அரசியல் செயல்பாடுகள் மட்டும்தான் உங்கள் இலக்கியமெனில் எப்படி உங்களால் அசோகமித்திரன் பற்றியும் சுஜாதா பற்றியும் பேசமுடியும்?உங்களுக்குத் தார்மீகமாக அதற்கு உரிமை இருக்கிறதாக கருதுகிறீர்களா?
கார்த்திகேயன்
தோழர், என்னுடைய இலக்கியம் மட்டுமல்ல ஒவ்வொருவரது இலக்கியப் பிரதிகளிற்குள்ளும் அரசியல் உள்ளது. அதை நுட்பமாகக் கட்டவிழ்த்துப் பார்ப்பதுதான் பின்நவீனத்துவ அறிதல்முறை நமக்கு வழங்கியிருக்கும் கொடை. இவ்வகையான விமர்சனமுறையினை நீங்கள் அறிமுகம் செய்துகொள்வதற்காக சுஜாதாவின் ‘மஞ்சள் இரத்தம்’ கதை குறித்து ரவிக்குமாரும் சுராவின் ‘புளியமரத்தின் கதை’ குறித்து ராஜன் குறையும் புதுமைப்பித்தன், மௌனி பிரதிகள் குறித்து அ. மார்க்ஸ் எழுதிய மறுவாசிப்புக் கட்டுரைகளையும் இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ குறித்து ராஜ்கவுதமன் எழுதிய விமர்சனத்தையும் தேடிப் படிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
சுஜாதா பார்ப்பன சாதிப்பற்றும் அதை வெளிப்படையாக அறிவித்துக்கொள்ளும் திமிரும் உடையவர் என்பது நீங்கள் அறிந்ததே. அசோகமித்திரன் தமிழகத்தில் பார்ப்பனர்கள் யூதர்களைப் போல அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாழ்கிறார்கள் என ஓர் ஆங்கிலப்பத்திரிகையின் நேர்காணலில் அழுதுவடிந்ததையும் தந்தை பெரியாரின் ‘முரளி பிராமணாள் கபே’க்கு எதிரான போராட்டத்தை கொச்சை செய்து எழுதியதையும் நீங்கள் படித்திருக்கலாம். இவர்களது இந்தச் சாதியச் சாய்வுகள் இவர்களது இலக்கியப் பிரதிகள் முழுவதுமே விரவிக்கிடக்கின்றன.
சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் மிகச் சிக்கலான பரிமாணங்களைக் கொண்டவை. ‘பார்ப்பனர்’ என்ற வார்த்தையைத் தவிர்த்து ‘பிராமணர்’ என்ற சொல்லாடலை உபயோகிப்பதே பார்ப்பனியம்தான் என்பார் பெரியார். பார்ப்பனர்களை ‘பிராமணர்கள்’ என விளிப்பதை பஞ்சமா பாதகங்களில் ஒன்றென வரையறுத்தவர் அவர். அன்றாடச் சொல்லாடல்களிலிருந்து கலை – இலக்கியம், அரசியல் வரைக்கும் நமது சாதிய எதிர்ப்புப் பிரக்ஞை எப்போதும் விழிப்புடனிருக்கவேண்டும். எனவே இவர்கள் குறித்துப் பேசுவது எனது தார்மீக உரிமை மட்டுமல்ல எனது வரலாற்றுக் கடமையும் அதுவே.