மாலதியின் எதிர்வினை குறித்துச் சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை. ஈழப்போராட்ட வரலாறு குறித்த அவரது அறியாமையை அவரது கட்டுரை நிரூபணம் மட்டுமே செய்துள்ளது. அறியாமையுடன் இருக்க அவருக்கு உரிமையுள்ளது.
புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்களை நான் கண்டிப்பதில்லை என்று மாலதி சொல்வதெல்லாம் அவர் எனது எழுத்துகளைப் படிக்காமல் எழுத்துத் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதால் வந்த வினை. மற்றைய இயக்கங்களைக் கண்டித்து எத்தனை நூறு பக்கங்கள் எழுதியிருக்கிறேன், எத்தனை அரங்குகளில் விவாதங்களை நடத்தியிருக்கிறேன் என்றெல்லாம் பட்டியல் நான் தரப்போவதில்லை. ‘கூகுள்‘ உங்களோடிருக்கட்டும்.
புலிக் கருத்தியலை அழிக்கவேண்டும் என நான் கூறுவதை புலிகளை உடல்ரீதியாக அழிக்கவேண்டும் என நான் கூறுவதாக மாலதி கருதிக்கொள்கிறார். இந்துத்துவக் கருத்தியலை அழிக்க வேண்டுமெனச் சொன்னால் ஆர்.எஸ். எஸ். உறுப்பினர்களையெல்லாம் கொல்லவேண்டுமென்று பொருளாகாது. தலிபானியத்தை எதிர்ப்பது அமெரிக்க ஆதரவு என்றும் ஆகிவிடாது.
‘இலங்கை அரசின் மீது சர்வதேச சமூகம் சுதந்திரமான விசாரணையை மேற்கொண்டு ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டுமென்று ஷோபா சக்தி போன்றவர்கள் பேசியதில்லை ‘என்று மாலதி சொல்வதும் சரியற்றது. அதுகுறித்தெல்லாம் நிறையப் பேசிவிட்டேன். ராஜபக்ச அரசு வீழ்த்தப்பட வேண்டிய அரசு என்ற எனது உறுதியான கருத்தை பலமுறைகள் எழுதிவிட்டேன். இதில் என்ன பிரச்சினையென்றால் சர்வதேச சமூகம் ஒருபோதுமே சுதந்திரமான விசாரணையை நடத்தப்போவதில்லை என்பதுதான். வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஏதாவது அற்புதங்கள் நிகழ்ந்தால் எனக்கு மகிழ்ச்சியே.
‘தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு சர்வதேச கண்காணிப்புக் குழுவின்முன் நடத்தப்பட வேண்டுமென்று இதுவரை ஷோபாசக்தி போன்றவர்கள் பேசியதில்லை‘. என்று மாலதி சொல்வது மட்டுமே கொஞ்சம் பொருட்படுத்தி பதிலளிக்கக்கூடியது. இந்த பொதுவாக்கெடுப்பு , நாடுகடந்த அரசாங்கம் போன்ற கோமாளிக் கூத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. சிறுபான்மையினங்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அதற்கான முதற்படி 13வது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வருவதே என்பதே எனது நிலைப்பாடு. முப்பது வருட அனுபவத்தில் வந்தடைந்த நிலைப்பாடு. இல்லை தமிழீழம்தான் முடிந்த முடிவென்று மாலதி நின்றால் அதையும் புரிந்துகொள்கிறேன். தமிழீழம் கிடைத்தால் நான் என்ன வேண்டாமென்றா சொல்லப்போகிறேன். ஆனால் அது சாத்தியமில்லை என்பதுதான் எதார்த்தம். அதற்கான அரசியல் – படைத்துறை – புவியியல் தர்க்கங்கள் என்னிடமுள்ளன.
அரசியல்ரீதியாகச் சிந்திக்காமல், மனித உரிமை விழுமியங்களைப் பற்றிச் சிறிதும் அக்கறைகொள்ளாமல் வெறும் தற்காலிக உணர்வெளிச்சிகளையே ஓர் அரசியல் நிலைப்பாடாகக் கற்பிதம் செய்துகொண்டு ஓவராக வேசம் போடுபவர்களையே கண்ணீர்ப் போராளிகள் என்றேன். ‘நீங்க செய்வது சரியாயில்லையே‘ என்றால் ‘என்னை அழவிடுங்கள் ‘ அல்லது ‘அப்போது நான் சிறுபையனாக இருந்ததால் அதெல்லாம் எனக்குத் தெரியாது‘ எனக்கூறி இவர்கள் தப்பித்துக்கொள்வார்கள். இவர்களைக் குறிக்க இதைவிடக் கடுமையான வார்த்தைகள் கூட என்வசமுண்டு.
ஆணாதிக்க வன்கொடுமை கொண்ட வார்த்தைகளையும் பேச்சுக்களையும் நான் இணையத்தில் வைத்தேன் என மாலதி சொல்வதை முழுமையாக நிராகரிக்கின்றேன். இந்த விசயத்தில் நானாக எப்போதுமே எதுவும் சொன்னதில்லை. என்மீது வைக்கப்படும் அவதூறுகளிற்கு மட்டுமே பதிலளிக்கிறேன். அவதூறுகளை ஆதாரபூர்வமாக மறுக்கிறேன். அல்லது விமர்சனங்களிற்கு விளக்கமளிக்கிறேன். இதை வன்கொடுமை என்றால் எப்படி! இம்முறை இவ்வாறு என்னை விளக்கமளிக்க வைத்தது மாலதி.
அவதூறுகளை மறுப்பேயில்லாமல் தோளில் சிலுவையாகச் சுமக்க நான் இயேசுக் கிறிஸ்து அல்ல, சுயமரியாதைக்காரன் நான்!
/அரசியல்ரீதியாகச் சிந்திக்காமல், மனித உரிமை விழுமியங்களைப் பற்றிச் சிறிதும் அக்கறைகொள்ளாமல் வெறும் தற்காலிக உணர்வெளிச்சிகளையே ஓர் அரசியல் நிலைப்பாடாகக் கற்பிதம் செய்துகொண்டு ஓவராக வேசம் போடுபவர்களையே கண்ணீர்ப் போராளிகள் என்றேன். ‘நீங்க செய்வது சரியாயில்லையே‘ என்றால் ‘என்னை அழவிடுங்கள் ‘ அல்லது ‘அப்போது நான் சிறுபையனாக இருந்ததால் அதெல்லாம் எனக்குத் தெரியாது‘ எனக்கூறி இவர்கள் தப்பித்துக்கொள்வார்கள். இவர்களைக் குறிக்க இதைவிடக் கடுமையான வார்த்தைகள் கூட என்வசமுண்டு/….. மறுக்கமுடியாத உண்மை சக்தி அண்ணே….பாதி புரட்சியை தூண்டிவிடும் so called intellectuals…sigh