பார்ப்பனிய நிறுவனங்களுடன் கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் தொடர்புகளைச் சுட்டி நான் சொன்ன ஒரு கருத்தை மனுஷ்யபுத்திரன் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
கடந்த காலங்களிலும், இப்போதும் வெவ்வேறு பார்ப்பனிய நிறுவனங்களின் நிழலில் மனுஷ்யபுத்திரன் நின்றிருப்பதை நான் சுட்டிக்காட்டுவது அவர்மீது குற்றப்பட்டியலொன்றைத் தயாரிக்கும் எத்தனமல்ல. அது விவாதத்தைத் திசை திருப்பும் முயற்சியும் கிடையாது.
‘சின்மயி பிற்போக்கான கருத்தைச் சொன்னதற்கான எதிர்வினையே அவர்மீதான பாலியல் வசவுகள், எனவே சின்மயி முதலில் தமிழர்களிடமும் தலித்துகளிடமும் மன்னிப்புக் கேட்கட்டும் அப்போது நான் சின்மயிக்காகப் போராடுவேன்’ என்ற மனுஷ்யபுத்திரனின் கூற்றே நான் மனுஷ்யபுத்திரனின் பார்ப்பனிய நிறுவனங்களுடனான தொடர்புகள் குறித்த கேள்வியை எழுப்புவதற்கான அடிப்படை.
சின்மயியை விடப் பன்மடங்கு ஆபத்தான கருத்துகளை இடஒதுக்கீடு குறித்தும் ஈழப்பிரச்சினை குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் சொன்னவர்கள் சுஜாதா, தினமலர், காலச்சுவடு போன்றவர்கள். பார்ப்பன சங்க விழாவில் கலந்துகொண்டு ‘வீரமுழக்கம்’ எழுப்பிய சுஜாதாவைக் கண்டித்து அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரையை ‘உயிர்மை’யில் பிரசுரிக்க மறுத்தவர் மனுஷ்யபுத்திரன். இதனால் அப்போது அ.மாரக்ஸ் ‘உயிர்மை’யில் எழுதிய தொடரே நின்று போயிற்று. மனுஷ்யபுத்திரனைக் கண்டித்து ‘பார்ப்பனர்களின் மானம் காக்கும் கோவணம்’ என்ற குறிப்பை ‘அநிச்ச’யில் எழுதினார் மார்க்ஸ்.
அவ்வாறானால் இத்தகை பார்ப்பனிய சக்திகளின் நிழலில் மனுஷ்யபுத்திரன் நின்றதற்கும், நிற்பதற்கும் புத்தகங்களைப் பதிப்பிப்பதற்கும் அவர்களிடமிருந்து விளம்பர வருமானங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் தலித்துகள், தமிழர்கள், இஸ்லாமியர்கள், ஈழத் தமிழர்கள் எல்லோரிடமும் மனுஷ்யபுத்திரன் பொது மன்னிப்புக் கேட்க வேண்டாமா என்ன? சின்மயிக்கு ஒரு நியாயம் மனுஷ்யபுத்திரனுக்கு மறு நியாயமா ? “சுகிர்தராணியின் கவிதைகள் ‘பின்’ பண்ணப்பட்டு பிளாட்பாரத்தில் விற்கப்படும் ஆபாசங்களை ஒத்தவை” என்று மனுஷ்யபுத்திரன் சொன்னதற்கு வேண்டுமானால் அவர் மன்னிப்பெல்லாம் கேட்கத் தேவையில்லை என்று விட்டுவிடலாம். ஏனெனில் அது அவரின் சொந்தக் கருத்துக் கிடையாது. அக்கருத்தை அவர் ‘இந்து மக்கள் கட்சி’யிடமிருந்தும் சில சினிமாக் கவிஞர்களிடமிருந்தும் இரவல் பெற்றிருந்தார் என்பதைக் கருத்தில் கொள்வோம்.
இப்போதுகூட மனுஷ்யபுத்திரன் மன்னிப்புக் கேட்டேயாக வேண்டும் என்றெல்லாம் நான் வலியுறுத்தவில்லை. ‘சின்மயி மன்னிப்புக் கேட்டால் சின்மயிக்காகப் போராடுவேன்’ என்ற மனுஷ்யபுத்திரனின் கூற்றிலுள்ள தவறைச் சுட்டிக்காட்டவே இதை எழுத நேரிட்டது.
இடஒதுக்கீடு பிரச்சினையும் மீனவர்கள் கொல்லப்படும் பிரச்சினையும் அதுசார்ந்த எதிரெதிர் விவாதங்களும் சின்மயி இவை குறித்தெல்லாம் கருத்துச் சொல்ல வருவதற்கு முன்பேயே இருப்பது போலவே இனியும் பல காலங்களுக்கு இந்தப் பிரச்சினைகளை முன்வைத்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளஙகளிலும் கடுமையான விவாதங்கள் நடக்கத்தான் போகின்றன. அந்த விவாதங்களை ஆபாச வசைகளால் எதிர்கொள்வதல்ல அதற்கான எதிர்வினை. எந்தக் காரணத்தை முன்வைத்தும் பெண்கள் மீது கொட்டப்படும் வசவுகளை நாம் நியாயப்படுத்திவிட முடியாது. ‘அந்தப் பெண் அப்படிச் சொன்னதாலேயே இப்படி நடந்தது எனவே முதல்தவறு பெண்மீதே’ என்று சொல்வதெல்லாம் மிகவும் சராசரி ஆணாதிக்கச் சிந்தனை. ‘மீனா கந்தசாமியும் சந்தனமுல்லையும் லீனா மணிமேகலையும் சொன்ன கருத்துகளிற்காகவே அவர்கள்மீது பாலியல் வசவுகள் ஏவப்பட்டன எனவே பிரச்சினையில் முதல் குற்றவாளிகள் அவர்களே’ எனச் சொன்னால் அதையும் நியாயம் என ஒப்புக்கொள்பவர்களே மனுஷ்யபுத்திரனின் இந்தக் கருத்தையும் நியாயம் எனக் கொண்டாடுபவர்களாக இருப்பார்கள்.
இந்த விவகாரத்தில் நான் வலியுறுத்த விரும்பும் இன்னொன்றுண்டு: சமூகத்தில் எத்தனையோ ஆபத்தான பிரச்சினைகளும் போராட்டங்களும் இருக்க சின்மயி விவகாரத்தில் அதீத கவனத்தைக் குவிப்பது சரியானதா எனச் சில நண்பர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அந்த நண்பர்களின் ஆதங்கத்தை நான் புரிந்துகொள்கிறேன். எனினும் இந்தச் சின்மயி விவகாரத்தை வெறும் இணையச் சண்டையாகச் சுருக்கிப் பார்த்துவிடுவதும் சரியற்றது. ஏனெனில் இணையத்தில் எழுதியதற்காக முதற்தடவையாக இருவர் குற்றத்தின் அளவிலும் மீறிய அளவிற்குக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள். இணையக் குற்றங்களிற்கு மூன்றாண்டுகள்வரை சிறையென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையம் காவற்துறையின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள பேராபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்தெலாம் இணையப் பயன்பாட்டாளர்களான நாமனைவரும் தீவிரமாகச் சிந்திக்கவும் விவாதிக்கவும் அவசியமுள்ளது. மறுபுறத்தில் இணையத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்படும் தொடர் செயற்பாடுகள் மீது இந்த விவகாரம் கவனத்தைக் குவித்துள்ளது. இணையத்தில் எழுதுபர்களிற்கு சுயதணிக்கையும் சுயகட்டுப்பாடும் அவசியம், அதுவே கட்டற்ற இணைய சுதந்திரத்தைக் காப்பதற்கான வழி என்ற பொதுக் கருத்தொன்று இந்த விவாதங்களின் அடிபபடையில் உருவாகியிருக்கிறது. எனவே அந்த வகையில் இந்த விவகாரமும் விவாதங்களும் முக்கியமானவையே.
நான் முன்பே சுட்டிக்காட்டியவாறு, டாக்டர் கிருஷ்ணசாமி முதற்கொண்டு நாம் மதிக்கக்கூடிய பலர் இடஒதுக்கீடுகள் பிரச்சினையில் சமூகநீதிக்கு எதிரான கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். ஈழப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை இவற்றிலெல்லாம் தாறுமாறாகப் பல தரப்புகளுள்ளன. யாழ்ப்பாண மீனவர்கள் கடலில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களைச் சிறைப்பிடித்து இலங்கை அரசிடம் ஒப்படைத்த செய்திகள்கூட உள்ளன. இந்தப் பிரச்சினைகளையெல்லாம் நாம் பாலியல் வசவுகள் மூலமாகவா எதிர்கொண்டோம்.
இவற்றோடு ஒப்பிடும் போது (கவனிக்க: ஒப்பிடும்போது) துரும்பளவு கருத்தை டுவீட்டரில் சொன்னதற்காக, சின்மாயி மட்டுமல்லாமல் அவரது தாயாரும் பாலியல் வசவுகளாலும் கிண்டல்களாலும் எதிர்கொள்ளப்பட்டதற்கான காரணம் அவர்கள் பெண்களாக இருப்பது என்பதல்லாமல் வேறென்ன. இது அப்பட்டமான ஆணாதிக்கத் தடித்தனம். அந்தத் தடித்தனத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முயற்சிப்பது அறிவுஜீவி அயோக்கியத்தனம். ஜெயலலிதாவும் ராமகோபாலனும் இல. கணேசனும் துக்ளக் சோவும் இந்து ராமும் நடமாடும் நாட்டில் சின்மயியின் அரசியல் கருத்தெல்லாம் ஒரு பொருட்டா என்ன! மன்னிப்புப் படலத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது என்றெல்லாம் நாம் யோசிக்க வேண்டாமா என்ன! தனது சாதியவாதக் கருத்துகளிற்காக சின்மயி வருத்தம் தெரிவிக்கவேண்டியது அவசியமே. ஆனால் சின்மயி மீது இழைக்கப்பட்ட பாலியல் ஆபாச வன்முறையைச் சுரணையுடன் தட்டிக் கேட்பதற்கும் அந்த வன்முறைக்கு எதிராக சின்மயி சட்டத்தின் உதவியை நாடிச் சென்றதை ஆதரிப்பதற்கும் ‘மன்னிப்புக் கேள்’ என்பது ஒருபோதும் முன்நிபந்தனையாக இருக்க முடியாது.
ஒரு பிரச்சினையை அதன் சூழமைவுகளிலும் முன்னும் பின்னுமான அரசியல் வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியிலும் ஆராய்வதே சமூகப் பொறுப்பான ஆய்வுமுறை. சின்மயி பிரச்சினையை மட்டும் ஸ்பெசலாகப் பிய்த்தெடுத்துப் பேசுவதும் அந்த அடிப்படையில் அவசர தீர்ப்புகளை வழங்குவதும் அநீதி. ஒருபுறம் பார்ப்பன நிறுவனங்களின் நிழலில் நின்று கொண்டே மறுபுறத்தில் ‘திடீர்’ பார்ப்பன எதிர்ப்பாளி வேடம் கட்டி அறச் சீற்றத்தில் ஆடுவது சந்தர்ப்பவாத அரசியல். “வாஜ்பேயிக்குப் பிறகு கவிதை எழுதும் இரட்டை நாக்குப் பேர்வழி மனுஷ்யபுத்திரன்தானா” என்று முன்பொருமுறை அ.மார்க்ஸ் சாடியது ஞாபகத்திற்கு வருகிறது.
ஒழுக்கம் எனப்படுவது எதுவெனில் மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறமோ அதேபோல நாமும் மற்றவர்களிடம் நடந்துகொள்வதே ஒழுக்கமாகும் எனறார் தந்தை பெரியார். எதிர்க் கருத்துள்ளவர்கள் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நாம் விரும்புகிறோமோ அதுபோலவே நாமும் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதே பெரியார் வலியுறித்திய அறம். அதை மறுபடியும் மறுபடியும் ஞாபகம் கொள்ளுங்கள்
மீன் சாப்பிடுகிறீர்களோ இல்லையோ, நாள் தவறாமல் வல்லாரைக் கீரை சாப்பிடுங்கள்.
manush or anyothers need not apologise for their stands, bcoz they have not put any one in jail to prove their point. But here didn’t she do lobbying to put them behind bars? And thats where people see her credibility and check if she is really that much innocent and a good soul as she self proclaims it.
Sir,
By supporting reservation, the quality of management and administration has already degraded. Instead of supporting resevations, people should talk about improving the quality of Daliths to reach new heights.
The so called backward classes fully exploited the Daliths and still want to enjoy reservations.
Think & act instead of Act and think
Sundar
sir sorry …. தவறாக நினைக்க வேண்டாம் எதற்கு எடுத்தாலும் பார்பனன் பார்பனன் என்று ஜாதி பெயரை குறிப்பது ஏன்? ஜாதி பெயர் கூடாது என்றுதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தழித் என்று பெயர் வைத்தனர் ….நான் பார்பனன் இல்லை ஆனாலும் இந்த ஜாதி பெயர் ஒளிய வேண்டும் என்னும் ஒருவன் பெரியாரை தமிழ் தலைவராக கூறும் நீங்கள் மற்றும் அனைத்து முற்போக்கு எழுத்தாளர் ஏன் தொல்காப்பியர், திருவள்ளூர், ஔவையார் முதல் பாரதியார் வரை இவர்களை ஏற்கமாட்டிர்கள் தமிழ்,ஆன்மீகம ( இந்து) இந்த இரண்டையும் பிரித்ததால் வந்த விளைவு தமிழ் அழிந்தது கொண்டிருக்கிறது என்பதனை ஏற்கமறுகிறிர்கள் ….. ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு தமிழ் எழுத்தாளர் வரலாறு கூறும்படி இருந்தனர் ஆனால் இப்போது ……. தமிழினம் பற்றி பேசும் எழுத்தாளர்கள் அங்கு பூர்வகுடி மக்கள் (இந்துகள்) இஸ்லாமியர், சிங்களர் இனைந்து இப்போது தாக்கப்படுகின்றனர் இதைப்பற்றி ஏன் வாய் திறக்கவில்லை ஏன் ? பெரியார் அவர்கள் இந்து மதத்தை மட்டுமா குறிப்பிட்டார் இஸ்லாமியரையும் தான் ஏன் பார்பனன் என்று கதறும் பெரியாரின் மாணவர்கள் இஸ்லாமியர் பற்றி பேச முடியாமல் போனது தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும் நான் உங்கள் போல் எழுத்தாளர் இல்லை , அனைத்தும் தெரிந்தவன் இல்லை உங்கள் பனி தொடர வாழ்த்துகள் …….மறந்த ஒன்று தமிழர்கள் என்றால் யார்? தமிழர்கள் தமிழ் பேசி தமிழ் கலாச்சாரம் பின்பற்றுப்பவர்கள? இல்லை தமிழ் பேசினால் மட்டும் போதுமா? தமிழர் கலாச்சார, அடையாள சின்னத்தில் தஞ்சை கோவிலும் ஒன்று சில நாட்கள் முன்தினம் ராஜா ராஜா சோழன் பிறந்தநாள் தமிழை ஆயுதமாக பயன்படுத்தும் அனைத்து எழுத்தாளர்கள் என்ன மரியாதை இந்த தமிழ் எழுத்தாளர் சங்கம் கொடுத்தது