ஒழித்து உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய நடவடிக்கைகளைச் செயற்படுத்திக் கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேம்பியா நாட்டின் அதிபர் யஹ்யாஜம்மீஹ் பெண் உறுப்புச் சிதைப்பு நடைமுறையை முற்றிலும் தடை செய்வதற்கான சட்டத்தை விரைவில் நிறைவேற்றப் போவதாகஅறிவித்துள்ளார். இப்படி அறிவிப்புச் செய்வதனால் தேர்தலில்தோற்றுப்போவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பது குறித்து எச்சரிக்கப்பட்டும் பொருட்படுத்தாமல் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார் அதிபர் யஹ்யா.

பெண்களுக்கு எதிரான அனைத்துப் பாரபட்சங்களையும் இல்லாதொழிப்பதற்கான மனித உரிமைச் சாசனங்களில் கைச்சாத்திட்டுள்ள நாடான இலங்கையில் இதுவரையில், பிறப்புறுப்புச் சிதைப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள், செயற்பாடுகள் எதுவும் இடம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. இரு காரணங்கள்: ஒன்று, ஆப்பிரிக்கா நாடுகளில்போன்று தீவிர செயற்பாட்டுத் தளத்திற்குள் இச்சடங்கு இலங்கையில் இல்லை. இரண்டு, இது சிறுபான்மைச் சமூகமாகிய அதாவது 7 விழுக்காடுகளுக்கும் குறைவான இஸ்லாமியர்கள் மத்தியிலேயே புழக்கத்தில் இருக்கின்றது. சிங்களப் பேரினவாத அரசுக்கு இஸ்லாமியப் பெண்களின் கிளிட்டோரிஸ் சிதைக்கப்படுவதைக் குறித்து என்ன அக்கறை?

ஏனில், இதைக் குறித்து அக்கறைப்படவேண்டியவர்கள் யார்? இலங்கை இஸ்லாமியத் தலைவர்கள், மதத் தலைவர்கள், முற்போக்காளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், படைப்பாளிகள்.

இலங்கையில் சிறுமிகளைத் திருமணம் செய்வதை நியாயப்படுத்திக்கொண்டு, விவாக விவாகரத்துச் சட்டத்தை மாற்றுவதற்கு இடையூறாக இருக்கின்ற ஆண்களின் கைகளிலேயே இன்று இஸ்லாம் இருந்து கொண்டிருக்கின்றது. இவர்களோடு போராடுவது கல்லில் நார் உரிப்பதுபோன்றது என்பதற்காகவே பல முற்போக்கு இஸ்லாமியர்கள் செவிடராயும் ஊமையராயும் காலந்தள்ளும் ஓர் இருண்ட காலமே இன்று இலங்கையில் நிலவுவது. இஸ்லாம் மதம் என்ற நிலையைக் கடந்து, இஸ்லாம் இயக்கம் என்ற நிலை வந்துவிட்டது. இந்த நிலையில் சமூக நலன், எதிர்காலக் கனவு, விடுதலை உணர்வு, சுதந்திரம், சுயம் ஆகியவற்றுக்காக எதிர்வினையாற்றுவது உயிரையே விலையாகப் பெறக்கூடிய ஆபத்துக்களுக்கான சாத்தியங்கள் இலங்கைக்குள் வந்துவிட்டன.

இத்தகைய சூழலில், இலங்கை இஸ்லாமியப் பெண்களின் கிளிட்டோரிஸை யார் காப்பாற்றுவது? இலங்கை இஸ்லாமியரிடையே இப்படியான பண்பாட்டுச் சடங்கு புழக்கத்தில் இருப்பதே 21ஆம் நூற்றாண்டில்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

பாலியலில் ஆண்களின் அதிகாரத்தை நிறுவுவதற்காக மாத்திரமே இச்சடங்கு செய்யப்பட்டுக் கொண்டிருந்தாலும்க கூட பெண்கள்தான் இச்சடங்கை முற்றுமுழுதாகக் கையாழுகின்றார்கள்.கண்மூடித்தனமாக காலங்காலமாகத் தொடர்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இதுவோர் மதக் கடமை.‘கன்னித்தன்மையைப்’(?) பேணுவதற்காகத் தனக்குச் செய்யப்பட்டது, தனது மகளுக்கும் செய்யப்படவேண்டும் என்றே ஒவ்வொரு தாயும் இந்தச் சடங்கைச் செய்கிறார். கிளிட்டோரிஸ் நீக்கும் இந்தச் சடங்கு, ஆணாதிக்க சமூக அடிமைக் கூறுகளில் ஒன்று என்பதை இந்தப் பெண்களுக்கு எப்படி விளங்கிக் கொள்ளச் செய்வது?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜூம்ஆவுக்குப் பிறகும், பல தொழுகைகளுக்குப் பிறகும் மிம்பரில் முல்லாக்கள் முழங்கும் வார்த்தைகளை மந்திரமாகப் பாவிக்கும் இந்தப் பெண்களிடம் சமூகத்திடம் இதை எடுத்துச் செல்லத் துணிந்த ஒரு மௌலவியைத்தானும் கண்டுகொள்ள முடியுமா? இங்கு பெண் மௌலவிகளின் சமூகப் பங்குபற்றுகை பற்றிய மிகப்பெரிய கேள்வி துருத்திக் கொண்டு நிற்கின்றது. ஆண்கள் வகுத்திருக்கும் கொள்கைகளின் பிரதி விம்பங்களாக நிற்கும் பெண் மௌலவிகளின் மீது துயரம்படிந்த மௌனம் கவிகின்றது. பிறந்த குழந்தையின் முடியை மழித்துக் கொள்வது போலத்தான் பெண் உறுப்பின் கிளிட்டோரிஸை நீக்குவதும் என்று கூறிவிடாதீர்கள், பெண்களே! நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முற்படாதவரை , உங்களை வேறெவரும் காப்பாற்ற மாட்டார்கள்.  நம் பெண்குழந்தைகளின் கிளிட்டோரிஸை இனிச் சிதைக்க மாட்டோம் என்று சபதமெடுங்கள்! இதை நம்மால் தான் இல்லாதொழிக்க முடியும்.

thoomai.wordpress.com -ல் இன்று வெளியானது)

3 thoughts on “கிளிட்டோரிஸ் : ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா வரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *