நெருப்புத் துளி!

கட்டுரைகள்

(03.07.2011 அன்று லா சப்பலில் (Paris) நடந்த ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்’ நூல் வெளியீட்டரங்கில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் எழுதப்பட்டது)

ந்த நூல் வெளியீட்டு அரங்கிற்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின்
தலைவர் தேவதாசன் அவர்களே, நூலாசிரியர் யோகரட்ணம் அவர்களே, அரங்கின் சிறப்பு அழைப்பாளர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களே, நூல் குறித்து மதிப்புமிக்க திறனாய்வுகளை இங்கே நிகழ்த்திய தோழர் எம்.ஆர்.ஸ்ராலின் அவர்களே, ராகவன் அண்ணன் அவர்களே, தோழர் பஷீர் அவர்களே, தோழியர் பிரபா லோலன் அவர்களே, மற்றும் தோழர்களே, நண்பர்களே பணிவுடன் வணங்குகின்றேன்.

நூல் குறித்துப் பேசுவதற்கு முன்பாகச் சில நிமிடங்கள்  வேறொரு விடயத்தைப் பேசுவதற்கு இந்த அவை என்னைத் தயவு செய்து அனுமதிக்க வேண்டும்.

இன்று இந்த நிகழ்வு ‘லா சப்பல்’ பகுதியில் திரளான பங்கேற்பாளர்களுடன் நடந்துகொண்டிருக்கிறது. இரண்டொரு வருடங்களிற்கு முன்புவரை இந்தப் பகுதியில் புலிகளின் வெறுக்கத்தக்க நாட்டாமை கொடிகட்டிப் பறந்ததை நாமறிவோம். புலிகளிற்கு மாற்றான கருத்தைக் கொண்டிருந்த தோழர்கள் இங்கேதான் வளைத்து வளைத்துத் தாக்கப்பட்டார்கள். புலிகளை விமர்சிக்கும் பத்திரிகைகளை விற்பனை செய்த கடைகள் மிரட்டப்பட்டன. இந்தப் பகுதியில் அரசியல் பரப்புரைகளைச் செய்த தோழர்களின் வெளியீடுகளும் பத்திரிகைகளும் புலிக் குண்டர்களால் பறித்துச் செல்லப்பட்டன. லோரன்ஸ் திலகரும், வேலும்மயிலும் மனோகரனும், சுக்லாவும், இளங்கோவும் கொஞ்சநஞ்ச ஆட்டமா ஆடினார்கள்! எத்தனை ‘அண்டர்கிரவுண்ட் குரூப்’புகளை அவர்கள் இந்த மண்ணில் வழிநடத்தினார்கள்! புலிகளின் நாடு கடந்த அடக்குமுறைக்கு மறுத்தோடித் தோழர்கள் இரத்த சாட்சியாக இருக்க, புலம் பெயர்ந்த தமிழன் மவுன சாட்சியாக இருந்தான். இதே பகுதியில் இன்று தோழர் வாசுதேவ நாணயக்காரவை அழைத்து தலித் சமூக மேம்பாட்டு முன்னணி நடத்தும் இந்த நிகழ்வு ஓர் அற்புதம் என்றே சொல்வேன். இதில் என்ன அற்புதம் கிடக்கிறது என யாருக்காவது தோன்றக்கூடும். நடுத்தெருவில் வைத்து அவர்களும் புலிக் குண்டர்களிடம் மிதி வாங்கியிருந்தால், அவர்கள் நடத்திய கருத்தரங்குகள் புலிகளால் வன்முறையால் குழப்பப்பட்டிருந்தால், பேசவும் எழுதவும் அச்சப்பட்டிருந்த ஒரு சூழலில் அவர்கள் வாழ்ந்திருந்தால், அவர்களின் வீட்டுக் கதவுகளையும் புலிகள் துவக்கால் தட்டியிருந்தால், சபாலிங்கம் போன்ற ஒரு மதிப்புமிக்க தோழரை இந்த மண்ணில் புலிகளின் துப்பாக்கிக்கு அவர்களும் இரை கொடுத்திருந்தால் இந்த அற்புதத்தை அவர்களும் உணரவே செய்வார்கள்.

தமிழர்கள் தேசிய சுயநிர்ணய உரிமையைக் கேட்பதற்கு முன்பே தமிழர்களிற்கு தேசிய சுயநிர்ணய உரிமையைக் கேட்டவர் வாசுதேவ நாணயக்கார என நான் நண்பர்களிடம் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. நீண்ட காலமாகவே தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக ஒலித்துவந்த குரல் வாசுதேவ நாணயக்காரவுடையது. இதை நான் ‘கொரில்லா’ நாவலிலும் பதிவு செய்திருந்தேன். 1987ல் யாழ் நல்லூர் ஆலய முன்றலிலே திலீபன் பட்டினிப் போர் நடத்திய ஆறாவது நாள் மாலையில் அங்கே தோழர் வாசுதேவ நாணயக்கார தனது கட்சித் தோழர்களுடன் வந்து திலீபனுடன் உரையாடிச் சென்றது என் நெஞ்சில் இப்போதும் நிழலாடுகிறது. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இலங்கை அரசுகளின் கொடிய அடக்குமுறைகளையும் நீண்ட சிறைவாசங்களையும் அனுபவித்தவர் வாசுதேவ நாணயக்கார. எண்பதுகளில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலத்தில் இரண்டு வருடங்கள் அவர் தலைமறைவாகவும் நேரிட்டது. இன்று இலங்கையிலுள்ள அனுபவம் வாய்ந்த மூத்த இடதுசாரி அரசியலாளர்களில் முதன்மையானவர் வாசுதேவ நாணயக்காரவே. அத்தகைய தன்னுடைய நீண்டகாலப் போராட்ட வரலாறையும் தன்னுடைய முந்தைய அரசியல் நிலைப்பாடுகளையும் இன்று காற்றிலே பறக்கவிட்டு இலங்கைப் பேரினவாத அரசின் அமைச்சரவையில் தோழர் வாசுதேவ நாணயக்கார பங்கெடுத்திருப்பதை இலங்கையின் இடதுசாரிப் பாரம்பரியத்திற்குக் கிடைத்த இன்னொரு மரண அடியாகவே நான் கருதுகிறேன்.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளையும் அவர்களது அரசியல் கோரிக்கைகளின் நியாயத்தன்மையையும் வாசுதேவ நாணயக்கார அளவிற்கு அறிந்திருக்கும் இன்னொரு சிங்கள அரசியல்வாதி இலங்கையில் கிடையாது. மாவிலாறில் யுத்தம் தொடங்கியபோது “யுத்தம் வேண்டாம் பேச்சுவார்த்தையே நிரந்தரத் தீர்வுக்கு வழிசெய்யும்” எனச் சொன்னவர் வாசுதேவ நாணயக்கார. தேசியகீதத்தை இனிச் சிங்களத்தில் மட்டுமே பாடவேண்டும் என அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானமானமொன்றை நிறைவேற்ற மகிந்த ராஜபக்ச எத்தனித்தபோது அதை அமைச்சர் ராஜித்த சேனரத்னவுடன் இணைந்து கடுமையாக எதிர்த்தவர் வாசுதேவ நாணயக்கார. அண்மையில் அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் மீது இலங்கை இராணுவக் காடைகள் தாக்கியபோது அதை அரசுக்கு வால் பிடிக்கும் தமிழ் ஊடகங்களே நியாயப்படுத்தித் திரித்துச் செய்திகளைக் கசியவிட்டபோது “அது இராணுவத்திலுள்ள தமிழர் விரோத சக்திகளாலேயே நடத்தப்பட்ட தாக்குதல்” என அறிக்கை வெளியட்டவர் வாசுதேவ நாணயக்கார. விடுதலைப் புலிகளின் தலைவரின் தாயாரின் உடலம் எரியூட்டப்பட்ட இடத்தில் வக்கிரம் பிடித்தவர்கள் நாய்களைச் சுட்டு வீசியபோது அதைக் கண்டித்துப் பேசியவர் வாசுதேவ நாணயக்கார. இத்தகைய செயல்களால் வாசுதேவ நாணயக்கார மீதான நம்பிக்கை எனக்கு இன்னமும் கொஞ்சம் எஞ்சியிருக்கவே செய்கிறது. இலங்கையின் சகல இனங்களையும் ஒன்றிணைத்து நாட்டை முன்னேற்ற முடியாவிட்டாலும் இன்றிருக்கும் நிலையிலிருந்து நாட்டை மேலும் சீரழியவிடாமல் தடுத்து நிறுத்தும் சக்தி வாசுதேவ நாணயக்கார போன்ற பெரும்பான்மை இனத்தின் இடதுசாரிகளின் கைகளிலேயே உள்ளதென நான் நம்புகிறேன். நாட்டில் இனப்பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வு கிட்டுமெனில், அதுவும் இவர்களது முன்னெடுப்புகளிலேயே தங்கியுள்ளது. இன்று தோழரின் கைகளில் இனங்களிற்கிடையேயான நல்லிணக்கத்திற்கான அமைச்சர் பொறுப்பு உள்ளது. அமைச்சர் அவர்களே! அந்தப் பொறுப்புணர்வுடனும் தமிழ் மக்கள் மீது நீங்கள் நீண்டகாலமாகவே பாராட்டிவந்த தோழமையுணர்வின் விகசிப்புடனும் சிறுபான்மை இனத்தவர்களால் நிரம்பியிருக்கும் இந்த அவையில் நீங்கள் நிகழ்த்தவிருக்கும் உரையில் சில விடயங்களை நீங்கள் உறுதியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர் அவர்களே! நான் அய்.நா.நிபுணர்களின் அறிக்கை குறித்துச் சொல்ல விரும்புகிறேன். அந்த அறிக்கையில் உள்ளவை நூற்றுக்கு இருநூறு சதவீதம் உண்மையானவை. ஆனால் இலங்கை அரசு தனது போர்க்குற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. கொத்தபாய ராஜபக்ச ‘நாங்கள் ஒரு சிவிலியனைக் கூடக் கொல்லவில்லை’ என அல் – ஜசீராவில் கூசாமல் பொய்யுரைக்கிறார். அய்.நா. நிபுணர்கள் குழு அறிக்கையின் சந்தேகத்துக்கிடமில்லாத நம்பகத்தன்மையை இந்த அவையிலுள்ளவர்கள் அறிவார்கள். இலங்கை அரசு வன்னியில் நிகழ்த்திய ஒவ்வொரு கொலைக்கும் சாட்சிகள் இந்த அவையிலிருக்கிறார்கள். இறுதிப் போர் நடந்த காலத்தில் சமாதான செயலகத்தின் பணிப்பாளராயிருந்தவரும் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜிவ விஜேசிங்க அண்மையில் பிபிஸி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் ‘பொதுமக்கள் அய்ந்தாயிரம் பேர்கள்வரை கொல்லப்பட்டிருக்கலாம்’ எனச் சற்றே வாய் திறந்திருக்கிறார். கொல்லப்பட்டவர்களின் தொகை அதுபோல எட்டு மடங்கு. ஆனால் மகிந்த சகோதரர்களோ யுத்தத்தில் பொதுமகன் ஒருவர் கூட கொல்லப்படவில்லை என்றும் சனல் 4ன் ஆவணத் தொகுப்பு மோசடியானது என்றும் பொய்களிற்கு மேல் பொய்களை அறிக்கையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இழைத்த குற்றத்திற்காக வருந்தாமல் குற்றங்களை மூடி மறைப்பவர்களால், அது முடியாதபோது குற்றங்களை நியாயப்படுத்துபவர்களால் இலங்கை ஆளப்பட்டுக்கொண்டிருக்கிறது. மகிந்த சகோதரர்கள் போல இனவாதம் ஊறிப்போன கேவலமான பொய்யர்கள் நம் நாட்டின் தலைமைப் பொறுப்பிலிருந்தால் இனங்களுக்கு இடையேயான நல்லுறவை நாம் எங்கிருந்து கட்டியெழுப்புவது? தொடர்ந்தும் தமிழ் மக்களை இராணுவமுனையில் ஆள முயற்சிக்கின்ற, திட்டமிட்டுத் தமிழ்ப் பிரதேசங்களை ஆக்கிரமித்துத் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பைக் குலைக்கின்ற இந்த ஆட்சி சிறுபான்மை இனங்களுக்கு எந்த நம்பிக்கையை வழங்கும்? இனங்களிற்கிடையேயான நல்லிணக்கத்தை ஒருபோதும் துப்பாக்கிகளினதும் டாங்கிகளினதும் உளவாளிகளினதும் அடிவருடிகளினதும் துணையோடு நிறுவிவிட முடியாது. இவை இனங்களிற்கிடையே மேலும் மேலும் விரிசல்களையே ஏற்படுத்தும். தோல்வியுற்ற இனத்தை அவமானப்படுத்தி அடிமைகொள்ளும் மன்னர் கால மனநிலையுடன் மகிந்த ராஜபக்சவின் பரிவாரம் எக்காளமிடுகிறது. அரசியல் சட்டம் திருத்தப்பட்டு மகிந்த இரண்டு தடவைகளிற்கு மேலும் சனாதிபதி பதவி வகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘ நான் சிங்களவர்களிற்கு மட்டுமல்ல தமிழர்களிற்கும் தலைவன் ‘ என்று கர்ஜிக்கிறார் மகிந்த. கடவுளே எத்தனை ஏகபிரதிநிதிகளைத்தான் நாம் சகித்துக்கொள்வது!

அழகிய இலங்கைத் தீவை முற்றுமுழுதாக அந்நிய முதலாளிகளிற்கு இலங்கை அரசு விற்றுத்தள்ளியிருக்கிறது. 1970களில் தென்கிழக்கு ஆசியாவிலேயே மானியங்களிற்கு முன்னுதாரணமாக விளங்கிய நாடு, குறைந்த வாழ்க்கைச் செலவுள்ள உலக நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த நாடு இன்று வறுமையிலும் தற்கொலையிலும் ஊழலிலும் உலகநாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களிற்குள் வருகிறது. ஊடகச் சுதந்திரமற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம். உலகமயமாக்கலின் பெயரால் நாட்டின் உழைக்கும் மக்களுடைய தொழிற்சங்க உரிமைகள் அடியொட்டப் பறிக்கப்பட்டுள்ளன. அண்மையில் கூட அடிப்படை உரிமைகளிற்காகப் போராடிய தொழிலாளர்கள் அரசால் அடித்துத் துவைத்து ஒடுக்கப்பட்டார்கள். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவனத் தலைவர் SWRD பண்டாரநாயக்க தேசிய முதலாளித்துவத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் அந்நிய நிறுவனங்களின் கைகளிலிருந்த பெருந்தோட்டங்களையும் வணிக நிறுவனங்களையும் தேசியமயப்படுத்தினார். சுதந்திரம் பெற்றுப் பத்தாண்டுகளிற்குப் பின்பும் திருகோணமலையில் நிலைகொண்டிருந்த பிரிட்டிஷ் படைகளை, ஆட்சிப் பொறுப்பு ஏற்றதுமே முதற்காரியமாக பண்டாரநாயக்க நாட்டிலிருந்து வெளியேற்றினார். ஆனால் அந்தக் கட்சியின் இன்றைய தலைவர் மகிந்த ராஜபக்சவோ இலங்கையை அந்நிய பல்தேசிய நிறுவனங்களிற்கு ஏலம்போட்டு விற்றுத்தள்ளுகிறார். அம்பாந்தோட்டையில் சீனமும் சம்பூரில் இந்தியாவும் அகலக்கால் வைக்க வழிகோலியிருக்கிறார். இவ்வளவிற்கும் இந்தக் கேடுகெட்ட தரகு முதலாளித்து அரசுக்கு இடதுசாரி லேபிள் வேறு. அந்த லேபிள் செல்லுபடியாக வாசுதேவ நாணயக்கார போன்ற மூத்த இடதுசாரிகளும் துணைபோகிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது. இலங்கை அரசுடைய மனித உரிமைகள் மீறல்கள் குறித்து சர்வதேச அரங்கில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படும்போது கியூபாவும் வெனிசுலாவும் இலங்கை அரசின் பக்கமே நிற்கிறார்கள் எனில் அதற்கு முதற் காரணம் இலங்கையின் இரு பெரும் இடதுசாரிக் கட்சிகளே. இந்தக் கட்சிகள் இலங்கை அரசாடு கூட்டுச் சேர்ந்துள்ளன. இந்தக் கட்சிகளின் வழிகாட்டுதலிலேயே கியூபாவிலும் வெனிசுலாவிலும் ஆட்சிசெய்யும் பொதுவுடமைக் கட்சிகள் இலங்கைமீதான தமது அயலுறவுக் கொள்கைகளை வகுத்துக்கொள்கின்றன. என்னுடைய இந்த விமர்சனங்கள் – கேள்விகள் குறித்தெல்லாம் அமைச்சர் அவரது கருத்துகளை தனது உரையில் நமக்குத் தெரிவிப்பார் என்ற நம்பிக்கையோடு நான் இப்போது தோழர் யோகரட்ணம் அவர்களது நூலிற்கு வருகிறேன்.

2

ஈழத்துத் தலித் மக்களின் வாழ்வும், பாடுகளும், எதிர்ப்பும், அரசியலும் குறித்துத் தன்வரலாற்றுக் குறிப்புகள் ஊடாக எழுதிச் செல்லும் நூல்களாக பெரியோர்கள் என். கே. ரகுநாதன், டொமினிக் ஜீவா, இலங்கையர் செல்வரத்தினம் ஆகியோர் எழுதிய நூல்கள் கடந்த பத்தாண்டுகளில் வெளியாகியுள்ளன. யோகரட்ணம் அவர்களது இந்த நூலையும் அவற்றின் தொடர்ச்சியில் வைத்து நாம் பார்க்க முடியும். முன்னைய பெரியோர்களதும் தோழர் யோகரட்ணத்தினதும் நூல்களின் பேசுபொருள்களில் ஒருமித்த புள்ளிகள் ஏராளமாயுள்ளன எனில் விலகிச் செல்லும் அடிப்படைப் புள்ளியொன்றும் உள்ளது. முன்னையவர்கள் மூவரும் வடபுலத்து இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகள். மார்க்ஸியத்தைத் தமது அரசியலாக வரித்துக்கொண்டவர்கள். மாறாகத் தோழர் யோகரட்ணமோ பண்டாரநாயக்கவின் மறைவிற்குப் பின்னால் ஸ்ரீமாவோவின் தலைமையில் அசலான தரகு முதலாளித்துவக் கட்சியாகச் சீரழிந்து போயிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்பட்டவர். இந்த அடிப்படை அரசியல் வித்தியாசம் ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்’ நூலின் பக்கங்களில் விரவித்தான் கிடக்கின்றது.

தோழர் யோகரட்ணம் சண்டிலிப்பாய் கிராமத்தின் ‘ கேணிக்கட்டு’ எனும் தலித் குறிச்சியில் 1950களின் முற்பகுதியில் பிறந்தவர். தனது இளமைப் பருவம் முழுவதும் சாதிய ஒடுக்குமுறைக்கு முகம் கொடுத்தவர். பிஞ்சுப் பருவத்திலேயே பாடசாலையில் தீண்டாமையை அனுபவித்தவர்.  தனது பதினாறாவது வயதில், இலங்கைத் தமிழ் பவுத்த காங்கிரஸ் தலைவரும் சாதியொழிப்புப் போராளியுமான அய்யா வைரமுத்து அவர்களின் வழிகாட்டுதலில் தீண்டாமையை எதிர்கொள்ள பவுத்த மதத்தைத் தழுவிய நூறு வடபகுதி தலித் இளைஞர்களுடன் இணைந்து பவுத்தத்தைத் தழுவி பத்தேகம பகுதியிலுள்ள சந்திரவல எனும் மலைக் கிராமத்தின் பவுத்த விகாரையில் சேர்ந்து அங்கேயே கல்வி கற்றவர். போனவர்கள் இடையிலேயே குழப்பிக்கொண்டு வந்தது வேறுகதை. அதற்கான வலுவான காரணமெதுவும் நூலிலும் விபரிக்கப்படவில்லை.

மீண்டும் சண்டிலிப்பாய்…மீண்டும் எதிர்கொண்ட சாதியொடுக்குமுறை, அதற்கெதிரான போராட்டங்கள் எனத் தொடர்ந்த தோழர் யோகரட்ணம் அவரது உற்ற நண்பரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமாகிய விநோதனின் வழிகாட்டலில் எழுபதுகளின் ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படுகிறார். கட்சியின் தலைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசால் பறிக்கப்பட்டபோது அதற்கு எதிராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவந்து விநோதன் பொதுக்கூட்டம் நடத்தியபோது யோகரடணம் விநோதனுடன் இணைந்து கடுமையாக உழைக்கிறார். இதற்கிடையில் தபால் தந்தித்துறையில் யோகரட்ணம் வேலைக்குச் சேர்கிறார். 1977ல் அய்க்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அரசியல் பழிவாங்கலாக யோகரட்ணத்தின் வேலை பறிக்கப்படுகிறது. ஒரு வருடத்திற்குப் பின்பாக தமிழ் பவுத்த காங்கிரஸ் தலைவர் அய்யா வைரமுத்துவின் உதவியால் இழந்த வேலையை யோகரட்ணம் மீளவும் பெற்றுக்கொள்கிறார். எழுபதுகளின் நடுப்பகுதியில் வடபுலத்திலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களின் மேல் போராளி அமைப்புகள் ஆயுதத் தாக்குதல்களை நிகழ்த்துகிறார்கள். மேயர் துரையப்பா, அமைச்சர் குமாரசூரியர் எனத் தாக்குதல் இலக்குகள் தொடர்கின்றன. இந்தச் சூழலில் எண்பதுகளின் முற்பகுதியிலேயே யோகரட்ணம் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவிடுகிறார். பின்னொருநாளில், 1995ல் யோகரட்ணத்தின் உற்ற நண்பன் விநோதனும் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்படுகிறார். இரண்டாயிரம்கள் வரை யோகரட்ணம் கிட்டத்தட்ட அரசியல் அஞ்ஞாதவாசியாகிவிட்டார். ‘இலங்கைத் தலித் சமூக மேப்பாட்டு முன்னணி’ அவரை மறுபடியும் அரசியல் வெளிக்கு அழைத்து வந்தது. இன்று யோகரட்ணம் முன்னணியின் உப தலைவராகயிருக்கிறார்.

இந்நூல் 45 அத்தியாயங்களில் விரியும் நினைவுக் குறிப்புகளின் -அனுபவத் திரட்சிகளின் – தொகுப்பு. தோழர் யோகரட்ணம் என். கே. ரகுநாதன் போலவோ டொமினிக் ஜீவா போலவோ ஓர் எழுத்தாளர் கிடையாது. அவரைத் தீவிர இலக்கிய வாசகர் என்றுகூடச் சொல்ல முடியாது. எனினும் இந்த நாலில் அவரது எழுத்து நடை கோபமும் ஆவேசமும் எள்ளலும் புரண்டுவரும் காட்டாறாக நம்மை அடித்துப்போடுகிறது. உள்ளத்தில் ஒளியுண்டானால் வாக்கினிலே தானாகவே தெளிவு வருமல்லவா. அவர் சொல்ல வரும் கருத்துகளில் அவருக்குத் துளி சந்தேகமோ தளும்பலோ கிடையாது. கடகடவென தனது நினைவுக் குறிப்புகளை அவர் சொல்லியவாறே செல்கிறார். சாதியத்தின் வரலாற்றுச் சுமைகளை நமது முதுகுகளில் சுமந்தவாறே நாம் சிரமத்தோடு தோழரைப் பின்செல்ல வேண்டியிருக்கிறது. படித்து முடித்தவுடன் ஒரு தலித் நெஞ்சில் கனலும் கோபத்துடனும் தலித் அல்லாதவர் குற்றவுணர்வுடனும் தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும் என்ற இந்த நூலைத் தமது புத்தக அலுமாரியில் பத்திரமாகப் பாதுகாத்து வைப்பார்கள் என்றே நினைக்கிறேன். தலித் மக்களுடைய நெடிய போராட்ட வாழ்வின் ஒருதுளி ஆவணமிது. ஒரு துளி என்றேன்… நெருப்புத் துளி!

யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் அய்ம்பதுகளிலிருந்து எண்பதுகள்வரை நிகழ்ந்த 30 வருடகால சாதியொழிப்புப் போராட்டங்களை யோகரட்ணம் பதிவு செய்கிறார். இந்தப் போராட்டங்களில் அவர் வெறும் சாட்சியோ அல்லது போராட்டத்தை ஆய்வு செய்யும் ஆய்வாளரோ அல்ல. அவர் நேரடியாகக் களத்தில் நின்று வியூகம் வகுத்த மாஸ்டர். தோழர் வகுக்கும் மாஸ்டர் பிளான்களால் தோழருக்கு மாஸ்டர் என்ற அடைமொழி வந்து சேர்ந்தது. அதை அவர் நூலிலும் பதிவு செய்திருக்கிறார். போராட்டக் களங்களுடன் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள், தலித் மக்கள் சாதிவெறியின் முன்னே இழந்த உயிர்கள், தலித் கலைஞர்கள், தலித் சமூகத்தின் விடுதலைக்காக உழைத்த தலைவர்கள் என நூல் முழுவதும் தகவல்கள் நிறைந்துள்ளன. சிங்களவர்கள் தமிழர்களைக் கொல்கிறார்களே என இன்று பதறித் துடிக்கும் யாழ்ப்பாணத்து வெள்ளாள வட்டுக்கள் தமது அப்பனும் பாட்டனும் சாதியத்தின் பெயரால் சக தமிழனைச் சுட்டுத் தள்ளிய கதைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்நூலும் கணிசமான உதவிகளைச் செய்யும். தனிநாடு கோரிப் போராடிய நமது இனத்தில் இன்று கூட இடுகாடுகளில் தலித்துகளிற்கு தனியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது கேவலத்திலும் கேவலமான செய்தியல்லவா. நூற்றாண்டுகளாகக் கெட்டிதட்டிய சாதிய உணர்வுக்கு முன்னால் முந்தநாள் முளைத்த தமிழின உணர்வு வெறும் துரும்பே என்பதை நிரூபணம் செய்யும் சம்பவவமொன்றை நூலின் 174 வது பக்கத்தில் யோகரட்ணம் இவ்வாறு பதிவுசெய்கிறார்: “சீரணி நாகம்மாள் கோயிலில் சாமி காவிய தலித் வாலிபர்களை ஆதிக்க சாதியினர் தாக்கியதுடன் அவர்களைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று இராணுவத்திடம் காட்டியும் கொடுத்தனர்”.

சாதிய மனநிலையோடு செயற்படும்வரை இந்த இனம் உய்யுமா? சாதிய விடுதலை சாத்தியமின்றி நமது இனத்தில் வேறெந்த விடுதலையும் சாத்தியமில்லை. தன்னைச் சாதியாக உணரும் மனதால் வேறெந்த விடுதலை குறித்தும் கனவுகூடக் காண முடியாது. சாதியை ஒழிக்காமல் வேறெந்தச் சமூக இழிவையும் நம்மால் போக்கிவிடவும் முடியாது. சாதியத்தை நம்மிடையே வைத்துக்கொண்டே வர்க்க ஒற்றுமையைக் கனவு காணுவது ஏமாளித்தனம். சாதியத்தை நம்மிடையே வைத்துக்கொண்டே இன ஒற்றுமையைப் பேசுவது ஏமாற்றுத்தனமும் அயோக்கியத்தனமும். ‘தீண்டாமைக் கொடுமையும் தீ மூண்ட நாட்களும்’ நூல் சொல்லும் செய்தி இதுவே.

3

நூலில் யோகரட்ணம் கூறிச் செல்லும் சில அரசியல் கருத்துகள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்றே நான் கருதுகிறேன். இரத்தமும் தசையுமாகத் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் அதீத ஞாபக சக்தியின் உதவியுடன் சம்பவங்களையும் துல்லியமாகப் பதிவுசெய்யும் யோகரட்ணம் குறிப்பான அரசியல் கருத்துநிலை என வரும்போது இடறலான பார்வையோடு வரலாற்றுக் குருடராயிருப்பது நிச்சயம் காட்சிப் பிழையல்ல, அது கட்சிப் பிழை. யோகரட்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரராக நூலில் பேசும் விடயங்கள் இந்த நூலின் ஆகப்பெரிய பலவீனங்கள்.

நூல் முழுவதும் அய்க்கிய தேசியக் கட்சியையும் தமிழரசுக் கட்சியையும் மிக நியாயமாகவும் காட்டமாகவும்  கண்டித்துவரும் யோகரட்ணம் 1970ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் அமைந்த அய்க்கிய முன்னணியின் ஆட்சி குறித்து மதிப்பிடும்போது மட்டும் அந்த ஆட்சி படு முற்போக்கானது என்பதோடு மட்டுமல்லாமல் அய்க்கிய முன்னணியின் ஆட்சிக்காலத்தில் தலித் மக்கள் முன்னேற்றங்களைச் சாதித்தார்கள் என்று அறிக்கையிடுமளவிற்குச் சென்றுவிடுகிறார். அந்த ஏழாண்டு காலத்தைத் தலித்துகளின் பொற்காலம் என நூலின் 89வது பக்கத்தில் பிரகடனப்படுத்தியும் விடுகிறார். அய்க்கிய முன்னணிக்கு அவ்வாறொரு முற்போக்கு முகம் இருந்ததா? அது தலித்துகளின் பொற்காலம்தானா?

இலங்கையில் 1956 பொதுத் தேர்தலில் அரசகரும மொழியாகத் தனிச் சிங்கள மொழிக் கொள்கையை முன்வைத்து SWRD பண்டாரநாயக்க போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். “பண்டாரநாயக்காவின் மூன்று வருட ஆட்சிக்காலத்தில் அவரால் பலவற்றைச் சாதிக்க முடிந்தது. அச்சாதனைகளில் மிகப் பாதகமானதாகக் காணப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் மட்டுமே அவருக்கு அபகீர்த்தியைத் தேடிக்கொடுத்தது” எனத் தனது ‘இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்’ நூலில் குறிப்பிடுவார் சி.கா. செந்திவேல். அந்தச் சட்டம் பண்டாரநாயக்காவுக்கு அபகீர்த்தியை மட்டும் தேடித்தரவில்லை. இலங்கையில் முப்பது ஆண்டுகள் ஓடிய இரத்த ஆற்றின் ஊற்று அந்தச் சட்டம்தான்.

1970ல் அந்த ஊற்றைக் குடைத்துவிட்டது அய்க்கிய முன்னணியின் ஆட்சி. அதுவரை நடைமுறையில் இருந்துவந்த சோல்பரி அரசியல் யாப்புக்குப் பதிலாக அய்க்கிய முன்னணி அரசு புதியதொரு அரசியல் யாப்பை உருவாக்கி நடைமுறைக்குக் கொண்டுவந்தது. அந்த அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் இங்கேயிருக்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அரசியல் ஆசான்களில் ஒருவரும் “இரு மொழியென்றால் ஒருநாடு, ஒரு மொழியென்றால் இருநாடு” என்று தனிச் சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிராக அய்ம்பதுகளில் நாடாளுமன்றத்தில் கர்ஜித்து தீர்க்கதரிசனம் உரைத்தவருமான கொல்வின் ஆர்.டி.சில்வா அவர்கள். அவரை யாப்புத் தயாரிக்கச் சொன்னால் அவர் தமிழருக்கு ஆப்புத் தயாரித்தார்.

சோல்பரி யாப்பில் சிறுபான்மை இனத்தினருக்குப் பாதுகாப்பளித்து வந்த 29வது சரத்து அய்க்கிய முன்னணி அரசின் புதிய யாப்பில்  முற்றாக நீக்கப்பட்டது. சிங்களம் மட்டுமே அரசகரும மொழி என்பதை யாப்பு சட்டரீதியாக வற்புறுத்தியது. அதுவரை மதச்சார்பற்ற அரசாக இருந்து வந்த இலங்கை அரசு பவுத்த மதத்தை அரசு மதமாக ஏற்றுக்கொண்டது. நாட்டு மக்களை பிரசைகள் X நபர்கள் என யாப்பு வித்தியாசப்படுத்தியது. இங்கே நபர்கள் என்று குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த மலையகத் தமிழர்களே குறிப்பிடப்பட்டார்கள். அவர்களது நாடற்ற கையறு நிலையை யாப்பு மேலும் உறுதிப்படுத்திற்று. எரியும் நெருப்பிலே மேலும் பெற்றோலை வார்க்கும் வேலையாக பல்கலைக்கழக அனுமதியில் மொழிவாரித் தரப்படுத்தல் சட்டத்தையும் அய்க்கிய முன்னணி அரசு நிறைவேற்றியது. இந்த யாப்பு இவ்வளவு கொடூரமான விதிகளை நேரடியாகத் தயாரித்தது எனில் அந்த யாப்பு மறைமுகாக உருவாக்கியவைதான் பொன்.சிவகுமாரனும் சத்தியசீலனும் வரதராஜப்பெருமாளும் பிரபாகரனும் பிரான்ஸிசும். ஈழப் போராட்டத்தை உருவாக்கியவர்கள் சிங்களப் பேரினவாதிகளே தவிர யோகரட்ணம் நூலில் குறிப்பிடுவதுபோல தமிழரசுக் கட்சியினர் தமிழீழப் போராட்டத்தைத் திட்டமிட்டு உருவாக்கவில்லை. அதற்கான வல்லமை அவர்களிற்கு தார்மீகரீதியாக மட்டுமல்ல அமைப்புரீதியாகவும் இருந்ததில்லை. தமிழரசுக் கட்சியினர் அரசியல்ரீதியாக அய்க்கிய தேசியக் கட்சியினரின் தமிழ்ப் பதிப்பு எனில் அவர்களின் தனிப்பட்ட பொருளாதார நலன்களும் தொழில்களும் சொத்துகளும் செல்வங்களும் கொழும்பிலேயே மையப்படுத்தப்பட்டிருந்தன. அவர்கள் வட்டுக்கோட்டையில் நிறைவேற்றிய தமிழீழப் பிரகடனம் தேர்தலில் வாக்கு வேட்டைக்காக நடத்தப்பட்ட வெறும் நாடகம். இதைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இன்றைய தலைவர் ஆனந்தசங்கரி பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டுள்ளார். தமிழீழக் கோரிக்கையை இளைஞர்கள் இவ்வளவு வலுவுடன் முன்னெடுப்பார்கள் எனத் தமிழரசுக் கட்சியினர் கனவிலும் நினைத்திருக்கவில்லை. நமது இளைஞர்களின் பலத்தை அவர்கள் அறிந்தபோது அவர்கள் உயிருடனில்லை.

அய்க்கிய முன்னணி அரசு தமிழர்களிற்கும் நாட்டின் மற்றைய சிறுபான்மை இனங்களிற்கும் இழைத்த அநீதிகளைச் சொன்னேன். சரி.. யோகரட்ணம் நூலில் குறிப்பிடுவதுபோல தலித்துகளிற்கு ஏதாவது நன்மையைச் செய்திருக்கிறதா அய்க்கிய முன்னணி அரசு? பொதுவாகவே இலங்கை அரசுகள் தலித் மக்களிற்கு நன்மை செய்து வந்திருப்பதாகச் சில தலித் அரசியலாளர்களிடம் ஒரு மயக்கம் நிலவுவதை நான் கவனித்திருக்கிறேன். அது வெறும் மயக்கம் மட்டுமா அல்லது அதனில் ஏதாவது பொருளிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள நாம் 67 வருடங்கள் பின்னே சென்று 24.09.1944ல் நடந்த இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் இரண்டாவது மாநாட்டிற்குச் செல்லவேண்டியிருக்கிறது. அந்த மாநாடு நடைபெறும்போது இலங்கையின் வடபுலத்தில் கொம்யூனிஸ்ட் கட்சியே கிடையாது. அந்த மாநாடு நடந்து அய்ந்து வருடங்களிற்குப் பிறகுதான் தமிழரசுக் கட்சியே தோற்றுவிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் தலித் மக்களிற்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடுகள் கோரியும் தனிவாக்காளர் தொகுதிகள் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுத் தீர்மானம் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. நம்மைப் போன்ற இன்னொரு சாதியச் சமூகமான இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சாதியினரால் இந்தக் கோரிக்கைகள் எழுப்பப்பட்ட அதே காலகட்டத்தில்தான் இலங்கையிலும் இந்த உரிமைக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இந்தியாவிலே பத்தாண்டுகள் காலத்திற்குள்ளாகவே இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. காந்தியாரின் உயிருக்கு பாபா சாகேப் அம்பேத்கர் மட்டும் இரங்காமலிருந்திருந்தால் அங்கே தலித்துகளிற்கு இரட்டை வாக்குரிமை கூடக் கிடைத்திருக்க வாய்ப்பிருந்திருக்கிறது. ஆனால் இலங்கையில் இன்றுவரை இந்த உரிமைக் கோரிக்கைகளின் நிலையென்ன?

இடஒதுக்கீடு, தனிவாக்காளர் தொகுதிகள் ஏதும் இன்றுவரை கிடையாது. அவ்வாறு ஒதுக்கீடுகளை இலங்கை அரசியல் சட்டம் தலித்துகளிற்கு வழங்கவில்லை. இது குறித்து எந்த அரசும் பேசவில்லை. யோகரட்ணம் கொண்டாடும் பொற்கால அரசும் வாய் திறக்கவில்லை. மாறாக அந்தப் பொற்கால அரசு மொழிவாரியான தரப்படுத்தலைக் கொண்டுவந்தது. இந்தத் தரப்படுத்தல் சில ஆண்டுகளில் பொருளாதார அடிப்படையில் மாவட்டரீதியான தரப்படுத்தலாக மாற்றப்பட்டது. இந்த இரண்டுவகைத் தரப்படுத்தலாலும் தலித்துகள் கடுமையாகவே பாதிக்கப்பட்டார்கள்.

எழுபதுகளில்தான் தலித்துகளிள் முதற் தலைமுறை பல்கலைக் கழகத்தை நெருங்கவே வாய்ப்புக் கிடைக்கிறது. மொழிரீதியான தரப்படுத்தலால் ஆதிக்கசாதித் தமிழர்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டாலும் அவர்களோடு பல்வேறு தடைகளைத்தாண்டிப் போட்டியிட்டுப் படித்த தலித் மாணவர்களும் சேர்த்தே பாதிக்கப்பட்டார்கள். மாவட்டரீதியான தரப்படுத்தலில் இலங்கையில் தலித்துகள் அதிகமாக வாழும் யாழ் மாவட்டம் பொருளாதாரரீதியாக உயர்ந்த மாவட்டமாகக் கொள்ளப்பட்டது. அது உண்மைதான். யாழ்ப்பாணம் பொருளாதாரரீதியாக முன்னேறிய மாவட்டம்தான். ஆனால் அங்கிருந்த மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினரான தலித் மக்கள் பொருளாதாரரீதியாக உயரத்திலா இருந்தார்கள்? அவர்கள் தீண்டாமையோடும் சாதிய ஒதுக்கலோடும் வறுமையோடும் போராடியல்லவா கல்வி கற்கவேண்டியிருந்தது. பொருளாதாரரீதியாக உயர்ந்தவர்கள் என அவர்களையும் தரப்படுத்தி அவர்களது பல்கலைக்கழக அனுமதியை மறுப்பது எந்தவகையில் நியாயமாகும்? இங்கேதான் தலித்துகளிற்கான தனி இட ஒதுக்கீடுக் கோரிக்கையின் முக்கியத்துவமிருக்கிறது. இது குறித்து இலங்கையின் எந்த ஆட்சியாளராவது எந்தத் தமிழ் அரசியல்வாதியாவது எந்த இடதுசாரிக் கட்சியாவது எந்த இயக்கக்காரராவது கவனமெடுத்ததுண்டா? பேசியதுண்டா? இவர்கள் அத்தனைபேருமே தலித்துகளிற்கான இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு எதிரானவர்கள் என்பதே உண்மை. தலித்துகளிற்கு பொற்காலத்தை வேறு யாரும் சிருஷ்டித்துத் தரமாட்டார்கள். அதைத் தலித்துகளேதான் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இலங்கை அரசு எந்தக் காலத்திலும் ஆதிக்கசாதியினரின் பக்கமே நின்றிருக்கிறது. சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் நடத்திய சாதியொழிப்புப் போராட்டங்களின்போது அரசு இயந்திரம் ஆதிக்க சாதியனருடனேயே கைகோர்த்திருந்தது. தோழர் யோகரட்ணம் குறிப்பிடும் தலித்துகளிற்கு பொற்காலமான ஆட்சியில்தான் மக்கள் விடுதலை முன்னணியினரின் கிளர்ச்சியைத் தொடர்ந்து அதனுடன் எந்தத் தொடர்புமே இல்லாத – சொல்லப்போனால் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த – கே. டானியல் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் தலைவர் எஸ்.ரி.என். நாகரத்தினமும் இயக்கத்தின் முக்கிய     உறுப்பினர்களும் தலைமறைவாகவேண்டியிருந்தது. தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்துடன் தோள் நின்றிருந்த இடது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நா. சண்முகதாசன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

இலங்கையில் சாதியத்திற்கு இரண்டாயிரம் வருடங்களிற்கும் மேற்பட்ட வரலாறிருக்கிறது. இந்த நீண்ட வரலாற்றில் தீண்டாமக்கு எதிராக ஒரேயொரு சட்டம்தான் ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டிருக்கிறது. சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டமெனும் அந்த வரைவு 1957ல் நிறைவேற்றப்பட்டது. தமிழரசுக் கட்சியின் திருகோணமலைத் தொகுதி உறுப்பினர் ந.இ.இராஜவரோதயம் முன்மொழிய கோப்பாய் தொகுதி உறுப்பினர் கு.வன்னியசிங்கத்தின் வழிமொழிதலோடு இந்தச் சட்டம் நிறைவேறியது. இந்தச் சட்டம் கூட மிகவும் மேலோட்டமானதே. பொது இடங்களில் சாதிப் பாகுபாடு காட்டினால் 100 ரூபாவிற்கு மேற்படாத அபராதம் அல்லது ஆறு மாதங்களிற்கு மேற்படாத சிறை என்பதுவே அச் சட்டத்தின் உள்ளடக்கம். ஆனால் அச் சட்டம் அமுலில் இருந்ததாகவோ அச் சட்டத்தின்படி யாராவது தண்டிக்கப்பட்டதாகவோ எந்தச் செய்திகளும் நானறியக் கிடையாது. இந்தச் சட்டம் பொற்கால ஆட்சியில் சற்றே மாற்றப்பட்டது. அதாவது அபராதம் 2000 ரூபாயாகவும் சிறைத்தண்டனை 3 வருடங்களாகவும் உயர்த்தப்பட்டன. அப்போதும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தகவல்களில்லை. அந்தச் சட்டம் மட்டும் அமுலிலிருந்தால் யாழ்ப்பாணத்திலுள்ள முழுக் கோயில் முதலாளிகளும் அங்கே பூசை செய்யும் பார்ப்பனர்களும் மறியலிலல்லவா இருக்க வேண்டும். கோயில் கருவறை பொதுவிடம் இல்லையா? அங்கே பார்ப்பனர்கள் அல்லாதவர்களை அனுமதிக்க மறுப்பது தீண்டாமையா இல்லையா? இதுபோக யாழ்ப்பாணத்தின் சனத்தொகையில் பாதிப்பேர்கள் நித்தியமாக மறியலில்தான் இருக்கவேண்டியிருக்கும்.

1970ல் தலைவர் எம். சி. சுப்பிரமணியம் அய்க்கிய முன்னணி அரசில் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார். எம்.சி. சுப்பிரமணியம் இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். அவரது கட்சிக்கான நீண்ட உழைப்பின் பயனாகவும் அவருக்குத் தலித் சமூகத்திடமிருந்த அளப்பெரிய  செல்வாக்குக் காரணமாகவும் அவர் நியமன உறுப்பினராக்கப்பட்டார். தன்னுடைய பதவிக் காலத்தில் எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தலித் சமூகத்திற்குத் தனது சொந்த முயற்சியால் சாதித்திருக்கிறார் என்பதே எனது மதிப்பீடு. அந்த நன்மைகளும் கூட அவரது அதிகாரத்தின் எல்லைகளுக்குள்ளேயே இருந்தது. அது அவரின் தவறு கிடையாது. நமது நாடாளுமன்ற அமைப்பு ஒரு நியமன உறுப்பினருக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே வழங்கியிருக்கிறது. எம்.சி சுப்பிரமணியத்தின் முயற்சியில் சில பாடசாலைகளும் பொதுக் கட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தலித் இளைஞர்களிற்கு வேலை வாய்ப்புகளில் அவர் முன்னுரிமை வழங்கியிருக்கிறார். இதைக் கடந்து எம்.சி. சுப்பிரமணியம் அவர்களால் சாதியக் கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்களைச் சாதிக்க முடியவில்லை. ஏனெனில் பொற்கால ஆட்சி அதை அனுமதிக்காது. பொற்கால ஆட்சியில் எம். சி. சுப்பிரமணியம் அவர்களிற்கா தடித்த வெள்ளாளர் குமாரசூரியருக்கா அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன எனச் சற்று யோசித்துப் பாருங்கள். பொற்கால ஆட்சியின் யோக்கியதை விளங்கும்.

தலைவர் எம்.சி. சுப்பிரமணியத்தின் நாடாளுமன்ற நுழைவு குறித்து இன்னொரு பார்வையுமுண்டு. அந்தப் பார்வை யோகரட்ணத்தின் பார்வைக்கு நேர் எதிரானது. ‘இலங்கையில் சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும்’ நூலின் 204வது பக்கத்தில் சி.கா. செந்திவேலும் ந. இரவீந்திரனும் இவ்வாறு சொல்கிறார்கள்: “எம். சி. சுப்பிரமணியம் 1970 லும் ரீ. இராஜலிங்கம் 1977 லும் பாராளுமன்ற உறுப்பினர்களாக தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வெறும் நாமத்துடனேயே பதவி வகித்தனர். ஆனால் அவர்களால் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார, அரசியல், சமூக வாழ்வில் எவ்வித மாற்றங்களையும் கொண்டுவர முடியவில்லை. அதேவேளை தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் கல்வி பொருளாதார மேல்நிலையாக்கம் நோக்கி நின்ற சிலருக்கும் தம்மைச் சூழவுள்ள உற்றார் உறவினர்களிற்கும் இந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாய்ப்பு வசதிகளை வழங்கிக்கொண்டனர். அவற்றிற்கு மேலாக ஏதாவது செய்யப்பட்டிருப்பின் அவை மிக அற்பமானவையேயாகும். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் குறிப்பட்ட உரிமைகளும் அவற்றிற்கான வெற்றிகளும் பாராளுமன்றத்தால் அல்லாமல்  புரட்சிகரப் போராட்டங்களினாலேயே பெறப்பட்டன”. செந்திவேல் – இரவீந்திரனின் கருத்துகளையும் நாம் தட்டிக்கழித்து விட முடியாது. அரசு என்பது ஓர் ஒடுக்குமுறை நிறுவனம் என்ற உணர்வு ஒரு சமூகப் போராளியிடம் எப்போதுமிருக்க வேண்டும். அரசை அணுகி நமது உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வது என்பது வேறு அரசுக்குப் புகழ்பாடி பொற்காலம் எனச் சான்றிதழ் வழங்குவது வேறு அல்லவா!

தோழரின் நூலில் யூ.என்.பி. அமைச்சர் சிறில் மத்தேயு குறித்தும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் தலித் சமூகத்தின் நண்பனாக யோகரட்ணத்தால் சித்திரிக்கப்படுகிறார். ஒரு வேலை வாய்ப்பையோ அல்லது வேலை மாற்றல் உத்தரவையோ வழங்கிவிட்டால் அவர்களையெல்லாம் தலித் சமூகத்தின் நண்பனாகவும் விடிவெள்ளியாகவும் யோகரட்ணம் மதிப்பிட்டுவிடுகிறாரோ என அச்சமாயிருக்கிறது. நன்றி பாராட்ட வேண்டியது கடமைதான். அதற்காக நன்றியின் மீது சமூகப் புரட்சி அடையாளங்களைப் பட்டும் படாமலும் யோகரட்ணம் சுமத்தித்திவிடுவதுதான் பொருத்தமில்லாதது. இங்கே சற்றுமுன் ராகவன் உரையாற்றியபோது சிறில் மத்தேயுவின் உண்மையான இனவாதக் கொலைகார முகத்தை தோழர் நா. சண்முகதாசனின் கட்டுரையை ஆதாரம் காட்டித் தோலுரித்துக்காட்டினார். 1983 ஜுலை தமிழினப் படுகொலையை திட்டமிட்டு வழிநடத்திய முதன்மைக் குற்றவாளி சிறில் மத்தேயு. 25 தலித் இளைஞர்களிற்கு வேலைவாங்கிக் கொடுத்ததற்காக சிறில் மத்தேயுவைக் கொண்டாடும் நூலாசிரியர் சிறில் மத்தேயுவின் வழிநடத்தலில் கொல்லப்பட்ட 2000 உயிர்களையும் கவனம் கொண்டேயாக வேண்டும். அந்த இரண்டாயிரத்தில் எத்தனை நூறு தலித் இளைஞர்கள் என்று கூடவா யோகரட்ணம் சிந்திக்கமாட்டார். அந்த வன்கொடுமைச் சம்பவங்களில் மலையகத்தில் கொல்லப்பட்டவர்களெல்லாம் யார்? 1981ல் யாழ் பொது நூலகமும் 90 000 நூல்களும் சிறில் மத்தேயுவின் உத்தரவிலேயே எரிக்கப்பட்டன. சிறில் மத்தேயுவும் காமினி திசாநாயக்காவும் பெஸ்டஸ் பெரேராவும்  நேரடியாக யாழ்ப்பாணம் வந்திருந்து இதை நடத்தி முடித்தார்கள். 1986ல் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பதவிக்குத் தலித் ஒருவர் தேர்வு செய்யப்பட்ட போது அப்போது யூ.என்.பி அமைச்சராயிருந்த லலித் அத்துலத் முதலி “தலித் ஒருவருக்கு அரசாங்க அதிபர்  பதவி வழங்குவதை யாழ்ப்பாணச் சமூகம் ஏற்றுக்கொள்ளாது எனக் கூறி அந்த நியமனத்தை இரத்துச் செய்ததும் இப்போது என் ஞாபகத்தில் வருகிறது.

தோழர்களே தலித் அரசியலென்பது சாதி அரசியல் கிடையாது. அது அதற்கு முற்றிலும் எதிரானது. சாதியொழிப்புத்தான் தலித் அரசியலின் நோக்கு. தலித் என்ற சொல்லுக்கு நசுக்கப்பட்டவர்கள், மிதிக்கப்பட்டவர்கள் எனப் பொருள். சாதியால் ஒடுக்கப்பட்டவர்களை மட்டுமல்லாது அனைத்து அதிகார நிலைகளாலும் ஒடுக்கப்பட்டவர்களை, விளிம்புநிலையினரை, ஒடுக்கப்படும் சிறுபான்மையினரை தலித் அரசியல் எப்போதும் பிரதிநிதித்துவம் செய்யும். சமூகத்தின் எந்தவொரு பிரிவுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதும் போராடுவதும் தலித் அரசியலின் தவிர்க்க இயலாத பண்பு. அதை விடுத்து ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’ செய்தது போல யுத்தத்தை முடித்து வைத்ததற்காக மகிந்த ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்து அறிக்கை விடுவது தலித் அரசியலே கிடையாது. அது வெறும் புலியெதிர்ப்பு அரசியல் மட்டுமே. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஆயிரம் ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களிற்கு தலித் முன்னணி என்ன பதில் வைத்திருக்கிறது? சரணடைந்த போராளிகள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதற்காகவா தலித் முன்னணி ராஜபக்சவிற்கு நன்றி தெரிவிக்கிறது? போராளிப் பெண்களின் உடலங்களின் ஆடைகளைக் களைந்து இலங்கை இராணுவம் வன்புணர்ச்சி செய்ததற்காகவா தலித் முன்னணி ராஜபக்சவிற்கு நன்றி தெரிவிக்கிறது. எங்களது முற்றங்களிலும் கோடிகளிலும் நிரந்தரமாக இராணுவத்தை விட்டு வைத்திருப்பதற்காகவா தலித் முன்னணி ராஜபக்சவிற்கு நன்றி தெரிவிக்கிறது? புலிகளை அழித்ததற்கு நன்றி தெரிவித்தார்களாம். அரசியல் எதிரிகளை ஆயுதத்தால் அகற்றுவது என்கின்ற புலிகளின் கோட்பாட்டிற்கும் தலித் அரசியலிற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது தோழர்களே. நசுக்கப்பட்டவர்களினதும் ஒடுக்கப்பட்டவர்களினதும் விடுதலை அரசியலைக் கையிலெடுத்திருக்கும் தலித் முன்னணி ஓர் இனப்படுகொலையை நடத்தி முடித்த தலைமைப் போர்க்குற்றவாளிக்கு நன்றி தெரிவிப்பது தலித் முன்னணியின் அடிப்படை அரசியல் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியது. “யுத்தம் ஒரு தீர்வேயல்ல” என வாய் வார்த்தையாகத் தன்னும் சொன்ன தோழர் வாசுதேவ நாணயக்கார என் மனதில் இப்போது உயர்ந்து நிற்கிறார்.

4

நான் தோழர் யோகரடணத்தின் குறிப்பான அரசியல் கருத்துகள் மீது விமர்சனம் வைத்தது இந்த நூலின் முக்கியத்துவத்தைச் சற்றும் குறைத்துவிடாது. அந்த விமர்சனங்களைத் தாண்டியும் இந்த நூலுக்கு ஒரு வரலாற்றுப் பாத்திரமிருக்கிறது. இந்த நூல் ஒரு காலத்தின் ஆவணம். இன்னொரு வகையில் இந்தநூல் ஒரு காலத்தின் குற்றப் பத்திரிகை. சாதியம் குறித்த ஆவண நூல்களோ ஆய்வு நூல்களோ நம்மிடம் மிக அரிதாகவே உள்ளன. எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் பத்து நூல்கள்தான் நம்மிடையே இருக்கின்றன. சாதியத்தை உடைப்பதற்கான சூக்குமம் அதன் வரலாற்றையும் இயங்குதிசையையும் அரசியல் விஞ்ஞானத்தின் வெளிச்சத்தில் புரிந்துகொள்வதிலேயே தங்கியிருக்கிறது. அந்தப் புரிதலுக்கு இத்தகைய நூல்கள் வரலாற்றின் ஒரு துளியை வழங்கினாலும் அவற்றின் பயன் அளப்பெரிதாயிருக்கும். தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் கிடையாதல்லவா!

சாதியம் குறித்து ஓர் இலட்சம் பக்கங்களில் ஆய்வு செய்து எழுதியிருக்கும் மேதை அண்ணல் அம்பேத்கரையும் சாதியத்திற்கு எதிரான பரந்துபட்ட மக்கள் இயக்கத்தையும் கலாசார புரட்சியையும் நடத்திய தந்தை பெரியாரையும் நமது ஈழத் தமிழ்ச் சமூகம் சரியான பொருளில் அறிந்ததேயில்லை. அவர்கள் ஈழத்தின் சாதியொழிப்பு இயக்கங்களாலும் இடதுசாரி இயக்கங்களாலும் முற்றாக நிராகரிக்கப்பட்டது நமது சமூகத்திற்கு விளைந்த பேரிழப்பு. தோழர் யோகரட்ணத்தின் 184 பக்க நூலில் ஓரிடத்தில் கூட அம்பேத்கரோ பெரியாரோ குறிப்பிடப்படுவதில்லை என்பதையும் சொல்லித்தானாக வேண்டும்.

சாதியத்தின் வரலாற்று – அரசியல் பாத்திரத்தைப் கற்பதும், கற்றதைச் சமூகத்திடம் எடுத்துச் செல்வதும் நமது கூட்டுக் கடமையாயிருக்கிறது. சாதியம் குறித்த மரபு மார்க்ஸியப் பார்வையும்  தேசிய விடுதலையோடு சாதிய விடுதலையை இணைத்து நோக்கும் பார்வையும் நமது அறிவுஜீவிகளின் மனதிலே இருளாய் உறைந்துபோய்க் கிடக்கின்றன. இந்து மதத்திற்கும் சாதியத்திற்கும் உள்ள தொடர்பை அவர்கள் மறந்து கூடப் பேசுவதில்லை. சாதியத்தின் வேரே இந்துமதம்தான் என்ற உரையாடலே நமது சமூகத்தின் அறிவுத்தளத்திலும் கிடையாது பொதுப் புத்தியிலும் கிடையாது. வேரை விட்டுவிட்டு இலைகளைக் கிள்ளிக்கொண்டிருந்தால் பெரு விஷ விருட்சம் சாயாது. அம்பேத்கரியத்தினதும் பெரியாரியலினதும் அறிவு வெளிச்சத்தில் ஒரு நெடிய கருத்துப்போரை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. சமூகத்தின் பொதுப் புத்தியில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் கருத்துகளை நாம் துளைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. கற்றுக்கொள்வது என்பது வெளியிலிருப்பதை மூளைக்குள் திணிப்பதல்ல, ஏற்கனவே மூளைக்குள் திணிக்கப்பட்டிருப்பதை வெளியேற்றுவதே கற்றுக்கொள்ளல் என்பார் தந்தை பெரியார். நமது சமூகம் கற்றுக் கொள்ளவேண்டிய சமூகம்.

வாய்ப்பளித்த தோழர்களிற்கு நன்றி, வணக்கம்.

2 thoughts on “நெருப்புத் துளி!

  1. //சாதியத்தின் வரலாற்று – அரசியல் பாத்திரத்தைப் கற்பதும், கற்றதைச் சமூகத்திடம் எடுத்துச் செல்வதும் நமது கூட்டுக் கடமையாயிருக்கிறது. சாதியம் குறித்த மரபு மார்க்ஸியப் பார்வையும் தேசிய விடுதலையோடு சாதிய விடுதலையை இணைத்து நோக்கும் பார்வையும் நமது அறிவுஜீவிகளின் மனதிலே இருளாய் உறைந்துபோய்க் கிடக்கின்றன. இந்து மதத்திற்கும் சாதியத்திற்கும் உள்ள தொடர்பை அவர்கள் மறந்து கூடப் பேசுவதில்லை. சாதியத்தின் வேரே இந்துமதம்தான் என்ற உரையாடலே நமது சமூகத்தின் அறிவுத்தளத்திலும் கிடையாது பொதுப் புத்தியிலும் கிடையாது. வேரை விட்டுவிட்டு இலைகளைக் கிள்ளிக்கொண்டிருந்தால் பெரு விஷ விருட்சம் சாயாது. அம்பேத்கரியத்தினதும் பெரியாரியலினதும் அறிவு வெளிச்சத்தில் ஒரு நெடிய கருத்துப்போரை நாம் செய்ய வேண்டியிருக்கிறது.//

    அருமையான உரை, நன்றி நண்ப.

    சமூக அக்கறையுள்ள வாசகர்கள் தேசியத்திற்கும் மதத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயும் தேசியமும் மதமும் எனும் தொடரையும் (கைமண்/எதுவரை-7) இணைத்து வாசித்தல் பொருத்தமானது என்பது எனது அபிப்பிராயம். —- முத்து

  2. அருமை,, ஷோபாசக்தி அவர்களே, காத்திரமான விமர்சனம், மிக நீண்ட பார்வை,, வாழ்த்துக்கள் 🇨🇭📚📖🙏📘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *