கீற்று இணையத்தளம் தமிழ் இலக்கியத்திற்கும் மாற்று அரசியல் கருத்துகளிற்கும் பங்களிப்புச் செய்திருக்கிறதா? ஆம்! நிச்சயமாகச் செய்கிறது. பல்வேறு காத்திரமான கட்டுரைகளை அது வெளியிடுகிறது. பல்வேறு சிற்றிதழ்களை அது இணையவெளிக்கு எடுத்து வருகிறது. இதிலெல்லாம் மாற்றுக் கருத்தே என்னிடம் கிடையாது என்பதை முதலிலேயே சொல்லிவைக்க விருப்பம்.
கீற்று ஆசிரியர் அடிக்கடி ஒரு விடயத்தை வலியுறுத்துகிறார். அதாவது “கீற்று அனைத்துப் பிரிவினருக்குமான தளம், எல்லாக் கருத்துகளையும் நாம் பாரபட்சமின்றி வெளியிடுவோம்” என்கிறார் அவர். இந்தச் சொல்லாடல் ஒருவகையில் சனநாயகத்தின்மீதும் கருத்துரிமைமீதுமுள்ள அவரது பற்றுறுதியைக் காட்டும் வகையில் அமைகின்றதெனினும் இன்னொருபுறம் கீற்றுவுக்கு என்றொரு சொந்த அரசியற் பார்வை கிடையாது என்பதையும் அறிவிக்கத்தானே செய்கிறது.
அவ்வாறானால் கீற்று ஆசிரியர் அங்கே என்ன ஆசிரியத்துவத்தைச் செய்கிறார்? ஆசிரியர் என்பவர் வெறுமனே ஒரு கணிப்பொறியின் ஆகப்பெரிய வழங்கல் இயந்திரமா? ஒரு அச்சகசாலையின் உரிமையாளரின் பாத்திரமென்னவோ அதே பாத்திரம்தானா கீற்று ரமேஷுக்கு என்ற கேள்வி எழுகின்றது.
கிடையாது. கீற்று எல்லாத் தரப்புகளிற்கும் களமளித்து வருகிறது என்பதை இடதுசாரிகளிற்கும் தலித் அரசியலாளர்களிற்கும் பெண்ணியலாளர்களிற்கும் இந்துத்துவ எதிர்ப்பாளர்களிற்கும் தமிழ்த் தேசியர்களிற்கும் தீவிர இலக்கியவாதிகளிற்கும் கீற்று இடமளித்து வருவதாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது பாராட்டப்பட வேண்டியது. இத்தகைய அரசியல் போக்குகளிற்கு ஆதரவளிப்பதே கீற்றுவிற்கான சொந்த அரசியல் என நான் புரிந்துகொள்கிறேன்.
நான் மேற்குறிப்பிட்ட அரசியல் போக்குகளில் இயங்கிக்கொண்டிருந்த தோழர்களில் சிலர் இரண்டாண்டுகளிற்கு முன்பு தாங்கள் அதுவரை கொண்டிருந்த தார்மீகங்களையும் தத்துவங்களையும் கைவிட்டு ஈழப் பிரச்சினையில் புலிப் பாஸிசத்தை ஆதரிக்குமளவிற்குச் சென்றார்கள். அவர்கள் பேசிய சனநாயம், இடது அரசியல், நுண்ணரசியல் போன்ற அறிவுச் செயற்பாடுகள் எல்லாமே காணாமற்போய் அவர்கள் வெறும் உணர்வுகளால் இயக்கப்பட்டார்கள். அந்த உணர்வால் இயக்கப்பட்ட ஒவ்வொரு நமது மதிப்புக்குரிய இலக்கியவாதியும் ‘செந்தமிழன்’ சீமானின் ரேஞ்சில் சீற ஆரம்பித்தார்கள். இடதுசாரிகள் கட்டப்பொம்மன் வேடமிட்ட சிவாஜிகணேசனாகக் கர்ஜித்தார்கள். இலை மலர்ந்தால் ஈழம் மலருமெனத் தமிழ்த் தேசியர்கள் முழக்கமிட்டார்கள். இவை வெற்று உணர்ச்சி அரசியலே, இவை ஈழத்தமிழருக்காக எதையும் அரசியற்களத்தில் சாதிக்க வல்லமையற்றவை என முன்மொழியப்பட்ட எச்சரிக்கைகள் துரோகத்தின் குரலென மறுவாசிப்புச் செய்யப்பட்டன. ஈழப் பேரழிவுக்குக் காரணமாக இலங்கை அரசை முன்னிறுத்தியவர்கள், விடுதலைப் புலிகளிற்கும் அந்தப் பேரழிவில் பங்களிப்பு இருக்கின்றதென்பதைப் பார்க்க மறுத்தார்கள். புலிகளால் மக்கள் பணயம் வைக்கப்பட்டிருந்ததும், உயிரைக் காக்கத் தப்பியோடிய அப்பாவி மக்களைப் புலிகள் கொன்றதும் இவர்களிற்கு உறைக்க மறுத்தது. புலிகள் சிறுவர்களைப் படைகளிற்குக் கட்டாயமாகப் பிடித்துக் களமுனையில் கொல்லக் கொடுத்ததும் எதிர்த்துக் கேட்டவர்களைச் சுட்டுக்கொன்றதும் இவர்களிற்கு பொருட்டேயில்லாமற் போனது. பிரபாகரன் என்ற அரசியல் முதிர்ச்சிற்ற, தனது இயக்கத்தின் நலனிற்கு முன்னால் தமிழ் மக்களின் நலனைத் துரும்பாக மதித்த மனிதரை சூரியதேவன் என்றும் தீர்க்கதரிசியென்றும் இவர்கள் கொண்டாடினார்கள். அது அவ்வாறல்ல எனக் எதிர்க்குரலை ஒலித்தவர்களைத் துரோகிகள் எனத் தூற்றினார்கள். என்னவொரு வீழ்ச்சி! இந்த வீழ்ச்சியில் தூக்கி வீசப்பட்டவர்களில் ஒருவர்தான் கீற்று ரமேஷ்.
அப்போது நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம்? அ.மார்க்ஸும் நானுமிணைந்து எழுதி 2008ல் வெளியிட்ட “ஈழம்: இன்றெமக்கு வேண்டியது சமாதானமே” என்ற சிறுநூல் எங்களது அப்போதைய அரசியல் நிலைப்பாட்டிற்குச் சாட்சியமாகலாம். அந்த நூலில் அ.மார்க்ஸ், இன்றைய உலகச்சூழலில் ஆயுதப் போராட்டத்தின் சாத்தியமின்மையையும் ஆயுதப் போராட்டத்திலிருந்து பேச்சுவார்த்தைக்கு நகர்ந்த நேபாள மாவோயிஸ்டுகளின் பாதையையும் ஏகபிரதிநிதித்துவம் என்பதை நிராகரித்து நேபாள மாவோயிஸ்டுகள் பல்வேறு ஒடுக்கப்படும் அரசியல் தரப்புகளிற்கான இடங்களை உறுதிசெய்ததையும் சுட்டிக்காட்டி விடுதலைப் புலிகள் அவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றார்.
நான், கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு தேர்தல் அரசியலிற்குத் திரும்பியதைச் சுட்டிக்காட்டி அந்தப் போக்கின்மீதான அரசியல் விமர்சனங்கள் எதுவாயிருந்தபோதும் அந்தச் செயல் ஒப்பீட்டளவில் ஒரு பெரிய மனிதப் பேரழிவைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது எனச் சொன்னேன். புலிகள் அரசியல் முட்டுச்சந்தில் மட்டுமல்லாமல் இராணுவ முட்டுச்சந்திலும் சிக்கியுள்ளார்கள் என்பதை விபரித்து புலிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு சனநாயக அரசியலுக்குத் திரும்பவேண்டும், அதுவே ஈழத் தமிழர்களிற்கு ஆகக் கூடிய மகிழ்ச்சியைத் தரும் செய்தியாக இருக்கும் என்றேன்.
உடனடியானவே எங்களது கருத்துகள் தமிழ்த் தேசியர்களாலும் புலி இரசிகர்களாலும் துரோகம் என வசைபாடப்பட்டன. புலிகள் இராணுவப் பின்னடைவிலிருந்து மீள்வார்கள் எனவும் தமிழீழம் கைக்கெட்டிய தூரத்திலென்றும் அவர்கள் கற்பனைகளில் மிதந்தார்கள். இலங்கை மீது அந்நிய வல்லாதிக்கசக்திகளின் பிடிகள் எவ்வளவு வலுவாகவும் வரலாற்றுரீதியாகவும் இறுகியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி இலங்கையில் யுத்த நிறுத்தத்தை மட்டுமல்லாமல் யுத்தத்தையும் தீர்மானிப்பது அவர்களே என நாங்கள் சொன்னபோது புலி இரசிகர்களோ வரலாற்றை உருவாக்கப் போவது பிரபாகரனே எனத் துள்ளினார்கள். மே 18ற்குப் பின்புதான் அவர்கள் உலகமே சேர்ந்து புலிகளை அழித்துவிட்டது என விசனப்பட்டார்கள். 2006ல் 32 நாடுகள் இணைந்து புலிகளைத் தடைசெய்தபோது அவர்கள் கண்களை முடிக்கொண்டு வீரதீரக் கற்பனைகளில் மூழ்கியிருந்தார்கள். அவர்கள் கண்களைத் திறந்தபோது புலிகள் இயக்கம் ஈழத்திலிருந்து துடைத்தெறியப்பட்டிருந்தது. இறுதி யுத்தம் பல்லாயிரக்கணக்கான மக்களையும் கொன்று தள்ளியிருந்தது.
இலங்கை அரசபடைகள் சாதாரண போர் விழுமியங்களைக் கூட மதிக்காமல் குடிமக்களைக் கொன்றழித்ததையும், புலிகள் கட்டாய ஆள்சேர்ப்புச் செய்ததையும், மக்களை மனிதக் கேடயங்களாக உயிருள்ள மணல் மூடைகளாக வைத்திருந்ததையும் கண்டித்து எதிர்க்குரல் எழுப்பவேண்டிய வேளையில் அரசுக்கு எதிரான குரலை மட்டும் ஒலித்தவாறு புலிகளின் கொலைகளையும் அத்துமீறல்களையும் காண மறுத்துக் கண்களை மூடிக்கொண்டிருந்தவர்களுக்கு எங்களது புலிகளின் மீதான தொடர் விமர்சனம் கசப்பை உருவாக்கிற்று. எங்களது விமர்சனங்களை அவர்கள் ‘எதிர்கொண்டு’ எதிர்வினையாற்றத் தொடங்கினார்கள்.
அ.மார்க்ஸும் நானும் ஈழப்போராட்டத்தில் நீண்டகாலப் பரிச்சயம் உள்ளவர்கள். என்னைப் போன்று நேரடி அனுபவம் இல்லாதபோதும் தனது பரந்த வாசிப்பாலும் தனக்கிருந்த ஏராளமான ஈழத்துத் தோழர்களுடனான உரையாடலாலும் அ.மார்க்ஸ் ஈழப்போராட்டம் குறித்து ஏராளமான அறிவுச் சேகரங்களுடன் இருப்பவர். ஆனால் எங்கள் மீது எதிர்வினையாற்றிய தமிழகத் தோழர்களின் நிலையென்ன?
ஒரு மண்ணும் தெரியாது எனச் சுருக்கமாகச் சொல்லவே விரும்புகிறேன். எஸ்.வி. ராஜதுரை, அ. மார்க்ஸ் போன்ற ஓரிருவரைத் தவிர பொதுவாகவே தமிழகத்து எழுத்தாளர்களிற்கு ஈழப் போராட்டத்தின் வரலாறும், அதன் சிக்கல்களும், ஈழத்துச் சமூக அமைப்பும், புலம் பெயர்ந்த தமிழர்களின் அரசியல் மன அமைப்புகளும், ஈழத்து முஸ்லீம்களின் பிரச்சினைகளும் பாடுகளும், ஈழத்துச் சாதியமைப்பும் அது ஈழப்போராட்டத்தில் வகித்த பாத்திரமும் எனப் பல விடயங்கள் எட்டாமலேயேயிருந்தன. இந்த அடிப்படை அறியாமைகளுடன் மூத்த எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் தொடங்கி இளைய எழுத்தாளர் மினர்வா வரை இஷ்டப்படி எழுதினார்ககள். ஈழ வரலாறும், ஈழப் போராட்டமும் இவர்களின் கைகளில் சிக்கி அலக்குமலக்குப்பட்டன.
இத்தகைய அறியாமை நிறைந்த எதிர்வினையாளர்களின் கருத்துகளைக் காலம் தனது வலிய கரங்களால் தவிடுபொடியாக்கிக்கொண்டேயிருந்தது.. அவர்களால் கொண்டாடப்பட்ட ‘திருவுரு’ பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்துக்கூட அவர்களால் வாய் திறக்க முடியாதபடிக்கு அவர்கள் கட்டியெழுப்பிய தனிமனிதத் துதி அரசியலே அவர்களைக் கட்டிப்போட்டது. இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என அவர்கள் சடைய வேண்டியிருந்தது. மறுபுறத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்ட எங்களது கருத்துகளும் நாங்கள் விவாதங்களை எடுத்துச் சென்றமுறையும் ஈழப் போராட்டத்தின் பல வருட அனுபவங்கள் எமக்களித்த அறிதலோடு எங்களிற்கு கைகூடி வந்தது. இதைத் தங்களது போதாமைகளோடு எவ்வாறு எதிர்கொள்வது என்பதுவே எதிர்வினையாளர்களின் பிரச்சினையாகிப் போனபோது. அத்தருணத்தில் அவர்கள் கையிலெடுத்த அருவருக்கத்தக்க ஆயுதம்தான் அவதூறு! அந்த அவதூறு மொண்ணை அம்புகள் சேகரிக்கப்பட்ட அம்பறாத்தூணிகளில் ஒன்றே கீற்று இணையத்தளம்.
அரசியல் கருத்துகளை கருத்துகளாலேயே எதிர்கொள்ள அவர்களிற்கு வல்லமையற்றபோது அவர்கள் தனிநபர்கள்மீது அவதூறுகளை அள்ளிவீச ஆரம்பித்தார்கள். அ. மார்க்ஸ்மீதும் என்மீதும் மட்டுமல்லாமல் எங்களோடு கூட்டு அரசியற் செயற்பாடுகளில் இருந்தவர்கள் மீதும் நமது தோழமைகள் மீதும் வகைதொகையின்றி அவதூறுகளும் வசைகளும் அள்ளி இறைக்கப்பட்டன. ஆகப்பெரிய அரசியல் கிசுகிசு ஊடகவியலாளராக கீற்று ரமேஷ் மாறிப்போனார்.
எத்தனையெத்தனை அவதூறுகளையும் வசைகளையும் கீற்றுத்தளத்தில் எதிர்கொண்டோம்! இலங்கை அரசின் கைக்கூலிகள், இந்திய உளவுத்துறையின் உளவாளிகள், டக்ளஸ் தேவானந்தாவினதும் கருணாவினதும் கூட்டாளிகள், அதிகார சக்திகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அரசியல் பேசுபவர்கள் எனத் தொடர்ந்த அவதூறு அரசியல், அவையொன்றும் செல்லுபடியாகாதபோது இறுதியில் பாலியல் அவதூறாகப் பரிமணித்து நிற்கிறது.
இந்த எல்லாக் குற்றச்சாட்டுகளிற்கும் நான் உடனுக்குடன் பதில் சொல்லியே வந்துள்ளேன். அவர்கள் சொன்ன அத்தனையும் அவதூறுகளே என நிரூபித்தேன். கீற்றுவிற்கு மட்டுமல்ல, இதேபோன்று அவதூறுகளைக் கிளப்பிவிட்டவர்களிடம் நிரூபிக்க முடியுமா எனச் சவால் செய்துள்ளேன். ம.க.இ.கவினருக்கு நான் மனு எழுதியது கூடத் தோழர்களிற்கு ஞாபகத்திலிருக்கலாம். ஆனாலும் ஏது பயன்!
கீற்று ஒருமுறை கருணாவுடன் சுசீந்திரன் கூடயிருக்கிறார் என்றொரு தவறான படத்தை வெளியிட்டது. பின் அதை அது விலக்கிக்கொண்டது வேறுகதை. ஒரு படத்திலிருப்பவர் சரியான நபர்தானா என்று கூட உறுதிசெய்து கொள்ளாமல் வெளியிடுவதில் அவ்வளவு அவசரம், அவதூறுகளைக் கொட்டுவதில் அடக்கமுடியாத ஆவலாதி, அது தவறான படம் எனத் தெரிந்ததும் தவறுக்கு வருத்தம் தெரிவிக்காத தடித்தனம், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தை முன்வையெனக் கேட்டால் துணைக் கேள்விகளை ஏவிவிட்டுக் குற்றம்சாட்டப்பட்டவரே குற்றமற்றவர் என நிரூபிக்கவேண்டும் என எகத்தாளமிடும் ‘தடா’த்தனம். இதுதான் இன்றைய கீற்றீன் அவதூறு அரசியல்.
இதுவரை கீற்று என்மீதும் என் தோழமைகள்மீதும் வைத்த ஒரேயொரு குற்றச்சாட்டைத்தன்னும் நிரூபணம் செய்ய முடியுமா? முடியாத பட்சத்தில் தனது குற்றச்சாட்டுகளை கீற்று விலக்கிக்கொள்வதும் வருத்தம் தெரிவிப்பதும்தானே அறம். அதெல்லாம் கீற்றுவுக்குத் தெரியவே தெரியாது. மாறாக அது புதிய அவதூறுகளை உற்பத்தி செய்யும் தீவிர தயாரிப்பிலிருக்கிறது.
இதெல்லாம் எதற்காக! புலிகள்மீதும் தமிழ்த் தேசியர்கள்மீதும் நாங்கள் இடையறாது வைக்கும் விமர்சனங்கள் கீற்று ஆசிரியரைத் தொந்தரவு செய்கின்றன. இந்தத் தொந்தரவிலிருந்து அவர் மீளவேண்டுமானால் ஈழப் போராட்டம் குறித்தும், தமிழ்த் தேசியம் குறித்தும் ஆழமாகக் கற்று அவர் தனது இரசிக அரசியல் உளவியலிருந்து விடுபட்டுத் தனது அரசியல் நிலைப்பாட்டைத் திருத்தியமைத்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து அவதூறுகளைச் சரமாரியாக ஏவிவிடுவதன் மூலம் அவர் தனது மன அவசத்திற்கு மாற்றுத் தேடுவாரெனில் அது ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை. ஏனெனில் கீற்று ஆசிரியருக்கு அவதூறுகளை ஏவுவதில் இரண்டு வருடங்கள் மட்டுமே அனுபவுமுண்டு. ஆனால் அவதூறுகளை எதிர்கொண்டு நிற்பதிலும் அவற்றை முறியடிக்கச் சளையாமல் போராடுவதிலும் எங்களிற்குப் பல வருட அனுபவமுண்டு.
கடந்த சனவரி மாதம் இலங்கையில் நடந்து முடிந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் கீற்று இணையம் எவ்விதமான அவதூறு அரசியலால் எதிர்கொண்டது என்பதை அடுத்த பகுதியில் பார்த்துவிடலாம் தோழர்களே.
“ஏனெனில் கீற்று ஆசிரியருக்கு அவதூறுகளை ஏவுவதில் இரண்டு வருடங்கள் மட்டுமே அனுபவுமுண்டு. ஆனால் அவதூறுகளை எதிர்கொண்டு நிற்பதிலும் அவற்றை முறியடிக்கச் சளையாமல் போராடுவதிலும் எங்களிற்குப் பல வருட அனுபவமுண்டு…..” உங்களது நிலைப்பாட்டை விளங்கிக்கொள்கிறேன் . ஆனாலும் இப்படியான உணர்ச்சிமயமான கூற்றுக்களை தவிர்ப்பது நல்லது என்று படுகிறது.
ஈழ வரலாறும், ஈழப் போராட்டமும் இவர்களின் கைகளில் சிக்கி அலக்குமலக்குப்பட்டன
அமெரிக்கா வியட்னாம் மீது தொடுத்த போரின் கொடுமைகளை எதிர்த்துப் பேச வியட்னாமிருக்கும், பாலஸ்தீன கொடுமைகளைப் பற்றிப் பேச பாலஸ்தீனருக்கும் மட்டும்தான் தகுதி உண்டோ? துன்பக்கேணியில் எங்கள் பெண்கள் அழுத சொல்லைக் காதால் கேட்ட பிறகுதான் பாரதி கவிதை இயற்றினாரோ? துன்பத்துக்கு இரங்க நல்ல மனம் போதும்.
“ஒரு படத்திலிருப்பவர் சரியான நபர்தானா என்று கூட உறுதிசெய்து கொள்ளாமல் வெளியிடுவதில் அவ்வளவு அவசரம், அவதூறுகளைக் கொட்டுவதில் அடக்கமுடியாத ஆவலாதி, அது தவறான படம் எனத் தெரிந்ததும் தவறுக்கு வருத்தம் தெரிவிக்காத தடித்தனம், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தை முன்வையெனக் கேட்டால் துணைக் கேள்விகளை ஏவிவிட்டுக் குற்றம்சாட்டப்பட்டவரே குற்றமற்றவர் என நிரூபிக்கவேண்டும் என எகத்தாளமிடும் ‘தடா’த்தனம். ”
Very true – better to state an apology than to hide a mistake. Good point about freedom of expression.
Shoba,
U should not take an advantage on errors of LTTE to scribble whatever u think about tigers in the name of exile & veteran LTTE. The war hero tradition of tamil culture always play a role in history of peoples who feels them self as tamil. U have a right 2 critic but u never bury the thirst for a nation of the people.”Thaniveedu” is not an idiotic thought. U cannot match U with maaveerars those gave their lives to their nation. men like U, the political lumpans will open the door of so called alternative ethic by the way of critic & have a will to replace the sword with love. But the real world is not like that and it is bi-sectored as good & evil. pluralism is an ideology of gimmick which is always grabbed by dualism. The mask that U & amarx wear is an attractive one but useless. In TN many dalits exposed amarx. His past works may gave him a revolt icon but at present he is an ill adviser to good ghosts. The man who forms groups only for his ego will never be a morale. we need christoper c.well, not amarx.
There is a critical shortage of inafmrotive articles like this.