காணாமற்போனவர்

கதைகள்
சிறுகதை: ஷோபாசக்தி

னக்கு எதிரே உட்கார்ந்திருந்த அந்த மனிதர், நான் தேடிக்கொண்டிருந்த பாவெல் தோழரைக் கொல்வதற்குத் தானே உத்தரவிட்டதாகச் சொல்லிவிட்டு ஒரு கோணல் சிரிப்புடன், பாதி நரைத்துப்போன அவரது மீசையில் படிந்திருந்த ‘பியர்’ நுரையை அழுத்தித் துடைத்துக்கொண்டார். நான் அவரையே வெறித்துப் பார்த்தவாறு இருந்தேன். இந்தக் கதை இன்னும் அய்ந்து நிமிடங்களில் முடியவிருக்கிறது.

இந்தக் கதை இப்படித்தான் ஆரம்பித்தது. சென்ற கோடை காலத்தில் எனது அப்பா சென்னையில் இறந்துபோனார். அம்மா வேளாங்கண்ணி கோயிலுக்குப் போய்விட்டு மறுநாள் திரும்பி வந்தபோது, கதவு உட்புறமாகத் தாழிடப்பட்டிருந்த வீட்டுக்குள் அப்பா தரையில் விழுந்து இறந்து கிடந்தார். காவற்துறை வந்து பூட்டை உடைக்க வேண்டியிருந்தது. அம்மா தனித்துப் போனார். அய்ந்து பிள்ளைகளைப் பெற்றிருந்தும் அப்பாவை இடுகாட்டில் அடக்கம் செய்தபோது அம்மாவின் அருகில் நாங்கள் யாருமிருக்கவில்லை.

அப்பாவின் அடக்கம் முடிந்த நான்காவது நாள் நான் பாரிஸிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டேன். அந்த அதிகாலை நேரத்திலும் என்னை வழியனுப்ப சுகன், தேவதாசன், அருந்ததி, சத்தியன் ஆகியோர் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களோடு நான் பேசிக்கொண்டிருந்தபோது ஓட்டமும் நடையுமாகத் தோழர் சவரியான்  வந்து சேர்ந்தார். என்னைத் தழுவிய சவரியான் எனது கையை எடுத்துத் தனது மெலிந்த சிறிய கைகளில் பொத்திக்கொண்டார்.

செத்த வீட்டுக்குப் போவதற்கு விசா கொடுக்கக்கூட இந்தியத் தூதுவரகம் சுணக்கம் காட்டுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது தோழர் சவரியான் என்னைச் சற்றுத் தனியாக வருமாறு அழைத்தார். நண்பர்களை விட்டுவிட்டு அவருடன் நான் தனியாகப் பேசப்போவது குறித்து நண்பர்கள் கோபப்படமாட்டார்கள். ஏனெனில் சவரியான் தேவைக்கு அதிகமாக இரகசியங்களைக் காப்பாற்றுபவர் என்பதையும் எப்போதும் தீவிரமான மனநிலையிலேயே இருப்பவர் என்பதையும் நண்பர்கள் அறிந்தேயிருந்தார்கள். நானும் சவரியானும் விமான நிலையக் கோப்பிக் கடையில் ஒதுங்கினோம்.

குரலைத் தாழ்த்தியபடியே  ” உங்களுக்குச் செலவுக்குப் பணம் ஏதாவது தேவைப்படுகிறதா” எனச் சவரியான் கேட்டார்.

“இல்லைத் தோழர், எனது சகோதரர்கள் போதியளவு பணம் தந்திருக்கிறார்கள்” என்றேன்.

தலையை ஆட்டிக்கொண்ட சவரியான் குரலை மேலும் தாழ்த்திக்கொண்டு “நீங்கள் எனக்கொரு உதவி செய்ய வேண்டும்” என்றார். நான் நம்பிக்கை தொனிக்கத் தலையசைத்தேன்.

“நீங்கள் எப்போதாவது தோழர் பாவெல் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என என்னிடம் கேட்டார் சவரியான்.

“ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன். பாவெல் விலாசவ், ‘தாய்’ நாவலின் நாயகன் பாத்திரமது” என்றேன்.

சவரியான் மிகத் தீவிரமான பார்வையொன்றை எனது கண்களிற்குள் செலுத்திக்கொண்டே “தோழர் பாவெலின் மனைவியின் பெயர் பால்ராணி” என்றார்.

சென்னைக்கான விமானப் பறப்பு பதினொரு மணிநேரமாக இருந்தது. நான்  பால்ராணி  என்ற பெயரை மனதில் அழியாமல் திரும்பத் திரும்பப் பதிய வைத்துக்கொண்டேன். இனி எக்காலத்திலும் அந்தப் பெயர் எனது மனதிலிருந்து அகலாது. தோழர் சவரியான், பால்ராணி குறித்து ஒன்றிரண்டு குறிப்புகளைத்தான் சொல்லியிருந்தார். எனினும் அந்தக் குறிப்புகளை வைத்து பால்ராணி குறித்த சித்திரத்தை எனக்குள் நான் உருவாக்கிக்கொண்டேயிருந்தேன். இரக்கத்திற்குரிய அந்தப் பெண்ணைச் சந்திக்கும்போது நான் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென மனது ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தது.

சவரியான் சரியாக முப்பத்தைந்து வருடங்களிற்கு முன்பு தனது இருபதாவது வயதில் பாவெலைச் சந்தித்திருக்கிறார். பாவெலுக்கு அப்போது இருபத்தைந்து வயதுகள் இருக்குமாம். பொலிஸாரால் தேடப்பட்டுக்கொண்டிருந்த சவரியான் வன்னிக் கிராமமொன்றில் தலைமறைவாக இருந்தபோது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பாவெலின் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. சவரியான் தமிழ் ஆயுத இயக்கமொன்றைச் சேர்ந்தவர். பாவெல் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்திருந்த மிகச் சிறிய ட்ரொட்ஸ்கிய கட்சியொன்றில் இயங்கிவந்தவர். சவரியானின் தலைமறைவுக் காலம் முழுவதும் பாவெல் சவுரியானுக்கு உதவி செய்துகொண்டிருந்திருக்கிறார். கடைசியில் சவுரியான் கைது செய்யப்பட்டபோது பொலிசாரின் சித்திரவதை பொறுக்க முடியாமல் தனக்கு உதவி செய்தவர் எனப் பாவெலைப் போலிஸாருக்கு சவரியான் காட்டிக்கொடுத்திருக்கிறார். பொலிஸார் பாவெலையும் கைது செய்தனர். பாவெல் ஒரு வருடம் சிறையிலிருந்திருக்கிறார். அய்ந்து வருடங்களிற்குப் பின்பு மட்டக்களப்புச் சிறையுடைப்பில் தப்பித்த சவரியான் இந்தியாவிற்குப் போய் அப்படியே பிரான்ஸ் வந்துவிட்டார். பாவெலைக் காட்டிக்கொடுத்த குற்றவுணர்வு சவிரியானிடம் இருந்து கொண்டேயிருக்கிறது. அவரது மரணம்வரை அந்தக் குற்றவுணர்வு அவரைத் தொடரும் என்றே நினைக்கிறேன். இந்தக் கதையை விமான நிலையத்தில் வைத்து சவரியான் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கையில் அவரது கண்களில் இகழ்ச்சி படர்ந்திருப்பதை நான் பார்த்தேன். அது சுய இகழ்ச்சி.

சவரியான் பிரான்ஸ் வந்த பின்பும் பாவெலுடன் அவருக்குக் கடிதத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. ஒன்றிரண்டு முறைகள் சிறிது பணமும் அனுப்பி வைத்திருக்கிறார். பதிலுக்கு பாவெல் ‘பாட்டாளி குரல்’ பத்திரிகையை சவரியானுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்தப் பத்திரிகையின் பழைய பிரதிகள் சிலவற்றை அண்மையில் சவரியானின் வீட்டுப் புத்தக அலுமாரியில் நான் பார்த்திருக்கிறேன். படிக்கவே முடியாத ஒரு கொடுந்தமிழில் அப்பத்திரிகை மோசமான வடிவமைப்பில், மிக மோசமான தாளில் நான்கு பக்கங்களில் அச்சிடப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் பாவெலின் கதையை சவரியான் என்னிடம் சொன்னதில்லை.

எண்பத்தாறு காலப்பகுதியில் பாவெலின் கட்சி தமிழ்ப் பகுதிகளில் தடை செய்யப்பட்டுவிட்டது. எண்பத்தெட்டில் சிங்களப் பகுதிகளிலும் அந்தக் கட்சி தடை செய்யப்பட அந்தக் கட்சி சிதைந்துபோனது. என்றாலும் கட்சியின் மிகச்சில உறுப்பினர்களுக்குள் தொடர்புகள் இருந்திருக்கின்றன. அவர்கள் சில இரகசியத் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டிருந்திருக்கிறார்கள்.

பிரான்ஸுக்கு வந்து இருபது வருடங்கள் கழித்து, 2004-ல் ஒரு மாதகால விடுமுறையில் சவரியான் இலங்கைக்குப் போனார். பாவெலைச் சந்திப்பது என்பது அவரது பயண நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாக இருந்தது.

அது சமாதான காலமாக இருந்ததால் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குச் செல்வதில் பெரிய பிரச்சினைகள் இருக்கவில்லை. சவரியான், பாவெலின் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது பொழுது பட்டுவிட்டது. பாவெலின் பழைய சிறிய வீடு வறுமையைப் போர்த்திருந்தது. பாவெலினதும் அவரது மனைவி பால்ராணியினதும் கண்களில் பஞ்சம் கவிந்திருந்தது. கையோடு எடுத்துச் சென்ற பொருட்களை பாவெல் முன் சவரியான் பரப்பி வைத்தபோது பாவெல் ஒவ்வொரு பொருளாக எடுத்து அது என்னவென்று கேட்டுக் கேட்டு எடுத்துப் பால்ராணியிடம் கொடுத்தார். அவர்களிற்குக் குழந்தைகள் இல்லை. அய்ம்பதாயிரம் ரூபாய் கட்டொன்றை எடுத்து பாவெலின் கைகளில் சவரியான் வைத்தார். பாவெலின் கைகளில் தயக்கத்தை உணர்ந்த சவரியான் பால்ராணியிடம் அந்தப் பணக்கட்டைக் கொடுத்தார்.

இரவு உணவிற்குப் பிறகு பாவெலிடம் பேசிக்கொண்டிருந்தபோது பாவெலுக்கு இன்னமும் அந்த இடதுசாரிக் குழுவுடன் தொடர்பிருக்கிறதா எனச் சவரியான் கேட்டார். பாவெல் ஒன்றும் பேசாமல் புன்னகைத்தார். பாவெல் தன்னிடம் மனம்விட்டுப் பேசத் தயங்குவது போல சவரியானுக்குத் தோன்றியது. இனம்புரியாத சோர்வுடன் சவரியான் நார்க் கட்டிலில் படுத்துக்கொண்டார்.

காலையில் முற்றத்திலிருந்த நார்க் கட்டிலில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். சில வார்த்தைகளை பாவெலிடம் சொல்ல வேண்டுமென சவரியான் நினைத்தார். பாவெல் புன்னகையுடன் சவரியான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

‘இடதுசாரி அரசியல், வர்க்க அய்க்கியம் எல்லாம் இந்தக் காலத்திற்குச் சரிவராது’ என்று சவரியான் சொன்ன போது, பாவெல் வாயிலிருந்த புன்னகை மாறாமலேயே “பிரான்ஸில் முதலாளிகளிடம் வாங்கித் தின்ற உங்களது விசுவாசம் உங்களை இப்படிப் பேச வைக்கிறது” என்றார். சவரியான் திடுக்கிட்டுப் போனார். என்றாலும் சமாளித்துக்கொண்டு “இன்றைய முக்கிய பிரச்சினை இனப் பிரச்சினைதான்” என்றார். பாவெலின் வாயிலிருந்து ‘க்ளுக்’ என்ற சிரிப்புச் சத்தம் வந்தது. பிறகு சவரியானை ஓர் அற்ப பிராணிபோல பார்த்துவிட்டுச் சொன்னார்: “இருபத்தைந்து வருடங்களாக நீங்கள் மட்டுமல்ல, நானும் மாறவில்லை.”

சவரியான் ஏனோ அப்போது அவமானமாக உணர்ந்தார். பாவெல் இருபத்தைந்து வருடங்களாக மாறாமலேயிருப்பது பாவெலின் அரசியல் முட்டாள்தனம் எனச் சவரியான் சொன்னார். பாவெல் வெறும் பாசாங்கு அரசியல் பேசிக்கொண்டிருப்பதாகவே அவருக்குத் தோன்றியது. சவரியான் இடைநிறுத்தாது கடகடவெனப் பேசிக்கொண்டேயிருந்தார். பேச்சின் போக்கில், புலிகளின் ‘நந்தவனம்’ அலுவலகத்துக்குச் சென்று தான் மனமுவந்து பெரும்தொகைப் பணத்தைக் கொடுத்ததைப் பற்றியும் சொன்னார்.

பாவெல் சடுதியில் எழுந்து நின்று “இதைச் சொல்லவா பிரான்ஸிலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள்?” எனக் கேட்டுவிட்டு விறுவிறுவென வீட்டுக்குள் போனார். அவர் திரும்பி வரும்போது அவரது கைகளில் சவரியான் கொடுத்த வெளிநாட்டுப் பொருட்களும் அந்தப் பணக்கட்டும் இருந்தன. அவற்றை அப்படியே சவரியான் அமர்ந்திருந்த நார்க் கட்டிலில் ‘பொத்’தெனப் போட்டார். சவரியான் எழுந்து நின்றார்.

“தயவு செய்து இவற்றை எடுத்துக்கொண்டு போய்விடுங்கள்” பாவெல் நிலத்தைப் பார்த்துக்கொண்டு சொன்னார்.

சவரியான் தனது சிறிய பயணப் பையை எடுத்துக்கொண்டார். “காசை எடுங்கள்” என்று பாவெல் உறுமினார். சவரியான் திடீரென அச்சத்தை உணர்ந்தார். அது அச்சமல்ல, குற்றவுணர்வே என்று அடுத்த நிமிடமே சவரியான் நிதானித்துக்கொண்டார். மறுபேச்சில்லாமல் சவரியான் பணக்கட்டை எடுத்துக்கொண்டு படலையை நோக்கி நடந்தார். படலையைச் சாத்தும்போது வீட்டு வாசற்படியைப் பார்த்தார். அங்கே பாவெலைக் காணவில்லை. பால்ராணி நின்றிருந்தார்.

அந்தக் கிறவல் வீதியால் தலையைக் குனிந்தவாறே நடந்து பிரதான வீதிக்கு சவரியான் வந்தபோது அங்கே ஏற்கனவே பால்ராணி நின்றிருப்பதைக் கண்டார். அவர் ஏதோ குறுக்குப் பாதையால் அங்கே வந்திருக்க வேண்டும். இவரைக் கண்டதும் பால்ராணி அருகே வந்தார். இவர் ஒரு சொல்லும் பேசவில்லை. பையிலிருந்து பணக்கட்டை எடுத்துப் பால்ராணியிடம் கொடுத்தார். பால்ராணி அதை வாங்கிக் கொண்டு எதுவும் பேசாமல் வந்த வழியிலேயே திரும்பவும் சென்று மறைந்தார்.

சவரியான் பிரான்ஸ் திரும்பியதுமே ஒரு நீண்ட மன்னிப்புக் கடிதத்தை பாவெலுக்கு அனுப்பினார். ஒருமாதம் கழித்து வவுனியாவில் ‘போஸ்ட்’ செய்யப்பட்டிருந்த ஒரு தபால் சவரியானுக்கு வந்தது. அதற்குள் மட்டமான தாளில் அச்சிடப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரமிருந்தது. அந்தப் பிரசுரம் கொடுந்தமிழில் எழுதப்பட்டிருந்தது. இது நடந்து ஒரு வருடம் கழித்து தோழர் பாவெல் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்டுக் காணாமற்போனார்.

பால்ராணியால் தனது கணவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. யுத்தம் மறுபடியும் உக்கிரமாகத் தொடங்கியபோது பால்ராணி இந்தியாவுக்கு அகதியாகச் சென்றார். அங்கிருந்து அவர் சவரியானுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் தோழர் பாவெல் காணாமற்போன செய்தியிருந்தது. அதன்பின்பு பால்ராணியிடமிருந்து கடிதம் எதுவும் சவரியானுக்கு வரவில்லை. பால்ராணி கும்மிடிப்பூண்டி அகதி முகாமிலே இருந்தார் என்ற செய்தி மட்டுமே சவரியானிடம் எஞ்சியிருந்தது.

விமானத்திற்கு நேரமாகிக்கொண்டிருந்தது. கும்மிடிப்பூண்டி அகதி முகாமிற்குச் சென்று பால்ராணியைச் சந்தித்து, ‘தோழர் பாவெல் குறித்த செய்திகள் எதுவும் கிடைத்ததா’ என்று விசாரித்து வருமாறு சவரியான் என்னிடம் கேட்டுக்கொண்டார். ‘அந்தப் பெண் அங்கேதான் இன்னுமிருப்பார் என்பது சந்தேகமே’ என எனது வாய்வரை வந்த வார்த்தைகளை நான் சடுதியில் விழுங்கிக்கொண்டேன்.

“தோழர் பாவெல் இன்னும் உயிரோடுதான் இருப்பார் என்றே எனது மனம் சொல்கிறது, அவரை எதுவும் செய்திருக்கமாட்டார்கள்” என்று சவரியான் சொல்லும்போது அவருக்குக் கண்கள் சிவந்து நீர் கோர்த்திருந்தது.

சென்னை விமான நிலையத்திற்கு அம்மா வந்திருந்தார். ஒரு பெரிய அழுகையுடன் அம்மா என்னை எதிர்கொள்வார் என நினைத்திருந்த எனக்கு அம்மாவின் அமைதியான புன்னகை நிம்மதியைக் கொடுத்தது. அப்பாவுக்கு முப்பத்தோராவது நாள் ‘திருப்பலி’ ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதிலிருந்து அம்மாவின் பேச்சு ஆரம்பித்தது. மற்றச் சகோதரர்கள் இந்தியா வர முடியாத நிலையை அம்மாவுக்குச் சொன்னேன். “ஒரு ஆள் வந்தால் போதும்தானே, எல்லோரும் வந்து எதற்கு வீண்செலவு” என்றார் அம்மா. “செத்தவன் குண்டி வடக்காலே போனாலென்ன தெற்காலே போனாலென்ன” என்று அப்பா அடிக்கடி சொல்வது ஞாபகத்திற்கு வந்தது. கார் அண்ணா நகர் வளைவுக்குள் நுழைந்தது. அந்த வளைவை அப்படியே நகர்த்தி வைக்க முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன எனச் சாரதி சொன்னார்.

அடுத்த நாளே ஒரு வாடகை வண்டியை அமர்த்திக்கொண்டு நான் கும்மிடிப்பூண்டிக்குப் போனேன். வெயில் பற்றி கும்மிடிப்பூண்டியின் நிலம் எரிந்துகொண்டிருந்தது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இலங்கை அகதிகள் முகாம் இருந்தது. முகாமிற்குள் நுழைவது சுலபமான வேலையாக இருக்கவில்லை. சொந்தக்காரர்களைத் தேடி பிரான்ஸிலிருந்து வந்திருக்கிறேன் எனப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சொன்னேன். பால்ராணி என்ற பெயரில் அங்கே யாருமே இல்லை என அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள். முகாமிற்கு வெளியே ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்துகொண்டேன். அந்தப் பகுதி முழுவதும்அகதிகள் நிரம்பியிருந்தார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் அகதிக் குடும்பங்கள் அங்கிருந்தன. எதிர்ப்பட்டவர்களிடம் நான் பேச்சுக்கொடுத்தபோது முதலில் சற்றுத் தயங்கினாலும் பின்பு ஆர்வமாக என்னோடு  பேசினார்கள். சிலர் என்னை, அவுஸ்ரேலியாவிற்கு படகில் அனுப்பும் ஏஜென்ட் என்று நினைத்து அவர்களாகவே வலிய வந்து பேசினார்கள். அவுஸ்ரேலியாவிற்குப் படகில் போவது குறித்து அங்கே பேச்சு அலைந்துகொண்டிருந்தது. அவர்கள் ஒவ்வொருவரிடமும் பால்ராணி குறித்து நான் விசாரித்தேன். யாருக்குமே பால்ராணியைத் தெரிந்திருக்கவில்லை. கடைசியில் நாவாந்துறையைச் சேர்ந்த ஒரு பெண்மணியிடமிருந்து ஒரு தகவல் கிடைத்தது. சன்னமான குரலையுடையவரும் ஆனால் யாருடனும் அதிகம் பேசாதவரும் ஒல்லியானவருமான ஒரு பெண்மணி தனியாக இங்கே இருந்திருக்கிறார். இரண்டு வருடங்களிற்கு முன்பு அவர் காணாமற் போய்விட்டாராம். அவரது பெயர் பால்ராணி என்பதாகவே தனக்கு ஞாபகம் இருப்பதாக அந்தப் பெண்மணி என்னிடம் சொன்னார்.

காணமற்போன அகதி ஒருவரை எப்படித் தேடுவது? அவர் வெளிநாடு ஒன்றிற்குச் சென்றிருக்கலாம், இலங்கைக்குத் திருப்பிச் சென்றிருக்கலாம், பசுபிக் சமுத்திரத்திலே படகுடன் மூழ்கியிருக்கலாம், எங்கேயாவது பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து அடையாளமற்றவராகப் போயிருக்கலாம், ஏதாவது மனநோய் விடுதியில் பெயரற்றவராக இருக்கலாம், கொலை கூடச் செய்யப்பட்டிருக்கலாம். இவற்றில் எந்தச் செய்தியை நான் தோழர் சவரியானுக்கு எடுத்துச் செல்வது!

இதற்கு அடுத்தநாள் காலையில் நான் அம்மாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது ‘அம்மா இனி என்ன செய்யப் போகிறார்’ எனக் கேட்டேன். அம்மாவும் அப்பாவும் பதினேழு வருடங்களிற்கு முன்பு அகதிகளாகப் படகில் வந்து இராமேஸ்வரத்தில் இறங்கியவர்கள். இலங்கைக்குத் திரும்பிச் செல்லப்போவதாக அம்மா சொன்னார். அந்தப் பதில் எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. ‘அங்கே காணி பூமி இருக்கிறதுதானே’ என நான் வாய்க்குள் முணுமுணுத்தேன். அம்மாவிற்கு வயது போனாலும் காது கூர்மையாகவே கேட்கிறது.  “என்னுடைய செத்த வீட்டுக்காவது நேரகாலத்தோடு யாராவது ஒரு ஆள் வந்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டு அம்மா புன்னகைத்தார். எனக்கு நெஞ்சை அடைக்குமாற்போல இருந்தது. சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டேன். எதிரே அப்பாவின் படத்திற்கு முன்பு ஒரு வெள்ளிக் குவளையில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது நெடிய உயரமும்,  சற்றுப் பருத்த உடலும் கொண்ட அந்த மனிதர் வீட்டு வாசற்படியில் நின்று செருப்புகளைக் கழற்றியவாறே என்னைப் பார்த்துச் சிரித்தார். பாதி நரைத்திருந்த , அடர்ந்த மீசைக்குக் கீழே அவரது பற்கள் நம்ப முடியாத வெண்மையில் பளீரிட்டன. தூய வெள்ளைச் சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தார். கையில் ஒரு துணிப்பை வைத்திருந்தார். அவரைக் கண்டதும் அம்மா “வாங்க அம்மான்” என வரவேற்றார்.

‘”அம்மான் இவன்தான் என்னுடைய இரண்டாவது மகன், பிரான்ஸில் இருக்கிறவன்”

‘அம்மான் ‘ என அழைக்கப்பட்ட அந்த மனிதர்தான் அப்பா இறப்பதற்கு முன்பாக அப்பாவைக் கடைசியாகப் பார்த்த மனிதர். அப்பா இறந்த இரவு அந்த மனிதரும் அப்பாவும் வீட்டிலிருந்து மதுவருந்தியிருக்கிறார்கள். எட்டு மணியளவில் இந்த மனிதர் இங்கிருந்து சென்றிருக்கிறார். வெளியே நின்றுகொண்டு அப்பாவிடம் கதவை உட்புறமாகத் தாழிட்டுக்கொள்ளுமாறு இந்த மனிதர் சொல்லியிருக்கிறார். உள்ளே தாழிடும் சத்தத்தையும் கேட்டிருக்கிறார். இந்த மனிதர் வளசரவாக்கத்தில் இருப்பதாக அம்மா சொல்லியிருக்கிறார். வளசரவாக்கத்தில்  இலங்கைப் பலசரக்குக் கடை ஒன்றிருக்கிறது. அந்தக் கடைக்கு அப்பா அடிக்கடி போவதுண்டு. அந்தக் கடையின் உள்ளே இரகசியமாக இலங்கை ‘மெண்டிஸ்’ சாராயம் விற்பார்களாம். அங்கேதான் இந்த மனிதர் அப்பாவுக்கு நண்பராகியிருக்கிறார். வளசரவாக்கத்திலிருந்து இரண்டு நாட்களுக்கொரு முறை அப்பாவைப் பார்ப்பதற்காக இந்த மனிதர் ‘பஸ்’ பிடித்து அண்ணா நகருக்கு வருவராம்.

நான் எழுந்து நின்று அம்மான் என அழைக்கப்பட்ட அந்த மனிதருடன் கை குலுக்கிக்கொண்டேன். அம்மான் தனது இடது கையால் எனது தோளைத் தட்டிக்கொடுத்தார். அம்மான் ஒருகாலத்தில் பலசாலியாக இருந்திருக்க வேண்டும் என்பதை அந்தத் தொடுகை எனக்கு உணர்த்தியது.

அம்மான் நாற்காலியில் அமர்ந்துகொண்டு எனது சுகபலன்களை விசாரித்தார். சென்னையில் ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் தன்னிடம் தயங்காது சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். இறந்துபோன அப்பாவைக் குறித்துப் பேசிக்கொண்டேயிருந்தார். இடையிடையே தனது கண்களைத் தடவிக்கொண்டார். அவர் பேசும்போது அவரது வாயிலிருந்து எச்சில் தெறித்தது. “தம்பி உங்களது அப்பா K-8 போல மன பலமுள்ளவர். அவரை மரணத்தால் நெருங்கியிருக்கவே முடியாது. அன்று இரவு ஒருவர் கூடயிருந்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும்” என்றார். அம்மா எழுந்து சமையலறைக்குள் போனார்.

“K-8 ?” என்று கேட்டுக்கொண்டே அம்மானைப் பார்த்தேன்.

அம்மான் புன்னகைத்துக்கொண்டே “அது உங்களிற்கு விளங்காது. அது இயக்கத்தில் முக்கியமான ஒரு தளபதியைக் குறிக்கும் சங்கேதச் சொல்” என்றார்.

நான் எழுந்து தண்ணீர் எடுப்பதற்காகச் சமையலறைக்குள் சென்ற போது அம்மா என்னைச் சைகையால் அருகே அழைத்து அம்மான் என்ற அந்த மனிதர் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் என்று என்னிடம் முணுமுணுப்பாகச் சொன்னார்.

சற்று யோசித்துவிட்டு “நானும் இயக்கத்தில் இருந்தது அவருக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். “இல்லை…நாங்கள் சொல்லவில்லை” என்றார் அம்மா.

தண்ணீர் செம்பை எடுத்துச் சென்று அம்மான் முன்னே வைத்துவிட்டு உட்கார்ந்தேன். அம்மான் செம்பை எடுத்து  வாசற்படியை நோக்கித் தண்ணீரைச் சற்றுச் சிந்திவிட்டு செம்பைத் தூக்கி அண்ணாந்து ஒரே மூச்சில் தண்ணீரைக் குடித்து முடித்துவிட்டு வெறும் செம்பைக் கீழே வைத்தார்.

“அம்மான் நீங்கள் எந்தக் காலப் பகுதியில் இயக்கத்தில் இருந்தீர்கள்?” எனக் கேட்டேன்.

அம்மான் புன்னகையுடன் என்னைப் பார்த்தார். “அம்மா சொன்னார் ” என்றேன்.

அம்மான் தலையை மேலும் கீழுமாக ஒருதடவை சுற்றிக்கொண்டார், சமையலறையைப் பார்த்து “அக்கா இன்னும் எத்தனை பேரிடம் இப்படிச் சொல்லியிருக்கிறீர்கள்” எனச் சத்தம் கொடுத்தார். அம்மாவிடமிருந்து பதிலில்லை.

“கடைசி வரை, முள்ளிவாய்க்கால்வரை இயக்கத்தில் இருந்தேன்” என்றார் அம்மான்.

“எப்போது இயக்கத்துக்குப் போனீர்கள்?”

அம்மான் உதட்டை மடித்துச் சிரித்தார். பின்பு “எண்பத்து மூன்றுக்கு முதலே இயக்கத்தில் சேர்ந்தவர்களைத்தானே ‘அம்மான்’ என்பார்கள்” என்றார்.

“நானும் எண்பத்து மூன்றிலிருந்து எண்பத்தாறுவரை புலிகள் இயக்கத்தில் இருந்திருக்கிறேன்” என்றேன்.

“தெரியும்” என்றார் அம்மான்.

“நான் உங்களைப் பார்த்ததில்லையே…எந்த ஏரியாவில் இருந்தீர்கள்?”

அம்மான் மறுபடியும் புன்னகைத்தார். “உங்களை எனக்குத் தெரியும், ஆனால் உங்களுக்கு என்னைத் தெரியாது. நான் புலனாய்வுத்துறை. பொட்டரோடு நின்றேன். உங்களைக் குறித்து இயக்கத்திற்குள் ஒரு சந்தேகம் வந்தபோது உங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு என்னிடம்தான் இருந்தது” என்றார் அம்மான்.

பதினொரு மணிக்கே வெயில் உச்சிக்கு வந்துவிட்டது. “அம்மான் வாருங்கள் வெளியே போய் குளிர்ச்சியாக ஏதும் குடித்துவிட்டு வருவோம்” என்றேன். அம்மான் எழுந்திருந்தார். நாங்கள் வெளியே போகும் போது “சமையல் முடிகிறது, சாப்பிடுவதற்கு நேரத்திற்கு வாருங்கள்” என்றார் அம்மா. திரும்பவும் என்னை அருகே கூப்பிட்டு “அப்பாவும் குடியால்தான் செத்தவர், உனக்கும் அப்படியொரு நிலை வரக் கூடாது” என்றார்.

அந்த மதுபான விடுதி கொஞ்சம் ஆடம்பரமானது. அம்மான் கண்களை விரித்து அந்த விடுதியைச் சுற்றுமுற்றும் பார்த்தார். “இப்பிடியான ஒரு விடுதிக்கு வாழ்க்கையிலேயே இப்போதுதான் முதற்தடவையாக வருகிறேன்” என்றார்.

நான் மதுவை அவரது கோப்பைக்குள் ஊற்றிக்கொண்டே “இயக்கத்தில் குடிப்பதற்குத் தடை இருந்ததே” என்றேன்.

“M – 12க்கு இருந்ததா?” எனக் கேட்டார் அம்மான்.

“M- 12..?” என்று இழுத்தேன்.

‘”பாலா அண்ணையை அப்படித்தான் சொல்வோம்” என்றார் அம்மான். புலனாய்வுத்துறையில் வேலை செய்பவர்களிற்கு ஒற்றறியும்போது குடிக்க வேண்டிய கட்டாயம் எற்படுமென்றும் அப்படித்தான் அவர் குடிக்கப் பழகியதாகவும் அம்மான் சொன்னார்.

அம்மானின் குடி ‘சிலோன் குடி’. ஒரு பெரிய கோப்பை பியரை ஒரே மூச்சில் கண்களை மூடிக்கொண்டு உறிஞ்சிக் குடித்துவிட்டு ‘டக்’கென ஓசையெழும்ப வெற்றுக் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, கைகள் நிறையச் சுண்டலை அள்ளி வாயில் போட்டு மென்றார்.

முதல் நாளிலேயே நானும் அம்மானும் மிகவும் நெருங்கிவிட்டோம். என்னுடைய பழைய இயக்க நண்பர்களில் அநேகமாக எல்லோரையுமே அம்மானுக்குத் தெரிந்திருந்தது. எனக்கு அம்மானோடு பேச நிறைய இயக்கக் கதைகள் இருந்தன. அவரும் களைப்புச் சளைப்புப் பார்க்காமல் பேசக் கூடியவராகயிருந்தார். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசும்போது அவர் மிகக் குறைவான சொற்களையே பயன்படுத்தினார். அடுத்து வந்த நாட்களில் ஒவ்வொரு நாளுமே என்னைத் தேடி எங்களது வீட்டுக்கு அம்மான் வந்துவிடுவார். சில நாட்களில் இரவு வரை எங்களது பேச்சு நீண்டது. அவரது மனைவியிடமிருந்து இரண்டு – மூன்று தடவைகள் தொலைபேசி அழைப்பு வந்ததற்குப் பிறகுதான் எங்களது வீட்டிலிருந்து கிளம்பிச் செல்வார்.

அம்மான், புலிகளின் தலைவரை ஒருமையில் அழைக்கக் கூடிய உரிமையைப் பெற்றிருந்தார் என்பதைக் கேட்டபோது நான் வாயைப் பிளந்தேன். அது எப்படி என்று நான் கேட்டபோது  “தலைவரின் மனைவி என்னை மாமாவென்றுதான் கூப்பிடுவார்” என்றார் அம்மான். இவர் அருமையாகப் பாடக் கூடியவர் என்பதால் இவர் பாடுவதைக் கேட்பதில் மதிவதனிக்கு அதிக விருப்பமாம். இவர் பாடும்போது பிரபாகரன் கண்களை மூடி ரசிப்பது மட்டுமல்லாமல் பாடலில் ஏதாவது தவறிருந்தால் அதையும் சுட்டிக்காட்டுவாராம். அம்மான் உண்மையிலேயே அருமையாகப் பாடக் கூடியவர். ஓரிரவில் அவர் காத்தவராயன் கூத்தைப் பாடியபோது கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அழுகை முட்டியது. அதிகமான போதையென்றால் நான் இலகுவில் மனம் நெகிழ்ந்து கண்ணீர்விடக் கூடியவன்.

அம்மானுக்கு ஒரு மகன் இருந்தான். அவனும் புலிகள் இயக்கத்தில் இருந்திருக்கிறான். ஆனந்தபுரச் சுற்றிவளைப்பை உடைத்துத் தலைவரை மீட்டுச் சென்ற பெரும் போரில் அவன் வீரச்சாவடைந்தான் என்றார் அம்மான். இதைச் சொல்லும் போது அவரது முகத்தில் கலக்கம் எதுவுமில்லை. மாறாக அவரது கண்கள் பெருமையில் மிதந்தன.

“இறுதி யுத்தத்தின் போது அங்கே இந்திய இராணுவம் இருந்ததாகச் சொல்கிறார்களே” என்றேன். “ஆம் 3116 இந்திய இராணுவத்தினர் மே மாதம் 1ம் தேதி முல்லைத்தீவில் தரையிறங்கினார்கள். இலங்கை இராணுவத்தை அவர்களே வழி நடத்தினார்கள். முன்னேறிச் செல்லாத இராணுவத்தை இந்திய இராணுவம் பின்னாலிருந்து சுட்டது. முன்னேறியவர்களைப் புலிகள் சுட்டார்கள். அந்த மாதத்தில் மட்டும் 7285 இலங்கை இராணுவத்தினர்கள் கொல்லப்பட்டார்கள், அரசாங்கம் வேண்டுமென்றே கணக்கைக் குறைவாகச் சொன்னது. 534 இந்திய இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டார்கள்” என்றார் அம்மான். அவர் எதைச் சொன்னாலும் கணக்கை எண்கள் பிசகாமல் துல்லியமாகச் சொன்னார்.

ஒரு தடவை அம்மான், தலைவரைச் சந்திப்பதற்காக அவரது மறைவிடத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்த பாதுகாப்பு வீரன் அம்மானின் இயக்க அடையாள அட்டையைக் கேட்டிருக்கிறான்.  அன்று துரதிருஷ்டவசமாக அம்மான் தனது அடையாள அட்டையை மறந்துவிட்டுச் சென்றிருக்கிறார். எவ்வளவு சொல்லியும் அந்தப் பாதுகாப்பு வீரன் அம்மானை உள்ளேவிட மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்டான். அவ்வாறு அம்மானைத் திருப்பி அனுப்பிய பாதுகாப்பு வீரனின் பெயர் தமிழ்மன்னன். அவன் அம்மானின் ஒரே மகன்.

அவரது புலனாய்வுப் பணியில் ஒரேயொரு தடவை தவறு நிகழ்ந்ததாகவும் அந்தத் தவறு பெரிய தவறாகிப் போனதென்றும் அம்மான் சொன்னார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பரந்தன் வெற்றிலை வியாபாரி ஒருவனின் மனைவி நுழைந்திருக்கிறாள். அவள் அங்கே நகைகள் அடவு பிடிப்பதுபோலவும் வட்டிக்குப் பணம் கொடுப்பது போலவும் நடித்து மக்களுடன் கலந்து உறவாடி 2425 பொதுமக்களையும் 3 பெண் போராளிகளையும் அழைத்துக்கொண்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டாளாம். அன்றிலிருந்துதான் சனங்கள் பகுதி பகுதியாகப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்குள் தப்பிச் சென்றார்களாம்.

தன்னுடைய பிடியிலிருந்து தப்பிச் சென்ற ஒரேயொருத்தி பரந்தன் வெற்றிலை வியாபாரியின் மனைவியே என்ற அம்மான் பற்களைக் கடித்துக்கொண்டு விழிகளை மேலே செருகித் தலையை ஆட்டிக்கொண்டார்.

எல்லாப் புலிகளைப் போலவும் துரோகிகளைக் குறித்து அம்மானும் ஆவேசத்துடன்தான் பேசுவார். எங்களுடைய போராட்டத்தை அழித்தது துரோகிகள் தான் என்றார். களையெடுக்க எடுக்க எங்களது மண்ணில் துரோகிகள் புற்களைப் போல முளைத்துக்கொண்டேயிருந்தார்கள் என்றார். அம்மான் புலிகளின் துணுக்காய் சிறைச்சாலைக்குப் பொறுப்பாயிருந்தபோது ஒரு நாளைக்குக் குறைந்தது 43 கைதிகளை விசாரணை செய்வாராம். அவர்களை அடித்து அடித்துத் தனது கைகள் மரத்துப் போயிருந்தன என்று சொல்லிவிட்டு அம்மான் தனது கைகளை ஒன்றோடொன்று தேய்த்துக்கொண்டார்.

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஈடுபட்டதாவும் சொல்கிறார்களே என நான் கேட்ட போது, “இரண்டொரு சம்பவங்கள் அப்படி நிகழ்ந்தனதான், ஆனால் விசாரணை இல்லாமலேயே அவர்களைக் கொல்லச் சொல்லி பொட்டம்மான் எங்களுக்கு அனுமதி கொடுத்திருந்தார். எனது கையாலேயே இரண்டு குற்றவாளிகளைத் துண்டு துண்டாக வெட்டிப் புதைத்திருக்கிறேன். நான் முதலில் அவர்களது ஆணுறுப்பைத்தான் வெட்டினேன்” என்றார் அம்மான்.

“யுத்தத்தின் கடைசி நாட்களில் நீங்கள் எங்கிருந்தீர்கள்?” எனக் கேட்டேன்.

“மே பதினைந்தாம் தேதியே இயக்கத்தைக் கலைக்கத் தலைமை உத்தரவிட்டது. இயக்கத்திடம் ரொக்கமாயிருந்த 169 கோடியே 8 இலட்சத்து 12 ஆயிரத்து 250 ரூபாய்கள் எரிக்கப்பட்டன. 613 கிலோ 540 கிராம் தங்கம் புதைக்கப்பட்டது. ஆயுதங்களையும் சயனைட் குப்பிகளையும் இலக்கத் தகடுகளையும் புதைத்துவிட்டு சரணடையுமாறோ, வாய்ப்பிருந்தால் தப்பிச் செல்லுமாறோ உத்தரவிடப்பட்டது. நான் சரணடையத் தயாரில்லை. தப்பிச் செல்லவும் வழியிருக்கவில்லை. எனது இரண்டு பிஸ்டல்களையும் குப்பியையும் மண்ணில் புதைத்து விட்டு இலக்கத் தகடைக் கடலுக்குள் வீசி எறிந்தேன். அலை திரும்பவும் அந்தத் தகடை எனது கால்களின் அருகே கொண்டு வந்தது. ஆத்திரத்துடன் அலையை நான் கால்களால் எற்றியபோது என்ன மாயமோ அலை அப்படியே உடைந்து போய் அடங்கிற்று. இலக்கத் தகடு மண்ணில் கிடந்தது. நான் அதை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றேன்.”

“தலைவரும் சரணடைந்ததாகச் சொல்கிறார்களே” எனக் கேட்டேன்.

அம்மானின் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் அள்ளுகொள்ளையாக வெளிவந்தன. ‘அம்மா உள்ளே இருக்கிறார்’ எனச் சைகை காட்டினேன். அம்மான் உதடுகளை இறுக்கிக்கொண்டார்.

“தலைவரும் இன்னும் சில முக்கியமான ஆட்களும் ‘ஒக்ஸிஜன் சிலிண்டர்’களுடன் நந்திக்கடலைக் கடக்க மறைவிடத்தில் இரவுக்காகக் காத்திருந்தார்கள். இரவுக்கு முன்னேயே இராணுவத்தினர் அவர்களைச் சுற்றிவளைத்துக்கொண்டனர். தலைவரின் கைத்துப்பாக்கி மிகச் சக்தி வாய்ந்தது. அவரது வாய்க்குள் பாய்ந்த குண்டு தலையால் வெளியேறிய இடம் கோடாரியால் பிளக்கப்பட்ட இடம்போல இருந்தது. அந்தக் காயத்தின் நீளம் 16 சென்ரி மீற்றர்கள். அன்று மட்டும் இரவு சற்று முன்னே வந்திருந்தால் சூரியன் கடலில் மறைந்திருக்கும்.”அம்மானின் கை விரல்கள் நடுங்குவதை நான் பார்த்தேன்.

எனக்கு அப்போது போதை சற்று ஏறியிருந்தது. “நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை” என்று கேட்டேன்.

அம்மான் வழமைபோலவே ஒரே மூச்சில் கோப்பையை உறிஞ்சிவிட்டு உதடுகளைச் சுழித்துக்கொண்டார். பிறகு “ஒரு இலட்சியத்திற்காகச் சாவது வேறு, அந்த இலட்சியமே செத்துவிட்டதற்குப் பிறகு நான் எதற்காக என்னை மாய்த்துக்கொள்ள வேண்டும்” என்றார். நான் அம்மானின் கையை ஆதுரத்துடன் பற்றிக்கொண்டேன்.

அம்மானும் அவரது மனைவியும் 18ம் தேதிவரை பதுங்கு குழிக்குள்ளேயே இருந்திருக்கிறார்கள். அவர்களைச் சூழவர நெருப்புப் பரவிக்கொண்டிருந்தது. முன்னேறி வந்த இராணுவத்தினர் கண்ணில் பட்டவற்றையெல்லாம் கொளுத்தியபடியே வந்திருக்கிறார்கள். கடைசியில், அம்மானும் மனைவியும் ஒளிந்திருந்த பதுங்குகுழியை இராணுவத்தினர் கண்டுபிடித்தார்கள்.

மக்களோடு மக்களாக அம்மானும் மனைவியும் இராணுவச் சோதனைச் சாவடியில் நின்றிருந்தபோது சுத்தத் தமிழில் அறிவிப்புக் கேட்டது. அம்மான் தலையை நிமிர்ந்து பார்த்தபோது தடிகளால் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கோபுரத்தில் அந்த ஒலிபெருக்கி கட்டப்பட்டிருந்தது.  அம்மானுக்கு நன்கு தெரிந்த போராளிகள் மூவர் அந்தக் கோபுரத்தில் நின்றிருந்தார்கள். இயக்கத்தில் இருந்தவர்களை வலதுபுறமாகவும் மற்றவர்களை இடதுபுறமாகவும் வரிசையில் நிற்குமாறு  ஒருவன் ஒலிபெருக்கியில் சொல்லிக்கொண்டிருந்தான்.

இடதுபுற வரிசையில் நின்றிருந்த அம்மான் வலதுபுற வரிசையைப் பார்த்தார். அங்கே பதினைந்து வயதுக்கும் குறைந்த மூன்று சிறுவர்களும் தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டிருந்த இரண்டு பெண்களும் மட்டுமே நின்றிருந்தார்கள். அம்மான் வலதுபுற வரிசைக்குச் செல்லக் காலெடுத்து வைக்கையில் அம்மானின் மனைவி இரகசியமாக அம்மானின் கையைப் பிடித்து நிறுத்தினார். அம்மான் இடதுபுற வரிசையிலேயே நின்றுகொண்டார். அந்த வரிசை நகரத் தொடங்கியபோது  பாதுகாப்புக் கோபுரத்தில்  நின்றவன் அம்மானைப் பார்த்துக் கையைக் காட்டினான். “அம்மான் நான் சொல்வது உங்களுக்கு விளங்கவில்லையா? வலதுபுற வரிசைக்குச் சென்று நில்லுங்கள்!”

அம்மான் அதைக் கேட்காதது போல பாவனை செய்தார். இப்போது  அம்மானை வலதுபுற வரிசைக்குச் செல்லுமாறு ஒலிபெருக்கி அலறிற்று. அம்மான் வலதுபுற வரிசைக்கு நகர்ந்தார். ஒலிபெருக்கியில் அறிவுப்புச் செய்துகொண்டிருந்த போராளிகள் கருணாவின் ஆட்கள் என்று என்னிடம் அம்மான் சொன்னார்.

ஒரு பாடசாலைக் கட்டடத் தொகுதி தடுப்பு முகாம் ஆக்கப்பட்டிருந்தது. வதைகளும் ஓலங்களும் அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தன. அம்மானை யாரும் அதுவரை விசாரிக்கவில்லை. இரவானதும் பின்புறமாகக் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே அம்மான் உறங்கிப்போனார்.

நள்ளிரவில் அவர் தட்டி எழுப்பப்பட்டார். அவரது கையைக் கட்டியிருந்த கயிறு அவிழ்க்கப்பட்டது. அந்தக் கட்டடத் தொகுதிக்குப் பின்பக்கமிருந்த கிணற்றை நோக்கி அம்மான் அழைத்துச் செல்லப்பட்டார். அந்தக் கிணற்றில் தண்ணீர் அள்ளி முகத்தைக் கழுவிக்கொண்டிருந்த மனிதரைப் பார்த்ததும் அம்மான் அதிர்ந்து போய்விட்டார். அந்தச் சூழ்நிலையில், அந்த நேரத்தில் அங்கே கருணாவைத் தான் எதிர்பார்த்திருக்கவில்லை என்றார் அம்மான்.

கருணா நிதானமாக அம்மானைப் பார்த்து “அண்ணன் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? என்னுடன் நிற்கப் போகிறீர்களா அல்லது வேறெங்கேயும் போகப் போகிறீர்களா” என்று கேட்டிருக்கிறார். “இல்லை, இனி எனக்கு இந்த நாட்டில் இருக்க விருப்பமில்லை தம்பி” என்றிருக்கிறார் அம்மான். உடனடியாகவே கருணா தொலைபேசியில் பேசி அம்மானின் மனைவியிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்திருக்கிறார். அடுத்தநாள் இரவே அம்மானும் அவரது மனைவியும் கருணாவின் ஏற்பாட்டால் பத்திரமாக வவுனியாவைத் தாண்டிச் சென்றுவிட்டார்களாம்.

அன்று இரவு நான் பிரான்ஸ் திரும்பவிருந்தேன். காலையிலேயே அம்மான் வீட்டுக்கு வந்துவிட்டார்.  அவரது மனைவி எனக்குக் கொடுத்துவிட்டதாக ‘பருத்தித்துறை வடைகள்’ அடங்கிய ஒரு பொதியை என்னிடம் கொடுத்துவிட்டு ‘”இது ஆறுமாதமானாலும் கெட்டுப் போகாது” என்றார்.

அன்றும் பதினொரு மணிக்கே வெயில் உச்சியில் நின்றது. மதுபான விடுதிக்குள் அமர்ந்திருக்கும்போது “இன்று அதிகம் குடிக்காதீர்கள் தம்பி, இரவு பயணமல்லவா” என்றார் அம்மான். எனினும் நாங்கள் அன்று எப்போதையும் விட அதிகமாகவே குடித்தோம்.

நான் ஒரு பணக்கட்டை எடுத்து அம்மானின் கையில் வைத்தேன். நான் எவ்வளவு கேட்டுக்கொண்டும் அந்தப் பணத்தை வாங்க அம்மான் மறுத்துவிட்டார். நான் திரும்பவும் பணக்கட்டை எனது காற்சட்டைப் பைக்குள் செருகும் போது எனது மூளையின் மடிப்பொன்று சடுதியில் விரிந்திருக்க வேண்டும்.

“அம்மான்! ஒரு விசயம் கேட்க வேண்டும்” என்றேன். அம்மான் அப்போது தனது கோப்பையை ஒரே மூச்சில் உறிஞ்சிக்கொண்டிருந்தார். வெற்றுக் கோப்பையை மேசையில் ‘டக்’கென ஓசையெழ வைத்துவிட்டு என்னைப் பார்த்தார்.

“நீங்கள் எப்போதாவது தோழர் பாவெல் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

அம்மான் தனது கண்களை மூடிக்கொண்டார். அவரது உதடுகள் மடிந்து விரிந்தன. பின்பு கண்களை மெதுவாகத் திறந்தார். எனது முகத்தையே உற்று நோக்கினார். அவரது கண்மணிகள் குத்திட்டு நின்றன.

“ஆம், பாவெல் விலாசவ்… அவனுக்குக் கடைசியில் தேசாந்திர சிட்சை கிடைத்தது”.

நான் மெதுவாக “அந்தப் பெயரில் ஒருவர் 2005 – சமாதான காலத்தில் புலிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார்” என்றேன்.

அம்மான் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டார். கண்களைத் திறக்காமலேயே “ஒருவரல்ல, இருவர் கைது செய்யப்பட்டார்கள். ஒருவனது பெயர் பாவெல், அடுத்தவன் புஷ்பாகரன். அவர்களை நான்தான் கைது செய்தேன். அவர்களிடமிருந்து தமிழிலும் சிங்களத்திலும் அச்சிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்களைக் கைப்பற்றினோம். அந்தப் பிரசுரங்கள் சமாதானத்திற்கு எதிரானவையாகயிருந்தன.”

எனக்கு உடனடியாகவே போதை தெளிந்துவிட்டது. “அவர்களை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன்.

அம்மான் கண்களைத் திறந்தார். “இருவரையும் வட்டுவாகல் சிறைக்குக் கொண்டு சென்றோம். பாவெல் என்பவன் நெஞ்சழுத்தக்காரனாயும் திமிர் பிடித்தவனாயும் இருந்தான். அவன் பேசவே மறுத்தான்.எனது பொடியன்கள் அடித்த அடியில் அவனது மண்டை பிளந்துவிட்டது. வேதனையில் துடித்துக்கொண்டிருந்தான். நான் அவனைச் சுட்டுவிடுமாறு பொடியன்களுக்கு உத்தரவிட்டேன். அவனைக் கைது செய்த அன்றே அவன் கொல்லப்பட்டான்.

அடுத்தவன், அவனின் பெயர் புஷ்பாகரன் என்று சொன்னேனே… பாவெலுக்கு விழுந்த அடியைப் பார்த்தவுடனேயே புஷ்பாகரன் எல்லா உண்மைகளையும் கக்கிவிட்டான். அவர்களுக்குச் சில சிங்கள ட்ரொட்ஸ்கியவாதிகளுடன் தொடர்பிருந்திருக்கிறது. புஷ்பாகரனை ‘பங்கருக்குள்’ போட்டுவிட்டோம். ஒரு ஆள் நிற்பதற்கு மட்டுமே தோதாக அந்தக் குழி வெட்டப்பட்டிருக்கும். அவனை விசாரணைக்காக வெளியே தூக்கி அடிக்கும்போது அவன் பெருங்குரலெடுத்து அலறுவான். அதற்காக நான் அவனுக்குப் புதியதொரு தண்டனையை வழங்கினேன். நாங்கள் அவனை அடிக்கும் போது அவன் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று மட்டுமே அலற வேண்டும். வேறு மாதிரியாக அலறினால் அவனின் முதுகில் நாங்கள் இரும்புக் கம்பியால் சூடு போடுவோம். எனவே அவன் அடி வாங்கும்போதெல்லாம் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என உரக்கக் கத்துவான். நீண்ட நாட்கள் அவன் அந்தக் குழிக்குள் நிர்வாணமாக நின்றான். எறும்புகளும் கறையான்களும் அவனில் புற்றெடுத்தன. அவனை வெளியே எடுத்தபோது அவன் அரைப் பைத்தியமாக இருந்தான். கடைசிவரை அவன் வட்டுவாகல் சிறையில்தானிருந்தான். கடைசிச் சண்டையின் போது மணலால் அரண்கள் அமைக்கும் வேலைக்குக் கைதிகளை அழைத்துப்போனோம். வேலை நடந்துகொண்டிருக்கும் போதே விமானக் குண்டுவீச்சு நிகழ்ந்து  16 போராளிகளும் 47 கைதிகளும் அங்கேயே இறந்து போனார்கள். அந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி இரண்டு சிங்களக் கைதிகளும் புஷ்பாகரனும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பியோடிவிட்டார்கள்”.

சொல்லி முடித்ததும் அம்மான் தனது வெறுமையான கோப்பையைக் காட்டி தனக்கு இன்னும் மது வேண்டுமென்று கேட்டார்.

நான் எதுவும் பேசாமல் அம்மானையே பார்த்துக்கொண்டிருந்தேன். எனது கைகள் பியர் போத்தலைப் பற்றியிருந்தன. அம்மானும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரது விழிகள் இப்போது கெஞ்சிக்கொண்டிருந்தன.

அங்கே நிலவிய மவுனம் வழக்கத்திற்கு மாறானது, விநோதமானது, அடையாளம் தெரியாதது.

நான் ஏதோவொரு வகையில் அந்த மவுனத்தை உடைத்தேன். “அம்மான் நீங்கள் உங்களது இயக்க வாழ்க்கை முழுவதும் தமிழர்களை மட்டுமே கொன்றிருக்கிறீர்கள்.”

அம்மான் விசும்பும் சத்தம் கேட்டது. அவரது நாவு குழறியது. “1985ல்  அநுராதபுர நகரத்துக்குள் புகுந்து 138 சனங்களை நாங்கள் கொன்றோம். ஒரு நிறைமாதக் கர்ப்பிணியின் வயிற்றில் நான் நீண்ட வாளால் குத்தினேன். அதனால்தான் எனக்குப் பிள்ளையே பிறக்கவில்லை…”  அம்மான் எனது கைகளை இறுகப் பிடித்துக்கொண்டார். எனது கைகளில் சில கண்ணீர் சொட்டுகள் விழுந்தன.

நான் அம்மானிடமிருந்து கைகளை விடுவித்துக்கொண்டு அவரை உற்றுப் பார்த்தேன். அவரது மகன் தமிழ்மன்னன் ஆனந்தபுரம் போரில் இறந்துவிட்டான் என்றவர், இப்போது தனக்குப் பிள்ளையே பிறக்கவில்லை எனக் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார். ஏனோ அப்போது எனக்கு அம்மானிடம் பேரச்சம் உண்டாகியது. அம்மான், ஏதோவொரு நாடகத்தில்  திட்டமிட்டு என்னைச் சிக்க வைத்துக்கொண்டிருக்கிறார் எனத் தோன்றியது. எனது அப்பாவின் சாவு கொலையாக இருக்கலாமோ என்றுகூடச் சந்தேகப்பட்டேன். நான் எதுவும் பேசாமல் எழுந்திருந்தேன்.

அம்மானும் தடுமாற்றத்துடன் எழுந்தார். அவரது கண்கள்  கெஞ்சிக்கொண்டேயிருந்தன. அப்போது அவரது கைபேசி ஒலித்தது. வலது கையால் எனது கையைப் பிடித்தபடியே இடது கையால் அவர்  கைபேசியை எடுத்தார்.  அவரது மனைவிதான்  அழைத்திருக்க வேண்டும். தொலைபேசிப் பேச்சின் இடையில் “தம்பி எனக்குப் பணம் கொடுத்தார், நான் வாங்கவில்லை” என்று அம்மான் சொன்னார். பணத்தை அவர் வாங்காததால் அவரது மனைவி கவலைப்படுகிறார் என்பது அம்மானின் பேச்சில் தெரிந்தது. “தம்பி, உங்களோடு என் மனைவி பேச வேண்டுமாம்” என்று சொல்லிவிட்டு, கைபேசியைத் தனது சட்டையில் அழுந்தத் துடைத்து என்னிடம் கொடுத்தார். என்ன பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை. தயக்கத்துடன் “வணக்கம் அக்கா” என்றேன்.

மறுமுனையில் ஒரு கணத் தயக்கத்திற்குப் பிறகு சன்னமான குரல் ஒலித்தது. அம்மானின் மனைவி என்னுடன் வெறும் ஆறு சொற்களை மட்டுமே பேசினார். திடீரென என்னுடைய உள்ளுணர்வு உந்தித்தள்ள “அக்காவுடைய பெயர் என்ன?”  என்று கேட்டேன். அவரிடமிருந்து ஏழாவது சொல்லாக அவரது ‘பெயர்’ எனக்குக் கிடைத்தது. அவர் தொடர்பைத் துண்டித்தார்.

அம்மானின் கையை இழுத்து மறுபடியும் உட்கார வைத்துவிட்டு, பரிசாரகனை அழைத்து மது கொண்டுவரச் சொன்னேன். அம்மானின் கைபேசியை அவருக்கும் எனக்கும் நடுவாக மேசையில் வைத்தேன். அம்மான் ஒரே மூச்சில் மதுவை உறிஞ்சிக்கொண்டிருக்கையில், எனது கைபேசியிலிருந்து தோழர் சவரியானுக்கு குறுஞ்செய்தி ஒன்றை நான் அனுப்பினேன்:

<நான் காணமற்போனவருடன் மது அருந்திக்கொண்டிருக்கிறேன் >

(ஜுலை -2013 ‘காலம்இதழில் வெளியான கதை)

8 thoughts on “காணாமற்போனவர்

  1. கதை படிப்பதைப்போலவே இல்லை.. நிஜமான அனுபவம் போல் உள்ளது

  2. நல்லதொரு கதை வாசித்த திருப்தி கிடைத்தது.நன்றி ஷோபாசக்தி.

  3. நன்றாக இருக்கிறது. இதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு புனைவு என்று எண்ணத் தோன்றுகிறது.கருணாவைக் காட்டியது, கொரில்லாவில் ரணில் விக்கிரமசிங்காவை (?) காட்டியதை நினைவுபடுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *