யுத்தகால கவிதைகள்

கட்டுரைகள்

யுத்தகாலத்தின் ஈழத்துக் கவிதைகள் உணர்ச்சி மயமானவை, அரசியல் தத்துவார்த்த ஆழமற்றவை என்கிற விமர்சனம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

யுத்தகால ஈழக் கவிதைகளின் தோற்றுவாய்க் காலமாக 1980களின் ஆரம்பத்தை நாம் குறித்துக்கொள்ளலாம். 1981ல் எம்.ஏ. நுஃமான் – முருகையன் மொழிபெயர்ப்பில் ‘பாலஸ்தீனக் கவிதைகள்‘ நூல் வெளியாகி பெருத்த அதிர்வுகளை உருவாக்குகிறது. இந்தக் காலத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான ஈழத்துக் கவிதைகள் பாலஸ்தீனக் கவிதைகளை அடியொற்றியும், அந்த மொழிபெயர்ப்பு மொழிநடையை உள்வாங்கியும் உருவாகின்றன. ‘பீனிக்ஸ்‘ பறவையைப் படிமமாக வைத்துமட்டும் நூறு கவிதைகள் எழுதப்பட்டிருக்கும். ஈழத்தின் கவிஞர்களை இணைத்து 1985ல் வெளியாகிய ‘மரணத்தில் வாழ்வோம்‘ தொகுப்பில் இத்தகைய கவிதைகளே அதிகமாயிருந்தன. இவ்வகைக் கவிதைகள் தொகுப்பு வெளியானதற்குப் பின்னாக அதிக காலம் நிலைத்திருக்கவுமில்லை. இக்காலகட்டத்தில் சி.சிவசேகரம், சண்முகம் சிவலிங்கம் போன்ற ஒருசிலரைத் தவிர கவிஞர்கள் எல்லோரும் ஏதோ ஒருவகையில் தங்களை விடுதலைப் போராட்டத்தோடு இணைத்திருந்தார்கள். ஈழப் போராட்டச் செல்நெறி உணர்ச்சிமயமானதேயன்றி அரசியல் தத்துவார்த்தரீதியாகத் தன்னை எப்போதுமே வளர்த்துக்கொண்டதில்லை. எனவே போராட்டத்தோடு தங்களை இணைத்து அடையாளம் கண்டுகொண்ட கவிஞர்களால் உணர்சிமயமான மொழியைத் தாண்டி அதிகதூரம் பயணிக்க முடியவில்லை என்பது உண்மையே. அவ்வாறு பயணிப்பதற்கு இவர்கள் பின்தொடர்ந்த தட்டையான அரசியல் தடையாயிருந்தது. இந்தப் போக்கு இன்னமும் நீடித்திருக்கவே செய்கிறது.

1986 காலப்பகுதிகளில் விடுதலை அரசியலில் தலைகீழ் மாற்றம் ஏற்படுகிறது. போராட்டத்துக்குள் சனநாயகம் குறித்த கேள்விகள் எழுகின்றன. விடுதலைப் போராட்டம் அதிகார மையமாகச் சிதைவுற்றபோது அதுவரை ஈழப் போராட்டத்தோடு தம்மை இணைத்திருந்த பல கவிஞர்கள் போராட்டத்திலிருந்து விலகிச் செல்கிறார்கள். அவர்களது பார்வைகளும் மாறுகின்றன. யுத்தத்திற்கு எதிராகவும் அதிகாரத்திற்கு எதிராகவும் அவர்களது குரல்கள் எழுகின்றன. இதுதான் முதன்மையான அரசியலாகவும் இதன்வழியே அரசியல் தத்துவார்த்தக் கேள்விகள் நோக்கியும் அவர்கள் கவிதைகளை எழுதியவாறே நகர்ந்தார்கள். அழுத்தங்கள் அதிகரித்தபோது சிவரமணி தனது பிரதிகளை எரித்துவிட்டு தற்கொலை செய்தார். செல்வி எழுதியதற்காக வதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதை ‘புத்தரின் படுகொலை‘ என எழுதிய நுஃமான் இஸ்லாமியர் என்ற காரணத்தால் யாழ்ப்பாணத்திலிருந்தே விரட்டப்பட்டார். ‘ பேர்லின் வந்திறங்கும் அகதிகள் கூட்டத்தில் என்னைத் தேடாதே‘ என்றெழுதிய செழியன் டொரொண்டோவுக்குத் தப்பி ஓடினார். இத்தகைய மறுத்தோடிகளின் கவிதைகளையே ஈழத்து யுத்தகாலக் கவிதைகளின் ஆன்மா என நான் சொல்வேன்.

ரஜீன்குமாரிலிருந்து றஷ்மிவரை பல பத்துக் கவிஞர்களை இந்த வகைக்குள் சொல்லலாம். இவர்கள் யுத்தத்தை அதனது சரியான அர்த்தத்தில் நிணமும் தசையுமாகப் புரிந்துகொண்டவர்கள். யுத்தத்தையும் அதிகாரத்தையும் இனவாதத்தையும் நோக்கி இவர்களது குரல்கள் உயர்ந்து நின்றன. இனப் படுகொலைக்கும் சகோதரப் படுகொலைகளிற்கும் நடுவே நின்று தனக்குள் மூடுண்ட அகம் /சுயம் சார்ந்த கேள்விகளை இந்தக் கவிஞர்கள் எழுப்பியதில்லை. மாறாகச் சமூகத்தின் கூட்டுக் குரலாக இந்தக் கவிஞர்கள் இருந்தார்கள். இவர்களது குரல்கள் வெறுமனே உணர்சிமயமானவையல்ல. ஈழ மண்ணின் பண்பாட்டுக் கூறுகளிலிருந்து தமது கவிமொழியை அறம் சார்ந்து உருவாக்கியவர்கள் இவர்கள். சுகனின் இந்தக் கவிதையைப் படித்துப்பாருங்கள்:

உன் இன்னுயிரை ஈந்தது போதும்

லோகிதாசா எழுந்திரு!

செய்திகளைச் செவிமடுத்த உங்கள் அனைவருக்கும்

நன்றி எனக்கூறி விடைபெறுகிறார் அறிவிப்பாளர்

லோகிதாசா எழுந்திரு!

நாடகம் முடிந்தபின்

உன்னை வழமைபோல்

கூட்டிப்போக அப்பா வந்திருக்கிறார்

லோகிதாசா எழுந்திரு!

கண்டியரசனில் உன் மாமா

உன்னை உரலில் போட்டு இடிக்க

அம்மா பார்த்திருந்து அழுகிறாள்

அரிச்சந்திர நாடகத்திலோ

நீ பாம்புதீண்டி இறக்கிறாய்

எழுந்திருக்கமாட்டாமல் நீள்துயில் கொள்கிறாய்

இப்போது

இடையில் திரைமூடி அடுத்த காட்சி தொடங்கலாம்

நாடகத்தில்!

லோகிதாசா எழுந்திரு!

நீ போராளியல்ல, குழந்தைப் பாத்திரம்.


உயிர்மை. டிசம்பர் 2011

3 thoughts on “யுத்தகால கவிதைகள்

  1. அது எப்படி சோபா உங்களால் மட்டும் நாடிபிடித்து துல்லியமாக கணிக்க முடிகிறது…சூடாகக் கொதித்து மட்டும் காட்டுவது ஒருபோதும் சிறந்த கவிதையாகி விடாதுதான்..உணர்த்தியமைக்கு கோடி நன்றிகள்.

  2. கவிதை என்பது ஒரு உணர்வு மொழி உணர்ச்சி ஏற்படும் போது மட்டுமே கவிதை படைக்கமுடியும். அந்த உணர்ச்சி அறம்சார்ந்த திறந்ததளத்தில் இருக்க வேண்டும். பொதுவாக ஈழத்து யுத்தகால கவிதைகள் இரண்டு தளங்களில் இயங்கின. ஒன்று யுத்தத்தை ஆதரித்த கவிதைகள். மற்றது யுத்தத்தை எதிர்த்த கவிதைகள். இவற்றில் நீங்கள் யுத்தத்தை எதிர்த்த எதிர்க்கும் ஒரு மனிதநேயம் உள்ளவராக இருக்கிறீர்கள் நன்று. ஆனால் யுத்தகாலத்தில் உணர்ச்சி வசப்பட்டு எழுதிய கவிதைகளை கவிதைகளே அல்ல என்கின்ற வாதம் தவறானதாகும். அவற்றிலும் நல்ல கவிதைகள் உள்ளன. யுத்த எதிர்ப்பார்களால் முன்னெடுக்கப்படுகின்ற வாதம் இலக்கியத்திற்குள் பிரவேசிக்கும் போது அது இலக்கியத்தையே பாதிக்கக்கூடும். யுத்தப்பிரதேசத்திற்குள் வாழ்ந்த ஒவ்வொருத்தரின் அனுபவங்களும் அவர்களுடைய பார்வைகளுமே கவிதைகளாக வடிவம் எடுத்துள்ளன. அவரவர் உணர்திறனுக்கேற்ப அவர்களுடைய கவிதையின் தரங்கள் அமைந்துள்ளனவே அன்றி அவைகளை கவிதைகளே அல்ல என்று வாதிடுவது பொருத்தமற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *