எழுச்சி

கதைகள்

சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் பாரிஸை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வார் தருமலிங்கத்திற்கு இந்தப் புரட்டாதி வந்தால் சரியாக நாற்பத்தேழு வயது. இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் பிரான்ஸின் புகழ்பெற்ற தொழிற்சாலையொன்றில் கடைநிலைத் தொழிலாளியாகப் பணி செய்கிறார். பிரான்ஸுக்கு வந்து பதின்மூன்று வருடங்களாகின்றன. பிறந்து வளர்ந்ததற்கு இதுவரை அவர் விமானத்தில் ஏறியதில்லை.

பதினைந்து வருடங்களிற்கு முன்பு தருமலிங்கத்திற்கும் காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த அசோகமலருக்கும் பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயிலில் கல்யாணம் நடந்தது. அந்தக் காலத்திலேயே அய்ந்து இலட்சம் ரூபாய்கள் ரொக்கமும் முப்பது பவுண் நகையும் வீடு வளவும் சீதனமாக தருமலிங்கத்திற்குக் கொடுக்கப்பட்டது. இவ்வளவுக்கும் தருமலிங்கம் படித்து உத்தியோகத்திலிருந்த மாப்பிள்ளை அல்ல. ஆனால் திறமான கமக்காரன். இரண்டாயிரம் கன்று புகையிலைத் தோட்டத்தை தனியாகச் செய்யும் கடின உழைப்பாளி. முக்கியமாக குடிவெறி, புகைத்தல் எதுவுமில்லாத மாப்பிள்ளை. அசலான பக்திமான். இலந்தையடிப் பிள்ளையார் கோயில் தொண்டர் படையின் தலைமைத் தொண்டன். தோட்டம் அதைவிட்டால் பிள்ளையார் கோயில் தொண்டும் தேவாரமும் என்று கிடந்தவர். இயக்கங்களிற்கு எதிருமில்லை சப்போர்ட்டுமில்லை. ஆனால் அமிர்தலிங்கத்தைப் போல ஒரு தலைவன் கிடைக்கமாட்டான் என்பதுதான் அவரது உள்ளார்ந்த அரசியல் கொள்கை.

காரைநகரில் சீதனமாகக் கிடைத்த வீடு வளவு கடற்படையின் ஆக்கிரமிப்புக்குள் இருந்தது. விரைவில் கடற்படையினர் வெளியேறிவிடுவார்கள் என மாமனார் சமாதானம் சொல்லியிருந்தார். தருமலிங்கத்திற்கு அதைப் பற்றிப் பெரிய கவலை கிடையாது. ஓர் ஆதனம் மேலதிகமாக இருக்கிறது என்றளவில் அவருக்குத் திருப்திதான்.

கல்யாணம் நடந்து இரண்டு வருடங்களாகியும் தருமலிங்கம்அசோகமலர் தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை. மெதுமெதுவாக அவரை மலட்டு தருமலிங்கம் என ஊருக்குள் அழைக்கத் தொடங்கினார்கள். ஊர் முழுவதும் தருமலிங்கத்தை மலடன் என்று சொன்னால் தருமலிங்கத்தின் தாய்க்காரி மட்டும் அசோகமலரை மலடி என்று கரித்துக்கொட்டத் தொடங்கினார். எப்போது பார்த்தாலும் குத்தல் கதைகளை அந்த மனுசி பேசிக்கொண்டேயிருந்தார். அப்போதெல்லாம் அசோகமலர் கண்ணீர் விட்டு அழுவார். ஆனால் அவர் ஒருபோதும் தருமலிங்கத்தின் மனம் நோக ஒரு சொல் பேசியதுமில்லை, நடந்துகொண்டதுமில்லை. எல்லாவற்றையும் தருமலிங்கம் மவுனமாகக் கவனித்துக்கொண்டுதானிருந்தார். அவரது உள்ளம் ஆழ்ந்த துயரத்திலும் அடக்கிவைக்கப்பட்டிருந்த ஆத்திரத்திலும் நொதித்துக்கொண்டிருக்கலாயிற்று.

அதிகாலையில் தோட்டத்திற்கு தண்ணீர் இறைக்கிற விசயத்தில்தான் பக்கத்துத் தோட்டக்காரன் கிளியனோடு தருமலிங்கத்திற்கு வாக்குவாதம் வந்தது. பிரச்சினை பேச்சுவார்த்தையாக இருக்கும்போதே கிளியன்மலட்டுச் சொத்தா ஆருக்கும் போகப்போற தறைதானேஎன்றொரு வசனத்தைப் பாவித்து தருமலிங்கத்தை ஏளனம் செய்தான். அந்தச் சொல்லைக் கேட்டதும் இவ்வளவு நாளாக அடக்கி வைத்திருந்த கோபம், ஊரவர்கள் மீதுள்ள கோபம், தனது தாய்மீது உள்ள கோபம், தன் மீதேயுள்ள கோபம் எல்லாமாகச் சேர்ந்த பெருங் கோபம் அந்த அதிகாலையில் தருமலிங்கத்தின் ஆன்மாவைப் பிசக்கிற்று. அவர் தன்னை ஒரு நிலைக்குக் கொண்டுவர முயன்றுகொண்டிருந்தபோது அவரது கண்கள் கண்ணீரைக் கொப்பளித்தன. அதே நேரத்தில் அவரது கண்கள் இருண்டு போயின. அவரது வலுவான கைகள் கையிலிருந்த மண்வெட்டியைத் தூக்கியெறிந்து தலைகீழாக ஏந்திப் பிடித்தன. குனிந்து மண்வெட்டியின் வலுவான பிடியை கிளியனின் முழங்காலை நோக்கி வீசினார். “அய்யோ மச்சான்என்று அலறியவாறே கிளியன் கால்களைப் பிடித்தவாறு நிலத்தில் குந்திவிட்டான். தருமலிங்கம் திரும்பியும் பாராமல் விறுவிறுவென தோட்டத்திற்குள் புகுந்து தண்ணீர் மாறத் தொடங்கினார்.

காலை எட்டு மணியளவில் இரண்டு இராணுவீரர்களைக் கூட்டிக்கொண்டு கிளியன், தருமலிங்கத்தின் தோட்டத்துக்கு வந்தான். அப்போது அந்தப் பகுதி முழுவதும் இராணுவத்தினர் சொரியலாக இருந்தார்கள். முதுகில் துப்பாக்கியைக் கொழுவிக்கொண்டு சைக்கிளில் உல்லாசமாகத் திரிந்தார்கள். கைவிடப்பட்ட வீடுகளிலிருந்த கதவுகளையும் சன்னல்களையும் கழற்றி எடுத்து விற்றார்கள். மாலை வேளைகளில் கள்ளைக் குடித்துவிட்டு பைலாப் பாடல்களைப் பாடினார்கள். இரவு நேரங்களில் குமர்ப் பிள்ளைகள் இருக்கும் வீடுகளிற்குள் பாய்ந்து ஓடினார்கள். ஊருக்குள் ஏதாவது பிரச்சினையென்றால் அவர்களே நாட்டாமை செய்து தண்டனைகளை வழங்கினார்கள்.

இராணுவத்தினர் இருவருக்கும் அந்தக் காலைவேளையிலேயே மிகுந்த போதையாயிருந்தது. சரவணைக் கிராமத்தில் காலை ஆறுமணியளவில் பனைகளிலிருந்து கள் இறக்குவார்கள் என்றால் காலை அய்ந்து மணிக்கே இராணுவ வீரர்கள் பனைகளின் கீழே வந்து குந்திக்கொள்வார்கள். சிலர் இரவிலே தாங்களாகவே பனையிலேறி முட்டியை அவிழ்த்து திருட்டுத்தனமாகக் கள் குடிப்பதுமுண்டு. யாரிடம் போய் இந்தத் திருட்டை முறையிட முடியும்? அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பெரிய இராணுவத் தளபதியே கடற்கரைக் காணிகளைத் தனது சொந்தக்காரர்களின் பெயருக்கு கள்ள உறுதி முடித்துக்கொண்டிருந்தது சனங்களிற்குத் தெரியும்.

தருமலிங்கம் இராணுவத்தினரைப் பார்த்ததும் கொஞ்சம் திடுக்கிட்டார் என்றாலும் பெரிதாகப் பயப்படவில்லை. வந்த வீரர்கள் இருவரும் அவருக்கு ஓரளவு பழக்கமானவர்கள்தான். ஒருவனுடைய பெயர் உதய், மற்றவனுடைய பெயர் பெர்னாண்டோ. அந்த இருவரும் எப்போதும் ஒன்றாகவே திரிவார்கள். அடிக்கடி தருமலிங்கத்தின் தென்னங்காணிக்கு வந்து இளநீர் கேட்பார்கள். அவர்களே மரத்தில் ஏறி இளநீரைப் பறித்துக்கொண்டு தருமலிங்கத்திற்கு ஒரு சல்யூட் செய்துவிட்டுப் போவார்கள். இப்போது மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு தருமலிங்கம் மெதுவாகப் புன்னகைத்தவாறு கிளியனைப் பார்த்தார். அந்தப் பார்வையைக் கிளியனால் தாங்க முடியவில்லை. “மச்சான் நீ என்னில கை வைச்சது பிழைஎன்று சொல்லிவிட்டு அவன் கால்களை நொண்டிக்கொண்டு அங்குமிங்குமாக நடந்தான்.

உயரமான இராணுவவீரனான பெர்னாண்டோ கேட்டான்அய்யா, திலீபனுக்கு சப்போர்ட்டா? கிளி சொல்றது

தருமலிங்கத்திற்கு எல்லாம் விளங்கிவிட்டது. அவரே மறந்துவிட்ட சம்பவமது. நல்லூரிலே திலீபன் உண்ணாவிரதமிருந்து இறந்தபோது அந்தக் கிராமத்திலே ஒரு சிறு சம்பவம் நடந்திருந்தது.

அப்போது தருமலிங்கத்திற்கு இருபது வயது. இப்போதை விட அப்போது அவர் மிகப் பெரிய பக்திமான். அப்போதும் அவர் இயக்கத்திற்கு சப்போர்ட்டுமில்லை, எதிருமில்லை. ஆனால் பன்னிரெண்டு நாட்கள் பட்டினி கிடந்து, அதுவும் நல்லூர் முருகக் கடவுளின் முற்றத்திலேயே திலீபன் இறந்தது அவரை மிகவும் வருத்திப்போட்டது.

ஒரு மதிய நேரத்தில் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்ட இயக்கத்தின் வாகனம் திலீபனின் மரணத்தை அறிவித்தபடி செல்வது தோட்டத்திற்குள் நின்ற தருமலிங்கத்திற்குக் கேட்டது. அப்போது கூட அவருக்குப் பெரிய துயர் ஏற்படவில்லை. வாகனம் சென்ற கையோடு பல குரல்கள் வீறிட்டு அலறுவது தருமலிங்கத்திற்குக் கேட்டது. பள்ளிக்கூடப் பக்கமிருந்துதான் அந்த அலறல் கேட்டது. தோட்டத்தில் போட்டது போட்டபடி கிடக்க வேலியைப் பாய்ந்து பள்ளிக்கூடத்தை நோக்கி தருமலிங்கம் ஓடினார்.

அங்கே பள்ளிக்கூடத்திற்கு முன்னால் வீதியில் திலீபனின் படத்திற்கு விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது. ஆசிரியைகளும் மாணவிகளுமாகக் கூடிநின்று கதறி அழுதுகொண்டிருந்தார்கள். ஊரில் எந்தச் சாவீடு என்றாலும் முன்னுக்கு நின்று ஒப்புச் சொல்லி மாரடித்து அழும் பிள்ளைமுத்து கிழவி நிலத்திலிருந்து ஓரடி உயரத்திற்குத் துள்ளித் துள்ளி மார்பில் இரு கைகளாலும் படார் படார் என அறைந்துகொண்டு ஒப்புச் சொல்லி அழுதார். அந்தக் காட்சி தருமலிங்கத்தை என்னவோ செய்தது. வீட்டுக்குப் போனவர் பித்துப் பிடித்தவர் போலயிருந்தார். தாய்க்காரி சாப்பிடச் சொல்லியும் அன்று முழுவதும் அவரது பல்லில் பச்சைத் தண்ணீரும் படவில்லை. இரவு முழுவதும் உறங்காதிருந்தார்.

அதிகாலையில் தென்னங்காணிக்குக்குப் போனவர் இளந் தென்னங்கன்று ஒன்றை முழுவதுமாகத் தோண்டி எடுத்துக்கொண்டு புளியங்கூடல் சந்திவரை தெருவால் இழுத்துக்கொண்டுபோனார். தோளில் மண்வெட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. அப்போது இந்திய அமைதிப் படையினரது வண்டியென்று இவரைக் கடந்துபோனது. சண்டை தொடங்குவதற்கு இன்னும் காலம் இருந்தது.

புளியங்கூடல் சந்தியில் ஆள் நடமாட்டமில்லை. கடைகள் ஏதும் திறக்கப்பட்டிருக்கவில்லை. இரண்டு தெருக்கள் சந்திக்கும் அந்தச் சந்தியின் நட்ட நடுவே மண்வெட்டியால் வேகவேகமாக் கொத்தி ஒரு குழியை உண்டாக்கி அந்தக் குழிக்குள் தென்னங்கன்றை நட்டுவிட்டு அதற்குக் கீழே சம்மணம் போட்டு வடக்கு நோக்கி தருமலிங்கம் வீதியில் உட்கார்ந்துகொண்டார். சற்று நேரம் செல்ல அவரைச் சுற்றிச் சிறிய கூட்டம் கூடிவிட்டது. அவரோ யாருடனும் ஒரு வார்த்தை பேசவில்லை. தருமலிங்கத்திற்கு விசராக்கிவிட்டது என்ற செய்தி தாய்க்காரியை எட்டியபோது தாய்க்காரி தெரு முழுவதும் விழுந்து புரண்டு அழுதவாறே ஓடிவந்தார். தாயுடனும் தருமலிங்கம் ஒரு வார்த்தை பேசவில்லை. சற்று நேரத்தில் இயக்கம் வாகனத்தில் அங்கே வந்தபோதுதான் தருமலிங்கம் வாயைத் திறந்தார்:

திலீபன் அண்ணனே போன பிறகு நான் எதுக்கு இருக்கவேணும்

இயக்கப் பொறுப்பாளருக்குக் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அவர் உதடுகளை மடித்துக் கடித்தபடியே உத்தரவுகளைப் பிறப்பித்தார். எண்ணி முப்பதே நிமிடங்களிற்குள் தருமலிங்கத்திற்கும் தென்னங்கன்றிற்கும் மேலோக ஒரு சிறிய தறப்பாள் பந்தல் உருவானது. அருகிலிருந்த தந்திக் கம்பத்தில் இரண்டு ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு சோக இசை ஒலிபரப்பப்பட்டது. தருமலிங்கம் படுப்பதற்கு புதிய பாயும் தலையணைகளும் போர்வைகளும் தருவிக்கப்பட்டன. யாரோ ஒருவர் மின்விசிறியொன்றை எடுத்து வந்து தருமலிங்கத்தின் தலைமாட்டிற்குள் வைத்தார். இந்தக் கதையை எழுதிக்கொண்டிருப்பவர் உட்பட நான்கு இளைஞர்கள் தருமலிங்கத்தைச் சுற்றி அமர்ந்து அவருடன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்கள். தருமலிங்கத்தின் தாயார் அழுதுகொண்டேயிருந்தார்.

மாலையில் தருமலிங்கம் சற்று வாடிப் போயிருந்தார். நேற்று மதியத்திலிருந்து அவர் தண்ணீர் கூட அருந்தவில்லை. இரவு எட்டு மணியளவில் அவர் பாயில் சுருண்டு படுத்துக்கொண்டார். ஒன்பது மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து இயக்க வாகனம் ஒன்று வந்தது. அவர்கள் பந்தலுக்குள் வந்து, உண்ணாவிரதப் போராட்டங்களை முடித்துக்கொள்ள தலைமை முடிவெடுத்திருக்கிறது என்று சொன்னார்கள். அவர்கள் வரும்போது கையோடு பழரசம் கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் தருமலிங்கம் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்துவிட்டார். “திலீபன் அண்ணாவே போயிட்டார்என அவரது உதடுகள் முணுமுணுத்தன. அவருக்குக் கட்டாயமாகப் பழரசம் புகட்டும் முயற்சி நடந்தபோது அவர் பழரசத்தை புகட்டியவனின் முகத்திலேயே துப்பினார். இயக்கப் பொடியன்கள் தருமலிங்கத்தை பாயோடு சேர்த்து அப்படியே அலாக்காகத் தூக்கி வாகனத்திற்குள் வைத்து யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். விடிந்தபோது தருமலிங்கம் அலங்கமலங்க முழிக்கத்தான் செய்தார். கடந்த இரண்டு நாட்களாகத் தன்னை இயக்கிய சக்தி எதுவென்று அவருக்கே தெரியாமலிருந்தது. “அம்மாவைக் கவலைப்படுத்திவிட்டேனேஎன்ற வருத்தம் மட்டுமே அவருடன் நெடுநாட்களிருந்தன. தருமலிங்கத்தின் போராட்டத்தை சனங்கள் ஒரு மாதம் கூட ஞாபகம் வைத்திருக்கவில்லை. ஏனெனில் இதைவிட ஆயிரம் மடங்கு பெரிய பெரிய போராட்டங்களும் போரும் சாவுகளும் அடுத்தமாதமே வந்துவிட்டன.

ஆனால் தருமலிங்கத்தின் கல்யாணப் பேச்சுக்கால் நடந்துகொண்டிருந்தபோது சனங்களுக்கு அந்தச் சம்பவம் ஞாபகம் வரத்தான் செய்தது. ‘தருமலிங்கம் நல்ல பொடியன், சோலி சுறட்டு ஒண்டுமில்லை, ஆனால் இடைக்கிட ஆளுக்கு கிறுதி மாதிரி வாறது.. அந்த நேரத்தில அவன் என்ன செய்யிறானெண்டு அவனுக்கே விளங்கிறதில்லைஎன்று சனங்கள் பேசிக்கொண்டார்கள். ஊருக்குள் பெண் கிடைக்காததால் காரைநகர் வரை போய் பெண் எடுக்கவேண்டியிருந்தது. அதற்குப் பிறகு இப்போது கிளியனுக்கு அந்தச் சம்பவம் குறித்த ஞாபகம் வந்து இராணுவ வீர்களிடம் சொல்லிக் கொடுத்திருக்கிறான்.

தருமலிங்கத்தின் தோட்டத்திற்குள் இராணுவ வீரர்கள் நிற்பதை பக்கத்துத் தோட்டக்காரர்கள் எட்டயிருந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். இராணுவ வீரர்களிற்கு முன்னால் எதுவும் பேசாமல் தருமலிங்கம் மவுனமாக நின்று தலையைக் குனிந்து நிலத்தைப் பார்த்தவாறேயிருந்தார். காலையில் திருப்புகழும் மாலையில் திருமந்திரமும் உச்சரிக்கும் அந்த வாயில் எந்தக் காலத்தில் பொய் வந்தது!

பெர்னாண்டோ என்ற இராணுவீரன் தருமலிங்கத்தின் பின்புறமாக வந்து அவரது இரண்டு கைகளையும் பின்னால் இழுத்து முறுக்கிப் பிடித்துக்கொண்டான். அப்போது தருமலிங்கத்தின் முகம் தானாகவே வானத்தைப் பார்த்து நிமிர்ந்தது. உதய் என்ற இராணுவீரன் தருமலிங்கத்தின் முன்னால் வந்து நின்று அவரது முகத்தில் காறி உமிழ்ந்தான். தருமலிங்கம் மறுபடியும் பூமியை நோக்கித் தலையைக் குனிந்தபோது அவரது தோள்பட்டைகளில் சுள்ளென வலி கிளம்பிற்று. அவரது முகத்திலிருந்து இராணுவ வீரனின் எச்சில் கோடாகப் பூமிக்கு வழிந்தது. உதய் தனது .கே.47 துப்பாக்கியை எடுத்து உயரே தூக்கிப்போட்டு தலைகீழாக ஏந்திக்கொண்டான். ஏந்திய வேகத்திலேயே துப்பாக்கியின் பின்புறத்தை தருமலிங்கத்தின் கொட்டைகளை நோக்கிச் செலுத்தினான். அப்போது பின்னாலிருந்து கைகளைப் முறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்த பெர்னாண்டோ அவரைக் கீழ்நோக்கி இழுத்து மல்லாத்தினான். தருமலிங்கத்திற்கு கிறுதி மாதிரி வந்தது.

அவர் கண்விழித்தபோது அந்தத் தோட்ட வெளிக்குள் ஒரு குஞ்சு குருமானும் இல்லை. கொட்டைகள் இரண்டும் உயிர்போக வலித்தன. மெதுவாக எழுந்து உட்கார்ந்து சாரத்தை விலக்கிப் பார்த்தார். இரண்டு கொட்டைகளும் பெரிய கறுத்தக் கொழும்பான் மாம்பழங்கள் போல கனிந்து வீங்கியிருந்தன. ஆண்குறி சிறுத்துப்போய் ஒரு நாவற்பழம் போல உடலில் ஒட்டிக்கொண்டிருந்தது. அதன் முனையில் ஒரு துளி இரத்தம் கசிந்திருந்தது. தருமலிங்கம் மெதுவாக எழுந்து வீட்டை நோக்கி கால்களை அகட்டி அகட்டி வைத்து மெல்ல நடந்தார். அவர் பாதிவழியில் போய்க்கொண்டிருக்கும்போது எதிரே அசோகமலர் தன்னை நோக்கி அழுதுகொண்டே ஓடிவருவதைக் கண்டார்.

அன்று இரவு அவர் சுவரில் சாய்ந்து இருந்துகொண்டே அசோகமலரிடம் சொன்னார்:

இல்ல, இந்த இடம் சரியில்ல, இந்த இடம் என்னைப் போ போ எண்டுது. நான் போகப் போறன்.”

எங்கையப்பா போகப் போறீயள்?”

இல்லை மலர்..இந்த இடம் என்னைப் போ..போ..எண்டு சொல்லுது.. இனி ஒரு நிமிசமும் நான் இஞ்சை இருக்கக்கூடாது

அடுத்த மாதம் நீர்கொழும்பிலிருந்து அறுபது ஆட்களை ஏற்றிக்கொண்டு இத்தாலிக்குக் கிளம்பிய மீன்பிடிப் படகில் தருமலிங்கமும் இருந்தார். இரண்டு மாதக் கடற் பயணத்திற்குப் பின்பு இத்தாலிக்கு போய் அங்கிருந்து ரயிலில் பிரான்ஸ{க்கு வந்து சேர்ந்தார்.

அவர் ரயிலிலிருந்து பாரிஸ் கார் து லியோன் ரயில் நிலையத்தில் இறங்கியதுமே தன்னை அழைத்துப் போக வந்திருந்த அசோகமலரின் தம்பியிடம் சொன்ன முதல் வார்த்தைகள்:

சரியாயிருக்கு, தம்பி இந்த இடத்தில எல்லாம் சரியாயிருக்கு..அமைப்பா இருக்கு

2

பாரிஸில் விசா இல்லாமல் வாழ்வதென்றால் சும்மாவா! தருமலிங்கம் ஆள் அரைவாசியாகிப் போனார். அசோகமலரின் தம்பியின் வீட்டுக்குப் பின்னாலிருந்த சிறிய ஸ்டோர் ரூமை ஒருமாதிரியாகச் சரிப்பண்ணி வசிக்கும் அறையாக்கி தருமலிங்கத்திற்குக் கொடுத்திருந்தார்கள். வேலைக்குப் போகிறாரோ இல்லையோ மாதம் பிறந்தால் கண்டிப்பாக வாடகைக் காசை எண்ணி வைக்கவேண்டும்.

தருமலிங்கம் கடுமையான உழைப்பாளி ஆயிற்றே. கிடைக்கும் வேலைகளை எல்லாம் மாடுபோல முறிந்து செய்தார். சமையலறைகளில் தோட்டங்களில் கட்டடங்கள் கட்டுமிடத்தில் சந்தையில் அச்சகத்தில் தமிழ்க் கடையில் எனப் பலபட்டறை வேலைகளையும் செய்தார். மாதம் தவறாமல் அசோகமலருக்கு பணம் அனுப்பினார். தனக்கு விசா விரைவில் கிடைத்துவிடுமெனவும் அது கிடைத்தவுடன் அசோகமலரையும் பிரான்ஸுக்குக் கூப்பிட்டுவிடுவாரென்றும் கடிதங்கள் எழுதினார். ஒவ்வொரு இலந்தையடிப் பிள்ளையார் கோயில் திருவிழாவுக்கும் மறக்காமல் நன்கொடையாக இருபத்தைந்தாயிரம் ரூபாய்கள் அனுப்பினார். ஆனால் பிரான்ஸுக்கு வந்த பன்னிரெண்டாவது வருடம்தான், தருமலிங்கத்தின் நாற்பத்தாறாவது வயதில் அவருக்கு விசா கிடைத்தது.

அவருக்கு விசா கிடைத்ததும் அவர் நேரே இந்தக் கதைசொல்லியிடம்தான் வந்தார். பாரிஸில் அவருக்கு ஒரே நண்பன் இந்தக் கதைசொல்லிதான். தன்னுடைய சிரமங்களையும் மனவுளைச்சல்களையும் மனைவியைப் பிரிந்திருக்கும் வேதனையையும் குழந்தையில்லாத குறையையும் அவர் எந்த ஒளிவு மறைவுமில்லாமல் வார்த்தை வார்த்தையாகத் துயரமும் சுயபச்சாதாபமும் சொட்ட இந்தக் கதைசொல்லியிடம்தான் பகிர்ந்துகொள்வார்.

இந்தக் கதைசொல்லியின் வழிகாட்டலில்தான் ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் பாரிஸின் புறநகர் ஒன்றிலிருந்த இருசக்கர வாகனத் தயாரிப்பு தொழிற்சாலையில் தருமலிங்கத்திற்கு கடைநிலைத் தொழிலாளியாக வேலை கிடைத்தது. ஆணிகள் நட்டுகள் பொறுக்கிக் கழுவித் துடைக்கும் வேலைதான். அந்த வேலையில் அவர் மகிழ்ச்சியாகவே இருந்தார். பிரஞ்சு மொழியை ஓரளவு பேசவும் கற்றுக்கொண்டார். இவருக்கு விசா கிடைத்ததற்காக செல்வச் சந்நிதி கோயிலில் அசோகமலர் அன்னதானம் வழங்கினார். அசோகமலரை பிரான்ஸஸுக்கு அழைப்பதற்கான வேலைகளில் தருமலிங்கம் மும்முரமாக இறங்கினார். தருமலிங்கத்திற்கு நாற்பத்தேழு வயதில் புத்திர பாக்கியம் இருக்கிறது என லாச்சப்பலில் முகாமிட்டிருக்கும் ஆந்திரா சாத்திரி அடித்துச் சொல்லியிருந்தான். ஆனால் பிரஞ்சுச் சட்டங்களின்படி அசோகமலர் பிரான்ஸ் வந்து சேர இரண்டு வருடங்கள் எடுக்கும். ஊருப்பட்ட பேப்பர் வேலைகளும் தூதரகச் சடங்குகளும் நடுவில் இருந்தன.

தான் பிரான்ஸ் வருவது ஒருபுறமிருக்கட்டும், அதற்கு நடுவில் தன்னையொருமுறை வந்து பார்த்துப் போகுமாறு அடிக்கடி அசோகமலர் தொலைபேசியில் அழுதுகொண்டிருந்தார். ஒவ்வொருமுறை தொலைபேசிப் பேச்சை முடிக்கும்போதும்என்ர ராசாஎன அசோகமலர் ஓர் ஆழமான துயரப் பெருமூச்சை விட்டது தருமலிங்கத்தை வதைத்துக்கொண்டேயிருந்தது.

தொழிற்சாலையில் தருமலிங்கம் இரண்டு மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டார். ஆனால் எக்காரணம் கொண்டும் இலங்கை மண்ணை மிதிக்க அவர் விரும்பவில்லை. இலங்கையைப் பற்றிய நினைப்பு வரும்போதெல்லாம் அவரது கை தானாகவே அவரது உள்ளாடையை விலக்கும். தருமலிங்கம் தனது கொட்டைகளைப் பார்க்கும்போது அவருக்கு அழுகிய கறுத்தக் கொழும்பான் மாம்பழங்களே நினைவுக்கு வரும். இலங்கையை நினைத்தால் அந்த மாங்காய் வடிவத்தீவு அவரது கொட்டைகள் போலவேயிருக்கும் சித்திரமே அவரது மனதில் எழுந்தது.

அப்போது அசோகமலர் பிரஞ்சுத் தூதரகத்தில் அலுவல்கள் காரணமாக கொழும்பில் இருந்தார். அவரை சென்னைக்கு வரச்சொல்லிவிட்டு தருமலிங்கமும் சென்னைக்குப் புறப்பட்டார். தருமலிங்கமும் அசோகமலரும் தங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு வாடகைக்கு ஒரு வீட்டை நுங்கம்பாக்கத்தில் இந்தக் கதைசொல்லிதான் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

தருமலிங்கத்திற்கு இதுதான் முதலாவது விமானப் பயணம். நான்கு மணிநேரங்கள் முன்பாகவே பாரிஸ் விமான நிலையத்திற்குப் போய்விட்டார். அதிகம் பொருட்களை தன்னுடன் எடுத்துச் சொல்லவில்லை. பாரிஸில் கிடைக்கும் அத்தனை பொருட்களும் இப்போது இந்தியாவிலேயே மலிவு விலையில் கிடைக்கின்றன என இந்தக் கதைசொல்லி அவருக்குச் சொல்லியிருந்தார். அசோகமலருக்கு சில தின்பண்டங்களும் ஒன்றிரண்டு ஆடைகளும் ஏழெட்டு ஓடிக்கொலோன் போத்தல்களும் தாய்க்காரிக்குக் கொடுத்துவிட ஒரு சுவெட்டரும் மட்டுமே தருமலிங்கம் எடுத்துச் சென்றிருந்தார்.

விமானநிலையத்தில் கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தார். அவர்கள் பாஸ்போர்டையும் தருமலிங்கத்தையும் மாறிமாறி உற்றுப் பார்த்ததிலேயே அவருக்குப் பாதிச் சீவன் போய்விட்டது. ஒருமாதிரியாகத் தட்டுத்தடுமாறி குடியகல்வுச் சடங்குகளை முடிந்துக்கொண்டு நிம்மதிப் பெருமுச்சு விட்டுக்கொண்டு புறப்பட்டால் அடுத்ததாக, எடுத்துச்செல்லும் பொருட்களை பரிசோதனை செய்யும் சடங்கு.

இவரது கண்முன்னேயே ஓடிக்கொலோன் போத்தல்கள் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டன. தின்பண்டங்களிலும் அரைவாசி குப்பைத் தொட்டிக்குள் போனது. தருமலிங்கம் செய்வதறியாது தடுமாற்றத்துடன் குப்பைத் தொட்டியையே பார்த்துக்கொண்டிருந்தார். அதற்குள் இன்னும் சில பொருட்களும் விழத்தான் செய்தன. அவரது சுமையை அவர்கள் சரி அரைவாசியாகக் குறைத்துவிட்டிருந்தார்கள். அவரது ஜக்கெட்டையும் சப்பாத்துகளையும் பெல்டையும் கழற்றி பரிசோதனை இயந்திரத்திற்குள் வைக்கச் சொன்னார்கள். அவர்கள் சொன்னது புரிந்தாலும், தனக்குத்தான் ஏதோ பிழையாக விளங்குகிறது என்றுதான் தருமலிங்கம் முதலில் நினைத்தார். பிறகு பார்த்தபோதுதான் அவருக்கு முன்னால் வரிசையில் நின்றவர்கள் வெறுங்கால்களோடு இடுப்புக் காற்சட்டைகளைக் கைகளால் பற்றிப் பிடித்தவாறு அரைநிர்வாணக் கோலத்தில் முன்னே நகர்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தார். இடதுகையால் இடுப்புக் காற்சட்டையைக் கீழே விழாமல் பற்றிப் பிடித்தவாறு பரிசோதனை மேடையில் சிதறிக்கிடந்த தனது பொருட்களை வலதுகையால் மறுபடியும் சேகரித்துப் பெட்டிக்குள் திணித்துப் பெட்டியை மூடுவதற்குள் தருமலிங்கத்திற்கு வியர்த்து வழிந்தது. சாடையாகக் கிறுதி வருமாப்போலவும் கிடந்தது.

ஒருமாதிரிச் சமாளித்துக்கொண்டு புறப்பட்டால் அடுத்தது உடற்பரிசோதனை. ஓர் இயந்திர வளைவுக்குள்ளால் புகுந்து வரச் சொன்னார்கள். அந்த வளைவுக்கு அருகில் ஆறரையடி உயரமான ஒருவன் விறைப்பாக நின்றிருந்தான். அவனது கையில் கறுப்பு நிறத்தில் நீளமான ஒரு பொருள் இருந்தது. அவன் அந்தப் பொருளைத் தூக்கி தருமலிங்கத்தின் முகத்துக்கு நேராகக் காட்டிவாஎனச் சைகை செய்தான். தர்மலிங்கம் சின்ன வயதில் முனியப்பர் கோயிலடியில்ஜெமினி சேர்க்கஸ்பார்த்திருக்கிறார். அந்தக் காட்சிதான் இப்போது அவருக்கு ஞாபகம் வந்தது.

அவர் அந்த வளைவுக்குள்ளால் புகுந்து கடந்தபோது அந்த வளைவுகீக்கீகிக்கீஎன அலறியது. மறுபடியும் அவரை அந்த வளைவுக்குள்ளால் புகுந்து வரச் சொன்னார்கள். மறுபடியும் இயந்திரம் சத்தம் எழுப்பியது. மறுபடியும் வளைவுக்குள் போகச் சொன்னார்கள். இந்தமுறை இயந்திரம் வேறுவிதமான சத்தம் ஒன்றை எழுப்பியது.

தருமலிங்கத்தை ஒரு வட்டத்திற்குள் நிற்கச் சொல்லிக் கட்டளை பிறந்தது. இரண்டு கால்களையும் விரித்து அகட்டி வைக்கச் சொன்னார்கள். கைகளை மேலே உயர்த்துமாறு சொன்னார்கள். பதற்றத்தில் தருமலிங்கத்தின் உடம்பு இன்னும் வியர்த்துக்கொட்டி வேகமாக நடுங்கியது. இது அவர்களிற்கு இன்னும் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கவேண்டும்.

ஆறரையடி உயரமான அதிகாரி விறைப்பான முகத்துடன் முதலில் தருமலிங்கத்தின் கைகளைத் தடவிச் சோதனையிட்டான். மார்பு, வயிறு எல்லாவற்றையும் அழுத்தித் தடவினான். முதுகையும் குண்டிப் பகுதியையும் ஏதோ ரொட்டிக்கு மாவு பிசைவது போன்ற தோரணையில் அமுக்கி எடுத்தான். அவரது கால்களைக் கீழிருந்து மேலாக அழுத்தித் தடவினான். தொடைக்கு மேற்பகுதியில் அவன் தனது கைகளை அளைந்து நகர்த்தியபோது தருமலிங்கத்தின் கொட்டைகளை அவனது விரலொன்று சட்டெனத் தீண்டுவது போலிருந்தது. தருமலிங்கம் துடித்துப்போனார். அவருக்கு தனது தோட்டத்தில் இளநீர் வாங்கிக் குடித்து உடல் வளர்த்த இராணுவீரன் கொடுத்த அடி மறுபடியும் ஞாபகத்திற்கு வந்தது. “என்ர கொட்டையைத் தொட இவன் ஆருஎன்ற கோபம் அவருக்குள் உன்னியது. ஆனால் ஆறரையடி உயர அதிகாரி இவரது கொட்டைகளையோ ஆண்குறியையோ தொட்டிருக்கவில்லை. அவற்றைத் தொடாமலேயே மயிரிழைத் தூரத்தில் விரல்களை வைத்துச் சோதனை செய்யும் முறைக்கு அதிகாரிகள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். சோதனையின் இறுதியில் அவர்கள் தருமலிங்கத்தை போவதற்கு அனுமதித்தார்கள். தருமலிங்கத்திற்கோ கோபத்தால் உடல் நடுங்கியது. அவருக்குக் கிறுதி வரும் போலிருந்தது. அப்படியே திரும்பிப் போய்விடலாமோ என்றுகூட யோசித்தார். சென்னையில் அசோகமலர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் என்ற ஒரேயொரு சிந்தனை மட்டுமே அன்று அவரைப் பயணம் போக வைத்தது.

துபாய் விமான நிலையத்தில் இறங்கி சென்னை செல்லும் விமானத்திற்கு மாற வேண்டியிருந்தது. துபாய் விமான நிலையத்திலும் இப்படியொரு மானக்கேடு ஏற்படுமென்று தருமலிங்கம் கருதியிருக்கவேயில்லை. வரிசையில் நிற்கும்போதேஅங்க சோதிச்சுத்தானே விட்டவங்கள்..நடுவில வானத்தில் வைச்சு என்ன பிரகண்டத்த எடுத்து ஒராள் மறைச்சுக் கொண்டு வர ஏலும்என்று தனக்குள் முணுமுணுத்தார்.

ஒன்றுக்கு இரண்டு அரபிகள் அவரது உடலை பாதாதிகேசம் தடவினார்கள். இந்த முறையும் தனது கொட்டைகளை அவர்கள் தீண்டியதுபோலத்தான் தருமலிங்கத்திற்குப்பட்டது. தருமலிங்கம் கைகளை உயர்த்தியவாறு நின்றுகொண்டேயிருந்தார். விரித்துவைத்திருந்த அவரது கால்கள் கோபத்தால் நடுங்கிக்கொண்டிருந்தன.

சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும்தான் தருமலிங்கம் ஒரு நிலைக்கு வந்தார். என்றாலும் இங்கேயும் கொட்டையைத் தடவுவார்களா என்றொரு சந்தேகம் அவருக்கு இருக்கத்தான் செய்தது. நல்ல காலத்திற்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு அவர் விமான நிலையக் கதவிற்குள்ளால் வெளியேறி வெளியே ஓரடி எடுத்து வைக்கும்போதே எதிரே கூட்டத்திடையே அசோகமலர் கைகளை அசைத்தவாறு வெட்கப் புன்னகையுடன் நிற்பதைக் கண்டார். அவர் அடுத்த அடியை எடுத்துவைக்க முயன்றபோது பின்னாலிருந்து ஒருகை அவரது தோளைப் பற்றிப் பின்னால் மறுபடியும் விமான நிலையத்திற்குள் இழுத்தது. தருமலிங்கம் பின்னால் இழுபட்டுக்கொண்டே முகத்தை மட்டும் முன்னாலே நீட்டி அசோகமலரை வைத்தகண் வாங்காது பார்த்தார். அசோகமலரின் முகம் பீதியில் உறைந்துகொண்டிருந்தது.

தருமலிங்கத்தை தனியறைக்குள் கூட்டிச்சென்று ஆடைகளைக் கழற்றி உள்ளாடையுடன் நிறுத்திப் பரிசோதனை செய்தார்கள்;. அவர்மீது அவர்களிற்கு ஏதோ விசேட சந்தேகமாம். சோதனை மகா முரட்டுத்தனமாக இருந்தது. இம்முறை அவர்களது வெள்ளை உறை அணிந்த கைகள் நிச்சயமாகவே தருமலிங்கத்தின் கொட்டைகளையும் ஆண்குறியையும் தீண்டின. தருமலிங்கத்தின் வாயிலிருந்து வெப்பத்துடன் அந்தச் சொற்கள் அப்போது உரக்க வந்தன:

தமிழனுக்கு தமிழனே உப்பிடி செய்யக்கூடாது

3

சென்னையில் நாட்கள் அற்புதமாகக் கழிந்தன. அசோகமலருக்கு கொள்ளை மகிழ்ச்சியும் உற்சாகமும். அவர்கள் இருவருக்குமே கோயில் குளம் பார்க்கும் எண்ணமோ ரங்கநாதன் தெருவில் ஷொப்பிங் செய்யும் எண்ணமோ அறவேயில்லை. காலையில் அருகிலிருக்கும் கடைத்தெருவுக்கு இருவருமாகச் சோடிபோட்டுச் சென்று மீன், நண்டு , இறைச்சி என்று வாங்கிவந்து சமைப்பார்கள். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மரக்கறி. இரவு மொட்டை மாடியிலிருந்து கடலை கச்சான் சாப்பிட்டவாறே நீளக் கதைத்துக்கொண்டிருந்தார்கள். தருமலிங்கம் கதைக்கும்போது இடையிடையே பிரஞ்சு மொழிச் சொற்களும் கலந்து வருவதை அசோகமலர் ஆசைஆசையாக ரசித்தார். “நீங்கள் இப்பிடி பிரான்ஸ் கதைச்சால் எனக்கு என்னெண்டு விளங்குமாம்..” என்று சிணுங்கவும் செய்தார். இரவுகளில் ஆசைதீரப் புணர்ந்தார்கள். அசோகமலர் பூரித்துப்போயிருந்தார். தருமலிங்கத்திற்கு இளமை மீண்டுவந்து கூத்திட்டது. புணர்ச்சியின்போது அசோகமலர் எல்லாநிலைகளிலும் புன்னகைத்துக்கொண்டேயிருந்தார். தருமலிங்கத்திற்கு பெருமை பிடிபடாமல் கிடந்தது. ஒருநாள் காலையில் அசோகமலர் அவருக்குக் கொடுத்த முட்டைக் கோப்பியைக் குடித்துவிட்டு எழுந்துநின்று கைகளைக் காற்றில் சுழற்றி இரண்டு பலமான குத்துகள் விட்டார். ஒருகுத்து உதய்க்கு, அடுத்த குத்து பெர்னாண்டோவுக்கு. மகிழ்ச்சி என்பது அந்த நான்கு சுவர்களிற்குள் அவர்களிற்கு இருந்தது.

ஒருநாள் மாலையில் இருவரும் திரைப்படம் பார்க்கலாம் என முடிவு செய்தார்கள். அமைந்தகரையில் ஒரு பென்னம் பெரிய வணிக வளாகத்திலிருந்த திரையரங்கிற்குச் சென்றார்கள். நுழைவுச் சீட்டுகளை வாங்கிக்கொண்டு திரையரங்கிற்குள் நுழைவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த தருணத்தில்தான் தருமலிங்கம் அதைக் கண்டார். திரையரங்க வாசலிலே ஆட்களைப் பரிசோதனை செய்யும் வளைவு இயந்திரம் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் இருபுறத்திலும் விறைப்பாக இரண்டு காவலாளிகள் நின்றிருந்தனர்.

மலர் கொஞ்சம் அத்தோம் பண்ணும்என்று தர்மலிங்கம் மனைவியின் கைகளைப் பிடித்து இழுத்தார். இருவரும் வரிசையிலிருந்து விலகினார்கள். தருமலிங்கம் கவனித்தபோது இரண்டு காவலாளிகளும் ஒருவரது சட்டைப்பையிலிருந்த சிகரெட் பெட்டி, லைட்டர் எல்லாவற்றையும் வாங்கி ஒரு பக்கத்தில் போடுவது தெரிந்தது. அடுத்துப் போனவரின் வாயிலிருந்த சுயிங்கத்தை அங்கேயிருந்த குப்பைத்தொட்டியில் உமிழுமாறு காவலாளி சொன்னான். அதன் பிறகு தலையிலிருந்து கால்வரை தடவிப் பார்த்தார்கள்.

இஞ்சேரும் மலர் எனக்கு வயித்துக்க குத்துதுஎன்று தருமலிங்கம் சொன்னார். இருவரும் படம் பார்க்காமலேயே திரும்பி வீட்டுக்கு வந்தார்கள். வீட்டுக்குள் கால் வைத்த நொடியில் தருமலிங்கத்தின் வயிற்றுவலி சரியாகிவிட்டது. அதற்குப் பிறகு தருமலிங்கம் வீட்டைவிட்டு வெளியே போவதேயில்லை. கேட்டால்இந்தத் தூசியும் புழுதியும் எனக்கு ஒத்துக்கொள்ளுதில்ல மலர்என்றார்.

தருமலிங்கம் பிரான்சுக்குத் திரும்பவேண்டிய நாளுக்கு இரண்டு நாட்களிற்கு முன்புதான் அசோகமலர் அவரது கைகளைப் பிடித்து உள்ளங்கைகளை எடுத்து அவற்றுக்குள் தனது முகத்தைப் புதைத்துக் கண்ணீர் மல்கியபடியே தான் கர்ப்பம் தரித்திருப்பதாகச் சொன்னார். தருமலிங்கத்தால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை. தலைக்கு மேல் கைகளைக் குவித்துபிள்ளையாரப்பாஎன்று கூவினார். பிறகு அசோகமலரிடம் சொன்னார்:

சிறப்பாயிருக்கு..எல்லாம் கலாதியாயிருக்கு. எல்லாம் சரியாயிருக்கு

அடுத்தநாள் அசோகமலர் கொழும்புக்குப் புறப்படவேண்டும். மனைவியைப் பத்திரமாக அனுப்பிவைத்துவிட்டு அதற்கு அடுத்தநாள் தருமலிங்கம் பிரான்ஸ{க்குப் புறப்பட்டார்.

சென்னை விமான நிலையம்வரை உற்சாகமாயிருந்தவர் விமான நிலையத்தைக் கண்டதுமே சற்று நிலைகுலைந்தார். ஆனால் இம்முறை பதற்றத்திற்கு மேலாக ஆத்திரமே அவரிடமிருந்தது. சென்னையிலும் சரி துபாயிலும் சரி மீண்டும் அதேபோன்ற கடுமையான சோதனைகள்தான். கொட்டைகளைத் தடவுவதுபோல வந்து போக்குக்காட்டி அவர்களது விரல்கள் விலகியபோதெல்லாம் தருமலிங்கம் ஆத்திரத்திலும் அவமானத்திலும் துடித்துப்போனார்.

பாரிஸ் விமானநிலையத்தில் அவருக்குக் கிறுதியே வந்துவிட்டது. விமானத்தில் ஏறப் போகப் போகும்போது சோதனை செய்தீர்கள் சரி.. விமானத்திலிருந்து இறங்கிப் வரும்போதும் சோதனை செய்யவந்தால் எப்படி?

ஒரு சுங்க இலாகா அதிகாரிமிஸியூமிஸியூஎன்று கூப்பிடக் கூப்பிடக் காது கேளாதவர்போல பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு தருமலிங்கம் வேகமாக நடந்தார். அந்த அதிகாரி பின்னால் வருகிறானா என தருமலிங்கம் சற்றுத் திரும்பிப் பார்த்தபோது அந்த அதிகாரி இவருக்குப் பின்னால் வராமல் வேறொரு பயணியைச் சோதனை செய்துகொண்டிருந்தான்.

தலையை ஆட்டியவறே கால்களை எட்டப் போட்டு ஆங்காரமாகத் தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு போன தருமலிங்கம் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் சிவில் உடையணிந்திருந்த இரண்டு சுங்க இலாகா அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். ‘சவப்பா நோ!” என்று தருமலிங்கம் போட்ட கூச்சலில் விமான நிலையமே திரும்பிப் பார்த்தது.

அணுஅணுவாகச் சோதனை போடுவது என்பார்களே அதுதான் நடந்தது. தருமலிங்கத்தின் உடல் முழுவதும் அவர்களது கையுறைகள் அணிந்த கரங்கள் ஊர்ந்தன. தருமலிங்கத்தை படுக்கவைத்து எக்ஸ்ரேயும் எடுத்துப் பார்த்தார்கள். கிட்டத்தட்ட நான்கு மணிநேர விசாரணை. சுங்க அதிகாரி கூப்பிட்டபோது எதற்கு தருமலிங்கம் ஓட வேண்டும் என்பதுதான் விசாரணையின் மையம். அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தருமலிங்கம் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போது சோதித்த அதிகாரிகளில் ஒருவன் அவருடன் கைகுலுக்க வந்தான். தருமலிங்கம் கையைக் கொடுக்காமல் அவனை முறைத்துப் பார்த்தார். “அடுத்த தடவை இங்கே வரும்போது சோதனைக்கு அழைத்தால் தயவுசெய்து ஒத்துழையுங்கள், ஒத்துழைத்தால் இப்படியான காலவிரயங்களை நாங்கள் தவிர்த்துக்கொள்ளலாம்என்று அதிகாரி சொல்லிச் சொன்ன வாய் மூடமுன்பே தருமலிங்கத்தின் கையிலிருந்த பெட்டி பறந்துபோய் விமான நிலையத் தரையில் விழுந்து வாய் பிளக்க அதற்குள்ளிருந்த திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, திருநீறு, சந்தனம், ஆயுர்வேத எண்ணெய் எனப் பல சரக்குகள் தரை முழுவதும் சிதறின. தருமலிங்கம் தனது கால்களை ஒருசேர வைத்துக்கொண்டு இடுப்பில் இரு கைகளையும் ஊன்றிக்கொண்டு கழுத்தை முன்னே நீட்டி அந்த அதிகாரியைப் பார்த்துத் தமிழில் கத்தினார்:

அடுத்தமுறை ஏன் வரச்சொல்லுறாய்? இந்தமுறை மரியாதை கெடுத்தினது போதாதோ?”

4

பயணக் களைப்பு தருமலிங்கத்தை படுக்கையில் அமுக்கினாலும் விமான நிலையத்தில் ஏற்பட்ட ஆற்றாமையால் அவருக்கு ஒருகண் நித்திரையும் வரவில்லை. பிள்ளைத்தாச்சியான மனைவியைத் தனியே விட்டுவிட்டு வந்த கவலை வேறு அவரை உருக்கியது. காலையில் அய்ந்து மணிக்கு எழுந்து தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகவேண்டும். எனவே கட்டாயப்படுத்தி தூக்கத்தை வரவழைக்க முயற்சித்தார்.

ஒரு மணிநேரம் தூங்கியிருப்பார். அலாரம் அடித்தது. குளித்துவிட்டு நெற்றி நிறையத் திருநீறைப் பூசிக்கொண்டு தொழிற்சாலைக்குக் கிளம்பினார். ஒரு மணிநேரம் ரயிலில் பயணம் செய்து தொழிற்சாலையை அடைந்தார். இரண்டு மாதங்களிற்குப் பின்பு வேலைக்கு வருகிறார். தொழிற்சாலை வளவுக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே அவருக்குள்ளிருந்த உழைப்பாளி உற்சாகமாக விழித்துக்கொண்டான். உயர்ந்திருந்த தொழிற்சாலைக் கட்டடம் காலைச் சூரியனின் ஒளியில் மின்னியது. அந்தத் தொழிற்சாலையின் முன்பக்கம் முழுவதும் கண்ணாடிகளால் இழைக்கப்பட்டிருந்தது. தொழிற்சாலையின் பிரதான வாசலை நெருங்கியவர் அங்கே சில தொழிலாளர்கள் கும்பலாக நிற்பதைக் கண்டார். வழமையாக இப்படி யாரும் இந்த நேரத்தில் கூடி நிற்பதில்லை. ஏதும் விபத்தோ என்ற எண்ணத்தில் கால்களை எட்டிப்போட்டவர் வாசலை நெருங்கியதும் அப்படியே நின்று ஒரு கையை மார்பில் கட்டிக்கொண்டு அடுத்த கையால் வாயை மூடிக்கொண்டு அசையாமல் நின்றார். அவரது கண்கள் வாசலையே வெறித்துப் பார்த்தன.

அங்கே மனிதர்களைப் பரிசோதனை செய்யும் ஓர் இயந்திர வளைவு இருந்தது. அதனருகே தொழிற்சாலைக்குப் புதியவனான பிரஞ்சு இளைஞன் ஒருவன் காவலதிகாரிக்கான சீருடையும் சப்பாத்துகளும் தொப்பியும் அணிந்து புன்னகையோடு கம்பீரமாக நின்றிருந்தான். தருமலிங்கம் விடுமுறையில் போகும்போது அந்த இடத்தில் இந்த இயந்திரமுமில்லை, இந்த இளைஞனுமில்லை. அந்த வாசல் ஓவென்று திறந்து கிடக்கும். இது புதிய ஏற்பாடு.

தொழிலாளிகள் இந்த இயந்திரத்திற்குள் புகுந்து கடந்த பின்பு, காவலதிகாரியான இளைஞன் அவர்களின் உடலைத் தடவிப் பரிசோதித்து ஒவ்வொருவராகத் தொழிற்சாலைக்குள் அனுமதித்தான். திடீரென தருமலிங்கம் ஓடத் தொடங்கினார். அவர் தொழிற்சாலையை விலாப்பக்கமாகச் சுற்றி வேகமாகப் பின்புறத்தைச் சென்றடைந்தார். மாலையில் வேலை முடிந்து தொழிலாளர்கள் வெளியேறும் வழி பின்புறமேயிருந்தது. தருமலிங்கம் எதிர்பார்த்தது போலவே அந்த வழியிலும் பரிசோதனை செய்யும் ஓர் இயந்திர வளைவு இருந்தது.

தருமலிங்கம் மெதுவாக நடந்து தொழிற்சாலையின் முன்புற வாசலுக்கு வந்தார். இப்போதே வேலை தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்கள் தாமதமாகயிருந்தன. தருமலிங்கம் சோர்வு மேலிடப் படிகளில் ஏறி வாசலுக்குச் சென்றார். காவலதிகாரியான இளைஞனிடம் வணக்கம் சொல்லிட்டு தனது தொழிற்சாலை அடையாள அட்டையை எடுத்துக் காட்டினார். அந்த இளைஞனும் புன்னகையுடன் பதில் வணக்கம் சொல்லிவிட்டு இவரைப் பரிசோதிப்பதற்குத் தயாராக நின்றான். தருமலிங்கம் அந்த இயந்திர வளைவிற்குள் நுழையாமல் திடீரென அதைச் சுற்றிக்கொண்டு தொழிற்சாலைக்குள் நுழைய முற்பட்டபோது அந்த இளைஞன் தனது வலுவான கைகளை நீட்டி அவரைத் தடுத்தான். தருமலிங்கம் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் அந்த இயந்திரத்திற்குள் நுழைந்து வந்தார். இப்போது அந்த இளைஞன் தனது வெண்ணிறக் கையுறைகளைச் சரிசெய்துகொண்டு தருமலிங்கத்தின் உடலைச் சோதனை செய்வதற்குத் தயாராகிப் புன்னகையுடன் தருமலிங்கத்தை நெருங்கினான். தருமலிங்கத்திற்கு அந்தத் தருணத்தில் கிறுதி வந்தது. தனது தலையைப் பின்னால் சாய்த்துக்கொண்டு இடது கையால் தனது கொட்டைகளைகவர்பண்ணிக்கொண்டு வலது கையைச் சுழற்றி அந்த இளைஞனின் கைகளை வலுவுடன் தட்டிவிட்டார். அப்போது சடுதியில் தொழிற்சாலை முழுவதும் அலாரங்கள் ஒலிக்க ஆரம்பித்தன. தொழிற்சாலையின் பிரதான கதவு டபாரெனத் தானே இறுக மூடிக்கொண்டது. நாலாபுறமிருந்தும் காவலாளிகள் பிரதான வாயிலை நோக்கி ஓடிவந்தார்கள்.

தருமலிங்கத்தை முன்வைத்து அங்கேயொரு மினி பஞ்சாயத்துக் கூடியது. தருமலிங்கம் தனது உடலில் கைவைக்க யாருக்கும் அதிகாரமில்லை என விடாப்பிடியாக நின்றார். தொழிற்சாலை முகாமையாளரோ அப்படிப் பரிசோதனை செய்வது பொதுவிதியென்றும் தன்னைக் கூட அப்படிப் பரிசோதனை செய்துதான் உள்ளே அனுப்புகிறார்கள் என்றும் சொல்லிவிட்டு தனது பாரமான உடம்பைத் தூக்கிக்கொண்டு கைககளை உயர்த்தியபடியே அந்த இயந்திர வளைவுக்குள் இருமுறை புகுந்தோடி வந்து காவலதிகாரி முன்பாகக் கைகளை உயர்த்தியபடியே மூச்சுவாங்க நின்று ஒரு சிறிய ஆற்றுகையை நிகழ்த்தி தருமலிங்கத்திற்கு பிரச்சினையைப் புரியவைக்க முயன்றார்.

தொழிற்சங்கப் பிரதிநிதியும் தருமலிங்கத்தை சமாதானப்படுத்த முயன்றார். “இங்கே பார் தருமலிங்கம்..உலகம் முழுவதும் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்த்தான் செய்கிறது..உதாரணமாக அல் கொய்தா.. ” என்று அவர் முடிக்க முதலே தருமலிங்கம்என்னைப் பார்த்தால் அல் கொய்தா மாதிரியாகவா இருக்கிறது?” என்று கேட்டார். தொழிற்சங்கப் பிரதிநிதி உலக அரசியலைக் கரைத்துக் குடித்தவர். அவர் அமைதியான புன்னகையுடன்ஏன் தோழர், இலங்கைத் தமிழர்கள் கூட குண்டு வைப்பதில் தேர்ந்தவர்கள்தானேஎன்றார்.

தருமலிங்கம் அப்படியே வாசற்படியில் உட்கார்ந்தார். பிறகு எழுந்து நடந்து அந்த இயந்திர வளைவிற்குள் நுழைந்து அந்தக் காவலதிகாரி இளைஞனின் முன்னால்போய் கால்களை அகற்றி நின்றுகொண்டு கைகளை உயரே தூக்கினார். அப்போது தருமலிங்கத்தை ஊக்குவிக்கும் முகமாக முகாமையாளார் மெல்லத் தனது கைகளைத் தட்டிப் பாராட்டினார். காவலதிகாரி இளைஞன் மிகப் பொறுமையாக தருமலிங்கத்தின் உடலைத் தடவிப் பரிசோதித்தான். இவனும் தனது கொட்டைகளைத் தடவியதாகவே தருமலிங்கம் உணர்ந்தார். அன்று முழுவதும் அவருக்கு வேலையே ஓடவில்லை. இரவு சரியாகத் தூக்கமும் வரவில்லை. இரவு முழுவதும் கையால் தனது கொட்டைகளை வருடிக் கொடுத்தவாறே படுக்கையில் கிடந்தார். ஆனால் விடிகாலையில் அவரின் மனதில் ஒரு தெளிவு மின்னிச் சென்றது. அவர் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்துகொண்டு தனது கைகளைப் பக்கவாட்டில் நீட்டி பறப்பது போல அவற்றை மேலும் கீழும் அசைத்துக்கொண்டு சொன்னார்:

எல்லாத்துக்கும் வழியிருக்கு! சிறப்பாயிருக்கு. மலருக்கு வயித்தில சிங்கக்குட்டி இருக்கு..எல்லாம் சரியாயிருக்கு, எல்லாம் ஒரு அமைப்பாயிருக்கு“.

அடுத்தநாள் காலையில் முதல் ஆளாகத் தருமலிங்கம் தொழிற்சாலையில் நின்றார். அவர் மெல்லிய துணியில் தொளதொளப்பான காற்சட்டை ஒன்றை அணிந்திருந்தார். மிடுக்காக நடந்து சோதனை இயந்திர வளைவிற்குள் நுழைந்து காவலதிகாரியான இளைஞனின் முன்னால் போய்நின்று தனது கால்களை அகற்றி வைத்துக் கைகளை உயர்த்தினார். காவலதிகாரி தனது கையுறைகளைச் சரி செய்துகொண்டு மிக மெதுவாக அவரது கால்களைத் தடவிக்கொண்டே நிமிர்ந்து மேலே வந்தபோது காவலதிகாரியின் விரல்கள் நடுங்குவதைத் தருமலிங்கம் கவனித்தார். அவர் அன்று திட்டமிட்டே ஜட்டி அணிந்து வரவில்லை. அவரது விறைத்துநின்ற ஆண்குறி நீண்டு அந்த இளைஞனின் கைகளில் சடுதியில் தவழ்ந்தது. அவன் சடாரெனத் தனது கைகளை இழுத்துக்கொண்டான். தருமலிங்கத்தை தொழிற்சாலையின் உள்ளே போகுமாறு சொன்னான்.

மாலையில் வேலை முடிந்து வெளியேறியபோது அந்தக் காவலதிகாரி வெளியேறும் வழியில் இருந்தான். அவனிடம் போய் நின்று தருமலிங்கம் கைகளை உயரத்தினார். அவனது கைகள் நடுங்குவதை தருமலிங்கம் கொடுப்புக்குள் முகிழ்த்த சிரிப்புடன் கவனித்தார். அவனது கைகள் அவரது தொடைக்குக் கிட்டவாக வரும்போது தருமலிங்கம் தனது இடுப்பைச் சடாரென முன்னே தள்ளினார். படாரெனத் தனது முகத்தைப் பின்னுக்கு இழுத்த இளைஞன் தருமலிங்கத்தைப் போகுமாறு சொன்னான்.

அடுத்தநாள் தருமலிங்கம் வேலைக்குப் போனபோது அந்தக் காவலதிகாரி இளைஞன் வேறுபக்கம் தனது பார்வையைச் செலுத்தினான். தருமலிங்கம் அவனுக்கு முன்னால் போய்நின்று தனது இடுப்பை முன்நகர்த்திக் காட்டினார். அந்த இளைஞன்உள்ளே போங்கள்என மெதுவாக முணுமுணுத்தான்.

தருமலிங்கம் இரவில் பேரிச்சம்பழம், பாதாம்பருப்பு போன்றவற்றை மட்டுமே சாப்பிட்டார். தொழிற்சாலைக்குள் நுழைவதற்கு முன்பும் வெளியேறுவதற்கு முன்பும் கொங்கோ தேசத்திலிருந்து இறக்குமதியாகும் கோலா விதைகளை வாயில் போட்டு மென்றார். அந்த விதைகள் ஆணுறுப்பின் விறைப்பை நீண்டநேரம் பாதுகாக்கும் சக்தி கொண்டவை. தருமலிங்கத்தால் தனது இரகசியக் கற்பனைகள் மூலம் நினைத்த மாத்திரத்தில் தனது ஆண்குறியை எழுச்சி கொள்ள வைக்க முடியும்.

அவ்வாறு எழுச்சிக்கொள்ள வைப்பதற்கு அவர் மனதில் ஒன்றிரண்டு பெண்களை நினைத்துக்கொள்வார். எக்காரணம் கொண்டும் அந்த நேரத்தில் அவர் அசோகமலரை நினைப்பதில்லை. தெருவில் காணும் பெண்கள், உறவினர்கள், நடிகைகள் என யாரையும் அவர் அப்போது நினைக்கமாட்டார். குறிப்பிட்ட சில உலக நாட்டு பிரதம மந்திரிகளையும் ஜனாதிபதிகளையுமே நினைத்துக்கொள்வார். சிறுவயதிலிருந்தே அதுதான் அவரது வழக்கம். இந்த விசயத்தை அவர் ஒருநாள் பகடியோடு பகடியாக வாய்தவறி இந்தக் கதைசொல்லியிடம் சொல்லியிருக்கிறார்.

ஒரு தொழிலாளியை காவலதிகாரி தொடர்ந்தும் உடல் பரிசோதனை செய்யாமல் தொழிற்சாலையின் உள்ளே அனுமதிப்பதையும் வெளியேற அனுமதிப்பையும் கண்காணிப்புக் கமெராவில் கவனித்த பாதுகாப்பு உயர் அதிகாரிகள் அந்தக் காவலதிகாரிமீது ஒரு விசாரணையை ஏற்படுத்தினார்கள். அந்த இளம் அதிகாரி கைகளைப் பிசைந்தவாறே, தருமலிங்கம் ஜட்டி போடாமல் தொழிற்சாலைக்கு வருவதாலும் எப்போதுமே அவரது ஆண்குறி விறைத்துக்கொண்டு நீண்டிருப்பதாலும் தன்னால் அவரைத் தொட்டுப் பரிசோதனை செய்ய முடியவில்லை என்று தயக்கத்துடன் சொன்னான்.

தருமலிங்கத்தை முகாமையாளர் கூப்பிட்டு விசாரித்தபோது தருமலிங்கம்ஜட்டி போடாமிலிருப்பது தனிமனித உரிமை சார்ந்த விசயம், இதில் தொழிற்சாலை நிர்வாகம் தலையிட முடியாதுஎன்றார். இந்த விசயத்தில் தொழிற்சங்கம் தருமலிங்கத்தின் பிறப்புரிமையைக் காப்பாற்ற முன்வந்தது. முகாமையாளரால் பதில் பேசமுடியவில்லை. ஏனெனில் பணியிடத்தில் சீருடைகள், சப்பாத்துகள், தலைக்கவசங்கள் அணிய வேண்டும் என விதிகளிருந்தனவே தவிர ஜட்டி அணிந்திருக்க வேண்டும் என்று எந்த விதிகளும் இருக்கவில்லை. எனவே முகாமையாளர் காவலதிகாரியை மாற்றுவது என முடிவு செய்தார். பிரஞ்சு இளைஞனின் இடத்திற்கு ஒரு போலந்து நாட்டு முதியவர் நியமிக்கப்பட்டார். அடுத்த வருடம் ஓய்வூதியம் பெறவேண்டியவர் அந்தக் கிழவர். அந்தக் கிழவருக்குப் பல மொழிகள் தெரியும்.

கிழவர் ஒரு முடிவோடு இருந்தார். தருமலிங்கம் ஜட்டியென்ன காற்சட்டையே இல்லாமல் வந்தாலும் தடவிப் பரிசோதனை செய்வதென்ற முடிவோடுதான் அவர் இருந்தார். ஆனால் அடுத்தநாள் தருமலிங்கம் வேலைக்கு வரும்போது அவருக்கு முன்பே முப்பது வரையான தொழிலாளர்கள் உடல் பரிசோதனைக்காக வரிசையில் நின்றிருந்தார்கள். அவ்வளவு பேரும் வாட்டசாட்டமான அரபுத் தொழிலாளர்கள். இந்த உடல் பரிசோதனைகளால் பிரான்ஸில் அதிகம் பாதிக்கப்பட்டதும் அவமதிக்கப்பட்டதும் அவர்கள்தான். நேற்று தொழிற்சாலையில் நடந்த தருமலிங்கம் மீதான விசாரணை அவர்களிடம் ஒரு புதிய எழுச்சியை உருவாக்கியிருந்தது. அவர்கள் அவ்வளவு பேரும் ஜட்டி அணியாமல் வந்திருந்தார்கள். போலந்துக் கிழவர் அயர்ந்துபோனார். எத்தனை ஆண்குறிகளைத்தான் அவரால் தடவமுடியும். அவர் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா நிற்க தருமலிங்கம் ஓர் இதழோரப் புன்னகையுடன் அந்தக் கிழவரைக் கடந்து தொழிற்சாலைக்குள் நுழைந்தார்.

அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்தவர்களில் அரைவாசிப் பேர் ஆபிரிக்கர்கள். அரபுக்களும் தருமலிங்கமும் சோதனையிடப்படாமல் உள்ளே போவதையும் தங்களை மட்டும் காவலதிகாரி சோதனையிடுவதையும் அவர்கள் இன அவமானமாகவே கருதினார்கள். அடுத்த நாளிலிருந்து அவர்களும் ஜட்டி அணியாமல் வரத் தொடங்கினார்கள். காவலதிகாரியாக இருந்த போலந்துக் கிழவர் எல்லா மொழிகளிலும் கடவுளைத் திட்டியவாறு மருத்துவ விடுப்பில் போய்விட்டார். அந்தத் தொழிற்சாலையில் உடற் பரிசோதனை செய்யும் வேலைக்கு வந்தவர்கள் ஒரே நாளில் அலறியடித்துக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு ஓடினார்கள். கடைசியாக ஒரு நோஞ்சான் கிழவர்தான் அரைகுறையாக அந்த வேலையில் நின்றுபிடித்தார். அவருக்குப் பார்வைக் குறைபாடிருந்தது. காதும் சரிவரக் கேட்காது.

தொழிற்சாலை நிர்வாகம் திகைத்து நின்றது. இது நிர்வாகத்தின் கௌரவப் பிரச்சினை. முன்னூறு பேர்கள் வேலை செய்யும் அந்தத் தொழிற்சாலையில் நிர்வாகிகளான பத்துப் பேர்கள் மட்டுமே ஜட்டி அணிந்து வந்தார்கள். காலையில் அவர்களை மட்டுமே அந்த நோஞ்சான் காவலதிகாரி சம்பிரதாயமாக உடற்பரிசோதனை செய்வார். மற்ற நேரங்களில் அவர் கைகளைக் கட்டிக்கொண்டு ஓர் ஓரமாக நாற்காலியில் அமர்ந்துகொள்வார்..

தொழிலாளர்களின் இந்த எழுச்சிச் செய்தி மெல்ல மெல்ல மற்றத் தொழிற்சாலைகளிற்கும் பரவியபோது மற்றைய தொழிற்சாலைகளின் தொழிலாளிகளும் ஜட்டி அணியாமல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். இந்த எழுச்சிச் செய்தியை 1960-களில் அமெரிக்காவில் பெண்கள் முன்னெடுத்த பிரேசியர் அணியாத இயக்கத்தோடு ஒப்பிட்டு பத்திரிகைகள் எழுதின. நிர்வாண சங்கத்தினர் பாரிஸ் தொழிலாளர்களிற்குத் தங்களது வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்தனர். பாரிஸ் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி அந்த விமான நிலையத்தால் பயணிக்கும் ஆண்களில் முப்பத்தியிரண்டு சதவீதத்தினரும் பெண்களில் முப்பத்துநான்கு சதவீதத்தினரும் உள்ளாடைகள் அணியாமல் பயணிப்பதாகத் தெரியவந்தது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர்தீவிரவாதத்திலிருந்து எமது மக்களைக் காப்பாற்றுவதா அல்லது உள்ளாடைகள் அணியாமல் இருக்கும் அவர்களது தனிமனித சுதந்திரத்தைக் காப்பாற்றுவதாஎன்று சினத்துடன் கேட்டார். கத்தோலிக்க திருச்சபைதொழிலாளர்களின் செயல் காட்டுமிராண்டித்தனம்என அறிக்கை வெளியிட்டது. அதற்கு எதிர்வினையாக அனார்க்கிஸ சங்கத்தார்போர் சேவகர்கள் இயேசுக் கிறீஸ்துவின் வஸ்திரங்களை அவர்களிற்குள் சீட்டுப்போட்டுப் பகிர்ந்துகொண்டபோது இயேசுவின் வஸ்திரங்களிடையே ஜட்டி இருந்ததில்லைஎன்றொரு அறிக்கையை வெளியிட்டனர்.

முதலாளிகள் சங்கத்தினர் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்திக் கலந்தாலோசித்தனர். தொழிலாளர்களின் இத்தகைய ஒன்றிணைவு உடனடியாகப் பொருளுற்பத்தியில்அதாவது உள்ளாடைகள் உற்பத்தி செய்யும் தொழிலைத் தவிரபெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும் ஆனால் தொழிலாளர்களின் இத்தகைய ஒன்றிணைவு மேலும் பல உரிமைக் கோரிக்கைகளைக் காலப் போக்கில் அவர்கள் கிளப்ப அடிப்படையாயிருக்கும் என்றும் அவர்கள் அபிப்பிராயப்பட்டனர். எனவே இந்த உடற் பரிசோதனை முறைக்கு வேறொரு சிறப்பான நுட்பமான வழியைக் கண்டுபிடிக்கும்வரை தொழிற்சாலைகளில் நிறுவப்பட்டிருக்கும் உடற் பரிசோதனை இயந்திர வளைவுகளையும் காவலதிகாரிகளையும் தற்காலிகமாக நீக்கிக்கொள்வதென்று அவர்கள் தீர்மானித்தனர். திங்கள்கிழமை முதல் அவற்றை நீக்குவதாக தொழிற்சங்கங்களிற்கு முதலாளிகள் சங்கத்தால் கடிதம் எழுதப்பட்டது.

திங்கள் அதிகாலையில் முதல் ஆளாகத் தருமலிங்கம் தொழிற்சாலைக்கு வந்தார். வாசலில் பரிசோதனை இயந்திர வளைவு இருந்த தடம் கூட இல்லை. காவலதிகாரியுமில்லை. தொழிற்சாலையின் கதவு அகலத் திறந்து கிடந்தது. வாசற்படிகளில் சில புறாக்கள் நின்றிருந்தன. தருமலிங்கம் புறாக்களிடம் சொன்னார்:

எல்லாம் வெளிச்சிருக்கு..எல்லாம் சரியாயிருக்கு

தருமலிங்கம் தொழிற்சாலையின் வாசற்படியில் ஏறிக்கொண்டிருந்தபோது அவரது கைபேசி ஒலித்தது. அவர் உற்சாகத்துடன் கைபேசியை எடுத்துப் பேசினார். மறுமுனையில் அசோகமலரின் குரல் துயரத்துடன் ஒலித்தது. அசோகமலர் மகப்பேறு மருத்தவரிடம் உடற்பரிசோதனைக்காகப் போயிருந்தாராம். கரு எதுவும் வயிற்றில் இல்லையாம். பேசி முடித்துவிட்டு அசோகமலர்என்ர ராசாஎன்றொரு ஆழமான பெருமூச்சைத் துயரத்துடன் வெளியிட்டார்.

தருமலிங்கம் சத்தமில்லாமல் வாசற்படிகளிலிருந்து இறங்கினார். அப்படியே தொழிற்சாலை வளவிலிருந்து வெளியேறினார். அதற்குப் பின்பு அவர் அந்தத் தொழிற்சாலைப் பக்கம் காணப்படவேயில்லை.


(‘ஆக்காட்டிசெப்டம்பர் இதழில் வெளியானது)


5 thoughts on “எழுச்சி

  1. உங்கள் பதிவை படிக்க பலநாள் காத்திருக்க வைத்துவிட்டீர்கள். இனிமேல் மாதமொரு பதிவையாவது தாருங்கள். திலீபன் அண்ணா நினைவுகளை, இந்த மாத முடிவுக்குள், உங்கள் கதையோடு பகிர்ந்ததற்கு நன்றிகள். கதை வசிக்கும் போது பல இடங்களில் சிரிக்க நேர்ந்தாலும் அதிலிருக்கும் வலியையும் அறியாமலில்லை. வாழ்த்துக்கள், தொடருங்கள்….

  2. I am a fan of Sobasakthy. I couldn’t enjoy his unique style and his mesmerizing context in this story. Up to Kandiveeran, there was no other writer could be compared with him. I wish to see the real Sobasakthy in his next story.

  3. எழுச்சி – புனைவு என்னும் புதிர் – ஷோபா சக்தியின் 12 கதைகள் – விமலாதித்த மாமல்லன்

    வட அமெரிக்கா நாடுகளில் ஸ்டார் பக்ஸ் எனும் பிரசித்திபெற்ற காபி கடைகள் உண்டு. அதில் காபி லாட்டே எனும் காபியை சில நுணுக்கங்களுடன் சொன்னால் நம்ம ஊர் காபியை போல வாங்கலாம். என்னக்கு கனடாவில் பொழுதுபோக்கு என்று மூன்றே வேலைகள்தான். 1) காபி 2) நவீன முந்தக்கூவி (செல் போனின் ஆரம்பகால தமிழ் பெயர், கேட்ட வார்த்தை இல்லை, முகஞ்சுளிக்க வேண்டாம்) 3) வாசிப்பு.

    அரை உழக்கு அளவுள்ள ஒரு கப்பில் காபி வாங்கிக்கொண்டு பெரும் கூட்டமில்லாத அந்த கடையில்தான் விமலாதித்த மாமல்லனுடைய இந்த புத்தகத்தின் முதல் கதையையும் கட்டுரையையும் படித்தேன்.

    எழுச்சி – ஷோபா சக்தி எழுதிய கதை

    இலங்கையை சேர்ந்த கதைநாயகன் அண்டை நிலத்தாரோடான தகராறு காரணமாக நாட்டாமை செய்யவரும் இரண்டு இராணுவத்தாரிடம் தன் கொட்டையில் நங் என்று அடிவாங்குகிறான். ஆம் விதைப்பையிலுள்ள விதையில்தான் அடி வாங்குகிறான். ஒருவன் கதைநாயகனின் கைகளை பின்னாலிருந்து கிடுக்கிப்பிடி பிடிக்கிறான், மற்றொருவன் ஏ கே 47 வை தலைகீழாக திருப்பி நாயகனின் தொடைகள் நடுவே தாக்குகிறான்.

    கற்பனை செய்ய முடிகிறதா அந்த வலியை? நாயகன் கதை நெடுகிலும் அந்த அக வலியில் இருந்து மீளவே இல்லை.
    பின்பு கள்ளத்தோணியில் பிரான்ஸ் வரும் நாயகன் வலியையும் சேர்த்தே எடுத்துவருகிறான். அங்கே விமானநிலையங்களில், சினிமா தியேட்டரில், வேலைசெய்யும் நிறுவனத்தில் கேட்டில் நிற்கும் பாதுகாவலர்கள் வழக்கமாக செய்யும் உடல் சோதனைகளில் அவனுக்கு அந்த வலியே ஞாபகப்படுத்துகிறது. பாதுகாவலர்கள் சோதனை செய்யும் பொது அவர்கள் கை தன் விதைப்பைமேல் பட்டுவிடுமோ என்று பதட்டப்படுகிறான்.

    தன் நிறுவனத்தில் இவ்வகையான சோதனையை எதிர்த்து ஒரு புரட்சி செய்கிறான். இதை ஷோபா சக்தி நகைச்சுவையாய் எழுதியிருக்கிறார், ஆனால் என்னால் நகைக்க முடியவில்லை. நாயகனின் கையறு நிலைமையும் அனுதாபமுமே மேலெழுகிறது.

    ஒரு உயிர் கருபுகுந்தவுடன் அதுகொள்ளும் முதல் மலம் ஆணவமலம். அதாவது அஹங்காரம், அதாவது நான் எனும் அடையாளம். இம்மலத்தை சுற்றியே நம் உடல் உள்ளம் வளர்கிறது, இம்மலத்தை ஒட்டியே நம் சேகரம் பெருமைகள் அமைகிறது. சோர்வு, உத்வேகம், கொள்கை, சூள், ஆன்மசாதனம், அறிவு, அறம், தத்துவம் என்று பல பூச்சுகள் போட்டுக்கொண்டே இருக்கிறோம். இப்படியாக பலவாறு நாம் நம் ஆணவமலத்திருக்கு வலு சேர்க்கிறோம். ஆனால் அதை தீண்ட நம்மவர்கள் பல உக்கிகள் கைவசம் வைத்துள்ளார்கள். அதில் ஒன்றுதான் கதைநாயகனிற்கு நடந்தது.

    அது ஏழு மலை தாண்டி கூண்டிலுள்ள கிளி. நேராக சொன்னாலும் பூடகமாக சொன்னாலும் அந்த கிளியை பாதுகாப்பதே நம் வேலை. கிளி செத்தவனுக்குத்தான் தெரியும் அதன் வலி. பாதுகாப்பவனுக்கு விடுதலையென்பதே இல்லை.

    கதையின் முற்பாதியில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை தவிர வேறு சார்பில்லாத கதைநாயகன், திலீபன் இறந்த செயதியறிந்து ஒருவித விசர்பிடித்து ஒரு முச்சந்தியில் உண்ணாவிரதம் இருக்கிறார். இயக்கத்தார் வந்து கண்ணீருடன் பந்தல் அமைத்து கண்ணீருடன் மைக் செட் கட்டி, கண்ணீருடன் ஆட்களை சேர்த்து, அந்த நிகழ்விற்கு அரண் அமைத்து நிகழவிடுகிறார்கள். பின்பு எனோ அதை களைத்து விடுகிறார்கள். இயக்கத்தாரின் மீது ஷோபா சக்தியின் இந்த மெல்லிய விமர்சனம் என்னை பலவாறு சிந்திக்க வைக்கிறது. இராணுவத்தாரின் கொடுமையை நெடிய மொழியும் நம்மவர்கள் இயக்கத்தாரின் சட்டாம்பிள்ளைத்தனத்தை கண்டுகொள்வதில்லை. யார்தான் சொல்வது?, இலக்கியவாதியயை தவிர.

    நம் ஆணவமலம் என்பது கூழாங்கற்களில் கட்டப்பட்ட மாளிகை. ஒரு கல் உருவினாலும் சரியும். கதைநாயகனின் மாளிகை கட்டப்படாமலே இடிக்கப்பட்டது.

    நம்மவூர் காபிக்கு பழக்கப்பட்ட நான் அன்று ஒருநாள் உமாவிடம் இரண்டாவது காலை காபி கேட்டேன்.

    ‘இப்போ எதுக்கு காபி?’ என்றாள்

    ‘ஒரு காபி சாப்பிடக்கூட எனக்கு சுதந்திரம் இல்லையா?’

    ‘ஏன் காபி சாப்பிடாம இருக்கமுடியாத?’ என்றாள்

    காலையில் காபி சாப்பிடுவது என்பது ஒரு சுதந்திரம் தான், ஆனால காலையில் காபி சாப்பிடாமல் இருக்கமுடியாது, சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது தான் உண்மை . இல்லை என்றால் விசர் தான். இது சுதந்திரமல்ல, சதந்திரம்போல உள்ள கட்டுண்டநிலை. நம் ஆணவமலம், ஏழு மலை தாண்டியுள்ள கிளி, நம் விதைப்பை.

    பி கு : – விமலாதித்த மாமல்லனுக்கு என் நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *