கீற்று இணையத்தளத்தில் 22 ஜுன் 2010 ல் “ஷோபா சக்தி – பிரபாகரன் பாசிஸ்ட், ரோகண புரட்சியாளன்” என்ற இன்னொரு அவதூறுக் கட்டுரை வெளியாகிற்று. அக்கட்டுரை நடராசன் என்ற பெயரில் எழுதப்பட்டிருந்தது. அவ்வை நடராசன், ஆயிஷா நடராசன், வெளிவட்டம் நடராசன், முதலியார் நடராசன், சசிகலா நடராசன் என்று பல நடராசன்களைப் பார்த்த தமிழ் உலகிற்கு இந்தக் கீற்று நடராசன் புதியவராகவேயிருந்தார். கீற்று நடராசனுக்கு அவதூறுப் பணியில் ஆழ்ந்த அனுபவம் இருக்கின்றது என்பதையும் வசைமொழியே அவரது தனிச் சிறப்பான எழுத்துப்பாணி என்பதையும் அவரின் கட்டுரை அறிவித்தது. கட்டுரை வெளியான சில நாட்களில், எனது நண்பன் ஒருவன் ‘அந்தக் கட்டுரையை நடராசன் என்ற பெயரில் எழுதியிருப்பது யார் என ஊகித்தாயா’ என மர்மப் புன்னகையுடன் என்னிடம் கேட்டான். வளர்மதியா என்றேன். ஆம் வளர்மதிதான் என்றான். எந்த வளர்மதியென்று நானும் கேட்கவில்லை. எந்த வளர்மதியென்று அவனும் சொல்லவில்லை. எனக்கு லிபி ஆரண்யாவின் கவிதையொன்று ஞாபகத்திற்கு வந்தது:
ஆதிமூலமா என்றேன்
ஆதிமுலம்தான் என்றான்
உள்மூலமா என நானும் கேட்கவில்லை
வெளிமூலமா என அவனும் சொல்லவில்லை
****
எனது ‘எம்.ஜி.ஆர். கொலை வழக்கு’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்தே கீற்றுவில் நடராசானார் அந்த அவதூறுக் கட்டுரையை எழுதினார். அந்தச் சிறுகதைத் தொகுப்புக் குறித்த நடராசனாரின் மதிப்பீடு இது: ” பத்து சிறுகதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பை ஒரே மூச்சில் வாசித்து முடித்ததும் எழுந்த முதல் மனப்பதிவு இதுதான். ‘ரம்ழான்’, ‘வெள்ளிக்கிழமை’, ‘திரு. மூடுலிங்க’ இந்த மூன்று சிறுகதைகள் தவிர்த்து தொகுப்பில் உள்ள மற்ற ஏழு சிறுகதைகளும் ஷோபாசக்தி அரசியல் களத்திலே செய்து வரும் புலி எதிர்ப்பு பிரச்சாரத்தின் இலக்கியச் சாயம் பூசிக் கொண்ட கதைகள் என்பதற்கு மேலாக எந்தத் தகுதியும் உடையவை அல்ல. மேலே சொன்ன மூன்று கதைகளை உத்தி பரிசோதனைக் கதைகள் என்ற நோக்கில் பார்த்தாலும் அசட்டுச் சிறுபிள்ளைத்தனமான பரிசோதனைகள் என்பதற்கு மேலாக எழுபவையும் அல்ல. மற்ற ஏழும் விஷம் தடவிய இனிப்பு.”
நடராசனாரின் இந்த மதிப்பீடு குறித்து நான் சொல்வதற்கு எதுவுமில்லை. எனது சிறுகதைகளிற்கும் நாவல்களிற்கும் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ எழுதப்பட்ட எந்த மதிப்புரைகளிற்கும் நான் இதுவரை பதில் சொன்னதும் கிடையாது. ‘எனது கதை சொல்லாத எதை என் கதைக்கு வெளியே நான் சொல்லிவிட முடியும்’ என்ற ஜெயகாந்தனின் வாக்கு எனக்கு வேதவாக்கு. ஆகவே பிரச்சினை தொகுப்பு மீதான நடராசனாரின் மதிப்பீடு குறித்ததல்ல. கட்டுரையில் மதிப்பீட்டிற்கு வெளியே அவர் செய்த அரசியல் திரிப்புகளும் அந்தத் திரிப்புகளின் அடிப்படையில் அவர் கட்டியெழுப்பிய அரசியல் அவதூறுகளுமே நமது பரிசீலனைக்குரியவை.
தொகுப்பிலுள்ள ‘பரபாஸ்’ கதை குறித்து நடராசனார் எழுதுகிறார்: “சந்தியாப்புலம், சந்தியோகுமையர் தேவாலயம், ஒரு மாய யதார்த்தவாதம் போலத் தொனிக்கும் அதிகாலைப் பொழுதுகளில் புரவியில் வலம் வரும் சந்தியோகுமையர் என்ற கிராமத்து மக்களின் ஐதீகம், கள்ளக் கபிரியல் என்ற வயதான நோஞ்சான் சிறு திருடன், வில்லியம் என்ற நாகரீக – படிப்பு வாசனை கிட்டிய சற்றே பெரிய கள்ளன் இவர்களைச் சுற்றிய ஒரு கதைப் புலம், வட்டார வழக்கு, இத்யாதி இத்யாதியான இலக்கியப் பூச்சுகள். சிறு திருட்டு பெரிய திருட்டாகும் போதோ, போலீஸ் வந்து மிரட்டிப் பறித்துக் கொண்டு போகும்போதோ ஊரை விட்டுப் போகாத கிராமத்தின் ஆன்மா, இயக்கம் வந்தபின் ஊரை விட்டு கடலுக்குள் கரைந்துவிடுகிறது.
இதிலே ஷோபாசக்தி நாசூக்காக வைக்கும் விஷம் என்ன? இயக்கம் எதிலே வருகிறது தெரியுமோ? வெள்ளை வேனில் வருகிறதாம். இதுதான் விஷம். ஈழத்து நடப்புகள் அறிந்தோருக்குத் தெரியும் வெள்ளை வேனில் வருவோர் யாரென்று. சிங்கள பாசிச அரசுக்கு எதிரானவர்களுக்கு முடிவு கட்ட பிள்ளையான் அனுப்பும் வேனை இயக்கத்தின் வேனாக திரித்துக் காட்டுகிறார். ஷோபாசக்தியின் கதைகளின் நாடித் துடிப்பு இதுதான்.”
ஆம் ஈழத்து நடப்புகள் அறிந்தோருக்கு வெள்ளை வேனில் வருபவர்கள் யாரெனத்தெரியும். அவர்கள் எப்போதிருந்து வெள்ளை வேன்களில் வருகிறார்கள் என்பதும் தெரியும். அது குறித்து நடராசனாருக்கு ஒரு பகுதி உண்மை மட்டுமே தெரிந்திருப்பதற்கு நாம் என்ன செய்ய முடியும்.
தமிழீழ விடுதலைப் போராளிகள் அமைப்பு வடிவமாகப் பலம்பெற்று பொதுமக்களிடையே சிவில் நிர்வாகத்தையும் அதிகாரத்தையும் நிலைநாட்டியது 84 – 85 காலப்பகுதியில். அந்தக் காலத்திலேதான் அவர்கள் சமூகத்திலே குற்றங்களை விசாரிக்கவும் தண்டனைகள் வழங்குவதையும் ஆரம்பித்தார்கள். யாழ்ப்பாணத்தின் மின்கம்பங்களில் விளக்கு எரிந்ததோ இல்லையோ ‘சமூகவிரோதி’ என்ற அட்டையுடன் சடலங்கள் நாள் தவறாமல் தொங்கத் தொடங்கியதும் அப்போதுதான். அந்தக் காலப் பகுதியில்தான் ‘பரபாஸ்’ கதை நடக்கின்றது. கதையில் வரும் இயக்கம் PLOTE , LTTE, TELO என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனெனில் அப்போதிருந்த பத்திற்கும் மேற்பட்ட இயக்கங்களும் இந்தகைய கொடுஞ் செயல்களைச் செய்தன. எனினும் கதையில் வரும் அந்த இயக்கத்தைப் புலிகள் இயக்கமாக நடராசனார் தனித்து அடையாளம் காண்பதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். வேண்டுமானால் ஒப்பீட்டளவில் இவ்வாறான அநீதிகளை மற்ற இயக்கங்களைக் காட்டிலும் அதிகமாகச் செய்தவர்கள் என்ற வகையில் புலிகள் இதற்குப் பொறுப்பாகக் கூடும். ஒருவேளை நான் புலிகளை மட்டுமே விமர்சித்து எழுதுகிறேன் என்று நடராசனார் முன் முடிவுகளோடு இருப்பதாலும் அவருக்கு அவ்வாறு குண்டக்க மண்டக்கத் தோன்றியிருக்கக் கூடும். ஆனால் தொகுப்பின் தலைப்புக் கதையான ‘எம்.ஜி.ஆர். கொலை வழக்கு’ கதையைப் படித்திருப்பின் அக்கதை ‘EPDP’ மீதான விமர்சனமே என்பதை அவர் நிதானமாகத் தெரிந்துகொண்டிருக்கலாம். நிதானிக்க எல்லாம் அவருக்கு ஏது நேரம்! அவர்தான் பரபரப்பாக முகப் புத்தகத்தில் வசைகளை இறைப்பதில் பிஸியாக இருக்கிறாரே. ‘அது முகப் புத்தகத்திற்கென்றே பிறந்த உயிரி’ எனச் சேனன் ‘எதிர்’ இணையத்தில் எழுதியிருப்பது சத்தியமாக நக்கலல்ல.
வெள்ளை வேனை பிள்ளையான்தான் அனுப்புவார் என்கிறார் நடராசன். அட அறிவுக்கொழுந்தே! 84- 85ல் இயக்கங்கள் யாழ்ப்பாணத்தில் உபயோகித்த வேன்களில் தொண்ணூறு சதவீதமானவை சிறியவகை வெள்ளை நிறமுடைய வேன்களே. இதை ‘ஹையேஸ்’ வேன் என்பார்கள். யாழ்ப்பாணத்தில் 80களில் மினி வேன்கள் போக்குவரத்தில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டபோது இத்தகைய வேன்களே அதிகமும் புழக்கத்திலிருந்தன. இயக்கங்கள் முதலில் வாகன உரிமையாளர்களிடமிருந்து வெள்ளை வேனைக் கடத்துவார்கள். பின்பு அந்த வேன்களில்தான் அவர்கள் தமது அரசியல் எதிரிகளையும் மாற்று இயக்கத்தவர்களையும் வர்த்தகர்களையும் பொதுமக்களையும் கடத்திச் சென்றார்கள். கொழும்பில் வெள்ளை வேன் கொலைக் கலாச்சாரம் அறிமுகமானது தொண்ணூறுகளில். ஆனால் இந்தக் கலாச்சாரம் யாழ்ப்பாணத்தில் எண்பதுகளிலேயே இருந்தது. வெள்ளை வேன் கலாச்சாரமொன்றும் அரசபடைகளினதோ பிள்ளையானினதோ கண்டுபிடிப்புக் கிடையாது. இதைச் சொல்வதும் ‘பராபாஸ்’ கதையின் நோக்கங்களில் ஒன்று.
“சிறு திருட்டு பெரிய திருட்டாகும் போதோ, போலீஸ் வந்து மிரட்டிப் பறித்துக் கொண்டு போகும்போதோ ஊரை விட்டுப் போகாத கிராமத்தின் ஆன்மா, இயக்கம் வந்தபின் ஊரை விட்டு கடலுக்குள் கரைந்துவிடுகிறது” என்று சுட்டிக்காட்டும் நடராசனார் “இலக்கிய இனிப்பு தடவி ஷோபாசக்தி கொடுக்கும் மெசேஜ் இதுதான்” என்று தீர்ப்பெழுதி பேனாவையும் குத்தி முறித்துவிடுகிறார்.
இயக்கங்கள் தங்களது அதிகார வெறியாலும் பிழைத்த சமூக நீதிகளாலும் எங்களது கிராமங்களின் ஆன்மாக்களைக் கடலுக்குள் கரைத்துவிட்டது குறித்து எனக்கு எதுவிதச் சந்தேகம் கிடையாது. ஒரு கோழி திருடியவன் என்று சந்தேகிக்கப்பட்டவனையும், ஒரு பூசணிக்காயைத் திருடியவன் எனச் சந்தேகிக்கப்பட்டவனையும், பாலியல் தொழிலாளி எனச் சந்தேகிக்கப்பட்டவரையும், கசிப்புக் காய்ச்சியவனையும் பொலிசார் கொலை செய்ததாக வரலாறில்லை. ஆனால் நமது இயக்கங்கள் அவர்களைச் சுட்டு மின்கம்பங்களில் தொங்கவிட்டார்கள். நடுததெருவில் போட்டு நிர்வாணமாக வதைத்து அவமானப்படுத்தினார்கள். “குற்றத்தைவிட அதற்கு வழங்கும் தண்டனைகளே அதிகமும் வெறுப்பூட்டக் கூடியவை” என்பார் அல்பேர் காம்யூ. அதைச் செய்தவர்கள் நமது இயக்கங்கள். அப்போதுதான் எங்களிது கிராமங்களின் ஆன்மா கடலிற்குள் சென்று ஒளிந்துகொள்ள எங்களது கிராமங்கள் செத்துச் சவங்களாகக் கிடந்தன.
அப்படியானால் இலங்கை அரசபடைகள் கூட்டுப் படுகொலைகள் செய்தபோது கிராமங்களின் ஆன்மா அழிந்து போய்விடவில்லையா எனக் கேட்டு நடராசனார் நாக்கு வளைக்கக் கூடும். அதற்கு அவர் தொகுப்பிலுள்ள ‘குண்டு டயானா’, ‘Cross Fire’ போன்ற கதைகளைப் படிக்கலாம் என அறிவுறுத்தலாம் எனப் பார்த்தால் அவர் தொகுப்பிலுள்ள கதைகளை ஒரே மூச்சில் படித்துவிட்டதாக வேறு சொல்கிறார். ஆனால் அவரின் வாசிப்பு முன் முடிவுகளைக் கொண்டவை என்பதையும், அவதூறுகளை உருவாக்கும் நோக்கில் நடத்திய மேலோட்டமான வாசிப்பே அவரது வாசிப்பு என்பதையும் Cross Fire கதை குறித்து அவர் எழுதியுள்ள வரிகள் நமக்கு அறிவிக்கின்றன:
நடராசனார் எழுதுகிறார்: “தொகுப்பின் முதல் சிறுகதை ‘Cross Fire’ ஒரு அரசியல் படுகொலை நிமித்தமான நினைவஞ்சலிக் கூட்டத்தில் பேசும் இடதுசாரி சிங்கள இதழாளரின் உரையாக நீளும் கதை. இரண்டாம் பத்தியிலேயே விஷம் தோய்ந்த வரலாற்றுத் திரிபு. அந்த ‘இடதுசாரி’ சிங்கள இதழாளர் பேசுகிறார்: ‘இங்கே பேசிய தோழர் ரகுநாதன் முஸ்லீம் மக்களை ஒடுக்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய இனத்தில் பிறந்ததற்குத் தான் வெட்கப்படுவதாகச் சொன்னார். அவரை அடியொற்றிச் சொன்னால் பெரும்பான்மைச் சிங்கள இனத்தில் பிறந்ததற்காக நான் குற்றவுணர்வு கொள்கிறேன்’.
எவ்வளவு பிரமாதமான அரசியல் நிலைப்பாடு என்று இடதுசாரிப் போக்குள்ள வாசகர்களுக்கு எடுத்த எடுப்பில் தோன்றும். ஷோபாசக்தியின் ’வெற்றி’யின் ரகசியமும் அதுதான். ஒரு சரியான அரசியல் நிலைப்பாட்டை வாய்ப்பாடாக கற்றுவைத்துக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல வரலாற்றைத் திரித்து ஒரு கதைக்களனை வடித்துக் கொள்வது. இங்கே திரிக்கப்பட்டுள்ள வரலாற்றுக் களன் என்ன?சிங்களவர்கள் தமிழர்களை ஒடுக்குகிறார்கள். தமிழர்கள் இஸ்லாமிய மக்களை ஒடுக்குகிறார்கள். இது சரிதானே? சிங்கள இனவெறி முஸ்லிம் மக்களை ஒடுக்கவில்லை என்ற பொருள் இதில் ஒளிந்து கொண்டிருப்பதுதான் விஷம் தடவிய வரலாற்றுத் திரிப்பு. அதை ஒரு சிங்கள இடதுசாரி கதாபாத்திரத்தின் கூற்றாகச் சொல்வது இன்னும் நுட்பமான திரிப்பு.”
நடராசனார் சொல்வதுபோல ஒரு அரசியல் படுகொலையின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் சிங்கள இடதுசாரி இதழாளர் பேசுவதாகக் கதை நீள்வதில்லை. ‘இலங்கையில் மனித உரிமை மீறல்களும் அதன் பரிமாணங்களும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றும் இலங்கை ஊடகச் சுதந்திரப் பாதுகாப்பு அமைப்பின் செயலாளரும் இடதுசாரிப் பத்திரிகையாளருமான உபுல் கீர்த்தியின் உரைவழியேயே கதை நீள்கிறது. நடராசனாரின் இந்தச் சறுக்கல் தற்செயலா அல்லது திரிப்பா என்பது கேள்வியாகவே உள்ளது.
கதை ஆரம்பிக்கும் களத்திலேயே இலங்கையின் இன்றைய மனிதவுரிமைகள் மீறல் நிலையையும் ஊடகச் சுதந்திரப் பாதுகாப்பின்மையையும் கதாசிரியர் சொல்லி விடுவதால் அதை மறைத்துக் கதாசிரியர் மீது ‘புலி எதிர்ப்பு ‘ மற்றும் ‘அரச ஆதரவு’ முத்திரைகளை ஆழமாகப் பதித்துவிடும் முயற்சியில் தான் இவ்வாறு ஒரு திரிப்பை நடராசனார் செய்துள்ளாரா என ஒரு நுட்பமான வாசகர் நடராசனாரிடம் கேட்கவும் கூடும். அவ்வாறு கேட்டால் கேட்கும் வாசகர் நடராசனாரிடம் ‘சைக்கிள் சீட் தலையா’, ‘முள்ளம் பன்றி மூக்கா’ எனக் கவுண்டமணி பாணியில் வசவுகளை வாங்கக் கூடும். அதற்குக் கதாசிரியர் எந்தவகையிலும் பொறுப்பாளியாக மாட்டார் என்பதையும் இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது கதையில் அந்தச் சிங்கள இடதுசாரி உபுல் கீர்த்தி “பெரும்பான்மைச் சிங்கள இனத்தில் பிறந்ததற்காக நான் குற்றவுணர்வு கொள்கிறேன்” என்கிறார். அது போதாதது போலத் தோன்றுகிறது நடராசனாருக்கு. உபுல் கீர்த்தி தமிழ் – முஸ்லீம் – மலையக – பரங்கிய – மலாய மக்களை ஒடுக்கும் பெரும்பான்மைச் சிங்கள இனத்தில் பிறந்ததற்காக நான் குற்றவுணர்வு கொள்கிறேன் எனச் சொல்லியிருந்தால் நடராசானார் சமாதானமடைவார் என நினைக்கிறேன். ஆனால் இலக்கியம் கோபித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஒரு அரசியல் கட்டுரைக்கும் ஒரு இலக்கியப் பிரதிக்குமான வேறுபாட்டை நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.
‘சிங்களப் பெரும்பான்மை இனத்தில் பிறந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன்’ என்ற குறிப்பான சொற்களே சிறுபான்மை இனங்களின் மீது சிங்களப் பெரும்பான்மை அரசியல் இழைக்கும் கொடுமைகளைத் தெளிவுபடுத்தி விடுகின்றன என்றே நான் நம்புகிறேன். இலக்கியப் பிரதி கோருவது சூக்குமமான சமிக்ஞைகளையே தவிர வழுவழுத்த பேச்சுக்களையல்ல. இதே கதையிலேயே இலங்கை இராணுத்தின் வதைச் சிறையான பூசா தடுப்பு முகாமில் ஒன்பது முஸ்லீம்கள் வதைக்கப்படுவதையும் நான் சொல்லியிருக்கிறேன். முஸ்லீம்கள் மீதான பேரினவாதத்தின் அடக்குமுறைகளை நான் மறைக்க முயற்சிக்கிறேன் என்றெல்லாம் நடராசனார் அங்கலாய்ப்பது அயோக்கியத்தனமே தவிர வேறொன்றில்லை. சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகத் தமிழீழப் போராளி அமைப்புகளில் இணைந்து ஆயுதம் ஏந்திப் போராடிய முஸ்லீம் தோழர் குறித்து கொரில்லா நாவலிலும் பதிவு செய்துள்ளேன் என்பதையும், வேறும் சில கட்டுரைகளில் ஈழப் போராட்டத்தில் இணைந்து முஸ்லீம்கள் போராடியதைப் பதிவு செய்துள்ளேன் என்பதையும் நடராசனாருக்கும் கீற்றுவிற்கும் நறுக்கென ஞாபகமூட்ட விருப்பம்.
கட்டுரையில் சிங்கள – முஸ்லீம் முரண்பாட்டைக் குறித்து நடராசனார் நீண்ட வகுப்பை நமக்கெடுக்கிறார். வகுப்பின் முடிவில் அவர் கூறும் தீர்ப்பின் சாரம் தமிழர்களிற்கும் முஸ்லீம்களிற்குமான பகைமையை இலங்கை அரசு திட்டமிட்டு வளர்த்தது என்பதே. அதிலெல்லாம் மாற்றுக் கருத்தே கிடையாது. தமிழர்களிற்கும் முஸ்லீம்களிற்கும் இடையில் மட்டுமல்லாமல் தமிழர்களின் பல்வேறு தரப்புகளிடையேயும் இலங்கை அரசு பகைமையைத் திட்டமிட்டு வளர்த்தது. ஆனால் இந்தப் பகைமைகளின் உருவாக்கத்தில் போராளித் தலைமைகளிற்கும் அவற்றை ஆதரித்து நின்ற அறிவுத்துறையினருக்கும் பங்கில்லையா? யாழ்ப்பாணத்திலிருந்து கட்டிய துணிகளோடு முஸ்லீம்களை விரட்டுமாறு இலங்கை அரசா பிரபாகரனுக்குப் பாடம் நடத்தியது? முஸ்லீம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை நிராகரித்து வடக்குக் கிழக்குக்கான ஏகபிரதிநிதியாய் தன்னை தானே தீர்மானித்துக்கொள்ளுமாறு இலங்கை அரசா பிரபாகரனுக்கு ஆலோசனை வழங்கியது? சிங்கள இனவாதத்தால் முஸ்லீம்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளையோ அல்லது முஸ்லீம் தரப்புகளால் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளையோ சுட்டிக்காட்டி, முஸ்லீம்கள் மீது தமிழ்த் தரப்புகளால் இழைக்கப்பட்ட கொடுமைகளை நேர்செய்ய முயல்வது தமிழ்ப் பாஸிசம்.
நான் எனது சிறுகதைத் தொகுப்பை இவ்வாறு சமர்ப்பணம் செய்திருந்தேன்: “தோற்றுப்போன புரட்சியாளன் ரோகண விஜேவீரவிற்கு இந்நூல் காணிக்கை”. இது நடராசனாருக்குப் பொறுக்கவில்லை. அவர் இவ்வாறு எழுதுகிறார்: “இறுதிவரை களத்தில் நின்று தன் பெண்டு பிள்ளைகளையெல்லாம் பலிகொடுத்தும் உறுதி குலையாமல் போராடிய பிரபாகரன் ஷோபாசக்திக்கு பாசிஸ்ட். தன் வாழ்நாளிலேயே சிங்கள இனவெறி நிலைப்பாட்டை எடுத்த ரோகண விஜேவீரே ஷோபாசக்திக்கு புரட்சியாளன். இனவெறி நிலைப்பாடு கொண்டவருக்கு இலக்கியம் சமர்ப்பணம்!”
எழுபதுகளின் முற்பகுதியில் இலங்கையின் அநேக இளைஞர்களிற்கு ரோகண விஜேவீர புரட்சியின் நட்சத்திரமாகவே தென்பட்டார். சேயின் மறுவடிவமாகவே அவர் இளைஞர்களால் கொண்டாடப்பட்டார். 1971ல் ஜே.வி.பி. நடத்திய கிளர்ச்சியை ‘சே குவேரா குழப்பம்’ என்றே கிராமப்புறங்களில் அழைத்தார்கள். எனது பதின்பருவ மனதின் ஓர் ஓரத்தில் ரோகண விஜேவீர மீதான ஈர்ப்பு இருந்துகொண்டேயிருந்தது. ஆனால் அந்தப் புரட்சியாளன் விரைவிலேயே தோற்றுப் போனான். அவனது புரட்சிகரத்தை இலங்கை அரசு அல்லாமல் அவனது தத்துவார்த்தத் தவறுகளே தோற்கடித்தன. சிறுபான்மையினரின் சுயநிர்ணய உரிமை குறித்து ஜே.வி.பி. தவறான நிலைப்பாட்டை எடுத்தது. அந்த நிலைப்பாடு ஒரு புரட்சிகர அமைப்பைக் காலப்போக்கில் முதிர்ந்த இனவாதிகளின் கூடாரமாக்கிற்று. அது என் இளமைக் காலத்தில் புரட்சியாளனாக என்னுள் பதிந்திருந்த ரோகணவிற்கு படுதோல்வி. அந்தத் தோல்வியாளனிற்கு நான் எனது இளவயது ஞாபகங்களுடன் எனது நூலைக் காணிக்கையாக்கினேன். வெற்றிபெற்றவர்களை விடத் தோல்வியடைந்தவர்களிற்கே காணிக்கை அவசியமாயிருக்கிறது.
‘தோற்றுப்போன புரட்சியாளன்’ என்ற எனது சொல்லாடலை இலங்கை அரசிடம் தோற்றுப்போன ரோகண விஜேவீரா என நடராசனார் நட்டாமுட்டித்தனமாக வாசித்திருப்பார் போலிருக்கிறது. ட்ரொட்ஸ்கி ‘காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி’ என்றொரு நூலை ஸ்டாலினை முன் வைத்து எழுதியிருப்பார். இதன் பொருள் ஸ்டாலின் புரட்சியை ஜார் வம்சத்திடமோ ஏகாதிபத்தியங்களிடமோ விலைபேசி விற்றுவிட்டார் என்பதல்ல. ஸ்டாலின் தனது தத்துவார்த்தத் தவறுகளால் புரட்சியின் பெறுபேறுகளைச் சீரழிக்கிறார் என்றே ட்ரொட்ஸ்கியின் நூல் தலைப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தட்டையான வாசிப்பும் பார்வையும் வசை பொழிய மட்டுமே உதவும்.
பிரபாகரன் மட்டும் பாஸிஸ்டா எனக் குதிக்கிறார் நடராசனார். ரோகண விஜேவீரவையும் பிரபாகரனையும் ஒப்பீடு செய்வதே தவறு. கல்வி கற்பதற்காக சோவியத் யூனியன் சென்றிருந்த ரோகண பொதுவுடமைக் கருத்துகளுடன் இலங்கைக்குத் திரும்பி வருகிறார். ஒரு தீவிர இடதுசாரியாக பொதுவுடமை இயக்கத்தில் அவர் இயங்குகிறார். பொதுவுடமை இயக்கத்திலிருந்து பிரிந்ததும் மக்கள் விடுதலை முன்னணியைக் கட்டியெழுப்பி ஏப்ரல் கிளர்ச்சியை நடத்துகிறார். பிரபாகரனின் அரசியல் நுழைவு அவ்வாறான ஒன்றல்ல. பிரபாகரன் இடதுசாரியும் கிடையாது, வலதுசாரியும் கிடையாது. அவர் வெறும் துப்பாக்கிதாரி மட்டுமே.
பிரபாகரனுக்குக் கூட எதிர்காலத்தில் ஒரு நூலை சமர்ப்பணம் செய்யலாம்தான். ஆனால் அவரைத் ‘தோல்வியடைந்த புரட்சியாளர்’ என்று பதிவு செய்ய முடியாது. ஏனெனில் அவரது தொடக்க காலத்திலிருந்து இறுதிவரை புரட்சியாளருக்கான ஒரு தடயத்தைக் கூட நான் அவரிடம் கண்டதில்லை. வேண்டுமானால் ‘வெற்றியடைந்த பாஸிஸ்ட்’ என்று அவரைச் சொல்லலாம். எனினும் வெற்றியடைந்தவர்களைவிடத் தோற்றுப் போனவர்களிற்கே எனது நூல்களைக் காணிக்கையாக்க நான் விரும்புகிறேன்.
தனது கட்டுரையில் எனது சிறுகதைகளிற்கு அப்பால், என்னை நோக்கி ஒரு கேள்வியைக் முன்வைக்கவும் நடராசனார் தவறினாரில்லை. உனக்குத்தான் வேலைவெட்டியே கிடையாதே அவ்வாறானால் உலகைச் சுற்றிவர உனக்கு விசாவும் பணமும் எங்கிருந்து கிடைக்கிறது என்பதே அவரது பொருள்முதல்வாதக் கேள்வி.
நான் வேலை செய்கிறேனா இல்லையா என்று கீற்று இணையத்தளம் தொடர்ச்சியாக விசாரித்துவரும் முறை பிரஞ்சு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் விசாரிப்பை விடக் கடுமையானது. விட்டால் எங்கேயாவது கட்டாய உழைப்பு முகாமில் என்னைத் தள்ளிவிட்டு விட்டுத்தான் கீற்று இணையத்தளம் மறுவேலை பார்க்கும் போலிருக்கிறது. முடிந்தளவிற்கு, கொடுமையான கூலியுழைப்புச் சுரண்டலுக்கு என்னை ஆட்படுத்தாமலேயே நான் சீவிக்க முயற்சிக்கிறேன். ஏனெனில் உழைப்பு என்பது வருத்தக்கூடியதாகவும் சலிப்பூட்டக் கூடியதாகவும் இல்லாமல் உழைப்பு என்பது உற்சாகமூட்டக் கூடியதாகவும் விளையாட்டைப் போன்று மகிழ்ச்சியான செயற்பாடாகவும் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். உழைப்பு என்பது ஒரு கலைச் செயற்பாட்டைப் போல ஆக்கபூர்வமானதாகவும் இன்பமானதாகவும் ஒருசேர அமைய வேண்டும். இல்லாதபட்சத்தில் நான் சோம்பேறியாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.
இந்தச் சிந்தனைகளை நான் போல் லஃபார்க்கிடமிருந்து பெற்றுக்கொண்டேன். போல் லஃபார்க் ‘The Right To Be Lazy ‘ என ஒரு நீண்ட கட்டுரையை எழுதியிருக்கிறார். இந்த போல் லஃபார்க் முதலாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவர்களில் ஒருவர், பாரிஸ் கம்யூன் உறுப்பினர்களில் ஒருவர், பேராசான் கார்ல் மார்க்ஸின் இரண்டாவது மகள் லோராவின் கணவர். இந்த நீள் கட்டுரை 1883ல் பிரஞ்சு சிறையில் வைத்து போல் லஃபார்க்கால் எழுதப்பட்டது. அவர் தனது கட்டுரையை லெஸ்ஸிங்கின் மேற்கோளொன்றுடன் தொடக்குகிறார். ” நாம் எல்லாவற்றிலும் சோம்பேறிகளாக இருப்போம், குடிப்பதிலும் காதல் செய்வதிலும் தவிர மற்றெல்லாவற்றிலும் நாம் சோம்பேறிகளாக இருப்போம்” (Let us be lazy in everything, except in loving and drinking, except in being lazy).
கார்ல் மார்க்ஸினது சிந்தனைகளைச் சரிவரப் பின்பற்ற முடியாவிட்டாலும் கார்ல் மார்க்ஸின் மருமகனின் சிந்தனைகளை நான் சரிவரவே கடைப்பிடித்து வருகிறேன் என்பதில் எப்போதுமே எனக்கொரு திருப்தியுண்டு. இதில் கீற்றுவிற்கும் நடராசனாருக்கும் என்ன அதிருப்தியுண்டு என எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.
அவ்வாறானால் பயணம் செய்யப் பணம் எங்கிருந்து வரும் என அவர்கள் கேட்கலாம். அதற்கு ஏற்கனவே அவர்களிற்குப் பதில் சொல்லியுள்ளேன். பயணம் செய்வதும் கிட்டத்தட்ட இலக்கியம் எழுதுவதுபோல ஒரு கலைதான். ஒரு சிறந்த கவிஞர் எவ்வாறு மிகக் குறைந்த சொற்களால் ஒரு மிகச் சிறந்த கவிதையை எழுதுவாரோ அதேபோல ஒரு சிறந்த ‘ட்ரவலர்’ பயணத்தின் இரகசியச் சூக்குமங்களைத் தெரிந்து வைத்திருப்பார். ஒரு கணினிப் பொறியியலாளருக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் அதிகாரிக்கும் வேண்டுமானால் இந்தச் சூக்குமம் தெரியாமலிருக்கலாம். ஆனால் இருபத்தைந்து வருடங்களாகத் தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருப்பவனுக்கு எவ்வாறு இந்தச் சூக்குமம் பிடிபடாமலிருக்கும். பெளலோ கொய்லோவின் ‘ரஸவாதி’ ( The Alchemist) நாவல் போன்றதுதான் வாழ்க்கையும். ஆனால் அதை நீங்கள் அனுபவிக்க சந்தியாகு போல அறுபது ஆடுகளையும் கருவிழி அழகி பாத்திமாவையும் இழக்கத் தயாராகயிருக்கவேண்டும்.
இவ்வளவுதான் பத்துக் கதைகளும் 150 பக்கங்கள் கொண்டதுமான அந்தச் சிறுகதைத் தொகுப்பிற்கு நடராசனார் எழுதிய விமர்சனம். ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கான நியாயமான விமர்சனம் இவ்வாறு இரண்டு கதைகளின் மொத்தமே மூன்று வரிகளையும் ஒரு அவதூறுக் கேள்வியையும் வைத்துச் செய்வதாயிருக்காது என்பதைத் தோழர்கள் அறிவீர்கள். இவ்வாறான ஒரு அரைகுறைக் கட்டுரையை ஏன் நடராசனார் எழுத வேண்டும். அதை ஏன் கீற்று அவசரமாக வெளியிட வேண்டும். அங்கேயிருக்கிறது கீற்று ரமேஷின் அவதூறு அரசியல்.
‘எம்.ஜி.ஆர். கொலை வழக்கு’ சிறுகதைத் தொகுப்பிற்கு 22 ஜுன் 2010 அன்று சென்னையில் ஒரு விமர்சன அரங்கைப் பதிப்பாளர் நீலகண்டன் ஏற்பாடு செய்திருந்தார். அன்று காலை நடராசனாரின் கட்டுரையைக் கீற்று வெளியிடுகிறது. விமர்சன அரங்கிற்கு ஏதோ கீற்றுவால் முடிந்த பணி. இவ்வாறான அரைகுறை விமர்சனங்களையும் அவதூறுக் கேள்விகளையும் கீற்றுத் தளத்தில் கிளப்புவதால் எனது இலக்கியச் செயற்பாடுகளிற்கு அவதூறுகளின் பலத்தில் ஊறுகளை விளைவித்துவிடலாம் என வரட்டுக் கற்பனையில் கீற்று ரமேஷ் அன்று மிதந்திருப்பார்.
“ஆபத்துகளை மேற்கொள்ளாமலும் சுய தியாகத்தைச் செய்யாமலும் கலை என்பதைச் சிந்தித்துப் பார்க்கவே முடியாது, சுதந்திரமும் கற்பனையின் துணிச்சலும் நடைமுறையிலேயே சாதிக்கப்பட வேண்டும்” என்பார் போரிஸ் பாஸ்டர்நாக். ஆபத்துகளிற்கும் சுய தியாகத்திற்கும் அஞ்சாத கலைஞர்கள் ஒரு போக்கிரி இணைய ஆசிரியர் கிளப்பிவிடும் வெறும் அவதூறுகளிற்கா அடிபணிந்துவிடுவார்கள்!
‘அந்த பிலால் முகமது விசயம் என்னவானது’ என முறுக்கிக்கொண்டிருக்கிறார் கீற்று ரமேஷ். அந்த மேட்டரை அடுத்த பகுதியில் பார்த்துவிடலாம் தோழர்களே. இன்ஷா அல்லாஹ்!
very good
explain to all articles