பிரபாகரன் வாழ்க பிடல் கஸ்ட்ரோ வாழ்க ரோகண விஜே வீர வாழ்க சீமான் வாழ்க சே குவேரா வாழ்க உருத்திரகுமாரன் வாழ்க லெனின் வாழ்க நிரஞ்சினி வாழ்க!
பரிஸில பஸ்டில் கோட்டையிருந்த இடத்திலயிருந்துதான் எப்பயும் மேதின ஊர்வலம் தொடங்குறது. எத்தின நாட்டுச் சனங்கள், எத்தின கட்சிகள், எத்தினை கொடிகள், எத்தினையெத்தினை கோசங்கள். குர்டிஸ்காரர், பலஸ்தின்காரர், கொங்கோகாரர், மெக்சிகோகாரர், திபேத்காரர், தமிழர், சிங்களவர் எண்டு எத்தினை முகங்கள். இடைக்கிட அடிதடியும் வாறதுதான். பொலிஸோடும் வாறது, எங்கிட ஆக்களுக்குள்ளயும் வாறது.
நான் இருவது வரியமா ஒவ்வொரு மேதின ஊர்வலத்துக்கும் வாறது. ஒரு வரியமும் தப்பினதில்லை. பத்துரோன் லேசில லீவு தரமாட்டான். அண்டைக்கு வேலை செய்தா டபுள் சம்பளம் வேற. ஆனால் நான் வாறதுதான். சனங்களோட சேர்ந்து மார்ச் செய்யிறதும் கோசம் போடுறதும் ஒரு சந்தோசம். நிரஞ்சினியும் நானும் கன ஊர்வலங்களில ஆளையாள் பார்த்துக்கொண்டு மார்ச் பண்ணிப் போயிருக்கிறம்.
தமிழ் ஆக்களுக்குள்ள முந்தி எல்.ரீ.ரீ.ஈ. மட்டும்தான் ஊர்வலம் நடத்துறது. பத்தாயிரம் பதினைஞ்சாயிரம் சனங்கள் வரும். சிவப்பு மஞ்சள் கொடியளை உயர்த்திப் பிடிச்சுக்கொண்டு தேனிசை செல்லப்பாவின்ர பாட்டுகளையும் போட்டுக்கொண்டு தலைவற்ற படத்தையும் பிடிச்சுக்கொண்டு எல்லாரும் மார்ச் பண்ணிப் போகயிக்க தன்னால ஒரு உசார் வரும் எனக்கு.
இந்த வருசம் தமிழாக்கள் அஞ்சாறு பிரிவா மேதின ஊர்வலம் செய்யினம். நான் எல்லாற்ற ஊர்வலத்துக்கேயும் போய் ரெண்டு கோசம் போட்டுட்டுத்தான் வருவன். எனக்கு அவையள் இவையளெண்டு கிடையாது. ஆர் எங்கிட சனத்தோட நிக்கினமோ நான் அவையளோட.
இந்தமுறை தமிழாக்களுக்கு இடையில புதுசா ஒரு குழுவும் ஊர்வலம் நடத்திச்சு. கையில் கோசம் எழுதின மட்டையளோட ஒரு முப்பது பேர் இருப்பினம். நான் அவையளோடையும் கொஞ்சநேரம் மார்ச் பண்ணிக்கொண்டு போனன். இஞ்சால புலிப் பொடியளின்ர ஊர்வலத்தில் கன இளம்பொடியள் எண்டால் இவையிட குறூப்பில் எல்லாம் கிழடு கட்டையள்தான். கொஞ்சம் சந்தேகத்தோடதான் என்னைப் பார்த்தினம். என்னைப் பார்க்கிற எல்லாரும் கொஞ்சம் சந்தேகமாத்தான் என்னைப் பார்க்கிறவை. எதையும் ஒளிவு மறைவில்லாமல் கதைச்சுப் பேசினா எங்கிட ஆக்களுக்கு உடன சந்தேகம் வந்திரும். ஏதோ கதைவிட்டுக் கதை புடுங்கப்போறன் எண்டு நினைச்சுக்கொள்ளுதுகள்.
இவை ஆக்கள் அவ்ளளவு உசார் காணாது. கோசம் எழுதின மட்டையெண்டா தலைக்கு மேலயெல்லோ தூக்கிப்பிடிச்சுக்கொண்டு உசார மார்ச் வேணும். இவையள் என்னண்டால் கமக்கட்டுக்க வைக்குறதும் கீழ பிடிக்கிறதும் இடக்கிட சாட்டுக்கு மேல பிடிக்கிறதுமா மட்டையள சுருக்குக் குடை மாதிரித்தான் பாவிக்கினம்.
அப்ப நான் அவையிட்ட “அண்ணே எனக்குமொரு மட்டைதாங்கோ கையில வைச்சிருக்க” எண்டு கேட்டன். அப்பயும் அவையளுக்குக் கொஞ்சம் அய்மிச்சம்தான். “ஜனநாயகம் வாழ்க” எண்டு எழுதியிருந்த மட்டையொண்ட தந்தினம். வேறெதும் மட்டை இல்லையோ எண்டு கேட்டன். அவையள் திரும்பயும் என்னை சந்தேகத்தோட பார்த்தினம். “இல்ல அண்ணையவை இராணுவத்தை வெளியேற்று, ராஜபக்சவை விசாரணை செய், சுயநிர்ணய உரிமையை அங்கீகரி” எண்டு எழுதின மட்டையள் ஒண்டும் இல்லையோ எண்டு கேட்டன்.
அதுக்கு அவையள் “நீங்கள் சொன்ன விசயமெல்லாம் ‘ஜனநாயகம் வாழ்க’ எண்டதுக்குள்ள அடங்குதுதானே” எண்டு சொல்லிச்சினம். அவையள் சொல்லுறது சரிதான். நாங்கள் எதுக்கு மற்றவனை ஒழிய அழியவெண்டு சொல்லவேணும். நல்ல விசயத்தை வாழ்க எண்டுவம். அதுக்குள்ள கெட்டதுகள் ஒழிக எண்டதும் அடங்குதுதானே. எங்களுக்கு எதுக்கு வெஞ்சொல்! நல்லதை மட்டும் சொல்லுவமே. ஜனநாயகம் வாழ்க! அங்க புலிப்பொடியளின்ர ஊர்வலத்தில பறையடிக்கிற சத்தம் இஞ்ச கேக்குது.
எனக்குப் பன்ரெண்டு பதின்மூண்டு வயசிருக்கையிக்க எங்கிட ஊரில ஒரு ஊர்வலம் நடந்துது. அதுவும் பறைமோளம் அடிச்சுக்கொண்டுதான் நடந்தது. என்ர அண்ணன்மார் நாலுபேரும்தான் முன்னுக்கு நிண்டு மோளமடிச்சவை. எங்கிட ஏரியாச் சனங்கள் முழுக்க ஊர்வலமாப் பறையடிச்சுக்கொண்டு போய் வங்களாவடிச் சந்தியில போட்டு பறைமோளங்களைக் கோடாலியால கொத்தி பன்னாடையள மேல போட்டு எரிச்சம். இனிச் செத்தவீடுகளுக்கு பறையடிக்கிறதில்லை எண்டு முடிவெடுத்தம்.
பிந்தி, எங்களுக்கு நித்திய பஞ்சமும் பட்டினியும்தான். குடிமை வேல பார்க்கப் போகமாட்டம் எண்டு சொன்னதால வெள்ளாமாக்கள் தங்கிட தோட்டத்துக்குள்ள வேலைக்குக் கால் வைக்கக்கூடாது எண்டு சொல்லிப் போட்டினம். என்ர மாமா சின்னவனுக்கு வங்களாவடிச் சந்தியில வைச்சு வெள்ளாமாக்கள் கையையும் வெட்டிப்போட்டாங்கள். கயிட்டத்தைப் பொறுக்க ஏலாமல் திரும்பயும் மோளம் அடிக்கத்தான் போகவேண்டியிருந்தது. ஆனால் என்ர அண்ணன்மார் குடிமை செய்யப் போகயில்லை. முதலில ஆசையண்ணன்தான் வட்டிக்கு காசு வேண்டிக்கொண்டு சவூதிக்குப் போனவன். அதுக்குப் பிறகுதான் நாங்கள் கொஞ்சம் நிமிர்ந்தது. ஆசையண்ணனைத் தொட்டுப் பெரியண்ணனும் சீனியண்ணனும் சவூதிக்குப் போனவை. வெள்ளாமாக்களுக்கு எங்கிட குடும்பத்தில புண்ணில புளிபத்தின கோவம். அவையள் எங்கள ‘சவூதிப் பறையர்’ எண்டுதான் சொல்லுறவை.
நான் யவ்னா சென்றல் கொலிஜில படிச்சுக்கொண்டிருந்த காலம் நாட்டுப் பிரச்சினை முளாசி எரிஞ்ச காலம். பள்ளிக்கூடம் ஒழுங்கா நடக்காது. இடைக்கிட கோட்டையிலயிருந்து ஷெல்லும் பள்ளிக்கூடத்துக்க வந்து விழும். ஒரு நாளைக்கு ஒரு இயக்கம் ஊர்வலம் நடத்தும். அரசாங்கத்தோட பேச்சுவார்த்தை கேட்டு ஒரு இயக்கம் ஊர்வலம் நடத்தினா பேச்சுவார்த்தை வேண்டாமெண்டு ஒரு இயக்கம் ஊர்வலம் நடத்தும். கம்பஸ் பொடியனக் கடத்திப் போட்டாங்களெண்டு ஒரு இயக்கம் ஊர்வலம் நடத்தினா மற்ற இயக்கம் நாங்கள் கடத்தயில்ல எண்டு ஊர்வலம் நடத்தும். நான் எல்லா ஊர்வலத்துக்கும் போவன். கருத்து வேறுபாடுகள் இண்டைக்கிருக்கும் நாளைக்குப் போகும். ஆனால் சனங்களோட சேர்ந்து கையைப் பிடிச்சுக்கொண்டு நடக்கயிக்க ஒரு பலம்.
பலாலி இந்தியன் அமைதிப்படை ஆமிக் காம்புக்கு முன்னுக்கு நாங்கள் நடத்தின ஊர்வலம்தான் மறக்க ஏலாத ஊர்வலம். மருதனாமடச் சந்தியிலயிருந்துதான் ஊர்வலம் தொடங்கினது. ஒரு இருவதாயிரம் முப்பதாயிரம் சனமிருக்கும். நாங்கள் யவ்னா சென்றல் கொலிஜ் பொடியள்தான் முன்வரிசை. நான் ஒரு கோசத்தை நானா இயற்றிக் கத்தினன்.
” நேருவின் பேரன் தமிழனுக்கு எதிரி”
என்னோட நிண்ட பொடியளும் சேர்ந்து கத்த ஊர்வலம் அதிர்ந்துது. இயக்கம்தான் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தி நடத்தினது. அப்ப பிரசாத் அண்ணைதான் அரசியல் பொறுப்பாளர். அவர் எங்களுக்குப் பக்கத்தில வந்து பார்த்துப்போட்டு என்ர கையைப் பிடிச்சு இழுத்துக்கொண்டுபோய் ஒரு வேனுக்கு மேல ஏத்திப்போட்டு கையில மைக்கத் தந்திற்று முதுகில தட்டினார். நான் வெள்ளைச் சேட்டும் வெள்ளை லோங்சும் போட்டுக்கொண்டு வேனில நிண்டு மைக்கில கோசம் போட்ட படம் ஈழநாடு பேப்பரில வந்தது.
நான் மைக்கில உரத்துக் கத்தினன்:
“ஆயிரம் உண்டிங்கு சாதி எனில், அன்னியர் வந்து புகல் என்ன நீதி”
நான் கோசம் போட்டுக்கொண்டுருக்கயிக்க இந்தியன் ஆமி, அவனொரு மைக்கில எதிர் கோசமெண்டு போட்டான். அஞ்சு நிமிசத்தில் எல்லாரும் இஞ்சையிருந்து கலைஞ்சு போகாட்டி சுடுவம் எண்டாங்கள். நாங்கள் இஞ்ச நிண்டு கோசம் போட்டுக்கொண்டிருந்த அதே நேரத்தில ரவுணுக்குள்ள இந்தியன் ஆமிக்கும் இயக்கத்துக்கும் சண்டை துவங்கிற்று. எல்லாரும் கலைஞ்சு ஓடினம். நான் ரவுணுக்க வாறன் ரவுணுக்குள்ளால ஷெல் அறம்புறமாப் பறக்குது. இந்தியன் ஆமியோ? ஷெல் அடிக்கிறாங்களோ எண்டு சனங்கள் கன்னத்தில கைவைச்சு ஷொக்காகி நிண்டுகொண்டிருக்க ஷொக்கத் தெளியச் செய்யுறமாதிரி நாலு பக்கத்தாலும் பொம்பரால கொண்டு வந்து கொட்டினாங்கள். எனக்கு மைக் தந்த பிரசாத் அண்ணையும் பிறகு சண்டையில வீரச்சாவாகிப் போனார். அதுக்கும் ஒரு ஊர்வலம் வைச்சனாங்கள்.
நான் வெளிநாட்டுக்கு வந்த ஒரு மாசத்திலேயே சனங்களையும் ஊர்வலத்தையும் தேடிக் கண்டுபிடிச்சுப் போயிட்டன். நான் இஞ்ச பிரான்சுக்கு வாறதுக்கு முந்தி ஜெர்மனிக்குத்தான் வந்தனான். பிராங்போர்ட்டில ஸ்டட் அடிச்சு விட்டவங்கள். அந்த முறை பிராங்போர்ட்டில எல்.ரி.ரி.ஈ. பெரியவொரு மேதின ஊர்வலத்தை நடத்திச்சினம். இஞ்ச ஊர்வலம் நடக்குது கொழும்பில தாக்குதல் வெற்றி எண்டு செய்தி வருகுது. ஊர்வலத்தில அப்பிடியொரு உற்சாகம். கோஷம் அதிருது. தலைவற்ற படத்தை முன்னால உயர்த்திப் பிடிச்சபடி ஊர்வலம் மார்ச் பண்ணுது.
ஊர்வலத்தின்ர முன்வரிசையில பரதநாட்டியம், கோலாட்டம், சிலம்பாட்டம், பொய்கால் குதிரையாட்டம், பறை எல்லாம் போகுது. நான் முன்னுக்குப் போய் பறை அடிக்கிற பொடியனுக்குப் பக்கத்தில நிண்டன். அந்தப் பொடியன் கறுத்தக் களிசானும் கறுத்தச் சேட்டும் போட்டு தலையில சிவப்புநிறத் துண்டு கட்டியிருந்தான். அவனுக்குப் பறையைச் சரியாப் பிடிக்கவே தெரியேல்ல. டமார் டொமொலெண்டு கொல்லன் பட்டறையில இரும்படிச்ச மாதிரி அடிக்கிறான். பறை அழுகுது. ஆனால் பொடியன்ர கண்ணும் மூக்கும் மட்டும் பல பாவங்கள் காட்டுது. எங்கேயோ அரையுங் குறையுமாப் பழகியிருக்கிறான். “எங்க பழகினது” எண்டு கேட்டன். “நாங்கள் டுசில்டோர்ப் கேணல் கிட்டு கலைக் குழு” எண்டான்.
“அண்ண இத தாண்ணே” எண்டு கேட்டன். அவனுக்கெண்டால் தர விருப்பமில்லப் போலதான் கிடந்தது. என்னைப் பார்த்துக் கண்ணை ஆட்டி ஆட்டி இடுப்பை ஆட்டிக்கொண்டு பேந்தும் பறையை அடிச்சான். பறை அழுகுது. எனக்குக் கொதிதான் வந்துது. “விடண்ணை உத” எண்டு ஒத்திப் பறிக்குமாப்போலதான் பறையை அவனட்டியிருந்து வேண்டினன்.
வைத்தி அப்பு சொல்லித் தந்த தாளம் நெஞ்சியிலியிருந்து அப்பிடியே கைக்குள்ள இறங்கிச்சுது.
தன்னங் தரணங் அறுவுது
தன்னங் தரணங் அறுவுது
டுண் டுண் டுண் டுண்..
தரணங் தரணங் அறுவுது..
பறைச் சத்தம் கிண் கிண்ணெண்டு ஊர்வலத்துக்குள்ள பரவிச்சுது. அப்பிடியே ஊர்வலம் முழுக்க என்னைத்தான் திரும்பிப் பார்த்துது. என்னை அப்பிடியே ஒரு திறந்த வேனில் ஏத்திவிட்டிச்சினம். வேன் போய்க்கொண்டிருக்கு. பறை அதிருது. முழு டொச்காரரச் சனங்களின்ர பார்வையும் எனக்கு மேலதான். நான் கணக்குப் பார்த்து நிப்பாட்டுற இடத்தில ஊர்வலத்தின்ர கோசம் வானத்தப் பிரிக்குது
“வீ வோன்ட் தமிழீழம்”
அடுத்த கிழமை மூண்டு அய்ரோப்பா தமிழ்ப் பேப்பருகளின்ர முதல் பக்கத்தில நான் வேனில நிண்டு பறையடிச்சுக்கொண்டிருக்க என்னைச் சுத்திப் பொடியள் ஆடிக்கொண்டிருக்கிற படம் வந்துது.
நான் பறையடிச்சுக்கொண்டு நிக்கயிக்கதான் கோலாட்டக் குழுவில மஞ்சள் பாவாடையும் சிவப்புத் தாவணியும் கட்டிக்கொண்டு ஆடிக்கொண்டிருந்த நிரஞ்சினியை முதல் முதலாய்ப் பார்த்தன்.
எனக்கு அப்ப இருவத்திமூண்டு வயசு. நிரஞ்சினிக்கு பதினேழு வயசு. நிரஞ்சினி நல்ல கறுப்பி. நெடுநெடுவெண்டு உயரம். சரியான மெல்லிசு. முன்பல்லு ரெண்டு எப்பன் மிதப்பு. அவளின்ர மூக்கில கிடந்த மூக்குத்தி அவளின்ர கறுப்பு முகத்தில நட்சத்திரம் மாதிரி மினுங்கிச்சுது.
பிறகு கன ஊர்வலங்கள், கலை விழாக்கள், மாவீரர் நாள் எண்டு நான் நிரஞ்சினியைப் பார்த்தன். தேப்பன், தாய், தம்பியோட வருவாள். அவள்தான் முதல் என்ர ரெலிபோன் நம்பர் கேட்டவள். எல்லாம் கைச் சிக்னல்தான். ஒரு துண்டுப் பேப்பரில எழுதி ஆரும் பார்க்காத நேரம் அவளின்ர மடியில போட்டன். அப்ப ‘செல்’ போன் இல்லாத காலங்கள். அவள்தான் நானிருந்த காம்புக்கு போன் அடிப்பாள்.
நாங்கள் காதலிச்சம். மணித்தியாலக் கணக்காப் போன் கதைச்சம். அவளுக்கு ஒரு நாளைக்கு கூட என்னைப் பார்க்காம இருக்க ஏலாது. அவள் படிச்ச கொலேஜுக்கு நான் போவன். அங்கயிருந்த புல்வெளியில இருந்துகொண்டு நேரம் போறது தெரியாமக் கதைப்பம். ஒருநாள் நிரஞ்சினி என்னை அவளின்ர வெள்ளைக்கார சிநேகிதப் பெட்டையின்ர ரூமுக்குக் கூட்டிக்கொண்டு போனாள். சிநேகிதக்காரப் பெட்டை எங்கள் ரெண்டு பேரையும் தனிய ரூமில விட்டிட்டு வெளியில போயிற்றாள். அண்டைக்கு நானும் நிரஞ்சினியும் ஒருத்தரை ஒருத்தர் புத்தியாலயும் சரீரத்தாலயும் அறிஞ்சுகொண்டம். நிரஞ்சினி அடுத்த மேதின ஊர்வலத்துக்கு முதலே செத்துப்போனாள். அவள் செத்ததுக்குப் பிறகு எனக்கு ஜெர்மனியில் இருக்க விருப்பமில்லாமல்தான் நான் பிரான்சுக்கு வந்தனான்.
நிரஞ்சினி பன்ரெண்டு வயசில ஜெர்மனிக்கு வந்தவள். தேப்பனுக்குப் பெயர் தவபாலன். வடமராச்சி ஆக்கள். பிராங்போர்ட்டில தமிழ்ப்பட வீடியோ கசற்றுகள், தமிழ் புத்தகம் பேப்பர்கள், உடுபுடவைகள் விக்கிற கடை வைச்சிருந்தவர். அந்தக் கடைக்குப் பேரே ‘நிரஞ்சினி தமிழ்க் கடை’ தான். நிரஞ்சினியின்ர தாயும் அந்தக் கடையில் நிக்கிறவ. நிரஞ்சினிக்கு அப்ப பத்து வயசில ஒரு தம்பியிருந்தவன்.
நிரஞ்சினி கொஞ்சம் துணிஞ்ச பெட்டை. எனக்கோ விசாவே கிடைக்கயில்ல. வேலையுமில்ல. அவள்தான் எனக்கு தைரியம் சொல்லுவாள். இடக்கிடை, நான் வேணாமெண்டு சொன்னாலும் காசும் தருவாள். நான் பாடுற பாட்டுக்களெண்டால் அவளுக்கு உசிர். போன் அடிச்சுப் போட்டு பாடுங்கோ பாடுங்கோ எண்டு கேப்பாள். வைத்தி அப்புவின்ர பாட்டொண்டிருக்கு:
கஞ்சி குடி மறந்தேன்
காலத்தைத் தான் மறந்தேன்
வெற்றிலைத் தீன் மறந்தேன் – இந்த
வெள்ளாம் பொடிச்சியால
பொட்டிட்ட நெற்றிக்கும் உன்
பூவண்ணச் சட்டைக்கும்
கட்டுண்டு நின்று
கலங்குதடி என் மனது.
ரெலிபோன் பில்லாலதான் எங்கிட காதல் பிடிபட்டது. தேப்பனும் தாயும் கடையிலயிருக்க வீட்டிலயிருந்து நிரஞ்சினி என்னோட போன் கதைச்சுக்கொண்டேயிருப்பாள். போன் பில்லப் பார்த்திட்டுத் தேப்பன் கேட்க நிரஞ்சினி ஒண்டையும் ஒளியாமல் இன்ன இன்ன மாதிரி நான் அவரைத்தான் கலியாணம் கட்டப்போறன் எண்டு சொல்லிப்போட்டாள்.
தேப்பன் தன்ர கூட்டாளிமார் ரெண்டு பேரையும் கூட்டிக்கொண்டு என்னைத் தேடிக் காம்புக்கு வந்திற்றார். என்ன விசயம் எண்டு விசாரிச்சார். நானும் நிரஞ்சினிய லவ் பண்ணிறதாச் சொன்னன். சடாரெண்டு என்ர காதைப் பொத்தி அடிச்சார். ஸ்ரோங்கான அடிதான். அப்பிடியே தலை ஒருக்காச் சுத்தி வந்துது. இன்னொரு அடி அடிச்சிருந்தேரெண்டால் செத்துப்போயிருப்பன். நான் திருப்பி அடிக்கயில்ல. என்னயிருந்தாலும் நிரஞ்சினியின்ர தேப்பனல்லே. காதல் வாழ்க!
அதுக்குப் பிறகு நிரஞ்சினிக்குக் காவல் போட்டிச்சினம். கொலேஜ் வாசலில தாய்க்காரி காரோட காவல் நிண்டா. வீட்டிலயிருந்த ரெலிபோனும் கட். தமிழ்ப்பட கசெற் விக்கிற முதலாளியெல்லே, தமிழ்ப் படத்தில வாற எல்லா வேலையும் செய்தார். தன்ர மானம் போயிருமெண்டு கண்ணீர் விட்டு அழுது நிரஞ்சினியின்ர காலில விழுந்து கும்பிட்டிருக்கிறார்.
நிரஞ்சினி அவையளுக்கு என்னவாவது பிராக்குக் காட்டிப்போட்டு உச்சிக்கொண்டு என்னட்ட வருவாள். கலியாணத்தைக் கட்டலாமெண்டால் அவளுக்கு வயசும் காணாது, எனக்கு விசாவுமில்லை. நாங்கள் வேற நாட்டுக்கு ஓடிப் போயிரலாம் எண்டு நிரஞ்சினி சொன்னாள். அவள் துணிஞ்ச கட்டை.
நான்தான் அதெல்லாம் வேணாமெண்டன். நீர் உறுதியா நில்லும் அப்பா, அம்மாவின்ர மனம் மாறுமெண்டன். அப்பா ஓமெண்டாலும் அம்மா ஒருக்காலும் ஒம்படமாட்டா எண்ட நிரஞ்சினி என்னைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு அழுதாள். அவளுக்கு தகப்பனுத் தாயுமாச் சேர்ந்து பெல்டால அடிச்சதாம். அவளின்ர முதுகில அடிபட்டுக் கண்டிப் போய்கிடந்த இடத்தைக் காட்டினாள்.
ஒருநாள் நிரஞ்சினி காணாமல்போனாள், என்னட்ட காம்புக்கு வந்திற்று போனவள் வீட்ட போய்ச் சேரயில்லை. விடியப்புறம் நாலு மணிக்கு தேப்பன் என்னைத் தேடி வந்தார். என்ர கையப் பிடிச்சு அழுதுகொண்டு “தம்பி நாங்கள் உமக்கே அவவைச் செய்து வைக்கிறம் என்ர பிள்ளையைக் கண்ணில காட்டும்” எண்டு குளறினார். நிரஞ்சினியை நான்தான் கடைசியாச் சந்திச்ச ஆள் எண்டதால என்னைப் பொலிஸ்காரரும் விசாரிச்சினம்.
நிரஞ்சினியை ஆளுக்கொரு பக்கமாத் தேடினம். மூண்டாம் நாள் நான் மனம் கேளாமல் நிரஞ்சினியின்ர வீட்ட கூடப் போனன். போய் கோலிங் பெல் அடிக்கக் கதவைத் திறந்திச்சினம். அந்த வீடு முழுக்கச் சனங்கள். “இவன்தான் ஆள்” எண்டு அப்பா அந்தச் சனங்களுக்குச் சொல்ல, நிரஞ்சினியின்ர அம்மா ஓடிவந்து என்ர முகத்தில காறித் துப்பினா. நான் நிரஞ்சினிக்காகப் பேசாமல் அசையாமல் நிண்டன். முகத்தைக் கூடத் துடைக்கையில்ல. நிரஞ்சினியின்ர அம்மா எங்கயிருந்தோ ஒரு தும்புத்தடியை எடுத்துக் கொண்டுவந்து என்ர தலையில ஓங்கி அடிச்சா. தும்புத்தடி முறிஞ்சுபோச்சுது. நான் அவவிட்ட “எனக்கு நிரஞ்சினியின்ர படம் ஒண்டு வேணும்” எண்டு சொன்னன்.
ஆறு நாளைக்குப் பிறகு பிராங்போர்ட்டிலயிருந்து நாப்பது கிலோமீற்றர் துலையிலயிருந்த பெரிய காட்டுக்குள்ள நிரஞ்சினியின்ர எலும்புத்துண்டுகளையும் சாம்பலையும் பொலிஸ்காரர் கண்டுபிடிச்சாங்கள். அந்த நேரம் ஜெர்மனியில நியோ நாஸி குழுக்கள் பெரிய அநியாயங்களச் செய்துகொண்டிருந்தாங்கள். அந்த நேரம்தான் ஒரு வியட்நாம் குடும்பத்த வீட்டோட சேர்த்து நாஸிகள் கொழுத்தியிருந்தவங்கள்.
நிரஞ்சினியோட கூடப் படிச்சுக்கொண்டிருந்த ஸ்ருடண்ட்ஸ்தான் இந்தப் பிரச்சினையை தீவிரமாக் கையில எடுத்தாங்கள். நியோ நாஸிகள் கூடுற கோப்பிக் கடையொண்டு அடிச்சு நொருக்கப்பட்டுது.
தமிழ் ரேடியோக்கள், தமிழ் பேப்பர்கள் எல்லாம் நாஸிகளைக் கடுமையாக் கண்டிச்சு எழுதிச்சினம். நாஸிகளுக்கு எதிரா பிராங்போர்ட்டே கலங்குறமாதிரி தமிழ் அமைப்புகள் ஒரு ஊர்வலத்தை ஒழுங்கு செய்திச்சினம். ரெண்டாயிரம் சனங்களிருக்கும். நிரஞ்சினியின்ர அயலட்ட வெள்ளைக்காரச் சனங்களும் ஊர்வலத்துக்கு வந்திருந்தவை. நான் ஊர்வலத்துக்கு முன்னால மார்ச் பண்ணிக்கொண்டு போனன். இனவெறிக்கு எதிராக் கோசம் போட்டுக்கொண்டு ஊர்வலம் போச்சுது. எனக்குப் பின்னால நிரஞ்சினியின்ர குடும்பம் கையில நிரஞ்சினியின்ர படங்களை வைச்சுக்கொண்டு நடந்து வந்துது.
கடைசியில, நிரஞ்சினியைக் கொலை செய்தது ஆர் எண்டதைப் பொலிஸ் கண்டுபிடிச்சுது. நிரஞ்சினியின்ர உடம்ப காட்டுக்குள்ள வைச்சு எரிக்கேக்க சைவ சமயக் கிரியைகளைச் செய்து சைவ முறைப்படிதான் எரிச்சிருக்கிறாங்கள். அதை வைச்சுதான் குற்றவாளியள கண்டுபிடிச்சாங்கள்.
நிரஞ்சினியின்ர கொலைக் கேஸில நான்தான் முக்கியமான சாட்சி. கன ஜெர்மனிப் பேப்பர்கள் இந்தக் கொலை பற்றி எழுதிச்சினம். ஆனால், மகள் சாதி மாறிக் காதலிச்சதால தேப்பனும் தாயும் அடிச்சதால படாத இடத்தில பட்டு மகள் செத்துப்போக தகப்பனும் தாயுமா மகளின்ர உடம்பைக் கொண்டுபோய் காட்டுக்குள்ள போட்டு எரிச்சதெண்டு ஒரு தமிழ்ப் பேப்பரும் நியூஸ் எழுதவுமில்ல, ஒரு தமிழ் ரேடியோ செய்தி சொல்லயுமில்ல. கன தமிழ்ச் சனம் நாஸிகள்தான் நிரஞ்சினியை எரிச்சதா இப்பயும் நினைச்சுக்கொண்டிருப்பினம்.
ஆனால் உண்மையில அந்தப் பேப்பருகளையும் ரேடியோவையும் குறைசொல்லுறதால என்ன வரப்போகுது. அதைப் பற்றிக் கதைச்சு ஆருக்கு என்ன லாபம். ஆரையும் அழிய ஒழிய எண்டு முனியிறதால நிரஞ்சினிதான் சாம்பலிலயிருந்து உயிர்த்து வரப்போறாளா?
ஒண்டு மட்டும் சொல்லலாம்… ஜனநாயகம் வாழ்க!
இதுக்குள்ள நாஸிப் பிரச்சினை, அகதிப் பிரச்சினை, தலைமுறைப் பிரச்சினை, இனப் பிரச்சினை, சாதிப் பிரச்சினை எல்லாம் அடங்குதுதானே.
(செப்டம்பர் 2015 – ஆக்காட்டி)