யாழ்ப்பாணத்தின் மயிலிட்டிக் கிராமத்தில் பிறந்த புஷ்பராணி, ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்ககால அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கியவர். தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவு அமைப்பாளராக இருந்தவர். ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்ட வரலாறில் முதலாவதாகச் சிறைக்குச் சென்ற இரு பெண் போராளிகளில் ஒருவர். புஷ்பராணி எழுதி, இம்மாதம் ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கும் அகாலம் : ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள் நூலுக்கு கவிஞர் கருணாகரன் அளித்திருக்கும் முன்னுரை:
சிதைந்து போயிருக்கும் ஈழப்போராட்டம் இன்று யுத்தக் குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்தச் சாட்சியங்களின் அடிப்படையில் அது விசாரணையைக் கோருகிறது. அந்த விசாரணையின் மூலம் அது தனக்கான நீதியைப் பெற முயல்கிறது. பொறுப்புக் கூறலும் விசாரணை செய்தலும் என்ற விவகாரங்கள் இன்று கூடுதற் பேசுபொருளாகியுள்ளன. ஆனால் இந்த விசாரணையானது வெளியே, எதிர்த்தரப்பின் மீதே, இலங்கை அரசின் மீதே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான போராட்டக்காரர்களின் நிலைப்பாடு. இதற்கான நீதியும் வெளியே இருந்து கிடைக்க வேண்டும் என்றே அவர்கள் நம்புகிறார்கள். இதில் நியாயமுண்டு. ஆனால், இது மட்டும் ஈழத்தமிழர்களின் போராட்டச் சிதைவைச் சீர்ப்படுத்தி விடாது. அவர்களுடைய சமூக – அரசியல் விடுதலையைச் சாத்தியப்படுத்தாது. இத்தகைய ஒற்றைப் படையான சிந்தனை எவ்வளவுக்கு நியாயமானது, எவ்வளவுக்குச் சரியானது, எவ்வளவுக்கு நடைமுறைக்குப் பொருத்தமானது ?
போராட்டம் சிதைந்திருக்கிறது அல்லது சிதைக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் போராட்டத்தினுள்ளே தவறுகளும் குற்றங்களும் குறைபாடுகளும் நிரம்பியுள்ளன என்றே அர்த்தமாகும். வெளியிலிருந்து ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகள், சிதைப்புகளுக்கு நிகராக உள்ளரங்கில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களும் விடப்பட்ட தவறுகளும் போராட்டத்தைச் சிதைத்துள்ளன. வெளிநோக்கி விரிந்திருக்க வேண்டிய போராட்டம் உட்சுருங்கியுள்ளமைக்கு இவையே காரணம். அவ்வாறெனில் அதனுள்ளே இருக்கும் குறைபாடுகளையும் தவறுகளையும் குற்றங்களையும் விசாரணை செய்ய வேண்டும். அந்த விசாரணைக்கு சாட்சியங்கள் அவசியமானவை, முக்கியமானவை. இந்த விசாரணை வெளியே இருந்து செய்யப்படுவதையும் விட, அமைப்புகளின் உள்ளே, கட்சிகளின் உள்ளே, போராட்டத்தில் ஈடுபட்ட – ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரின் உள்ளேயும் நடக்க வேண்டும். விருப்பு வெறுப்புகள், உடனடி இலாப நட்டங்களுக்கு அப்பால், அப்படிச் சுய விசாரணைகளைச் செய்தாற்தான் தவறுகளைக் களையலாம். பிரிவுகளுக்கும் சிதறல்களுக்கும் காரணமான பகைக் கூறுகளைத் தவிர்க்கலாம். நம்பிக்கையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தலாம். பின்னடைவுகளைக் கடக்கலாம்.
குறைந்த பட்சம் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும், தங்களால் ஏற்பட்ட பின்னடைவுகள்தான் போராட்டத்தையும் சிதைத்து, மக்களையும் இந்த அவல நிலைக்குக் கொண்டு வந்துள்ளன என்பதயும் உணர்ந்துகொள்ள வேண்டும். தாங்கள் புனிதர்கள் என்ற பிம்பங்களை விட்டு இறங்கி வரவேண்டும்.
குற்றங்களாலும் தவறுகளாலும் குறைபாடுகளாலும் நிரப்பப்பட் டுப் பெரும் சிதைவைச் சந்தித்திருக்கும் ஈழப்போராட்டத்தில், பத்துக்கும் உட்பட்ட சிறிய எண்ணிக்கையைக் கொண்டவர்கள் மட்டுமே தங்களின் போராட்ட சாட்சியங்களை முன்வைத்திருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நிலைப்பாட்டில் இருந்தே இந்தச் சாட்சியங்களை முன்வைத்திருக்கின்றனர். அல்லது தாம் இயங்கிய அமைப்புகளில் இருந்து விலகிய நிலையில், செயலாற்றும் விசைப்பரப்பிலிருந்து விடுபட்ட நிலையில் இருந்தே தங்களின் இந்தச் சாட்சியங்களை அளித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் சுயவிசாரணைக்கும் சாட்சியமளித்தலுக்கும் இவர்கள் இன்று தம்மைத் தாமே உட்படுத்தியுள்ளனர்.
போராட்டத்தைப் பற்றி, விடுதலையைப் பற்றி இவர்களுக்கிருக்கும் அக்கறையும் வேட்கையும் இவர்களுடைய இந்தச் சாட்சியமளிப்பிற்கான அடிப்படையாக உள்ளதை நாம் மனங்கொள்ள வேண்டும். இந்தச் சாட்சிகள் ஏதாவது இயக்கங்களில் அல்லது கட்சிகளில் இன்னும் அங்கத்துவத்தைக் கொண்டிருந்தால் நிச்சயமாக இவர்களால் இந்தச் சாட்சியங்களை இவ்வாறு வெளிப்படைத்தன்மையுடன் வெளிப்படுத்தியிருக்க இயலாது. ஏனெனில் இன்னும் அதே குறைபாடுகளுடனும் தவறுகளுடனும் குற்றங்களை இழைக்கும் மனநிலையுடனும்தான் எல்லா அமைப்புகளும் எல்லாத் தலைமைகளும் உள்ளன. அணுகுமுறைகளிலும் பார்வையிலும் மாறாத பிடிவாதம் கொண்டிருப்பதை ஈழப்போராட்டத்தை விட வேறெந்தப் போராட்டத்திலும் காண முடியுமோ தெரியவில்லை. அந்த அளவுக்கு ஈழப்போராட்டம் தன்னுடைய உட்பரப்பில் இறுகிக் கெட்டி தட்டிப்போயுள்ளது. அதனுடைய உட்பரப்பு இன்னும் இருண்டேயிருக்கிறது.
1965 ஜூனில் பாலஸ்தீன எழுச்சி பின்னடைவுக்குட்பட்டபோது அதைக் குறித்து அங்கே பெரும் வாதப் பிரதிவாதங்களும் மீளாய்வுகளும் நடந்தன. வங்கப் போராட்டம், தெலுங்கானாப் போராட்டம் போன்ற அயற்போராட்டங்கள் கூட தமது போராட்டப் பதிவுகளைச் செய்துள்ளன, சுய விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. சாட்சியங்களை முன்வைத்துள்ளன. ஆனால், ஈழப் போராட்டத்தில் சாட்சியமளித்தலையும் விட, சாட்சிகளை மௌனமாக்கும் போக்கே பலமாக உள்ளது. இது இந்தப் போராட்டத்தின் கூடப் பிறந்த குணவியல்பு.
சாட்சியமளிக்கா நிலை – சாட்சியமளித்தலைத் தடுப்பது என்பவை அதிகாரத்தைப் பேண முற்படுவதன் தூய வெளிப்பாடுகளாகும். இந்த மனநிலையானது தவறுகளைக் குறித்தும் பின்னடைவுகளைக் குறித்தும் சிந்திக்கப்போவதுமில்லை, அவற்றைப் பொறுப்பேற்கப்போவதுமில்லை, அவற்றைக் களையப்போவதுமில்லை. இவற்றுக்குக் குறி அதிகார பீடத்தைப் பாதுகாப்பதே.
அப்படியாயின் தொடர்ந்தும் தோல்விகளும் அழிவும் பின்னடைவும் சிதைவுந்தானா? இந்த நிலையில் எவ்வாறு போராட்டத்தை மேலும் முன்னெடுக்க முடியும்? விடுதலையைப் பெற முடியும்? சுதந்திரத்தை அனுபவிக்க இயலும்? சுயவிசாரணை என்பதும், சாட்சியமளித்தல் என்பதும் பொறுப்புக் கூறுதல் என்பதும் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயற்பாடுகளாகும். இதைச் செய்யாமல் ஏற்பட்டிருக்கும் இந்தப் பெருந்தேக்கத்திலிருந்து போராட்டத்தை எப்படி முன்னகர்த்துவது? எப்படி விடுதலையைப் பெறுவது?
இந்தக் கேள்விகள் இன்று பகிரங்கத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படவேயில்லை. கவனிக்கப்படவும் இல்லை. இதுதான் மிகமிகச் சோகமானது. இந்தப் பின்னணியிற்தான் இங்கே இன்னொரு சாட்சியாக, ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகிய புஷ்பராணி தன்னுடைய சாட்சியத்தை அளிக்க முன்வந்துள்ளார். அவருடைய சாட்சியமாக ‘அகாலம் : ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்’ என்ற வரலாற்றுப் பதிவு இங்கே முன்வைக்கப்படுகின்றது.
புஷ்பராணி ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர். பல்வேறு தரப்பினருடனும், ஈழப்போராட்ட இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும் பின்னாளில் தலைவர்களாக இருந்தவர்களுடனும் அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வர முன்னரே இணைந்து செயற்பட்டவர். சகபயணியாக இருந்தவர். இந்தப் போராட்டத்தினால் மிகக் கொடுமையான வதைகளையும் பாடுகளையும் உச்ச ஒடுக்குமுறையையும் சந்தித்தவர். அகிம்சை வழியான போராட்டத்தில் நம்பிக்கை இழந்த அன்றைய இளைய தலைமுறையினருடன் ஆயுதப் போராட்டத்தைப் பற்றிச் சிந்தித்தவர். இன்று அகிம்சை வழியான பாராளுமன்ற ஜனநாயக முறைமை அரசியல் மட்டுமல்லாமல் ஆயுதப்போராட்ட அரசியலும் பெரும் சிதைவுகளையே தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்படுத்திய நிலையில் புஷ்பராணி இந்தச் சாட்சியத்தை வெளிப்படையாக , ஆதாரபூர்வமான தகவல்களோடு, வாழும் சாட்சியங்களோடு முன்வைக்கிறார்.
“உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது” என்ற புஷ்பராணியின் வார்த்தைகளின் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஆற்றாமை சாதாரணமானதல்ல. அது ஆழ் அனுபவத்திற்குரிய – ஆழ் புரிதலுக்குரிய ஒன்று. இன்னுமே தணியாத இலட்சியத்தோடிருக்கும் ஓர் ஈழ விடுதலைப் போராளியின் அனுபவமொழி இப்படித்தான் கூர் வாளாக இதயத்தில் பாயும். எத்தனையோ முயற்சிகளுக்குப் பிறகும், எவ்வளவோ தியாகச் செயல்களுக்குப் பின்னரும் இன்னுமே முடியாத இந்த அவலப்பரப்பு இதயத்தில் தீயைத்தான் மூட்டும். இலட்சியப் பிடிப்போடு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு முன்னோடியின் முதுமைக்கால அனுபவங்களும் நிலையும் ‘உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது’ என்று உணர்வதைத் தவிர வேறு எப்படி இருக்க முடியும்!
இந்த நிலை, போராட்டம் சிதையத் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து தொடர்ந்திருக்கிறது. ஈழப்போராட்டம் எப்பொழுது சிதையத் தொடங்கியதோ அப்போதிருந்து இந்தத் துக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று துக்கப் பெருங்காடாகியுள்ளது. ஆனால், இந்த அடிப்படையான உண்மையைப் பெரும்பாலான ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை. அல்லது உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளின் வீழ்ச்சியும் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சியுமே தோல்வியாகவும் துக்கமாகவும் தெரிகின்றது.
என்னை விட மூத்தவர்கள், என் சமகாலத்தவர்கள், எனக்குப் பிந்தியவர்கள் என ஈழப்போராட்டத்தில் பங்கேற்று, சனங்களுக்காகவே தங்களைக் கரைத்த அத்தனை பேரின் இதயங்களிலும் கடந்து செல்ல முடியாத துக்கங்களும் அவற்றின் நிழலான நினைவுகளும் அலைமோதிக்கொண்டேயிருக்கின்றன. இந்தத் துக்கமென்பது சீர்ப்படுத்தவே முடியாத அளவுக்குச் சிதைந்து கொண்டிருந்த ஈழப்போராட்டத்தைப் பற்றியது. கூடவே, இன்று முழுச் சிதைவுக்குள்ளான போராட்டத்தையும் சனங்களைப் பற்றியதும்.
இங்கே எங்களின் முதல் தலைமுறையினரில் ஒருத்தி, எங்களுக்கு முன்னோடியாக இருந்த ஒருத்தி, போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் காயங்களையும் வலியையும் ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஒருத்தி, ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற தன்னுடைய அந்தக் கடந்த காலத்தின் துக்கப் பரப்பைக் கடக்க முடியாமற் திணறிக்கொண்டிருக்கிறாள். தன்னுடைய இனம் அனுபவித்து வரும் அதனுடைய துயரங்களையும் பாடுகளையும் கடந்து விடவேண்டும் என்பதற்காக அவள் தாங்கவே முடியாத அத்தனை சிரமங்களையும் பாடுகளையும் ஏற்றுக்கொண்டு விடுதலைக்காக உழைத்தாள். ஆனால் அவளால் வெற்றியைப் பெற முடியவில்லை. ஆறுதலையும் நிம்மதியையும் அடையமுடியவில்லை. பதிலாக எல்லா நிலைமைகளும் மேலும் மோசமாகியே விட்டன. எதிர்நிலைகள் பெருகி எல்லா வாசல்களையும் அடைத்துள்ளன.
புஷ்பராணி தனது சாட்சியத்தை இவ்வாறு ஆரம்பிக்கின்றார்: “மிகுந்த நம்பிக்கையுடனும் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளுடனும் தொடக்கப்பட்ட ஒரு நியாயமான போராட்டத்தை நாங்கள் தோற்றுவிட்டு நிற்கின்றோம். எங்களது நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இன்று ஆயுதம் தரித்த இராணுவத்தினர் உலாவிக்கொண்டிருக்கிறார்கள். நாம் நேற்றிருந்த வீட்டில் இன்று புதிதாக ஒரு புத்தர் சிலையை யுத்தத்தில் வென்றவர்கள் நாட்டி வைத்திருக்கிறார்கள். போராளிகளின் கல்லறைகள் உடைத்து நொருக்கப்பட்டு அடையாளங்களற்ற கற்குவியல்களாக்கப்படும் காட்டுமிராண்டித்தனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி இப்போதும சாம்பல் மேடாயிருக்கிறது.”
இது உண்மையின் உரைப்பு. ஈழப் போராட்டப் பாதையைக் குறித்த விமர்சனம். போராட்ட வரலாற்றின் இறுதி விளைவைப் பற்றிய சித்திரம். மேலும் இது இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவரின் துக்கம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் மதிப்பீடு, மேலும் தாங்கிக் கொள்ளவே முடியாத உள்ளக் குமுறல். அதேவேளையில், இது பொதுத் துக்கமாகவும் பொது மதிப்பீடாகவும் பொதுநிலைப்பட்ட குமுறலாகவும் உள்ளது.
புஷ்பராணியின் இந்தப் பதிவு ஒரு வரலாற்றுப் பதிவாக மட்டுமல்லாமல், கடந்த நாற்பது ஆண்டுகால ஈழ அரசியற் போக்குகளின் மீதான விமர்சனமாகவும் இந்தப் போராட்ட காலத்திற் செயற்பட்ட முன்னோடிகளைப் பற்றிய சித்திரங்களாகவும் எழுதப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தின் போது தன்னுடன் இணைந்து சகபயணிகளாகச் செயற்பட்டவர்களின் வாழ்வையும் வரலாற்றையும் கூட பதிவாக்கியுள்ளார் புஷ்பராணி. இவ்வாறு பதியப்பெறும் பொழுது, இந்தக் காலகட்டத்தின் அரசியல் இயக்கங்களைப் பற்றியும் அவற்றின் தலைமைப் பொறுப்புகளிலிருந்தோரைப் பற்றியும் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள், அணுகுமுறைகள், அவர்களுடைய ஆளுமை, தனிப்பட்ட குணவியல்புகள் போன்ற முக்கியமான அம்சங்களைப் பற்றியும் கவனப்படுத்துகிறார். அதேவேளை அன்றைய சமூக அதிகார அடுக்குமுறை, இயக்கங்கள் மற்றும் கட்சிகளில் நிலவிய அசமத்துவம், சிங்கள மேலாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இலங்கை அரசினதும் அதனுடைய பொலிஸ், சிறைச்சாலை போன்ற அதிகார அடுக்குகள் செயற்பட்ட விதங்களைப் பற்றியும் வெளிப்படுத்துகிறார்.
” மிதவாதப் போக்கில் வெறுப்புற்ற தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தரித்த விடுதலை இயக்கங்களாகத் திரண்டபோது இயக்கங்களை ஆதரித்து தமிழ் மக்கள் அவர்களுடன் நின்றார்கள். விடுதலை இயக்கங்கள் வெகு விரைவிலேயே அதிகார மையங்களாக மாறுவார்கள் என்றும் சொந்த மக்களையே கொன்று குவிப்பார்களென்றும் அப்போது யாரும் கருதியிருக்கவில்லை. இயக்கங்களைத் தொடங்கிய போராளிகள் கூட அவ்வாறு கருதியிருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.” என மிக எளிய வார்த்தைகளில் மிகச் சுருக்கமாகவும் ஆழமாகவும் உண்மை நிலையை விளக்குகிறார் புஷ்பராணி.
வரலாற்றையும் நிகழ்ச்சிகளையும் கூர்மையாக அவதானித்து மதிப்பிடும் ஒருவருக்குத் தடுமாற்றங்கள் ஏற்படாது. “இயக்கங்களைத் தொடங்கிய போராளிகள் கூட அவ்வாறு கருதியிருக்க மாட்டார்கள்” என்று சொல்வது மிகச் சரியான கூற்று. இதை நான் என் வாழ்விலேயே நேரிற் கண்டிருக்கிறேன். எந்தப் போராளியும் அடுத்த இயக்கத்தை அழிப்பதற்காகவோ, பொதுமக்களின் மீது துப்பாக்கியை நீட்டுவதற்காகவோ போராட்டத்தில் இணையவில்லை. ஆனால், விடுதலை இயக்கங்கள் அதிகார மையங்களாக மாறியமையே பின்வந்த விளைவுகளுக்கும் சீரழிவுகளுக்கும் துக்கத்துக்கும் காரணமாகின. இதற்கான காரணங்களை இயக்கத் தலைமைகளே பொறுப்பேற்க வேண்டும்.
இது மீள்பார்வைகளின் காலம், போராட்ட அனுபவங்களை எழுதும் காலம். ஈழப் போராட்டத்தில் பங்கேற்ற போராளிகள் தங்களுடைய அனுபவங்களை, மீளாய்வு நோக்கில் எழுதுகின்றனர். பல்வேறு இயக்கங்களினதும் வெளியீடுகள் என்பதற்கப்பால், கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ என்ற புதினத்தைத் தொடர்ந்து புனைவிலக்கியப் பதிவுகள் ஏராளமாக வந்துள்ளன. ஆனால், இந்த ‘அகாலம்’ போன்று மெய்வரலாற்றுப் பதிவுகள் மிகக் குறைவானவையே. ஆனால், இப்போது இந்தப் பதிவுகள் அதிகமாக எழுதப்படத் தொடங்கியுள்ளமை கவனத்திற்குரியது.
தோற்றுப்போன போராட்டம் ஏற்படுத்தும் துக்கநிலையில் நின்று பெரும்பாலான அனுபவங்கள் எழுதப்படுகின்றன. ஆனால், இவை கழிவிரக்கத்தின் பாற்பட்டவையல்ல. மேலும் இந்தத் துயரநிலை தொடரக்கூடாது என்ற விருப்பத்தினடிப்படையில் இந்த வரலாற்றைப் பலரும் எழுதுகின்றனர். செழியன், சி.புஸ்பராஜா, கணேசன் ஐயர், நேசன், மணியம், குருபரன், ரயாகரன் போன்றவர்களுடைய அனுபவங்கள் இந்தவகையில் வாசிப்புக்குரியனவாகியுள்ளன.
2
வரலாற்றைப் பதிவு செய்வதொன்றும் எளிமையான காரியமல்ல. அதிலும் தான் வாழ்ந்த காலத்தை, தான் பங்காற்றிய அரசியல் இயக்கங்களின் வரலாற்றை, தான் பங்களித்த முறைமையின் வரலாற்றைப் பதிவு செய்வது என்பது மிகக் கடினமான காரியம். தன்னை அல்லது தம்மையே முதன்மைப்படுத்தி அல்லது தாம் சார்ந்தியங்கிய போக்கினை மையப்படுத்திச் சிந்திக்கும் ஒரு தடித்த மரபுடைய நமது சூழலில் அதிலிருந்து விலகி நேர்மைத்தன்மையுடன் – தன்னைப் பொது நிலையில் வைத்து, தன்னையும் வரலாற்றுச் சூழலையும் மதிப்பிடுவதும் பதிவு செய்வதும் முக்கியமானது. புஷ்பராணி இங்கே தன்னை, தன்னுடைய செயற்பாடுகளை, தான் சார்ந்தியங்கிய அமைப்புகளின் தன்மைகளை, தன்னுடைய தவறுகளை, தன்னுடைய பலங்களை, பலவீனங்களை, சேர்ந்தியங்கியவர்களின் மாண்பை, அவர்களிற் சிலரின் குழிபறிப்புகளை, விட்டோடல்களை எல்லாம் பகிரங்கமாகவே பேசுகிறார். ஒளிவு மறைவற்ற வெளிப்படுத்தலில் இவை பேசப்படுகின்றன. முக்கியமாக இயல்பாகவே அவரிடம் கூடியுள்ள ஓர்மத்தை அவர் வெளிக்காட்டிப் பேசுகிறார்.
இத்தகைய ஓர்மம் அவருடைய குடும்பத்திலிருந்து உருவாகியது என்றே கருதுகிறேன். தன்னுடைய சாதி, தன்னுடைய குடும்ப நிலைமை, தன்னுடைய திருமண வாழ்க்கை எனச் சகலதைப் பற்றியும் அவர் முற்றிலும் வெளிப்படையாகவே பேசுகிறார். எதற்கும் அவர் கூச்சப்படவில்லை. எதையிட்டும் அவர் தயக்கங்களைக் காட்ட விரும்பவில்லை. எதையும் மறைக்க வேண்டும் என்று அவர் உணரவில்லை. திறக்கப்பட்ட புத்தகமாகவே தன்னுடைய அனுபவங்களை அவர் விரித்து வைக்கிறார். இவ்வாறு அவர் பகிரங்கமாக அந்தக் காலத்தை விரித்து வைக்கும்போது பல பிம்பங்கள் சிதைகின்றன. சில இருட்பரப்புகள் ஒளி பெறுகின்றன. பிம்பங்களையும் புனிதங்களையும் இருட்டடிப்புகளையும் உற்பத்தி செய்கின்ற சமூகத்தில், தவறுகளையும் தோல்விகளையும் திரைகளுக்குப் பின்னே இழுத்து மறைக்கின்றவர்களிடையே புஷ்பராணி விலகித் தனித்துத் தெரிகின்றார்.
இதேவேளை வரலாற்றைப் படிப்பதிலும் வேறுபாடுகள் உண்டு. எழுதப்படும் வரலாறானது வாசிப்பவரின் வாழ்வையும் அவர்களுடைய காலத்தையும் மையப்படுத்தியிருக்குமானால் அதன் கவர்ச்சியும் முக்கியத்துவமும் வேறு. இரத்தமும் தசையும் நிரம்பிய உயிருள்ள ஜீவனாக இந்த வரலாறு அமையும். அதை வாசிக்கும் உணர்வும் வேறானது. அதற்கப்பால் வாசிக்கப்படும் வரலாறு வெறும் தகவல்களாகவும் நிகழ்ச்சிகளின் பதிவாகவும் விவரிப்பாகவும் சுருங்கிவிடுகிறது. புஷ்பராணியின் வரலாற்றுக் காலத்திற் பயணித்தவர்களுக்கு இந்தப் பதிவு இரத்தமும் தசையுமான பொக்கிஷமே.
யாரும் தங்களுடைய நிகழ்காலத்தை எளிதாகக் கடந்து விடலாம். அல்லது அதைச் சற்றுக் கடினமான நிலையில் எதிர்கொண்டு கடந்து விடலாம். ஆனால், இத்தகைய வரலாற்றுப் பதிவொன்றில் இருந்து அவர்கள் தங்களை, தங்களுடைய கடந்த காலத்தை அவ்வாறு கடந்து விட முடியாது. அது மிகக் கடினமானது. இந்த நிலைமையானது இரண்டு நிலைகளில் இரண்டு தரப்பினரைச் சுற்றிய ஒரு பாம்பாக உள்ளது.
ஒன்று, கடினமான கடந்த கால நினைவுகளைக் கடந்து செல்ல முடியாமற் தத்தளிக்கும் புஷ்பராணியைப் போன்றவர்களின் நிலை. மற்றது, அதிகாரங்களாலும் குற்றங்களாலும் நிரப்பப்பட்ட நிகழ்காலத்தை உருவாக்கியவர்களும் அதிகார அமைப்புகளும் இத்தகைய வரலாற்றுப் பதிவொன்றிலிருந்து தம்மை மறைத்து விட முடியாது. அதை எளிதிற் கடந்து விடவும் முடியாது. ‘அகாலம்’ என்ற இந்தப் பதிவில் நாம் இந்த இரண்டையும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.
இந்தப் பதிவில் கடந்த நாற்பது ஆண்டுகால நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தரப்புகள் வெளிக்காட்டப்படுகின்றன. அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்களிடையே செல்வாக்கைப் பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை, தமிழீழ விடுதலை இயக்கம் (TLO), தமிழ் மகளிர் பேரவை போன்றவற்றின் செயற்பாடுகளும் அவற்றோடு புஷ்பராணிக்கிருந்த உறவும் முரணும் இங்கே கூறப்படுகின்றன. தவிர, இந்த ஈழ விடுதலை வரலாற்றுப் போக்கில் யார் எல்லாம் மனித விழுமியங்களிற்கு மாறான குற்றச் செயல்களுக்குக் காரணமானார்கள், எவரெவர் மனச்சாட்சிக்கும் பொது ஒழுங்குக்கும் மாறாக எவ்வாறெல்லாம் செயற்பட்டனர் என்பதையும் புஷ்பராணி பதிவு செய்கிறார். இப்படி எல்லாம் பதியும்போது அவர்களால் இந்தக் கடந்த காலத்தைக் கடந்து விட முடிவதில்லை. அதேவேளை மனித நேசிப்பைத் தமது ஆதார சக்தியாகவும் வழிமுறையாகவும் கொண்டியங்கிய வரலாற்றின் நாயகர்கள் மேலும் இங்கே ஒளியூட்டப்படுகின்றனர். இதுதான் வரலாற்றை நோக்கும் நோக்குநிலையில் நம் கவனத்தைக் கோருவது. எத்தகைய நோக்குநிலையிலும் இந்த அடிப்படையைத் தவிர்க்க முடியாது.
இந்த வரலாற்றுப் பதிவு நூலில் விவரிக்கப்படும் கால நிகழ்ச்சிகளை இங்கே படிக்கும்பொழுது மீளவும் அந்தக் காலம் மனதில் விரிகிறது. சில நிகழ்ச்சிகளை அந்தக் காலகட்டத்திலேயே அறிந்தவனாகவும், சிலவற்றில் பங்கேற்றவனாகவும் நான் இருந்திருப்பதால், இந்த அனுவங்களிற் பலவும் என்னுடைய அனுபவங்களையும் ஒத்திருக்கின்றன. எனக்கும் புஷ்பராணி அக்காவிற்கும் இடையில் ஏறக்குறைய பன்னிரண்டு வயது வித்தியாசங்கள். என்றாலும் 1975க்குப் பிந்திய நிகழ்ச்சிகள் மெல்லமெல்ல ஒளிகூடியவையாக என் மனதில் இன்னும் இருக்கின்றன.
உலகத் தமிழாராய்சி மாநாடு, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் மாணவர் பேரவை என்று நீளும் பதிவுகள்… அதேவேளை இந்த நூலில் குறிப்பிடப்படும் சிலருடன் பின்னாட்களில் நெருக்கமாகவும் சிலருடன் ஒரு குறிப்பிட்ட அளவிலான உறவுடனும் இருந்திருக்கிறேன். இன்றும் கூட சிலருடன் நெருக்கமான உறவுண்டு. இவர்களுடன் வாழ்ந்து, பழகியபோது இவர்கள் ஒவ்வொருவரின் துக்கத்தையும் அருகிருந்தே பார்த்திருக்கிறேன். தாங்களும் மரணத்துடன் விளையாடி, சனங்களையும் மரணத்துடன் விளையாட விட்டிருக்கிறோம் என்ற துக்க உணர்வு சிலரிடம் மேலோங்கியிருந்தது.
அதனால், இந்தப் பதிவை வாசிக்கும்போது இந்தக் காலகட்டத்து நிகழ்ச்சிகளின் போக்கை மிகத் தெளிவாகவே அடையாளம் காண முடிகிறது. கூடவே இந்த நிகழ்ச்சிகளின் பாற்பட்ட வரதராஜப்பெருமாள், அன்னலிங்கம் ஐயா, வே.பாலகுமாரன், கி.பிரான்ஸிஸ், கே. பத்மநாதன் போன்ற ஆளுமைகளையும், அவர்களின் குணவியல்புகளையும் அவர்களாற்றிய பங்களிப்புகளையும் அவற்றின் விளைவுகளையும் அடையாளம் காண முடிகிறது.
முக்கியமாக வே. பாலகுமாரனைக் குறித்து புஷ்பராணி சொல்வது ஒரு குறியீடு என்றே சொல்லலாம். அவர் எழுதுகிறார்:
“பாலகுமாரன் அதீத சுகாதார உணர்வுள்ளவர். அவர் எப்போதும் துடைப்பமும் தண்ணீருமாகக் கழிவறையைச் சுத்தம் செய்தவாறேயிருந்தார். எனினும் அது அவரது சக்திக்கு மீறிய காரியமாகவேயிருந்தது”
இறுதி வரை அவர் இப்படித் தான் இருந்தார், எல்லாவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன்.
3
சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் அரசு, சிங்கள இனவாத அரசாக வெளிப்படையாகவே செயற்படத் தொடங்கியதை அடுத்துச் சிறுபான்மை இனங்கள் மிக நெருக்கடிக்குள்ளாகின. பின்னாட்களில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் இதில் மேலும் உச்ச நெருக்கடிகளையும் அவலத்தையும் சந்தித்தனர். இந்த நிலையில், 1950 இல் இலங்கையில் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணத்துக் கிராமமொன்றில் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவொன்றிற் பிறந்த பெண் ஒருவர் எத்தகைய நெருக்கடிகளுக்கும் அவலத்திற்கும் உள்ளாகியிருப்பார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறான ஒருவர் சாதாரணமாகவே, இனரீதியாகவும், சாதி ரீதியாகவும் பெண்ணென்ற நிலையிலும் பலமுனைகளில் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டும். அதிலும் அரசியல் ஈடுபாட்டைக்கொண்ட பெண் என்றால் இந்த நெருக்கடிகளைச் சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு அவை எல்லை மீறியவை. இத்தகைய நெருக்கடிகளையும் அவலத்தையும் சந்தித்தவரே புஷ்பராணி.
புஷ்பராணியின் போர்க்குணம் அவருடைய குடும்பத்திற்குள்ளிருந்தே கிளம்புகிறது. அவருடைய தந்தை சிதம்பரி ஒரு முக்கியமான ஆளுமையாக இருந்திருக்கிறார். தாய் சின்னம்மா இதற்கு உறுதுணையாக நின்றவர். இந்தப் புத்தகத்தில் அவர்களைப் பற்றிய விவரங்களுக்குத் தனியாக அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லையாயினும் புஷ்பராணி மற்றும் அவருடைய சகோதரர் சி.புஸ்பராஜா ஆகியோரின் ஆளுமை உருவாக்கத்திலும் அரசியல் ஈடுபாட்டிலும் குடும்பத்தின் பங்களிப்பு முக்கியமான பாத்திரத்தை வகித்துள்ளது. அதனால், அந்தக் குடும்பம் அக்காலத்தில் பெரும் இன்னலுக்கும் துயரத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. ஆனாலும் அவர்கள் இறுதிவரையில் பின்னகர்ந்து விடவில்லை. இதோ, இப்போதும் வரலாற்றில் முன்னிலைச் செயற்பாட்டுக்குரிய அடித்தளத்துடனேயே இருக்கின்றனர். ‘அகாலம்’ என்ற இந்தப் பதிவு, மற்றும் .சி.புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற பதிவு இரண்டும் இந்த ஓர்மமான அடித்தளத்திற்கு நல்ல ஆதாரம்.
அதிக வசதி இல்லாத, அடிநிலைப் பெண்ணாக அரசியற் பொதுவெளியிற் பிரவேசித்த புஷ்பராணி, மற்றும் புஸ்பராஜா ஆகியோர் அந்தக் காலத்திலேயே பொதுத் தளத்தில் தவிர்க்கப்பட முடியாத பாத்திரங்களைக் கொண்டிருந்தனர். இதற்குக் காரணம், இவர்கள் பின்பற்றிய அரசியல் மட்டுமல்ல, அந்த அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் அவர்கள் ஆற்றிய முன்னிலைச் செயற்பாடும் அதற்கான உழைப்பையும் துணிச்சலையும் ஓர்மத்தையும் கொண்டிருந்தமையே இந்த முன்னணிப் பாத்திரங்களுக்குக் காரணங்களாகின்றன. இந்த ஓர்மந்தான் இவர்களுடைய அடையாளம். இதுதான் இவர்களை இன்னும் நின்றியக்கி வருகிறது. களத்திலிருந்து இவர்கள் இறுதிவரை விலகுவதேயில்லை.
பொதுவாகவே, போராட்டத்திலும் யுத்தத்திலும் முதலிற் பாதிக்கப்படுவது பெண்களே. மிக உச்சப் பாதிப்பைச் சந்திப்பதும் பெண்களே. இந்த உலகம் பெண்களுக்கே துக்கத்தையும் காயங்களையும் வலிகளையும் அதிகமாகக் கொடுத்துள்ளது. உலகம் முழுதுமுள்ள பொது நிலை இது. இந்த நிலைக்கு எந்தச் சமூகமும் எந்தக் காலமும் விலக்கில்லை. எப்போதும் வன்முறையில் இலக்கு வைக்கப்படும், வன்முறைக்குப் பலியாகும் முதல் மனித உயிரி பெண்ணே.
அதிலும் அரசியல் ஈடுபாட்டின் காரணமாக பொதுவெளியில் எழுச்சியடையும் பெண் – இயங்கும் பெண், ஆதிக்கத் தரப்பினால் மிக மோசமான முறையில் ஒடுக்கப்படுவாள். தெலுங்கானாப் போராட்டத்தில், எரித்திரியாவில், எல்சல்வடோரில், சிலியில், காஷ்மீரில், மணிப்பூரில் என எல்லாத் திசைகளிலும் பெண் அவலத்திற்குள் வீழ்த்தப்பட்டுள்ளாள். இரண்டாம் உலகப் போரின்போது மிகமோசமான முறையில் ஜேர்மனியில் சிதைக்கப்பட்டது பெண்களே. ஹிட்லர் இருந்தபோது யூதப்பெண்களும் , ஹிட்லர் இறந்த பின்னர் நாஜிப் பெண்களும் சிதைக்கப்பட்டனர். மலேசியாவில், கேரளாவில், தென்னாபிரிக்காவில் என்று இந்தப் பட்டியல் நீளும்.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் அத்தகைய நிலையைச் சந்திக்கிறார் புஷ்பராணி. (இன்று ஏராளம் பெண்போராளிகள் இத்தகைய நிலைக்குள்ளாகியுள்ளனர்). ஒரு கட்டத்தில் பொலிஸ் தரப்பினரால் கைது செய்யப்படும் புஷ்பராணியும் சகதோழியான கல்யாணியும் படுகின்ற வதைகள் மிகப் பயங்கரமானவை, மிகக் கொடுமையானவை. மாதவிலக்கின்போது பயன்படுத்தப்படுவதற்குச் சாதாரண துணியொன்றைக்கூடப் பெறமுடியாத நிலை. இந்த நிலையைப் புஷ்பராணி இங்கே விவரிக்கும்போது எம்மால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாதிருக்கிறது. துக்கத்தின் பெரும்பரப்பொன்றில் நகர்ந்து கொண்டிருக்கும் வரலாற்றுப் பதிவாக இது இருந்தாலும் இந்த மாதிரியான மனிதனின் முழு நாகரீகத்திற்கும் இழுக்கான மனித நிலையைக் குறித்து சொல்லும்போது அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், இந்தக் கொடுமை இன்னும் நீங்கிவிடவில்லை . “இப்போது இராணுவத்தின் சிறைகளிலிருக்கும் புலிப் போராளிப் பெண்களின் நிலை இதை விடக் கேவலமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். எதிர்காலத்தில், அவர்களில் ஒருவருக்குத் தனது சிறைக் குறிப்புகளை எழுதி வெளியிடும் நாள் வாய்க்கும்போது இந்த நாகரிக உலகம் வெட்கித் தலைகுனியத்தான் போகின்றது” என்கிறார் புஷ்பராணி.
இன்று தமிழ் இணைய வெளியை ஆக்கிரமித்து அதை எச்சிற் பரப்பாக நிரப்பிக் கொண்டிருப்போர் இந்த வரலாற்றுப் பதிவை வாசிக்க வேண்டும். புஷ்பராணியின் அரசியற் தெரிகை, அவர் தேர்ந்தெடுத்த பாதை, அவருடைய செயற்பாடுகள், அவருடைய நம்பிக்கைகளில் மாற்றுப்பார்வைகள் இருக்கலாம். ஆனால், தான் தேர்ந்தெடுத்த, தான் நம்பிக்கை கொண்ட அரசியற் கொள்கைக்காகத் தன்னை அர்ப்பணித்த நேர்மை, அதற்காக பட்டுக்கொண்ட வாதைகள், அதற்காகத் தன்னுடைய இளைமைக்காலத்தை இழந்த ஓர்மத்தை அவர்கள் புரிந்து கொள்ளலாம். நியாயவெளியில் உரையாடலை நடத்துவதற்கான அடிப்படைத் தகுதியை ஒருவர் எப்படிப் பெறுவது என்பதையும் அவர்கள் அப்போது உணர்ந்து கொள்ளலாம்.
புஸ்பராஜா, புஷ்பராணி ஆகியோர் மற்றவர்களை விடவும் முதற் காலத்துக்குரியவர்கள் என்றவகையிலும் அரசியல் தொடர்ச்சியையுடையவர்கள் என்ற வகையிலும் பிறருடைய பதிவுகளை விடவும் இவர்கள் வேறுபட்ட பதிவுகளைத் தருகின்றனர். ஆனால், புஷ்பராணியின் வெளிப்பாடு வேறானது. புஷ்பராணியின் எழுத்தில் மனிதநேயத்தின் ஊற்றுக்கண்கள் பொங்கிப் பிரவாகிக்கின்றன. செழிப்பான வாசிப்பும் வாழ்க்கை நோக்கும் அனுபவத்தைக் கலையாக்கும் திறனும் வரலாற்றுப் பிரக்ஞையும் இந்த எழுத்துகளை ஈர்ப்புக்குரியனவாக்குகின்றன. இந்த வரலாற்றுப் பதிவை வெறுமனே தகவற் திரட்டாக அல்லாமல், வாழ்வின் ருசி மிக்க நிகழ்ச்சிகளின் உணர்வுக் கலவையாக – கலைத்துவம் மிக்க படைப்பாக புஷ்பராணி தருகிறார். அதற்காகப் புஸ்பராஜாவின் எழுத்துகள் குறைவானவை என்று அர்த்தமல்ல.
4
இடதுசாரியப் பார்வையைக் கொண்டவர்கள் புஷ்பராணியின் இந்த வரலாற்று ஆவணத்தை நிராகரிக்கலாம். தமிழ்த்தேசிய அரசியற்பார்வையின் குறைபாடுகளே இத்தகைய அவலத்திற்கும் இன்றைய அவலத்திற்கும் பிரதான காரணம் என அவர்கள் வாதிடலாம். ஆகவே, இதிலே புதிதாக என்ன இருக்கப்போகிறது? என்ற தொனியில் அவர்கள் கேள்விகளை எழுப்பலாம். அத்தகைய பார்வைக்கும் கேள்விக்கும் இடமுண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதையும் விட முக்கியமானது, நான் முன்னரே குறிப்பிட்டவாறு, புஷ்பராணி தன்னை, தன்னுடைய பாதைகளை இங்கே வெளிப்படையாகவே பேசுகிறார். அதற்காகத் தன்னுடைய வாழ்க்கையை அவர் அர்ப்பணித்திருக்கிறார். அந்தப் போராட்டப் பாதையில் அவர் கற்றுக்கொண்ட பாடங்களை இந்த நூல் முழுவதும் அவர் பதிவு செய்கின்றார்.
இந்தப் பாடங்கள் அவரை மட்டுமல்ல எம்மையும் வரலாற்றின் புதிய திசைகளை நோக்கி நகர்த்துகின்றன. வரலாறு என்பது பெயர்கள், இடங்கள், காலம் மற்றும் சம்பவங்களின் பதிவாக அமைவதில்லை. அது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. வாழ்க்கையைத் தீர்மானிப்பது. சமகால வாழ்க்கையையும் எதிர்கால வாழ்க்கையையும் நிர்மாணிப்பது அது. எனவேதான் ஒவ்வொரு வரலாற்றுத் துளியிலும் மனிதர்களின் இரத்தத்தையும் கண்ணீரையும் அதில் காணக்கூடியதாக இருக்கிறது. அதில் மகிழ்ச்சிக்கான விதைகளும் உள்ளன. துக்கத்துக்கான விதைகளும் உள்ளன. வரலாற்றில் சக்தி மிக்க பாத்திரத்தை வகிப்போர் ஆற்றுகின்ற பங்கும் அவர்கள் கொண்டிருக்கின்ற பொறுப்புணர்வும் அவர்களுடைய சிந்தனையும் ஆளுமையும் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.
புஷ்பராணி தனியே தன்னுடைய அடையாளத்துக்குள்ளும் அனுபவத்துக்குள்ளும் மட்டுப்பட்டிருக்கவில்லை. அதைக் கடந்து அவர் பொதுவெளிப் பரப்பில் தான் இயங்கிய காலத்தையும் சூழலையும் பதிவாக்குகிறார் என்பதன் மூலமாக இந்த அடையாளத்தை வெளிப்படுத்துகிறார். இதன்மூலம் தன்னுடைய பார்வைப் பரப்பின் விசாலத்தையும் செழுமையையும் அவர் காண்பிக்கிறார். ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான ஆளுமையாக அவர் தெரிகின்ற இடம் இதுதான். இந்தப் பின்னணிதான்.
எனவே, இந்த அசாதாரண அடையாளமுடைய வரலாற்றுப் பாத்திரத்தின் சாட்சியப் பதிவுகள் இன்றைய நமது ஈழப் போராட்ட அரசியற் சூழலில் மிக முக்கியத்துவமானவையாக உள்ளன. வரலாறு பற்றிய கற்றுக்குட்டித்தனங்களின் மத்தியில், அளவுக்கதிமான தேசியவாதப் புலம்பல்களுக்கு மத்தியில், தான் கொண்ட அரசியற் தெரிவுக்காக த் தன்னை ஒப்புக்கொடுத்ததும் அதற்காகப் பாடுகளைச் சுமக்கத் துணிந்ததும் மிகப் பெரிய விசயங்கள். இவை உணர்ந்து கொள்ளப்படவேண்டியவை.
உண்மையில் யுத்தக்குற்றத்தைப் பற்றிச் சிந்திப்போரும் அவற்றைப் பற்றிப் பேசுவோரும் போராட்டம் சிதைந்ததைப் பற்றியும் அது சிதைக்கப்பட்டதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். அதைப் பற்றிப் பேச வேண்டும். ஈழப்போராட்டத்தின் சிதைவு அல்லது ஈழப்போராட்டம் சிதைக்கப்பட்டது என்று பார்க்கும்போதே அதன் விளைவுகளை நாம் அடையாளங்காண முடியும். குற்றங்களையும் தவறுகளையும் குறைபாடுகளையும் இனங்காணாமல் எந்தப் பின்னடைவையும் சீர்ப்படுத்திட முடியாது. விஞ்ஞான ரீதியான ஒரு பரிசோதனையாக இருந்தாலும் சரி, சாதாரண தொழில் ரீதியான முயற்சியானாலும் சரி, இது ஒரு தவிர்க்க முடியாத அடிப்படை. இந்த அடிப்படையைப் பின்பற்றும்போதே புதிய சவால்களை எதிர்கொள்ளவும் கடந்த காலத் தடைகளைக் கடக்கவும் குறைபாடுகளிலிருந்து விடுபடவும் முடியும். ஆகவே, இன்று கடந்து வந்த பாதையை மீளத் திரும்பிப் பார்த்தல் என்பது தவிர்க்க முடியாத ஒரு அவசியமாகியுள்ளது. குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு இதைத் தவிர மாற்றுவழிகள் இல்லை. அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதொன்றும் புதிதுமல்ல, வெட்கக் கேடான செயலுமல்ல!
இதை வெறுமனே குற்றமாகப் பார்க்காமல், ஒரு மருத்துவமாகப் பார்க்க வேண்டும். வரலாற்றிலிருக்கும் பெருமிதப் புள்ளிகளை மட்டும் பார்க்காமல் அனைத்தையும் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையில், விமர்சனபூர்வமாகப் பார்க்க வேண்டும். தன்னை மையப்படுத்திப் பார்க்காமல், தன்னை எதிர்நிலையில் முன் வைத்து ஆய்வுக்குட்படுத்த வேண்டும். இதுவே இன்றைய முதன்மைத் தேவையாகும். இவ்வாறு செய்யப்படும்போதே அவலப்பரப்பாக விரிந்திருக்கும் ஈழத்தின் துயர நிலையைப் போக்க முடியும். புதிய திசைகளை நோக்கிப் பயணிக்கவும் முடியும்.
எனவே, இது போராட்டத்தின் சாட்சியங்களைப் பேசும் காலமாக வேண்டும். ஆனால் அவை நேர்மையானவையாக இருக்க வேண்டும். இங்கே ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப்போல தன்மையவாதங்களாக அல்லாமல், மீண்டும் பிம்ப உருவாக்கம் செய்யாமல், விசுவாசத்தன்மையோடு அவை முன்வைக்கப்படவேண்டும். எத்தகைய உயரிய நோக்கத்தோடு ஒரு விடுதலைப்போராளி தன்னுடைய முதற்காலடியை விடுதலைப் பயணத்தில் வேட்கையோடும் விசுவாசத்தோடும் அர்ப்பண உணர்வோடும் முன்வைக்கிறாரோ, அத்தகைய தன்மை இந்தச் சாட்சியங்களை முன்வைத்தலில் பேணப்படுவது அவசியம். ஆனால், ஆரம்பநிலைப் போராளியிடம் முதல் அடிவைப்பின் போது முதிரா நிலைக்கான சாத்தியங்கள் அதிகம். இங்கே அனுபவங்களும் வயதும் முதிர்ந்திருப்பதால் நெறிப்பட்ட சாட்சியமாக்கப்படுகின்றன இவை. போராட்ட அனுபவமும் வயது மற்றும் கால அனுபவமும் இணைந்த நிலையில் இந்த அடிவைப்பு நிகழ்வதால், இந்தச் சாட்சியங்கள் முக்கியமானவையாகின்றன.
5
‘அகாலம்’ என்ற இந்தப் போராட்ட நினைவுக் குறிப்புகள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் அவலங்களைச் சந்தித்த ஒரு பெண்ணின் வரலாறு. ஒரு குடும்பத்தின் வரலாறு. ஒரு சமூகத்தின் வரலாறு. ஒரு இனத்தின் வரலாறு எனப் பலவிதமாக உணரப்படவேண்டியது.
ஆனால், இந்த வரலாற்றில் சிதம்பரியின் குடும்பம் பெற்ற நன்மைகள் என்ன? இந்த அரசியலால் அது பெற்ற அனுகூலங்கள் என்ன? இந்த மாதிரிக் குடும்பங்களின் அர்ப்பணிப்புகளைத் தமது அரசியல் அடித்தளங்களுக்குப் பயன்படுத்திய இயக்கங்களின், அவற்றின் தலைமைகளின், பாராளுமன்ற அரசியல்வாதிகளின் இலாபங்கள் எப்படியிருந்தன? என்பதெல்லாம் இன்று கேட்கப்பட்டே ஆகவேண்டிய கேள்விகள்.
புஷ்பராணியின் நினைவுகளில் அழியாதிருக்கும் மயிலிட்டிக் கிராமத்தில் என்னுடைய இளமைப் பிராயமும் 1980 களில் இருந்திருக்கிறது. அந்த அழகிய கடற்கரையும் அந்தச் சூழலும் அங்கே வாழ்ந்த சனங்களும் இன்று சிதைந்த நிலையிலேயே இருப்பதைக் காணலாம். இன்னும் அந்தக் கிராமத்துக்குப் போகமுடியாத துக்கத்தோடு ஆயிரக்கணக்கான சனங்கள் முதுமையடைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய வயதினால் ஏற்படும் முதுமையையும் விட அவர்களுடைய துக்கத்தினால் ஏற்படுகின்ற முதுமையே கொடியது. இவ்வளவு போராடிய புஷ்பராணி அக்காவும் மயிலிட்டுக்குப்போக முடியாமலேயே இருக்கிறார்.
புஸ்பராஜாவின் நூலுக்கு ஏற்பட்ட வரவேற்பையும் விமர்சனத்தையும்போல இந்தப் புத்தகத்துக்கும் வரவேற்பும் விமர்சனமும் கிடைக்கும். “வரலாறு எழுதப்படும்போது பல்வேறு பார்வைக் கோணங்கள் சாத்தியம். கோணங்களுக்கு ஏற்ப வரலாறும் வேறுபடும். அவைகளில் இதுவும் ஒன்று” என புஸ்பராஜாவின் நூலைக் குறித்து அ.மார்க்ஸ் எழுதியதையே இங்கே நாமும் சுட்டலாம்.
இது கலைக்க முடியாத் துயரம். துரத்திட முடியா அவலம். ஆனால் என்ன செய்வது! இதற்குள்தானே நாம் வாழவேண்டியுள்ளது. இதற்கெதிராக நாங்கள் இன்னும் போராட வேண்டியிருக்கிறது!
வணங்குகிறேன், உங்களின் முன்னும் உங்களின் குடும்பத்தின் முன்னும். அவர்களைப் போல இந்த மண்ணிலே வாழ்ந்த ஆயிரமாயிரம் மனிதர்களின் முன்னும். இந்த வரலாற்றின் முன்னும்.
-23.03.2012 கிளிநொச்சி
1 thought on “களத்திலிருந்து இவர்கள் இறுதிவரை விலகுவதேயில்லை”
Comments are closed.