எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்

நேர்காணல்கள்

கிழக்கு இலங்கையின் சிற்றூர் ஒன்றில் 1982-ல் பிறந்த ஸர்மிளா ஸெய்யித் ‘சிறகு முளைந்த பெண்’ என்ற  கவிதைத் தொகுப்பு ஊடாக நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் தனது தடத்தைப் பதித்தவர். தொடர்சியாக, புனைவுப் பிரதிகளை மட்டுமல்லாமல் அ-புனைவுப் பிரதிகளையும் அவர் முனைப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறார். முப்பதாண்டு கால ஈழப் போருக்குப் பின்னான காலத்தில், போரின் காயங்களோடும் வடுக்களோடு அலைந்துறும் மாந்தர்களையும் இலங்கையின் இனத்துவப் பிரச்சினைப்பாடுகளையும் மையமாக வைத்து ஸர்மிளா ஸெய்யித் எழுதிய நாவலான ‘உம்மத்’  இந்த வருடத்தின் தொடக்கத்தில் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

சமகால அரசியற் பிரச்சினைகளிற்குள் சிக்கிக்கொள்ளாமல் லாவகமாக நழுவப் பார்க்கும் அல்லது வலுவான காற்றடிக்கும் பக்கமாகச் சாயும் எழுத்துச் சந்தர்ப்பவாதியல்ல ஸர்மிளா ஸெய்யித். அரசியல் – மதம் – கலாசாரம் – உடல் என அனைத்தின்மீதும் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கும் ஸர்மிளா  ஸெய்யித் ‘என்மீதான தடைகளையும் அடக்குமுறைகளையும் என் கேள்விகளால் நான் மீறினேன்’ என்கிறார்.

தான் சொல்லிய கருத்துகளிற்காக மத அடிப்படைவாதிகளால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், இன்றுவரை சமூகப் புறக்கணிப்புகளை எதிர்கொண்டாலும்; கருத்துகளும் எழுத்துகளும் அரசால் மட்டுமல்லாமல் உப ஆயுதக்குழுக்களாலும் மதநிறுவனங்களாலும் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சபிக்கப்பட்ட ஈழ நிலத்திலிருந்துகொண்டு தனது உரத்த குரலை ஒளிவுமறைவின்றி இந்நேர்காணலில் நம்முன்னே வைத்திருக்கிறார்  ஸர்மிளா ஸெய்யித்.

இந்நேர்காணல் கேள்விகளை மின்னஞ்சலில் அனுப்பியும் பதில்களிலிருந்து துணைக்கேள்விகளை உருவாக்கி மேலும் பதில்களைப் பெற்றும் நிகழ்த்தப்பட்டது.

-ஷோபாசக்தி
17.07.2014
**********

ஏறாவூரில், கயறுநிஸா – ஸெய்யித் அகமது தம்பதியருக்கு நான் மகளாகப் பிறந்தேன். ஒரு சகோதரன், மூன்று சகோதரிகள் கொண்ட சலசலப்பு நிரம்பிய இயல்பான குடும்பம். முற்றிலும் இயற்கையின் கரங்களால் அணைக்கப்பட்ட ஊராக ஏறாவூர் அப்போது இருந்தது. எனது இளமைக்காலம் இன்பமயமானது, சாகசங்கள் நிரம்பியது. மட்டக்களப்பு மீன்பாடும் தேனாடு எனச் சொல்லப்படுகின்ற நகரம். மீன்பிடியும் விவசாயமும் பிரதான தொழில்கள். தந்தை கிழக்கிலங்கைக்கும் தலைநகருக்கும் ஏற்றுமதி – இறக்குமதி வியாபாரத்தினூடாக ஊரில் அறியப்பட்டவராக செல்வமும் செல்வாக்குமுடையவராக இருந்தார். அவரது பிரதான ஏற்றுமதிப் பொருளாக மீன் இருந்தது. வியாபாரத்தில் மும்முரமாகவிருந்த நிலை அவருக்கும் எங்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது. ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு பொழுதில் மட்டும்தான் தந்தையைச் சந்திக்கக் கிடைக்கும். பெரும்பாலும் அந்தப் பொழுது இரவுப் போசனமாக இருக்கும். இந்த நேரத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கக் கருதியோ என்னமோ அவர் எங்களைக் கண்டித்ததே கிடையாது. எங்களது குற்றங் குறைகளை ஆராய்வது, தோலுரிய அடித்துக் கண்டிப்பது எல்லாமும் உம்மாவின் காரியங்களாக இருந்தன. ஆனால் அவர் பாசமிக்க தாய். உம்மா, வாப்பா இருவரினதும் படிப்பு வாசிக்கவும் எழுதவும் அறிந்தது மட்டும்தான். எனினும் வெகு பவ்வியமாகக் கற்றுத்தேர்ந்தவர்களின் பிள்ளைகளைப்போல நூதனமாகச் சுதந்திரமாக, பாலியல் சமத்துவத்துடன், எல்லா வளங்களுடனும் வளர்க்கப்பட்டோம்.

பையனைப் போலவே நான் வளர்ந்தேன். ஏறாவூர் முற்றிலும் இஸ்லாமியச் சூழல் கொண்டது. பச்சிளம் பருவத்தில் குர்ஆன் மதரஸாவுக்கு கால்களை மறைக்கும்படியான நீண்ட உடைகளை அணிய முடியாதென்றதிலிருந்து பர்தா வரைக்கும் சர்ச்சைக்குரியவளாகவே வளர்ந்தேன். ஒழுக்கம், மதக் கட்டுப்பாடு என்ற வேலிகளால் சிறைப்பட்ட ஏறாவூரில் பையனைக்கூட பொத்திப் பொத்தியே வளர்த்தார்கள். ஒரு பையனுக்கு சைக்கிள் வாங்கித் தருவதற்கு அவன் பத்தாம் வகுப்புச் சித்தியடையும் வரைக்கும் காத்திருக்கச் செய்வதே பெரும்பாலான பெற்றோர்கள் செய்யக்கூடிய காரியமாக அப்போதைய காலம் இருந்தது. இந்த வேலிகளை நான்  ஒருபோதும் பொருட்படுத்தியவள் கிடையாது. ஆறு வயதிலிருந்தே சைக்கிள் ஓட்டினேன். பள்ளிக்கூடம் செல்வதற்கு கார், வேன் வாகனங்கள் வீட்டிலேயே இருந்தபோதும் சைக்கிளில் செல்லவே விரும்பினேன். பன்னிரெண்டு வயதிலும் முட்டிக்கால்  தெரியும் சட்டையும் இரட்டை ஜடையுமாக சைக்கிளோட்டித் திரிந்த என்னைப் பார்த்து மொத்த ஊருமே வியப்பில் ஆழ்ந்து கிடந்தது. ஒரு பெண் பிள்ளையை எப்படி வளர்ப்பதென்று என் பெற்றோருக்குப் பலரும் வகுப்பெடுத்தார்கள். ஆனால் அதே பெற்றோரினால் வளர்க்கப்பட்டுக்கொண்டிருந்த என் மூன்று சகோதரிகளையும் சந்திக்க நேர்ந்தவர்கள் வாயடைத்து நின்றார்கள். தங்கைகள் இஸ்லாமியப் பெண்கள் என்று சொல்லப்படக்கூடியவர்களின் பிரதியுருவங்களாக இருந்தார்கள். பெண் குழந்தையின் சிறுபராயங்களை அனுபவிக்கத் தராத, சிறுமியை அவளது ஏழு வயது முதலே பெண்ணாகப் பார்க்கிற ஊரில் நான் வளர்ந்த விதம் முற்றிலும் வியப்பூட்டக்கூடியது. என்னை மாற்றவும் எனது சுதந்திரக் குணாதிசயங்களைக் கட்டுப்படுத்தவும் பெற்றோரும் உறவினரும் எடுத்த எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. எனது சுதந்திரத்திற்காகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறேன். இருட்டறையில் பூட்டப்பட்டிருக்கிறேன். மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருக்கிறேன். இவற்றையெல்லாம் கடந்து எல்லோரதும் நம்பிக்கைகளைப் பொய்யாக்குகின்ற சுதந்திரமானவளாகவே நிமிர்ந்து வளர்ந்தேன்.

ஏறாவூர் அல் அஸ்ஹர் வித்தியாலயமே எனது ஆரம்பப் பள்ளி. கல்வி லாவகமாகக் கைவந்தது. ஒரு கலகக்காரியாகவே கவனிக்கப்பட்ட நான் படிப்பிலும் கெட்டித்தனமாகவே இருந்தேன். இன்னொன்றையும் சொல்லத் தோன்றுகின்றது. குர்ஆன் ஓதுவதற்கு கால்கள் வரையும் நீண்ட உடையும் பர்தாவும் அணிய முடியாதென்று அடம்பிடித்து முட்டிக்கால் சிவக்க அடிபட்டவள் ஆறு வயதுக்குள் குர்ஆனை முழுவதுமாக ஓதக் கற்றுக்கொண்டிருந்தேன். பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு முன்பாகவே குர்ஆன் ஓதுவது பரிச்சயமாகிவிட்டிருந்தது.

எட்டாவது வகுப்புக்குப் பின்னர் ஏறாவூர் றகுமானியா வித்தியாலயத்திற்கு, படித்தது போதும் என்ற வாப்பாவின் வாதத்தையும் மீறியே மாறினேன். வீட்டுக்கு அண்மைய பள்ளிக்கூடம் என் பறத்தலின் எல்லையை மட்டுப்படுத்தியிருப்பதாகத் தோன்றிய எண்ணமே றகுமானியாவுக்குச் செல்லக் காரணம். அது வீட்டிலிருந்து தொலைவில் இருக்கிற பள்ளிக்கூடம். உயர்தரம் வரைக்கும் அங்குதான் பயின்றேன். பாடசாலைக் காலம் மிகக் குதூகலமானது.  பையன்களே அதிகம் நண்பர்கள். நண்பர்களை வீட்டுக்கு அழைப்பது, கூடியிருந்து கதைபேசுவது அனைத்துமே எங்கள் சூழலுக்குப் பொருந்தாத காரியங்கள். ஆனால் எங்கள் வீட்டின் பெரும்பாலான பொழுதுகள் நண்பர்களாலே வழிந்தது. ஆரம்பத்தில் இவற்றைக் கண்டித்த பெற்றோர்கள், எந்தவொரு குற்றத்தையும் காணாதபோது கண்டுகொள்ளாமல் இருக்கப் பழகிக் கொண்டார்கள்.

பள்ளி மேற்படிப்புக்குப் பின்னர், கல்லூரிப் படிப்பை கொழும்பில் தொடர்ந்தேன். அதற்காகவும் கடுமையாகப் போராடவேண்டியும் பட்டினி கிடந்து ஆர்ப்பாட்டம் செய்யவேண்டியதாகவும் இருந்தது. என்னதான் சுதந்திரமாகவும் இளமைக் கொதிப்புடனும் வளர இடம்தந்தாலும் 340 கிலோமீற்றர்கள் தூரத்திலிருக்கிற பெருநகரத்திற்கு அனுப்ப உம்மா, வாப்பா இருவராலும் சம்மதிக்க முடியவில்லை. ஊரைவிட்டுத் தொலைவிலிருந்த நகரத்தை நோக்கிப் பயணிக்க எண்ணியதற்கு பிரதான காரணமாக இருந்தது ஊடகத்துறை. உயர்தரப் பரீட்சை முடிந்த பின்னர் பெறுபேறிற்காகக் காத்திருந்த காலமான ஆறுமாதங்களை உபயோகப்படுத்தும் பொருட்டும், வீட்டில் என்னை மேய்க்க முடியாதென்பதினாலும் மட்டக்களப்பு நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றில் கணினி டிப்ளோமா கற்கையொன்றில் சேர்த்துவிடப்பட்டிருந்தேன். எனது வாழ்வை மாற்றிய தருணம் அது.

ஏலவே கதைகள், சிலகவிதைகள், குறிப்புகளை எழுதியபடியும் பிரசுரத்திற்காகப் பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொண்டுமிருந்த என்னை அப்போது, 2001-ம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து வெளியான ‘தினக்கதிர்’ நாளிதழ் ஈர்த்தது. அதில் எனது படைப்புகளும் அவ்வப்போது வெளியாகியபடியிருந்தன. ‘பயிற்சி பத்திரிகையாளர் தேவை’ என்ற விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்த்துவிட்டு ஒருநாள் நானும் நேர்காணலுக்குச் சென்றேன். பட்டப்படிப்பை முடித்துவிட்டுச் சான்றிதழ்களுடன் காத்திருந்தவர்கள் வரிசையில் கணினி வகுப்புப் புத்தகங்களுடன் அமர்ந்திருந்தேன். தினக்கதிர் நாளிதழின் உரிமையாளராகயிருந்த, மனோ இராஜசிங்கமே என்னை நேர்கண்டார். சிறுமியிடம் உரையாடுவதுபோலவே அவரது உரையாடல் இருந்தது. ”சாப்பிட்டியா?” என்றும் கேட்டார். ”நீர் இங்கு வந்தது அம்மா அப்பாவுக்குத் தெரியுமா?” என்பதே அவரது முதல் கேள்வி. நான் ”இல்லை” என்றேன். ”அவர்களுக்குத் தெரியாமலே வேலை செய்ய உத்தேசமோ?” என அவர் கேட்க, ”வேலை கிடைத்ததென்றால் சொல்லுவேன்” என்றேன். வீட்டுப் பொருளாதாரம் குறித்துக் கேட்டார். பரீட்சைப் பெறுபேறிற்காகக் காத்திருக்கப் பொறுமையின்றி வேலை தேடி அலைகிறளவிற்குப் பொருளாதாரச் சிக்கல் இல்லை என்ற பின்னணியைத் தெரிந்து கொண்ட பிறகு அவரது கேள்விகள் வேறாக மாறின. சமூகத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்? சமூகத்துக்கு நீ என்ன செய்ய முடியும்? இப்படியாகப் பல கேள்விகளைக் கேட்டபின்னர் என்னைப் போகலாம் என்றார். இது நடந்து ஒரு வாரத்தின் பின்னர் பயிற்சிப் பத்திரிகையாளராகத் தெரிவாகியிருப்பதை தொலைபேசியில் அறிகின்றவரைக்கும் அப்படியொரு எதிர்பார்ப்பு எனக்கிருக்கவே இல்லை. அந்த நேர்காணலை வழமையான எனது சாகச விளையாட்டுகளில் ஒன்றாகவே கருதியிருந்தேன். ஆயினும், திடுதிப்பென்று ஏற்பட்ட அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டேன். கணினி வகுப்பைத் தொடர்ந்தபடியே வீட்டுக்குச் சந்தேகம் வராமல் வேலையையும் தொடர்ந்தேன். எனது முதல் சம்பளக் கவரை உம்மாவிடம் நீட்டுகிற வரைக்கும் வேலைக்குச் செல்கிறேன் என்பதை யாரும் கண்டுபிடிக்கவேயில்லை. வீட்டுக்கு அது தெரிந்த பின்பு, விபரீதமான ஒரு துறையைத் தேர்வு செய்திருப்பதாகவும், அது பெண்களுக்கு ஆகாதது என்றும் நிச்சயமாக ஊடகத்துறைக்குள் போகவே கூடாதென்றும், மேலும் அது புலிகளின் பத்திரிகை என்றெல்லாம் பலவாறாக அச்சுறுத்திய எந்தக் கூக்குரலும் தண்டனையும் என்னைத் தடுக்கவில்லை.

இவற்றுக்கெல்லாம் பின்னர் வெளியான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் கல்வியியல் கல்லூரிக்கான (Collage of Education) அனுமதியுடன் வந்தடைந்தது. கல்வியியல் கல்லூரியில் படிக்குமாறும், அது முடிந்ததும் ஆசிரியர் தொழில் சர்வநிச்சயம் என்றும் பெற்றோரும் உறவினரும் வற்புறுத்தினர். எனது விருப்பம் இதழியல் கற்பதென்பதாக மாறியிருந்தது. அதற்கு ஒருவரும் ஒப்புக்கொள்ளவில்லை. சண்டையும் சச்சரவும் பட்டினியும் பேசா விரதமுமாக எனது பிடிவாதங்களைத் தொடர்ந்தபடி தினக்கதிர் நாளிதழ் அலுவலகம் சென்றுவந்தேன். இவை அனைத்தும் பத்தோ, பதினொரு மாதங்கள் இடம்பெற்றன. 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி நள்ளிரவில் தினக்கதிர் நாளிதழ் காரியாலம் தீக்கிரையாக்கப்பட்டது.

எதிர்பாராத இந்த நிகழ்ச்சி என்னைப் பாதித்தது. கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்கான காலமும் கடந்துவிட்டிருந்தது. என்னுடன் கற்ற நண்பர்கள் அரையாண்டு காலக் கல்வியைப் பூர்த்தி செய்திருந்தார்கள். இதனால் வீட்டில் வசைகள் அதிகரித்தன.

கொழும்பு செல்லப் போகிறேன் என்றும், அங்கே மட்டும்தான் இதழியல் கற்பதற்கான வழிகள் உண்டென்றும் தொடர்ந்த எனது வாதாட்டத்திற்கு ஒருவரும் செவிசாய்க்கவில்லை. சிங்கள மொழி தெரியாத ஒருவரும் கொழும்பு நகரத்தில் காலத்தை ஓட்ட முடியாதென்றும், அதுவும் ஒரு பெண் தன்னந்தனியாக முடியவே முடியாதென்றும் எச்சரிக்கப்பட்டேன். ஆனால் பட்டினிப் போராட்டம் மரணத்தின் வாசல்களைத் தொடுகிறவரைக்கும் என்னை இழுத்துச் சென்றது. மயக்கமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் குறைந்தபட்சம் என்னை உயிரோடிருக்கச் செய்வதற்காக கொழும்பு செல்ல அனுமதிப்பதென்று வீட்டார் சம்மதித்தனர்.

கொழும்பு வந்ததும் கல்வி ஒரு தாகமாக மாறியது. அந்நிய மொழியும், அறிமுகமற்ற மனிதர்களுடனான நட்பும் அனுபவங்களும் என்னை நிறையவே மாற்றியது. கொழும்பு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் கல்வி முகாமைத்துவத்தில் பட்டப்படிப்பும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல்,  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உளவியல் என கற்றல் விரிவடைந்தது. இவை தவிர தொழில்முறை ஊடகவியலாளர்களிற்கான பயிற்சிகள், பயணங்கள், கள அனுபவங்கள், மனித உரிமைகள் தொடர்பான கற்கைகள் எனக்கு நிறையக் கற்றுத்தந்தன. சிறுபராயத்திலிருந்தே சட்டம் பயில்வது எனது ஆர்வமாயிருந்தது. 2012-ம் வருடம் சட்டக்கல்லூரி அனுமதிக்காகப் படித்துக் கொண்டிருந்தபோதே பாலியல் தொழிலைச் சட்டபூர்வமாக்குவது தொடர்பான எனது நேர்காணல் பி.பி.ஸி. வானொலியில் ஒலிபரப்பாகியது. அதன் பின்னரான சூழ்நிலைகள் எனது வாழ்வைப் புரட்டிப்போட்டதில் படிப்பு உடனடியாகத் தடைப்பட்டது. அந்த அனுபவங்கள் சமூகத்துறை சார்ந்த கல்வியைப் பயில வேண்டிய அவசியம் இருப்பதை உணர்த்தியதன் விளைவாக சமூகப்பணி (Social Work) என்ற பட்டப் பின் படிப்பை தற்போது தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

உங்களை இலக்கியத்தின் பக்கம் அழைத்து வந்தது எதுவெனக் கருதுகிறீர்கள்?

இலக்கியம் தொடர்பிலான எனது ஈடுபாடென்பது வேர் அறியமுடியாத ஒரு நிகழ்ச்சி. சிறுபராயம் முதல் புத்தகங்களைப் படித்துக் குவித்த அனுபவம் எனக்கில்லை. சிறுபராய, இளமைக்காலக் கட்டுப்பாடுகள், தடைகள், சுதந்திர மறுப்புகளிலிருந்து எழுத்துக்கூடாக விடுதலையடைந்தேன் என்றோ, கவிதையும் எழுத்துகளும் புத்தகங்களுமே என்னை விடுவித்ததென்றோ நிச்சயமாகச் சொல்லமாட்டேன். தடைகளைக் கடந்தே வந்தேன். விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விவாதத்திற்குள்ளாக்கினேன். கேள்விகளால் அவற்றை இல்லாது செய்தேன். மறுப்புக்கு வெளியே தெரிந்த வானத்தை சுதந்திரத்தின் சிறகுகளால் அளந்தேன். இத்தனையும் நான்  செயல்களாலேயே நிகழ்த்தினேன்.

நிஜவாழ்வில் கதவுகளுக்குள் ஒளிந்துகொண்டு மூலையில் குந்தி விம்மியவாறு ‘புரவியில் பறந்தேன்’ என்று கவிதையில்  காணுகிற சுதந்திரத்தை விரும்புகிறவளில்லை நான். நிச்சயமாகவே இல்லை! இவற்றுக்கு அப்பால் நான் எழுதினேன். எனது கவிதைகளில் என்னை எழுதினேன். அது கற்பனையான நான் இல்லை. எவராலும் கற்பனை செய்ய முடியாத நான். என்னில் நான் கண்ட வித்தியாசமே என்னை எழுதத்தூண்டியது. என்னை எழுதுவதற்காகவே நான் எழுதினேன். நான் வாழ்கிறேன் என்பதையும் என்னை அப்படியே உள்ளபடியாக உரித்துக் காட்டுவதற்காகவும் எழுதினேன். என்னைப் பற்றிய பதிவேடாகவே எழுத்தின் ஆரம்பம் இருந்தது. அதுவே இலக்கியத்தின் பக்கம் என்னை இழுத்து வந்திருக்கவேண்டும். உண்மையில் ‘சிறகு முளைத்த பெண்’ வெளிவருகிற வரைக்கும் இலக்கிய உலகு குறித்து எதுவுமே தெரியாதெனக்கு. இப்போது தெரிந்திருக்கிறேன் என்பதால் ஒரு மாறுதலையும் அடைந்துவிடவுமில்லை.

இலங்கையில், பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும் என நீங்கள் பி.பி.ஸி. செய்திச் சேவைக்கு சொன்ன கருத்துகளை பின்பு மீளப்பெற்றுக்கொண்டீர்களா?

மீளப்பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால், கருத்துகளை மீளப்பெற்றுக்கொண்டேனா இல்லையா என்பதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவற்றினால் எந்த மாறுதலும் ஏற்பட்டுவிடப் போவதுமில்லை. வாழ்வின் நோக்கத்தை, செல்லவேண்டிய தூரத்தை, செய்ய வேண்டிய காரியங்களைத் தெளிவுபடுத்திய ஓர் அனுபவம் அது. எப்படியான சமூகத்துக்குள் இருந்துகொண்டிருக்கின்றேன் என்பதை, எனது சமூகம் பக்குவத்தில் இன்னும் பால்குடிக் குழந்தையே என்பதை எனக்குணர்த்திய அனுபவமாக மட்டுமே அதனைப் பார்க்கிறேன்.

பாலியல் தொழிலைச் சட்டபூர்வமாக்கியிருக்கும் நாடுகளில் பாலியல் தொழிலாளர்களிற்கு தொழில் பாதுகாப்புக் கிடைக்கும் என்ற கருத்து தவறெனவும் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கினால் அது பெருகும்போது அதனுடன் காவற்துறைக்கான லஞ்சம், போதைப் பொருட்கள் பாவனை, சிறார் பாலியல் தொழில் போன்றவையும் சேர்ந்து வளரும் என்றொரு விமர்சனம் உள்ளதே? பாலியல் தொழிலில் விரும்பி ஈடுபடுபவர்கள் மிக மிகச் சொற்பமானவர்களென்றும் அநேகமானோர் சமூக நிர்ப்பந்தங்களாலேயே பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதும் உண்மையல்லவா?

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதனூடாக, அத்தொழிலில் ஈடுபடுகிறவர்களை முற்றாகக் காப்பாற்ற முடியாது. அதேநேரம் பாலியல் தொழிலே லஞ்சம், போதைப் பொருள் பாவனை மற்றும் சிறார் பாலியல் தொழில் அதிகரிக்கக் காரணம் என்பதிலும் உண்மையில்லை. பாலியல் தொழிலில் விரும்பியோ, நிர்ப்பந்தம் காரணமாகவோ ஈடுபடுகிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வாறே பாலியல் தொழில் சட்ட நிமித்தத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் புரிந்து கொள்ளப்படவேண்டியதே. சட்ட அங்கீகாரம் குறிப்பிட்ட தொழிலைக் கட்டுப்படுத்துவதற்கோ, அதிகரிப்பதற்கோ ஏதுவாக இருக்காது. சட்ட அங்கீகாரம் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறர்களின் நலன் சார்ந்த – அவர்களது உரிமைகளை மதிக்கிற – பாரபட்சமற்ற சமூக நிலையை உறுதி செய்வதாக இருக்கும். அப்படியான சட்ட அங்கீகாரமே தேவையும்கூட.

பாலியல் தொழிலைச் சட்ட ரீதியாக அங்கீகரித்திருக்கும் நாடுகளில் இரண்டு வகையான அனுமதியைக் காணமுடியும். டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, எத்தியோப்பியா, மெக்ஸிகோ, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பாலியல் தொழில் முழுமையாகச் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ், மலேசியா, நோர்வே, ஜப்பான் போன்ற நாடுகளில் வரையறுக்கப்பட்ட அங்கீகாரம் உள்ளது. Brothel ownership  இந்த நாடுகளில் மறுக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறைகள், பாலியலுக்கான மனிதக் கடத்தல்கள், லஞ்சம், ஊழல் குற்றங்கள் எல்லாவற்றுடனும் பாலியல் தொழில் எங்கு அதிகம் நடைபெறுகிறதென்றால் பாலியல் தொழிலை சட்ட ஏற்பாட்டுக்குள் கொண்டுவர மறுத்துக்கொண்டிருக்கிற நாடுகளில்தான் அவை நிகழ்கின்றன. ஆப்கானிஸ்தான், அங்கோலா, இந்தியா, இலங்கை, ஈரான், ஈராக், சவூதி அரேபியா, கென்யா, தென் ஆபிரிக்கா, உகண்டா, ருமேனியா எனப் பல நாடுகளை உதாரணம் சொல்லலாம். இந்த நாடுகளில் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரமில்லை. ஆனால் இங்குதான் பாலியல் ரீதியான அநீதிகளும் வன்கொடுமைகளும் அதிகம் இடம்பெறுகின்றன.

பி.பி.ஸியில் நீங்கள் சொன்ன அந்தக் கருத்துகளைத் தொடர்ந்து இலங்கையின் இஸ்லாமிய மத அமைப்புகள் சில உங்களைக் கடுமையாக விமர்சித்தன. உங்களை நடைமுறையில் அவை எவ்விதம்  எதிர்கொண்டன?

தனிப்பட்ட ஒருவரின் கருத்தை ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமானதாக எடுத்துக்கொண்டு காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறவையாக இஸ்லாமிய மத அமைப்புகள் இருக்கின்றன என்ற துயரத்தைச் சொல்லித்தானாக வேண்டும். பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என ஏறாவூர் பள்ளிவாசல் சம்மேளனமும் ஜமாஅத்தும் வலிறுத்தின, வீடு புகுந்து சமரசம் செய்கிற பாங்கில் எனது பெற்றோரை மிரட்டின, “எனது மகள் தவறானவர்களால் வழிநடத்தப்படுகிறாள், அவளை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று எனது தந்தை மன்றாடியதாகப் பொய்யான தகவலை ஊடகங்களுக்குத் தெரிவித்தன, ஊரிலிருந்த எங்களது பாலர் பாடசாலைக்கு தீ வைக்கப்பட்டபோது பாரமுகமாக இருந்தன. பொலிஸ் விசாரணைகளின்போது அரசியல் செல்வாக்குகளை உபயோகித்தது, தனிநபர்கள் மற்றும் குழுக்களால் அவமரியாதையாக எழுதப்பட்டு பள்ளிகளில் ஜூம்ஆத் தொழுகைகளுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களுக்குத் தடைவிதிக்காது மறைமுகமாக ஒத்துழைப்பு நல்கியது என்று எதிர்கொள்ளப்பட்ட விதங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த நிகழ்ச்சிகள் இன்றுவரைக்கும் எனது சொந்த ஊருடனான தொடர்புகளை எனக்கு இல்லாது செய்திருக்கின்றன. பள்ளிவாசல் சம்மேளத்தினால், ஜமாஆத்தினால் நான் ஊரொதுக்கம் செய்யப்படவில்லையென்றபோதும் அப்படிச் செய்வதைவிடவும் மோசமாக நடத்தப்படக்கூடிய அனைத்துச் சூழல்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2012-ல் ஏறாவூர் நகர சபையினால் கௌரவிக்கப்படவிருந்தவர்கள் பட்டியலில் இருந்த எனது பெயரையும் அந்நிகழ்வுக்கான சிறப்பிதழில் இடம்பெறவிருந்த எனது படைப்புக்களையும் நீக்கம் செய்த சம்பவங்கள், மத நிறுவனங்களின் தொடர்பில்லாத அமைப்புகளின்  சுதந்திரத்தன்மையிலும் மதவாதம் தாக்கம் செலுத்துவதை உணர்த்தப் போதுமானது. 2014 மே 17-ல் ஊரையே பிரமிப்பில் ஆழ்த்தும்படியாகக் கொண்டாடப்பட்ட ‘சாதனையாளர் விருது’ நிகழ்ச்சியிலிருந்தும் நான் புறக்கணிப்பட்டேன்.

தமிழகத்தில் கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு இவ்வாறு ஒரு புறக்கணிப்பு நிகழ்ந்தபோது இஸ்லாமிய எழுத்தாளர்கள் உள்ளிட்ட தமிழக எழுத்தாளர்கள் ரசூலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். அதேபோன்று மத அடிப்படைவாதிகளிற்கு எதிராக உங்களது சக எழுத்தாளர்கள் உங்களோடு நின்றிருந்தார்களா?

இல்லை! இலங்கையில் புகழ்பெற்ற முற்போக்குக் கவிஞர்களாக, எழுத்தாளர்களாக செயற்படுகின்ற இஸ்லாமியர்கள்கூட எனது பி.பி.ஸி. நேர்காணலுக்குப் பின்பு என்னைப் புறக்கணிக்கிறவர்களாக, இரட்டை முகங்களும் இரு கருத்துகளும் உடையவர்களாகவே உள்ளார்கள். மறைமுகமாகவும் பொதுத்தளங்களிலும் இதன் பொருட்டு நான் இன்னமும் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றேன்.

இவற்றிலிருந்து  நேர்கிற அனுபவம் கசப்பானது, ஆனால் உண்மையானது. மதவாதம் கொள்ளை நோய். அது மத நிறுவனங்களை மட்டும் பீடிக்கிற நோய் கிடையாது. எல்லா மதத்தினரையும், அவர் எப்பேற்பட்டவராயினும் தாக்கக்கூடியது. சிலரிடம் அதைக் கண்டுகொள்ளலாம். சிலர் மறைத்துக் கொள்வார்கள். வித்தியாசம் அவ்வளவே.

‘இத்தனை நபிகளுக்கு இடையில் ஏனில்லை ஒரு பெண் நபி’ என்ற கேள்வியை ஸர்மிளாவும் தனக்குள் எப்போதாவது கேட்டுக்கொள்வதுண்டா?

எப்போதுமே கேட்டுக்கொண்டதில்லை. ஏனெனில் பெண் இயற்கை.

இஸ்லாமிய மதம் பெண்களிற்கு சம உரிமைகளை வழங்குவதாக வஹாபி அமைப்புகள் தொடர்ந்து சொல்லி வருகின்றனவே?

நிச்சயமாக இல்லை. பெண்களின் உரிமைகள் என்று இஸ்லாம் பட்டியலிட்டுள்ளவை திருமறைக் குர்ஆனையும் பேச்சு மேடைகளையும் விவாத அரங்குகளையும் அலங்கரிக்கின்றனவே தவிர நடைமுறையில் இல்லை. பெண்ணுரிமை என்று அவர்களால் கூச்சலிடப்படுகின்றவை சமகாலத்துக்குப் பொருந்தக்கூடியனவாக இல்லை. அல்லது பொருந்த முடியாதவிதமாக மதவாதிகளால் இறுக்கமாக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய முறையில் பதிவு செய்யப்பட்ட விவாக – விவாகரத்துக்களை ஆராய்கிற ஹாதி நீதிமன்றில் ஒரு ஆண் நீதிபதியையும் இரண்டோ அதற்கு அதிகமாகவோ ஜூரிக்களையும் கொண்ட சபையில் ஏன் ஒரு பெண்ணுக்கு இடமில்லை? பெண் சட்டம் இயற்றக்கூடியவளில்லை என்றால் பெண்ணுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் என்பவை என்ன? பெண் உணர்ச்சிவயமானவள், அவளால் நீதி வழங்க முடியாதென்கிறார்கள். ஏன் ஆண்கள் உணர்ச்சிவயமானவர்கள் இல்லையா? நான்கு திருமணங்கள் செய்ய அவர்களுக்கிருக்கின்ற அனுமதியை என்ன விதமாக அவர்கள் கையாள்கிறார்கள்? ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைத் தெரிவு செய்யும்போது அறிவுபூர்வமாகத்தான் அணுகுகின்றானா?

ஆணும் பெண்ணும் சமம் என்றும் அவர்களின் நன்மைகளுக்குச் சமமான கூலிகளும், குற்றங்களுக்குச் சமமான தண்டனைகளுமே விதிக்கப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் பாரபட்சமற்றவன், நீதியானவன் என்ற குர்ஆன் வசனங்களிலிருந்தும்கூட பால் வேறுபாடு கிடையாதென்பதை விளங்கலாம். ஆனால் பள்ளிகளில் பெண்கள் தொழுவதற்கு அனுமதியில்லையே! நோன்பு காலங்களில் தராவீஹ் தொழுகைக்காக, பெருநாள் தொழுகைகளுக்காக பள்ளிகளில் பெண்களை அனுமதிக்க முடியுமென்றால் அன்றாட ஐந்து நேரத் தொழுகைகளுக்கு ஏன் பெண்களை அனுமதிக்க முடியாது? ஏனென்றால், பெண்கள் ஐந்து நேரம் பள்ளிக்குத் தொழுகைக்கு வருவார்களென்றால் வீட்டைக் கவனிக்கமாட்டார்கள், குழந்தைளைப் பராமரிக்கமாட்டார்கள், இப்லீஸ் நெஞ்சுகளில் புகுந்து செய்யக்கூடிய சேஷ்டைகளால் முக்கியமாக ஆண்கள் தன்னிலை இழந்து வெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் புனித இல்லத்தை அசிங்கப்படுத்தக்கூடும் போன்ற சுயநலம் சார்ந்த காரணங்களால் மதவாதிகள் கொண்டுவந்திருக்கும் கட்டுப்பாடே அது.

இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். இப்படியான அடிப்படைத் தடைகளை நீக்காது, பெண்களின் சுதந்திரத்தைப் பற்றிப் பேச இஸ்லாமிய மதவாதிகள் எவருக்கும் தகுதியில்லை.

இலங்கை ஒரு பவுத்த நாடெனவும் அதை மற்றைய சிறுபான்மை இனங்கள் ஏற்று நடக்கவேண்டும் எனவும் நீங்கள் இருளை இருளால் விலக்குதல்‘ என்ற கட்டுரையில் சொல்லியிருந்தீர்கள். இது ‘பொதுபல சேனா’வின் குரலை ஒத்ததல்லவா?

இல்லை. இலங்கையில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் அரசியலினூடாக அடையவேண்டிய இலக்குளை அடையாள ஆதிக்கத்தினூடாக அடைய முற்படுகின்ற முரண்பாட்டையே ‘இருட்டை இருட்டால் விலக்குதல்’ கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

‘இருட்டை இருட்டால் விலக்குதல்’ என்பது; ‘கொலைக்குக் கொலை’ என்ற நிலைப்பாட்டையும், அத்தகைய நிலைப்பாடு இனங்களுக்கிடையில் அமைதியை ஒருபோதும் கொண்டு வராது என்பதையும் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்பட்டதே. இலங்கையில் இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கான பிரதான காரணம் மேலாதிக்க மனோபாவமே. இந்த மனோபாவம் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவருக்கும் இருக்கிறது. இனமுரண்பாட்டின் அடிப்படை இழையாக இதுவே அமைகின்றது. இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு உருவாக மேலாதிக்க உணர்வு களையப்படவேண்டும். மேலாதிக்க உணர்வு அழியும்போதே சமத்துவம் உருவாகமுடியும்.

அந்தக் கட்டுரையில் நீங்கள் “இலங்கை சிங்கள பவுத்த நாடு என்கின்ற அடிப்படையை ஏற்றுக்கொண்டு தமது கௌரவத்தை பேணிய வகையில் அமைதியாக வாழ்வதா  அல்லது அடையாளத்தை முன்னிறுத்தும் சண்டையில் அனைத்தையும் இழந்து அழிந்துபோவதா என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலைக்கு இஸ்லாமியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதன் கருத்து இலங்கை சிங்கள பவுத்த நாடு என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சிறுபான்மை இனங்களிற்கு கௌரவமும் அமைதியும் கிட்டும் என்பதுதானே?

இலங்கை சிங்கள பௌத்த பெரும்பான்மை நாடு என்பது வேறு. இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்பது வேறு. முன்னையது பாசிசக் குறியீடு. பின்னையது எதார்த்தம். எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே அந்தக் கட்டுரையில் வலியுறுத்தியிருந்தேன். எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு சிறுபான்மையினர் தங்கள் அபிலாஷைகளையும் – தாங்கள் புறக்கணிக்கப்படுவதையும் பெரும்பான்மையினரிடம் எடுத்துச் சென்று நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். புதிய உலக ஒழுங்கில் புதிய அணுகுமுறைகளும் தேவை என்பதையே அந்தக் கட்டுரையில் உணர்த்தியிருந்தேன். வன்முறைகளுக்கூடாக அடைந்து கொள்ளும் வழிமுறைகள் அழிவுகளை உண்டாக்குமே தவிர ஒருபோதும் விடுதலையை, அமைதியைக் கொண்டுவராது.

இலங்கையில் தமிழர்களிற்கும் இஸ்லாமியர்களிற்கும் இடையே இனி அரசியல் ஒருமைப்பாடு வரவே வராதா?

தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமிடையில் அரசியல் ஒருமைப்பாடு உருவாகுவதற்கான வழிகளொன்றும் இலங்கையில் இனி இல்லை என்பதே உண்மை. தமிழர் – இஸ்லாமியர் ஒருமைப்பாடென்பது சிங்களவர்களுக்கு எதிரான ஒருமைப்பாடாகவும் இருக்கக்கூடியது. அது ஆபத்தானது.

