பாரிஸிலிருந்து வெளியாகும் ஆக்காட்டி (யூலை -ஓகஸ்ட் 2015) இதழுக்காக நேர்கண்டவர்கள் : நெற்கொழுதாசன், தர்மு பிரசாத்.
விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சித்து வந்த நீங்கள், ‘தீபன்’ திரைப்படத்தில் முள்ளிவாய்க்காலிலிருந்து தப்பி வந்த புலிப்போராளியாக நடித்த காட்சிகளில் எவ்விதமான மனநிலையிலிருந்தீர்கள்?
விடுதலைப் புலிகள் மீதான என்னுடைய அரசியல் விமர்சனத்தை நீங்கள் ‘புலி எதிர்ப்பு’ அல்லது ‘வெறுப்பு’ என்பதாகக் குறுக்கிக்கொள்ளக் கூடாது. புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் யார்? என்னுடைய தோழர்களும் மாமன், மச்சான்களும் என் ஊரவர்களும் என் சனங்களும்தானே. விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டின்மீது எனக்குக் கடுமையான விமர்சனங்கள் உண்டே தவிர, புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவர்மீதும் எனக்குத் தனிப்பட்ட கோபதாபமோ வெறுப்போ கிடையாது. புலிகள் இயக்கத்திலிருந்து விலகி, புலிகளின் அரசியலை நிராகரித்த எத்தனையோ முக்கியமான ஆளுமைகளுடன் எனக்கு இப்போதும் நெருங்கிய நட்பும் தோழமையுமுண்டு. அதேபோல புலிகள் இயக்கத்தில் இல்லாமலிருந்தபோதும், புலிகளின் அரசியலுக்கு வரிந்துகட்டி வக்காலத்து வாங்குபவர்கள் மீது எனக்குக் கசப்புகளுண்டு. இங்கு உறவையும் முரணையும் அவரவர் கொண்ட அரசியல்தான் தீர்மானிக்கிறதே தவிர, அவர்கள் புலிகள் இயக்கத்தில் இருந்தார்களா இல்லையா என்ற வரலாறு என்னளவில் தீர்மானிப்பதில்லை.
இன்னும் சொல்லப் போனால் புலிகள் இயக்கம் அமைப்புரீதியாக மட்டுமல்லாமல் கருத்தியல்ரீதியாகவும் முற்றாக அழிந்திருக்கும் இந்த நிலையில் ‘புலி எதிர்ப்பு’ அரசியல் செய்வதென்பது காற்றில் கத்தியைச் சுழற்றும் வீண்வேலைதான். குறிப்பாகப் புலிகள் இயக்கத்தில் இணைந்தோ அல்லது கட்டாயமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டோ களத்தில் நின்ற போராளிகள் வரலாற்றின் கைதிகள்தான். புலிகளின் அரசியலைத் தீர்மானிப்பதில் இந்த அடிமட்டப் போராளிகளிற்கு மட்டுமல்ல, புலிகளின் தளபதிகளிற்கோ அல்லது மூத்த உறுப்பினர்களான வே.பாலகுமாரன் போன்றவர்களிற்கோ எந்தச் செல்வாக்கும் இருந்ததில்லை என்பது நாமறிந்ததே. புலிகளின் மூடுண்ட சர்வாதிகாரத் தலைமை இழைத்த அரசியல் தவறுகளை எதிர்த்தோம் என்பது வேறு. அதே எதிர்ப்பு மனநிலையில் நாங்கள் அதிகாரங்கள் ஏதுமற்றிருந்த போராளிகளையும் அணுகவியலாது. அவ்வாறு அணுகினால் தவறு.
புலிகளைத் தங்களது தனிப்பட்ட நலன்களிலிருந்து ஆதரித்த அறிவுஜீவிகளையும் அரசியலாளர்களையும் இந்தக் களப் போராளிகளையும் ஒரு துல்லியமான கோடு பிரித்தேயிருக்கிறது. இந்தப் போராளிகள் எதையும் இழப்பதற்குத் தயாராகக் களத்திலிருந்தவர்கள். தங்களது தனிப்பட்ட நலன்களிலிருந்தது இயங்காதவர்கள். ஆனால் புலிகளின் அரசியலை வழிபடும் அறிவுஜீவிகள் எதையுமே இழக்கத் தயாரற்றவர்கள். அதிகாரமற்ற போராளிகளின் அர்ப்பணிப்பான போராட்டம் கொடுத்த வெளிச்சத்தில் தங்களது முகத்தை ஒளிரச் செய்ய முயல்பவர்கள். அந்தப் போராளிகளின் துயரக் குரல்களை ‘டப்மாஷ் ‘ செய்து அரங்குகளில் வாயசைப்பவர்கள். அப்படியான ஓர் ‘அறிவுஜீவி’யின் பாத்திரத்தை திரைப்படத்தில் ஏற்க நேர்ந்திருப்பின் ஒருவேளை என் மனம் சற்றே கூசித்தான் போயிருக்கும். தனது குடும்பத்தையே போரில் இழந்த ஒரு போராளியின் பாத்திரத்தைத்தான் நான் ‘தீபன்’ படத்தில் ஏற்றிருக்கிறேன். வரலாற்றின் கைதியின் துயரப் பாத்திரம்.
நடித்தபோது என்ன மனநிலையிருந்தேன் என்றால் இயக்குநர் சொல்வதைச் சரிவரச் செய்ய வேண்டும் என்ற மனநிலை மட்டுமே என்னோடிருந்தது. கதை எழுதும்போதோ அல்லது நடிக்கும் போதோ நாங்கள் பாத்திரங்களின் மனநிலைக்குள் ஒன்றிப் போய்விடக்கூடாது என்றே நான் நம்புகிறேன். நாங்கள் பாத்திரங்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கக்கூடாது. பாத்திரங்கள்தான் எங்களது கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.
அகதி என்ற பாத்திரத்தினை மீறி அகதியான விடுதலைப்புலி உறுப்பினர் என்ற நோக்கில் உங்கள் பாத்திரம் உருவாக்கப்பட்டதன் பின்னணியை எவ்வாறு உணர்கிறீர்கள்?
திரைப்படத்தின் மையக் கதை அத்தகையது. முள்ளிவாய்க்கால்வரை நின்று போரிட்டு வந்த தீபன் என்ற போராளி புலம் பெயர்ந்து புதிய சமூக வாழ்விற்குள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நடத்தும் போராட்டமே படத்தின் மையம். வன்முறைக்குள் வாழ்ந்த அவன் ஆயுதம் அற்றவனாக, புதிய சிவில் சமூகத்தை எதிர்கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதும் புதிய சூழலிற்குள் அவனுக்கு ஏற்படும் உறவுகளுடனான அவனது அணுக்கமும் விலக்கமுமான மனப் போராட்டமே திரைக்கதை.
இந்தக் கதையை ஈழத்திற்குள் குறுக்கிப் பார்க்கவும் தேவையில்லை. குர்திஷ்தான், ஆப்கானிஸ்தான், ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா என எந்த நிலத்திலிருந்தும் யுத்தத்தால் புலம்பெயர்ந்து அய்ரோப்பாவிற்கு வரும் எந்தவொரு அகதிக் குழுவுடனும் இந்தப் படத்தைப் பொருத்திப் பார்க்கலாம். இந்தப் படம் ஈழப் போர் குறித்த ஆவணச் சித்திரமல்ல. யுத்தம் பிரசவித்த குழந்தைகளைப் பற்றியும் அவர்களது உளவியல் குறித்தும் பேசும் திரைப்படமே தீபன்.
இயக்குனருக்காக புலிப்போராளியாகப் பாத்திரமேற்றது உங்களது பதின்ம வயதினை நினைவுக்குக் கொண்டுவந்ததா?
