விருது ஏற்புரை

கட்டுரைகள்

வாசகத் தோழர்களிற்கும் என் உடன் எழுத்தாள நண்பர்களிற்கும் இந்த அவைக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

இந் நிகழ்வில் நேரில் கலந்துகொள்ள முடியாததையிட்டுச் சற்று வருத்தமே. டொரொன்ரோ இலக்கியத் தோழர்களோடு இந்த வெயில் காலத்தில் சற்று மதுவருந்தி, கதையும் பாட்டுமாக தருணங்களைக் கழிக்க நினைத்தது கைகூடவில்லை.

என்னுடைய கவிதையொன்று 1985-ல், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘ஈழமுரசு’ பத்திரிகையில் வெளியாகியதிலிருந்து -அதாவது சரியாக முப்பது வருடங்களிற்கு முன்னரிருந்து – நான் எழுதிக்கொண்டிருந்தாலும் ஈழத்தவர்களின் அல்லது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பொன்றிடமிருந்து நான் முதன் முதலாகப் பெறும் விருது இதுதான்.

புலம் பெயர்ந்த பின்பாக 1997-லிருந்து நான் தொடர்ச்சியாக எழுதி வருகிறேன். நான் எவ்வளவு வாசகர்களைச் சம்பாதித்து வைத்திருக்கின்றேன் என்பது எனக்குச் சரிவரப் புலப்படாவிட்டாலும் எத்தனை அமைப்புகளின், இயக்கங்களின், நிறுவனங்களின், ஊடகங்களின் பகையைச் சம்பாதித்து வைத்திருக்கிறேன் என்பதை நான் நன்கறிவேன். அவர்களின் மூர்க்கமான எதிர்வினைகளையும் அவதூறுகளையும் சில சமயங்களில் உடல்ரீதியான தாக்குதல் அச்சுறுத்தல்களையும் நான் எதிர்கொண்டே எழுதி வந்தேன். ‘துரோகி’, ‘கைக்கூலி’ போன்ற சொற்களைக் கேட்காமல் கடந்த இருபது வருடங்களில் ஒருநாள் கூட எனக்குக் கழிந்ததேயில்லை.

என்னதான் எனக்குத் தடித்த தோலாயிருந்தாலும், என்னதான் எனக்கு மரத்துப் போன மனமாயிருந்தாலும் இந்த எதிர்ப்புகளையும் நிராகரிப்புகளையும் தாண்டி வருவது தனிமனித சக்திக்கு அப்பாற்பட்டதுதான். எனினும் நல்வாய்ப்பாக எனது வாசகத் தோழர்கள் என்னைத் தொடர்ந்து படித்து உற்சாகமூட்டுவதும் சனநாயக வேட்கை கொண்ட சிறுபத்திரிகைத் தோழர்களின் உடனிருப்புமே என்னை இன்றுவரை உற்சாகத்துடன் தைரியமாக இயங்க வைக்கின்றன. எனவே இந்த விருது அவர்களிற்கான விருது.

எக்காலத்திலும் இருந்ததுபோலவே இக்காலத்திலும் இலக்கியப் போலிகளும், பாஸிச விசுவாசிகளும் எழுத்துலகில் இருந்கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்களிற்குக் களங்கள் அமைத்துக் கொடுக்கவும் ஊதுகுழல் பணி செய்யவும் அமைப்புகளும், நிறுவனங்களும் பெரும் ஊடகங்களும் உள்ளன.

ஆனால் அதிகாரத்தை எதிர்த்துப் பேசுபவர்களிற்கு, கலாசார அடிப்படைவாதத்தை அசைத்துப் பார்ப்பவர்களிற்கு, இனவாதங்களையும் தேசியவாதங்களையும் சாதியத்தையும் ஆண்மையவாத்தையும் உன்னதமாக்கப்பட்ட இலக்கியச் செல்நெறிகளையும் அவற்றை தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கும் பீடங்களையும் எதிர்த்து நிற்கும் தனியொரு எழுத்தாளனுக்கு சிறுபத்திரிகைகளைத் தவிர வேறு களமோ தளமோ கிடையாது.

என்று சிறுபத்திரிகைகள் நம் சூழலில் இல்லாமற் போகின்றனவோ அன்று நமது சுதந்திரமும் விடுதலையும் இல்லாமற் போகின்றன என்பது எனது உறுதியான நம்பிக்கை. நாவலர் மரபிலிருந்து உருவாகாமல் கே.டானியல் மரபிலிருந்து உருவாகி வந்த என்னைப் போன்றவர்களிற்கு சிறுபத்திரிகைகள் தான் கை விளக்குகள்.

எனக்கு இங்கே வழங்கப்படும் விருதுப் பணத்தை பாரிஸிலிருந்து வெளியாகும் ‘ஆக்காட்டி’ என்னும் சிறுபத்திரிகைக்கு வழங்க விரும்புகின்றேன். ‘ஆக்காட்டி’ இதழ் தோழர்கள் தயவு செய்து எனது விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் நன்றியும் வணக்கங்களும்.

(கனடா இலக்கியத் தோட்டம் ‘கண்டி வீரனுக்கு’ விருது வழங்கிய நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட ஏற்புரை )

4 thoughts on “விருது ஏற்புரை

  1. சோபாவின் உரை சுருக்கம் எனினும் கருத்துப் பெருக்கமானது.விருதுப் பணம் ஆக்காட்டிக்கு வழங்கியமை உயர்ந்த எண்ணத்தைக் காட்டுகிறது. காலந்தாழ்த்தி வழங்கப்பட்டதெனினும் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *