புலம்பெயர்ந்தவர்களை முன்நிறுத்தி நான் தோற்கடிக்கப்பட்டேன்

கட்டுரைகள்

இளம் அரசியற் செயற்பாட்டாளரான பழ. ரிச்சர்ட் மலையகத்தில் 1987-ல் பிறந்தவர். அனைத்துப் பல்கழைக்கழக மாணவர் ஒன்றியம், மக்கள் போராட்ட இயக்கம், காணமற்போனவர்களைத் தேடிக் கண்டறியும் ‘நாம் இலங்கையர்’ அமைப்பு, முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றில் தீவிரமாக இயங்கியவர். சம உரிமை இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். இப்போது ஈழப் புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) செயற்படுகிறார்.

குறுகிய காலத்திற்குள் பலதளங்களிலும் செயற்பட்ட பழ. ரிச்சர்ட்டைப் போலவே அவரது நேர்காணலும் பலதளங்களிலும் விரிகின்றது. ஒளிவு மறைவின்றி அவர் மனம் திறந்து பேசுவது நமது சூழலில்  இன்னொரு ஆரோக்கியமான விவாதத்தைத் தொடக்கி வைப்பதற்கான முன்னுரையாக இருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரிக்கக் கோரும் பழ. ரிச்சர்ட் , முன்னிலை சோசலிசக் கட்சியை இனவாதக் கட்சி எனவும் புலம் பெயர்ந்த நாடுகளில் இயங்கும் சம உரிமை இயக்கத்தினரை சுயநலவாதிகள் எனவும் சாடுகின்றார்.  மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை வீழ்த்துவதற்காக, சகல இனங்களையும் இணைத்து ஓர் இடது போராட்ட வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென அறைகூவுகிறார். அரசுக்கு எதிரான மாற்று அரசியற் செயற்பாட்டாளர்கள் கொல்லப்படுவதும் கடத்தப்படுவதுமான இலங்கைச் சூழலிலிருந்து ஒலிக்கும் குரல் ரிச்சர்ட்டுடையது.

இது இன்றைய இலங்கை இளைஞனின் குரல். ஓயாத அரசியற் செயற்பாடும் அர்ப்பணிப்புமுள்ள அரசியல் மனிதனின் குரல். இனவாத அரசின் அடக்குமுறைகளுக்குப் பணிந்துவிடாத இளம் கம்யூனிஸ்ட்டின் குரல்.

இந்நேர்காணல் மின்னஞ்சல் வழியே நிகழ்த்தப்பட்டது.

-ஷோபாசக்தி

20.01.2014


நான், உலக முடிவு என அறியப்படும் ‘ஹோட்டன்’ பிரதேசத்தில் அமைந்திருக்கும் சந்திரி கிராமத்தில் பிறந்தேன். நான் பிறந்த இடமே இலங்கையில் இருக்கும் மிகப் பின்தங்கிய பகுதியாகும். எனது பெற்றோர்,வீட்டாரின் எதிர்ப்புகளை மீறிக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். எனது தகப்பனாரின் குடும்பம் புத்தளம்  பலாவி பிரதேசத்தினைச் சேர்ந்த குடும்பம். தாயாரின் குடும்பம் பதுளை பிரதேசத்தில் வசித்தார்கள். எனது பள்ளிப் பருவம்வரை சமூகத்துடன் தொடர்புகளற்ற, ஒருவகையில் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையே எனக்குக் கிடைத்தது.   எனக்குச் சிறுவயது முதலே கடவுள் நம்பிக்கையும் இருக்கவில்லை. இடைநிலைப் பாடசாலைக் கல்வியை கண்டியின்  றோயல் கல்லூரியில் கற்றேன்.  அப்பாடசாலை ஒரு முன்மாதிரிப் பாடசாலையாகும். சிங்கள – தமிழ் -முஸ்லிம் மாணவர்கள் ஒன்றாகக்கூடியிருந்து கற்ற பாடசாலை. எனது பட்டப்படிப்பினை யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கற்றேன்.

உங்களது அரசியல் ஈடுபாடு எங்கிருந்து ஆரம்பமாகியது?

எனது அரசியல் ஆர்வம் எனது குடும்பத்திலிருந்தே ஆரம்பித்தது. பெரியவர்களும் எனது வீட்டாரும் அரசியல் விடயங்களைக் கதைப்பதைக் கேட்டுக்கொண்டிருப்பேன். அந்த கதைகளிலிருந்து எல்.டி.டி.ஈ – ஆர்மி என்ற சொற்கள் எனக்கு அறிமுகமாகின. அவர்களின் கதைகளிலிருந்து எல்.டி.டி.ஈ என்பவர்கள் நல்லவர்கள் என்றும் ஆர்மி என்பவர்கள் கெட்டவர்கள் என்றும் அறிந்தேன். ஆனால் சிங்களவர்களைக் குறித்து அறியவில்லை. சிங்களவர்கள் என ஒரு மக்கள் இனம் இருக்கின்றது என்பதை எனது பத்தாவது வயதில் தான் அறிந்தேன். முதற் சிங்களவரை நான் சந்தித்த கணம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது. முதலாம் வகுப்புப் படிக்கும் காலத்திலே, நல்லவர்களை எல்.டி.டி.ஈ என்றும் எனக்குப் பிடிக்காதவர்களை ஆர்மி என்றும் வகைப்படுத்தி வைத்திருந்தேன். பள்ளி நண்பர்களிடையே  எல்.டி.டி.ஈ – ஆர்மி எனக் குழுக்களை உருவாக்கிக் கொள்வோம். ஆனால் எல்.டி.டி.ஈ – ஆர்மி என்பதன் அர்த்தங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அது எந்தளவிற்கு என்றால், எல்.டி.டி.ஈ என்பதும் ‘புலிகள்’ என்று அழைக்கப்படுபவர்களும் ஒரே ஆட்களே என்பது கூடத் தெரியாது. என் வீட்டில் பெரியவர்களின் கதைகளில் ‘புலிகள்’ என்ற சொல் உச்சரிக்கப்படும் போதெல்லாம் எங்களது பக்கத்து வீட்டில் இருந்த பயங்கரமான புலிப் பொம்மைதான் கண் முன்னேவரும். ஆனால் என் சக மாணவர்கள் பலர் அவர்களின் குடும்பங்கள் வாயிலாக எல்.டி.டி.ஈ என்பவர்கள் மோசமானவர்கள் என அறிந்து வைத்திருந்தார்கள். இதனால் எனக்கும் அவர்களுக்கும் இடையில்  சண்டைகள் வரும். அந்தச் சண்டைகளில் ஏற்பட்ட சிறு தழும்புகள் இன்னும் என் உடலில் இருக்கின்றன. அத்தோடு எனக்கும் என் மூத்த தங்கைக்கும் எப்போதும் சண்டை தான். வீட்டிற்கு வருபவர்களிடம் என்னையும் என் தங்கையையும்  இவர்கள் எல்.டி.டி.ஈ – ஸ்ரீலங்கா போல என்றே எனது பெற்றோர்கள் அறிமுகப்படுத்துவார்கள். இவை எல்லாம் உள்ளீடு அற்ற சிறிய விடயங்கள் தான். ஆனால் இவை எனக்குள் பாரிய தாக்கம் ஏற்படுத்தியிருப்பதை இன்று உணர்கின்றேன். நான் தரம் இரண்டாவது படிக்கும் காலத்தில் ஜனாதிபதி பிரேமதாசா கொலை செய்யப்பட்டார். அவரின் இறுதிச் சடங்குகளை தொலைக்காட்சியில் பார்த்ததும் அவை  எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளும் இன்றும் என்  நினைவில் இருக்கின்றன. எனது தந்தையார்  கிளிநொச்சி, வவுனியாப் பகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது ஆயுத இயக்கங்களுடன்  அவருக்கு நேர்ந்த அனுபவங்களைக் கூறுவார். அந்தக் கதைகளைக்  கேட்பதில் எனக்கு எப்போதும்  அதிக ஆர்வம் . தந்தையார் வாகனத்துடன் ஆயுத இயக்கங்களிடம் அகப்பட்டு அந்த இயக்கங்களில் வாகனச் சாரதியாகச் செயற்பட நேர்ந்த அனுபவங்களையும் கூறுவார். எனது உறவினர்கள் சிலரும் இயக்கங்களில் இணைந்து இந்தியாவில் ஆயுதப் பயிற்சி பெற்ற அனுபவங்களைக் கூறியிருக்கிறார்கள்.

இவை எல்லாம் சிறுவயதிலேயே எனக்கு அரசியலில் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டன. பாடசாலைக் காலங்களில் வரலாறையும் சமூகக் கல்வியையுமே அதிகமாக விரும்பிப் படிப்பேன். அப்போதிலிருந்தே நூல்கள் வாசிக்கும் பழக்கம் ஆரம்பமாகிவிட்டது. எனக்குத் தெரிந்ததைக் கொண்டு நண்பர்களுடன் அரசியல் கதைப்பதுண்டு. எமது பாடசாலையில் கற்பித்த முஸ்லிம் ஆசிரியர் ஒருவர் உலக நடப்புகளை, உலகப்போர்களை, இஸ்லாமிய நாடுகளின் மோதல்களை கதைபோல விபரித்து வகுப்புகளை நடத்துவார். அந்த வகுப்புகளும் நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டி அரசியல் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தின. உயர்தரம் படிக்க ஆரம்பித்த போதே எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவது என்று தீர்மானித்து விட்டேன். ஆனால்  பரீட்சையை இலக்கு வைத்த  எமது கல்விமுறை எனக்கு அதற்கான சந்தர்ப்பங்களை வழங்கவில்லை.  பாடசாலைக் கல்வியை முடித்த பின் அரசியல் தொடர்பான நிறைய நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். இந்தக் கால கட்டத்தில் தான் மார்க்ஸியக் கோட்பாடுகள் எனக்கு அறிமுகமாகின. அந்தக் காலப்பகுதியில் ஜே.வி.பி. ஒரு மார்க்ஸியக் கட்சியாக எனக்குத் தெரியவில்லை. விக்ரமபாகு  கருணாரட்னவும் , சிறிதுங்க ஜெயசூர்யாவுமே அப்போது நான் அறிந்திருந்த இடதுசாரிகள். பாடசாலைக்  காலத்தில் சிங்கள மாணவர்களிடம் நிறையவே இனவாதத்தினைக் காணக் கூடியதாகயிருந்தது. தமிழன் என்ற காரணத்திற்காக புறக்கணிப்பிற்கு ஆளாகும் , ஒடுக்கப்படும் அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன.

ஆகவே அந்தக்  காலப்பகுதியில் கட்சி ஒன்றில் இணைந்து அரசியல் செய்யும் நோக்கமிருக்கவில்லை. புலிகள் அமைப்பில் இணைந்து கொள்வதிலேயே எனது முழு ஆர்வமும் இருந்தது. அப்போது தற்போதுபோல தொலைபேசிப் பாவனையோ இணையத்தளப் பாவனையோ இருக்கவில்லை. ஆகவே எனக்குத் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளும் எந்த வாய்ப்புகளும் இருக்கவில்லை. 2005-ல் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் எல்லா இடங்களிலும் உலவ ஆரம்பித்தார்கள். அந்தக் காலப்பகுதியில் கண்டி நகரத்தில் புலிகளின் அடையாள அட்டைகளுடன்  பலர் நடமாடினார்கள். அவர்களில் சிலருடன் எனக்குத் தொடர்புகள் ஏற்பட்டன. கண்டி புகையிரத நிலையத்தில் புலிகளின் அடையாள அட்டையுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாதாரணமாக உலவினார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் உதவி என்ற பெயரில் பொய் கூறிப் பணம் பறிப்பவர்களாகவே இருந்தனர். என்னுடன் அந்த நோக்கத்திலேயே கதைத்தார்கள். அவர்கள் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி வேலை தேடிவந்தவர்கள் எனப் பின்னரே அறிய முடிந்தது. மறுபடியும் யுத்தம் ஆரம்பித்த பின்பு அவ்வாறானவர்களைக் காணமுடியவில்லை. தமிழ் மக்கள் மீதான அநீதிக்கு எதிரான போராட்டத்தில் என்னை இணைத்து கொள்ளும் நோக்கிலேயே யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினைப் பட்டப் படிப்பிற்காகத் தெரிவு செய்திருந்தேன். அது சிங்கள இனவாதம் உச்சத்தில் இருந்த காலம். சாதாரண சிங்கள மக்களும் தமிழர்களைக் கண்டால் மறித்து விசாரணை நடத்திய காலம். அடையாள அட்டையை பரிசோதனை செய்த காலம்.  இரண்டு பேர் சிறிது நேரம் தமிழில் கதைத்துக் கொண்டிருந்தாலே யாராவது சிங்களவர்கள் வந்து விசாரித்து விட்டு நோட்டமிடுவார்கள். எனக்குச் சிங்களவர்கள் மீது அதிகப்படியான கோபம் அந்த காலத்திலிருந்தது. பல்கலைக்கழகப் படிப்பை ஆரம்பிக்கும் போது இடதுசாரியக் கொள்கைகளால் பெரிதும் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். யுத்தம் ஆரம்பித்த காலத்திலேயே பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது. அந்தக் காலப்பகுதியில்  விரைவாக, சிங்களம் பேசக் கற்றுக்கொண்டேன்.  பல்கலைக்கழகம் சென்று முதல் வருடம் நிறைவடையும் போது யுத்தம் முடிவிற்கு வந்திருந்தது. அதன் பின்னரே அரசியற் கட்சி ஒன்றில் இணைவது குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தேன்.

நீங்கள் தமிழ் அமைப்பொன்றோடு இணையாமல் ஜே.வி.பியோடு நெருக்கமானதிற்கு காரணங்களென்ன?

உண்மையில் புலிகள் இயக்கம் இருந்திருந்தால் அரசியற்கட்சிகள் குறித்துச் சிந்தித்திருக்க மாட்டேன். யுத்தம் முடிந்த பின்னரே அரசியற்கட்சி ஒன்றில் இணைந்து கொள்வது அல்லது புதிதாக அமைப்பொன்றை உருவாக்கிச்  செயற்படுவது குறித்துச்  சிந்தித்தேன்.

நான் ஜே.வி.பியில் உறுப்பினராக இணைந்து கொள்ளவில்லை. பல்கலைக்கழகத்தில்  கற்கும் காலத்தில் பல கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் செயற்பட்ட காலத்தில் ஜே.வி.பி. உறுப்பினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். 2009 காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த துவாரகா என்ற மாணவியை விரிவுரைமன்றத்திற்கு வெளியே வைத்துப் புலனாய்வுப் பிரிவினர் கடத்திச் சென்றார்கள். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இராணுவம் கைப்பற்றிய இடங்களில் தேடுதல் நடத்திய போது குறிப்பிட்ட மாணவியின் வீட்டிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கையொப்பமிட்ட சான்றிதழ் ஒன்று இராணுவத்திடம் சிக்கியதின் பேரிலேயே அவரைப் புலனாய்வுப் பிரிவினர் கடத்தினர். இச்சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி மாணவியின் பாதுகாப்பிற்குக் குரல் கொடுக்குமாறு பல்வேறு தரப்பினரையும் தொடர்பு கொண்டேன். குறிப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத்  தலைவர்கள் சிலரின் கவனத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்றேன். எனினும் யாரும் இதில் அக்கறை செலுத்தவில்லை.

‘அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்’ கடத்தப்பட்ட மாணவிக்காகக் குரல் கொடுத்தது. மாணவியைக் கடத்தவில்லை எனச் சாதித்துக் கொண்டிருந்த புலனாய்வுத் துறை  விசாரணைக்காக மாணவியைக் கைது செய்ததாக, ஒன்றியத்தின் அழுத்தம் காரணமாக ஒப்புக்கொண்டது. இந்தப் போராட்டங்களின் போதே ஜே.வி.பியின் தலைவர்களுடன் எனக்குத் தொடர்புகள் ஏற்பட்டன. அதன் பின்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலரைச்  சேர்த்து ஜே.வி.பியினர் ‘நாம் இலங்கையர் ‘ எனும் அமைப்பினை உருவாக்கிக் காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்களிற்காகக் குரல் கொடுக்க முன்வந்தார்கள். இந்த அமைப்பில் நானும் செயற்பட்டேன். அதேவேளையில் பல தமிழ்க் கட்சிகளுடனும் தொடர்பில் இருந்தேன். நான் செயற்படக் கூடிய தளம் ஒன்றினை இனங்காண்பதே அந்தக் காலகட்டத்தில் எனது நோக்கமாக இருந்தது. தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகள் ஏமாற்றம் தருவனவாகவே இருந்தன. இடதுசாரி அரசியலில் எனக்கிருந்த ஈடுபாடு காரணமாக ஜே.வி.பியினருடன் சற்று நெருக்கமான தொடர்பு இருந்தது. பல்கலைக்கழக வாழ்வின் இறுதிக்கட்டங்களில் புதிதாக அரசியல் இயக்கமொன்றை உருவாக்கிச் செயற்படுவது குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அது சாத்தியப்படாததால் நவ சமசமாஜக் கட்சியின் விக்ரமபாகு  கருணாரட்ன, ஐக்கிய சோசலிஸக் கட்சியின் சிறிதுங்க ஜெயசூர்ய போன்றவர்களுடன் இணைந்து செயற்பட முயற்சிகளை நான் மேற்கொண்ட வேளையிலே தான் ஜே.வி.பிக்குள் முரண்பட்டு  ஓர் அணி வெளியேறியது. அவர்களுடன்  சந்திப்புக்களை நடத்தியதன் பின்பாக அவர்களுடன் ஏற்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் ஆரம்பத்திலிருந்தே அவர்களுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தேன். அவர்கள் மக்கள் போராட்ட இயக்கமென்ற பெயரில் இயங்க ஆரம்பித்த நாட்களில் தான் உறுப்பினராக இணைந்து கொண்டேன்.

உண்மையில் தமிழ்க் கட்சித் தலைமைகளிடம் இடதுசாரி அரசியலையோ, ஆழ்ந்த அர்ப்பணிப்பையோ நான் காணவில்லை. மக்களை அணிதிரட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. யாரிடமும் சமூகம் தொடர்பான நிலையான கொள்கைகள் இருக்கவில்லை. எழுந்தமானமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். தமிழ்ச் சமூகத்தை ஒன்று திரட்டி, சாத்தியமான சிங்களவர்கள் அனைவரினதும் ஆதரவைத் திரட்டி ஒடுக்குமுறைக்கு எதிரான தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கும் ஆளுமை தற்போதைய தமிழ்க் கட்சித்  தலைமைகளிடம் இல்லை. அவர்கள் இனப்பிரச்சினை என்பதைத் தவிர வேறு சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை. தமிழ்க் கட்சிகள் எதனையும் தெரிவு செய்ய முடியாத நிலையே ஜே.வி.பிக்குள் முரண்பட்டு வெளியேறியவர்களுடன், நான் இணையக் காரணமாக அமைந்தது.

‘மக்கள் போராட்ட இயக்கம்’ ஆரம்பித்த போது தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஆர்வம் காட்டியமை, இனவாதத்திற்கு எதிராகச் செயற்பட்டமை தந்த நம்பிக்கை மற்றும் அவர்கள் முன்வைத்த சுயவிமர்சனம் என்பன எனக்கு ஒரளவிற்கு நம்பிக்கை தந்ததாலேயே ஜே.வி.பியிலிருந்து வெளியேறியவர்களுடன் இணைந்து கொண்டேன்.

ஜே.வி.பியுடனான உங்களது அரசியல் அனுபவங்களைச் சொல்லுங்கள்..

2009-களின் பின் ஜே.வி.பி வடக்கு கிழக்கில் அரசியற் செயற்பாடுகளை ஆரம்பிக்க முனைந்தது. யாழ் பல்கலைக்கழகத்தைக் குறிவைத்தே செயற்பாடுகளை ஆரம்பித்தார்கள். தமிழ் மக்களின் மத்தியில் பணியாற்றுவது என்பதைப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றுவதாகவே ஜே.வி.பியினர் விளங்கிக் கொண்டனர். இன்றுவரை அதே நிலைதான் தொடர்கிறது. தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் செயற்பட்டதுபோல் வடக்கு – கிழக்குப் பல்கலைக்கழகங்களிலும்  செயற்பாடுகளை ஆரம்பிக்க முனைந்தார்கள். அந்தப் பொறுப்பே லலித்திற்கு வழங்கப்பட்டிருந்தது. ‘சோசலிசமே அனைத்திற்கும் தீர்வு’ என்ற உரையாடலுடன் ஜே.வி.பியினால் எதுவுமே செய்ய முடியவில்லை. அந்தக் காலகட்டத்தில் வடக்கு – கிழக்கில் இருந்த முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளர்கள் சிலர் ஜே.வி.பியுடன் இணைந்துகொண்டிருந்தார்கள். ‘நாம் இலங்கையர்’ என்ற அமைப்பின் மூலம் காணமற்போனவர்கள், கடத்தப்பட்டவர்களின் உறவுகள் ஒன்று திரட்டப்பட்டுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஜே.வி.பி. மாணவர்களையும் இளைஞர்களையும் அணுகிய போது எழுப்பப்பட்ட கேள்விகளிற்கு அவர்களால் சரியான பதிலை வழங்க முடியவில்லை. ‘எல்லாவற்றிற்கும் சோசலிசமே தீர்வு’ என்ற ஒரே பதிலே எல்லாக் கேள்விகளிற்குமான பதிலாக அவர்களிடமிருந்தது. தமிழ் மக்களின் பிரச்சினையை வெறும் நிர்வாக, பொருளாதாரப் பிரச்சினைகளாக்கினர். அந்த பிரச்சினைகள் சிங்கள மக்களுக்கும் இருக்கின்றன, ஆகவே தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதே ஜே.வி.பியின் கருத்தாக இருந்தது. இந்த நிலைப்பாட்டுடன் மாணவர்களையும் இளைஞர்களையும் ஜே.வி.பியால் நெருங்கக் கூட முடியவில்லை. அதன் காரணமாக காணாமற்போனவர்களின் உறவினர்களை ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். அதற்குப் பலனும் கிடைத்தது. காணாமற்போனவர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்கள். இந்தச் செயற்பாடுகளில் பல தமிழ் இளைஞர்கள் இணைந்துகொண்டார்கள். இவர்களுக்கு ஜே.வி.பி. அரசியல் வகுப்புகளை நடத்தியது. தமிழ் மக்களின் வீடுகளுக்குச் செல்லும் போது கிடைக்கும் உபசரிப்பைப் பார்த்து ஜே.வி.பியினர் தமிழர்களை இலகுவாக வென்றுவிடலாம் என்று எண்ணிக்கொண்டார்கள்.

காணாமற்போனவர்களின் உறவினர்கள் ஜே.வி.பியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு போராட்டங்களுக்கு வரவில்லை. அது குறித்த விளக்கமும் அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்கள் , தங்கள் உறவுகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக எதுவும் செய்யத் தயாராக இருந்தார்கள். அந்தக் கால கட்டத்தில் தமிழ்க் கட்சிகள் இவர்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஜே.வி.பி. அவர்களைச் சிறைக்கூடங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் அழைத்துச் சென்றது. தலைநகரத்திற்கு அழைத்துச்சென்று ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஆனால் இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டவர்களை ஜே.வி.பியால் அரசியல்ரீதியாக வென்றெடுக்க முடியவில்லை. இன்று இதே வேலையை நவசமசமாஜக் கட்சி செய்கின்றது.  லலித்தின் கடத்தல் மற்றும் ஜே.வி.பியில் ஏற்பட்ட பிளவு என்பன வடக்கு-கிழக்கில் ஜே.வி.பியின் செயற்பாடுகளை முடக்கியது. பின்பு தமிழ்க் கட்சிகளும்  காணாமற்போனவர்களின் விடயத்தைக் கையிலெடுத்தது ஜே.வி.பியை வடக்கு – கிழக்கில் நிரந்தரமாகவே முடக்கியது.

ஜே.வி.பி. உறுப்பினர்களோடு பணியாற்றும்போது, அவர்களிடையே இனவாதத்தை நேரடியாக உணர்ந்தீர்களா?

உண்மையில் இது ஒரு சிக்கலான விடயமாகும். ஜே.வி.பியின் உறுப்பினர்களால் ஒரு தமிழ்க் குடிமகனாவது துன்புறுத்தப்பட்டானா? என ஜே.வி.பியினர் அடிக்கடி கேள்வி எழுப்புவார்கள். ஜே.வி.பியின் கொள்கையை மேலோட்டமாக விளங்கி கொள்வது இலகுவானது. இனவாதத்தை உபயோகித்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதே அவர்களின் கொள்கை. ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை விளங்கி கொள்வது கடினமாகவே இருந்தது. தமிழ் மக்களை கடத்துவதும் துன்புறுத்துவதும் தான் இனவாதம் என்று கொள்வோமாயின் ஜே.வி.பி. உறுப்பினர்கள் எவரும் இனவாதிகள் அல்ல.

விடயம் வேறு மாதிரியானது. ஜே.வி.பி உறுப்பினர்கள் இடதுசாரிகளுக்கே உரிய பாணியில் ஏனையவர்களுடன் குரோதமின்றி பழகக் கூடியவர்களாகவே இருந்தனர். அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் விருப்புகளையும் உரிமைகளையும் சிடுசிடுத்த முகத்துடன் அல்லாமல் புன்னகையுடன் மறுப்பவர்களாகவே இருக்கின்றனர்.

உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசியப் போராட்டம் என்பதே ஜே.வி.பியின் புரட்சிக்கான மூலோபாயத் தந்திரமாக இருந்தது. தேசியப் போராட்டம் எனும் போது ஸ்ரீலங்கா என்றொரு தேசியம் இருக்கவில்லை. ஆகவே தேசியப் போராட்டம் என்பது குறுகலான தேசியவாதமாகியதுடன் இனவாதத்திற்குள்ளும் அவர்களை அழைத்து சென்றது. இந்த இனவாதம் தான் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட நோர்வேக்காரர்களை ‘வெள்ளை புலிகள்’ என்று காயவும் , தென்னிலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட சகல சிங்களவர்களையும் ‘சிங்களப் புலிகள்’ எனத் தூற்றி வீடுவீடாகச் சென்று இராணுவத்திடம் பிடித்துக் கொடுக்கவும் வைத்தது. ‘தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்’ என்ற இனவாத இயக்கத்தையும் ஆரம்பிக்க வைத்தது. இந்த மனோபாவமே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை மறுக்கச் செய்து, தமிழ் மக்களின் பிரச்சினையை நிர்வாகப் பிரச்சினையாகச் சித்திரிக்க வைக்கின்றது.

தமிழர்கள் இந்த நாட்டில் தென்னிந்தியப் படையெடுப்புகளால் குடியேறிய வந்தேறு குடிகள் என்ற சிங்கள மக்களின் பொதுப்புத்தி மனநிலையிலேயே ஜே.வி.பி. உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வது கட்டாயம், சிங்கள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கு  மேலதிகமாக , மொழி ரீதியிலான நிர்வாகப் பிரச்சினைகளே தமிழர்களுக்கு இருக்கின்றன என்ற மனநிலையிலிருந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஜே.வி.பியினர் மறுக்கின்றனர். அந்த வகையில் இவர்கள் மகிந்த ராஜபக்சவை விட ஆபத்தான இனவாதிகள். மகிந்த அதிகாரத்தைக் கைப்பற்றவும் பாதுகாக்கவும் இனவாதத்தைப் பயன்படுத்துபவர். ஒருவேளை தமிழ் மக்களுக்கு சுயாட்சியை வழங்கினால் தான், தனது ஆட்சியைத் தக்கவைக்க முடியும் என்றால் அதனையும் மகிந்த செய்வார். ஆனால் ஜே.வி.பியினர் தீவிர இனவாதிகள். இயங்கியலின் அடிப்படையில் சிங்கள இனம் முதன்மை பெறும் என்பதும் சுதந்திரமான சூழ்நிலையில் தமிழ் மக்கள் சிங்கள மொழியை விரும்பி ஏற்று கொள்வார்கள் என்பதுவுமே அவர்களின் நிலைப்பாடாகும். இவர்கள் விடுதலைப் புலிகளை மட்டுமல்ல, தமிழ் மக்களின் எந்தப் போராட்டத்தையும் இதன் காரணமாக ஏற்றுக்கொள்வதில்லை. ஓர் இனம் தன் உரிமைகளையும் சுயநிர்ணய உரிமையையும் இன மேலாதிக்கத்திலிருந்து விடுதலையையும் கோருவதை இனவாதமாகக் குறிப்பிட முடியாது. ஆனால் அந்த இனத்திற்கு அப்படி ஒரு பிரச்சினை இல்லை எனக் கூறுவதும் அவ்வாறு கோருவதை இனவாதமாகக் குறிப்பிடுவதும் அவர்களின் போராட்டத்தினை மறுதலித்து அதற்கெதிராகச் செயற்படுவதும் இனவாதம் என்றே நான் கருதுகின்றேன். தமிழ் மக்களின் வரலாறு, பண்பாடு , சமூகக் கட்டமைப்புகள் குறித்த அடிப்படை விளக்கங்கள் கூட இல்லாமல் அவர்களின் போராட்டங்களை மறுதலிப்பதற்கு காரணம் ஜே.வி.பியினர் கோட்பாடு ரீதியாக நியாயப்படுத்தி வைத்திருக்கும் இனவாதமே ஆகும். இதனை வேறுவேறு வடிவங்களில் சொல்வார்களேயொழிய ஒருபோதும் மாறமாட்டார்கள். ஜே.வி.பியின் உயர் பீடத்திற்கு யார் சென்றாலும் அவர்கள் மாறுவார்களேயொழிய கட்சி நிலைப்பாட்டில் மாற்றம் வரப்போவதில்லை.

ஜே.வி.பி உறுப்பினர்களிடையே  இனவாதம் இருக்கின்றதா என்று கேட்பதை விட , ஜே.வி.பி. உறுப்பினர்களிடையே இனவாதம் இல்லாத உறுப்பினர்கள் இருக்கின்றார்களா? என்பதே பொருத்தமான கேள்வி என்று நினைக்கின்றேன். அவ்வாறான உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.

ஜே.வி.பியிலிருந்து குமார் குணரத்தினம் போன்றவர்கள் பிரிந்ததற்கான காரணங்கள் என்ன?

கருத்து முரண்பாடே காரணமாகக் கூறப்பட்டது. அதே நேரம் பல இடங்களில் கட்சி உறுப்பினர்கள் கருத்தியல்ரீதியான தெளிவுடன் பிரியவில்லை என்றும் கூறப்பட்டது. உண்மையில் அதிகாரப் பிரச்சினையே பிரிவதற்கான காரணமாகும். 2009-ன் பின் ஜே.வி.பியின் செயற்பாடுகள் தொடர்பாக சுயவிமர்சனம் செய்யும் வகையில் சோமவன்ச அமரசிங்க, ரில்வின் சில்வா, குமார் குணரத்தினம் ஆகியோரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இவர்கள் மூவரும் மூன்று அறிக்கைகளைச் சமர்பித்தார்கள். இதில் குமார் குணரத்தினம் சமர்ப்பித்த அறிக்கை பெரும்பாலானோரின் ஆதரவைப் பெற்றது. ரில்வின் சில்வா தனது அறிக்கையை மீளப் பெற்று கொண்டார். சோமவன்ச அமரசிங்க தனது அறிக்கையில் விடாப்பிடியாக இருந்தார். இதன் காரணமாக கட்சிக்குள் பெரிய அளவில் விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதங்களில் முன்னுக்கு நின்று, தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்திய மத்திய குழு உறுப்பினர் அசோக்க கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் காரணமாகவே கட்சியோடு முரண்பட்டவர்கள் வெளியேறத் தீர்மானித்தார்கள்.

தொலைக்காட்சிகளில் காட்டப்படும் மல்யுத்தச் சண்டைகளில் சம்பியனான ஜோன் சீனாவை யாரும் வென்று விட்டார்கள் எனில் அவர்கள் பெரியவர்கள் ஆகிவிடுவார்கள். ஜே.வி.பியின் உள்ளும் இதே நிலைதான் இருந்தது. சோமவன்ச, ரில்வின் சில்வா போன்றவர்களை விவாதங்களில் வீழ்த்தி இரண்டாம் நிலைத் தலைவர்கள் பெரியவர்களாகிவிட முனைந்தார்கள். சோமவன்ச போன்றவர்கள் விவாதங்களுக்கு எழுதும் குறிப்புகளைத் திருடுவது, புத்தகங்களை ஒளித்து வைப்பதுவரை இது சென்றது. கட்சியில் நடைபெறும் விவாதங்கள் சரியான முடிவை எடுக்கும் நோக்கில் அல்லாமல் தமக்கான அதிகாரத்தை நிலைநாட்டும் நோக்கில் தான் நிகழ்ந்தன. தற்போது முன்னிலை சோசலிசக் கட்சியில் இருக்கும் புபுது ஜெயகொட, வருண ராஜபக்ச, சமீர கொஸ்வத்த, அசோக்க போன்றவர்கள் இந்தச் சின்னத்தனமான அதிகாரச் சண்டையில் முன்னின்றார்கள். கோட்பாடுரீதியான முரண்பாடுகள் பிளவிற்குக் காரணமாக இருக்கவில்லை. மகிந்த ராஜபக்சவுடனான கூட்டணியில் ஏற்பட்ட விரிசலைத் தொடர்ந்து எழுந்த நிலையைப் பயன்படுத்தி கட்சித் தலைமையை சோமவன்ச குழுவினரிடமிருந்து கைப்பற்ற இரண்டாம் நிலைத் தலைவர்கள் முனைந்ததும் கட்சிச் தலைமை அதற்கெதிராகச் செயற்பட்டமையுமே பிளவிற்கான காரணம். தலைமையின் யுத்த ஆதரவு நிலைப்பாடு, ஆளும் கட்சியுடனான கூட்டணி என்பன கீழ்மட்ட உறுப்பினர்களிடையே ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த அதிருப்தி தலைமையை எதிர்த்தவர்களிற்குக் கைகொடுக்க, பிரிந்து வருவது சாத்தியமானது.

முன்னிலை சோசலிஸக் கட்சியின் உருவாக்கத்தில் உங்களது பங்கு என்ன?

ஜே.வி.பியிலிருந்து வெளியேறியவர்கள்மக்கள் போராட்ட இயக்கம்என்ற பெயரில் செயற்பட கலந்துரையாடல்களை நடத்திய காலத்திலே அவர்களோடு இணைந்து செயற்பட ஆரம்பித்தேன். மக்கள் போராட்ட இயக்கமானது, ஒடுக்கப்பட்டவர்களின் ஒன்றிணைந்த போராட்டத்தை புரட்சிக்கான வழிமுறையாகக் கொண்டிருந்தது. இந்த நோக்கத்தில் ஒடுக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அய்ம்பதிற்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டன. வெகுசன அமைப்புக்களைக் கட்டும் பணியும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் கட்சி ஒன்றின் அவசியம் விரைவாகவே உணரப்பட்டதால் நாங்கள் நடத்திய நீண்ட விவாதங்களின் பயனாகமுன்னிலை சோசலிசக் கட்சிஉருவாக்கப்பட்டது. கட்சியின் மாணவர் அமைப்பிலும் இளைஞர் அமைப்பிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்தேன். கட்சியை அமைப்புரீதியாகக் கட்டியெழுப்பும் பணியுடன், கடத்தப்பட்ட லலித்குகன் விடுதலைக்கான போராட்டங்கள், இலவசக் கல்விக்கான போராட்டங்கள், கட்சியின் இளைஞர் அணியை உருவாக்குவதற்கான வேலைகள், கட்சியின் தமிழ் உறுப்பினர்களிற்கு அரசியல் வகுப்புகளை நடத்துவது, கட்சியின் கோட்பாடு விவாதங்களில் முனைப்புடன் பங்களிப்பது என ஆரம்ப காலத்தில் எனது பணிகள் அமைந்திருந்தன.

லலித் மற்றும் குகனுடன் பணியாற்றிய நினைவுகள் குறித்து?

லலித்தை அவர் கடத்தப்படுவதற்கு முன்பு ஒன்றரை வருடங்களாக எனக்குத் தெரியும். லலித், இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்தவர். லலித்தின் தந்தை தமிழர், தாய் சிங்களவர். அவர்கள் இறப்பர் தோட்டத்தில் பால் வெட்டும் தொழில் செய்கின்றார்கள். லலித் சிங்கள மொழியில் படித்தவர். அவர் சிங்களக் கலாசாரத்துடன் வளர்ந்தவர். தமிழ் கதைக்கத் தெரியும். அவர் ஜெயவர்தன பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்தில் பணியில் இருந்தபோது அந்தப் பல்கலைக்கழகத்தில் ஜே.வி.பி. அமைப்பாளராக இருந்தவரால் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். மார்க்ஸியக் கொள்கைகளில் ஏற்பட்ட பிடிப்பினால் வேலையை உதறிவிட்டு கட்சியில் முழுநேர உறுப்பினராக இணைந்து லலித் செயற்பட்டார். 2009-ற்கு பின்பு வட பிரதேசங்களில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அவர் ஜே.வி.பியால் அனுப்பப்பட்டார். அந்தக் காலப் பகுதியில் ஜே.வி.பி. பின்னால் நின்று இயக்கிக்கொண்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் நான் செயற்பட்டுக்கொண்டிருந்தேன். அந்தத் தொடர்புகளால் லலித் என்னைச் சந்திக்க வருவார். சந்திக்க வரும் வேளைகளில் ஜே.வி.பி. தொடர்பாகக் கதைப்பார். அவரின் நிலைப்பாடுகளில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. தமிழ் மக்கள் மீதான யுத்தத்திற்கு ஆதரவு வழங்கியமைக்கு குறைந்தபட்சம் மன்னிப்புக் கோராமல் உங்களால் தமிழர்களை அணுக முடியாது என்று நிறையத் தடவைகள் அவரிடம் கூறியிருக்கின்றேன். அதனை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் வேறுவேறானவர்கள் என்ற ஜே.வி.பியின் நிலைப்பாட்டையே மீண்டும் மீண்டும் கூறுவார். இந்த நிலைப்பாட்டுடன் என்னைச் சந்திக்க வரவேண்டாம் என்று அவருக்குத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் சந்திக்க வருவார்.

கட்சித் தலைமை சொல்வதைத் தாரக மந்திரமாக ஏற்று வேலை செய்யப் பழக்கப்பட்ட ஜே.வி.பி. உறுப்பினர்களில் ஒருவராகவே லலித்தும் இருந்தார். லலித்தின் தந்தை தமிழராக இருந்தாலும் நான் மேலே குறிப்பிட்ட இனவாத மனநிலையிலேயே லலித்தும் இருந்தார். இயல்பாகவே லலித்திடம் அமைப்பு ரீதியிலான பணிகளை மேற்கொள்ளும் திறமை இருந்தது. முதலில் லலித்துடன் நட்புரீதியான சந்திப்புகளே இடம்பெற்றன. ‘நாம் இலங்கையர்அமைப்பில் நான் செயற்பட ஆரம்பித்த பின்னரே லலித்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தேன். காணாமற்போனவர்களின் உறவுகளைத் திரட்டி போராட்டங்களை இணைந்து நடத்தியிருக்கின்றோம். லலித் கடத்தப்படுவதற்கு மூன்று மாதங்களிற்கு முன்னால் கிளிநொச்சியில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறையில் வைத்தே அவர் குகனைச் சந்தித்திருக்கின்றார்.

குகன், விடுதலை புலிகளின் முன்னாள் போராளி. மணல் அகழும் தொழிலில் ஈடுபட்ட குகன், .பி.டி.பி. உறுப்பினர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக சிறையிலடைக்கப்பட்டிருந்தார். சிறையில் ஏற்பட்ட நட்பின் வழியே குகன் கட்சியுடன் இணைந்து செயற்படச் சம்மதித்தார். அதன்பின்பு லலித் அரசியல் பணிகள் செய்வதற்கு குகன் உதவியுள்ளார். ஜே.வி.பிக்குள் முரண்பட்டவர்கள் வெகுசன அமைப்பொன்றைக் கட்டியெழுப்பும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் ஜே.வி.பியின் கார்த்திகை வீரர்களை நினைவுகூறும் நிகழ்வு நடந்தது. ஜே.வி.பியில் முரண்பட்டிருந்தவர்கள் தனியாக ஒரு நினைவுகூறல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்வில் நான் கலந்துகொண்டிருந்தேன். அங்குதான் முதன் முதலாக குகனைச் சந்தித்தேன். அவருடன் சிறிது நேரமே உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் கட்சி தமிழர்களின் பிரச்சினையைச் சரிவர விளங்கி கொள்ளாததைக் குறித்த தனது ஆதங்கத்தை அவர் என்னிடம் வெளிப்படுத்தியிருந்தார்.

அந்த நிகழ்வு இடம்பெற்ற ஒரு மாதத்தின் பின்பாக, மக்கள் போராட்ட இயக்கத்தின் ஆரம்ப நிகழ்வு தொடர்பான ஊடக மாநாடு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு லலித் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். நான் மக்கள் போராட்ட இயக்கத்தில் இணைவது தொடர்பாக அதுவரை எந்த முடிவையும் எடுக்காதிருந்ததால் ஊடக மாநாட்டில் பங்கு கொள்ள மறுத்திருந்தேன். லலித் அதற்கு முதல் தினமே யாழ்ப்பாணம் சென்று குகனுடன் ஊடக மாநாட்டிற்கான ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தார். மனித உரிமைகள் தினத்தில் ஊடக மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வேறு அமைப்புகளால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திலும் மக்கள் போராட்ட இயக்கத்தினர் பங்குபற்றுவதாக இருந்தது. ஊடக மாநாட்டிற்கான ஒழுங்குகளை செய்துகொண்டிருந்த லலித் என்னுடன் தொலைபேசி வாயிலாகத் தொடர்பில் இருந்தார். ஊடக மாநாட்டில் மொழிப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மொழிபெயர்ப்பு உதவிக்கேனும் வருமாறு கோரினார். அடுத்தநாள் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கும் நான் செல்லவிருந்ததால் வருகின்றேன் எனக் கூறினேன். அன்று இரவு பதினொரு மணிவரை என்னுடன் தொடர்பிலிருந்த லலித்தின் தொலைபேசி மறுநாள் காலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. காலை 11 மணியளவில் லலித்தும் குகனும் கடத்தப்பட்டதை அறிந்தேன்.

ஜே.வி.பி. உறுப்பினர்கள் தலைமை சொல்லும் வேலையைக் கேள்விகளின்றி செய்வதற்குக் கட்சி வகுப்புகள் வழியே பழக்கப்பட்டிருந்தார்கள். உறுப்பினர்கள் கட்சியைக் கடவுள் போல் நம்பினார்கள். சரிபிழை குறித்துச் சிந்திக்கவில்லை. மாறி மாறி நாட்டை ஆட்சி செய்யும் முதலாளியக் கட்சிகளுக்கு எதிரான போராட்டத்தில் தமது வாழ்க்கையையே அர்ப்பணிக்கத் தயாராகயிருந்த உறுப்பினர்களைக் கொண்டு மகிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகளை ஒட்ட வைத்து, மகிந்தவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய ஜே.வி.பி. தலைமை உத்தரவிட்டது . லலித்தும் அவ்வாறு கட்சிக்குக் கண்மூடித்தனமான விசுவாசியாகவேயிருந்தார். லலித் வடக்கில் மிக முனைப்பாகச் செயற்பட்டார். காணாமற் போனவர்களின் உறவினர்களை ஒன்றிணைத்துப் போராட்டங்களை நடத்த அவரால் முடிந்திருந்தது. ஆரம்பம் முதலே அரசபடைகளின் கடுமையான அழுத்தம் அவருக்கிருந்தது. ஜே.வி.பியைப் பொறுத்த வரையில் பொது இடங்களில் தமது உறுப்பினர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்படுவதை ஊக்குவித்து வந்தார்கள். அதன் மூலம் அரசபடையினருக்கு எதிரானவர்கள் என்று காட்டிக்கொள்ள முடியும், மக்கள் மத்தியில் பிரச்சார வெளிச்சம் கிடைக்கும் என்பதே அவர்களின் கணிப்பாக இருந்தது. இதன் காரணமாக லலித்தின் பாதுகாப்புக் குறித்து கட்சி அசட்டையாகவே இருந்தது. லலித்திற்குத் துணையாகக் கட்சி மேலும் சிலரை அனுப்பியிருந்தால் நிலைமை வேறுமாதிரியானதாக இருந்திருக்கும். எப்படியிருப்பினும் காணாமற் போனவர்களிற்காக லலித் குரல் கொடுத்த தீவிரம், காணாமற் போனவர்களின் உறவுகளிடையே லலித் மீது அதிகபடியான மதிப்பை உருவாக்கியிருந்தது. அவர்கள் அனைவராலும் லலித் நேசிக்கப்பட்டார்.

குகனின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துத் தெரியவில்லை. அவர் கட்சியுடன் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்த வேளையில் ஜே.வி.பியில் உட்கட்சி முரண்பாடுகள் தீவிரமடைந்திருந்தன. அவர் கட்சிச் செயற்பாடுகளில் பங்குகொள்ளும் முன்பே கடத்தப்பட்டார். இந்தக் கடத்தல்களில் அரச படைகளுடன் .பி.டி.பியினருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. லலித்குகன் இருவரும் இறுதியாகப் பயணித்த உந்துருளி மீட்கப்பட்ட இடத்திலிருந்து துப்பாக்கி சூடு நடத்தும் தூரத்திலேயே இராணுவ முகாம் அமைந்திருந்தது. லலித்குகன் பிரச்சினை தொடர்பாக .பி.டி.பி. உறுப்பினர்கள் கட்சியுடன் பேரம் பேசியிருந்தார்கள்.

புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என லலித் உங்களிடம் சொன்னது சரிதானே. புலிகளது அரசியல் நலன்களும் தமிழ் மக்களின் நலன்களும் வேறுவேறானவை இல்லையா? புலிகள் இயக்கத்தைக் குறித்த உங்களது முழுமையான மதிப்பீடு என்ன?

லலித்தும், ஜே.வி.பியும் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. புலிகளை விமர்சித்துத் தமிழ் மக்களைத் தங்கள் பக்கம் வென்றுவிடலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே அப்படிக் கூறினார்கள். ஆனால் விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் அளவிற்குப் புலிகள் குறித்த ஆய்வுகள் அவர்களிடம் இருக்கவில்லை. இப்படியான விமர்சனங்களை முன்வைக்கும் போது யுத்தத்திற்கு ஜே.வி.பி. ஆதரவு தெரிவித்ததையும் தமிழ் மக்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டதையும் நியாயப்படுத்தியிருந்தார்கள். புலிகளை விமர்சித்துக்கொண்டு தமிழ் மக்களைத் தங்களால் வென்றெடுக்க முடியாது என்பதைக் காலபோக்கில் விளங்கிக்கொண்டு, பின்பு புலிப் புராணமும் பாடினார்கள். புலிகள், சிங்கள மக்களின் பிரச்சினைகளையும் கதைத்திருந்தால், அப்பாவிச் சிங்கள மக்களைத் தாக்காதிருந்தால் தாங்களும் புலிகளை ஆதரித்திருப்போம் என்றெல்லாம் கூறினார்கள். வடக்கில் அரசியல் பணிகளில் ஈடுபட்ட போது பிரபாகரன் எங்களது நண்பர் என்றே கூறினார்கள். பிரபாகரனின் தந்தையாரின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக உதுல் பிரேமரத்ன, சேனாதீர குணதிலக்க தலைமையில் ஒரு குழு பரந்தன் வரை சென்றிருந்தது. அவர்களைத் திடீரென்று ஜே.வி.பி. தலைமை செல்லவேண்டாம் என இடைமறித்து குழுவைத் திருப்பி வரவழைத்தது. ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு உதுல் பிரேமரத்ன வழங்கிய செவ்வியில் முன்னாள் புலி உறுப்பினர்கள் தங்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்று கூறினார். முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் சேனாதீர குணதிலக்க, பிரபாகரனின் மரணச் செய்தியைக் கேட்டுக் கண்ணீர்விட்டு அழுததாகக் கட்சிக்காரர்கள் கதையொன்றைப் பரப்பியும் வந்தார்கள். தற்போதுமாவீரர் தினம்அனுஷ்டிக்க உரிமை இருக்கின்றது என அறிக்கை வெளிவருவதெல்லாம் இதன் காரணமாகத் தான். தமிழ் மக்கள் தனியாட்சி கோரியதை மறுப்பதற்காக புலிகள் வேறு, மக்கள் வேறு என்று கூறினார்களே தவிர ஆழமான பார்வையுடன் கூறவில்லை.

விடுதலைப் புலிகளைத் தவிர்த்து விட்டுத் தமிழ் மக்களின் வரலாற்றையோ, பிரச்சினைகளையோ அணுக முடியாது. அவ்வாறு செய்வது தமிழ் மக்களை கடந்த முப்பது வருடங்களை மறக்க சொல்வதற்கு சமமானதாகும். சரிபிழை என்பதற்கு முதல் நடந்தது போராட்டம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். புலிகள் இயக்கத்தையும் ஏனைய தமிழ் இயக்கங்களையும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒடுக்குமுறைக்கு எதிராக உதித்த போராட்ட இயக்கங்களாகவே பார்க்கின்றேன். அந்த நிலையிலிருந்தே விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். நடந்த போராட்டங்கள் அனைத்திற்கும் மக்கள் ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள். அதற்கு காரணம் ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் உணர்வு தான். அந்த வகையில் புலிகள் நடத்தியதும் அவ்வாறான போராட்டம் தான். இந்த நிலைப்பாட்டிலிருந்தே விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.

ஆயுத அதிகாரத்தை அனுபவித்திருக்காத உழைக்கும் வர்க்கத்தினர் ஆயுதங்களைக் கையிலெடுக்கும் போது பிற்போக்குத்தனங்கள் வெளிப்படவே செய்யும். புரட்சிகரமான முறையில் தயார்ப்படுத்தப்படாத போது இந்த நிலைமை இன்னும் தீவிரமாகும். இந்தக் குணாம்சத்தை போராடிய தமிழ் இயக்கங்களில் காணக் கூடியதாக இருந்தது.

பதினாறு வயதில் ஆயுதம் தூக்கிய பிரபாகரனை கார்ல் மார்க்ஸ் அளவிற்கு எதிர்பார்த்து யாரும் விமர்சித்தால் அது பயனுள்ளதாக இருக்காது. இனவொடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடும் இயக்கம் கோரக் கூடிய உச்சபட்சக் கோரிக்கையை புலிகள் முன்வைத்துப் போராடினார்கள். அவர்கள் தங்களை இடதுசாரிகளாக அடையாளப்படுத்தவுமில்லை. திறந்த பொருளாதார கொள்கையைத் தான் அவர்களும் முன்னெடுத்திருப்பார்கள். உண்மையில் புலிகள் இயக்கம் விடுதலை பெற்றுத் தரும் என மக்கள் நம்பினார்கள், ஆதரவு அளித்தார்கள். புலிகள் முன்வைத்த தமிழீழத்தில் மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைத்திருக்குமா என்றால் இல்லை என்பதே பதில். அத்தகைய பண்புகளடங்கிய போராட்டத்தை புலிகள் முன்வைக்கவில்லை. ஆனால் அவர்களின் போராட்டம் இனவொடுக்குமுறைக்கு எதிரானது. இனவொடுக்குமுறை விடயத்தில் புலிகளினதும் மக்களினதும் அரசியல் அபிலாசைகள் ஒன்றானதாகவே இருந்தன. நடந்ததை இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாக இனம்கண்டு சரியான விமர்சனங்களைச் செய்து கொள்வதன் மூலமே முன்செல்ல முடியும். விடுதலைப் புலிகளை முற்றாக நிராகரித்து, அழிவிற்குக் காரணம் புலிகள் என்று கூறி கொண்டிருப்பதில் பயனில்லை. ஒருவேளை புலிகள் தமிழீழத்தை வென்றிருந்தால் அங்கும் ஒடுக்குமுறைகளிற்கு எதிரான போராட்டக்களமும் வர்க்கப் போராட்டக்களமும் திறக்கப்பட்டே இருந்திருக்கும். சரியானதைச் சரி எனவும் பிழையானதைப் பிழை எனவும் எப்பொழுதும் துணிச்சலுடன் சொல்ல வேண்டும். அப்படியானவர்கள் ஒருசிலரே இருக்கின்றார்கள். ஆகவே புலிகள் இயக்கத்தினைத் தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணத்தின் ஒரு போக்காகவே நான் காண்கின்றேன். இதிற் கிடைத்த அனுபவங்களுடன் நாம் எம்மைத் திருத்திக்கொண்டு முன்செல்ல வேண்டும். அவ்வாறானவர்களிற்கு பிரபாகரனின் புகழ்பாடி அரசியல் செய்ய வேண்டிய தேவை இருக்காது. ஆனால் தற்போது தமிழர்கள் பின்னோக்கிச் செல்கின்றார்கள். புலிகளுக்கு முன்னான வரலாற்றில் போராட்டத்தில் முதன்மை வகித்தவர்கள் அதே பழைய பாதையில் பயணிக்கின்றார்கள். தற்போது தமிழ்ச் சமூகம் பின்னோக்கியே செல்கின்றது. புலிகள் கடந்த மூன்று தசாப்தங்களாக குறிப்பிட்டளவு வரலாற்றை முன் நகர்த்தியிருக்கின்றார்கள். அதன் படிப்பினைகளிலிருந்தும் உலக அனுபவங்களிலிருந்தும் நாம் முன்னோக்கிய பாதையை உருவாக்க வேண்டும். அதற்கான கோட்பாடுகளை சமூகமயப்படுத்தல் வேண்டும்.

குமார் குணரட்ணம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டதற்கும் விடுதலையானதிற்கும் பின்னாலுள்ள அரசியற் காரணிகளாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியமான முயற்சிகளின் போதெல்லாம் உறுப்பினர்களை இழப்பது துர்ப்பாக்கியமானது. மக்கள் போராட்ட இயக்கம் ஆரம்பித்த நேரத்தில் லலித்குகன் கடத்தப்பட்டார்கள். கட்சியின் முதலாவது மாநாட்டின் போது குமார்திமுது கடத்தப்பட்டார்கள். சம உரிமை இயக்கத்தின் ஆரம்ப நிகழ்வுகள் நடந்த அன்று கட்சியில் முழுநேரமாகப் பணியாற்றிய பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்தின் பேரில் காவுகொள்ளப் பட்டார்கள்.

எதிர்க்கட்சிகள் பலமிழந்திருந்த வேளையில் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைத் தரும் போராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய கட்சியாக முன்னிலை சோசலிசக் கட்சி மாத்திரமே இருந்தது. ஜே.வி.பியில் இருந்து பிரிந்து வந்தது முதல் கட்சியின் செயற்பாடுகள் மக்களைக் கவரும் விதமாக இருந்தன. தமிழ் மக்களிடமும் கட்சி குறித்து எதிர்பார்ப்பு இருந்தது. அரசாங்கம் முன்னெடுத்த தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து கட்சி நடத்திய பிரச்சாரம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இவற்றின் காரணமாக கட்சியை முளையிலேயே முடக்கும் செயல்களை அரசாங்கம் செய்தது. அரசு குறிப்பாக மாணவர் அமைப்புகளையே குறிவைத்தது. முகமூடிகள் அணிந்த ஆயுததாரிகளால் நாம் துப்பாக்கி முனைகளில் பல தடவைகள் மிரட்டப்பட்டோம். பலர் தாக்குதலிற்கு ஆளானார்கள். எமது அலுவலகங்களை இரவு முழுவதும் கண்விழித்துப் பாதுகாக்க வேண்டிய நிலை இருந்தது. எந்நேரமும் புலனாய்வாளர்கள் எங்களைக் கண்காணித்தவாறிருந்தனர்.

அந்தளவிற்கு முன்னிலை சோசலிசக் கட்சியை நெருக்கடி தரக் கூடிய கட்சியாக அரசாங்கம் கணிப்புச் செய்திருந்தது. பிளவும் மாற்றங்களும் ஏற்படுத்திய உற்சாகம் கட்சி உறுப்பினர்களையும் தீவிரமாகச் செயலாற்ற வைத்தது. அரசாங்கம் கட்சி மீதான ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. குறிப்பாக வடக்குகிழக்கில் கட்சி உறுப்பினர்களின் புகைப்படங்களை இராணுவத்திற்கு வழங்கி, செயற்பாடுகளை முடக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

குமார் குணரத்தினம் தமிழ் அடையாளத்துடன் சிங்களவர்களாலும் ஏற்றுகொள்ளப்பட்ட தலைவராக உருவாகியிருந்தால் அது அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியாகவே அமைந்திருக்கும். அத்தோடு கட்சிக்கு உறுதியான தலைமையை வழங்கக் கூடிய ஒரேயொருவர் குமார் குணரத்தினம் மாத்திரமே என்பதும் அரசாங்கத்திற்கு தெரியும். இந்த காரணங்களாலேயே குமார் குணரத்தினம் கடத்தப்பட்டார். கடத்தலில் திமுது ஆட்டிகல குறிவைக்கப்படவில்லை. அவர் பகடைக்காயாகச் சிக்கிக் கொண்டார். அவர்களைக் கொலை செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இருந்திருக்கும் என்று நான் எண்ணவில்லை. நிலைமைகளைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கும் திட்டமே இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் குமார் குறித்த சகல விடயங்களையும் அரசாங்கம் அறிந்திருந்தது. அவர் நாடுகடத்தப்பட்டாரா அல்லது அவராகவே வெளிநாடு சென்றாரா என்பது மர்மமாகவே உள்ளது. ஏனென்றால் இந்த விடயத்தில் கட்சி பொய்களையே கூறியது. எது எப்படியோ அரசாங்கம் குமாரை அப்புறப்படுத்தியதன் மூலம் கட்சியை வலுவிழக்கச் செய்து தலைமைத்துவம் அற்றதாக்கி நெருக்கடிக்குள் தள்ளியது. அதுவே அரசாங்கத்தின் நோக்கம் என்பதிலும் சந்தேகம் இல்லை.

சம உரிமை இயக்கத்தின் உருவாக்கத்தில் உங்களது பங்களிப்புகள் எவை? சம உரிமை இயக்கம் உண்மையிலேயே சுயாதீன இயக்கமா? அல்லது முன்னிலை சோசலிசக் கட்சியின் துணை அமைப்பா?

சம உரிமை இயக்கம் சுயாதீன இயக்கம் அல்ல. சிலரால் பொதுவான தளம் எனப் பிரச்சாரப்படுத்தப்பட்டாலும் உண்மையில் முன்னிலை சோசலிசக் கட்சியின் துணை அமைப்பே சம உரிமை இயக்கம்.

சம உரிமை இயக்கத்தினைக் கட்டமைப்பதற்கு மூன்று பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் நான் அங்கம் வகித்தேன். சம உரிமை இயக்கம் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக உருவாக்கப்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினையில் முனைப்பான தலையீடுகளைச் செய்யவேண்டும் என்ற நோக்கிலும், கட்சி எதிர்காலத்தில் இனப்பிரச்சினை தொடர்பான ஒரு தீர்வை முன்வைக்கும் போது ஏற்படக் கூடிய தடைகளை இல்லாதாக்கும் நோக்கிலும், சகல இன மக்களையும் ஒன்று திரட்டி அரசுக்கு எதிரான போராட்டத்தினை முன்னெடுக்கவும், இதன் மூலம் குறிப்பிட்டளவு தமிழ் உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதுமே கட்சியின் அடிப்படை நோக்கமாக இருந்தது.

ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், மதகுருமார்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் எனப் பலருடன் நான்கு சுற்றுகள் கலந்துரையாடல்களை நடத்தினோம். இந்தக் கலந்துரையாடல்கள் மூலம் எம்மோடு இணைந்து செயற்பட முன்வந்தவர்களின் கருத்துகளையும் உள்வாங்கி சம உரிமை இயக்கத்திற்கான அடிப்படை வேலைத்திட்டத்தை முன்வைத்தோம். தேர்வு செய்யப்பட்டவர்களைக் கொண்டு இனவாதத்திற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்கவும், சில கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் திட்டமிட்டோம். இராணுவ ஆட்சியை நீக்கக் கோரி நாடெங்கும் பதாகைகளில் கையெழுத்திடல், ஹலால் பிரச்சினை குறித்த கருத்தரங்குகள் என்பவற்றை ஆறு மாதங்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுத்தோம். சம உரிமை இயக்கத்தின் இணை அமைப்பாளராக இந்தப் பணிகள் அனைத்திலும் நான் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன்.

ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளிலே சம உரிமை இயக்கம் என்ற பெயரிலே இயங்குபவர்கள் முன்னிலை சோசலிசக் கட்சி, சம உரிமை இயக்கத்தின் ஆதரவு மட்டத்திலேயே இருக்கிறதே தவிர சம உரிமை இயக்கம் முன்னிலை சோலிசக் கட்சியின் துணை இயக்கம் அல்லவே அல்ல என்று திரும்பத் திரும்பப் பகிரங்கமாகச் சொல்கிறார்களே?

புலம்பெயர் நாடுகளில் சம உரிமை இயக்கத்தின் பெயரில் இயங்குபவர்கள் தங்களது அரசியல் வெறுமையை நிரப்பிக் கொள்வதற்காக சம உரிமை இயக்கத்தினைப் பயன்படுத்திக்கொண்டார்கள். உண்மையில் சரணாகதி அடைந்தார்கள் என்றே கூற வேண்டும். அதை மூடிமறைக்கவே பொதுவான தளம் என்ற கதையெல்லாம்.

சம உரிமை இயக்கத்தின் கோஷமாக இருப்பதுஅனைத்துத் தேசியப்பிரசைகளினதும் சம உரிமையை வென்றெடுப்போம்என்பதாகும். முன்னிலை சோசலிசக் கட்சி மட்டுமே இலங்கையில் தேசிய இனங்கள் இல்லை, பிரித்துப் பார்க்க முடியாத தேசியம் ஒன்றின் பிரசைகளே இருக்கின்றார்கள் என்று கூறுகின்றது. இப்படி இருக்க சம உரிமை இயக்கத்தினை கட்சி சார்பற்ற வெகுஜன இயக்கம் என்று கூறுவது மக்களை முட்டாளாக்கும் வேலையாகும். சம உரிமை இயக்கத்தின் ஆதரவு மட்டத்திலே முன்னிலை சோசலிசக் கட்சி இருக்கிறது என்றால் முன்னிலை சோசலிசக் கட்சி வெகுசனப் பணிகளை நிறுத்தி வைக்க முடிவெடுத்தபின் சம உரிமை இயக்கமும் ஏன் முடங்கியது? சம உரிமை இயக்கம் தொடர்பாக ஒர் இணையத்தளம் கூட இவர்களால் ஆரம்பிக்க முடியாது. பகிரங்க விவாதங்களிற்காக சம உரிமை இயக்கத்திற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பிக்கும் யோசனை என்னால் முன்வைக்கப்பட்ட போது, குமார் குணரத்தினம் அதை விரும்பாததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. வெளிப்படையாகச் சொல்வதென்றால் குமார் குணரத்தினம் விரும்பாத எதனையும் சம உரிமை இயக்கத்தினரால் செய்துவிட முடியாது. புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியில் வெளிவரும் விடயங்கள் கட்சித் தலைமைக்குத் தெரிவதில்லை. அந்த விடயங்கள் இலங்கையில் தாக்கம் செலுத்தாத காரணத்தினால் கண்டுகொள்வதில்லை. அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி புலம் பெயர்ந்த நாடுகளில் செயற்படும் சம உரிமை இயக்கத்தினர் இவ்வாறான பொய்களைத் தங்கள் சுயநலத்திற்காகக் கூறுகின்றார்கள். சம உரிமை இயக்கத்தின் ஆதரவு அமைப்பாக முன்னிலை சோசலிசக் கட்சி இல்லை. மாறாக முன்னிலை சோசலிசக் கட்சியின் துணை அமைப்பாகவே சம உரிமை இயக்கம் இருக்கின்றது.

சம உரிமை இயக்கம் மூலம் சாதிக்கக் கூடிய விடயங்கள் நிறையவே இருந்தன. அரசாங்கத் தரப்பு உட்பட நாட்டின் அனைத்து அரசியற் செயற்பாட்டாளர்களின் கவனத்தையும் இயக்கம் ஈர்த்திருந்தது. சமூகநீதியை விரும்பிய பலர் இயக்கத்துடன் விவாதங்களில் ஈடுபட்டனர். சிங்கள இடதுசாரிகளுக்கு, புத்திஜீவிகளுக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, பிரச்சினைகளை புரிய வைக்க, அவர்களின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தக் கிடைத்த சந்தர்ப்பத்தை புலம் பெயர் நாடுகளில் சம உரிமை இயக்கத்தை ஏற்படுத்தியவர்கள் தவற விட்டுவிட்டார்கள். அவர்களை சம உரிமை இயக்கத்துடன் தொடர்பு படுத்தியவன் நான் தான். அவர்களிடம் இந்த அரசியற் பணிகளை கோரிக்கையாக வைத்தே தொடர்புபடுத்தி விட்டேன். ஆனால் அவர்கள் சம உரிமை இயக்கத்தைத் தங்களது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்கும் உண்மை நிலை என்னவென்று தெரியும். சம உரிமை இயக்கத்தில் அவர்களின் நிலை என்ன என்பதும் அவர்களிற்குத் தெரியும். சுயநலத்திற்காக மக்களை ஏமாற்றும் விதத்தில் வாய்ப்புகளைப் பயன்படுத்தாதீர்கள் என்று மட்டுமே அவர்களை நோக்கிக்கூறமுடியும்.

சம உரிமை இயக்கத்திற்கு, புலம்பெயர்ந்த இலங்கையர்களால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?

இலங்கையில் தொடர் வெகுஜனப் போராட்டம் ஒன்றச் செய்வதே சம உரிமை இயக்கத்தின் நோக்கமாக இருந்தது. புலம்பெயர்ந்த நாடுகளில் செயற்படும் திட்டம் எமக்கு இருக்கவில்லை. இலங்கையில் குறிப்பிட்ட அளவில் இயக்கத்தை நிலைநிறுத்தாமல் இயக்கத்தைப் புகலிடத்திற்குக் கடத்த முடியாது. ஆகவே சம உரிமை இயக்கத்தை நாங்கள் தொடங்கும் போது , அது தொடர்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் யாருடனும் நாங்கள் ஆலோசனைக் கலந்துரையாடல்களை நடத்தவும் இல்லை. எல்லாவற்றிலும் முக்கியமாக, சம உரிமை இயக்கத்தின் அங்கத்தவர்களிடையேயிருந்த மிகச் சிலரைத் தவிர கட்சி உறுப்பினர்களுக்கே சம உரிமை இயக்கம் குறித்த விளக்கம் இருக்கவில்லை. புலம்பெயர்ந்த சமூகத்தினூடாக பின்கதவால் இலங்கையில் தமிழ்ச் சமூகத்தினைத் தொடர்புகொள்ளவும் நாங்கள் எண்ணியிருக்கவில்லை. புலம் பெயர்ந்து வாழும் மக்களுடன் கலந்துரையாடல்கள், அரசியல் விவாதங்களை கட்சி என்ற அடிப்படையில் நடத்தித் தொடர்புகளைப் பேணவே எண்ணியிருந்தோம்.

எனினும் புகலிடத்தில்புதிய ஜனநாயக மக்கள் முன்னணிஎன்ற பெயரில் இயங்கிய சிலர் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு தொடர்ச்சியாகக் கோரி வந்தனர். அவர்களுடன் கட்சிக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. ஆனால் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் கட்டமைப்பும் செயற்படும்விதமும் அவர்களோடு சேர்ந்து இயங்குவதற்குப் பெரும் தடையாக இருந்தன. அமைப்பு ரீதியாக இயங்கப் பழக்கப்படாதவர்களாகவே அவர்களிருந்தனர்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர்களை கொண்டு மக்கள் போராட்ட இயக்கத்தினை கட்டியெழுப்பும் திட்டமே எம்மிடமிருந்தது. ஆனால் மக்கள் போராட்ட இயக்கம் செயற்படுத்தப்படாமையினால்சம உரிமை இயக்கம்என்ற பெயரில் இயங்கத் தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம் அதுவரை வாய்ப்புகளின்றி இருந்தபுதிய ஜனநாயக மக்கள் முன்னணிக்காரர்களுக்கு செயற்படச் சந்தர்ப்பம் கிடைத்தது. முன்னிலை சோசலிசக் கட்சியும் வெளிநாடுகளில் பணியாற்றுவதாகக் காட்டிக்கொள்ள அதனைப் பயன்படுத்தியது. கொள்கை இணக்க அடிப்படையில் புலம்பெயர் நாடுகளில் சம உரிமை இயக்கம் உருவாக்கப்படவில்லை. அந்த உருவாக்கம் வெறும் சந்தர்ப்பவாதமாகவே இருந்தது. எம்முடன் இணைந்து செயற்பட்ட புலம்பெயர்ந்த இலங்கையர்கள் தங்களுக்குச் சாதகமான முறையில், முரண்பாடான வகையில் சம உரிமை இயக்கத்தினைப் பிரச்சாரப்படுத்திக் கொண்டார்கள். மொத்தத்தில் புலம்பெயர்ந்த இலங்கையர்களால் சிறிதளவு பிரச்சார வெளிச்சம் கிடைத்ததைத் தவிர வேறெந்த நன்மைகளும் கிட்டவில்லை.

உண்மையில் இந்தப் புலம்பெயர்ந்த செயற்பாட்டாளர்கள், முன்னிலை சோசலிசக் கட்சி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கடைபிடித்த தவறான கொள்கைகளைக் கேள்விக்குட்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகளை தவறவிட்டனர். கட்சி அதற்கான கதவுகளைத் திறந்து விட்டிருந்தபோதும் அதைச் சரியாகப் பயன்படுத்தத் தவறியதோடு கட்சியின் நிலைப்பாடு சரியானது எனச் சான்றிதழ் வேறு அளித்தார்கள். இனப்பிரச்சினை விவகாரத்தில் நானும் இன்னும் சிலரும் கட்சியின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் போது, சம உரிமை இயக்கத்தில் இணைந்து கொண்ட புலம் பெயர்ந்தவர்களை முன்நிறுத்தி நான் தோற்கடிக்கப்பட்டேன். கட்சியின் நிலைப்பாடு சரியானது என அவர்களைச் சுட்டிக்காட்டி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அந்த வகையில் புலம்பெயர் சமூகத்தில் சம உரிமை இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள் பின்னடைவையே ஏற்படுத்தியிருக்கின்றனர்.

இலங்கையில் பெரிய அளவில் எதனையும் செய்யாமல் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகள் கட்சிக்குள்ளும் வெளியிலும் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கி விட்டிருந்தன. புகலிடச் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளை இலங்கையில் சம உரிமை இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். புகலிடத்தில் சரியான அரசியல் புரிதல்களின்றியே செயற்பட ஆரம்பித்துமே தினம்கொண்டாடும் நிலைவரை சென்றிருந்தார்கள். இந்த விடயத்தில் குமார் குணரத்தினம் தன்னிச்சையாகச் செயற்பட்டமை குறித்து பலத்த விமர்சனமும் கட்சிக்குள் வைக்கப்பட்டது. இலங்கை சம உரிமை இயக்கத்திற்கும்புகலிட சம உரிமை இயக்கத்திற்கும் இடையில் நேரடியான தொடர்புகள் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் சம உரிமை இயக்கத்தின் செயற்பாடு கடந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் முதல் சுயமாகவே முடக்கப்பட்டிருக்கின்றது.

நீங்கள் முன்னிலை சோசலிசக் கட்சியிலிருந்து விலகும் முடிவை எப்போது எடுத்தீர்கள் ?

முன்னிலை சோசலிசக் கட்சியில் செயற்பட ஆரம்பித்த சிறிது காலத்திலேயே இனப்பிரச்சினை விவகாரத்தில் கட்சியை விட்டு வெளியேறிச் செயற்பட நேரிடும் என்பதை உணர்ந்து கொண்டேன். கட்சியை விட்டு வெளியேறிய பலர் இதனை எனக்குக் கூறிச் சென்றிருந்தார்கள். ஆனால் இத்தனை விரைவில் வெளியேற நேரிடும் என நான் நினைத்தும் பார்க்கவில்லை.

தாய்க் கட்சியான ஜே.வி.பி மீது முன்னிலை சோசலிசக் கட்சி முன்வைத்த முதன்மையான விமர்சனமே, கட்சி உறுப்பினர்களைக் கையாள ஏதேச்சாதிகார ஏமாற்றுத் தந்திரோபாயங்களை ஜே.வி.பி. வகுத்துச் செயற்பட்டது என்பதாகும். அதே விமர்சனத்தைப் பின்பு நான் இவர்கள் மீதே வைக்க நேரிட்டது.

ஜே.வி.பியில் இருந்து பிரியும்போது ஜே.வி.பி. தலைமை பொது எதிரியாகயிருந்ததால் பிரிந்து வந்தவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் துலக்கமாகத் தெரியவில்லை. ஆனால் சிறிது காலம் கடந்ததுமே ஜே.வி.பியில் நடந்தது போலவே முன்னிலை சோசலிசக் கட்சியிலும் குறுக்கு வழிகளில்அதிகாரத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகள் ஆரம்பித்தன. கட்சிக்குள் நடந்த மோதல்கள் கட்சியை நிர்வகிக்க முடியாத நிலைமைகளை ஏற்படுத்தின. புபுது ஜெயகொட , குமார் குணரத்தினம் தலைமையிலான குழுஅசோக்க தலைமையிலான குழு என இரண்டு பிரிவுகள் தோன்றின. புபுது ஜெயகொட தலைமையிலான குழு ஜே.வி.பியின் தலைமை போன்று தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல அதற்கெதிரான கருத்துகளுடன் இருந்தவர்கள் அசோக்க தலைமையில் ஒன்று சேர்ந்தார்கள். இந்த மோதல்களில் குமார் குணரத்தினம் கடத்தப்பட்டது தொடர்பாகக் கட்சி கூறிய கட்டுக்கதைகள், மற்றும் குமார் குணரத்தினம்திமுது ஆட்டிகல விவகாரங்கள் என்பன வெளிச்சத்திற்குவர இவை அமைப்புரீதியிலான கடுமையான பிரச்சினைகளாக உருவெடுத்தன. இதனை மூடி மறைக்க குமார் குணரத்தினம் அணியினரால்உட்கட்சி விவாதம்என்ற தந்திரோபாயம் திணிக்கப்பட்டது. சொல்வதைச் செய்யப் பழக்கப்பட்ட உறுப்பினர்கள் பலர் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. எதிர்த்துக் கேள்வி கேட்டவர்கள் ஒரங்கட்டப்பட்டார்கள். நெருக்கடிகள் தொடர்பாகக் கட்சித் தலைமை பொய்களைக் கூற ஆரம்பித்தது. போலியான விவாதச் சுற்றுகள் நடத்தப்பட்டன. கட்சிக்குள் தனிமனித ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகள் தீவிரமாகத் தலைதூக்கின.

முன்னிலை சோசலிசக் கட்சி தற்போது தாய்க் கட்சியான ஜே.வி.பியின் நிலைக்கே சென்றுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியுடன் சேர்ந்து பணியாற்ற ஒருவரால் முடியுமாயின் அவர் ஜே.வி.பியுடனும் இணைந்து செயற்பட முடியும். கட்சியின் அதிருப்தியாளர்கள் பிரிந்து செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர். ஆனால் சூழ்நிலைகள் அமையும்போது நிச்சயம் ஒரு பிளவு நடக்கும். பிரிந்து செல்பவர்கள் மீண்டும் முரண்படுவார்கள். இது ஒரு தொடர்கதையாகவே இருக்கப் போகிறது.

இவ்வாறான எதேச்சாதிகாரப் போக்கும் அதன் காரணமாக் கட்சியின் நிலைப்பாடாக அறிவிக்கப்பட்ட கொள்கைகளும் கட்சியில் தொடர்ந்தும் செயற்படுவதற்கான எந்த நம்பிக்கைகளையும் எனக்குத் தரவில்லை. தமிழ் பேசும் மக்களை அரசியல்ரீதியாகச் சென்றடைய முடியாத, இடதுசாரியத் தார்மீக நெறிமுறைகளை மதிக்காத கட்சியில் செயற்படுவது அர்த்தமற்றது என்பதாலும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இடதுசாரிய அரசியலை வலுவான முறையில் கொண்டு செல்லும் பணியை ஆற்ற வேண்டும் என்ற இலட்சியத்தினாலுமே கட்சியிலிருந்து விலகிச் செயற்படும் முடிவை எடுத்தேன். இதன் அர்த்தம் சிங்கள உழைக்கும் வர்க்கத்தினுடன் வர்க்க ஒற்றுமையை மறுப்பதும் அவர்களுடன்ஒன்றிணைந்து சாத்தியமான போராட்டங்களை நடத்துவதை மறுப்பதும் அல்ல.

உங்களது விலகலை முன்னிலை சோசலிசக் கட்சி எப்படி எதிர்கொண்டது, ஏதாவது அச்சுறுத்தல்கள் இருந்தனவா?

கட்சியின் பிழையான போக்கைச் சுட்டிகாட்டி நான் முன்னெடுத்த உட்கட்சிப் போராட்டம் கட்சித் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே என்னை மாணவர் அமைப்பிலிருந்து வெளியேற்றி, கேகாலை மாவட்ட செயற்குழுவிற்கு மாற்றம் செய்தார்கள். அதன்முலம் என்னால் எழுந்த நெருக்கடியைச் சமாளிக்கவும் மூடிமறைக்கவும் முயன்றார்கள். கட்சியின் இளையோர்கள் மத்தியில் எனது கருத்துக்களுக்கு ஆதரவு கிடைத்ததோடு கட்சியின் போக்கை எதிர்த்து வெகுசனங்கள் மத்தியில் போராட்டங்களை முன்னெடுக்கவும் இணங்கியிருந்தார்கள். அவ்வாறான ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த சமயத்திலேயே என்னை மாணவர் அமைப்பின் பணிகளில் இருந்து விடுவித்தனர்.

எனவே நான் அமைப்புரீதியான பணிகளில் இருந்து விலகியபோது கட்சி கவலை கொண்டது என்பதை விட நிம்மதி அடைந்தது என்பதே உண்மை. எனினும் என்னைக் கட்சியுடன் தொடர்ந்து தொடர்பைப் பேணுமாறு கேட்டதோடு பிரச்சினைகள் விரைவில் தீரும் என்றும் கூறினார்கள்.

கட்சி நான் முன்வைத்த விமர்சனங்களிற்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக எவ்வாறேனும் என்னைக் கட்சியில் தக்கவைக்கவே முயற்சி செய்தது. விலகிய பின்னும் தொடர்ச்சியாக தொடர்புகொண்டு என்னுடன் கதைத்தார்கள். இதன்மூலம் நான் கட்சியிலிருந்து விலகவில்லை என்ற தோற்றத்தைக் கட்சிக்குள் ஏற்படுத்தினார்கள். நான் வெளியேறிய விடயம் கட்சி உறுப்பினர்களிற்கு பரவலாகத் தெரிந்ததுமே, நான் விரைவில் மீண்டும் கட்சியில் இணைந்துகொள்வேன் என்று கூறிச் சமாளித்தார்கள். இப்போதுவரை கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்புவிடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள்.

கட்சியினர் அச்சுறுத்தல்கள் எதையும் எனக்குத் தரவில்லை. அரசாங்கத் தரப்பிலிருந்து சில அமைச்சர்களும் அமைச்சின் செயலாளர்களும் கட்சியின் தகவல்களை, குறிப்பாக மாணவர் இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைத் தருமாறு என்னை அச்சுறுத்தினார்கள். புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் பலமாக இருந்தன. அச்சுறுத்தல்களிற்குப் பணிவது எனது இயல்பல்ல.

முன்னிலை சோசலிசக் கட்சிக்கு இப்போது மக்களிடையே, குறிப்பாகச் சிறுபான்மை மக்களிடையே எத்தகைய ஆதரவுண்டு?

முதலில்மக்கள் போராட்ட இயக்கம்என்ற பெயரில் இயங்க ஆரம்பித்த காலத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. அதன் பிறகு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்தாலும் குறிப்பிடத்தக்க ஆதரவு இருந்தது. ஏராளமானோர் இணைந்து பணியாற்ற முன்வந்தனர். ஆனால் தற்போது முன்னிலை சோசலிசக் கட்சி தமிழ் மக்களின் ஆதரவை இழந்துள்ளது. கட்சியில் அரசியல் பணியாற்றக் கூடிய தமிழ் உறுப்பினர்கள் யாரும் இல்லை. ஆதரவளித்த மக்களும் வேறு கட்சிகளின் பக்கம் சென்று விட்டனர். தமிழ் மக்களிடையே மட்டுமல்ல, சிங்கள மக்களிடையேயும் கட்சி ஆதரவை இழந்துவிட்டது.

குமார் குணரத்தினத்தோடு அரசபடைகளால் கடத்தப்பட்ட , கட்சியின் மகளிர் அணியின் அமைப்பாளர் திமுது ஆட்டிகல இப்போது முன்னிலை சோசலிசக் கட்சியில் இல்லையா?

திமுது ஆட்டிகல கட்சியின் மத்திய குழு கூட்டத்திலிருந்து எழுந்து சென்றது முதல் இப்போதுவரை தலைமறைவாகவே இருக்கின்றார். இறுதியாக கண்டிப் பிரதேசத்திற்குச் சென்றதாக அறியக் கிடைத்தது. தற்போது கட்சியில் அவர் இல்லை. ஆனால் கட்சியில் ஒருசிலருடன் தொடர்பில் இருக்கிறார் என நம்புகின்றேன். அவர் அமைப்பாளராகயிருந்த பெண்கள் அமைப்பும் கலைக்கப்பட்டு விட்டது.

வேறு யாரெல்லாம் இப்போது முன்னிலை சோசலிசக் கட்சியிலிருந்து விலகியுள்ளார்கள்?

உண்மையில் முன்னிலை சோசலிசக் கட்சியில் முழுநேரச் செயற்பாட்டாளராக இணைந்து கொண்ட இறுதியான நபர் நானே ஆவேன். கட்சி ஆரம்பித்த பின் எவரும் முழுநேரப் பணியாளராக இணைந்து கொள்ளவில்லை. ஆனால் நிறைய முழுநேரப் பணியாளர்கள் கட்சியிலிருந்து விலகிவிட்டார்கள். முதலில் மாணவர் அணியின் பொறுப்புகளிலிருந்த இருவர் வெளியேறினார்கள். அவர்கள் இனப்பிரச்சினை விடயத்தில் கட்சி எடுத்த நிலைப்பாடு தொடர்பாகக் கடும் அதிருப்தியுடனும் ஏமாற்றத்துடனும் வெளியேறினாரகள். அதன்பின்பு ஒன்பது மத்திய குழு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறி தனியாகச் செயற்பட ஆரம்பித்தனர். இந்த ஒன்பது பேர்களின் வெளியேற்றத்தோடு கிட்டத்தட்ட நூறு உறுப்பினர்கள் வரையில் கட்சிப் பணிகள் செய்வதை நிறுத்தியிருந்தார்கள். ஜே.வி.பியின் மத்திய மாகாணசபை உறுப்பினராகயிருந்த பூமிநாதனின் தலைமையில் தமிழ் உறுப்பினர்கள் சிலர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து கொண்டார்கள்.

தற்போது மத்திய குழுவிலிருந்து வருண ராஜபக்ச நீக்கப்பட்டுள்ளார். திமுது ஆட்டிகலவும் நீக்கப்பட்டுள்ளார். ஜமிந்த சிறிவர்தன விலகியுள்ளார். மீனவர் அணியின் அமைப்பாளராகயிருந்த பிரசன்ன அமரசேகரவும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் முழுநேர உறுப்பினர்கள் பலர் விலகியுள்ளனர். சரியான எண்ணிக்கை தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு, கட்சியில் யார் இருக்கின்றார்கள் யார் இல்லை என்றே தெரியாத குழப்பம் நிலவுமளவிற்கு பெரும் எண்ணிக்கையானோர் கட்சியை விட்டு விலகியிருந்தார்கள். கட்சியுடன் தொடர்பில் இருந்தவர்களில் பலர் தொடர்புகளை நிறுத்தி விட்டார்கள். மேலும் பலர் வெளியேறினாலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் கட்சியில் செயற்படுகின்றார்கள். பெரும்பாலான இளைஞர்கள் அதிருப்தியுடனேயே கட்சியில் நீடிக்கிறார்கள்.

உண்மையிலேயே முன்னிலை சோசலிசக் கட்சி சிறுபான்மை இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்கிறதா?

இல்லை! எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினையை வெறும் நிர்வாகப் பிரச்சினையாகவே அவர்கள் பார்க்கின்றனர். தமிழ் மக்களின் போராட்டங்கள் அனைத்தையும் இனவாதப் போராட்டமாகவே காண்கின்றார்கள். முதலாளித்துவம் இனங்களிற்கு இடையிலான சுவர்களை உடைத்து இலங்கைத் தேசியத்தை ஏற்படுத்தும், இனங்கள் தமக்குள் ஒன்று கலக்கும் என்பதே முன்னிலை சோசலிசக் கட்சியின் அடிப்படைக் கொள்கை. அந்த வகையில் தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதை இவர்கள் உள்ளூர விரும்புகின்றார்கள். இவர்கள் ஜே.வி.பியிலிருந்த காலத்திலிருந்தே சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கான காரணம் இனவாதமேயாகும். இப்போது அதை மூடிமறைத்து வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள். இலங்கைத் தேசியத்தை உருவாக்குவதில் முதலாளித்துவம் இன்னும் வெற்றி பெறவில்லையாயினும் இனங்களுக்கிடையிலான சுவர்களை முதலாளித்துவம் உடைத்து விட்டது, ஆகவே தனித்துவமான தேசியங்கள் எதுவும் இங்கில்லை, தேசியப் பிரசைகளே இருக்கின்றனர், இந்த நிலையில் சுயநிர்ணய உரிமை பிரயோகிக்க கூடியதல்ல என்பதே இவர்களின் வாதம். சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்காகதேசிய பிரசைகளைகண்டுபிடித்திருக்கிறார்கள். இதனைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரும் அப்படியே ஏற்றுக்கொண்டு நியாயப்படுத்திக்கொண்டிருப்பது கவலைக்குரியதாகும்.

மலையக மக்கள் விரோதம் என்பது ஜே.வி.பியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. இதிலிருந்து முன்னிலை சோசலிசக் கட்சி வேறுபடுவதாக நினைக்கிறீர்களா?

இது முக்கியமானதும் பலர் கவனிக்கத் தவறியதுமான விடயமாகும். ஜே.வி.பி. மலையக மக்களை இந்திய விஸ்தரிப்புவாதத்தின் ஒருபகுதியாகவும் அவர்கள் விரும்பினால் இங்கு இருக்கலாம், அல்லது இந்தியா செல்லலாம் என்ற மாற்றான் மனப்பான்மையுடனுமே நோக்கினார்கள். மலையக மக்களை போராட்டத்தின் பிரதான சக்திகளாக ஜே.வி.பி. கருதவில்லை. இன்றும் அந்த நிலையில் பெரிதாக மாற்றம் இல்லை. மேலும் தமிழ் மக்கள் மத்தியிலான அரசியல் செயற்பாடு என்பது யாழ்ப்பாணத்தில் செயற்படுவது மட்டுமே என்றே அவர்கள் எண்ணுகிறார்கள். இது தொடர்பான விவாதங்களின்போது அரைகுறை மனதுகளுடன் பிழைகளை ஒப்புக்கு ஏற்றுக்கொள்வார்கள்.

ஜே.வி.பி. யுத்தகாலத்தில், வடக்குகிழக்கு மக்களுக்கு தீர்வை வழங்கினால் வடக்குகிழக்கிற்கு வெளியே வாழும் மக்கள் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். புலிகள் இனவாதத்தை முன்னெடுத்து தமிழ் மக்களைத் தம்மிடமிருந்து பிரித்து வைத்ததாகவும், தமிழ் மக்களுடன் ஜே.வி.பி.அரசியல் செய்வதற்கு புலிகளே தடையாக இருந்ததாகவும் இவர்கள் கூறிவந்திருக்கிறார்கள்.

ஆனால் வடக்குகிழக்கிற்கு வெளியே இருந்த தமிழர்களிடையே கூட ஜே.வி.பி. செயலாற்றவில்லை. யாழ்ப்பாணத்தை விடவும் அதிகமான தமிழர்கள் கொழும்பில் வசிப்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம், மலையக மக்கள் மத்தியில் செயலாற்றவும் ஜே.வி.பி. பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

இலங்கையின் இன்றைய அரசியல் சூழலை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

யுத்தத்தின் வெற்றி தோல்விகளே ஆட்சி மாற்றத்தை தீர்மானித்தன. யுத்தம் முடிந்த பின்னால் மகிந்த ராஜபக்சவே அதன் நிரந்தரப் பலன் பெறும் நபராகிவிட்டார். இலங்கையின் பிரதான எதிர்க்கட்சிகளுக்கு இடையில் எந்தவித கொள்கை வேறுபாடுகளுமில்லை. மகிந்த தேசியவாதத்தை வரிந்து கட்டிக் கொண்டதோடு மக்கள் மத்தியில் எளிமையான தலைவராகத் தன்னை இருத்திக்கொண்டுள்ளார். மகிந்தவின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகும். இது சர்வாதிகார ஆட்சியல்ல. நெருக்கடிகளை சமாளிக்க நடத்தப்படும் ஆட்சியே இதுவாகும்.

இன்றைய நிலைமையில் மகிந்தவை வீழ்த்துவதற்கு, மகிந்தவை விட இனவாதம் பேசக் கூடிய, முதலாளித்துவ தாராளப் பொருளாதாரத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தக் கூடிய தலைமைத்துவத்தைத் தேடுகின்றார்கள். இதன் பெறுபேறாக சஜித், சரத் பொன்சேகா போன்றவர்கள் முன்னிலைப் படுத்தப்படுகிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் நிலைமை சீராகப் போவதில்லை. தமிழ் மக்களின் நிலைமையிலும் மாற்றம் ஏற்படப் போவதில்லை. இன்றைய சூழ்நிலையில் குறைந்தபட்ச சனநாயக கோரிக்கைகளைத் தன்னும் வென்றெடுக்க கூடிய ஓர் அரசியல் இயக்கம் நமக்கு அவசியமாகயிருக்கிறது.

சிங்கள மக்களிடமிருந்து அரசுக்கு எதிரான ஓர் இடது அரசியல் இயக்கம் பலமுடன் தோன்ற வாய்ப்புகளுள்ளதா?

வாய்ப்புகள் இல்லையென்று மறுப்பதற்குக் காரணங்கள் இல்லை. வர்க்க ஒடுக்குமுறை இருக்கும்வரை வாய்ப்புகளிற்கான கதவுகள் திறந்தே உள்ளன. ஆனால் தற்போதைய ஜே.வி.பியினாலோ அல்லது முன்னிலை சோசலிசக் கட்சியினாலோ வலுவான இடதுசாரி அரசியல் இயக்கத்தை தோற்றுவிக்க முடியாது. இவை உண்மையில் சிறுமுதலாளித்துவ சிந்தனை கொண்ட கட்சிகளாகும். இந்தக் கட்சிகளால் ஒருபோதும் புரட்சியை நடத்த முடியாது. ஒருவேளை இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினால் சாதாரண மக்களால் நாட்டில் வாழ முடியாத நிலையே ஏற்படும். இவை மையப்படுத்தப்பட்ட அல்லது ஒன்று குவிக்கப்பட்டசனநாயகத்தைகொண்ட கட்சிகளாகும். இங்கு தலைமை வெங்காயத்தை வெள்ளை பூடு எனக் கூறினால் அனைவரும் ஏற்றுகொண்டேயாக வேண்டும். விக்ரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜெயசூர்யா, தீப்திகுமார போன்றவர்கள் தலைமையிலிருக்கும் கட்சிகளின் நிலையும் இதுதான்.

உண்மையில் இடதுசாரிகள் மக்களுக்கு எத்தகைய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அது பயன் அளிப்பதில்லை. சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் மக்கள் எதிர்கொண்டாலும் அவற்றை எதிர்க்க மக்கள் முன்வருவதில்லை. இது உலகளாவிய பிரச்சினையாகும். சுரண்டலை மக்கள் விரும்பி ஏற்கின்றார்கள். அப்படியாயின் சுரண்டலிற்கு ஆளாவதால் மக்களுக்கு இன்னுமொரு விடயம் கிடைக்கின்றது. அது குறித்த தரவேற்றங்களையும் நிலைமை இவ்வாறு நிலைத்திருப்பதற்கான முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தற்போதைய பண்புகளையும் சரியாக விளங்கிக் கொண்டு அரசியலை முன்னெடுக்கும் போது பலமான இடது இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவது சாத்தியமாகும்.

அத்தகைய முயற்சிகள் ஆரோக்கியமான முறையில் நடந்துவருகின்றன. இளைஞர்கள் பலர் துடிப்பாக இயங்கி வருகின்றார்கள். சரியான அரசியல் தலைமைத்துவம் உருவாகி இடதுசாரிய தார்மீக நெறிமுறைகளைக் கையாளும்போது பலமான இடது இயக்கம் சாத்தியமாகும். அது நீங்கள் கேட்டது போல சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழும் இடது இயக்கமாகவே அமையும்.

காரணம், இங்கு முதன்மைப் பிரச்சினையாக சிங்கள இனவாதமே இருப்பதாகும். சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக சிங்கள மக்கள் மத்தியில் துணிவுடன் பிரச்சாரம் செய்து பௌத்த பேரினவாதத்தை எதிர்க்காமல், சிங்கள மக்கள் இயல்பாகவே கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையைப் போக்காமல் இனவாத ஒழிப்பு சாத்தியமாகாது. பௌத்த சிங்களப் பேரினவாதத்தை எதிர்ப்பவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் பணியாற்றுவதில்லை. அவர்கள் ஊடகங்களிலேயே செயற்படுகின்றார்கள். சிங்களச் சமூகத்தில் ஆழமாக வேர்விட்டிருக்கும் இனவாதம் சிறுபான்மை இனத்தவர்களின் ஆதரவைப் பெற்ற இடதுசாரி இயக்கத்திற்கு வாய்ப்புகளைத் தற்காலத்தில் வழங்கிவிடாது. எனவே சிங்கள மக்களின் பரந்துபட்ட ஆதரவைப் பெறும் இடதுசாரி இயக்கத்தை உருவாக்கும் திறன் தற்போது யாருக்குமில்லை.

இதற்கு வெளியே தோன்றும் இடது இயக்கம் சிங்களத் தேசியவாதத்தைக் கொண்ட இடது இயக்கமாகவே அமையும். அந்த இயக்கத்தால் தமிழர்களுக்கு விடுதலைக்கு பதிலாக ஒடுக்குமுறையே பரிசாக வழங்கப்படும். எனவே தற்போது தமிழ் மக்கள் இல்லாத, அரசிற்கு எதிரான சிங்களத் தேசியவாத இடதுசாரி இயக்கமே சாத்தியமாகயிருக்கிறது என்பதுதான் துயரமான எதிர்வுகூறல்.

இடதுசாரிகள் ஆபத்துகளையும் கல்லெறிகளையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் ஒன்றிணைந்து, பௌத்த சிங்களப் பேரினவாத அரசியலை எதிர்க்க முன்வருவார்களாயின் மார்க்ஸியம் பாதி இனவாதம் மீதி என்ற வகையிலான இடதுசாரி இயக்கத்தினைத் தவிர்த்து உண்மையான இடதுசாரி இயக்கத்தினைக் கட்டியெழுப்ப முடியும். அதைச் செய்ய கூடியவர்கள் என எவரும் தற்போது அரசியல் அரங்கிலில்லை.

இப்போது நீங்கள்ஈரோஸ்அமைப்பில் இயங்குகின்றீர்கள். உண்மையிலேயே அதுவொரு செயலற்ற அமைப்பல்லவா?

ஆம்! ஈரோஸ் செயலற்ற அமைப்புத்தான். எண்பதுகளில் இருந்த ஈரோஸ் இன்றில்லை. அதன் பெயர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அரசு சார்பு அரசியலை முன்னெடுக்க ஈரோஸின் பெயரில் சிலர் களமிறக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இன்று பல கூறுகளாகப் பிளவுபட்டு விட்டனர். தற்போது ஈரோஸ் என்ற பெயரையும்ஈழவர் சனநாயக முன்னணியையும் தனியொருவர் தனது கட்டுபாட்டில் வைத்திருக்கிறார். ஒரு செயற்குழுவேனும் இல்லாமல் கட்சி ஒன்றை ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் அது எப்படியானது என்பதை நான் சொல்லித்தான் அறிய வேண்டும் என்பதில்லை. ஆனால், பழைய ஈரோஸின் ஆதரவாளர்கள் விவரம் தெரியாமல் ஈரோஸிற்கு ஆதரவளிக்கத் தயாராக இருந்தார்கள். அந்தக் காரணத்திற்காகத்தான் ஈரோஸ் என்ற பெயரை அரசாங்கம் பயன்படுத்த நினைத்தது.

முன்னிலை சோசலிசக் கட்சியிலிருந்து நான் விலகியதன் பின்பாக, என்னுடன் தோழமையான அரசியல் செயற்பாட்டிலிருப்பவர்களையும் ஈரோஸிற்கு ஆதரவளிப்பவர்களையும் அமைப்புமயப்படுத்தி சகல சிறுபான்மை இனங்களையும் உள்வாங்கக் கூடிய புரட்சிகர அமைப்பை உருவாக்கும் நோக்கிலேயே நான் ஈரோஸில் இணைந்தேன். ஈரோஸின் தற்போதைய செயற்பாடுகளைக் குறித்து விபரமாகக் கூறுவது சற்றுச் சிரமமானது. ஆனால் ஒரு விடயத்தைக் கூறலாம், முற்போக்குச் சிந்தனையாளர்களை அமைப்புமயப்படுத்தி விரைவில் வெகுசனச் செயற்பாடுகளை ஆரம்பிப்போம். அந்தப் பணியினை ஈரோஸின் பெயரில் செய்வதே எமது நோக்கம். தற்போது தமிழ் மக்கள் இருக்கும் மனநிலையில் இவ்வாறான அடையாளத்துடன் இயங்குவது மக்களைச் சென்றடைய எளிதான வழியாக இருக்கும். இப்படி உருவாகும் அமைப்பு பழைய ஈரோஸின் தொடர்ச்சியாகவன்றி சமகால நிலைமைகளிற்கு அவசியமான சுயவிமர்சனங்களை ஏற்றுக்கொண்ட அமைப்பாகவும் புதிய சிந்தனைகளுடனும் அமையும். வெற்றி பெற முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும். ஒருவேளை இந்த முயற்சி கைகூடாவிட்டாலும் நல்லதொரு தொடக்கத்திற்கான படிப்பினையாகவேனும் இது அமையும்.