என்னே ஒரு வீழ்ச்சி !

கட்டுரைகள்

சென்னைப் பல்கலைக்கழகக் கருத்தரங்கு – வெள்ளை வேன் கதைகள் படக்குழுவின் இடையீடு – ஊடறு இணையம்  – குறித்த பிரச்சினைகளைப் பின்குறிப்பாகக் கொண்டு ‘கருத்தரங்க அறிக்கை’ வெளியாகியிருக்கிறது. முன்னதாக வெளியாகிய இதுகுறித்த லீனாவின் பதிவுகளையும் அரங்கிலிருந்த வேறுபலரின் பதிவுகளையும் கருத்தரங்க அறிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இவற்றிற்கிடையே பெரிய வேறுபாடுகள் இல்லை. சில விடுபடல்கள் மட்டுமே இருக்கலாம் எனத் தோன்றுகிறது. பிரச்சினையை நோக்கும் கோணங்கள் வேறாயிருக்கும்போது  இத்தகைய விடுபடல்கள் ஏற்படுவது வழமையே.

ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வுகளில் இவ்வாறு இடையீடு செய்வதும் நிகழ்வுக்குத்  தொடர்பற்ற விடயங்களைப்  பேச நேரம் கேட்பதும் தவறானவை, அனுமதிக்க முடியாதவை எனப் பெரும்பான்மைக் கருத்துண்டு. அநேகமாக எல்லா நிறுவனங்களும் கறாராகக் கடைப்பிடிக்கும் நிலைப்பாடு இது. அதேபோன்று பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பாதிப்பு இழைத்தவரை நோக்கிக் கேள்வி எழுப்பும் உரிமையும் இடையீடு செய்யும் உரிமையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் இருப்பதாகச் சிறுபான்மைக் கருத்தொன்றும் உண்டு. எனது நிலைப்பாடு இந்தச் சிறுபான்மைக் கருத்தையொட்டியதே. நான் கலந்துகொண்ட பல அரங்குகளில் இவ்வாறு இடையீடுகளைச் செய்துள்ளேன்.  நாங்கள் நடத்திய அரங்குகளிலும் இத்தகைய இடையீடுகளைப் பொறுப்புடன் அணுகியிருக்கிறோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வன்முறைகள் நிகழ அனுமதித்ததில்லை. சில மாதங்களிற்கு முன்பு பாரிஸில் நடந்த ‘இலங்கையர் ஒருமைப்பாடு மையத்தின்’ கூட்டத்தில் இடையீடு செய்த, என்னைக் குறித்து தொடர் அவதூறுகளைப் பிரசுரிக்கும் ‘சலசலப்பு’ இணையத்தின் ஆசிரியர் மீது  வன்முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது அதைக் கடுமையாகக் கண்டித்து நான் எழுதியது தோழர்களிற்கு ஞாபகமிருக்கலாம்.

கருத்தரங்க அறிக்கை, ‘இவளை தூக்கி வெளியில போடுங்க’ என்ற துறைத்தலைவரின் உத்தரவையோ, மாணவர்கள் கும்பலாக உடல் வன்முறையைப் பிரயோகித்து வெள்ளை வேன் படக் குழுவினரை அரங்கிலிருந்து மட்டுமல்லாமல் பல்கலைக்கழக வளாகத்திலிருந்தே வெளியேற்றியதையோ, புகைப்படம் எடுத்த ஒருவர் தாக்கப்பட்டதையோ,  புகைப்படக் கருவி பறித்தெடுக்கப்பட்டு படங்கள் அழிக்கப்பட்டதையோ மறுக்காதது இங்கு வரவேற்கப்பட வேண்டிய விசயம். ஆனால் இந்தப் பாரதூரமான விசயத்தை ‘நிலைமை கைமீறியது’, ‘வருந்தத்தக்க முறையில் எங்களை செயல்படவைத்த’ போன்ற சொற்களால் அவர்கள் கடந்து செல்ல நினைப்பது மனதை நெருடும் விசயம். எந்தச் சந்தர்ப்பத்திலும் உடல்சார்ந்த வன்முறையைப் பிரயோக்கிப்பதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்பதை மட்டும் சொல்லி வைக்கிறேன்.

கருத்தரங்க அறிக்கையின் பின்வரும் வரிகள் என்னை வாயடைக்கவே வைத்துவிட்டன. /இந்த இடையீட்டுக்கு காரணமான ‘வெள்ளை வான் கதைகள்’ ஆவணப்படம் பற்றியும் ஆவணப்படத்துக்குரிய அறம் குறித்தும் விவாதிக்க அதற்கென களம் அமைத்து விவாதத்தை வேறு தளங்களில் முன்னெடுப்பதுதான் முறையாகும் என்று ஊடறு  றஞ்சியும் ஆழியாளும் கருதினர். / அடியடா புறப்படலையில எண்டானாம்.

எவ்வளவு சாமர்த்தியமாகப் பிரச்சினையைத் திரிக்கிறார்கள்! வெள்ளை வேன்கள் கதைகள் குறித்தும் ஆவணப்படத்திற்குரிய அறம் குறித்தும் ஊடறு ஆசிரியர்களைப் பேச வேண்டாம் என யார் சொன்னார்கள். இந்தச் சர்ச்சை உருவாகிய இந்த மூன்று மாதங்களில் அவர்கள் இது குறித்தெல்லாம் பேசியிருக்கலாமே. ஊடறு இணையம் மாதத்திற்கு மூன்றோ நான்கோ பதிவுள்தானே போடுகிறது, அய்ந்தாவதாக ஆவணப்பட அறம் குறித்தும் எழுதியிருக்கலாமே. அதை அவதூறென யாரும் சொல்லப்போவதில்லையே. அதுவொரு ஆரோக்கியமான உரையாடலை முன்னெடுத்திருக்குமே.

ஆனால் ஊடறு செய்ததென்ன? அது பொய்யான பெயரில் ஒரு அவதூறு அறிக்கையைப் பிரசுரித்தது. அந்த அறிக்கையை புகழ்பெற்ற ஓர் அவதூறு இணையத்திலிருந்து பிரதி செய்திருந்தது. அந்த அறிக்கையை எழுதியவர் ‘பெண்கள் செயற்பாட்டு வலைமன்ற’த்தைச் சேர்ந்தவர் என்று எழுதி ,பெண்கள் செயற்பாட்டு வலைமன்றத்தையும் இந்த அவதூறுக்குள் இழுத்துவிட்டது. “படத்திற்கு பேட்டி கொடுத்த பெண்போராளிகள்  தமது பேட்டியை நீக்க சொல்லி கேட்டிருக்கிறார்கள்” என்றெல்லாம்  ஆவணப்படம் குறித்த பொய்ச் செய்திகளை அந்த அறிக்கையில் வெளியிட்டது.  இவையெல்லாம் அவதூறுகளே  என ஆதாரங்களுடன் நிரூபித்த பின்னும் இன்றுவரை திருட்டு மவுனம் சாதிக்கிறது. இதுவா ஆவணப்படத்திற்குரிய அறம் குறித்துப் பேசும் வழிமுறை? வெட்கமாயில்லை!

பிரச்சினை ‘ஊடறு’ பேசவிருக்கும் ஆவணப்படத்திற்குரிய அறம் குறித்ததல்ல! பிரச்சினை அது ஏற்கனவே எழுதிய  நூறு சதவீத அவதூறுகள் குறித்தது. அதற்குப் பதில் சொல்லிவிட்டு ஆவணப்படத்திற்குரிய அறம் குறித்து ஊடறு ஆசிரியர்கள் பேசட்டும். செய்த அவதூறுக்குப் பதில் என்னவென்றால் ‘ஆவணப்படத்திற்குரிய அறம் ‘என்றெல்லாம் முணுமுணுப்பது வெட்கக்கேடானது.

ஊடறு ஆசிரியர் ரஞ்சி அவர்களை நான் சில கருத்தரங்குகளில் கண்டிருக்கிறேன். உரையாற்றும்போதோ அல்லது விவாதங்களில் கலந்துகொள்ளும்போதோ ஒரு சிங்கம் போல கம்பீரமாகவும் ஆணித்தரமாகவும் அவர் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படியான ஓர்மமுள்ளவர் தனக்கு முன்னால் தனது சக படைப்பாளியொருவர் தன்னை நோக்கிக் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கும் அட்டையைப் பிடித்துக்கொண்டு தரையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துக்கொண்டு மவுனமாக இருக்கிறார் என்றால், அந்த அரங்கில் கூட்டு வன்முறை நிகழ்த்தப்பட்டபோது  வாயைப் பொத்திக்கொண்டு இருக்கிறார் என்றால் என்னே ஒரு வீழ்ச்சி !

ஊரில் ஒரு பழமொழியுண்டு: உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும்.

1 thought on “என்னே ஒரு வீழ்ச்சி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *