அக்கா அக்கா என்றாய்…

கட்டுரைகள்

நோம் சோம்ஸ்கியின் HEGEMONY OR SURVIVAL  நூலைக் கையில் வைத்திருந்தவாறே “அய்.நா.அவை சீரழிந்துவிட்டது, இந்த அவை தனது சுயாதீனத்தை இழந்து வல்லாதிக்க நாடுகளின் கைப்பொம்மையாகிவிட்டது, இது செயலற்ற பொழுதுபோக்கு அவையாகிவிட்டது, ‘வீட்ரோ’ அதிகாரம் சனநாயகத்திற்கு புறம்பான அதிகாரம், அய்.நா. சீர்திருத்தப்பட வேண்டும், முக்கியமாக அதன் அமைவிடம் அமெரிக்காவிலிருந்து தெற்கு நாடொன்றுக்கு மாற்றப்படவேண்டும்” என வெனிசூலாவின் மக்கள் தலைவர் ஹியூகோ சாவேஸ் செப்டம்பர் 2006-ல் அய்.நா.அவையில் ஆற்றிய கொதிப்பேறிய உரையைத் தோழர்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.

அக்கா அக்கா என்றாய்...

அய்.நா. உண்மையிலேயே சுயாதீனமான அவை அல்ல என்பதும், வல்லாதிக்க நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலிலேயே அது இயங்கி வருகிறது என்பதையும் அதிகம் விளக்க வேண்டியதில்லை. இஸ்ரேலின் உருவாக்கத்திலிருந்து இன்றைய லிபியா மீதான நேட்டோ படைகளின் தாக்குதல்வரை அய்.நாவின் பாத்திரம் அமெரிக்காவின் அடியாள் பாத்திரமாகவே இருந்து வருகிறது. பாதிக்கப்படும் உறுப்புரிமை நாடுகளின் அயராத முயற்சியால் ஏதாவது ஒரு தீர்மானம் அவையில் நிறைவேற்றப்படும் சூழலில் இருக்கவே இருக்கிறது வீட்டோ அதிகாரம். இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒற்றை ஆளாக அமெரிக்கா இஸ்ரேல் மீதான பல பத்துத் தீர்மானங்களை முறியடித்தது வரலாறு. கியூபா, ஈராக், ஈரான் மீதான நியாயமற்ற பொருளாதாரத் தடைகளையும் அய்.நா. ஆதரித்தேயுள்ளது. அமெரிக்காவும் மேற்கு அய்ரோப்பாவும் மத்திய கிழக்கில் நடத்திவரும் எண்ணை யுத்தத்தையும் அய்.நா. நியாயப்படுத்தியே வருகிறது. நாளைக்கே ஈரான் அல்லது வடகொரியா மீது நேட்டோ தாக்குதல் நடத்தும்போது அதையும் அய்.நா. ஆதரிக்கத்தான் போகிறது. அய். நா. ஒருபோதும் நடுநிலையான அமைப்பாக இருந்ததில்லை. அதனுடைய தீர்மானங்களிற்கும் செயல்களிற்கும் பின்னால் மறைந்திருப்பவை வல்லாதிக்க நாடுகளினதும், அந்நாடுகளின் பல்தேசியக் கூட்டுத்தாபனங்களினதும் பொருளாதார நலன்களே என்பது பகிரங்க உண்மை.

வெறுமனே அய்.நா மட்டுமல்லாமல் அதன் சகோதர அமைப்புகளெனச் சொல்லக் கூடிய சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற நிறுவனங்களும் அய்.நாவின் ஒன்றுவிட்ட சகோதரர்களான பகாசுர தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கூட இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் அடங்குபவையே. எனினும் ஒடுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட மக்கள் இத்தகைய நிறுவனங்களை நிராகரித்துவிட முடிவதில்லை. இன்றைய உலகச் சூழலில் ஏதோவொரு வகையில் ஒடுக்கப்பட்ட நாடுகளும், தேசிய இனங்களும், மக்கள் குழுக்களும் இந்த நிறுவனங்களோடு அரசியல் ஊடாட்டங்களைச் செய்யத்தான் வேண்டியுள்ளது. நமது காவல்துறையினர் லஞ்சத்திலும் திருட்டுத்தனத்திலும் ஊறித் திளைத்தபோதும் நமது வீட்டில் களவு நடந்தால் அது குறித்து முறையிட நாம் காவல்நிலையத்திற்குத்தானே செல்லவேண்டியுள்ளது. இதைப் போன்றதுதான் ஒடுக்கப்பட்ட நாடுகளிற்கும், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களிற்கும் அய்.நாவுக்குமான தொடர்பு.

இந்தப் புரிதலுடன்தான் அய்.நாவின் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர்கள் குழு இலங்கையில் நடைபெற்ற போர் குறித்தும், இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இழைத்த போர்க் குற்றங்கள் குறித்தும், எதிர்காலத்திற்கான அரசியல் பரிந்துரைகளுடனும் வெளியிட்டிருக்கும் அறிக்கையை நாம் அணுகவேண்டியிருக்கிறது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்படும் தகவல்களும், குற்றச்சாட்டுகளும் உண்மையானவை. ஆனால் இலங்கை அரசியலை உற்றுக் கவனிப்பவர்களிற்கு இந்த அறிக்கை புதிதாக எந்த உண்மைகளையும் அறிவிக்கவில்லை என்பதும் உண்மை.

இந்த இடத்திலே, அய்.நாவின் சிறப்பு விசாரணையாளர் பிலிப் அல்ஸ்டன் 2006ல் இலங்கைப் பிரச்சினை குறித்து வெளியிட்ட அறிக்கை தோழர்களிற்கு நினைவிருக்கலாம். அந்த அறிக்கையும் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புகளுமே மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதை விரிவாக விளக்கியிருந்தது. 2009ல் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருக்கும் போதே அய்.நாவின் உப நிறுவனங்களும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இரு தரப்பாலுமே பொதுமக்கள் கொல்லப்படுவதாக அறிக்கைகளை வெளியிட்டன. குறிப்பாக மருத்துவமனைகள் மீதும் மோதல் தவிர்ப்பு பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும் இலங்கை அரசு எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களை நடத்துவதாகவும், புலிகள் மக்களை யுத்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறவிடாது ஆயுதமுனையில் தடுத்து வைத்திருப்பதாகவும் பல அறிக்கைகள் வெளியாகின. 2009 டிசம்பரில் மனித உரிமைகளிற்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் நீண்ட அறிக்கை வெளியானது (http://www.uthr.org/SpecialReports/Special%20rep34/Uthr-sp.rp34.htm). அந்த அறிக்கை அரசும் புலிகளும் இழைத்த போர்க் குற்றங்களை மிக விரிவாக ஆவணப்படுத்தியிருந்தது. மேற்சொன்ன அறிக்கைகளின் தொகுப்பாக இப்போது வெளியிடப்பட்டிருக்கும் அய்.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையைச் சொல்ல முடியும். இந்த அறிக்கை -அதற்குப் பின்னாலிருக்கும் நோக்கங்களிற்கு வெளியே – ஒரு முக்கியமான அடிப்படை ஆவணம் என்பதில் சந்தேகங்கள் ஏதுமில்லை.

இந்த அறிக்கையின் அடிப்படையில் போர்க் குற்றங்களை இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மனித உரிமைகளில் அக்கறையுள்ளவர்கள் யாருக்குமே முரணான கருத்துகள் இருப்பதற்கே வாய்ப்பில்லை. ஆனால் இந்த அறிக்கையின் அடிப்படையில் அய்.நா. ஒரு நீதியான விசாரணையை நடத்தி முடிக்க வாய்ப்பிருக்கிறதா என்பதே இப்போதுள்ள கேள்வி.

இந்த அறிக்கை குறித்து இலங்கை அரசு மிகவும் பதறிப் போயிருக்கிறது. இந்த அறிக்கையை முறியடிக்க அது தனது அரச தந்திரிகளை உலகம் முழுவதும் ஆதரவு கேட்டு அனுப்பி வைத்திருக்கிறது. கடந்த வருடம் ஜெனிவா மனித உரிமைகள் அவையில் இலங்கை அரசுமீது கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை இலங்கை அரசு தனது நட்பு நாடுகளின் துணையோடு முறியடித்திருந்தது. எதிர்வரும் ஜுன் மாதம் ஜெனிவாவில் மறுபடியும் கூடவிருக்கும் மனித உரிமைகள் அவையில் அய்.நா.நிபுணர்கள் குழுவின் இந்த அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட எல்லா வாய்ப்புகளுமுள்ள நிலையில் அதை முறியடிக்கவும், அய்.நா. பாதுகாப்பு அவையில் இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்பட்டால் அதை எதிர்கொள்ளவும் இலங்கை அரசு தயாராகிவருகிறது. “நாங்கள் சீனாவிடமும் ரஷ்யாவிடமும் தஞ்சமடைவோம்” எனக் கோத்தபாய ராஜபக்ச சொல்லியுள்ளார். “பாதுகாப்புச் சபையில் இலங்கை மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ரஷ்யா வீட்டோ அதிகாரத்தின் மூலம் அத்தீர்மானத்தைத் தோற்கடிக்கும்” என இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் விளாடிமிர் மிக்கலோவ் அறிவித்திருக்கிறார். ரஷ்யோவோடு சீனாவும் தனது வீட்ரோ அதிகாரத்தை இலங்கைக்கு ஆதரவாக உபயோகிப்பதற்கான சமிக்ஞைகளும் அரசியல் வெளியில் மின்னாமலில்லை. இந்த ஆதரவு ஒன்றும் இலவசமல்ல. இதற்கான கூலியை ஒப்பந்தங்களாகவும் முதலீட்டியத்திற்கு நாட்டைத் திறந்துவிட்டும் இலங்கை செலுத்த வேண்டியிருக்கும்.

வீட்ரோ அதிகாரங்கள் உள்ள மற்ற இருநாடுகளான அமெரிக்காவும் பிரித்தானியாவும் இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கைமீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு இருப்பதாக ஒரு தோற்றமுள்ளது. இந்த உறுதிப்பாடு மனித உரிமைகள் மீதுள்ள அவர்களது அக்கறையால் ஏற்பட்டிருப்பின் அய்.நா.நிபுணர்களின் அறிக்கையின் அடிப்படையில் அவை விட்டுக்கொடுக்காத ஒரு போராட்டத்தை இலங்கை அரசுக்கு எதிராக நிகழ்த்தக்கூடும் என நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் எண்ணை யுத்தத்தின் சூத்திரதாரிகளான இந்த இரு நாடுகளின் இந்த உறுதிப்பாடு அவர்களது மனித உரிமைகள் மீதும் சனநாயகத்தின் மீதுமுள்ள அக்கறைகளினால் அல்லாமல் அவர்களது பூகோள மற்றும் பொருளாதார நலன்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது என்பதை இங்கே விளக்கத் தேவையிருக்காது. ஏனெனில் இவ்விரு நாடுகளினதும் கடந்தகால வரலாறு மட்டுமல்லாமல் எதிர்கால வரலாறும் இவ்வாறான அரசியல் அழுத்தங்களை உருவாக்கி அதன் மூலம் ஒரு நாட்டை மறுகாலனியப் பிடிக்குள் கொண்டுவரும் வெள்ளைக் கொள்ளைக்கார வரலாறே.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னான பத்தாண்டுகள் ஒற்றை வல்லரசாக அமெரிக்காவை உருவாக்கம் செய்ததெனில் அடுத்த பத்தாண்டுகளை அந்த ஒற்றை வல்லரசைச் சவால் செய்ய சீனாவும் ரஷ்யாவும் அவைகளின் நட்பு நாடுகளும் மாற்று வல்லரசொன்றைக் கட்டியெழுப்ப முயன்ற காலமெனத் துணிந்து சொல்லலாம். சீனாவைத் தலைமையாகக் கொண்ட ஆசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி சந்தேகத்திற்கிடமில்லாமல் அமெரிக்காவையும் மேற்கு அய்ரோப்பாவையும் சவால் செய்துள்ளது. சந்தைப் போட்டிகள் புதிய ஒழுங்கில் அமைக்கப்பட்டுள்ளன. காலாதி காலமாக வட அமெரிக்காவின் வேட்டைக் காடாகக் கிடந்த லத்தீன் அமெரிக்காவின் பெரும் பகுதி சீனாவின் பொருளாதாரக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த வல்லரசுப் பலப்பரீட்சையில் இலங்கை போன்ற நோஞ்சான் நாடுகள் என்ன பாத்திரத்தை வகிக்கின்றன என்பதைப் பொறுத்துத்தான் அந்த நாடுகள் மீதான வல்லாதிக்க நாடுகளின் அரசியல் அணுகுமுறைகள் அமையும். இப்போது இலங்கையின் பாத்திரம் சீனா மற்றும் ரஷ்ய சார்புப் பாத்திரமே. எனவே இந்தப் பொறிமுறையில்தான் போர்க் குற்றங்களிலிருந்து இலங்கையைப் பாதுகாக்க சீனாவும் ரஷ்யாவும் முனைந்து நிற்பதையும் இலங்கையை அச்சுறுத்த அமெரிக்காவும் பிரித்தானியாவும் முனைந்து நிற்பதையும் நாம் புரிந்துகொள்ள முடியும். இலங்கையைப் பாதுகாக்க முயல்பவர்களுக்கும் சரி இலங்கையை அச்சுறுத்த நினைப்பவர்களிற்கும் சரி ‘மனித உரிமைகள்’, ‘இறைமை’ போன்ற சொல்லாடல்கள் வெறும் கவசங்களே. அந்தக் கவசங்களிற்கு உள்ளிருப்பவை ஆழமான சுய பொருளாதார நலன்களே. இந்த நாடகத்தில் மிக முக்கியமான பாத்திரம் பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு உண்டு. இந்தியா மிக உறுதியாக இலங்கை அரசை ஆதரித்து நிற்கிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி அய்.நா.அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசின் மீதான ஒரு நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்பதே  பாதிக்கப்பட்ட மக்களதும், மனித உரிமைப் போராளிகளினதும் விருப்பமும் கனவும்.

இங்கேதான் நாம் மறுபடியும் ஹியூகோ சாவேஸிடம் வர வேண்டியிருக்கிறது. அவரின் சொற்கள் வழியே அய்.நா.வின் சுயாதீனமற்ற, பக்கச்சார்பான நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இலங்கை அரசின் பழுத்த அரச தந்திர முயற்சிகளாலும் விட்டுக்கொடுப்புகளாலும் அமெரிக்காவும் பிரிட்டனும் இலங்கைமீதான விசாரணையைக் கைகழுவிட எல்லா வாய்ப்புகளுமுள்ளன. இந்த முயற்சியில் இலங்கை அரசு தோல்வியடைந்தால் கூட அதைக் காப்பாற்றிக் கரைசேர்க்க சீனாவும் ரஷ்யாவும் வீட்ரோ அதிகாரங்களுடன் தயாராயுள்ளன. இதற்கு அப்பால் அய்.நா.நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் வேறெதுவும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கை அரசை விசாரணை மேடையில் நிறுத்தியே ஆக வேண்டும் என சர்வதேச உயர்மட்டங்களில் வலுவான ஒரு ‘லொபி’யைச் செய்யவும் தமிழர் தரப்பில் வலுவில்லை. ஆனாலும் இலங்கை அரசினதும் விடுதலைப் புலிகளினதும் போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தி அய்.நா. நிபுணர்கள் குழு வெளியிட்ட ஆவணம் மனித உரிமையாளர்களிற்குக் கிடைத்ததொரு கூரிய ஆயுதமே. மனித உரிமைகளிற்கான போராளிகளின் எதிர்கால வெற்றிகளிற்கு இந்த ஆயுதம் உறுதுணையாகலாம்.

அறிக்கையை முன்வைத்து அய்.நா, வல்லாதிக்க நாடுகள் மற்றும் இலங்கை அரசின் நகர்வுகளை மேலே சொன்னேன். தமிழர்களுடைய தரப்பு இந்த அறிக்கையை எவ்விதம் எதிர்கொள்கிறது?

ஈ.பி.டி.பி மற்றும் கருணா தரப்பினர் இலங்கை அரசை ஆதரித்து நின்று இந்த அறிக்கையைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். “இது எங்கள் நாடு ஏனிந்த தலையீடு” என்பதே ஈ.பி.டி.பியின் மேதின முழக்கமாயிருந்தது. இது இலங்கை அரசால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களினதும் நாடுதான் என்பது டக்ளஸ் தேவானந்தாவிற்குப் புரியாமலிருக்கிறது. லிபியாவில் நடப்பது போல மகிந்த ராஜபக்சவின் மாளிகைமீது நேட்டோ படைகள் குண்டா வீசிவிட்டார்கள்! அய்.நா. நிபுணர்கள் குழுவின் முதற்கட்ட நடவடிக்கைக்கே இவ்வாறு அவர் பதறித்துடிப்பது நியாயமில்லை. போர்க் குற்றம் இழைத்தவர்களது பட்டியலில் ஈ.பி.டி.பியின் பெயரும் இணைக்கப்படுவதற்கு எல்லாவித நியாயங்களுமுள்ளன. அதற்கு ஆதாரங்களுமுள்ளன. அய். நா.அவையின் சிறப்பு விசாரணையாளர் பிலிப் அல்ஸ்டனது அறிக்கையிலேயே ஈ.பி.டி.பி மீதும் கருணா அணியினர்மீதும் மனித உரிமைகள் மீறல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. (பார்க்க: வேலைக்காரிகளின் புத்தகம் / பக்: 80 – 102)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) இந்த அறிக்கையை வரவேற்றிருக்கின்றது. புலிகள் செல்வாக்குடன் இருந்த காலத்தில் இவ்வாறான  ஓர் அறிக்கை வெளியாகியிருந்தால் த. தே. கூட்டமைப்பினர் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் புலிகள் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து புலிகளைக் காப்பாற்றவே தங்களது முழுச் சக்தியையும் செலவு செய்திருப்பார்கள். அவ்வாறு செய்துமிருக்கிறார்கள். இப்போது புலிகள் இல்லாத நிலையில் புலிகள் மீதான குற்றச்சாட்டுகளை இவர்கள் கண்டுகொள்ளவில்லை. புலிகளைக் கடைசிவரை ஆதரித்துநின்ற இவர்கள் அந்தக் குற்றங்களிற்காகத் தார்மீகப் பொறுப்புச் சொல்லவும் தயாரில்லை. இந்த அறிக்கையின் மீது விசாரணை வேண்டுமென மக்களைத் திரட்டிப் போராடவோ, அரச தந்திர மட்டங்களில் செயலாற்றவோ கூட்டமைப்பினர் சக்தியற்றவர்கள். குறிப்பாக கூட்டமைப்பினர் இந்திய அரசை எக்காரணம் கொண்டும் பகைத்துக்கொள்ள விரும்பாதவர்கள். இந்த அறிக்கை குறித்து இந்திய அரசு எடுக்கும் நிலைப்பாட்டிற்கு இவர்கள் கட்டுப்படுவார்கள். ஆனால் உள்ளுர் தமிழ்ப் பத்திரிகைகளில் மட்டும் வழமை போலவே தொடை தட்டுவார்கள். இந்த அறிக்கையின் மீது குட்டிக் குட்டி அறிக்கைகள் விடுவதைத் தவிர இவர்களால் இந்த விடயத்தில் வேறெதுவும் செய்துவிட முடியாது.

தமிழ் ஊடகத்துறையில் இலங்கை அரசு ஆதரவு ஊடகங்கள் இந்த அறிக்கை குறித்து நிராகரிப்பை எழுதுகிறார்கள். புலிகளாதரவு ஊடகங்களோ மகிந்தவின் கழுத்தில் மரணக் கயிறு வீசப்பட்டுவிட்டதாகவே சொல்கிறார்கள். இந்த இரு அந்தலைகளதும் நடுவே நின்று அறிக்கையை  வரலாற்றுப் பின்புலத்திலும் சர்வதேச அரசியல் சூழமைவிலும் பொருத்தி நிதானமாக ஆராய்ந்து எழுதியவர்கள் மிகச் சிலரே. ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரை அவற்றில் முதன்மையானது என்றே கருதுகிறேன். (கட்டுரையின் தமிழ் வடிவம்:http://thenee.com/html/300411-3.html)

அய்.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கை குறித்து ஜெயராஜ் தீர்ப்பு எதையும் சொல்வதில்லை. ஆனால் அறிக்கை உருவானதிற்கான அரசியல் பின்னணி, இந்த அறிக்கையைத் தவிர்க்க இலங்கை அரசும் மற்றும் சிங்கள இனவாத அமைப்புகளும் மேற்கொண்ட நடவடிக்கைகள், விமல் வீரவன்சவின் பட்டினிப்போர் நாடகம், அறிக்கையின் எதிர்காலம் போன்ற விடயங்களை ஜெயராஜ் கட்டுரையில் பேசுகிறார். “பான் கீ மூனின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நேர்மையானவர்களே, இவர்களின் சுயாதீனம், பாரபட்சமற்ற தன்மை என்பன மதிக்கப்பட வேண்டும்”  எனக் குறிப்பிடும் ஜெயராஜ், இலங்கை அரசுமீது ஒரு விசாரணை நடைபெறுவதிலுள்ள தடைகளை சர்வதேச அரசியல் சூழல்களின் பின்னணியில் எழுதுகிறார். நான் ஜெயராஜின் கட்டுரையை எனது Face Bookகில் இணைப்புக் கொடுத்ததற்கு மதுவந்தி என்ற தோழரொருவர் கொதித்துப்போய் கருத்துச் சொல்லியிருந்தார். நான் அவரிடம் ஜெயராஜின் கட்டுரையில் எந்த இடத்தில் முரண்படுகிறீர்கள் எனக் கேட்டு எழுதினேன். அவர் மறுபடியும் புலி எதிர்ப்பு அது இதுவெனத் தொடர்பில்லாமல் எரிந்து விழுந்தார். இது வருந்தத்தக்கது. மற்றதன் கருத்தை முத்திரை குத்தல்களோ, முன்முடிவுகளோ இல்லாமல் அணுகிப் பரிசீலிக்க முடியாத போக்கு நமது சமூகத்தின் பொதுப்புத்தியில் ஆழமாகவே பதிந்துள்ளது. முப்பது வருட ஆயுதப் போராட்டத்தால் நமக்குப் பரிசளிக்கப்பட்ட கெடுதிகளில் இந்த அரசியல் சகிப்புத்தன்மையின்மை என்பதும் ஒன்று. ஊடும் பாவுமாக ஆயிரமாயிரம் சிக்கலுள்ள அரசியல் – சமூகப் பிரச்சினைகளை ஒரு துப்பாக்கிக் குண்டால் அல்லது துரோகி என்ற பட்டத்தால் எளிமையாகத் தீரத்துவிடலாம் என்ற வெறுக்கத்தக்க அரசியலின் நீட்சியது.

ஜெயராஜின் கட்டுரைமீது ஒருவரி கூட விமர்சனத்தைத் தெரிவிக்காமல் மதுவந்தி வெறுமனே ஆத்திரப்படுவது எதனால்? ‘பாஸ்ட் ஃபூட்’ இருக்கலாம்,  ஆனால் ‘பாஸ்ட் பொலிடிக்ஸ்’ என்று எதுவும் கிடையாது. ஏதிலிகளைக் காப்பாற்ற வணங்காமண் கப்பல், தலைவரைக் காப்பாற்ற அமெரிக்கக் கப்பல், வாலை விட்டுத் தும்பைப் பிடிக்க நாடு கடந்த அரசாங்கம் எனப் பிரச்சினைகளைச் சுளுவாகத் தீர்த்துவிடலாம் என்ற அரசியல் விடலைத்தனத்திலிருந்துதான்  இந்தகைய கொதிப்புகள் உருவாகின்றன. அந்த விடலைத்தனமான நிலைப்பாடுகள் தகரும் என்ற நிலைவரும் போதுதான் நியாயமற்ற ஆத்திரமும் வெறித்தனமும் உருக்கொள்கின்றன. மிக எளிதாக இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி மகிந்தவின் கழுத்தில் மரணக்கயிற்றை மாட்டிவிடும் ஆசையில் ஜெயராஜின் கட்டுரை மண்ணள்ளியல்லவா போட்டுவிடுகிறது. எது சாத்தியமானது / சாத்தியமற்றது என்றல்லவா கட்டுரை  கோடிட்டுக் காட்டுகிறது. அங்கே பிறக்கிறது அறிவுச் சோம்பேறிகளின் சினம்.

ஹியூகோ சாவேஸின் மதிப்பீட்டைப் பொய்யாக்கி, இலங்கைப் பிரச்சினையில் நடுநிலை தவறாமல் அய்.நா.பாதுகாப்புச் சபை ஒரு தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினால், யுத்தக் குற்றவாளிகள்மீது விசாரணை ஆணையம் நிறுவப்பட்டால் மகிழ்ச்சியே. ஆனால் சீனி என்று கடதாசியில் எழுதி வைத்து நக்கினால் சுவைக்காது என்பதுதான் பிரச்சினையே. இதை உடைத்துச் சொன்னால் ஆவேசப்படுவதும் ஆத்திரம் கொள்வதும் ஒருபோதும் அரசியல் முதிர்ச்சியாகாது.

இந்த அறிக்கையில் விடுதலைப் புலிகள்மீது சுமத்தப்பட்டுள்ள ஆறு குற்றச்சாட்டுகளையும் புலிகளது இரசிகர்கள் எதிர்கொள்ளும் முறை மிகக் கொடுமையாகயிருக்கிறது. இதுவரை காலமும் புலிகளின் இழைத்த இந்தக் குற்றங்களை மறுத்து வந்த அல்லது மவுனம் சாதித்த இந்தக் கூட்டத்தினால் இப்போது இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியவில்லை. எனவே அவர்கள் புலிகள் இல்லாத இன்றைய நிலையில் இதுகுறித்துப் பேசி என்ன பிரயோசனம் என்கிறார்கள்.

புலிகள் அதிகாரத்தில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் புலிகளை விமர்சித்தபோது விமர்சனங்கள் இலங்கை அரசைப் பலப்படுத்தும் என்றார்கள். புலிகள் போரிட்டுக்கொண்டிருக்கையில் விமர்சித்தபோது விமர்சனங்கள் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் என்றார்கள். புலிகளின் முடிவுக்குப் பின்னால் இப்போது விமர்சித்தால் இல்லாதவர்களை விமர்சித்து என்ன பிரயோசனம் என்கிறார்கள். அதாவது புலிகளை எந்தக் காலத்திலும் விமர்சிக்கவே கூடாது என்பதுதான் இந்தப் புலி இரசிகர்களின் நிலைப்பாடு.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் தார்மீகத்தைப் பாஸிசத்தால் சிதைத்தவர்களையும், சொந்த மக்களையே கொன்றொழித்தவர்களையும், அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாக உபயோகப்படுத்திக் கொல்லக் கொடுத்தவர்களையும், அவர்களது மரணங்களைக் காரணம் சொல்லி நியாயப்படுத்துகிறது இன்னொரு கூட்டம். போராட்டத்தின் தவிர்க்க முடியாத கட்டத்தில் புலிகள் தவறிழைத்து விட்டார்களென சாக்குபோக்கு உரைத்து அய்.நா. நிபுணர்களின் அறிக்கையில் புலிகள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து புலிகளை விடுவிப்பது அவர்களது நோக்கம்.

அவர்கள் சொல்வது சரியானால் 1986 -லிருந்தே புலிகள் தவிர்க்க முடியாத கட்டத்தில்தான் இருந்தார்கள் எனத்தான் நாம் கருத வேண்டியிருக்கும். மக்களைக் கொன்றதையும், மக்களைத் தடுத்து வைத்ததையும், கட்டாயமாகச் சிறுவர்களை இயக்கத்தில் இணைத்ததையும், பின்வாங்கிச் செல்லும்போது மக்களை வலுகட்டாயமாகத் தங்களுடன் இழுத்துச் சென்றதையும் புலிகள் இறுதி யுத்தத்தின் போது மட்டும்தானா செய்தார்கள். அவர்களது வரலாறு முழுவதும் அவர்கள் அதையே செய்தார்கள். 1995 -ல் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து பின்வாங்கும் போது அவர்கள் கட்டாயப்படுத்தி மக்களைத் தங்களுடன் இழுத்துச் சென்றதும் அவ்வாறு வர மறுத்தவர்களைத் தேசத் துரோகிகளாகப் பிரகடனம் செய்ததும் புலிகளின் இந்தப் பாஸிசப் பண்புக்கான முதன்மை எடுத்துக்காட்டு. ‘பாஸ்’ நடைமுறையும் கட்டாயப் பிள்ளைபிடிப்பும் பதினைந்து வருடங்களாக நடைமுறையிலிருந்தன, மறுக்க முடியுமா? அய்.நாவின் இந்த அறிக்கை ஏற்கனவே மக்களிடம் அம்பலப்பட்டுப் போயிருக்கும் புலிகளை முற்றுமுழுவதுமாக அம்பலப்படுத்த மனித உரிமையாளர்களிற்கும் சனநாயகவாதிகளிற்கும் கிடைத்த கூரிய ஆயுதம். புலிகளது அரசியலும் அது கட்டியெழுப்பிய கற்பிதங்களும் மாயைகளும் வெறுக்கத்தக்க இனவெறியும் நமது அரசியற் பரப்பிலிருந்து முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும். புலிகளின்  அரசியலின் தொடர்ச்சியிலிருந்தல்ல, புலிகளின் அரசியல் வெற்றிடத்திலிருந்துதான் ஈழத் தமிழர்களின் ஆரோக்கியமான அரசியல் உருவாக முடியும். காடு பற்றிய நிலத்தில் பயிர் முளைக்காது. துப்பரவு செய்து பண்படுத்திய தூய நிலத்தில்தான் அது முளைக்கும்.

ஆரோக்கியமான அரசியல் என்றால் எது? முதலாவதாக ஆயுதப் போராட்ட வழியிலிருந்து அமைப்புரீதியாக மட்டுமல்லாமல் கருத்துரீதியாகவும் நமது சமூகம் விடுபட வேண்டும். எவ்வளவு குறைபாடுகள் இருந்தபோதும் இன்று சாத்தியப்படக் கூடிய வழிகளில் ஆகச் சிறந்த அரசியல் வழிமுறை நாடாளுமன்ற சனநாயக அரசியலே என்பது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
ஏகபிரதிநிதித்துவம் என்ற கருத்தாக்கம் இனிச் செல்லபடியாகாது என்பதையும் சனநாய அரசியலில் பல கட்சிகளின் முக்கியத்துவத்தையும் விளங்கிக்கொள்ள வேண்டும். தேசிய இனப் பிரச்சினையைப் பொறுத்தளவில் தமிழீழம் சாத்தியமே இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படைப் புரிதல்களுடன்தான் எதிர்காலத்திற்காகன ஈழத் தமிழர்களின் அரசியல் கட்டியெழுப்பப்பட வேண்டும். முக்கியமாக “பத்து நாட்கள் யுத்தம் செய்வதைவிட, பத்து வருடங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்தது” எனச் சொன்ன முன்னாள் குரோஷியா அதிபரின் அனுபவ வாக்கு நமக்கு உறைக்க வேண்டும்.

தமிழர்கள் மட்டுமல்லாது இலங்கையின் ஏனைய சிறுபான்மை இனங்களும் தமது அரசியல் உரிமைகளைப் பெறுவது இலங்கை அரசினது கைகளில் அல்லாது இந்தச் சிறுபான்மை இனங்களது அரசியல் அய்க்கியத்திலேயே முதன்மையாகத் தங்கியிருக்கிறது. கடந்த முப்பது வருடங்களாக ஈழப்போராட்டத்தில் அனைத்துத் தரப்புகளும் இழைத்த தவறுகள் வெளி வெளியாக ஆராயப்பட்டு தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இவை எதுவும் நடக்காத பட்சத்தில் இந்த ‘இன்மை’ இலங்கையின் பேரினவாதிகளிற்கு மட்டுமே இலாபங்களை ஈட்டித்தரும். சிறுபான்மை இனங்கள் மேலும் மேலும் அரசியல் படுகுழிகளை நோக்கித் தள்ளப்படுவார்கள்.

அய்.நாவுடனும் சர்வதேசச் சமூகத்துடனுமான ஈழத் தமிழர்களின் அரசியல் ஊடாட்டம் சாத்தியப்படும் வழிகளிலெல்லாம் தொடரட்டும். ஆனால் அய்.நாவும், சர்வதேசச் சமூகமும் நமக்கான தீர்வை வழங்கிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும் என்பது போன்ற அப்பாவித்தனமான நம்பிக்கைகள் நம்மை அழிவின் விளிம்புக்கே இட்டுச் செல்லும். இத்தகைய நம்பிக்கைகள் அல்லது அரச தந்திரம் என நினைத்து நிகழ்த்திய முட்டாள்தனங்கள்தானே மே 2009-ல் பேரழிவிற்குக் காரணங்களாயின. சர்வதேசம் தலையிட்டு யுத்தத்தை நிறுத்தும், இந்தியாவில் பிஜேபி ஆட்சிக்கு வந்து யுத்தத்தை நிறுத்தும், அமெரிக்கக் கப்பல் வந்து காப்பாற்றும் போன்ற நம்பிக்கைகள் தகர்ந்த போது அது சரணடைவிலும் இறுதியாக அழிவிலும்தானே முடிந்தன. இந்த அரசியல் முட்டாள்த்தனத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிரை விலையாகச் செலுத்தவும் வேண்டியிருந்தது.

“அக்கா அக்கா என்றாய், அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே” என்பது பாரதிதாசனாரின் பாட்டு. நமது சொந்தத் தலைவிதியையும் அரசியலையும் நமது கைகளில் நாம் எடுத்துக்கொள்வதே முதன்மையானது. அய்.நாவும் அமெரிக்காவும் அய்ரோப்பாவும் வைகோவும் சீமானும் நமக்கான விடுதலையைக் கொண்டுவருவார்கள், நாங்கள் தொடர்ந்தும் குறுந்தேசிய அரசியலும் குதர்க்க நியாயங்களும்தான் செய்துகொண்டிருப்போம், துரோகிகளைப் புதிது புதிதாகக் கண்டுபிடித்தவாறேயிருப்போம், நமக்கான சனநாயகபூர்வமான புதியதொரு அரசியலைக் கட்டியமைக்கமாட்டோம் என இருப்பது அரசியல் தற்கொலை மட்டுமல்ல, அதுவே ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் தற்கொலையுமாகும்.

1 thought on “அக்கா அக்கா என்றாய்…

  1. //கெடுதிகளில் இந்த அரசியல் சகிப்புத்தன்மையின்மை என்பதும் ஒன்று. ஊடும் பாவுமாக ஆயிரமாயிரம் சிக்கலுள்ள அரசியல் – சமூகப் பிரச்சினைகளை ஒரு துப்பாக்கிக் குண்டால் அல்லது துரோகி என்ற பட்டத்தால் எளிமையாகத் தீரத்துவிடலாம் என்ற வெறுக்கத்தக்க அரசியலின் நீட்சியது.// 100 % true

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *