நான் – ராஜன் குறை – அ.மார்க்ஸ் எனத் தொடரும் இந்த உரையாடலுக்குக்கு வித்திட்ட எனது முகப்புத்தக நிலைத்தகவல் ராஜனை பாதித்திருப்பது / ஏன் பாதித்தது என்றவாறான ஒரு குறிப்பை இன்று அவர் எழுதியிருப்பது கீழ்வரும் குறிப்புகளை எழுத என்னைத் தூண்டியிருக்கிறது.
விவாதத்தின் தொடக்கப் புள்ளியான எனது நிலைத் தகவலில், பேஸ்புக் – ட்விட்டர் கருத்துப் போராளிகள் இந்தத் தருணத்தில் புலிகளின் மரணதண்டனைகள் குறித்தும் சிந்திக்க வேண்டுமென்றேன். அப்போதுதான் மரணதண்டனை எதிர்ப்பு என்பதற்கு சரியான அர்த்தமிருக்கும் என்றேன். “புலிகளின் மரணதண்டனைகளை எதிர்க்காதவர்கள் மூவருக்குமான மரணதண்டனையை எதிர்க்கக் கூடாது” என்றெல்லாம் நான் எழுதியதில்லை.
ஒரு அநீதியைக் கண்டிக்காதவர்கள் இன்னொரு அநீதியைக் கண்டிக்கக் கூடாது என்ற விதண்டாவாதமெல்லாம் என்னிடம் கிடையாது. அதை நான் எனது ‘விருமாண்டியிஸம்’ கட்டுரையிலும் விளக்கியிருந்தேன். எனினும் நான் அவ்வாறு விதண்டாவதம் செய்வதாகவே ராஜன் புரிந்திருக்கிறார் என்பதை அவரது கடைசிக் கட்டுரையும் நிரூபிக்கிறது. ஒருவேளை ‘புலிகளின் மரணதண்டனைகள் குறித்தும் பேசும்போதுதான் மரண தண்டனை எதிர்ப்பு என்ற குரலுக்கு நேர்மையான பொருளிருக்கும்’ என்று நான் எழுதியது விதண்டாவாதத் தொனியைக் கொடுக்கிறது என்று ராஜன் கருதுகிறாரோ தெரியவில்லை. இந்த விடயத்தில் எனது கருத்துநிலையை தெளிவாகவே சொல்லிவிடுகிறேன்: ஒரு அநீதியைக் கண்டிக்காதவர்கள் இன்னொரு அநீதியைக் கண்டிக்கக் கூடாது என்பதல்ல. கண்டிக்கட்டும், போராடட்டும் நானும் அவர்களோடிருப்பேன். அதேவேளையில் அவர்களது கவனத்திற்கு வராத அநீதியை, அல்லது அவர்கள் கண்டும் காணாமலும் இருக்கும் அநீதியை, அல்லது அவர்கள் வல்லடியாயாக நியாயப்படுத்திக்கொண்டிருக்கும் அநீதியை நான் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி அது குறித்தும் அவர்கள் பேசவேண்டும் என வலியுறுத்திக்கொண்டேயிருப்பேன்.
சீமான் முதற்தடவையாக தமிழக அரசால் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டபோது சீமானும் செல்வியும் என்ற கட்டுரையில் நான் இவ்வாறு எழுதியிருந்தேன்: “சீமானின் கைதுக்காக இந்தச் சிலிர்ப்புச் சிலிர்ப்பவர்கள் இந்தியா முழுவதும் காலவரையற்றுச் சிறைகளில் வாடும் அல்லது ‘என்கவுண்டர்’களில் சுட்டுத்தள்ளப்படும் நக்ஸ்பாரிகள் குறித்தோ இஸ்லாமியர்கள் குறித்தோ காஷ்மீரிகள் குறித்தோ ஏன் எதுவும் பேசுவதில்லை என்றொரு கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்வி தருக்கத்துக்குப் பொருந்துமேயொழிய நடைமுறைக்கு உதவாது. தீபெத் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டிக்காதவர்கள் ஈராக் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டிக்கக் கூடாது, திண்ணியம் கொடுமை குறித்துப் பேசாதவர்கள் கயர்லாஞ்சிக் கொடுமைகள் குறித்துப் பேசக் கூடாது என்றெல்லாம் நாம் சொல்ல முடியுமா என்ன. குறிப்பிட்ட இந்த அநீதியைக் கண்டித்தாவது பேசுகிறார்களே என்று நாம் அவர்களை ஆதரிப்பதும் அவர்களோடு இணைந்து நாமும் குறிப்பிட்ட அநீதியைக் கண்டிப்பதும்தானே சரியாயிருக்க முடியும். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிற அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் என நாம் அவர்களிடம் கோர முடியும். குறிப்பிட்ட விடயத்தில் வெளிப்படும் அவர்களின் சனநாயக் குரலும் போராட்டப் பண்பும் உலகம் தழுவிய பார்வையாக விரிவடைய வேண்டும் என நாம் வேண்டிக்கொள்ள முடியும்.” மூவருக்குமான மரணதண்டனை – புலிகளின் மரணதண்டனை விடயத்திலும் எனது நிலைப்பாடு இதுதான். அதுதான் எனது நிலைத் தகவல்.
இதைச் சொல்வதின் பின்னால் இருப்பது தமிழக தமிழின உணர்வாளர்களின் மனநிலையை நான் புரிந்துகொள்ளாமையே என்று ராஜன் சொல்வதை என்னால் ஏற்க முடியாமலுள்ளது. அவர்களது மனநிலையைச் சரியாகப் புரிந்துகொண்டதன் வெளிப்பாடே எனது நிலைத்தகவல் என்று அறிவிக்கவே நான் இப்போதும் விரும்புகிறேன். ராஜன் தமிழகத்தைச் சேர்ந்தவர். அந்த நிலப்பரப்பின் அரசியல் உணர்வுகளையும் பண்பாடுகளையும் ஆழமாக ஆய்வு செய்து சொல்லும் வல்லமை பெற்றவர் என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல நான் தமிழகத்தைச் சேராதவனாயிருந்தாலும் ஈழம் – தமிழகம் – புகலிடம் என முப்பரப்பிலும் நீண்டகாலமாக தமிழின உணர்வாளர்களோடு இடையறாது விவாதித்துக்கொண்டிருப்பவன், அந்த அனுபவங்களின் வெளிச்சத்தில் எனது கருத்துகளை உருவாக்கிக்கொள்பவன் என்பதும் உண்மையே. உரையாடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ராஜன் தமிழின உணர்வாளர்களோடு பொதுவெளி உரையாடல்களை -குறிப்பாக ஈழப்போராட்டத்துக்கும் தமிழகத் தமிழன உணர்வாளர்களிற்கும் உள்ள உறவு குறித்த உரையாடல்களை – இதுவரை நிகழ்த்தியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தொடரும் உரையாடலில் ராஜன்குறையின் கருத்துகளை ஆதரித்து நிற்போரும் அவ்வாறு நிகழ்த்தியதாகத் தெரியவில்லை. நிகழ்த்தும் என் போன்ற ஒருசிலருக்கும் ‘சமய சந்தர்ப்பம் பார்த்து நிகழ்த்த வேண்டும்’ என்று தடையாக நின்றுகொண்டிருந்தால் இவற்றையெல்லாம் எப்போது பேசுவது? ராஜன் சொல்வதுபோல பழிக்கு அஞ்சாமல் இறங்கினால்தான் அதெல்லாம் நடக்கும். ராஜன் தனது கட்டுரையில், ஷோபாசக்தி இவ்வாறு சமய சந்தர்ப்பம் இல்லாமல் பேசுவதால் இளைஞர்களிடம் கடுமையான எதிர்ப்பைச் சம்பாத்தித்திருப்பதாகக் எளிமைப்படுத்திக் குறிப்பிட்டிருப்பார். உண்மையில் நான் இளைஞர்களிடம் மட்டுமல்லாமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகளிடமும் வெறுப்பைச் சம்பாதித்து வைத்திருப்பதை நானறிவேன். ஆனால் ராஜனைப் போலவே தமிழகத்து அரசியல் உணர்வுகளையும் பண்பாட்டுச் சிக்கல்களையும் ஆழக் கற்றவர்களுமான அ.மார்க்ஸும் ஆதவன் தீட்சண்யாவும் இந்த விடயத்தில் தமிழின உணர்வாளர்களிடம் எனக்குச் சமமான வெறுப்பைச் சம்பாதித்து வைத்திருப்பது எப்படி? பிரச்சினை தமிழின உணர்வைப் புரிந்துகொள்ளாமையா? அல்லது தமிழின உணர்வாளர்களின் புரிந்துகொள்ளாமையா?
இந்த இடத்தில் ராஜன்குறை குறிப்பிடும் தமிழகத் தமிழின உணர்வாளர்கள் யார் என்பதை நாம் தெளிவுற வரையறுத்துக்கொள்ளாமல் மேலே உரையாடலைத் தொடருவது சாத்தியமில்லை. அவர் ‘தமிழின உணர்வாளர்கள்’ எனக் குறிப்பிட்டுச் சொல்வதால் தமிழகக் குடிமைச் சமூகத்தின் கூட்டு இனவுணர்வு மனநிலையை அவர் குறிப்பிடவில்லை என்றே கருதுகிறேன். எனவே ‘நாம் தமிழர் இயக்கம்’, ‘மே பதினேழு இயக்கம்’ போன்ற இயக்கங்களையும் நெடுமாறன், விடுதலை இராசேந்திரன் போன்ற தலைவர்களையும் குணா, பா.செயப்பிரகாசம் போன்ற எழுத்தாளர்களையும் இவர்களை அரசியல்ரீதியாகப் பின்தொடர்பவர்களையும் ஆதரித்து நிற்பவர்களையும் தமிழின உணர்வாளர்கள் என்று வரையறுத்துக்கொள்ளலாமா? ராஜன் மேலதிக விளக்கங்களைக் கொடுக்கும்வரை இவ்வாறு வரையறை செய்வதைத் தவிர எனக்கு வேறுவழியில்லை. ராஜன் மேலதிக விளக்கம் கொடுக்கும் பட்சத்தில் அது குறித்தும் உரையாடிக்கொள்ளலாம். இடதுசாரிகளும் தமிழகத்தின் முக்கியமான சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் தமிழின உணர்வு என்ற அடையாளத்தை முன்னிறுத்துவதில்லை என்றே கருதுகிறேன். அவ்வளவு ஏன் ராஜன் கூட ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்றளவில்தான் இனவுணர்வை முன்வைக்கிறார். நான் மேலே குறிப்பிட்ட தமிழின உணர்வாளர்களுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ளத் தயாராயுள்ளது, அவர்களது சில போராட்டங்களில் கலந்துகொள்வது என்பதற்கு அப்பால் அவர்களது அரசியலுடன் ராஜன் தன்னை இணைத்துக்கொள்வது சாத்தியமில்லை. நாங்களாவது 360 டிகிரியில் அறக் கத்தி வீசுவோம். அவர்கள் 360 டிகிரியில் ஒரிஜினல் கத்தியல்லவா வீசுவார்கள். நீ ‘மீனவனை அடித்தால் நான் மாணவனை அடிப்பேன்’ என்பார்கள். புத்த துறவிகளுக்கு கல் வீசுவார்கள், சிங்கள யாத்திரிகர்களை அடித்து விரட்டுவார்கள் ஏதாவது எதிர்த்துப் பேச முடியுமா! அல்லது இதுவரை யாராவது எதிர்த்துத்தான் பேசியிருக்கிறார்களா? அந்த உணர்வைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம் என்று சொல்லிவிட்டு மூடிக்கொண்டு உட்காரவேண்டியதுதான்.
நான் விருமாண்டியிசம் கட்டுரையில் விளக்கிக் குறிப்பிட்டவாறே ஈவெரா பெரியார் வகைப்பட்ட தமிழ்த் தேசியமல்ல இப்போது தமிழகத்து அரசியல் வெளியில் நிறுத்தப்படும் தமிழ்த் தேசியம். அகண்ட பாரதத்திற்கு எதிராக நிறுத்தப்படுவதோ அல்லது சாதிய விடுதலைக்கான நிபந்தனையாக முன்வைக்கப்படுவதோ அல்ல இன்றைய தமிழ்த் தேசியம். இன்றைய தமிழ்த் தேசியத்தின் அச்சாணி புலியிஸம். இவர்களது முதன்மையான கருத்தியல் வழிகாட்டியும் தலைவரும் பெரியாரல்ல. மாறாக நாம் தமிழர் இயக்கம், மணியரசன் போன்றவர்கள் பகிரங்கமாகவே திராவிடக் கருத்தியலின்மீது வெறுப்பைக் கக்குகிறார்கள். இவர்களது வழிகாட்டியும் தலைவரும் பிரபாகரனே. அதை அவர்கள் பகிரங்கமாகவே அறிவிக்கிறார்கள். இன்று பேசப்படும் தமிழ்த் தேசியப் போக்கு ஈழப் போராட்டத்தால் அரட்டப்பட்ட, அது கொடுத்த உணர்வெழுச்சியில் நிலைகொண்டிருக்கும் ஒரு போக்கே. தங்களது அரசியல் நகர்வுகளின் ஒவ்வொரு கூறுகளிலும் அவர்கள் இதைக்கொண்டிருக்கிறார்கள், வன்முறை உட்பட.
தமிழகத் தமிழின உணர்வாளர்களிற்கு இலங்கை அரசின் இனஅழிப்புக் கொடுமைகள் முதன்மைப் பிரச்சினையாகத் தெரிவதால் புலிகள் இழைத்த அநீதிகளை இவர்கள் கண்டுகொள்ளவில்லையாம். புலிகளை விமர்சிக்க இவர்கள் விரும்புவதேயில்லையாம். அவ்வாறு யாராவது விமர்சித்தால் அவர்களை வெறுக்கவும் செய்வார்களாம். ( இது தமிழகத்துத் தமிழின உணர்வாளர்களுடைய நிலைப்பாடு மட்டுமல்ல, ஈழத்திலும் புகலிடத்திலும் இன்றைக்குவரைக்கும் பெரும்பாலான தமிழ்த் தேசியர்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை ராஜன் கவனத்தில் கொள்ளவேண்டும்) இதைப் புரிந்துகொண்டு பேசவேண்டுமாம். புரிந்துகொள்ளச் சிரமப்படுளவிற்கு இதுவென்ன காகமோனா கோட்பாடா! அவர்கள் செய்வது பச்சை அயோக்கியத்தனம். இதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் மனச்சாட்சியிருந்தால் போதும்.
முப்பது வருடகாலமாக விடுதலைப் புலிகளின் அநீதிகளை எதிர்த்து ஈழத் தமிழ்ச் சமூகத்துக்குள்ளிருந்து எத்தனையோ போராளிகளும் இடதுசாரிகளும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் பல்வேறு தருணங்களில் பொதுசனங்களும் குரல் கொடுத்தார்கள். அவர்களில் அநேகர் புலிகளின் துப்பாக்கியால் துடைத்தெறியப்பட்டார்கள். புலிகளால் கொல்லப்பட்ட சகோதர இயக்கப் போராளிகள் மட்டும் நான்காயிரத்துக்கும் மேல். துல்லியமான கணக்கு பொட்டம்மானுக்கு மட்டுமே தெரியும். அப்பாவிச் சிங்கள மக்கள் மீதான ஆயிரக்கணக்கான கொலைகள், முஸ்லீகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்றெல்லாம் இங்கே விபரித்துச் சொல்லத் தேவையில்லை. அவற்றையெல்லாம் ஏற்கனவே போதுமானளவு ஆதாரங்களுடன் உரைத்தாகிவிட்டது. இறுதி யுத்தத்தில் 3 லட்சம் மக்களை புலிகள் மனிதத் தடுப்பரணகளாக உயயோகித்தது குறித்தெல்லாம் அய்.நா. நிபுணர்கள் குழு அறிக்கையும் தெளிவுபட உரைத்துவிட்டது. இதற்கு மேலும் தமிழின உணர்வாளர்களுக்கு இதெல்லாம் புரியாது என்றால் எப்படித்தான் இதையெல்லாம் அவர்களிற்குப் புரிய வைப்பது. சமயசந்தர்ப்பம் இல்லாமல் உண்மையைப் பேசுவதைவிட வேறென்ன வழியுண்டு! கிடைக்கும் தருணங்களிலெல்லாம் அவர்களது மனச்சாட்சியிடம் உரையாடுவது புரியாமையல்ல, அது எனது கடமை.
இலங்கை அரசையே முதன்மையான எதிரியாக தமிழின உணர்வாளர்கள் கருதுவது சரிதான். என்னுடைய கருத்தும் அதுவேதான். இதைச் சொல்வதற்காக அவ்வப்போது நான் ‘புலி எதிர்ப்பாளர்களிடம்’ வாங்கிக் கட்டிக்கொண்டுமிருக்கிறேன். ஆனால் அதேவேளையில் தமிழின உணர்வாளர்கள் புலிகளின் அரசியலை பின்தொடர்வதும் புலிகளின் அநீதிகளை நியாயப்படுத்துவதையும் எதை முன்னிட்டும் பொறுத்துக்கொள்ளவே முடியாது. ராஜன் சமய சந்தர்ப்பம் அறிந்து உண்மையைப் பேசவேண்டுமென்று அறிவுறுத்தும்போது அந்தக் காலத்தில் கிட்டு சொன்னதுதான் ஞாபகத்தில் வருகிறது. “எல்லாருக்கும் சனநாயகமும் பேச்சுரிமையும் வழங்கப்படும், ஆனால் போராட்டகாலத்தில் அதை எதிர்பார்க்கக் கூடாது, தமிழீழம் கிடைத்தவுடன் அந்த உரிமைகள் வழங்கப்படும்” என்றார் கிட்டு. இன்று புலி ஆதரவாளர்களின் முக்கிய அங்கலாய்ப்பே “போராட்டத்தை அரசியல்ரீதியாக நெறிப்படுத்த ஆள்களில்லாமல் போய்விட்டார்கள்” என்பதே. ‘அந்த ஆள்கள் புலிகளால் கொல்லப்பட்டவர்களிற்குள்ளும் புலிகளால் துரத்தப்பட்டிருப்பவர்களிற்கும் உள்ளேதான் இருந்தார்கள்’ என்று அண்மையில் ஒரு தோழர் (கருணாகரமூர்த்தி என்று ஞாபகம்) எழுதியிருந்தார்.
“ஷோபாசக்தி தமிழின உணர்வாளர்களை புரிந்துகொள்ள வேண்டும், தமிழின உணர்வாளர்கள் ஷோபாவைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்பது ராஜனின் நியாயமான விருப்பங்களில் ஒன்று. அவர்கள் குறித்த எனது புரிதலை மேலே விளக்கிவிட்டேன். பிரச்சினைகளை அவர்களிற்கு விளக்க நீண்டகாலமாகவே மூர்க்கமாகவெனினும் முயன்றுகொண்டிருக்கிறேன். புலிகள் இழைத்த அநீதிகளைத் தமிழின உணர்வாளர்கள் ஏன் புரிந்துகொள்ள முயலக் கூடாது? அதைக் குறித்து ஏன் பொதுவெளியில் அவர்கள் பேசக் கூடாது? தங்களது குறுகிய அரசியல் பார்வைகளை ஏன் விலக்கிக்கொள்ளக் கூடாது? இது வெறும் புரியாமையா அல்லது தமிழின உணர்வுக்குப் பின்னே மறைந்திருக்கும் அரசியல் தகிடுதத்தமா? அவர்களை நோக்கி உரையாடுவது என்னுடையது மட்டுமல்ல ராஜனின் கடமையும் கூட. அவ்வாறான உரையாடலை முன்னெடுத்தாலே தமிழின உணர்வாளர்கள் ‘கைக்கூலிகள்’, ‘துரோகிகள்’ போன்ற வசைகளால் மட்டும்தானே அந்த உரையாடலைப் பொதுவாக எதிர்கொள்கிறார்கள். என்னயிருந்தாலும் ஒரு நயத்தகு நாகரிக மனிதனுக்கு இந்த வசைகளை எதிர்கொள்வது சிரமமானதே.
ராஜன் கூறும் தமிழின உணர்வுளைப் புரிந்துகொள்ளலை ஆதிக்கசாதி உணர்வுகளைப் புரிந்துகொள்ளல் என்பதிலிருந்து மேற்கு நாடுகளிற்கு எதிராக நிற்கும் மகிந்த ராஜபக்சவின் தேசிய உணர்வைப் புரிந்துகொள்ளல் என்பதுவரையாக வளர்த்துச் செல்லலாம். இதுவொன்றும் மிகை கற்பனையல்ல. அசோகமித்திரனும் வாசுதேவ நாணயக்காரவும் அவ்வாறுதானே சொல்கிறார்கள். ஒவ்வொரு அயோக்கியத்தனமான அரசியல் நிலைப்பாடுகளிற்கும் பின்னாலுள்ள உணர்வுகளைப் புரிந்துகொள்வதல்ல எனது வேலை. அவற்றைத் தோலுரித்து என் எழுத்துகளில் வைப்பதே என் வேலை.
“தன்னுடைய நிலைப்பாட்டை, பார்வையை தொடர்ந்து நியாயப்படுத்திக்கொள்ளும் எந்த நபரும் இயக்கமும் சிந்தனையின் சாத்தியங்களையும், அரசியலின் சாத்தியங்களையும் குறைத்து விடுகிறார்கள், அடைத்து விடுகிறார்கள்” என்பது ராஜனின் கருத்து. நான் நியாயமெனக் கருதும் என்னுடைய நிலைப்பாட்டையும் பார்வையையும் நான் மாற்றிக்கொள்வதென்றால் அந்த நிலைப்பாடும் பார்வையும் தவறு என்பது எனக்கு உணர்த்தப்பட வேண்டும். அல்லது நானாக உணரவேண்டும். இது இரண்டுமே நடக்காமல் என் நிலைப்பாட்டின்மீது எப்போதும் ஓர் அய்யத்துடனேயே நான் இயங்க வேண்டும் எனில் சரியான அர்த்தத்தில் நான் நிலைப்பாடு ஏதுமில்லாதவனாக இருக்கிறேன் என்பதே பொருள். அந்தத் துர்ப்பாக்கியம் என்னை நெருங்காதிருக்கட்டும்.
பெரியார் பேசிய முற்றுமுழுதான பற்றறுத்தலை நூறு வீதம் நம்மால் பின்பற்ற முடியாவிட்டாலும் அதீதப்பறின் விகாரங்களை யாரும் வெளிப்படையாக மறுத்துவிட இயலாது.நிகழ்ந்து கொண்டிருக்கும் உள்ரங்க வெளிரங்க இனமோதுகைக்கான பின்புல விசையாக அரசியல் குளிர்காய்தல் இருந்தாலும் முன்புல இழுவையாக இயங்குவது அதீத இனஅடையாளப் பற்றுதான்.இத்தகைய என் முன்வைத்தலுக்கு ஏபிஎம்.இத்ரீசின் வார்த்தைகளும் சபோட் பண்ணுகிறது.”இன அடையாளம் என்பது இருமுனைக் கத்தி போன்றது பக்குவமாகத்தான் கையாள வேண்டும்; இறுக்கமாக அழுத்திப் பிடித்தால் பாஸிசத்திற்கே கொண்டு சென்றுவிடும்”
எதிலும் அதீதம்தான் அனைத்து முறண்பாடுகள், மோதல்கள், மொக்குத்தனங்களுக்கும் அத்திவாரம்.அந்தத் தவறையே தமிழின உணர்வாளர்களும்,அவர்கள் நினைப்பதாக் தங்களின் நினைப்பையெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பவர்களும் செய்துவிடுகிறார்களோ என்னோவோ…அந்த பிரபாகரனுக்குதான் வெளிச்சம்..[பிரபாகரந்தான் அவங்கட கடவுள் ஆகிவிட்டரே]
ஈழ்த்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய இயக்கம் விடுதலைப்புலிகள் மட்டும்தானா?… ஆம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அல்லது சரியாகத்தெரியாது என்ற அளவுக்குத்தான் அதீதப் புலிஉணர்வாளர்கள் கிடக்கின்றனர்.இந்த அளவுக்கு பற்றுவைத்து விட்டால்..கடவுளான பிரபாகரன் குசு விட்டிருந்தாலும் ஆயிரம் அர்த்தம் இருந்திருக்கும் என்று எண்ணுவார்களாக்கும்.அல்லது சிங்களவர்களின் மூக்கைப் பொத்த வைக்கத்தான் குசு விட்டிருப்பார் என்று வாதம் புரிவார்கள்….
பூனைகள் தங்களின் கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன..?
** ** **
நான் சொல்லியதை அப்படியே publishப்ண்ணிடுங்க… எல்லாரும் செத்துப்போறது சர்வ சத்தியம்.. பேசிவிட்டே மண்டையப் போடுவம்…
“தன்னுடைய நிலைப்பாட்டை, பார்வையை தொடர்ந்து நியாயப்படுத்திக்கொள்ளும் எந்த நபரும் இயக்கமும் சிந்தனையின் சாத்தியங்களையும், அரசியலின் சாத்தியங்களையும் குறைத்து விடுகிறார்கள், அடைத்து விடுகிறார்கள்” – ராஜனின் இந்தக் கூற்று நிலைப்பாட்டை, பார்வையை ‘தொடர்ந்து நியாயப்படுத்திக் கொள்ளும் கூற்றா? அல்லது தன் கூற்றின் மீதே சந்தேகம் கொள்ளும் கூற்றா? மேலும் குறைத்து விடுவதும், அடைத்து விடுவதும் ஒன்றா? ஏதோ ஒரு தருணத்தில் ஏதோ ஒன்றை எதனடிப்படையிலாவது கூறிக்கொண்டேயிருப்பது என்பது வியாதி! இதில் சுய-சந்தேகம் என்பது ஒரு வியாதிதான் ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வியாதி. அதாவது யார் இதனை கொள்கையாகக் கொள்கிறார்களோ அவர்களுக்கு அது ஏற்றுக்கொள்ளக்கூடிய வியாதி. உன் நிலைப்பாட்டின் மீது சந்தேகம் கொள் என்று நாம் அடுத்தவர் மீது திணிப்பது சுயமுரண்பாடு. உடனே ‘எனக்கு சுயமுரண்பாடு உடன்பாடானதுதான்’ என்று கூறமுடியாது. ஏனெனில் இந்தச் சுயமுரண்பாடு சமயமும் உசிதமும் பார்த்து வரும் ஒன்றல்ல. இந்தப் பொதுவான குருட்டுப்புள்ளியில்தான் எந்த ஒன்றின் மீதான சார்போ அல்லது எதிர்ப்போ உருவாகிறது. பொதுவாக கொலை என்ற ஒன்றை அதாவது Killing in general-ஐ பேசாமல் புலிகள் செய்த கொலையையும் பேசுவது அறமாகாது, அரசாங்கம், சட்டம் செய்யும் கொலைகளைப் பேசுவதும் அறமாகாது. பொதுவாகக் கொலைகள் என்பதை எப்படி பேசுவது? அது அரசியல் ரீதியான பேச்சாக இருக்குமா? அல்லது அற ரீதியான பேச்சாக இருக்குமா அல்லது idle speech ஆக இருக்குமா என்பதையெல்லாம் நாம் தீர்மானிக்கமுடியாது. தனித்துவமாக ஒப்பீடின்றி எந்த ஒரு விசயத்தையும் பேசமுடியாது. பொதுவான ground இன்றி பேச்சோ, செயலோ சாத்தியமேயில்லை.
“போராட்டத்தை அரசியல்ரீதியாக நெறிப்படுத்த ஆட்களில்லாமல் போய்விட்டார்கள்” என்பதற்கான காரணம் ‘அந்த ஆட்கள் புலிகளால் கொல்லப்பட்டவர்களிற்குள்ளும் புலிகளால் துரத்தப்பட்டிருப்பவர்களிற்கு உள்ளேயும், அவர்களின் தடம்பற்றி அதேபாணியில் சிங்கள அரசினால் கொல்லப்பட்டவர்களிற்குள்ளும், சிங்கள அரசினால் துரத்தப்பட்டிருப்பவர்களிற்கும் இருந்தார்கள்’ என்று சொல்வதே சரியாக இருக்கும். விடுதலைப்புலிகளில்மட்டும் ஒருதலைபட்சமாக குற்றம் சுமத்தக்கூடாது.
ஹமீது,
உங்களது பின்னவீனத்துவ அமைப்பியல்வாத பின்னமைப்பியல்வாதப் புத்தகங்கள் ஏதேனும் வந்திருந்தால் தயைகூர்ந்து அறியத் தாருங்கள்.
பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டுத் தனிமையில் கிடக்கும் காலங்களில் விளங்கக் கூடும் என்று அவற்றைச் சேர்த்துவருகிறேன்.
தலைவரும் போனபிறகு இனி வருத்தம் துன்பம் வந்துதான் என் உயிர் போகவேண்டியிருப்பதால் உங்கள் புத்தகங்களுக்கும் நேரங் கிடைக்கக் கூடும்.
தலைவரைச் சொன்னதும் ஞாபகம் வருகிறது.
கல்லைப் பார்த்தால் கடவுள் கிடையாது கடவுளைப் பார்த்தால் கல்லுத் தெரியாது என்று கமலகாசன் படத்தில் ஒரு பாட்டு வருமெல்லே!
அதுமாதிரி நல்ல நல்ல உயர்புத்திசீவிச் சிந்தனையாளர்களுக்கெல்லாம் நம்மூரில் வாழ(?) வாய்ப்புக் கிடைக்கேல்லை. வாய்ப்புக் கிடைத்தவர்களெல்லாம் நம் பெரும்பேராசானின் பின்னடிப்பொடிகளாகவே இருக்கப்பட்டுவிட்டார்கள்.
யூதர்களுக்கிணையான நம் புத்திசாலிச் சமூகத்தின் தலைவர்களாக பிரபா தமிழ் பொட்டு வகையறாக்களும்
அரசியல் ஆய்வாளர்களாக சிவத்தார் சேரன் ரங்கா வகையறாக்களுமே இருந்த இருப்பை வைத்துக்கொண்டு
நம் போராட்டத்துக்குள் என்னெல்லாம் இருந்ததென்பதை ஒன்றிரண்டுபேர் உழக்கி உப்பெடுத்துக் காட்ட முடியுமா? விழல் வேலைதான்!
மரணதண்டனை உயிர்க்கொலைகள் பற்றியெல்லாம் வலு நுணுக்கமான வாதங்களை வைக்கக்கூடிய தமிழகத்தின் தலைசிறந்த புத்திசீவிகளில் ஒருசிலராவது மக்களைப் புரந்த நம் தலைவரின் ஆளுகையின்கீழ் வாழ்ந்திருக்கக் கூடாதா?
முன்பின் எதுக் குழப்பங்கள் தீர்ந்து பொய்யாகியிருக்குமே!
இயக்கச்சி மணியத்தார் போல இன்னும் சொல்லாமலிருப்பவர்களுக்கும் சேர்த்துப் புலம்பும் நெஞ்சுநோவெல்லாம் நமக்கெதுக்கு?