இஸ்லாமியர்கள் மீது தமிழர்கள் இழைத்த வன்முறைகளை தமிழ் சனநாயகவாதிகள் கண்டிப்பதுபோல, தமிழர்கள் மீது இஸ்லாமியர்களால் நடத்தப்பட்ட வன்முறைகளையும் கொலைகளையும் இஸ்லாமியத் தரப்பிலிருந்து அவ்வளவாக யாரும் கண்டிக்கவில்லை என்றொரு குற்றச்சாட்டு தொடர்ந்து தமிழர்கள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டு வருகிறதே?

இஸ்லாமியர்கள் மீது தமிழர்கள் இழைத்த வன்முறைகளை தமிழ் சனநாயகவாதிகள் கண்டித்தார்கள் என்பது உண்மையே. ஆனால் இஸ்லாமியர்களை, பாதிக்கப்பட்ட ஒர் இனத்தவரை ஆற்றுப்படுத்தும் நோக்கில் அவர்கள் அதனைச் செய்யவில்லை என்பதும் உண்மை. அதாவது நீங்கள் குறிப்பிடுகின்ற தமிழ் சனநாயகவாதிகள் என்போர் இரண்டு பிரிவினர். ஒரு பிரிவு இடதுசாரிகள். மற்றைய பிரிவு புலிகளுக்கு எதிரான தமிழ்த் தேசியவாதிகள். இஸ்லாமியர்கள் மீதான புலிகளின் வன்முறைகள் குறித்த விவகாரத்தில் நான் குறிப்பிட்ட முதல் பிரிவினர் பெரும்பாலும் மௌனமாகவே இருந்தார்கள். இரண்டாவது பிரிவினர் புலிகளின் ஜனநாயக விரோதச் செயல்களை அம்பலப்படுத்தவே இஸ்லாமியர் மீதான வன்முறைகளைக் கண்டித்தார்கள்.

செருப்படியான பதில் கொடுத்திருக்கிறீர்கள். இஸ்லாமியர்களின் தரப்பிலிருந்து தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளிற்கும் கொலைகளிற்கும் இஸ்லாமியத் தரப்புகளிடமிருந்து வலுவான கண்டனக் குரல்கள் எழாததற்கான காரணங்கள் எவையெனக் கருதுகிறீர்கள். இஸ்லாமிய முற்போக்காளர்களிடையே கூடக் கடுமையான தமிழின வெறுப்பு மேலோங்கியிருப்பதாக இதை எடுத்துக்கொள்ளலாமா?

தமிழர்கள் மீதான வெறுப்பல்ல அது.

தமிழர்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தியது அரச படைகளுடன் சேர்ந்திருந்த சில முஸ்லிம் நபர்களே! பெரும்பான்மைத் தமிழர்களின் ஆதரவைப் பெற்றிருந்த புலிகளைப் போன்று பெரும்பான்மை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய அமைப்பெதுவும் தமிழர்களின் மீதான தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கவில்லை. அரச படைகளுடன் சேர்ந்து இயங்கிய முஸ்லிம் நபர்களின் தாக்குதல் அரசின் தாக்குதலே என்ற புரிதலே இஸ்லாமிய முற்போக்காளர்களிடமிருந்து வலுவான கண்டனக் குரல்கள் எழாததற்கான காரணம் என்று நினைக்கிறேன்.

முஸ்லிம்களிற்குள்ளும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்று கிளம்பும் விமர்சனங்கள் சரியானவைதானா?

இலங்கையில் முஸ்லிம்களிற்குள் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உண்டென்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அதற்கு நிகராக பிரதேசவாதம் என்கிற பிரிவினை இருக்கிறது. இலங்கையில் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் பிரதேசவாதத்திற்கிருக்கும் வல்லமை இலங்கை முஸ்லிம் தேசியவாதத்திற்கு இல்லை.

தமிழகப் படைப்பாளிகளோடு உங்களுக்கு நெருங்கிய தொடர்புகளுண்டு. ஈழப்போராட்டம் குறித்தும் விடுதலைப் புலிகள் குறித்தும்  தமிழக அறிவுத்துறையில் நிலவும் மதிப்பீடுகளை எவ்விதம் நீங்கள் மதிப்பிடுகிறீர்கள்?

தமிழகப் படைப்பாளிகளுடனான எனது தொடர்புகள் இலக்கியம் சார்ந்தது மட்டுமே. தமிழக அறிவுத்துறையில் விடுதலைப் புலிகள் குறித்தும் ஈழப்போராட்டம் குறித்தும் இருக்கக்கூடிய அரசியல் தெளிவு பெரும்பாலும் புலிகளால் அல்லது புலிகள் சார்பானவர்களால் பரப்புச் செய்யப்பட்டது. ஆகவே, அது ஒருபக்கச் சார்பானது. தமிழ்நாட்டின் அரசியல் சதுரங்கத்தில் ஈழப்போராட்டம் நகர்த்தப்படுகின்ற ஒரு காய்.

முஸ்லீம்கள் மீது புலிகள் இழைத்த கொடுமைகளிற்கெல்லாம் அவர்கள் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுவிட்டார்கள், முஸ்லீம் தலைவர்களை வன்னிக்கு அழைத்துப் பேசினார்கள் என்றொரு வாதம் சொல்லப்படுகிறது.. அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

புலிகள் மன்னிப்புக் கேட்டார்கள் என்பது உண்மைதான். மனம் வருந்தி, தவறை உணர்ந்து இதயபூர்வமாக அவர்கள் அதனைச் செய்யவில்லை. முஸ்லிம் தலைவர்களை வன்னிக்கு அழைத்துப் பேசியதும் மன்னிப்புக் கேட்டதுமெல்லாம் அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையைத் தற்காலிகமாகக் கையாளுவதற்கே! சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசும், புலிகளும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த தருணத்தில் தாங்கள் வரலாற்றில் இழைத்த தவறுகளிலிருந்து தப்பிக்கின்ற தந்திரோபாயமாகவே புலிகளின் இவ்விரண்டு செயல்களையும் நோக்க முடியும். இவ்விரண்டும் உண்மையானவையாக, இதயசுத்தியானவையாக இருந்திருந்தால் மாவிலாறில் தொடங்கிய இறுதிக்கட்ட யுத்தத்தின்போது புலிகள், மூதூர் முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றித் துடைத்தெறிந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது.

அளுத்கம – பேருவளை கொலைகளும் தாக்குதல்களும் வரலாற்றில் இனியும் தொடருவதற்கான வாய்புகளுள்ளன எனக் கருதுகிறீர்களா? இந்தத் தாக்குதல் வெறுமனே ‘பொதுபலசேனா’வினது முன்னெடுப்பு மட்டுமல்ல, இதற்குப் பின்னால் இலங்கை அரசின் கைகள் இருக்கின்றன எனச் சொல்லப்படும் கருத்துகள் குறித்து?

அளுத்கம – பேருவளை தாக்குதல்களும் கொலைகளும் ஒரு கட்டம் (Episode) நிறைவேறி முடிந்திருக்கிற உணர்வையே தருகின்றன. வரலாற்றில் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் 1956,1958,1977,1981,1983 காலப்பகுதிகளிலும் அதன் பின்பு யுத்த காலத்தில் குறுகிய கால இடைவெளிகளில் ஏராளமாகவும் 2009-ல் மிகப்பெரிய அவலங்களாகவும் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதுபோன்றே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும் கட்டம் கட்டமாக நிகழ்த்தப்படலாம்.