நான் என்ன புதிதாகவா புலிப் போராளிப் பாத்திரத்தை ஏற்கிறேன்! என்னுடைய நாவல்களிலும் பல கதைகளிலும் அந்தப் பாத்திரத்தை நான் தொடர்ச்சியாக ஏற்று எழுதிக்கொண்டுதானேயிருக்கிறேன். பல புதிய புலிப் போராளிப் பாத்திரங்களையும் உருவாக்கிக் கதைவழியே உங்களிடம் தந்துள்ளேன். பதின்ம வயதுகளின் ஞாபகம் இப்படத்தில் நடிக்கும்போதென்றல்ல, அது எப்போதுமே என்னுடனிருக்கிறது. அந்த ஞாபகம் காலப்போக்கில் என்னிலிருந்து அழிந்துவிடக் கூடாது என்றுகூட விரும்புகின்றேன். பதின்ம வயதில் ‘சோசலிஸ தமிழீழத்தை’ நோக்கி முன்வைத்த காலடிகள் எவ்வளவு அரசியல் குறைபாடுடையதாக இருந்திருப்பினும் அந்தக் காலடிகள் இதயசுத்தியானவை. மக்களுக்காகாகவும் நான் நம்பிய கொள்கைக்காகவும் உயிரையும் கொடுக்கத் தயாராகயிருந்த வெள்ளாந்தி மனநிலையது. அப்படியானதொரு வெள்ளாந்தி மனநிலை இனி எனக்கு வாய்க்காது. எனவே அந்த வெள்ளாந்தி மனநிலையின் தடயங்களைப் பெருமையுடன் எனக்குள் பொத்திப் பாதுகாக்கவே விரும்புகின்றேன்.
இனவாதம் குறித்துக் கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் வந்திருக்கிறீர்கள். இத்திரைப்படம் ஒரு இனவாதப்படமாகவும் பார்க்கப்படவேண்டியது என வரும் விமர்சனங்களை எப்படிப்பார்க்கிறீர்கள்?
அந்த விமர்சனத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவ்வாறு சொல்பவர்களோ இந்தக் கேள்வியைக் கேட்கும் நீங்களோ படம் பார்த்துவிட்டீர்களா என்ன? பிறகேன் இந்த ஆர்வக் கோளாறுக் கேள்வி? நூறு நல்ல நெல்மணிகள் இருப்பின் அதற்குள் ஒரு சப்பியும் வரத்தானே செய்யும். தந்தை பெரியாரைக் கூடச் சாதியுணர்வாளரென்றும், வந்தேறிக் கன்னடரென்றும் பழிக்கும் ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கிறது. எனவே இத்தகைய வதந்தி விமர்சனங்களை வைத்துக் கேள்வி கேட்காமால் ஓகஸ்ட் 26-ம் தேதி படம் பார்த்துவிட்டு இந்தக் கேள்வியை அடுத்த’ஆக்காட்டி’ இதழில் கேளுங்கள். அப்போது பதில் சொல்கின்றேன்.
தீபன் திரைப்படம் நீங்கள் நடித்திருப்பதால் மட்டும் அது முற்றுமுழுதான ஷோபாசக்தியின் படமாக நினைத்து எதிர் நிலையில் நின்று நோக்குவது குறித்து?
இது எனக்கான கேள்வியல்லவே. அவ்வாறு எதிர்நிலையில் நின்று நோக்குபவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வியல்லவா இது.
தீபன் திரையிடல் நிகழ்ந்த நாளில் நேர்காணலில் பத்திரிகையாளர்களுக்கு பிரான்ஸ் தேசம் குறித்து உங்களுக்கு மூன்று பார்வைகள் இருப்பதாகச் சொன்னீர்கள். எல்லாம் ஷோபாசக்தி என்ற தனிமனிதனின் பார்வைதானா அல்லது அகதியின் பிரதிநிதியாக அவ்வாறு சொன்னீர்களா?
என்னுடைய தனிப்பட்ட கருத்துகள்தானவை. அதேவேளையில் நான் அகதியாகவுமிருப்பதால் ஒரு அகதியின் வாக்குமூலம் எனவும் அதை நீங்கள் கொள்ளலாம். அந்த நேர்காணலில் ‘பிரான்ஸ் குறித்த உங்களது கருத்தென்ன?’ எனக் கேட்டதற்கு நான் பதிலளிக்கும்போது ‘பிரான்ஸ் குறித்து என்னிடம் தட்டையான ஒரு பார்வை கிடையாது. மார்க்ஸியவாதியாக ஒரு பார்வை, கறுப்பனாக ஒரு பார்வை, அகதியாக ஒரு பார்வை இருக்கின்றன’ எனச் சொன்னேன். பிரான்ஸ் அரசாங்கம் உலக ஏகாதிபத்தியச் சங்கிலியின் முக்கியமான கண்ணி. இனவாதமும் நிறவாதமும் இஸ்லாமிய வெறுப்பும் பிரஞ்சு ஆளும் வர்க்கங்களிடமும் பிரஞ்சுத் தேசியவாதிகளிடமும் நிறைந்தேயிருக்கின்றன. மரின் லு பென் தலைமை தாங்கும் இனவாதக் கட்சியான ‘தேசிய முன்னணி’யின் வேகமான வளர்ச்சி நம்மைப் போன்ற குடியேற்றவாசிகளிற்கும் அகதிகளிற்கும் பெரும் அபாயம். இது ஒருபுறமெனில் பிரான்ஸில் நமக்குக் கிடைக்கக் கூடிய தனிமனித சுதந்திரமும் கலாசார சகிப்புத்தன்மையும் பிரஞ்சு மக்களின் இயல்பான கலகத்தன்மையும் நான் பிரான்ஸை விரும்பக் காரணங்களாகின்றன. இதைத்தான் வெவ்வேறு பார்வைகளென்றேன்.
இலக்கியவாதியான நீங்கள் சினிமாவில் தன் திறமைகளை செலவளிப்பது தீவிர இலக்கியத்தினின்று விலகிச்செல்ல செய்யாதா ?
செய்யாது. இறைக்கிற கிணறுதான் சுரக்கும். இலக்கியம், சினிமா, இசை, நாடகம் இவையெல்லாம் ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புள்ள கலைகள். இந்தக் கலைகளின் சங்கமம்தானே சினிமா. எனது இலக்கியப் பரிச்சயம் நான் பங்கெடுக்கும் சினிமாவுக்கும் எனது சினிமாப் பரிச்சயம் நான் எழுதும் இலக்கியத்திற்கும் உறுதுணைகளாகவே அமையும்.
தவிரவும் நான் சினிமாவில் பங்கெடுப்பது என்பது எப்போதாவது ஒருமுறைதான் நிகழும் செயல். இலக்கிய வாசிப்பும் எழுத்தும் இல்லாமல் எனக்கு ஒரு நாளில்லை.
நாவல்கள் – சிறுகதைகள் – கட்டுரைகள் எனப்பல வருடங்களாகத் தொடர்ச்சியாகச் செயற்பட்ட உங்களை ஒரு பிரெஞ்சுச் சினிமாவும் அதற்கான விருதும் வெகுசனங்களிடம் கொண்டு சென்றதாக உணர்கிறீர்களா?
தீவிர இலக்கியத்தினதும் சினிமாவினதும் நுகர்வுப் பரப்புகள் பண்பிலும் அளவிலும் வெவ்வேறானவை. அதேபோன்று அவை வெகுசனங்களை எட்டும் வீச்சும் வேறுவேறானவைதானே.
குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர்களைக் கவனியுங்கள். இலக்கியம் எழுதுபவர்களைத் தவிர வேறுயாருமே இலக்கியம் படிப்பதில்லை என்றுதான் தோன்றுகின்றது. அப்படி யாராவது இருப்பின் அவர்கள் மிக மிகச் சிலரே. முன்னர், தீவிர இலக்கியத்தைப் படிக்காவிட்டாலும் சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா என வாசிக்கும் போக்குப் பரவலாக இருந்தது. இப்போது அதுவும் அருகிவிட்டது. வணிக எழுத்துகளைக் கூட வாசிக்காத ஒரு நிலைதான் இங்கிருக்கிறது. இதற்குள் தீவிர இலக்கிய எழுத்தாளன் சிலநூறு பேரைச் சென்றடைவதே போராட்டம்தான்.
சிறீலங்கா அரசாங்கம் இத்திரைப்படத்தை முன்னிட்டு என்ன நோக்கத்தில் குறிப்பொன்றை வாழ்த்துவதாக வெளியிட்டிருக்கமுடியும். தீபன் செய்யும் விமர்சனம் அவர்களை முன் வைத்ததாகவில்லை என்ற தப்பித்தலாக இருக்குமென நினைக்கிறீர்களா?
தீபன் ‘கான்’ திரைப்படவிழாவில் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த எண்ணற்ற சர்வதேச ஊடகங்களில் ‘தீபன்’ படத்தை முன்வைத்து இலங்கையில் நடந்த யுத்தம் குறித்தும் இலங்கை அரசின் இனப் படுகொலை குறித்தும் பேசப்படும் சூழ்நிலை உருவாகியிருந்தது. குறிப்பாக என்னிடம் ஊடகங்கள் இலங்கை பற்றியே கேட்டுக்கொண்டிருந்தன. ‘பல்ம்தோர்’ விருது கிடைத்ததைத் தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள் தீபன் படத்தைக் குறித்து எழுதும்போதும் சொல்லும்போதும் இலங்கையில் நடந்த யுத்தத்தையும் அதனால் அகதியான மக்களையும் குறித்துச் சொல்லிக்கொண்டிருந்தன. இந்த ஊடக வெளிச்சத்திற்கான எதிர்வினைதான் இலங்கை அமைச்சர் ராஜித சேனாரத்ன ‘ஏ.எஃப்.பி’ செய்தி நிறுவனத்திற்கு சொன்ன அந்த வார்த்தைகள்.
‘இலங்கையில் புனர்வாழ்வுத் திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்நிலையில் இலங்கையில் நடந்த யுத்தம் குறித்து சர்வதேசமட்டங்களில் தீபன் படம் மூலம் ஓர் கவனம் ஏற்படுவது நல்லது’ என்றவர் குறிப்பிட்டார். தீபன் படத்தில் சொல்லப்பட்ட கதை பழையது என்றும் இப்போதிருக்கும் புதிய அரசாங்கத்தில் பல முன்னேற்றகரமான மாற்றங்கள் நிகழ்கின்றன என்றும் குறிப்பிட்ட அமைச்சர் ஒன்றைக் குறிப்பிட மறந்துவிட்டார். பழைய அரசாங்கத்திலும் அதாவது யுத்தத்தை நடத்திய மகிந்த அரசாங்கத்திலும் இதே ராஜித சேனாரத்ன அமைச்சராகவேயிருந்தார். புதிய அரசின் தலைவர் மைத்ரிபால சிறிசேனாவும் முந்தைய அரசில் மிக முக்கியமான அமைச்சராக இருந்தவர்தான். எவ்வளவு சுலபமாகப் பொறுப்புகளைத் துறந்துவிடுகிறார்கள் பாருங்கள்.
பழைய அரசாங்கத்திற்கும் புதிய அரசாங்கத்திற்கும் வித்தியாசங்கள் உள்ளன என்பது உண்மைதான். இந்த வித்தியாசங்களை அரசியல் வெற்றியாக்குவது என்பது சிறுபான்மை இனங்களது அரசியற் தலைமைகளின் கைகளிலேயே உள்ளன. சிங்கள இனவாத அரசியல் களத்தைவிட்டு புதிய அரசு தானாக நகர்ந்து வராது.
தீபன் படத்தில் நடிப்பு தவிர்ந்த உங்கள் பங்களிப்பு என்ன?
பிரஞ்சில் எழுதப்பட்டிருந்த உரையாடல்களை ஈழத் தமிழ் வழக்கிற்கு மாற்றியதில் எனக்குப் பங்கிருக்கிறது. படத்தின் கதை ஈழத்து மனிதர்களையும் இலங்கையில் நடந்த யுத்தத்தையும் குறித்துப் பேசுவதால் சில தகவல்களை வழங்கியது என்ற அளவிலும் பங்குண்டு.
தீபன் படத்தில் நடிப்பதால் கிடைக்கும் ஊடக வெளிச்சம், பொருளாதார நலன் என்பதையும் தாண்டி அப்படத்தில் உங்களை நடிக்கத் தூண்டிய காரணியெது?
திரைப்படக்கலை மீதுள்ள ஆர்வமே அடிப்படையான காரணி. அநேகமான தமிழர்களைப் போல நானும் சினிமாப் பைத்தியம்தான். சம்பளம் தராவிட்டால் கூட நடிக்கத்தான் செய்திருப்பேன். நானும் கூட திரைப்பட ஸ்கிரிப்டுகள் எழுதுகிறேனல்லவா. தீபன் படத்தில் பணியாற்றியது மூலம் திரைப்பட ஸ்கிரிப்ட் எழுதும் கலையையும் ஓரளவு பயின்றிருக்கிறேன் எனச் சொல்லலாம்.
உங்கள் குறித்து சமூகவலைத்தளங்களிலும் இணையத்திலும் முன் வைக்கப்படும் விமர்சன / அவதூறுக் கட்டுரைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
விமர்சனக் கட்டுரைகளைக் கவனமாகப் படிப்பேன். தேவையென நான் கருதும் பட்சத்தில் பதில்களையும் எழுதுவதுண்டு. ஓர் எழுத்தாளனின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல அவன் ஓயாமற் செயற்படவும் விமர்சனங்கள் மிக அவசியமாகின்றன. அந்தவகையில் நான் பாக்கியவான். விமர்சனங்கள் என்னை எச்சரிக்கின்றன, நெறிப்படுத்துகின்றன, என்னை மேலும் கடுமையாக உழைக்கக் கோருகின்றன. ஒவ்வொரு சொல்லையும் ஒன்றுக்கு நான்கு தடவைகள் யோசித்து என்னைப் பேச வைக்கின்றன. பேசிய சொற்களிற்குப் பொறுப்புச் சொல்ல நிர்ப்பந்திக்கின்றன.
அவதூறுகள் குறித்தும் கேட்டீர்கள், வம்பு செய்யவென்றே எழுதும் அவதூறாளர்கள் ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அதையும் கடந்துதான் செல்ல வேண்டும். இந்த அவதூறுகளைப் படிக்கும் வாசகர்கள் முட்டாள்களல்ல. அவர்களால் அவதூறுகளை இனம்கண்டு ஒதுக்கிவிட முடியும் என்ற நன்நம்பிக்கைதான் என்னை இவ்வளவு அவதூறுகளிற்கு நடுவிலும் ஓயாமல் இயங்கவைக்கிறது. அவதூறுகளிற்கு உண்மையிலேயே சக்தியிருக்கிறது என்றால், அவற்றை வாசகர்கள் அப்படியே நம்பக்கூடும் என்றால் என்மீது இத்தனை வருடங்களாகச் செய்யப்பட்டுவரும் அவதூறுகள் காரணமாக என்னை நாய் கூடச் சீண்டியிருக்காது. தனிமைப்படுத்தப்பட்டுச் சீரழிந்திருப்பேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லைத்தானே. தமிழ்ப் பரப்பு முழுவதும் தீவிர வாசகர்கள் என்னைப் படித்துக்கொண்டேதானிருக்கிறார்கள். எந்தத் தமிழ் இலக்கியப் பத்திரிகையும் என்னை ஒதுக்கி வைத்துவிடவில்லையே. உலகம் முழுதும் நண்பர்களோடு உங்கள் கண்முன்னேதானே நான் நடமாடிக்கொண்டிருக்கிறேன். எத்தனையோ கூட்டங்களில் பேசவும் கூட்டங்களில் எழுப்பப்படும் கேள்விகளிற்கு பதிலளிக்கவும் நான் தயங்குவதில்லையே. இதைத்தான் ‘மடியில் கனமில்லாவிட்டால் வழியில் பயமிருக்காது’ என நம் மூதாதையர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
என்னோடு கொண்டுள்ள நட்புக் காரணமாகவும் தோழமை காரணமாகவும் எனது தோழர்களும் என்பொருட்டு அவதூறுக்கு உள்ளாவதுண்டு. அவதூறாளர்களின் இலக்கு அதுதானே. என்னைத் தனிமைப்படுத்த முயல்வதுதானே அவர்களது நோக்கம். அண்மையில் கூட, ‘என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு தமிழகப் பத்திரிகையாளத் தோழர்கள் என் குறித்த செய்திகளையும் நேர்காணல்களையும் பத்திரிகைகளில் வெளியிடுகிறார்கள்’ என ஒரு அவதூறு கிளப்பப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். என் குறித்து எழுதுவதாலும் எனது நேர்காணல்களை வெளியிடுவதாலும் தமிழகப் பத்திரிகையாள நண்பர்களிற்கு இவ்வாறானவொரு அவப்பழி.
ஆனால், இந்த அவதூறைப் படிக்கும் ஒருவர் சிந்திக்கமாட்டாரா என்ன! என்னைத் தமிழகத்தில் முதன்முதலாக நேர்காணல் செய்து ஆனந்தவிகடனில் எழுதியவர் எனது கருத்துகளோடு சிறிதும் உடன்பாடற்ற டி. அருள்எழிலன். அவர் என்ன என்னிடம் பணம் பெற்றுக்கொண்டா இதைச் செய்தார்? அநேகமாக எனது நேர்காணல்களோ என்னைக் குறித்த செய்திகளோ வெளிவராத தமிழக வார இதழ்கள் எதுவுமில்லை என்றே சொல்லலாம். தவிரவும் தினப்பத்திரிகைகளிலும் சிறுபத்திரிகைகளிலும் எனது நேர்காணல்களோ என் குறித்த செய்திகளோ தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. என் நூல்களிற்கு மதிப்புரைகள் வெளியாகின்றன. இதையெல்லாம் நான் பணம் கொடுத்துச் செய்விக்கிறேன் என்றால் அதை நம்புமளவிற்கு வாசகர்கள் முட்டாள்களுமல்ல, அப்படி இலஞ்சம் பெற்றுக்கொண்டு எழுதுமளவிற்கு பத்ரிகையாளர்கள் எல்லோரும் கேவலமானவர்களுமல்ல. இப்போது திரைப்படத்தில் நடித்ததற்குப் பின்னான காலங்களை விடுங்கள். அதற்கு முன்னான காலங்களிலேயே எனது நேர்காணல்கள் மலையாள, சிங்கள இதழ்களிலும் எண்ணற்ற ஆங்கிலப் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன. அந்தப் பத்திரிகையாளர்களும் என்னிடம் இலஞ்சம் பெற்றுத்தான் எனது நேர்காணல்களையும் என்குறித்த கட்டுரைகளையும் வெளியிட்டார்களா? வேர்ல்ட் ருடே லிக்ரேட்சரும், க்ராந்தாவும், வோர்ஸ்கேப்ஸ§ம் என்னிடம் இலஞ்சம் பெறும் நிலையிலா இருக்கிறார்கள்? ஏன் தமிழகப் பத்திரிகைகள் மட்டும்தானா, ஈழத்தில் நடத்தப்படும் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் புலம்பெயர் சிற்றிதழ்களும் எனது நேர்காணல்களை வெளியிடத்தானே செய்கின்றன! அவர்களும் இந்த இலஞ்சக் குற்றச்சாட்டிற்கு உள்ளாவார்களா என்ன? இதையெல்லாம் ஒரு சீரிய வாசகன் சிந்திக்கமாட்டானா என்ன!
தொடர்ச்சியாக இருபது வருடங்கள் எழுதியும் பேசியும் வரும் ஒரு எழுத்தாளனை; அரசியல் விமர்சனம், கதை, கட்டுரை, நாடகம், சினிமா, பதிப்பு எனச் செயற்பட்டுக்கொண்டிருப்பவனை, தமிழகப் பத்திரிகைகள் எழுதினால் கரித்துக்கொட்டும் இவர்கள்தான் இன்னொருபுறத்தில் ஈழத்து எழுத்தாளர்களைத் தமிழகம் கண்டுகொள்வதில்லை எனப் பிலாக்கணமும் வைப்பவர்கள்.
உண்மையில் அவதூறு என்பது அவதூறாளனது சுயமோகத்தையும் கோழைத்தனத்தையும் செத்த மூளையையும் எழுத்துச் சோம்பேறித்தனத்தையும் மறைப்பதற்கான உளுத்துப்போன கவசம் மட்டுமே. இந்த அவதூறுகளால் எனது ஒரு ரோமத்தைக்கூட உதிர்த்துவிட முடியாது.
புலம்பெயர் இலக்கிய சூழல் எப்படியிருக்கிறது?
நன்றாகத்தான் இருக்கிறது. எல்லோரும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். ஓரளவிற்கு தேசியவாத மயக்கம் தெளிந்திருக்கிறது. புலிகள் மீதான அச்சம் எழுத்தாளர்களிற்கு இல்லாமல் போயிருக்கிறது. இந்தப் புறநிலைகள் புதிய புதிய எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் நமக்கு அடையாளம் காட்டித்தரும் என நம்புகின்றேன். சமூக வலைத்தளங்களிற்குள் நேரத்தைப் போகக்காட்டாது தொடர்ச்சியான படைப்பு மனநிலையில் இயங்குவதுதான் இளம் புலம் பெயர் எழுத்தாளர்களிற்கு முன்னிருக்கும் இப்போதைய உடனடிச் சவால்.
விடுதலைப்புலிகளில் அரசியல் / போராட்ட முறைகளை நிராகரித்து வந்த நீங்கள் இப்போது அவர்கள் அரசியல் / போராட்ட அரங்கிலிருந்து முற்றாக விலக்கப்பட்ட நிலையில் மக்களுக்கான தீர்வாக எதனை முன்வைப்பீர்கள்?
இனி சனநாயக அரசியல்நெறிதான் எம்முடைய அரசியல் வழி. இனிவரும் இலங்கையின் அரசியல் மாற்றங்கள் நாடாளுமன்றத்தில்தான் தீர்மானிக்கப்படும். சிறுபான்மையினருடைய பாதுகாப்பும் உரிமைகளும் ஆயுதங்களினாலல்லாமல் அரசியற் சாசனத்தின் வழியேதான் உறுதி செய்யப்பட வேண்டும். சர்வதேசம் எங்களுடைய பிரச்சினையில் தலையிடும், தீர்வுதரும் என்பதெல்லாம் வெறும் கற்பனைகளே. தமிழர்களிற்குள் நானாவித கருத்துகளுடன் நாற்பது கட்சிகளுள்ளன. இருந்துவிட்டுப் போகட்டும். அதுதான் பலகட்சி சனநாயகம். ஆனால் இந்தக் கட்சித் தலைமைகள் ஒடுக்கப்படும் தமிழரின் நலனை மட்டும் முன்னிறுத்தி ஒரு பொது உடன்பாட்டிற்கு வராவிட்டால், வேற்றுமைக்குள் ஒற்றுமையை அனுசரிக்காவிட்டால், தமிழ் மக்களது ஒட்டுமொத்த அரசியற் பலத்தையும் ஒருமுகப்படுத்தி நாடாளுமன்றத்தில் அரசியல் நடாத்தாவிட்டால் இன்னும் சில பத்து வருடங்களில் முழு இலங்கையும் சிங்களமயமாக்கப்படும். அந்தச் சிங்கள மயத்திற்குள் தமிழ்த் தேசிய இனம் கரைந்துபோய்விடும். எனவே நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். என்னிடம் சொல்லத் தீர்வல்ல, அறிவிக்க எச்சரிக்கையே உண்டு!
உங்களது புதிய நாவல் ‘பொக்ஸ் கதைப்புத்தகம்’ குறித்துச் சொல்லுங்கள்..?
முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து முடிந்து இரண்டு வருடங்களிற்குப் பிறகு வன்னிக் கிராமமொன்றில் நடக்கும் கதையை நாவலாக்கியுள்ளேன்.
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழும்போது நான் அங்கிருக்கவில்லை. வன்னியைப் பற்றியும் வன்னி மக்களைப் பற்றியும் அவர்களது பண்பாடு, பழக்கவழக்கங்கள், நிலப்பரப்பு இவை குறித்தும் எனக்கு அதிகமாகத் தெரியாது. ஆனால் எனக்கு யுத்தத்தைத் தெரியும்.
யுத்தம் எவ்வாறு ஒரு தேசத்தையும் அதன் மக்களையும் சிதைத்துப்போடுகிறது, யுத்தம் ஏன் எல்லாவழிகளிலும் அறமற்றேயிருக்கிறது? யுத்தத்திற்கு முன்னே நாங்களாக ‘விடுதலை’, ‘தேசிய’, ‘புரட்சிகர’, ‘மீட்பு’ என அடையாளங்களைச் சூட்டிக்கொண்டாலும் யுத்தம் எவ்வாறு யுத்தநிலத்தின் ஒவ்வொரு ஆன்மாவையும் சிதைத்துப்போடுகிறது என்பதைக் கதைகள் வழியே சொல்லியிருக்கின்றேன்.
இதுவரை உலகில் நடந்த எந்த யுத்தத்தைப் பற்றியும் உள்ளது உள்ளபடியே எழுதப்படவில்லை. அதற்கு ஈழ யுத்தமும் விதிவிலக்கானதல்ல. வரலாற்றாசிரியர்களும் செய்தியாளர்களும் கட்டுரையாளர்களும் மனிதவுரிமையாளர்களும் சர்வதேசக் கண்காணிப்பாளர்களும் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட தளங்களிற்குள் புனைவின் துணைகொண்டு நான் நுழைந்திருக்கிறேன்.
♦