சில வருடங்களிற்கு முன்பு கமல்ஹாஸனின் ‘விருமாண்டி‘ திரைப்படம் வெளியானபோது அந்தத் திரைப்படம் மரணதண்டனை ஒழிப்பைக் குறித்துப் பேசும் மகத்தான திரைப்படம் என ஊடகங்கள் அடித்த அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்தன. அப்போது ‘விருமாண்டி‘ திரைப்படம் குறித்து பிரேம் எழுதிய கருத்துகள் விருமாண்டியின் யோக்கியதையைத் துல்லியமாக வெளிப்படுத்தின. பிரேம் அதை எந்தப் பத்திரிகையில் எழுதியிருந்தார் என்பதும் அவர் எடுத்தாண்ட சொற்களும் எனது ஞாகத்தில் இப்போது தெளிவாக இல்லையாயினும் பிரேமின் மையக் கருத்து என் மனிதில் அழியாமல் தங்கியுள்ளது. அதை எனது வார்த்தைகளில் கீழே தருகிறேன்.
“கொத்தாளத் தேவனின் சதியில் சிக்கிய விருமாண்டி, கொத்தாளத் தேவன் நடத்தி முடித்த கொலைகளுக்கு நீதிமன்றத்தால் பொறுப்பாக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்படுகிறான். கொத்தாளத் தேவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவனும் அந்தச் சிறையில் அடைக்கப்படுகிறான். சிறையில் கலவரத்தைத் தூண்டிவிட்டு கொத்தாளத் தேவன் விருமாண்டியைக் கொல்ல முயல்கிறான். இறுதியில் கொத்தாளத் தேவன் விருமாண்டியால் கொல்லப்படுகிறான். நீதிபதி வி.ஆர். கிருஷ்ணையரின் உரையோடு படம் தொடங்கி மரணதண்டனைக்கு எதிரான விருமாண்டியின் சன் டிவி நேர்காணலோடு படம் முடிகிறது. இங்கே நிரபராதியான விருமாண்டிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை எவ்வளவு கொடியதோ அவ்வளவு கொடியது விருமாண்டியால் கொத்தாளத் தேவனுக்கு வழங்கப்பட்ட மரணம். மரணதண்டனை ஒழிப்புக்கான குரல் என்பது நிரபராதியான விருமாண்டி மட்டுமல்ல, குற்றவாளியான கொத்தாளத் தேவனும் உயிர் வாழ்வதற்கான நியாயங்கள் குறித்துப் பேசுவதே. எனவே விருமாண்டி திரைப்படம் மரணதண்டனை ஒழிப்பு என்ற போர்வையில் எடுக்கப்பட்டிருக்கும் மரணதண்டனைக்கு ஆதரவான திரைப்படம். நிரபராதிக்கு மட்டும் விடுதலையைக் கோருவது மரணதண்டனை ஒழிப்பாகாது” என்றார் பிரேம்.
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருடைய கருணை மனுக்கள் சமீபத்தில் நிராகரிக்கப்பட்டபோது மரணதண்டனைக்கு எதிரான குரல்கள் மீண்டுமொருமுறை வீச்சாக ஒருங்கிணைக்கப்படலாயின. வலையுலகில் இது குறித்த உரையாடல்கள் நடந்துகொண்டிருக்கும் போது நான் என்னுடைய கருத்துகளை Facebook-ல் மூன்று சிறுகுறிப்புகள் மூலம் தெரிவித்தேன் (அந்தக் குறிப்புகளும் அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களும் முழுமையாக இந்தச் சுட்டியில் உள்ளன: http://roza-thuli.blogspot.com/2011/08/blog-post_19.html).
எனது குறிப்புகளின் சாரத்தை இவ்வாறு சொல்லலாம்: மூவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்படக்கூடாது. இணையக் கருத்தாடல்களில் முருகன், சாந்தன் இருவரையும் தவிர்த்து பேரறிவாளன் மீதான கரிசனம் மட்டுமே அதிகளவில் வெளிப்படுவதாகத் தெரிகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். அரசுதரப்பு வாதத்தில் பல ஓட்டைகளுள்ள, சதிகளில் தொடர்புடையதாக நீதிமன்றில் வலுவாக நிரூபிக்கப்படாத, பேரறிவாளன் , அப்சல் குரு போன்றவர்களது மரணதண்டனை நீக்கத்திற்காக மட்டுமல்லாமல் தர்மபுரியில் மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில் மரணதண்டனைகள் விதிக்கப்பட்டவர்களிலிருந்து அஜ்மல் கசாப்புக்கு வழங்கப்பட்டிருக்கும் மரணதண்டனை வரைக்கும் எதிர்த்து நமது குரல்களை ஒருங்கிணைக்கப்பட வேண்டும். மரண தண்டனைக்கு எதிரான கவனம் குவிக்கப்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான மரணதண்டனைகளை நியாயப்படுத்துபவர்கள் அல்லது அவற்றைக் குறித்துப் பேசாதவர்கள் அவை குறித்தும் தயவு செய்து சிந்திக்க வேண்டும். நீதிமன்றம் வழங்கும் மரணதண்டனையை மட்டுமல்லாமல் இயக்கங்கள் செய்யும் அரசியல் கொலைகளையும் ‘அழித்தொழிப்பு‘களையும் நாம் ஒருசேர எதிர்த்து நிற்கும் போதுதான் நமது மரணதண்டனைக்கு எதிரான குரலுக்கு அறம் இருக்கும். ஒரு பகுதி அநீதிகளை எதிர்த்து இன்னொரு பகுதி அநீதிகளைக் கண்டுகொள்ள மறுப்பது அரசியல் குயுக்தியே தவிர அது அறம் சார்ந்த அரசியலாயிருக்க முடியாது.
எனது இந்தக் கருத்துகளிற்கு எதிர்வினைகள் கிளம்பலாயின. நண்பர்கள் ராஜன்குறை, ரோஸா வசந்த், பிரகாஷ் வெங்கடேசன் ஆகியோர்கள் பொறுப்போடு விவாதிக்க, எம்.எஸ்.எஸ். பாண்டியன் போன்றோர்கள் போகிற போக்கில் மலினமாகச் சாடிச் சென்றார்கள். அந்த விவாதங்களைத் தொகுத்துப் பார்ப்பதும் பரிசீலிப்பதுமே இந்தக் கட்டுரையின் நோக்கம். இங்கே நான் வைக்கப்போகும் கருத்துகளை நான் பெயர் குறிப்பிட்டுச் சொல்லாதவரை குறிப்பான தனிநபர்களிற்கான எதிர்வினையாத் தோழர்கள் கருத வேண்டியதில்லை. எனது இந்த உரையாடல் விருமாண்டியிஸ மனநிலையுடனான ஓர் உரையாடல்.
அரசு வழங்கும் மரணதண்டனைகளிற்கும் போராட்ட அமைப்புகள் வழங்கும் மரணதண்டனைக்கும் வேறுபாடுகள் இல்லையா என்றால் நிச்சயமாக வேறுபாடுகள் உள்ளன என்பதுதான் எனது பதில். முன்னையது சட்டபூர்வமான அநீதி. மற்றையது சட்டத்திற்குப் புறம்பான அநீதி என்பதே அந்த வேறுபாடு. இன்னொருபுறத்தில் விடுதலைப் புலிகள் தங்களுக்கான சொந்தச் சட்டக்கோர்வைகளையும நீதிமன்றங்களையும்; பொலிஸ்படையையும் சிறைச்சாலைகளையும் வைத்திருந்தார்கள், அதன்வழியே அவர்கள் மரணதண்டனைகளை முன்மொழிந்து நிறைவேற்றினார்கள் என்பதையும் நாம் கவனிக்கப்பட வேண்டும்.
என்னயிருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மரணதண்டனை விதிப்பது வேறுமாதிரியானதல்லவா என்பது அரசியல் அப்பாவித்தனமான கேள்வி மட்டுமே. அரசு சரியான அர்த்தத்தில் ஒருபோதும் ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதியாக இருப்பதில்லை. இந்தியாவில் ஒவ்வெரு அரசுகளும் இந்தியாவில் வாக்களிக்கத் தகுதியுள்ள மக்களின் கால்வாசித் தொகையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக மட்டுமே இருப்பன. நமது தேர்தல் சனநாயமுறையின் ஊழல்களையும் கவனத்திலெடுத்தால் சரியான அர்த்தத்தில் அவை மைனாரிட்டி அரசுகளே. அரசு என்பது நாட்டின் உயர்குடிகளினதும் உயர் பொருளியல் சக்திகளினதும் விசுவாசமான பாதுகாவலன் என்பதும் நீதிமன்றம், காவற்துறை, சிறைச்சாலை போன்றவை அந்த ஆதிக்க சக்திகளின் நலன்களைக் காக்க நிறுவப்பட்டவை என்பதெல்லாம் தோழர்கள் அறிந்த அரசியல் அடிப்படைப் பாடங்களே. ஆகவே அரசியல் வழக்குகளில் மரணதண்டனை மட்டுமல்ல அரசு வழங்கும் எந்தத் தண்டனையுமே ஒருதலைப்பட்டசமானதாகவும் ஆளும் வர்க்கத்தினரின் நலன்களைக் கருதியுமே இருக்கமுடியும். ‘நீதி என்பது அரசின் வன்முறை‘ என்பது அனார்க்கியர்களின் புகழ்பெற்ற முழக்கம்.
இங்கேதானுள்ளது அரசு வழங்கும் மரணதண்டனைகளுக்கும் போராட்ட அமைப்புகள் வழங்கும் மரணதண்டனைகளுக்குமான வேறுபாடு. போராட்ட அமைப்புகள் உச்சபட்ச அறத்தையும் விடுதலை அரசியலையும் பேசியவாறே களங்களிற்கு வருகின்றன. ஏராளமான அரசியல் உணர்வாளர்களையும் இளைஞர்களையும் அவை தங்களது புரட்சிகர முழக்கங்களால் வென்றெடுக்கின்றன. இயக்கங்கள் தமது தேவைகளுக்காகப் பொதுமக்களில் தங்கியிருக்கின்றன. அரசுக்காக பொதுமக்கள் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் செய்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவ்வாறு ஏதாவது செய்தாலும் அது தேசியக் கொடி விற்பது போலவும், பொப்பி மலர் விற்பது போலவுமான ஒருநாள் கூத்துகளே. வெகுசனங்களுக்கு இயல்பாக அரசின் மீதான எதிர்ப்புணர்வு இருந்துகொண்டேயிருக்கிறது. அது அரசியல் சக்தியாகத் திரளாத போதும் கூட அந்த உணர்வு அவர்களுக்குள் கனன்றுகொண்டேயிருக்கிறது. ஏனெனில் அது அவர்களது வாழ்வாதரங்களுடனும் அடிப்படை உரிமைகளுடனும் தொடர்புடையது. எனவே மக்கள் அரசுக்கு எதிராகப் புரட்சிகர முழக்கங்களுடன் ஒரு போராட்ட இயக்கம் போதிய வலுவுடன் எழுந்தால் அதை ஆதரிக்கிறார்கள். அந்த இயக்கத்திற்காக அவர்கள் அர்ப்பணிப்புகளைச் செய்யவும் தயங்குவதில்லை. இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு ஈழப் போராட்டம். ஆனால் அந்த விடுதலை இயக்கமே அதிகார மையமாக மாறி மக்களுக்கு அடக்குமுறைகளையும், வதைகளையும், மரணதண்டனைகளையும் வழங்கிவிடுவது எவ்வளவு கொடுமை. விடுதலை அரசியல் வழி நிற்கும் நமக்கு அரசு வழங்கும் மரணதண்டனைகளைக் காட்டிலும் விடுதலை இயக்கங்கள் எனச் சொல்பவை வழங்கும் மரணதண்டனைகளும் அழித்தொழிப்புகளுமே அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அதிகமும் அளிக்கக் கூடியவை. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்த இந்தியாவும் சீனாவும் சர்வதேச அரங்கில் முனைந்து நிற்பது நமக்கொன்றும் ஆச்சரியமானதல்ல. ஏனெனில் அந்த அரசுகள் தமது சொந்த மக்களின் மனிதவுரிமைகளையே தூக்கிப்போட்டு மிதிக்கும் பண்புள்ளவை. ஆனால் இலங்கை அரசின் மனிதவுரிமை மீறல்களைப் புரட்சிகர அரசுகளாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் கியூபாவும் வெனிசூலாவும் ஆதரித்து நிற்கும்போதுதானே நாம் அங்கலாய்க்கவும் அமரந்தா அவர்கள் பிடல் காஸ்ரோவுக்குக் கடிதமெழுதவும் வேண்டியிருக்கிறது. இதைப் போன்றதுதான் அரசு வழங்கும் மரணதண்டனைகளிற்கும் போராட்ட அமைப்புகள் வழங்கும் மரணதண்டனைகளிற்குமான வேறுபாடு. மரணதண்டனைகளை அவர்கள் வழங்கும் தர்க்கங்கள் வேண்டுமானால் வேறுவேறாயிருக்கலாம். ஆனால் அந்தத் தர்க்கங்களுக்குள் அநீதி என்ற ஒன்றைத் தவிர வேறேதும் உறைந்திருப்பதில்லை. இதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் எனக் கேட்டால் அது குற்றமா!
குறிப்பான ராஜீவ்காந்தி படுகொலைச் சம்பவத்திற்கே நேரடியாக வருகிறேன். ராஜீவ்காந்தி என்ற இந்திய அரசியல் தலைவரை, இந்தியாவின் முன்னாள் பிரதமரை புலிகள் படுகொலை செய்தது தார்மீகரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் தந்திரோபாயரீதியாகவும் மிகத் தவறான செயல். முட்டாள்தனமான வேலையது என்பதை முள்ளிவாய்க்கால் நமக்குச் சொல்லித்தான் கொடுத்திருக்கிறது. இதைச் சொல்வதால் இந்திய அமைதிப்படையினர் ஈழத்தில் நடத்திய கொடுமைகளை நான் ஆதரிப்பதாக ஆகிவிடாது. ஒரு தவறுக்குப் பதிலாக இன்னொரு தவறு நிகழ்த்தப்பட்ட வரலாறு ராஜீவ் காந்தி படுகொலை.
ராஜீவ் காந்தி கொலை, அமிர்தலிங்கம் கொலை, பத்மநாபா கொலை லஷ்மன் கதிர்காமர் கொலை மட்டுமில்லாமல் பிரபாகரன் கொலைகூட பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கும் தன்மைகள் வாய்ந்தவைகளேயொழிய அவற்றால் எந்த அரசியல் நன்மைகளும் மக்களிற்கு விளைந்ததில்லை. அவற்றின் தீமைகளை ஈழ மக்கள் போதுமானளவிற்கு அனுபவித்துவிட்டார்கள். கொலை அரசியல் என்னும் பாஸிச அரசியல் மனநிலையிலிருந்து நமது சமூகம் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் இன்று ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோருபவர்களில் பலர் இந்தக் கொலைக் கலாச்சாரத்திலிருந்து மீளவில்லை. இவர்கள் கணனியின் முன்னாலமர்ந்து என்ன வேண்டுமென்றாலும் எழுதிவிட்டுப் போவார்கள். விளைவை எதிர்கொண்டு அகதி முகாமில் குண்டு விழுந்தும், பதுங்கு குழிக்குள் பாம்பு கடித்தும் சாவது யார்?
இந்தவார ஆனந்த விகடன் இதழில் “பனங்காட்டுக்குள் பழிதீர்க்ப்பட்டார் ராஜீவ்காந்தி“ என எழுதுகிறார் திருமாவேலன். “ராஜீவ் விடயத்தில் நடத்தப்பட்டது கொலையல்ல, அங்கே மரணதண்டனையே வழங்கப்பட்டது“ என்கிறார் சீமான். “போர்க் குற்றவாளிக்கு எதிரானதொரு நியாயமான நடவடிக்கையே ராஜீவ் கொலை“ என்றெழுதுகின்றனர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர். ஆக இடது, வலது, கண்டது, கடியது எல்லோருக்குள்ளுமே அரசியல் கொலைக்கு ஆதரவானதொரு மனநிலை அமைந்திருக்கிறது. அவ்வாறானால் இதே மனநிலை காங்கிரஸ்காரனுக்கு அமைந்திருப்பதை இவர்கள் எவ்வாறு கண்டிக்க முடியும் என்றொருவர் கேட்டால் பதில் என்ன? அதாவது அமைதிப் படையின் ஈழப் படுகொலைக்குப் பழி ராஜீவ் கொலையெனில் ராஜீவ் கொலைக்குப் பழி முருகனும் சாந்தனும் பேரறிவாளனும். முதலில் தயவு செய்து இந்தக் கொலைச் சமன்பாடுகளை நிறுத்துங்கள் எனச் சொன்னால் அது தவறா?
உடனடியாகவே எனது கருத்து “புலிகளின் படுகொலைகளைக் கண்டிக்காதவர்களிற்குப் பேரறிவாளனிற்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை கண்டிக்கத் தகுதியில்லை என்று கருங்காலித்தனமாக ஷோபா சொல்கிறார்“ எனத் திரிக்கப்பட்டது. நான் அவ்வாறெல்லாம் சொல்லவில்லை. மரணதண்டனை ஒழிப்பு மீதான கவனம் குவிக்கப்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் புலிகளின் மரணதண்டனைகளைக் குறித்தும் நீங்கள் சிந்திக்க வேண்டிய தருணமிது என்றுதான் நான் சொன்னேன். அவ்வாறு கண்டிக்காதவர்களும், இன்னும் சொல்லப் போனால் புலிகளின் படுகொலைகளை ‘அழித்தொழிப்புகள்‘ என்றும் அவை நியாயமான மரணதண்டனைகளே என்றும் வாதிடக் கூடியவர்களும் பங்கெடுத்த சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரைக் காப்பற்றக் கோரும் கையெழுத்து இயக்கத்தில் நானும் என் பெயரை இணைத்துக்கொண்டேன். அவ்வாறு யார் வாதிடுகிறார்கள் என்றா கேட்கிறீர்கள்! கீற்று இணையத்தளத்தில் ராஜீவ் கொலை குறித்து விடுதலை இராசேந்திரன் எழுதிவரும் தொடரைப் படித்துப் பாருங்கள். புலிகளின் துணைத் தலைவராயிருந்த மாத்தையாவுக்குப் புலிகள் வழங்கிய மரணதண்டனையை அவர் எவ்வாறு இரத்தம் சொட்டச் சொட்டச் சுவைபட எழுதி நியாயப்படுத்துகிறார் என்று கவனியுங்கள்.
புலிகளின் படுகொலைகள் குறித்த எனது கருத்துகள் மகிந்த ராஜபக்சவை மகிழ்ச்சியில் ஆழ்த்தக் கூடியவை என எழுதினார் எம்.எஸ்.எஸ். பாண்டியன். புலிகளின் படுகொலைகளை நான் சுட்டிக் காட்டுவதால் ராஜபக்ச மகிழ்ச்சியடைவாரானால் அதற்கான பொறுப்பு ராஜினி திரணகமவையும், நீலன் திருச்செல்வத்தையும், செல்வியையும் ஈவிரக்கமில்லாமல் கொலைசெய்த புலிகளைத்தான் சாருமேயொழிய அந்தப் பொறுப்பு தவறுளைச் சுட்டிக்காட்டும் என்னைச் சாராது. அவ்வாறானால் நான் என்ன செய்ய வேண்டும்? புலிகளைக் கண்டித்தால் ராஜபக்சவும் காங்கிரஸைக் கண்டித்தால் பா.ஜ.கவும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கண்டித்தால் அமெரிக்காவும் மகிழ்வார்கள் எனக் கருதி மூடிக்கொண்டிருக்க வேண்டுமா? ஷோபாசக்தியைக் கண்டிப்பதில் முனைவர் காட்டும் ஆர்வத்தை அவரது சக கல்வியாளர்களையும் கலைஞர்களையும் கொன்றுதள்ளிய புலிகளின் மீது எப்போதாவது அவர் காட்டியிருப்பாரா? படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் அய்யோவெனப் போவான் பாண்டியரே. இதை வயிறெரிந்துதான் சொல்கிறேன்.
பேரறிவாளன் முதற்கொண்டு அஜ்மல் கசாப்வரை மரணதண்டனையிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்ற என் குரல் எள்ளி நகையாடப்படலாயிற்று. “முதலில் நிரபராதிகளைக் காப்போம் அது குற்றவாளிகளையும் காப்பாற்றுவதற்கான முதற்படியாக அமையும்“ என எதிர்வினை கிளம்பிற்று. தோழர்கள் தயவு செய்து கொஞ்சம் உணர்சிவசப்படுதலையும் தளும்பலையும் சற்றே தூரவைத்துவிட்டு நிதானமாகச் சிந்திக்க வேண்டும். பயங்கரவாத இயக்கங்களோடு தொடர்புடையவர்கள், சதியில் பங்கெடுத்தவர்கள் என்று குற்றங்கள் சாட்டப்பட்டு பேரறிவாளனும் கசாப்பும் நீதிமன்றத்தால் மரணதண்டனைக்குத் தீர்க்கப்பட்டிருக்கிறார்கள். பேரறிவாளனைப் பொறுத்தவரை சட்டரீதியாகப் போராட வேண்டிய படிநிலைகள் எல்லாமே முடிந்துபோய் கருணைமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இனி அரசிடம் பேரறிவாளன் நிரபராதி என நிரூபிக்க நம்மிடம் எந்தச் சட்ட வழிமுறைகளும் கிடையாது. நாம் பேரறிவாளன் நிரபராதி என ஒலிக்கும் குரல் சட்டத்தின் கதவுகளை ஒருபோதும் திறக்கப் போவதில்லை. இதுதான் உண்மை நிலவரமெனில் பேரறிவாளனுக்கும் கசாப்புக்குமான குரலை நாம் சேர்ந்து ஒலிப்பதில் என்ன சிக்கலுள்ளது. அவ்வாறு ஒலிக்காததில் என்ன பெரிய அரசியல் தந்திரோபாயம் மறைந்து கிடக்கிறது. எனினும் இப்போது உடனடியாக ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், அப்சல் குரு ஆகியோரைக் காப்பாற்றும் முயற்சிகளுக்குத்தான் நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். ஆனால், முதலில் நிரபராதிகளைக் காப்பாற்றுவோம் குற்றவாளிகளைக் காலப் போக்கில் காப்பாற்றுவோம் என்று சொல்வதெல்லாம் விருமாண்டி மனநிலையிலிருந்து பிறக்கும் கூற்றாகவே நான் கருதுகிறேன்.
நிரபராதிகளைக் காப்பாற்றும் கோரிக்கையை முன் வைத்தால் பொதுமக்களின் ஆதரவை வென்றெடுப்பது சுலபம் என்றொரு கருத்தும் சொல்லப்பட்டது. பொதுமக்கள் எப்போதுமே மரணதண்டனைக்கு ஆதரவானவர்கள் அல்ல என்பதே உண்மை. ராஜீவ் கொலைவழக்கில் குற்றவாளிகளாகத் காணப்பட்டவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று எந்தப் பொதுமகன் சொல்கிறான். சோ ராமசாமி, மாலன் முதலிய பார்ப்பனியப் பத்திரிகையாளர்களும் காங்கிரஸ் தலைவர்களும் மட்டுமே அவ்வாறு சொல்கிறார்கள். சில இணைய முகமூடிகளும் அவ்வாறு சொல்லலாம். ஆனால் இவையல்ல பரந்துபட்ட வெகுசனங்களின் கூட்டு மனநிலை. இந்தியாவை விட சனநாயக மரபும் பாரம்பரியமும் வலுவாகக் குறைந்த இலங்கையில் நீதித் துறையில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டு 40 வருடங்களாகின்றன. அங்கே எந்தப் பொதுமகனும் மரணதண்டனையை ஒழித்ததற்கு எதிராகக் குரல் கொடுத்து நிற்கவில்லை.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். நக்ஸலைட் இயக்கத்திற்காக கொலை நடவடிக்கையில் இறங்கியபோது தோழர் தியாகு கைதாகி மரணதண்டனை விதிக்கப்படுகிறார். அவரைத் தூக்கிலே போட்டேயாக வேண்டும் என வெகுசனங்களில் யாராவது கிளர்ச்சி செய்தார்களா என்ன? தியாகுவின் மரணதண்டனை ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டு விடுதலையாகி இன்று அவர் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் உலகத் தமிழர்களிடம் முக்கிய சிந்தனையாளராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். நமது அரசியல் சாய்வுகளையும் சோம்பேறித்தனங்களையும் பொறுப்பின்மையையும் மறைக்க பரந்துபட்ட வெகுசனங்கள் மீது பழியைத் தூக்கிப்போடுவது இலகுவாகயிருக்கலாம், ஆனால் அது நியாயமாக ஒருபோதும் இருக்காது.
அதெப்படி? தண்டனைகளுக்குப் பின்னாலுள்ள நீதியைக் பொறுத்து பொதுமக்களின் உணர்வு வேறுபடக்கூடும், வங்காளத்தில் ஒரு சிறுமியை வன்புணர்வு செய்து கொன்றவருக்கு எதிராக மார்க்ஸிஸ்ட் கட்சியின் தலைமையில் பொதுமக்களே திரண்டெழுந்து குற்றவாளியைத் தூக்கிலிடச் சொன்னார்களே என்றும் கேட்கப்படுகிறது. ஓர் அரசியல் கட்சி நினைத்தால் அன்னா ஹசாரேவையே தூக்கிலிடுமாறு குறிப்பிட்டளவு பொதுமக்களைத் திரட்டி ஒரு பேரணியை நடத்திவிட முடியாதா என்ன! அப்ஸல் குருவைத் தூக்கிலிடுமாறு அவ்வாறான நடவடிக்கைகளில் பா.ஜ.கவும் இந்து வானர சேனைகளும் இறங்கித்தானேயுள்ளன. ஆனால் வங்களாத்தில் அதை முன்னெடுத்தது மார்க்ஸிஸ்ட் கட்சியல்லவா என்ற கேள்வி எழக்கூடும. வங்காள மார்க்ஸிஸ்ட் கட்சி தமிழகத்திலுள்ள மார்க்ஸிஸ்ட் கட்சியைப் போல பத்து சீட்டுகளுக்காகப் பாப்பாத்தியிடம் கைகட்டி நிற்கவேண்டிய நிலையில்லை. அது அங்கே வலுவான அதிகார மையம். சொந்தமாகக் குண்டர்படைகளை அது உருவாக்கி வைத்துள்ளது. ஆக மார்க்ஸிஸ்ட் கட்சியை முன்வைத்து பொதுமக்களை மரணதண்டனைக்கு ஆதரவானவர்களாகச் சித்திரிப்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
தண்டனைகளுக்குப் பின்னாலுள்ள நீதியைக் கவனிக்க வேண்டும் என்ற சொல்லாடலுக்குள் பொதிந்திருப்பது நாம் மரண தண்டனையைப் பொதுவாக எதிர்த்தாலும் கொடூரமான குற்றவாளிக்கு வழங்கப்படும் மரணதண்டனையையும் அரசியல் குற்றவாளிக்கு வழங்கும் மரணதண்டனையையும் நிரபராதிக்கு வழங்கப்படும் மரணதண்டனைiயும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்ற குரலல்லாமல் வேறென்ன? இதே தர்க்கத்தைத் திருப்பிப் போட்டுத்தான் வினவு இணையத்தளத்தில் ஒரு பின்னூட்டக் கருத்தாளர் “ராஜீவ் காந்தி மட்டும் அங்கே கொல்லப்படவில்லை. அவரோடு சேர்த்து ஒரு சிறுமி உள்ளடங்கலாக இருபத்துநான்கு அப்பாவிகளும் கொல்லப்பட்டார்களே“ எனக் கேள்வியை எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்குப் பதிலென்ன? வங்காள உதாரணத்தைச் சொல்வதா அல்லது ராஜீவ் காந்தி பாணியிலேயே ‘ஒரு ஆலமரம் விழுந்தால் அடியில் புற்கள் நசுங்கந்தானே செய்யும்‘ எனச் சொல்வதா? இத்தகைய பதில்களெல்லாம் தகிடுதத்த அரசியலாகவே இருக்கும். தண்டனைக்குப் பின்னாலுள்ள நீதி எதுவாயிருந்தாலும் மரணதண்டனை என்பது கூடவே கூடாது அதை யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ளவே கூடாது என்பதுதானே நமது யோக்கியமான பதிலாகயிருக்க வேண்டும்.
இங்கேயும் ஒரு சிக்கலிருக்கிறது. பொதுவாக யாரைக் கேட்டாலும் சாதி என்பதே இருக்கக் கூடாது, அதை ஒழித்தேயாக வேண்டும் என்றெல்லாம் பொத்தாம் பொதுவாகப் பேசிவிடுவார்கள். ஆனால் இடஒதுக்கீடு, மதமாற்றம், சாதிவாரிக் கணக்கெடுப்புப் போன்ற குறிப்பான பிரச்சினைகள் வரும்போதுதான் அவர்களுக்குள்ளிருக்கும் சுயசாதி அனுதாபி மெள்ள வெளியே தலைகாட்டுவான். அதுபோல மரணதண்டனை ஒழிப்பு என்று எல்லோரும் பொதுவாகப் பேசிவிட முடியும். அது சுலபமானதுதான். ஆனால் புலிகள், கசாப், தர்மபுரி வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள், என்கவுணட்டர்கள் என்று குறிப்பான பிரச்சினைகள் வரும்போதுதான் அவர்களுக்குள்ளிருக்கும் விருமாண்டி வெளியே வந்துவிடுகிறான். உண்மையிலேயே இவர்கள் மரணதண்டனைக்கு எதிரானவர்கள் அல்ல. குறிப்பிட்ட பிரச்சினையில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் மரணதண்டனை வழங்கப்படுவதை இவர்கள் விரும்புவதில்லை, அவ்வளவே.
மனிதவுரிமைகள் சார்ந்து நான் எழுதிய குறிப்புகள் வேறு விவாதங்களிற்கும் இழுத்துச் செல்லப்பட்டன. ஈழத் தமிழ் தேசியத்தின் மீதுள்ள எதிர்ப்பால் தமிழகத் தமிழ்த் தேசியத்தையும் நான் எதிர்க்கிறேனா இரண்டுக்கும் இடையிலுள்ள அடிப்படை வேறுபாடுகளை நான் புரிந்துகொள்ளவில்லையா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன. தமிழகத் தமிழ்த் தேசியத்தின் நியாயத்தை உறுதிசெய்ய தந்தை பெரியாரும் சாட்சியாக அழைத்துவரப்பட்டார்.
ஈழத் தமிழ்த் தேசியத்தை நான் எதிர்க்கிறேன் என்பது மிகத் தவறான அனுமானம். ஈழத் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் இலங்கை முஸ்லீம்களும் தனித்த தேசிய இனங்களே, இவர்களது தேசிய சுயநிர்ணய உரிமை விட்டுக்கொடுக்கப்பட முடியாதது என்பதே எனது கருத்தாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஈழத்து மாற்றுக் கருத்தாளர்கள் புலிகளைக் குறிப்பிடும் போது ‘குறும் தேசியவாதிகள்‘ என விளிப்பதைத் தோழர்கள் கவனித்திருக்கலாம். சிங்களத் தேசிய இனத்தின்மீதும் முஸ்லீம் தேசிய இனத்தின் மீதும் தீராப் பகைகொண்டு வெறுமனே தமிழ்த் தேசிய இனத்திற்குளுள்ள ஆதிக்க வர்க்கத்தினரின் நலனை மட்டுமே முன்னிறுத்தி அவர்கள் போராடுகிறார்கள் என்ற பொருளில் அந்தச் சொல்லாடல் எடுத்தாளப்பட்டது. ஆனால் 2000களில் புலிகள் குறும் தேசியவாதிகள் கூடக் கிடையாது, பிரபாகரன் ஒரு விடுதலை இயக்கத்திற்கான தலைவரே கிடையாது, அவர் வெறும் ‘யுத்தப் பிரபு‘ மட்டுமே என்று கருத்துநிலைக்கு நான் வந்து சேர்ந்தேன். புலிகளுக்குத் தங்களது சொந்த இயக்க நலன்களைவிட வேறெந்த மண்ணாங்கட்டி இலட்சியமும் கிடையாது என்பதைக் கண்டடைந்ததால் எடுத்த முடிவது. அதைப் புலிகள் நந்திக் கடலோரம் மக்களை மணல் மூடைகளாக அடுக்கி வைத்து நிரூபித்தும் காட்டினார்கள். புலிகள் மீதான எனது எதிர்ப்பு ஈழத் தமிழ்த் தேசியத்தின் மீதான எதிர்ப்பாக மொழிபெயர்க்கப்படுவது நீதியற்றது. தமிழகத்தின் தேசியக் குரலைவிட ஈழத்தின் தேசியக் குரலுக்கு ஆயிரம் மடங்கு அதிகமான நியாயங்களுள்ளன. ஏனெனில் எங்களது வரலாறும் வாழ்நிலையும் அத்தகையன.
அவ்வாறானால் தமிழகத் தமிழ்த் தேசியர்களை நான் எதிர்க்கிறேனா? அங்கே இன்றைய தமிழ்த் தேசியர்கள் ‘நாம் தமிழர்‘ இயக்கமும் ‘மே பதினேழு‘ இயக்கமும் மணியரசனும் நெடுமாறனும் தானென்றால் நான் அவர்களை முழுமூச்சாக எதிர்க்கிறேன். இந்த எதிர்ப்பை அவர்களது விடுதலைப் புலிகள் ஆதரவோடு முடிச்சுப் போடுவது பகுதியளவு உண்மை மட்டுமே. அவர்களது தமிழகம் சார்ந்த கருத்துகளும் நடவடிக்கைகளும் கூடவே ஒரு பெரியாரிஸ்டாக என்னால் சகிக்கவொண்ணாதவை.
தனது வாழ்வின் இறுதி வருடத்தில் பெரியார் இவ்வாறு உரைத்தார்: “இந்திரா காந்தி அம்மையார் மக்கள் நாட்டுப் பிரிவினை கேட்கக் கூடாது, இந்திய ஆட்சியில் குடிமகனாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராய் இருந்தால், இந்திய ஆட்சியில் பிராமணர் இல்லை, சூத்திரர் இல்லை, பார்ப்பான், தாசி மகன் இல்லை, எல்லாக் குடிமக்களும் சம அந்தஸ்து உள்ள மக்கள் ஆவார்கள் என்று சட்டம் செய்யட்டும். ஜனாதிபதியைக் கொண்டு அவசரச் சட்டம் பிரகடனம் செய்யட்டும். அப்படி இல்லாவிட்டால் பிரிவினைதான்! பிரிவினைதான்!! பிரிவினைதான்!!! முக்காலும் முடிவு ஆக வேண்டியது ஆகும். நான் இன்று பிரிவினை கேட்கவில்லை, கேட்கிறேன் என்றால் நிபந்தனை இல்லாமல் கேட்கவில்லை.”
பெரியாரின் இந்தக் கூற்றுக் குறித்து அ.மார்க்ஸ் இவ்வாறு எழுதுகிறார்: “தேசம் என்பதைப் பிரதானப்படுத்தாமல் தேசம் குறித்த எந்தப் பெருங்கதையாடலிலும் சரணடையாமல் தமது நோக்கத்தைப் பெரியார் வெளிப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது. யார்தான் நிபந்தனை இல்லாமல் பிரிவினை கேட்கிறார்கள்? எனச் சொல்லிப் பெரியாரை ஒரு தேசியவாதியாகக் காட்ட முனைவதை நாம் ஏற்க இயலாது. அப்படியாயின் இன்று தமிழ்த் தேசப் பிரிவனை கோருவோர் முன்வைக்கும் நிபந்தனை யாது, அந்நிபந்தனை யாருடைய நோக்கிலானது, பெரியார் விதித்த நிபந்தனையை இவர்கள் ஏற்றுக்கொள்கின்றனரா என்று நாம் கேட்டாக வேண்டியுள்ளது. இந்துமதம் குறித்தெல்லாம் நாங்கள் இன்ற பேச இயலாது என்கிற ரீதியல் பழ நெடுமாறன் அவர்கள் கூறியள்ளது இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.“ ( ‘பெரியார்?‘/ அ.மா/ பக்:31)
“எம்மொழி பேசியவராயினும் இந்தியாவின் எப்பகுதியில் பிறந்தவராயினும் அவர்களைப் பெரியார் பிறராகக் கட்டமைக்கவில்லை. ஆனால் இன்றைய தமிழ்த் தேசியர்கள் அம்பேத்கரை வடக்கத்தியர் என ஒதுக்குவதும் தெலுங்கு பேசுகிற சக்கலியர்களக்கு இட ஒதுக்கீடு கூடாது எனச் சொல்வதும் முஸ்லீம்கள் தமிழ் பற்றோடு இருக்க வேண்டும் என மிரட்டுவதும் ஒப்பிடற்குரியன. (அதேநூல்/ பக்: 30).
பெரியாரை முன்னிறுத்தி இன்றையத் தமிழ்த் தேசியர்களுக்கு வக்காலத்து வாங்க முயலும் தோழர்கள் இதுகுறித்தெல்லாம் சிந்திக்க வேண்டும். இன்றைய தமிழ்த் தேசியவாதிகள் இந்துத்துவ வெறியர்களோடு மேடையைப் பகிர்ந்துகொள்வதும், பால்தாக்கரேயைப் ‘பெருமகனார்‘ என விளிப்பதும், சாதித் தலைவர்களின் சிலைகளுக்கு மாலைகள் அணிவிப்பதும் பெரியார் வழிதானா என யோசிக்க வேண்டும். கணக்கற்ற தொண்டர் படையைப் பெரியார் வைத்திருந்தபோதும், அவரது ஒரு கண்ணசைவில் களம் புக எண்ணற்ற தோழர்கள் தயார்நிலையில் இருந்தபோதும் பெரியார் எப்போதும் வன்முறை அரசியலை முன்னெடுத்தவரல்ல. ஆனால் சாமி கும்பிட வந்த அப்பாவிச் சிங்களவர்களை ‘நாம் தமிழர்கள்‘ உதைக்கிறார்கள், அதை ‘மே பதினேழு‘ இயக்கத்தினர் நியாயப்படுத்துகிறார்கள். எனக்கு அரசியல் சகிப்புத்தன்மை குறித்தும் அரசியல் தூய்மையின்றி இருப்பது குறித்தும் கற்றுத்தர முயற்சிக்கும் தோழர்கள் அப்பாவிகளைத் தாக்கும் இந்த அதிரடிப் போராளிகளுக்கு எதுவும் உபதேசிக்க மறுப்பது வியப்புக்குரியதே.
சரி இந்த தமிழ்ப் பாஸிஸ்டுகளையும் வன்முறையாளர்களையும் தவிர்த்து தமிழகத்தில் வேறுயாராவது தமிழ்த் தேசியத்தின் வழிநின்று பேசுகிறார்களா, குறிப்பாக அறிவுத்துறையினர் யாராவது அதுகுறித்து அண்மையில் பேசியிருக்கிறார்களா எனச் சலித்துத் தேடினால் தமிழவனின் ‘தீராநதி‘க் கட்டுரையைத் தவிர வேறெதுவும் கிடைப்பதாயில்லை. தமிழவன் அறிஞர் அண்ணாவையும் பிரபாகரனையும் ஒப்பிட்டு அபத்தக் கட்டுரையொன்று எழுதியிருக்கிறார். அதை வைத்து நாக்குக் கூட வழிக்க முடியாது.
எனவே ஏதோ நான் தமிழ்த் தேசியம் என்ற பேச்செடுத்தாலே கடுப்பாகி நிற்பதுபோலவும் அதன் காரணத்தாலேயே அந்தக் குறிப்புகளை எழுதியதாகவும் எதிர்வினையாளர்கள் பேசுவது நியாயமற்றது. அந்தக் குறிப்புகள் மனித உயிர்களின் அருமையை உணர்ந்ததால் எழுதிய குறிப்புகள் மட்டுமே. எனது குறிப்புகள் பேரறிவாளனின் விடுதலைக்கு ஊறு செய்யும் எத்தனமல்ல. பேரறிவாளனை நிரபராதி என்பதால் விடுதலை செய்யுமாறு குரல் கொடுப்பது மறுபுறத்தில் இயல்பாகவே முருகனின், சாந்தனின் விடுதலைக்கு ஊறாக விளையக்கூடும் என்ற பதற்றமது. ஆகவேதான் நிரபராதி X குற்றவாளி என்கிற முரண்களை முன்னிறுத்தாமல் ஒட்டுமொத்தமாக மரணதண்டனைக்கு எதிராக நமது குரல்கள் அணிக்குவிப்புச் செய்யப்பட வேண்டுமென்றேன்.
அரசு மையமான தேசிய உணர்விற்கும் ஒடுக்கப்படும் மக்களின் எதிர்நிலை தேசிய உணர்விற்கும் வித்தியாசமுண்டு என்பதெல்லாம் மிகச் சரிதான். யார் அதை மறுத்தார்கள். ஆனால் ஒடுக்கப்படும் மக்களின் தேசிய உணர்வு ஈழத்தில் நடந்ததுபோல கொலைக் கலாச்சாரத்தின் பின்னால்தான் அணிதிரளுமென்றால் நாம் சகித்துக்கொண்டுதான் இருக்க வேண்டுமா? அங்கே நமது உறுதியான இடையீடு தேவையில்லையா? நான் மேலே குறிப்பிட்ட இயக்கங்கள் தந்தை பெரியாரை அல்ல, பிரபாகரனையே தங்களது தவைராகவும் அவரின் வழிமுறையை உன்னதமான/ எடுத்தக்காட்டான வழிமுறையாகவும் பிரகடனப்படுத்துவது ஒன்றும் இரகசியமல்லவே. அந்த வழிமுறை அரசியல்ரீதியாகவும், இராணுவரீதியாகவும், தார்மீகரீதியாகவும் தோல்வியுற்ற வழிமுறை என நாம் சுட்டிக்காட்ட வேண்டாமா.
எதிர்தரப்பை அங்கீகரித்து நான் உரையாட மறுக்கிறேன், அரசியல் சரிகளையே கட்டியழுகிறேன் என்று சொல்வதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காது. என்ன கொஞ்சம் மூர்க்கமாகப் பேசுவேன். கிரவுண்டுக்குள்ளேயே இறங்காமல் மைதானத்தின் ஓரமாக நின்று ஊத்தை படாமல் வார்த்தை விளையாட்டெல்லாம் என்னால் விளையாட முயடியாது. வெட்டொன்று துண்டு இரண்டாகப் பேசித்தான் பழக்கம், அதையும் வெடுக்கெனப் பேசித்தான் பழக்கம். ஏனெனில் பிரச்சினை எனது சிந்தனைப் புலம் சார்ந்தல்ல, அது எனது வாழ்க்கை!
நான் அந்தக் குறிப்புகளை எழுதியது தமிழ்த் தேசியர்களைச் சீண்டிப் பார்க்கும் முயற்சி என்றும் சொல்லப்பட்டது. இதை நான் கடுமையாக மறுக்கிறேன் தோழர்களே! பேரறிவாளன், முருகன், சாந்தன் இன்னும் இந்தியச் சிறைக் கொட்டடிகளில் தூக்குக்காகக் காத்திருக்கும் எல்லோருக்குமாக நாம் இணைந்து குரல் கொடுப்போம், அதேவேளையில் நாங்கள் புலிகளால் வதைக்கப்பட்டபோது, எங்களது அரசியல் தலைவர்களும், மாற்றுக் கருத்தாளர்களும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் தொழிற்சங்கவாதிகளும், கம்யூனிஸ்டுகளும், சாதியொழிப்புப் போராளிகளும் புலிகளால் கொல்லப்பட்டபோது நீங்கள் மவுனமாக இருந்தது சரிதானா என அவர்களைப் பார்த்துக் கேட்டேன். இது கேட்கப்படக் கூடாத கேள்வியா எனச் சொல்லுங்கள்! இது அநீதியான கேள்வியா எனச் சொல்லுங்கள்!! இந்தக் கேள்விகள் உங்களைச் சிந்திக்க வைக்காது வெறுமனே சீண்டத்தான் செய்யுமெனில் உங்களது மனங்கள் என்ன கல்லா? நீங்கள் பேசும் மனித உரிமைகள் குறித்த வார்த்தைகள் வெறும் பசப்பா?
கேள்வி நியாயமாயிருந்தாலும் அசந்தர்ப்பத்தில் எழுப்பப்பட்ட கேள்வி என்றும் ஒரு கருத்துச் சொல்லப்பட்டது. இங்கே என்ன கல்யாணமா நடக்கிறது அசந்தர்ப்பங்களையும் அமங்லங்களையும் நாம் கணக்கில்கொள்ள. இழவு வீட்டின் மத்தியில் நாம் நிற்கிறோம். எதுவாயிருந்தாலும் வெளிவெளியாகப் பேசித் தீர்ப்போம். சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமாயும் எதிரிலிருப்பவர்களின் உணர்வு பார்த்தும் சாமர்த்தியமாகப் பேசுவதற்கு நானென்ன கே.எஸ்.ராஜாவா? எந்தச் சந்தர்ப்பத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் தனது மனதுக்குச் சரியெனப்பட்டதைத் தயங்காமல் எடுத்துரைத்தவர் பெரியார். தோழன் மதிவண்ணனின் வார்த்தைகளில் சொன்னால் வார்த்தைகளுக்குள் கொடுக்கை ஒளித்து வைத்திருந்தவர் அவர். பெரியார் எனக்கு ஆய்வுக்கான கச்சாப் பொருள் அல்ல, நான் பின்பற்றிச் செல்லும் நெருப்புத்தூண்.
குறிப்பு: தோழர்களே, நான் இப்போது பயணத்திலிருப்பதால் இந்தக் கட்டுரை குறித்து எழும் விவாதங்களில் என்னால் உடனடியாகப் பங்கெடுக்க முடியாது. பிரான்ஸ் திரும்பி வந்த பின்பு விவாதத்தில் பங்கெடுத்துக்கொள்கிறேன். தொடர்ந்தும் எல்லாத் தரப்புகளுடனும் உரையாட நான் எப்போதும் தயாராகவேயுள்ளேன். உரையாடலில் வார்த்தைகள் ஒருபோதும் வியர்த்தமாவதில்லை. நாம் சந்திக்கும் கடைசி மனிதனிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள ஒன்றிருக்கும். ஒதுங்கிச் செல்லலும் ஒதுக்குதலும் நமது மரபுமல்ல.
Rajan Kurai Krishnan //உரையாடலில் வார்த்தைகள் ஒருபோதும் வியர்த்தமாவதில்லை. நாம் சந்திக்கும் கடைசி மனிதனிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள ஒன்றிருக்கும்.// உரையாடலிலிருந்து கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்றிருக்கும் என்று நீங்கள் சொல்வது நம்பிக்கையளிக்கிறது. உங்களிடம் உரையாடும்போதுதான் வார்த்தைகள் வியர்த்தமென்று தோன்றுகிறது என்று நான் குறிப்பிட்டதே நீங்கள் அடுத்துவர் கூற்றை புரிந்துகொள்ள எவ்வளவுதூரம் முயற்சி செய்கிறீர்கள் என்று அளவிட முடியாததால்தான். ஆனால் கொள்கையளவில் கற்றுக்கொள்ள ஒன்றிருக்கும் என்று நீங்கள் நம்புவதால் நம்பிக்கை துளிர்க்கிறது. உங்களிடமிருந்து நான் இலங்கை அரசியல் பற்றி நிறையக் கற்றிருக்கிறேன் என்பதால் ஏதோ நான் கற்றலை ஒருவழிப்பாதையாகச் சொல்கிறேன் என்று அதற்கு ஏதாவது பழமொழியைத் தேடாதீர்கள். மேலும் வியர்த்தம் என்று சொன்னதால் உங்களுடன் உரையாடுவதை நிறுத்திவிட்டு எங்கும் ஓடிவிடவில்லை நான் (ஒதுங்குதுலும், ஒதுக்குதலும் போன்ற தேய்ந்துபோன சூத்திரங்களை பயன்படுத்தும் ஆசை எனக்குப் புரிகிறது). ஆனால் நீங்கள் எழுதினால் அதைவிட விரிவாக எழுதுவேன் என்று அவசரப்பட்டு சொல்லிவிட்டேன். அது மட்டும்தான் இப்போதைக்கு சாத்தியமா என்று தெரியவில்லை. நீங்களும் கனடா பயணம் போவது கொஞ்சம் அவகாசம் அளிக்கிறது. விருமாண்டியிஸத்திற்கு என்னுடைய விரிவான எதிர்வினையை செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட முயற்சிக்கிறேன். ஆனால் உங்களுடைய நிலைத்தகவலைப் பொறுத்தவரை என்னுடைய கண்டனத்தை எந்தவிதத்திலும் மறுபரிசீலனை செய்யவேண்டிய தேவையை உங்கள் விருமாண்டியிஸம் கட்டுரை ஏற்படுத்தவில்லை. உங்கள் எழுத்தாற்றலை மேலும் விரயம் செய்யத் தூண்டுகிறேனோ என்று குற்ற உணர்ச்சிதான் தோன்றுகிறது. என்ன செய்வது – சில சமயங்களில் பேசாமலிருக்க முடிவதில்லை.
இந்தக் கேள்விகள் உங்களைச் சிந்திக்க வைக்காது வெறுமனே சீண்டத்தான் செய்யுமெனில் உங்களது மனங்கள் என்ன கல்லா? மனதில் குத்துவதால்தான் கத்துகிறார்கள்.
//அரசு என்பது நாட்டின் உயர்குடிகளினதும் உயர் பொருளியல் சக்திகளினதும் விசுவாசமான பாதுகாவலன் என்பதும் நீதிமன்றம், காவற்துறை, சிறைச்சாலை போன்றவை அந்த ஆதிக்க சக்திகளின் நலன்களைக் காக்க நிறுவப்பட்டவை என்பதெல்லாம் தோழர்கள் அறிந்த அரசியல் அடிப்படைப் பாடங்களே. ஆகவே அரசியல் வழக்குகளில் மரணதண்டனை மட்டுமல்ல அரசு வழங்கும் எந்தத் தண்டனையுமே ஒருதலைப்பட்டசமானதாகவும் ஆளும் வர்க்கத்தினரின் நலன்களைக் கருதியுமே இருக்கமுடியும்.//
உண்மைதான் தோழரே!
உங்கள் கட்டுரை தமிழ்த் தேசியர்களின் இரட்டை நிலையை அம்பலப்படுத்துகிற அதே நேரத்தில் தருமபுரியில் மாணவிகள் கொல்லப்பட்டதில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் விடுதலை வழங்க வேண்டும் என்று கோருவது என்ன மனநிலை? அப்படியானால் நரேந்திர மோடி, ஜார்ஜ் புஷ், ராஜபட்சே முதலான கொடிய மனித மிருகங்களை என்ன செய்வது? அவர்களுக்கு என்ன தண்டனையை நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்? உண்மையில் இப்படிப்பட்ட தூய காந்தீய மனநிலையை ஒருவர் நேர்மையாக கடைப்பிடிப்பது சாத்தியமா? அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்ட மக்கள் இப்படிப்பட்ட போலியான நம்பிக்கைகளில் இளைப்பாற முடியும். தங்களைப் போன்ற நபர்கள் தமது சொந்த அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் மக்களை திரட்டும் சக்தியில்லாமல் பேசும் விதண்டாவாதமாகவே இது படுகிறது.