‘பொதுபலசேனா’ ஒரு கொந்துராத்து அமைப்பு, வழங்குநர் வேறு என்ற புரிதலே இலங்கை புத்திஜீவிகள் மத்தியில் நிலவுகின்றது. அது இலங்கை அரசின் கையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். வெளிநாட்டு சக்திகளின் செல்வாக்காகவும் இருக்கலாம். வன்முறையைத் தடுக்கத் தவறியது, சட்ட ஒழுங்கைப் பேணாதது என்ற அடிப்படையில் முதல் குற்றவாளி அரசே என்பது நிரூபணத்திற்குரியது. 1983-ல் நிகழ்ந்த இன வன்செயல்களிற்குக் காரணியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம் இருந்தது என்கின்ற பழி வரலாற்றுக் கறையாக இன்றுவரைக்கும் எப்படி அழியாதுள்ளதோ, அதேபோல மகிந்த ராஜபக்ச அரசும் கறைகள் நிரம்பிய வரலாற்றையே விட்டுச் செல்லும்.

பிரான்ஸிலே இஸ்லாமியப் பெண்கள் முகத்திரை அணிவது சட்டவிரோதமாக்கப்பட்டதைத் தொடர்ந்து இங்கே இருவேறு கருத்துகளிருந்தன. மதப் பண்பாண்டில் கைவைக்கக் கூடாது என்பது ஒரு கருத்து. முகத்திரை என்பது மதப் பண்பாடு அல்ல, அது ஆண்களால் பெண்கள்மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறை, முகத்திரை பெண்ணின் தேர்வு கிடையாது என்றுமொரு கருத்தும் சொல்லப்பட்டது. முகத்திரை இஸ்லாமியப் பெண்ணிற்கு தேர்வா அல்லது திணிப்பா?

முகத்திரை திணிப்பு மட்டும்தான், அது மதப்பண்பாடு என்று சொல்லப்பட்டாலும் கூட. முகத்திரைத் திணிப்பு வஹாபிஸத்தின் கொள்கைகளில் ஒன்று. அது ஆண் அடக்குமுறையின் அடையாளம்.

மிகக் குறைந்தளவு முஸ்லிம்கள் வாழும் இலங்கையிலிருந்து தமிழ் மொழியில் எழுதும் ஏராளமான முஸ்லீம் எழுத்தாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் எண்ணிக்கையில் அதிகளவு முஸ்லிம்கள் வாழும் தமிழகத்திலிருந்து மிகச் சில எழுத்தாளர்களே தோன்றியிருக்கிறார்கள். சமகாலத்து பெண் எழுத்துகளை எடுத்துக்கொண்டால் நீங்கள், அனார் ,பெண்ணியா, பஹிமா ஜகான் என நிறையப் பேர் எழுதுகிறீர்கள். தமிழகத்திலோ சல்மா மட்டும்தான் எழுதுகிறார். இதற்கான சமூகவியல் காரணங்கள் எதுவாகயிருக்கும் எனக் கருதுகிறீர்கள்?

கல்வி பிரதானமான காரணமாக இருக்கலாம். தமிழ் நாட்டில் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன்பாகவே இலங்கையில் பெண்கள் கல்வியில் ஆழக் கால் பதித்தவர்களாக இருந்தார்கள். குறைந்தபட்சம் அடிப்படைக் கல்வியைப் பெறுகின்ற உரிமையை, நூலகங்களைப் பயன்படுத்துகின்ற சுதந்திரங்களைப் பெற்றிருந்தார்கள். ஆனால் இதனை முழுக்காரணியாக ஏற்க முடியவில்லை. யுத்தம் ஒரு காரணமாக இருக்கலாம். இலங்கை முழுவதுமே யுத்தப் பிரதேசமாக இருந்தது, பெண்கள் யுத்தத்தின் பங்காளர்களாகவும் பார்வையாளர்களாகவும் இருந்தார்கள் என்கிற பாரிய அனுபவ வெளியும் தாக்கமுமாக இருக்கலாம். யுத்தப் பிரதேசத்திலிருந்து வெளிவருகின்ற பெண்களின் படைப்புகள் என்ற எதிர்பார்ப்பு வாசகர்களை அதிகமாக்கி படைப்பாளிகளைத் தூண்டியதன் விளைவாகவும் இருக்கலாம். ஆனால் இந்த ஊகங்கள் எல்லோருக்கும் பொருந்தக் கூடியதுமில்லை. ஒவ்வொருவருக்குமான அனுபவங்கள் பிரத்தியேகமானவை. எனினும், பொதுவானவையாக இவற்றைக் கொள்ள முடியும்.

தெற்குப் பகுதி முஸ்லிம்களில் ஒரு பகுதியினரின் வீட்டு மொழி தமிழிலிருந்து சிங்களமாக மாறிக்கொண்டிருக்கிறது எனச் செய்திகள் கிடைக்கின்றன. இது எந்தளவிற்கு உண்மை?

பள்ளிவாசலுக்குள் சிங்களம் பேசுவது ஹராம் என்று தெற்கு முஸ்லிம்கள் கருதிய ஒரு காலமிருந்தது. இன்று இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. வடக்கு – கிழக்கிற்கு வெளியே தமிழ் மொழி வழி சிறந்த பாடசாலைகள் இல்லை. வடக்கு – கிழக்கில் தமிழ் மொழி வழிப் பாடசாலைகள் சிறப்பாக உள்ளதுடன் அங்கு உத்தியோகபூர்வ மொழியாகவும் தமிழ் உள்ளது. ஆனால் தெற்கு முஸ்லிம்கள் அரச கருமங்கள் அனைத்தையும் சிங்கள மொழியிலேயே செய்ய வேண்டியிருப்பதுடன், சிங்களத்திலேயே பணியாற்ற வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள். இவைபோக சிங்களத்தில் கற்பது சிறந்த கல்வித் தேர்ச்சிக்கு அவசியமானதென படித்த மற்றும் வசதிபடைத்த முஸ்லிம்கள் நினைக்கின்ற மனப்பாங்கும் ஒரு காரணமென்று சொல்லலாம்.

தமிழகத்தைப் பொறுத்தளவில் முஸ்லிம்கள் தங்களைத் தமிழர்களாகவே கருதிக்கொள்கிறார்கள், ஆனால் இலங்கையில் முஸ்லிம்கள் தங்களைத் தனி இனமாக நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த வேறுபாட்டிற்கான அடிப்படைக் காரணங்களாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

தமிழக முஸ்லிம்களையும் இலங்கை முஸ்லிம்களையும் பொருத்திப் பார்ப்பதே ஒருவித முரண் அரசியல் நோக்கு என்பதே எனது அபிப்பிராயம்.

அரசியல், கலாசாரம் ஆகிய இரு பெருங் கூறுகள் இலங்கை முஸ்லிம்களையும் தமிழக முஸ்லிம்களையும் வேறுபடுத்தப் போதுமானது. முதலாவதாக, இலங்கை முஸ்லிம்களைப் போன்று தமிழக முஸ்லிம்கள் சக இனத்தின் பாசிச சக்தியொன்றின் அடக்குமுறைக்கும் இன அழிப்புக்கும் ஆளாகியவர்களில்லை. புலிகளின் தனி ஈழக் கோரிக்கையும், ஜனநாயக விரோதப் போராட்டமும், முஸ்லிம்களை இலக்குவைத்து அழித்ததுமே முஸ்லிம்கள் அடையாள அரசியல் செய்யவும், தங்களைத் தனி இனமாக நிறுத்திக் கொள்ளவும் காரணங்களாகின.

கலாசாரம், இரண்டாவது. தமிழக முஸ்லிம்களின் கலாசாரம் இந்து சமூகத்தின் நீட்சியாகப் பார்க்கக்கூடியது. இலங்கை முஸ்லிம்களின் கலாசாரமும் இந்து மற்றும் பௌத்தர்களின் வாழ்வியலுடன் கலந்ததாக இருந்தபோதும் இஸ்லாமியர்களுக்கே உரிய தனித்துவமான நாகரீகமாக அது மேம்படுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, தமிழகத்து முஸ்லிம் பெண்களைப் போன்று இலங்கை முஸ்லிம் பெண்கள் கூந்தலில் பூக்களைச் சூடுவதில்லை. பூக்கள் சூடுவது இஸ்லாமியக் கலாசாரம் இல்லை. இதுபோன்று உடை, அலங்காரம், திருமணச் சடங்குகள் போன்ற கலாசாரம் செல்வாக்குச் செலுத்துகின்ற பல உதாரணங்களைச் சொல்லலாம்.

உம்மத்நாவலை எழுத உங்களிற்கு உந்துதலாக இருந்தது எது?

என்னுடைய அனுபவமும் அறிந்த உண்மைகளும்.

நேர்காணலின் நிறைவாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?


சொல்ல நிறைய உள்ளது. இதுவரைக்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் தந்த என்னை இந்தக் கேள்வி பேசத் தூண்டுகிறது.

பெண் படைப்பாளிகளை மதிக்கவும், குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளவும் மறுக்கின்ற ஆணாதிக்கம் குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் பெற்றும், பெண் படைப்பாளிகள் கூட்டாக இணைந்து செயற்படக்கூடியதுமான ஆரோக்கியமான சூழல் உருவாகிவருகிறது.

பெண் படைப்பாளிகளைப் பெண் என்பதற்காகவே அவமரியாதை செய்கின்ற புறக்கணிக்கின்ற நிலை தமிழகத்தில் மட்டுமல்ல ஈழத்திலும் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இருப்பது போல பெண் படைப்பாளிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுச் செயற்பாடுகள் ஈழத்தில் இல்லை. ஈழத்துப் பெண் படைப்பாளிகள் தங்களுக்கு நேரும் அவமானங்களைத் தன்னந்தனியாகவே எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எழுத்துப் பயணத்தை நம்பிக்கையிலிருந்து தொடங்கியவள் என்ற வகையில் எவ்வளவோ சொல்லத் தோன்றுகின்றது. யாரினுடைய சிபாரிசும் அறிமுகமும் இல்லாத, ஈழத்துக்கு வெளியே ஒருவரும் அறிந்திருக்க முடியாத, எந்தவொரு இலக்கிய சஞ்சிகைகளிலும் எழுதிப் பரிச்சயமற்ற  எனது கவிதைகளை 2011-ல் நம்பிக்கையுடனே ‘காலச்சுவடு’ பதிப்பகத்திற்கு அனுப்பிவைத்தேன். காலச்சுவடு இதழின் சந்தாதாரரோ தொடர் வாசகியோகூட இல்லை நான். ‘சிறகு முளைத்த பெண்’ கவிதைத் தொகுதி ஸர்மிளா ஸெய்யித் பெண் என்பதற்காக அல்ல, இவளது கவிதைகளுக்காவே பிரசுரத்திற்குத் தேர்வானது. கவிதை நூல் வெளியீட்டுக்குப் பின்னர் வாழ்த்தியவர்களை விடவும் காலச்சுவடு பதிப்பகத்திற்கு யார் சிபாரிசு செய்தார்கள் என்று கேட்டவர்களே அதிகம். சிலர் எனக்குத் தெரியாமலே தான்தான் சிபாரிசு செய்தேன் என்பதாகவும் கூறியிருந்தார்கள். இப்படியான நிகழ்ச்சிகள் படைப்புலக அரசியல் குறித்து மெல்லத் தெரிந்து கொள்ளச் செய்தது. இந்த அறிதல் ஒருவித எச்சரிக்கையுணர்வுடன் கொஞ்சம் விலகி இருக்கச் செய்துள்ளபோதும்; ஆழமான வாசிப்பும், விமர்சனப் பார்வையும், பெண் என்பதற்காக அல்லாமல் ஏற்கவும் நிராகரிக்கவுமானவர்களிடம் நெருங்கியிருப்பதிலிருந்து என்னைத் தடுக்கவில்லை. இந்த நம்பிக்கையோடு மிக உறுதியாகத் தெளிவாக எழுத்திலும் எதிர்காலப் பயணத்திலும் இன்னும் இன்னுமாக நம்பிக்கைகளை வளர்க்கிறேன். காலம் கடந்தும் எழுத்துகள் ஊடாகப் பேசவே விரும்புகிறேன்.

***

7 thoughts on “எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்

  1. மத அடிப்படைவாதிகளிற்கு எதிராக உங்களது சக எழுத்தாளர்கள் உங்களோடு நின்றிருந்தார்களா? என்ற கேள்விக்கு யாரும் இல்லை என்பதாக ஸர்மிளா சொல்லும் பதில் அதிர்ச்சியாக இருக்கிறது. முகநூலிலே ஆதரவாக எழுதிய என்னை ஒரு வேளை சக எழுத்தாளனாக கருதவில்லையோ..? தனக்கு ஆதரவாக யார் இருக்கிறார்கள் என்பதை அடையாளம் காண்பதும், அவர்களின் ஆதரவை உதாசீனம் செய்வதுபோல் பேசுவதும் – யாருக்கும் ஆதரவு செய்யக்கூடாது என்ற மனநிலையையே உருவாக்குகிறது. நன்றி

  2. பொறுப்பான கேள்வி பதிலாக இது இருக்கிறது.
    ஷோபாவிடமும் ஸர்மிளா ஸெய்யித்திடமும்
    இன்னும் வலுவான
    நேர்காணலை எதிர்ப்பார்த்து
    வாசிக்கத் துவங்கிய எனக்கு ஏமாற்றம்….

  3. நேர்காணல் எதிர் பார்த்த அளவு முழுமையாக இல்லையெனினும் ஒதுக்கிவிடமுடியாதது.
    இடையில் நிறைய விஷயங்களை அவர் தவிர்த்துள்ளார் என்றே எண்ணுகிறேன்!அவரது துணிவு மெச்சத்தகுந்தது!மதவாதிகளால் இந்த உலகிற்கு எந்தப்பலனும் இல்லை!எனினும் அவர்கள்தான் இவ்வுலகை ஆள்கிறார்கள்!அது மனிதர்களின் மீது விதிக்கப்பட்ட சாபம்!

  4. நேர்காணல் நன்று,சமகாலத்தில் இலங்கையில் இருக்கும் ஸர்மிளா ஸெய்யித்திடம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே பதிவு செய்துள்ளார்.

  5. ஸர்மிளா சொல்வதில் உண்மை இருக்கிறது. அவருக்கெதிராக மத அடிப்படைவாதிகள் முகநூலிலும் பிற வழிகளிலும் நெருக்கடிகொடுத்த போது முஸ்லிம்படைப்பாளிகள் எவரிடமிருந்தும் எந்த எதிர்ப்புக்குரலும் எழவில்லை என்பது கசப்பான ஒரு உண்மை. முஸ்லிம்படைப்பாளிகளிடமிருந்து மட்டுமல்ல கிழக்கின் எந்தப் படைப்பாளிகளிடமிருந்தும் எந்த ஒரு சிறுமுனகல்கூட எழவி;ல்லை. ஏன் ஜனநாயகத்தையும் கருத்துரிமையையும் கட்டிக்ககாக்கப்போராடும் புலம் பெயர் படைப்பாளிகளிடமிருந்தும் எத்தகைய சலசலப்பையும் காணவில்லை.

    ஸர்மிளாவின் விவகாரத்தின் பின்னர் முகநூலில் நடந்த உரையாடலில் இது பற்றி சுட்டியிருந்தேன். அதன்போது றியாஸ் குரானா தான் ஸர்மிளாவுக்கு ஆதரவாக எழுதியதாகச் சொன்னார். அவர் சொன்னதன் அடிப்படையில் அவருடைய முகநூலில் தேடிப்பார்த்தேன்.அப்படிஎதுவும் அங்கிருக்கவில்லை. முடிந்தால் அந்த இணைப்பைத் தாருங்கள் என்று கேட்டிருந்தேன். றியாஸ்குரானாவிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இன்னமும் காத்திருக்கிறேன். றியாஸ்குரானா இதுகுறித்து எழுதியிருப்பின் இப்போதாவது அந்த இணைப்பைத் தந்து தான் சொன்னது உண்மையென்று அவர் நிரூபிக்கலாம். அவ்வாறில்லாவிட்டால் அவர் பொய்தான் சொல்கிறார் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *