பிரியா தம்பி என்ற மினர்வாவால் முதலில் முகப்புத்தகத்தில் எழுதப்பட்டு பின்பு அதன் அரசியல் முக்கியத்துவம் கருதி கீற்று இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டதுதான் “ஷோபாசக்தி, சுசீந்திரன் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரின் ‘புலி’த் தீண்டாமை” என்ற கட்டுரை. அந்தக் கட்டுரையை முன்வைத்து ‘கீற்று’ ரமேஷ் “கிழிந்தது புலி எதிர்பாளர்களின் முகமூடி, அறுந்தது அரசு ஆதரவாளர்களின் ஆட்டுத்தாடி” என்று ஆர்ப்பரித்து நின்றார். அது அறியாமையின் ஆணவம்! மினர்வாவின் கட்டுரையில் கையாளப்பட்ட ‘ஆய்வு’ முறையை மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுவதெனில் ‘மாதனமுத்தா’ ஆய்வுமுறை என்றே குறிப்பிடலாம்.
மாதனமுத்தா ஒரு நாட்டாரியல் கதைப் பாத்திரம். மாதனமுத்தா சிறந்த அறிவாளராக ஊருக்குள் மதிப்பிடப்படுபவர். தீராத பிரச்சினைகளையெல்லாம் தனது புத்திசாதுரியத்தால் அவர் தீர்த்துவைப்பார். ஒருநாள், கிராமத்துத் தலைவரின் வீட்டில் ஒரு மாட்டுக் கன்று மண்பானையொன்றிற்குள் தலையைவிட பானைக்குள் தலை மாட்டிக்கொண்டது. எவ்வளவு முயற்சி செய்தும் கன்றிலிருந்து பானையை அகற்ற முடியவில்லை. பிரச்சினையைத் தீர்த்துவைக்க மாதனமுத்தா அழைக்கப்பட்டார். மாதனமுத்தா தீர்ப்புச் சொல்ல யானையில்தான் வருவார். யானை கிராமத் தலைவரது காணிக்குள் வருவதற்கு மதில் இடைஞ்சலாயிருந்தது. மாதனமுத்தாவின் கூர்மையான புத்திசாதுரியத்தால் யானை உள்ளே நுழைய வழி கண்டுபிடிக்கப்பட்டது. மாதனமுத்தாவின் ஆலோசனையின் பெயரில் மதிற்சுவர் இடிக்கப்பட்டு யானை உள்ளே நுழைந்தது. கிராமத் தலைவர் கன்றிலிருந்து பானையை அகற்றிவிட யோசனை சொல்லுமாறு கேட்க, மாதனமுத்தாவின் ஆலோசனைப்படி கன்றின் தலைப்பகுதி கழுத்தோடு தறிக்கப்பட கன்றிலிருந்து பானை தனியாகத் தலையோடு வந்தது. அப்போது கிராம அதிகாரி இப்போது பானையிலிருந்து கன்றின் தலையை எவ்வாறு எடுப்பது எனக் கேட்க, அது சுலபம் எனச் சொன்ன மாதனமுத்தா பானையை உடைத்துவிட ஆணையிட்டார். பானை உடைய கன்றினது தலை மீட்கப்பட்டது. அப்போது பின்னூட்டங்கள் போட்டுப் பாராட்டும் அளவிற்குத் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாததால் ஊர்மக்கள் கரவொலி எழுப்பி ‘அப்பிடிப் போடு அரிவாள’ எனப் பாராட்டி மாதனமுத்தாவின் அறிவாற்றலை வியந்தனர்.
மினர்வாவின் கட்டுரையின் கன்று, பானை, ஆனை ஆகியவற்றைக் கீழே அவரின் எழுத்துகளிலேயே தொகுத்துக்கொள்வோம்:
1. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஈழ மீனவ சமுதாயத்தின் கரையாளர் பிரிவைச் சார்ந்தவர் என்பதும், ஈழத்தில் மீனவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதும் பல பேர் அறியாத செய்தி.
2. சாதி ஒதுக்கலுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் (இயக்கத்தில் கலப்புத் திருமணம்தான் செய்ய வேண்டும்; இயக்கத்தில் தீண்டத்தகாத மக்களுக்கு முக்கிய பொறுப்புகள், தீண்டாமைக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள்) வெள்ளாள சாதியினரிடம் இயல்பாகவே ஆத்திரத்தை மூட்டியதில் ஆச்சரியமில்லை. அந்த ஆத்திரத்தில் தொடங்கியதுதான் முக்கால்வாசி புலி எதிர்ப்பு அரசியல் என்று வளர்மதி (கீற்று கட்டுரைகள்) கூறுவது ஆராயப்பட வேண்டியது.
3. புலி எதிர்ப்பு அரசியல் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் அகிலன் கதிர்காமர், சுசீந்திரன், டக்ளஸ் தேவானந்தா, ஷோபா சக்தி இவர்களின் சாதி பின்புலத்தைப் பார்த்தோமானால் எல்லோரும் ஆதிக்க சாதி வெள்ளாளர்கள். தலித் அரசியலை முன்வைத்து இவர்கள் பேசும் புலிஎதிர்ப்பு அரசியலுக்குப் மாற்றாக பிரபாகரன், தமிழ்ச்செல்வன் ஆகியோரின் ஒடுக்கப்பட்ட சாதிப் பின்புலம் குறித்தும், புலிகளின் சாதியொழிப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேச வேண்டிய அவசியம் இங்கிருக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கு இருக்கிறது.
இந்த முன்று தரவுகளிற்கும் மூலமாகத் ‘தலித் முரசு’ இதழிற்கு பழ. நெடுமாறன் வழங்கிய நேர்காணலையும் தனது கட்டுரையில் மினர்வா மேற்கோள் காட்டியிருக்கிறார். ‘அய்யா நெடுமாறனை இன்னுமா இந்த ஊர் நம்புகிறது’ என நான் ஆச்சரியப்பட்டு நிற்கிறேன். ‘பிரபாகரன் இன்னும் உயிரோடும் நலமாகவும் உள்ளார், நேற்றும் தம்பியுடன் தொலைபேசியில் உரையாடினேன்’ என்றெல்லாம் கதைவிட்டுக்கொண்டிருப்பவரின் சொற்களையெல்லாம் அரசியல் கட்டுரையொன்றிற்கான மூலமாக் கொண்டால் மினர்வா மீது அனுதாபம் கொள்வதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும்!
மினர்வாவின் தரவுகள் மூன்றுமே தவறானவை. ஈழத்தில் மீனவர்கள் சூத்திர சாதியே தவிர அவர்கள் தீண்டப்படாத சாதியினரில்லை. ஈழத்தின் சைவ மறுமலர்ச்சியின் திருவுருவாக நிறுத்தப்படும் சாதி வெறியர் ஆறுமுக நாவலர் வெள்ளார்களை சற்சூத்திரர் என்றும் வெள்ளாளர்கள் அல்லாத சூத்திரச் சாதியினரை அசற்சூத்திரர் என்றும் வகைப்படுத்திப் பேசியும் எழுதியும் வந்ததைக் கடுமையாக எதிர்த்துப் போராடியவர்கள் கரையார் சாதியினர். கரையார் சாதியினர் பலம்பெற்று வாழும் ஈழப் பகுதிகளில் இன்றும் ஆறுமுக நாவலருக்குச் சிலை கிடையாது. ஈழத்தின் சாதிய அடுக்கின் உச்சத்தில் பண்பாட்டுத்தளத்தில் பார்ப்பனர், வெள்ளாளர் என்ற வரிசையெனில் சமூக அதிகாரத்தளத்தில் வெள்ளாளர், கரையார் என்ற வரிசையே இருந்து வந்தது. இன்றைய நிலையும் அதுவே.
கரையார் சாதியினர் தலித் மக்களை எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதற்கு ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான தோழியர் புஸ்பராணி அளிக்கும் வாக்குமூலம் குறிப்பான சான்றாகலாம். புஸ்பராணியின் இந்த வாக்குமூலம் அவர் ‘எதுவரை’ இதழிற்காக அளித்த நேர்காணலிலிருந்து தரப்படுகிறது:
” எங்களது கிராமத்தில் கரையார்களே ஆதிக்கசாதியினர். அவர்கள் மத்தியில் நாங்கள் ஒரேயொரு தலித் குடும்பம். என் இளமைப் பருவத்தில் எல்லாவிதமான தீண்டாமைகளும் எங்கள் கிராமத்தில் நிலவின. தேநீர்க் கடைகள், ஆலயங்கள் போன்றவற்றுக்குள் எங்களை அனுமதிப்பதில்லை. சமூகத்திலிருந்து நாங்கள் புறமாக வைக்கப்பட்டிருந்ததால் எங்களுக்கு நாங்களே துணைவர்கள், தோழர்கள். குடும்பத்தில் எல்லாப் பிள்ளைகளும் மிகுந்த ஒற்றுமையாக இருப்போம். அரசியல் குறித்தோ புத்தகங்கள் குறித்தோ உரையாட வேண்டியிருந்தாலும் எங்களுக்குள்ளேயே உரையாடுவோம். ஆதிக்க சாதியினரின் தேநீர்க் கடைகளுக்குப் போய் போத்தலில் தேநீர் குடிக்கவோ, கோயிலுக்கு வெளியில் நின்று சாமி கும்பிடவோ நாங்கள் தயாரில்லை. புறக்கணிப்புக்கு புறக்கணிப்பையே நாங்கள் பதிலாகக் கொடுத்தோம். எங்கள் காலத்தில் எங்கள் குடும்பம் சாதித் தொழிலிலிருந்து வெளியே வந்துவிட்டது. எனது தந்தையாரும் மூத்த சகோதரர்கள் இருவரும் புகையிரதத் திணைக்களத்தில் வேலை பார்த்தார்கள். வழி தெருவில், பாடசாலையில் ஆதிக்க சாதியினரின் கிண்டல்களுக்கோ பழிப்புகளுக்கோ நாங்கள் ஆளாகும்போது வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம். ஒரு ஆடு போய் அடுத்த வீட்டு இலையைக் கடித்தால் போதும் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்து விடுவார்கள். சண்டையின் முதலாவது கேள்வியே ‘எடியே உங்களுக்கு கரையார மாப்பிள்ளை கேக்குதோ’ என்பதாகத்தானிருக்கும். ஆட்டுக்கும் கரையார மாப்பிள்ளைக்கும் என்ன சம்மந்தம்? நாங்கள் பதிலுக்கு எங்களைக் கலியாணம் கட்டத் தகுதியுள்ள கரையான் இங்கே இருக்கிறானா? எனத் திருப்பிக் கேட்போம்.”
இப்போது மினர்வாவிற்கு ஈழத்தில் கரையார்கள் தீண்டப்படாத சாதியினர் கிடையாது, மாறாக அவர்கள் தீண்டாமையைக் கடைப்பிடித்த சாதியினரே என்பது புரிந்திருக்கும். குறிப்பாகப் பிரபாகரனின் சாதியப் பின்புலம் சாதிய இந்துப் பின்புலமே. ‘திருமேனியர் குடும்பம்’ என அழைக்கப்படும் பிரபாகரன் குடும்பத்தினர் வல்வெட்டித்துறையின் புகழ்பெற்ற சிவன் கோயிலை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோற்றுவித்தவர்கள் என்பதையும் அக்கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்கள் என்பதையும் இங்கே இணைத்துப் பார்க்கலாம். ‘ஈழத்தில் மீனவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பது பல பேர் அறியாத செய்தி’ என ஆய்வு முடிவு வெளியிட்ட மினர்வாவிடம் ஆம், அது ஈழத்தவர்களே அறியாத செய்தி என நாம் அறிவுறுத்த வேண்டியுள்ளது.
இயக்கத்தில் கலப்புமணமும், விதவை மணமும் கட்டாயமாக்கப்பட்டிருந்தன என அய்யா நெடுமாறனையும், அறிஞர் வளர்மதியையும் ஆதாரமாக்கொண்டு மினர்வா சொல்வதும் தவறான செய்தியே. புலிகள் இயக்கத்தில் கலப்பு மணத்திற்கோ, விதவை மணத்திற்கோ தடையில்லை. ஆனால் அவை விதியாக்கப்பட்டிருந்தன – கட்டாயமாக்கப்பட்டிருந்தன என்பது தவறான செய்தியே. “சாதியக் குற்றங்களிற்குக் கடுமையான தண்டனைகளை வழங்கியதால் வெள்ளாளர்கள் புலிகளை எதிர்த்தார்கள்” என்பது சிறுபிள்ளைத்தனமான ஆய்வு. புலிகளின் மிகப் பெரிய ஆதரவுத்தளமே யாழ்ப்பாணத்து வெள்ளார்கள்தான். அவர்களைச் சாதிரீதியாகப் புண்படுத்தும் செயல்கள் ஒன்றையும் பெரிதாகப் புலிகள் செய்துவிடவில்லை. புலிகளின் ஆட்சிக் காலத்திலேயே நூற்றுகணக்கான கோயில்களும் பொது இடங்களும் தலித்துகளிற்குத் திறந்து விடப்படாமலேயேயிருந்தன. பத்திரிகைகளில் சாதிய விளம்பரங்களும் நல்லது கெட்டவற்றில் சாதியச் சடங்குகளும் நடந்துகொண்டுதானிருந்தன. யாழ் பல்கலைக் கழகத்திற்கு ஒரு தலித் துணைவேந்தராக ஆகமுடியவில்லை. வெள்ளாளர்களின் பெரும் எதிர்ப்பின் மத்தியில் யாழ் மத்திய கல்லூரியின் முதல் தலித் அதிபராகப் பதவியேற்ற கணபதி ராசதுரை புலிகளால் நடுத்தெருவில் சுடப்பட்டார். அதிபரின் கொலைக்குப் புலிகளின் ஆதரவாளர்கள் அப்போது ‘துரோகி’ என்ற காரணத்தைக் கற்பித்தார்கள். அதிபரின் துரோகம் எதுவென எவராலும் இதுவரை நிறுவமுடியவில்லை. அதிபர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோடு உறவு வைத்திருந்ததே கொலைக்கான காரணமெனில் இன்று யாழ்ப்பாணத்திலிருக்கும் ஒட்டுமொத்த அதிபர்களும் பேராசிரியர்களும் துணைவேந்தரும் போட்டுத்தள்ளப்பட வேண்டியவர்களே. ஏனெனில் அவர்கள் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்திக்காத நாட்களே இப்போதில்லை. அதிபரின் கொலை வெறும் அரசியல் படுகொலை மட்டுமல்ல. அது ஒரு தலித் கல்வியாளரையும், தலித் போராட்ட இயக்கத்தில் உருவாகி வந்த மூத்த போராளியையும் கொன்ற துரோகச் செயல்.
புலிகள் தீண்டாமைக் குற்றங்களிற்குத் தண்டனை வழங்கியதால் வெள்ளாளர்கள் புலிகளை எதிர்க்கவில்லை. ஏனெனில் புலிகள் வெள்ளாளர்களின் இறுகிய சாதிய இரும்புக் கோட்டையின் சுவரிலிருந்த பூச்சைத்தான் மெதுவாகச் சுரண்டிப் பார்த்தார்கள். இரும்புக் கோட்டையை ஆட்டவோ அசைக்கவோ புலிகள் தயாரில்லை என்பது வெள்ளாளர்களிற்குத் தெளிவாகவே புரிந்தது. அந்தக் கோட்டையையே அசைக்க முற்பட்ட கொம்யூனிஸ்டுகளையும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தையும் சமாளித்த வெள்ளாளர்களிற்கா சுவரின் பூச்சை மட்டுமே சுரண்டிப் பார்த்த புலிகளை டீல் பண்ணத் தெரியாது. ‘சாதியம் துப்பாக்கி நிழலில் பதுங்கிக்கொண்டது’ என்ற புதுமொழி அப்போது ஈழத்தில் உருவாகிற்று. புலிகளிற்கும் அப்போதைய பிரச்சினை தீர்ந்தால் போதும் என்றிருந்தது. ஏனெனில் சாதியொழிப்பு அரசியலில் ஈடுபட்டு பெரும்பான்மைச் சாதியினரான வெள்ளாளர்களிள் ஆதரவை இழக்க அவர்கள் ஒருபோதும் தயாராயிருக்கவில்லை.
“அகிலன் கதிர்காமர், சுசீந்திரன், டக்ளஸ் தேவானந்தா, ஷோபா சக்தி இவர்களின் சாதி பின்புலத்தைப் பார்த்தோமானால் எல்லோரும் ஆதிக்க சாதி வெள்ளாளர்கள், தலித் அரசியலை முன்வைத்து இவர்கள் புலிஎதிர்ப்பு பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்பதுவே மினர்வாவின் ஆய்வுரையின் முடிவுரை. இதுவும் தவறானது. மினர்வா பட்டியலிட்டிருக்கும் நால்வரிலும் சாதியொழிப்புக் குறித்த மரபான மார்க்ஸியக் கண்ணோட்டத்திலிருந்தும், மரபார்ந்த சமூக சனநாயக (Social Democracy) அரசியல் கண்ணோட்டத்திலிருந்தும் விடுபட்டு, இன்றைய தலித் விடுதலை அரசியல் போக்குடன் என்னை இணைத்துக்கொண்டவன் நான் ஒருவனே. மற்றவர்களது அரசியல் அக்கறைகளில் தலித் அரசியல் முதன்மையான இடத்திலில்லை. அம்பேத்கரியத்துடனோ பெரியாரியியலுடனோ அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதுமில்லை. மினர்வா இங்கே தந்திருப்பது அவர் சொல்லிக்கொண்டது போல தலித் அரசியலை முன்வைப்பவர்களின் பட்டியலை அல்ல. அவர் முன்வைத்திருப்பது புலிகளை எதிர்ப்பவர்களின் பட்டியலே. புலிகள் எதிர்ப்பை வைத்து அவர் தலித் அரசியலைச் சேறடிக்க முயல்கிறாரா அல்லது அல்லது தலித் அரசியலை வைத்து அவர் புலிகள் எதிர்ப்பு அரசியலைச் சேறடிக்க முயல்கிறாரா என ஒன்றுமாகப் புரியவில்லை. ஆனால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. முட்டாள் மலத்தில் கை வைத்தால் முப்பது இடத்திற்குச் சேதம்.
நான்கு வெள்ளாளர்களைப் பட்டியலிட்டு ஆகவே வெள்ளாளர்கள் புலிகளை எதிர்க்கிறார்கள் என்ற முடிவிற்கு வருகிறார் மினர்வா. புலிகளைக் கடுமையாக எதிர்த்து நின்ற நானூறு தலித்துகளின் பட்டியலை நான் தரவா? அதேபோன்று தீவிரமாகப் புலிகளை ஆதரிக்கும் நான்காயிரம் வெள்ளாளர்களின் பட்டியலை நான் அசராமல் போட்டுக்காட்டவா.? அதேபோல் புலிகளால் கொன்றொழிக்கப்பட்ட தலித் தலைவர்களை நான் பட்டியலிடவா? ஆனால் இந்தப் பட்டியலிடல்கள் மூலம் ஈழத்துச் சாதியமைப்பு மற்றும் புலிகளும் சாதியமும் என்ற மிகச் சிக்கலான விடயத்தை மினர்வா நினைப்பது போல அவ்வளவு சுலபமாக அவிழ்த்துவிட முடியாது. மினர்வா இட்ட பட்டியல் வெறும் சேறடிப்பின்றி வேறில்லை. அந்தப் பட்டியலிலிருந்து மினர்வா கட்டியெழுப்பிய கட்டுரை அறியாமையல் நிறைந்த குப்பையைத் தவிர வேறில்லை. இந்த லட்சணத்தில் மினர்வாவின் கட்டுரையால் ‘முகமுடிகள் கிழிந்து தொங்குகினறன’ என்றொரு அறிவுசார் உரிமைகோரல் வேறு. என்னவொரு கொழுப்பு!
“பிரபாகரன், தமிழ்ச்செல்வன் ஆகியோரின் ஒடுக்கப்பட்ட சாதிப் பின்புலம் குறித்தும், புலிகளின் சாதியொழிப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேச வேண்டிய அவசியம் இங்கிருக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கு இருக்கிறது” என்கிறார் மினர்வா. அய்யோ! அந்தச் சிரமமெல்லாம் மினர்வாவிற்கு வேண்டாம். இவை குறித்தெல்லாம் நான் ‘வேலைக்காரிகளின் புத்தகம்’ கட்டுரைத் தொகுப்பில் விரிவாகவே பேசியுள்ளேன். பிரபாகரன், தமிழ்ச்செல்வன் ஆகியோரின் சாதியப் பின்னணிகள், அந்தச் சாதியடையாளங்களால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், புலிகளின் சாதியொழிப்பு நடவடிக்கைகள், அவற்றின் போதாமைகள் குறித்தெல்லாம் அந்த நூலிலும் தமிழகத்தின் சிறுபத்திரிகைகளிற்கு வழங்கிய நேர்காணல்களிலும் (புதுவிசை, புதிய கோடாங்கி, அம்ருதா, தீராநதி, புத்தகம்பேசுது ) நான் நிறையவே பேசியிருக்கிறேன். ‘புதிய சனநாயகக் கட்சி’யின் மூத்த தோழர்கள் சி.கா. செந்திவேலும் ந. இரவீந்திரனும் இணைந்து எழுதிய ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ நூலும் இப்பிரச்சினைகள் குறித்த சிறப்பான ஆவணமே. இந்த நூலும் வேலைக்காரிகளின் புத்தகமும் தமிழகத்தின் முக்கிய பதிப்பகங்களால் தமிழகத்திலேயே வெளியிடப்பட்டு தற்போதும் விற்பனையில் இருப்பவை. மினர்வா இவற்றைத் தேடிப் படிக்க வேண்டும்.
தோழர்கள் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். புலிகள் இயக்கத்தை ஆதிக்கசாதி வெள்ளாள இயக்கமாகவோ, புலிகள் இயக்கத்தின் தலைவரை வெள்ளாள ஆதரவாளராகவோ, புலிகள் இயக்கத்திற்குள் சாதிய ஏற்றத் தாழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டதாகவோ நான் ஒருபோதும் பேசியதில்லை. மாறாக இத்தகையை குற்றச்சாட்டுகளை நான் மறுக்கவே செய்துள்ளேன். ஈழத் தமிழர்களின் வரலாற்றில் அதுவரையான வெள்ளாளத் தலைமைகளை உடைத்து எழுந்த முதலாவது வெள்ளாளரல்லாத தலைமையைக் கொண்ட இயக்கம் புலிகள் இயக்கமே என்றும் புலிகளின் தலைவர் தனது இளமைக்காலம் முதலே வெள்ளாளர்களின் சாதி ஆதிக்கத்தின்மீது எதிர்ப்புணர்வு கொண்டவர் என்பதையும் நான் பதிவு செய்திருக்கிறேன். எனது விமர்சனமெல்லாம் புலிகள் இயக்கம் சாதியொழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டவில்லை என்பதாகவும், சாதியொழிப்பை தமது அரசியல் வேலைத்திட்டத்தில் முதன்மையானவற்றில் ஒன்றாகப் புலிகள் சேர்த்துக்கொள்வில்லை என்பதாகவும், புலிகள் ஈழத்திலிருந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கங்களைத் தடை செய்ததைக் கண்டிப்பதாகவும், சாதிய முரண்கள் கூர்மைப்பட்டபோதெல்லாம் புலிகள் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கத்திலிருக்காமல் ஒதுங்கி நின்றதையும், அது ஒடுக்கும் சாதிகளிற்கு வசதியாகிப் போனது என்பதைச் சுட்டுவதாகவும், புலிகள் இயக்கத்தின் இந்துமதச் சாய்வை விமர்சிப்பதாகவுமே இருந்தது. புலிகளின் இந்தப் போக்கு பல சமயங்களில் சாதிய முரண்களில் அவர்களை ஆதிக்க சாதியினர் பக்கம் தள்ளியும்விட்டது. அதற்கான தக்க சான்றுதான் யாழ் பொது நூல்நிலையத்தை யாழ்ப்பாணத்தின் முதலாவது தலித் மேயரான செல்லன் கந்தையனின் தலைமையில் திறந்து வைக்கக் கூடாது என ஆதிக்க சாதிகள் தடுத்தபோது புலிகளும் ஆதிக்க சாதியினரின் பக்கம் நின்று அந்தத் திறப்பு விழாவை ஆயுதமுனையில் தடுத்து நிறுத்திய சம்பவம். இந்த நியாயமான விமர்சனங்களைப் புலி எதிர்ப்பு என மினர்வா குறுக்கிப் பார்ப்பதும் கொச்சைப்படுத்துவதும் அவரின் தலித் அரசியல் மீதுள்ள அக்கறையைக் காட்டுகிறதா அல்லது புலிகளை இந்த விமர்சனங்களிலிருந்து காப்பாற்றி விடவேண்டும் என்ற அவரின் பதற்றத்தைக் காட்டுகிறதா என்பதைத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.
“புலிகள் தமது கட்டுப்பாட்டுப் புகுதிகளில் தீண்டாமையை முற்றிலும் ஒழித்துவிட்டிருந்தார்கள்” என நெடுமாறனை ஆதாரம் காட்டி மினர்வா சொல்வதும் தவறான செய்தியே. சி.கா.செந்திவேலும் இரவீந்திரனும் தங்களது நூலில் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்: “இயக்கங்களின் துப்பாக்கிகளுக்கு முன்பாக சாதியம் பதுங்கிக்கொண்டது போல் காட்டிக்கொண்டது. சில சந்தர்ப்பங்களில் பின்வாங்கியிருப்பினும் அதே துப்பாக்கிகள் மறைமுகமாகச் சாதியத்திற்குத் துணைநின்று பாதுகாத்த சம்பவங்களும் இடம் பெற்றன. கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக (தமிழீழ விடுதலை) போராட்டக் காலகட்டத்தின் ஊடாகச் சாதியம் அற்றுப் போய்விட்டது என்றும் முன்புபோலத் தீவிரமாக இல்லை என்றும் கூறுவோர் இருக்கிறார்கள். இயக்க உறுப்பினர்கள் மத்தியில் போராளிகளிடையே அல்லது அதற்கு வெளியே சில கலப்புத் திருமணங்கள் சாதியம் கடந்த நிலையில் இடம்பெற்றிருக்கின்றன. அவை மறுப்பதற்குரியவை அல்ல. அத்தகைய நிலை வரவேற்கப்பட வேண்டியதாகும். அதேவேளை திருமணமாகிக் குழந்தைகள் பிறந்த பின்பு அவரவர் சாதி அறிந்து பிரிந்துபோன குடும்பங்களும் இருக்கின்றன. போராட்ட உச்சக்கட்டத்தில் காதல் திருமணம் செய்து பின் சமாதான காலத்தில் ஊர் உறவுகள் வந்தபோது சாதி அறிந்து பிரிந்து போன போராளிகளையும் தமிழர் சமூகப் பரப்பில் காண முடிந்துள்ளது. ( இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும், பக்: 218)
போராளி இயக்கங்கள் தமிழ்ச் சமூகத்தில் நிலைபெற்றதை 1980 எனக்கொண்டால் கடந்த முப்பது வருடங்களில் ஈழத்தில் சாதியம் தேய்வைடைந்துள்ளதா? ஆம் நிச்சயமாகச் சாதிய ஒடுக்குமுறையில் சிறியளவு முன்னேற்றகரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு , அரசியல் போன்ற துறைகளில் தலித்துகளிடையே விழிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த மாற்றத்திற்கும் புலிகள் அமைப்பிற்குமோ வேறு போராளி அமைப்புகளிற்குமோ எதுவிதத் தொடர்பும் கிடையாது. வேண்டுமானால் தலித் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களிற்கு இந்த அமைப்புகள் சிலசமயங்களில் செவி சாய்க்கும் நிலையேற்பட்டது எனச் சொல்லலாம். ஆனால் பல சமயங்களில் அவர்கள் கேளாச் செவியர்களாகயிருந்தார்கள் என்பதே வரலாறு.
தமிழ்த் தேசியப் போராட்டம் என்றொரு நிகழ்வே நடக்காதிருந்திருப்பின் இன்று சாதிய ஒடுக்குமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைவிட இன்னும் பலபடிகளில் சாதியமைப்பு வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டிருக்கும் என நான் துணிந்து சொல்வேன். போரினால் ஏற்பட்ட தொழிற்துறை வளர்ச்சி குறைவும் கல்விச் சிதைவும் இல்லாதிருப்பின் பொருள் உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் தலித்துகள் சாதியத் தொழில்களிலிருந்து இன்னும் வேகமாக விடுபட்டிப்பார்கள். புலிகளால் ‘சிறுபான்மை தமிழர் மகாசபை’ போன்ற சாதியொழிப்பு அமைப்புகளும் ‘வள்ளுவர் பேரவை’ போன்ற தலித் அமைப்புகளும் தடைசெய்யப்பட்டிருக்காவிட்டால் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் வீறார்ந்து கனன்ற தலித் மக்களின் உரிமைப் போராட்ட முன்னெடுப்புகள் இன்னும் பல வெற்றிகளைச் சாதித்திருக்கும். அந்த அமைப்புகளின் போராட்டம் இடஓதுக்கீடு, தனிவாக்காளர் தொகுதிகள் போன்ற சமூக நீதி உரிமைகளை நோக்கி முன்னேறியிருக்கும். வடபுலத்தில் பொதுவுடமைக் கட்சிகளின் அரசியலைப் புலிகள் தடைசெய்ததும் தலித் மக்களிற்குப் பேரிழப்பே. தலித் மக்களில் முன்னணிப் போராட்டச் சக்திகளும் பெரும்பான்மைத் தலித் மக்களும் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே தங்களைப் பொதுவுடமைக் கட்சிகளுடனேயே இணைத்திருந்தவர்கள். அந்த இணைவின் மூலம் குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றிகளையும் உரிமைகளையும் தலித் மக்கள் வென்றெடுத்திருந்தார்கள். போராளி இயக்கங்களின் வேகமான வளர்ச்சி தலித்துகளின் உரிமைப் போராட்டத்தைச் சீரழித்தது எனில் புலிகளின் அதீத வளர்ச்சி தலித் போராட்ட அமைப்புகளை முடக்கிப் போட்டது. சாதி ஒழிப்பிற்காகவும் உரிமைகளிற்காகவும் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ஆயுதம் தரித்துக் களத்தில் நின்றவர்களின் சந்ததியினர் சந்தர்ப்பவாத போராளி இயக்கங்களிற்குள் உள்வாங்கப்பட்டதும் குறிப்பாகப் புலிகள் என்ற பாஸிச இயந்திரத்தின் பற்சக்கரங்கள் ஆக்கப்பட்டதும் ஈழத்துத் தலித் சமூகத்திற்கு வீழ்ச்சியே. இவ்வாறு நான் சொல்வதை தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்தையே நான் நிராகரிக்கிறேன் என்றவாறு நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். தமிழ் தேசிய இனப் போராட்டத்தை முன்னெடுத்த தலைமைகள் சாதியொழிப்பு விடயத்தில் இழைத்த தீங்குகளையும் அதனால் தலித்துகளிற்கு ஏற்பட்ட பின்னடைவையும் சுட்டிக்காட்டவே நான் இவ்வாறு சொல்ல நேர்ந்தது.
பேராசிரியர் சி. சிவசேகரம் சொல்வதைக் கவனியுங்கள்: “இன்று சிலர் வேண்டுமென்றும் சிலர் அறியாமையாலும் சாதியம் ஒழிந்து விட்டதென்றும் தமிழ்த் தேசியமே அதை முறியடித்தது என்றும் பேசுகின்றனர். இரண்டுமே பொய்யானவை. சாதியம் இன்னும் ஒழியவில்லை. அதற்கான சான்றுகளும் வெளிவெளியாகவே உள்ளன. ஆயினும் சாதிய ஒடுக்குமுறைக்குச் சாவுமணி அடிக்கப்பட்டாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். அந்த வெற்றிக்குத் தமிழ்த் தேசியம் எந்தவகையிலும் பங்களிக்கவில்லை. அதை இயலுமாக்கியவர்கள் தாழத்தப்பட்ட வெகுசனங்களும் அவர்களோடு இணைந்து நின்று போராடிய நேர்மையான இடதுசாரி, முற்போக்குச் சக்திகளுமேயாவர்” ( ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ நூலின் முன்னுரை, பக்: 08).
சாதியொழிப்பில் புலிகளின் வகிபாகம் என்ன என்பது இப்போதாவது மினர்வாவிற்குப் புரிந்திருக்கும் என நம்புகிறேன். ஏனெனில் தோழர்கள் சி. கா. செந்திவேலும் ந. இரவீந்தரனும் சி. சிவசேகரமும் நம்மைப் போன்று பின்நவீனத்துவம் பேசுபவர்களோ புலம் பெயர்ந்து வந்துவிட்ட ‘புலி எதிர்ப்பாளர்களோ’ கிடையாது. அவர்கள் மண்ணில் வேரூன்றி நின்று போராடும் மார்க்ஸியர்கள். எனவே மினர்வா காழ்ப்பும் முன்முடிவுகளும் இன்றி அவர்களின் கருத்துகளைப் பரிசீலிப்பார் என்றே நம்புகிறேன்.
இன்னொரு விடயத்திலும் தோழர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். தமிழகத்துப் புலி ஆதரவாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களைத் திராவிட இயக்க மரபில் அடையாளப்படுத்துபவர்கள். இப்போது சீமான் போன்றவர்கள் திராவிடக் கருத்தியலை எதிர்த்துப் பேசினாலும் மேடைக்கு மேடை நாங்கள் பெரியார்களின் பேரர்கள் என அவர்கள் முழங்கத் தவறுவதேயில்லை. ஆனால் இவர்கள் புலிகள் இயக்கம் இந்து மதத்தை எவ்வாறு எதிர்கொண்டது அல்லது உள்வாங்கிக்கொண்டது என்பதைக் கவனிப்பதேயில்லை. தப்பித் தவறி அவ்வாறு கவனிப்பவர்களும் புலிகளைக் காப்பாற்ற குறுக்கு வழிகளைக் கண்டுபிடிக்கிறார்களே அல்லாமல நிதர்சனத்தைப் பேசத் தயங்குகிறார்கள். ஆற்றாக் கட்டத்தில் ‘என்னயிருந்தாலும் அவர்கள் களத்திலிருந்து மாண்டவர்கள்’ எனத் துருப்புச் சீட்டை வீசுகிறார்கள். மன்னிக்கவும் தோழர்களே! இப்போது மகிந்த ராஜபக்சவும் போரில் மரணமடைந்த இராணுவ வீரர்களைத் தேசிய வீரர்களென்றும், போர்க்குற்ற விசாரணைகள் வீரர்களை அவமதிக்கும் செயலெனவும் பேசுகிறார். இரண்டு குரல்களுக்குமிடையில் சீனப் பெருஞ்சுவர் ஏதும் கிடையாது என்றே நான் கருதுகிறேன். எவரொருவருடைய மரணமும் நம்மை வருத்துபவைதான். ஆனால் அந்த வருத்தத்தின் சுமையினால் நாம் உண்மைகளைப் பேச மறுப்போமென்றால் அது நமது எதிர்காலச் சந்தததியினருக்கு நாமிழைக்கும் அரசியல் துரோகம் மட்டுமல்லாமல், நமக்கு நாமே இழைத்துக்கொள்ளும் மனச்சாட்சித் துரோகமுமாகும்.
சாதியத்தின் மூலவேரே இந்து மதமும் அதனது வர்ணாசிரம அடிப்படையும் என்பது அம்பேத்கரினதும் பெரியாரினதும் ஆய்வுகள். இன்று சில நவீன ஆய்வாளர்கள் இதை மறுத்து, நமது சமூகத்தின் வித்தியாசம் வித்தியாசமான பழங்குடிகள் மரபே சாதியப் பிரிவினைக்கான அடிப்படை எனச் சொல்கிறார்கள். என்ற போதும் அவர்களும் இன்றைய சாதியமைப்பு முறை நீடிப்பதில் இந்து மதத்தின் முதன்மையான பங்கை மறுப்பதாயில்லை. அம்பேத்கர் சொல்வதைக் கவனியுங்கள: “சாதி என்ற கண்ணோட்டத்தை இந்துகளின் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிற இந்து மதமே தவறானது என்று நான் கருதுகிறேன். நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்களல்ல. சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாத்திரங்களே உங்களின் பயங்கர எதிரி. சமபந்தி விருந்தில் கலந்து கொள்ளாதவர்களையும் கலப்புமணம் செய்யாதவர்களையும் விமர்சிப்பதும் கேலி செய்வதும் அல்லது எப்போதாவது சில சமயங்களில் சமபந்தி விருந்தை நடத்துவதும் கலப்பு மணவிழாவைக் கொண்டாடுவதும் வீண் வேலையாகும். சாத்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கையை அழித்தொழிப்பதுதான் சாதியை ஒழிக்கும் உண்மையான வழிமுறை. மக்களுடைய கருத்துகளும் நம்பிக்கைகளும் இப்படித்தான் இருந்தாக வேண்டும் என்று வடிவமைக்கும் வேலையைச் சாத்திரங்கள் இடைவிடாமற் செய்துவருகின்றன. இதை இனியும் நீங்கள் அனுமதித்துக்கொண்டிருந்தால் சாதியை ஒழிப்பதில் நீங்கள் எவ்விதம் வெற்றிபெற முடியும்?”
கலப்பு மணங்களும் கலந்துண்ணலும் தீண்டாமையை ஒழிக்கச் சட்டம் செய்வதும் சாதியத்திற்கு முடிவுகட்டி விடாது. ஈழத்து அரசியலில் 1920ல் ‘யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்’ உருவான காலம் தொட்டு இத்தகைய சீர்திருங்கள் நடைமுறைக்கு வர ஆரம்பித்தன. 1957ல் இலங்கையில் சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் தீண்டாமையைச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது.
எனவே இத்தகைய சீர்திருத்தங்களைப் புலிகளே முதலில் ஆரம்பித்தார்கள் என்பதெல்லாம் சரியாகாது. புலிகள் பெயரளவிலாவது அறிவித்த இந்தச் சீர்திருந்தங்கள் சாதியத்திற்கு முடிவு கட்டிவிடும் வல்லமையற்றவை. சாதியத்தை ஒழிப்பதற்கான சமூக விஞ்ஞான மார்க்கத்தின் முதற்படியே இந்துத்துவ எதிர்ப்புத்தான். ஆனால் புலிகள் இந்துத்துவத்தை எதிர்ப்பதற்கு மாறாக அதை வளர்க்கும் முயற்சியிலேயே ஈடுபட்டார்கள். புகலிட தேசங்களில் அவர்கள் இந்துக் கோயில்கள் அமைத்ததையும் அங்கே பார்ப்பன – சமக்கிருத வழிபாட்டு முறைமைகளை பயன்படுத்தியதையும் வெறும் வியாபார ‘டெக்னிக்’காக சித்திரிக்கும் புலி ஆதரவாளர்களுமுள்ளனர். அதை உண்மையென ஏற்பதென்றால் கூட இந்த வியாபாரத்தின் பின்னே எவ்வளவு பெரிய தலித் துரோகம் மறைந்துள்ளது என்பதை நாம் சுட்டிக்காட்டமலிருக்க முடியாது. புலிகள் இந்து மத ஒழிப்பிற்காகச் சிறு துரும்பையும் கிள்ளிப் போட்டவர்களல்ல. செயற்பாடவோ கோட்பாடாகவோ அல்ல, வெறும் உரையாடலாகக் கூட அவர்கள் அதை நடத்தியதில்லை. புலிகளின் தலைவரின் திருமணம் மட்டுமல்லால் அநேக புலிப் போராளிகளின் திருமணங்கள் இந்து வைதீக முறையிலேயே நடைபெற்றன என்பதும், இந்தகையை யாழ் இந்து மரபில் பேணக்கூடிய பிற்போக்குத்தனங்களைப் புலிகள் கடைப்பிடித்ததை மிகப் பெருமையுடன் அன்ரன் பாலசிங்கம் ஆனந்தவிகடன் நேர்காணலில் (24.04.2006) சொல்லி வைத்ததும் இங்கு கவனிக்கத்தக்கன. “மத நீக்கமின்றி சாதியொழிப்பு மட்டுமல்ல சனநாயகமும் சாத்தியமில்லை” என்பார் பெரியார். இதையெல்லாம் கணக்கிலெடுக்காமல் புலிகள் சாதியத்தை ஒழித்துவிட்டார்கள் அல்லது ஒழிக்க முற்பட்டார்கள் என்றெல்லாம் பேசுவது எவ்வளவு பேதமை.
ஈழத்தில் தோன்றிய எல்லாத் தமிழீழப் போராளி இயக்கங்களும் சோசலிச முழக்கங்ளை வாயில் உச்சரித்தவாறே தோன்றின. அப்பட்டமான வலதுசாரிக் கட்சியான ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ (TULF) கூட ‘சோஸலிசத் தமிழீழம்’ என்றே வட்டுக்கோட்டையில் தீர்மானம் போட்டது. எழுபதுகளின் அரசியல் சூழல்கள் அவர்களை அவ்விதம் உச்சரிக்குமாறு கட்டாயப்படுதின. எனினும் இந்த சோஸலிச உச்சாடனத்தைக் கைவிட்டு முதலில் தம்மை அதி வலதுசாரிகளாகவும் பொதுவுடமை எதிர்ப்பாளர்களாகவும் மூர்க்கமாக வெளிப்படுத்தியவர்கள் புலிகளே. புலிகளின் இந்த அதி வலதுசாரிய, பொதுவுடமை எதிர்ப்புப் பண்பும், புலிகளின் இறுக்கமான இராணுவ ஒழுங்கும், சாதிய முரண்களில் புலிகள் பெரும்பாலும் மதில்மேல் பூனையாக மவுனித்திருந்ததும், அந்தப் பூனை பலசமயங்களில் வெள்ளாளர்களின் வீட்டுப் பக்கமாகவே தாவியதும் தமிழ் ஆதிக்க சக்திகளைக் கவர்ந்தன. ஈழத்தின் பெரும்பான்மையான வெள்ளாளர்களும், முதலாளிகளும், மத நிறுவனங்களும், பல்கலைக் கழகச் சமூகமும் புலிகளின் தலைமை வெள்ளாளரல்லாத தலைமையாக இருந்தபோதிலும் புலிகளையே பலமாக ஆதரித்தார்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கத்தின் தலைமை வெள்ளாளத் தலைமையாக இருந்தபோதும் அவர்கள் எண்பதுகளின் பிற்பகுதிவரை பேசிவந்த பொதுவுடமைக் கருத்துகளும் தலித் சமூகத்தில் அவர்களுக்கிருந்த அரசியல் அடித்தளமும் வெள்ளாளர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை ‘பள்ளர் – பறையர் கட்சி’யென பேசி அந்த இயக்கத்தை நிராகரிக்கக் காரணங்களாயிருந்தன. புலிகள் ஒரு முனையெனில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மறுமுனை. இந்த இரண்டு முனைகளுக்குமிடையில் ஊசலாடியவை மற்றைய இயக்கங்கள். இறுதியில் புலிகளே பெரும்பான்மை வெள்ளாளர்களின் மனதைக் கொள்ளைகொண்டார்கள். 1986ல் புலிகள் மற்றைய இயக்கங்களை ஈழப் புலத்திலிருந்து வன்முறையாக அகற்றியதற்குப் பின்னான நிலமைகள் வேறு. அப்போது தமிழீழ விடுதலை வேண்டிக் களத்தில் இறங்கியவர்களிற்குப் புலிகளைத் தவிர வேறு போக்கிடமில்லை. ஈழத்தின் சாதியப் பிரச்சினையில் விடுதலை இயக்கங்களின் பாத்திரங்களை இவ்வாறு மதிப்பிடுவதே சரியானதென நான் கருதுகிறேன்.
புலிகள் மீது இவ்வாறு திரண்டிருந்த சாதிவெறி வெள்ளாளர்களின் ஆதரவுத்தளம் இன்றுவரை அவ்வாறு நீடிப்பதையும் பொதுவுடமைக் கட்சிகள் மீதும் ஈ.பி.ஆர்.எல்.எவ் மீதும் அதனிலிருந்து கிளைத்த அமைப்பான ஈ.பி.டி.பி மீதும் சாதிவெறி வெள்ளாளர்களின் பகைமை சாதிய அடிப்படையில் இன்றுவரை நீடித்திருப்பதையும் நாம் அவதானிக்கலாம். பொதுவுடமைக் கட்சிகளும் ஈ.பி.ஆர்.எல்.எவ் – ஈ.பி.டி.பி போன்ற அமைப்புகளும் பல்வேறு அரசியல் காரணிகளிற்காக விமர்சிக்கப்பட வேண்டியிருக்கும் அமைப்புகள்தான். ஆனால் அவர்கள் மீது சாதிய அடிப்படையில் சுமத்தப்படும் பகைமை இழிவானது. இன்று ஆதிக்கசாதித் தரப்புகள் வெள்ளாளத் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் நாடு கடந்த அரசாங்கத்திடமும் வெள்ளாளத் தலைமைகளால் நிரப்பப்பட்டிருக்கும் தமிழரசுக் கட்சியிடமும் தமது ஆதரவைக் குவித்திருக்கிறார்கள். எனினும் இன்று புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த ஆதிக்கசாதித் தரப்புகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்குக் காரணமாகப் புலித் தலைமையின் சாதியைக் குறிவைத்து சாதியச் சேறடிப்புகளை வீசும் நிலை உருவாக வெகுகாலம் எடுக்கப்போவதில்லை. சாதியொழிப்பில் மெத்தனமாகப் புலிகள் இருந்ததின் வரலாற்றுத் தவறை அப்போதாவது வெள்ளாளர்களல்லாத புலிகளின் ஆதரவாளர்கள் உணரக்கூடும். ஆதிக்கசாதி வெள்ளாளர்களின் தொடச்சியான ஒடுக்குமுறைகளைச் சந்தித்த கரையார் சாதியினர் உள்பட்ட இடைநிலைச் சாதியினர் சாதியொழிப் பு அரசியலில் அக்கறை காட்டாமல் இருந்ததை எவ்வாறு புரிந்துகொள்வது? இதைத் தலித் அரசியல் அறிக்கை (விடியல் பதிப்பகம் 1995) இவ்வாறு விளக்குகின்றது: “சாதியத்தின் ஒரு தனித்துவமான பண்பு ஒவ்வொருவனையும் ஒரு சாதியானாக உணர வைப்பதுதான், சாதியாக உணர்வதென்பது ஒரு சாதிக்குக் கீழாக உணர்வது மட்டுமல்ல இன்னொரு சாதிக்கு மேலாக உணருவதும்தான்”.
மினர்வா எழுதிய கட்டுரையிலுள்ள தவறுகளையும் சோடிப்புகளையும் சேறடிப்புகளையும் தொகுத்துச் சொன்னேன். இதற்கு பதிலையோ விளக்கத்தையோ நான் மினர்வாவிடமிருந்து எதிர்பார்ப்பதாயில்லை. மாதனமுத்தாக்களின் அரசியல் வழிகாட்டலை எதிர்பார்த்து இரந்து நிற்கும் கேவலம் இன்னும் ஈழத்தவர்களிற்கு ஏற்பட்டுவிடவில்லை. இதற்காக எடுத்தடிமடக்காக ஈழம் – இந்தியா என எல்லைக்கோட்டை நான் வகுப்பதாகக் கருதிவிட வேண்டியதில்லை. அம்பேத்கரையும் அயோத்திதாசரையும் பெரியாரையும் அ.மார்க்ஸையும் எஸ்.வி. ராஜதுரையையும் ராஜ்கவுதமனையும் காஞ்சா அய்லைய்யாவையும் விடாமல் பயில்பவர்கள் நாங்கள். மினர்வா தனது கட்டுரை நெடுகிலும் ‘தீண்டத்தகாதவர்’ என்ற சொல்லாடலையே உபயோகிக்கிறார். தலித் அரசியல் விழிப்புணர்வின் பின்பு ‘தீண்டத்தகாதவர்’ என்ற ஆதிக்கசாதியச் சொல்லாடலிற்கு எதிராகத் ‘தீண்டப்படாதவர்’ என்ற சொல்லாடல் தலித் அரசியலில் நிறுத்தப்பட்டிருக்கிறது என்ற அரசியல் அகரத்தைக் கூட அறியாமலிருப்பவர் மினர்வா. இத்தகைய அறியாமையுடனும் அய்யா நெடுமாறன், அரைகுறை அறிஞர் வளர்மதி போன்றோரின் ஆதாரத்துடனும் பொய்யான கட்டுரை ஒன்றையே மினர்வா படைக்க முடியும். இத்தகைய சவடால் பேர்வழிகளின் வழிகாட்டலில் அல்லாமல் தனது சொந்தத் தேடலுடனும் ஆழ்ந்த வாசிப்புடனும் எதிர்காலத்தில் மினர்வா எழுத முயற்சிக்க வேண்டும். அப்போது வேண்டுமானால் ஈழத் தமிழர்களிற்கு மினர்வாவின் கட்டுரைகள் பயனுடையதாக அமைய வாய்ப்பிருக்கிறது. மறுபடியும் சொல்கிறேன், நானொரு அசாதரண நம்பிக்கைவாதி.
இவ்வளவு தருக்க ஓட்டைகளும் தவறான தரவுகளுமுடைய மினர்வாவின் கட்டுரை, கருத்துப் பலத்தால் அல்லாமல் அக்கட்டுரையில் வீசியிறைக்கப்பட்ட அரசியல் அவதூறுகளின் பலத்தாலேயே இணையப்பரப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது மினர்வாவுக்குக் கிடைத்த வெற்றியல்ல, இது அவதூறு அரசியலிற்குக் கிடைத்த வெற்றி. இது கீற்று ரமேஷ் புளங்காகிதம் அடைவதைப்போல கொண்டாடத்தக்க வெற்றியல்ல. மினர்வா துக்கிக்க வேண்டிய சல்லித்தனமான வெற்றி.
அடுத்த பகுதியில் சந்திக்கலாம் தோழர்களே. அடுத்த கட்டுரையின் தலைப்பு ‘அவதூறுகளிலிருந்து தண்டனைகளை நோக்கி’!
“புலிகள் தீண்டாமைக் குற்றங்களிற்குத் தண்டனை வழங்கியதால் வெள்ளாளர்கள் புலிகளை எதிர்க்கவில்லை”என்ற தங்கள் கருத்துப் முற்றிலும் பிழையானது.
புலிகள் தீண்டாமைக் குற்றங்களிற்கு எப்பொழுதுமே தண்டனை வழங்கியது கிடையாது! சரித்திரத்தில் கிடையாது! தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார்கள். சில கட்டளைகளை அமுல்ப்படுத்தினார்களே தவிர அதற்காக தண்டனை எல்லாம் வழங்கும் அளவிற்குப் போகவில்லை. அதே நேரம் தண்டனை வழங்கியதால் வெள்ளாளர்கள் புலிகளை எதிர்க்கவில்லை என்பதும் படு பிழையான கருத்து! புலிகளை எதிர்த்தவர்கள் பலர் வேளார்கள் அல்லாதவர்கள் என்பது இங்கே கோடுகாட்டப்படவேண்டும். அதே நேரம் புலிகளுடன் ஆதரவாக செயற்பட்டவர்கள் பலர் வெள்ளாளர்கள் என்பதையும் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். புலிகளின் ஆதரவும் எதிர்ப்பும் சாதிய அடிப்படையில் என்றும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.
அரசியல் கோட்பாடுகளும் செயற்பாடுகளும் மட்டுமே இந்த ஆதரவு, ஆதரவின்மை என்பவற்றை முடிவுசெய்ததே தவிர , சாதிய கோட்பாடுகள்அல்ல என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
yes you are right i think also they are not fight with cast
யாழ்ப்பாண வெள்ளாளர்.
http://yaalppaanam.wordpress.com/