ஷோபாசக்தியைப் பொய்யனாக்கியே விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கடந்த ஒரு கிழமையாகவே ‘கீற்று’ ரமேஷ் ஒரு காரியத்தைச் செய்து வந்தார். அவர் ‘தலித் முரசு’ குறித்த ஒரு குறிப்பைக் கீற்றுவின் பின்னூட்டப் பகுதியில் எழுதியதோடு நின்றுவிடாமல் உற்சாகமிகுதியில் “அம்பலமாகியது ஷோபா சக்தியின் மற்றுமொரு பொய்!” என்ற தலைப்போடு அந்தக் குறிப்பை முகப் புத்தகமெங்கும் தூவி வைத்தும் தூற்றினார். கீற்றுவின் பின்னூட்ட மன்னர்களும் கிடைத்தது ‘சான்ஸ்’ என்று ரமேஷைப் பின்தொடர்ந்து கீற்றுவில் என்மீது அவதூறுகளை அள்ளிச் சொரியலாயினர். நடந்தவற்றைத் தொகுப்பாகப் பார்த்துவிடலாம், தோழர்கள் சற்றுப் பொறுமை காக்க வேண்டும். கீற்று ஆசிரியர் எழுதிய ‘கீற்றை முடக்கச் சதி’ என்ற அவதூறுக் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்த ஒரு ‘ஸ்பெஷல்’ அவதூறிலிருந்து வில்லங்கம் ஆரம்பிக்கிறது:
கீற்று நந்தன்: ஷோபாசக்தியால் சுகுணா திவாகருக்கு கொடுக்கப்பட்ட லட்ச ரூபாய் அவரது கஷ்டத்தைப் போக்குவதற்கா, இல்லை அவரது ஈழ எதிர்ப்பு அரசியலுக்கு கொடுக்கப்பட்ட ஊதியமா? கஷ்டத்தைப் போக்குவதற்குத்தான் என்றால், அதேபோல் கஷ்டப்படும் தலித் முரசு இதழுக்கு ஷோபா ஏதாவது நிதி வழங்கியிருக்கிறாரா? அவர்கள் பலமுறை நிதி வேண்டி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். ஷோபா தலித் அரசியலுக்காகவே வாழ்பவராயிற்றே… உதவியிருப்பார் அல்லவா? (03 மார்ச்)
ஷோபாசக்தி: சுகுணா திவாகருக்கு நான் பணம் கொடுத்தேன் என்பதெல்லாம் கலப்படமற்ற பொய்யைத் தவிர வேறொன்றில்லை. இவ்வாறான ஓர் அயோக்கியத்தனமான கட்டுக்கதையை முன்வைத்து அதற்குப் பதில்வேறு சொல்லென்று நந்தன் நச்சரிப்பது அருவருப்பான தந்திரமே தவிர அரசியல் விவாதமல்ல. இதற்கு ஒரு துணைக் கேள்வியையும் நந்தன் உருவாக்கியுள்ளார். நீ பேசும் தலித் அரசியலில் உனக்கு பற்றுறுதி இருந்தால் ஏன் நீ ‘தலித் முரசு’வுக்குப் பணம் கொடுக்கவில்லை என்பது அவரது அடுத்த லொஜிக்கான கேள்வி. சரி நான் தலித் முரசுவுக்கு பணம் கொடுத்திருப்பின் என்னை இந்தக் குற்றச்சாட்டிலிருந்து கீற்று விடுவித்துவிடுமா? அப்படியானால் சொல்கிறேன். ஆம், ‘தலித் முரசு’ நெருக்கடியான ஒரு சூழலை எதிர்கொண்டபோது நான் முன்னின்று அய்ரோப்பாவில் தோழர்களிடம் பணம் திரட்டித் தலித் முரசுக்குக் கொடுத்திருக்கிறேன். தவிரவும், சந்திரகேசன் காலத்திலேயே தலித் முரசுவை அய்ரோப்பாவிற்கு வரவழைத்து அதை வாசகர்களிடம் எடுத்துச் சென்றது சுகன் முதலான தோழர்களே. இதையெல்லாம் நந்தன் அறியமாட்டார். (04 மார்ச்)
கீற்று நந்தன்: தலித் முரசு இதழுக்கு நிதியுதவியை வாரி வழங்கியதாக ஷோபா சக்தி கூறியது தொடர்பாக இதழின் ஆசிரியர் தோழர் புனிதபாண்டியனிடம் விசாரித்தேன். தலித் முரசு இதழுக்கு நிதி நெருக்கடியற்ற ஆரம்ப காலகட்டங்களிலோ, நிதி நெருக்கடி மிகுந்த கடந்த சில ஆண்டுகளிலோ ஷோபாசக்தி எந்தவொரு உதவியும் செய்ததில்லை என்று அவர் கூறினார். சந்தேகமிருப்பவர்கள் தோழரிடமே விசாரித்துக் கொள்ளலாம். நிதி கொடுத்தேன் என்று கூறுவது ஷோபாசக்தியின் வழமையான பொய்களின் தொடர்ச்சியே!! (06 மார்ச்)
இவ்வாறு கீற்று ரமேஷ் எடுத்துக்கொடுக்க அங்கேயிருந்து ஆரம்பிக்கிறார்கள் கீற்றுவின் பின்னூட்ட மன்னர்கள் அவதூறு ஆட்டத்தை:
பரணி: இதற்கும் அவரிடம் ஏதாவது சப்பைக்கட்டு பதில் நிச்சயம் இருக்கும். ”நான் நேரடியாக தலித் முரசுக்கு நிதி கொடுக்கவில்லை. நண்பர்கள் மூலம் அனுப்பி வைத்தேன்…உதவி செய்வதை வெளியிலே சொல்லி விளம்பரம் தேட எனக்கு விருப்பமில்லை…அதனால் எனது பெயரை சொல்லாமலே தலித் முரசுக்கு காசு கொடுத்தேன்” என்கிற ரீதியில் அவரது பதில் இருக்கும். அப்படி இல்லையெனின் திருட்டு மௌனம் காக்கப்படும். எவ்வளவுதான் கேள்வி கேட்டாலும் எதிர்க் கேள்வி கேட்டு அல்லது திருட்டு மௌனம் சாதித்து அல்லது சப்பைக்கட்டு பதில் சொல்லியே காலம் கடத்துபவர்களிடம் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பது வேண்டாத வேலையோ என்று நான் நினைக்கிறேன்.
அசோக்குமார்: ஷோபாசக்தி பொய் ஒவ்வொன்னும் வரிசையா அம்பலமாகிவருகிறது. கடைசியா சொன்ன பொய்யும் சுடச்சுட வீதிக்கு வந்துவிட்டது. தலித் முரசுக்கு நிதி கொடுத்ததை புனிதபாண்டியனே மறுத்துவிட்ட பின்பு, ஷோபா ஆதாரத்தை எப்படி கொடுக்கப் போகிறார் என்பதை நினைத்தாலே பாவமா இருக்கு.. ஆனால் ஒண்ணு… எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்.
சுதர்ஸன்: வேலையில்லாமல் அடிக்கடி வெளிநாடு போய்வருவது, தலித் முரசுக்கு நன்கொடை தந்தேன் என்று பொய் சொன்னது என எல்லாக் கேள்விகளும் பதில் சொல்லப்படாமல் தொங்கிக் கொண்டிருக்கின்றது. என்னை மாதிரி பொதுஜனங்க மத்தியிலே ஷோபாசக்தியின் மானம் காத்துலே பறந்துட்டிருக்கு என்கிறதாவது இந்த ஏமாற்றுப் பேர்வழிக்குப் புரியுதா?
குமார்: கீற்றில் நிறைய தவறான தகவல்கள் வெலியாகுதுனு இப்போது யோக்கியவான மாதிரி குதிக்கிற ஷோபாசக்தி, ‘தலித் முரசுக்கு காசு தந்தேன்’ என்று கீற்றில் எழுதினார். அது பச்சைப்பொய் என்று அம்பலமானதும், கீற்று தளத்தில் விவாதிப்திலிருந்தே ஓடிவிட்டார்.
***
தோழர்களே! கீற்று ஆசிரியர் விரைந்து செயற்பட்டு ‘தலித் முரசு’ ஆசிரியரைத் தொடர்புகொண்டு என்னை அம்பலப்படுத்தியதையும் அதைத் தொட்டு, பின்னூட்டங்களில் நான் பின்னி எடுக்கப்பட்டிருப்பதையும் மேலே படித்துவிட்டீர்கள். இன்று கீற்றில் வெளியாகிய குறிப்பையும் படித்து விடுங்கள் :
கீற்று நந்தன்: தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன், ஷோபா சக்தி பணவிவகாரம் தொடர்பாக முன்னர் தெரிவித்த தகவலைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நான் தொலைபேசியில் தோழரைத் தொடர்பு கொண்டு வெளியிட்ட தகவலைக் கண்ட சில நண்பர்கள், ‘2004 – 05இல் தோழர் செந்தில் பாபு ஒரு கருத்தரங்கிற்காக பாரிசுக்கு சென்றிருந்தபோது, சில நண்பர்கள் அளித்த நன்கொடையை தலித் முரசிடம் வந்து கொடுத்தார். அது, ஷோபா சக்தி நண்பர்கள் கொடுத்தது தான்’ என்றும், அதை சரி பார்க்கச் சொல்லியும் அறிவுறுத்தியதாகவும், தோழர் செந்தில் பாபுவிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, மேற்சொன்ன உண்மையை உறுதிப்படுத்தினார் என்றும், கவனக் குறைவால் ஏற்பட்ட இந்தத் தவறுக்கு, தன்னுடைய வருத்தத்தை தெரிவிப்பதாகவும் தோழர் புனிதபாண்டியன் தெரிவித்துள்ளார். (மார்ச் 11)
நான் அய்ரோப்பாவில் தோழர்களிடம் நிதி திரட்டி தலித் முரசுவிற்கு அனுப்பி வைத்தது ஆறு வருடங்களிற்கு முன்பு. அப்போதே தலித் முரசு ஆசிரியரிடமிருந்து நிதியைப் பெற்றுக்கொண்டதற்கான பற்றுச் சீட்டும் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காலப்போக்கில் தோழர் புனிதபாண்டியன் மறந்திருக்கக்கூடும். நண்பர்களின் தொடர் ஞாபகமூட்டலிற்குப் பின்பு அவர் மறுபடியும் விசாரித்து தலித் முரசு பணம் பெற்றுக்கொண்டதை கீற்று இணையத்திலேயே உறுதிப்படுத்தி, தனது மறுப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார். தோழர் புனிதபாண்டியனுக்கு நன்றிகள்.
எனினும் விடயம் அவ்வளவு சுலபமாகத் தீர்ந்துவிடாது தோழர்களே! “நிதி கொடுத்தேன் என்று கூறுவது ஷோபாசக்தியின் வழமையான பொய்களின் தொடர்ச்சியே” என்றும் “அம்பலமாகியது ஷோபா சக்தியின் மற்றுமொரு பொய்” என்றும் முழங்கிய கீற்று ஆசிரியர் தனது முழக்கங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சொல்லி பகிரங்க வருத்தம் தெரிவிப்பதுதானே ஊடக அறமும் அடிப்படை மனித மாண்பும். ஆனால் அது நடக்க வாய்ப்பில்லை. கீற்று ரமேஷின் வெற்று முழக்கங்கள் இணைய உலகில் சுற்றிக்கொண்டேயிருக்கும். அவர் அடுத்த அவதூறைத் தயாரிக்கப் போய்விடுவார். பின்னூட்ட மன்னர்களோ அடுத்த அவதூறுக்கு முண்டுகொடுக்கத் தயாராவார்கள். அவதூறுக்கு இலக்கானவன் வெறுமனே விரல் சூப்பிக்கொண்டிருக்க வேண்டும்…அப்படித்தானே!
புனிதபாண்டியனிடம் இருக்கும் அறவுணர்வை அவதூறாளர்களிடமும் நாம் எதிர்பார்ப்பது பாம்பிலிருந்து பால் கறக்கும் முயற்சியே. கையில் ஒரு ஊடகமிருக்கிறது என்ற மிதப்பில் ‘பழி பாவத்திற்கு’ அஞ்சாமல் கீற்று ரமேஷ் காட்டும் ஊடக ரவுடித்தனத்தைப் பார்க்கையில் எனக்கு லட்சுமிகாந்தனே நினைவிற்கு வருகிறார். நாற்பதுகளில் சென்னையில் ‘இந்து நேசன்’ லட்சுமிகாந்தன் எனவொரு கிசுகிசு – அவதூறுப் பத்திரிகையாளர் இருந்ததார். அவர் பின்பு அகால மரணமடைந்தார். அகால மரணமானவர்களிற்கு மறுபிறவியுண்டு என்பது கிறித்துவத்தின் ஒரு பிரிவினரின் நம்பிக்கை. இந்தக் கீற்று ரமேஷ் என்னை இறை நம்பிக்கையாளன் ஆக்கிவிடுவார் போலயிருக்கிறதே.
பின்னூட்டங்களில் என்னை வசைபாடிய தோழர்களிற்கு ஒரு வார்த்தை! நீங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதிய பின்னூட்டங்கள் ஒருநொடியில் மழைநீர் பட்ட கரியெழுத்தாய்க் கரைந்துபோனதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவதூறாளனை அடியொற்றிச் செல்வது உடனடியாகச் சுதியாக இருந்தாலும் நிச்சயமாக நீங்கள் காலத்தால் கரி பூசப்படுவீர்கள் என்பதை நீங்கள் உணர்வதற்கு இந்த ‘தலித் முரசு’ விவகாரம் உங்களிற்கு ஒரு பாடமாக அமைந்திருக்கும். தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்காதீர்கள். க.நா.சுவும் கைலாசபதியும் பிரமிளும் மு.தளையசிங்கமும் அ.மார்க்ஸும் ராஜ்கவுதமனும் விமர்சனக் கலையை வளர்த்த நிலம் தமிழ் நிலம். அந்த நிலத்திலிருந்து நீங்கள், விமர்சனம் என்ற விடயத்தை பின்னூட்டுகள் என்ற லேபிளில் மலசலகூட சுவரில் கிறுக்கும் கரியெழுத்துகள் தரத்திற்கு இறக்கியிருக்கிறீர்கள். ஒரு சீனப் பழமொழியுண்டு: “தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை, தயவு செய்து திரும்பி வாருங்கள்!”
இறுதியாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். நான் தலித் முரசுவிற்கு நிதி திரட்டிக் கொடுத்தேனா இல்லையா என்பதல்ல கீற்று ஆசிரியரின் அக்கறை. சுகுணா திவாகருக்கு மேல் சேறடிக்கும் முயற்சியில்தான் அவர் துணைக்குத் தலித் முரசு விடயத்தைக் கையிலெடுத்தார். அதனால்தான் அவர் “ஷோபாசக்தியால் சுகுணா திவாகருக்கு கொடுக்கப்பட்ட லட்ச ரூபாய் அவரது கஷ்டத்தைப் போக்குவதற்கா, இல்லை அவரது ஈழ எதிர்ப்பு அரசியலுக்கு கொடுக்கப்பட்ட ஊதியமா?” எனக் கேட்கிறார்.
நான் சுகுணா திவாகருக்குப் பணம் கொடுத்தேன் என்பதெல்லாம் எவ்வளவு அப்பட்டமான பொய். எந்தவொரு ஆதாரமோ, தடயமோ இல்லாமல் இவ்வாறு தைரியமாக அவதூறைச் செய்வதற்கு இலட்சுமிகாந்தனின் ஊடக வாரிசுகளால் மட்டுமே முடியும். “சுகுணா திவாருக்குக் கொடுக்கப்பட்ட பணம் அவரது ஈழ எதிர்ப்பு அரசியலுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியமா” எனக் கேட்பது வெறும் கொழுப்பல்லாமல் வேறென்ன. இந்த வதந்தியால் சுகுணா திவாகருக்கு எவ்வளவு சிரமங்களும் அழுத்தங்களும் ஏற்பட்டிருக்கும்.
இதற்கெல்லாம் ஏதாவது பொறுப்புணர்வுடன் ஆதாரத்தை அளிப்பது, அளிக்க முடியாத பட்சத்தில் வருத்தம் தெரிவித்துத் தனது கூற்றை மீளப் பெற்றுக்கொள்வது போன்ற எந்த யோக்கியமான நடவடிக்கையையும் கீற்று ஆசிரியரிடம் எதிர்பார்க்க முடியாது. அவர் குண்டி மண்ணைத் தட்டிவிட்டுக் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தவாறே இன்னொரு புதிய அவதூறை உருவாக்க மூளையைக் கசக்கியவாறேயிருப்பார். மூளையும் சலிக்காமல் அவருக்கு ஒத்துழைப்பதுதான் ஆச்சரியமான விடயம். மருத்துவ ஆராய்ச்சிக்குரிய அதி சுறுசுறுப்பான, ஆனால் வில்லங்கமான மூளையது.
தொடர்ந்து அவதூறுகளை ஓயாமல் பரப்பிக்கொண்டிருக்கும் முனைப்பும், அவதூறுகளின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக எதிராளி அவிழ்க்கும்போது விட்டேற்றியாக அதைக் கடந்து செல்லும் தினவும் அரசியல் கயமையா, அல்லது ஏதாவது தனிமனித உளவியல் குணச்சித்திரமா என்ற கோணத்திலும் நாம் கீற்று ரமேஷின் அவதூறு அரசியலை ஆய்வு செய்யத்தான் வேண்டியிருக்குமோ!
இணையதளம் பக்கம் வருவதற்கே பயமாக இருக்கிறது. ஊர்ப்புறணி பேசும் ஒரு பெரிய முச்சந்தியாக இணையம் மாறிவிட்டது. அதிலும் பெயர் சொல்லாமல்- பெயரை மாற்றி பின்னூட்டத்தை பதிவு செய்து சுய அரிப்பை தீர்த்துக்கொள்கிறார்கள். மன நோயாளிகள் உலவும் இடமாக சமூக இணையத்தளங்கள் இருக்கின்றன. முக்கியமான எழுத்தாளர்களின் கவனம் தம் எழுத்துப்பாதையிலிருந்து மாறி, இவர்களுக்கு பதில் சொல்வதன் பக்கம் திரும்புவதில் பலருக்கு ஆதாயம் இருக்குமோ? தோழர்.ஷோபா சக்தி பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாமல் உங்கள் அவசியமான பணிகளுக்குத் திரும்புங்கள். வாசகர்கள் உண்மை அறிவார்கள்.
hello
Sakthi i am Maya, last week my friend selvan introduced to ur blog because i am a youngest reader so he do this help for find out the real writters like u so all the best to you
Thank You
By
Maya