அன்பான முத்துகிருஷ்ணன், விடுதலைப் புலிகளின் குற்றத்தின் நிழல் நமது சமூகத்திலிருந்து முற்றாக விலகும்வரை அதைப் பேசித்தான் ஆகவேண்டியிருக்கிறது. முன்பு புலிகளை விமர்சித்தபோது போராட்ட காலத்தில் விமர்சிக்கக் கூடாது என்றார்கள். இப்போது விமர்சித்தால் புலிகள் இல்லாத போது பழைய கதைகள் பேசலாமா என்கிறீர்கள். அப்போது எப்போதுதான் புலிகளைப் பற்றிப் பேச அனுமதிப்பீர்கள்? புலிகள் என்பது பிரபாகரனோ அல்லது ஓர் இராணுவ அணியோ அல்ல. அது சனநாயக மறுப்பையும் ஆயுதக் கலாசாரத்தையும் அதிதீவிர வலதுசாரி அரசியலையும் முப்பது வருடங்களாக ஈழச் சமூகத்தில் கட்டமைத்து வைத்திருந்த ஒரு பாஸிச அரசியல் போக்கு. அந்தப் போக்கு நமது சமூகத்தை ஆழ ஊடுருவிச் சிதைத்துள்ளது. பிரபாகரனின் மறைவுடனோ புலிகளின் இன்மையுடனோ இந்த அரசியல் போக்கு மறைந்துவிடவில்லை. அந்தப் போக்கு குறிப்பாகப் புலம் பெயர் தேசங்களில் அவிழ்த்துப்போட்டு ஆடுகிறது. அந்தப் பாஸிசக் கலாசாரத்தின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அறையும்வரை நாம் அது குறித்துப் பேசத்தான் வேண்டியிருக்கிறது. எனது பங்கிற்கு நான் ஒரு ஆணியை அளிக்க விரும்புகிறேன்.
‘ராஜபக்சவைப் பற்றி எப்போது அதிகமாகப் பேசப் போகிறீர்கள்?’ எனக் கேட்டிருக்கிறீர்கள். அன்பான தோழா! இலங்கை அரசின் இனவாதத்தையும் மனித உரிமைகள் மீறல்களையும் குறித்து இலக்கியத்தில் என்னைவிட அதிகம் எழுதிய இன்னொருவரைக் காட்டிவிடுங்கள் பார்க்கலாம். நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் உரைச்சித்திரங்களாகவும் நாடகமாகவும் திரைப்படமாகவும் நான் கடந்த பதினைந்து வருடங்களாக அவற்றை விடாமல் எழுதிவருகிறேன். எனக்கு அடுத்ததாக அதிகம் எழுதியவரை நீங்கள் காட்டினாலும் அவர் நான் எழுதியவற்றில் பாதியளவுதான் எழுதியிருப்பார் அல்லவா?
இலங்கை அரசின் பேரினவாதம் குறித்து பிறமொழி ஊடகங்களிலும் என்னளவிற்கு பேசிய இலக்கிய எழுத்தாளர் எவரும் இல்லை என்பதும் உண்மையல்லவா. நேரமிருந்தால் எனது வலைப்பக்கத்தில் ‘நேர்காணல்கள்’ பகுதிக்குச் சென்று படித்துப்பாருங்கள். அனைத்தும் அங்கே தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. சிங்கள இதழியலாளர்களால் வெளியிடப்படும் ‘லக்பீம’ பத்திரிகைக்கு நான் வழங்கிய நேர்காணலின் தலைப்பு: Can Sinhalese live in peace when minorities suffer?
இலங்கை அரசு குறித்தும் ராஜபக்ச குறித்தும் நான் சொல்பவற்றைவிட நான் ஒரு வார்த்தை புலிகள் குறித்துப் பேசினால் அதுதான் புலியாதரவாளர்களை எரிச்சல்படுத்துகிறது. என்னுடைய பிரபலமான “நான் புலிகளை நூறு சதவீதம் எதிர்க்கிறேன், இலங்கை அரசை இருநூறு சதவீதம் எதிர்க்கிறேன்” என்ற பிரகடனம் இணையங்களில் வாழைப்பழ காமெடி ரேஞ்சுக்குப் படாதபாடு படுகிறது. குற்றம் என்னிடமில்லைத் தோழா. நீ இலங்கை அரசை விமர்சிக்கிறாயோ இல்லையோ புலிகளைப் பற்றிப் பேசாதே என்ற மன அவசம் தான் இவ்வாறு சாரமற்ற கேள்விகளை உங்களைக் கேட்க வைக்கிறது.
//…அந்தப் போக்கு குறிப்பாகப் புலம் பெயர் தேசங்களில் அவிழ்த்துப்போட்டு ஆடுகிறது. அந்தப் பாஸிசக் கலாசாரத்தின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அறையும்வரை நாம் அது குறித்துப் பேசத்தான் வேண்டியிருக்கிறது. எனது பங்கிற்கு நான் ஒரு ஆணியை அளிக்க விரும்புகிறேன்.//
உண்மை. பாராட்டுகள்.